சிலுவைப்பாதை - திருத்தந்தை 2ம் ஜான் பால்

முதலாம் நிலை :

இயேசு கெத்சமனித் தோட்டத்தில் செபிக்கிறார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : லூக்கா 22: 39-44
இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் வழக்கப்படி ஒலிவ மலைக்குச் சென்றார். சீடர்களும் அவரைப் பின் தொடர்ந்தார்கள். அந்த இடத்தை அடைந்ததும் அவர் அவர்களிடம்,சோதனைக்கு உட்படாதிருக்க இறைவனிடம் வேண்டுங்கள், என்றார். பிறகு அவர் அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் விலகிச் சென்று, முழந்தாள்படியிட்டு, இறைவனிடம் வேண்டினார். 'தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல: உம் விருப்பப்படியே நிகழட்டும்' என்று கூறினார்.
செபம்:
தந்தையே இறைவா!
உமது அன்பு மகன் இயேசுவின் மூலம் செபிக்கக் கற்று கொடுத்தவரே! நாங்களும் விழிப்பாயிருந்து செபிக்க உறுதியான உள்ளமும், தாராள மனமும் தந்தருளும். செபமே ஜெயம் என்பதை நினைவு கூர்ந்து, அதன் மூலம் பாவ வாழ்க்கையிலிருந்து விலகி மகிழ்ச்சி நிறைந்த தன்னலமற்ற புதுவாழ்விற்கு செல்ல ஆசீர் அருள்வீராக. உம் மகன் இயேசுவின் ஒவ்வொரு துளி இரத்தமும் எங்களைக் கழுவி மீட்பைத் தரட்டும். ஆமென்.
அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும்.
இரண்டாம் நிலை:
யூதாசு முத்தமிட இயேசு கைது செய்யப்படுகிறார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் 
கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : லூக்கா 22: 47-48
இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, இதோ! மக்கள் கூட்டமாய் வந்தனர். பன்னிருவருள் ஒருவனான யூதாசு என்பவன் அவர்களுக்கு முன் வந்து அவரை முத்தமிட நெருங்கினான். இயேசு அவனிடம்,யூதாசே, முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய்? என்றார்.
செபம்:
தந்தையே இறைவா!
நீவீர் எங்கள் பலவீனங்களையும் குற்றங்குறைகளையும் உம் மகன் இயேசுவை ஏற்றுக் கொள்ள செய்தீர். ஆனால் பாவம் என்னும் முத்தத்தால் தினமும் இயேசுவைக் காட்டி கொடுக்கிறோம் என்ற உணர்வு எங்களில் எழ, அதன் மூலம் மனம் வருந்தி உமது மன்னிப்பில் நாங்கள் புனிதமடைய, உம் அன்பை இவ்வுலகிற்கு எடுத்துரைக்க, உம் சாட்சிகளாய் வலம் வர அருள் புரிவீராக. ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும்.

முன்றாம் நிலை
இயேசு தலைமைக் குருக்களால் தீர்ப்புக்குளாகிறார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக்கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : லூக்கா 22: 66-70
பொழுது விடிந்ததும் மக்களின் மூப்பர்களும் தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞர்களும் கூடி வந்தார்கள். இயேசுவை இழுத்துச் சென்று தங்கள் மூப்பர் சங்கத்தின் முன் நிறுத்தினார்கள். அவர்கள், ‘நீ மெசியா தானா? எங்களிடம் சொல்’ என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், ’நான் உங்களிடம் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்: நான் உங்களிடம் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டீர்கள்.இதுமுதல் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பார்’ என்றார். அதற்கு அவர்கள் அனைவரும், 'அப்படியானால் நீ இறை மகனா?' என்று கேட்டனர். அவரோ,'நான் இறைமகன் என நீங்களே சொல்லுகிறீர்கள்' என்று அவர்களுக்குச் சொன்னார்.
செபம்:
தந்தையே இறைவா!
நிபந்தனையற்ற அன்பால் எங்களை என்றும் நேசிப்பவரே, உமது ஆறுதலாலும் அரவணைப்பாலும் நாங்கள் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ளச் செய்வீராக. உமது மகனும் எங்கள் மீட்பருமான இயேசுவின் தியாக உள்ளத்தையும், தைரியத்தையும் எங்களுக்கு தருவீராக! இதன் மூலம் பிறரைத் தீர்ப்பிடாமல் அவர்களுக்கு சேவை செய்யும் மனப்பக்குவத்தைத் தாரும். ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும்.

நான்காம் நிலை
இயேசுவை பேதுரு மறுதலித்தார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : லூக்கா 22: 54-60
வீட்டு உள்முற்றத்தின் நடுவில் நெருப்பு மூட்டி, அதைச் சுற்றி அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். பேதுருவும் அவர்களோடு இருந்தார். அப்போது பணிப்பெண்ஒருவர் நெருப்பின் அருகில் அவர் அமர்ந்திருப்பதைக் கண்டு, அவரை உற்றுப் பார்த்து,'இவனும் அவனோடு இருந்தவன்' என்றார். அவரோ,'அம்மா, அவரை எனக்குத்தெரியாது' என்று மறுதலித்தார். சிறிது நேரத்திற்குப் பின் அவரைக் கண்ட வேறு ஒருவர், 'நீயும் அவர்களைச் சேர்ந்தவன் தான்' என்றார். பேதுரு, 'இல்லையப்பா' என்றார்.ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்குப் பின்பு மற்றொருவர்,'உண்மையாகவே இவனும் அவனோடு இருந்தான் இவனும் கலிலேயன் தான்' என்று வலியுறுத்திக் கூறினார். பேதுருவோ, 'நீர் குறிப்பிடுபவரை எனக்குத் தெரியாது'என்றார். உடனேயே, அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோதே, சேவல் கூவிற்று. ஆண்டவர் திரும்பி, பேதுருவைக் கூர்ந்து நோக்கினார் இன்று சேவல் கூவு முன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய் என்று ஆண்டவர் தமக்குக் கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.
செபம்:
தந்தையே இறைவா!
இயேசுவில் உறுதியாக இருந்த பேதுரு அவரை மறுதலித்தப்போதிலும், மனம் கசிந்து அழுது, வருந்திய அவரை நீர் ஏற்றுக் கொண்டு, உம் மந்தையின் ஆயனாய் சிறப்புறச் செய்தது போல் எங்களையும் உமக்காகவும், திருச்சபைக்காகவும் ஊழியம் புரிய வரம் தாரும். எங்களில் விசுவாசத்தை அதிகப்படுத்தி நாங்கள் எங்கள் சகோதர சகோதரிகளில் உம்மைக் காணவும், பொய்மை, பொறமை, பேராசை, அநீதிகள் எங்களை விட்டு நீங்க அருள்புரியும். ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும்.

ஐந்தாம் நிலை
இயேசுவுக்கு பிலாத்து மரணதண்டனை விதிக்கிறார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : மத்தேயு 27: 11-14
இயேசு ஆளுநன் பிலாத்து முன்னிலையில் நின்று கொண்டிருந்தார். ஆளுநன் அவரை நோக்கி, 'நீ யூதரின் அரசனா?' என்று கேட்டான். அதற்கு இயேசு, 'அவ்வாறு நீர் சொல்கிறீர்' என்று கூறினார். மேலும் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் அவர் மீது குற்றம் சுமத்திய போது அவர் மறுமொழி எதுவும் கூறவில்லை. பின்பு பிலாத்து அவரிடம், 'உனக்கு எதிராக எத்தனையோ சான்றுகள் கூறுகிறார்களே, உனக்குக் கேட்கவில்லையா?' என்றான். அவரோ ஒரு சொல்கூட அவனுக்கு மறுமொழியாகக் கூறவில்லை. ஆகவே ஆளுநன் மிகவும் வியப்புற்றான்.
செபம்:
தந்தையே இறைவா!
உண்மையை உலகுக்கு எடுத்துக் கூறியதால், படைக்கப்பட்டவனால் படைத்தவர் சிலுவைச்சாவுக்குத் தீர்ப்பிடப்படுகிறார். பல நேரங்களில் உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாமல் நாங்கள் தடுமாறும் வேளைகளில் யாரையும் தீர்ப்பிடாமல், எங்கள் உள்ளத்தில் உம் அன்பை ஏற்றி  உமக்குரியவராகவும், பாவத்தால் உமது நட்பை இழக்காமல் இருக்கவும் அருள்புரிவீராக. ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும்.

ஆறாம் நிலை
இயேசு சாட்டையால் அடிக்கப்பட்டு முள்முடி சூட்டப் பட்டார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக்கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : யோவான் 19: 1-3
பின்னர் பிலாத்து இயேசுவைச் சாட்டையால் அடிக்கச் செய்தான். வீரர்கள் ஒரு முள்முடி பின்னி அவர் தலையின்மேல் வைத்து, செந்நிற மேலுடையை அவருக்கு அணிவித்தார்கள். அவரிடம் வந்து, 'யூதரின் அரசே வாழ்க!' என்று சொல்லி அவருடைய கன்னத்தில் அறைந்தார்கள். பிலாத்து மீண்டும் வெளியே வந்து அவர்களிடம்,'அவனை நான் உங்கள் முன் வெளியே கூட்டி வருகிறேன், பாருங்கள். அவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்' என்றான்.
செபம்:
தந்தையே இறைவா!
உம் நேச மகன் அடிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு, அவமானப் படுத்தப்பட்டதின் மூலம் உலகத்தின் பாவங்களையும்,அதன் பரிசான சாவையும் வெல்ல வழிவகுத்தீரே! எங்களுக்கு ஏற்படும் நிந்தை அவமானங்களை நாங்களும் முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளவும், அதன் வழியே இயேசுவின் உயிர்ப்பில் மகிமை பெறவும், உண்மைக்கு சாட்சியாய் இருக்க அருள்புரிவீராக. ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும்..

ஏழாம் நிலை
இயேசு சிலுவையைச் சுமக்கிறார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : யோவான் 19: 16-17
அப்போது பிலாத்து அவரைச் சிலுவையில் அறையுமாறு அவர்களிடம் ஒப்புவித்தான். அவர்கள் இயேசுவைத் தம் பொறுப்பில் ஏற்றுக் கொண்டார்கள். இயேசு சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு 'மண்டை ஓட்டு இடம்' என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர்.
செபம்:
தந்தையே இறைவா!
உம் நேச மகன் இம்மனுக்குலத்தை மீட்க சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு சென்றாரே! அவர் சுமந்த சிலுவையே எங்கள் வாழ்வில் வெற்றியைத் தந்தது. பிறரால் எங்களுக்கு ஏற்படும் சிலுவைகளை நாங்கள் தியாக உள்ளத்துடன் ஏற்று, சுமந்து செல்ல, நாங்கள் வாழும் சமுதாயத்தில் இயேசுவுக்கு சாட்சியாக வாழ அருள்புரிவீராக. ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும்.


எட்டாம் நிலை
இயேசுவுக்கு சீமோன் உதவுகிறார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : லூக்கா 23: 26
அவர்கள் இயேசுவை இழுத்துச் சென்றுகொண்டிருந்தபோது சிரேன் ஊரைச்சேர்ந்த சீமோன் என்பவர் வயல் வெளியிலிருந்து வந்து கொண்டிருந்தார். அவர்கள் அவரைப் பிடித்து அவர்மேல் இயேசுவின் சிலுவையை வைத்து, அவருக்குப்பின் அதைச் சுமந்து கொண்டுபோகச்
செய்தார்கள்.
செபம்:
தந்தையே இறைவா!
சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் இயேசுவுடன் சிலுவை சுமந்து சென்றதைப் போல் எங்கள் வாழ்வில் வரும் துன்ப துயரங்களை ஏற்றுக்கொள்ள மனத்திடமும், ஆழ்ந்த விசுவாசத்தையும், உமது ஆறுதலையும் எங்களுக்கு தாரும். சீமோனைப் போல் நாங்களும் வாழ்வில் துன்பப்படுவோருக்கு உதவும் நல்லெண்ணத்தைத் தாரும். எப்போதும் எங்களை சுமப்பவர் நீராக இருப்பதை உணர்ந்து வாழ அருள்புரிவீராக.. ஆமென்

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும்

ஒன்பதாம் நிலை
இயேசு வழியில் எருசேலம் பெண்களை சந்திக்கிறார்..
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக்கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : லூக்கா 23: 27-29
பெருந்திரளான மக்களும் அவருக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்த பெண்களும் அவர் பின்னே சென்றார்கள். இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி,எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழ வேண்டாம். மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள். ஏனெனில் இதோ, ஒரு காலம் வரும். அப்போது;மலடிகள் பேறுபெற்றோர் என்றும் பிள்ளை பெறாதோரும் பால் கொடாதோரும் பேறு பெற்றோர் என்றும் சொல்வார்கள்.
செபம்:
தந்தையே இறைவா!
மாசற்ற இயேசுவுக்கு நேர்ந்த கொடுமைகளைக் கண்ட எருசேலம் மகளிர் அவரை எதிர் கொண்டபோது ‘எனக்காக அழவேண்டாம், உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்’ என்று ஆறுதல் தந்தீரே! எங்களாலும் எங்கள் பிள்ளைகளாலும் நேர்ந்த நிந்தை அவமானத்தால் உம்மை காயப்படுத்தியதற்காக வருந்திகிறேம். எங்கள் குடும்பம் உமது கோவிலாக மாற அருள்புரிவீராக.. ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும் .

பத்தாம் நிலை
இயேசு சிலுவையில் அறையப்படுகிறார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : யோவான் 19: 17-19
இயேசு சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு 'மண்டை ஓட்டு இடம்' என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர். அங்கே அவர்கள் இயேசுவையும் அவரோடு வேறு இருவரையும் சிலுவைகளில் அறைந்தார்கள். அவ்விருவரையும் இருபக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாக அறைந்தார்கள். பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் 'நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்' என்று எழுதியிருந்தது.
செபம்:
எங்கள் விடுதலை நாயகனே! அன்பு இயேசுவே!
அவமானச் சின்னமாகிய சிலுவையில் எங்களுக்காக மரிக்க உம்மை கையளித்தீரே! அந்த அவமானச் சின்னம் சாவை வென்று எங்கள் வாழ்வின் வெற்றியின் சின்னமாக மாறியது உம் அன்பால் அன்றோ! எங்களுக்கு ஏற்படும் அவமானங்கள் எல்லாம் வெற்றியின் படிக்கட்டு களாக அமைய அருள்புரிவீராக. ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும் .

பதினொன்றாம் நிலை
இயேசு கள்வனுக்கு விண்ணக வாழ்வை அளிக்கிறார்..
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : லூக்கா 23:39-43
சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன்,நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று;என்று அவரைப் பழித்துரைத்தான். ஆனால் மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு,'கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!' என்று பதிலுரைத்தான். பின்பு அவன், 'இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்' என்றான். அதற்கு இயேசு அவனிடம், 'நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்' என்றார்.
செபம்:
அன்பு இயேசுவே! மனந்திருந்தி நற்செய்தியை ஏற்றுக் கொண்டால் புதுவாழ்வு பெறுவீர் என்பதை எங்களுக்கு இந்த நல்ல கள்வன் மூலம் உணர்த்தினீரே. இந்த தத்துவத்தை உணர்ந்தவர்களாய், மனம் திருந்தி, உமது இல்லமாகவும், உமது சீடனாகவும் வாழ பரிசுத்த ஆவி எங்களை வழிநடத்த உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும் .

பனிரெண்டாம் நிலை
இயேசு தன் தாயிடம் பேசுகிறார்..
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : யோவான் 19: 26,27
இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், 'அம்மா, இவரே உம் மகன்' என்றார். பின்னர் தம் சீடரிடம், 'இவரே உம் தாய்' என்றார். அந்நேர முதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.
செபம்:
அன்பு இயேசுவே!
இதோ உன் மகன் என்று அன்னை மரியாளிடம் எங்களையும், இதோ உன் தாய் என்று அன்னை மரியாளை எங்களுக்கு அன்னையாகவும் கொடுத்தீரே. அந்த அன்னை மரியாளின் நிகரற்ற அன்பும், விவேகமும், தனித்துநின்று போராடிய மனவலிமையையும் எங்களுக்கு தாரும். அன்னையின் அருளும், பரிந்துரையும் எங்களோடு எப்பொழுதும் இருப்பதை உணர்ந்தவர்களாய் நாங்கள் உமக்காய் இவ்வுலகில் வாழ்ந்திட அருள் வரம் தாரும். ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும் .

பதிமூன்றாம் நிலை
இயேசு தன் சிலுவையில் மரிக்கிறார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : யோவான் 19: 28-30
இதன்பின், அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு, 'தாகமாய் இருக்கிறது' என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார். அங்கே ஒரு பாத்திரம் நிறையப் புளித்த திராட்சை இரசம் இருந்தது. அதில் கடற்பஞ்சை நன்கு தோய்த்து ஈசோப்புத் தண்டில் பொருத்தி அதை அவர்கள் அவரது வாயில் வைத்தார்கள். அந்த இரசத்தைக் குடித்ததும் இயேசு,
'எல்லாம் நிறைவேறிற்று' என்று கூறித் தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார்.
செபம்:
அன்பு இறைவா!
மனிதனைப் போல இயேசுவும் மரணத்திற்கு உட்படுத்தப்பட்டு அதனை வெற்றி கொள்ள உதவினீரே. அந்த மரணத்தால் எங்களுக்கு புதுவாழ்வு அளித்தீரே! நாளும் இயேசு காட்டிய வழியில் வாழ்ந்து, அவரில் மரித்து உம் வான்வீட்டை வந்தடைய எங்களுக்கு அருள்வரம் தருவீராக! ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும் .

பதிநான்காம் நிலை
இயேசு கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறார்..
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : மாற்கு 15: 43-46
அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் துணிவுடன் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் மதிப்புக்குரிய தலைமைச் சங்க உறுப்பினர். அவரும் இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர். ஏற்கெனவே இயேசு இறந்து விட்டதைக் குறித்துப் பிலாத்து வியப்படைந்து, நூற்றுவர் தலைவரை அழைத்து,'அவன் இதற்குள் இறந்து விட்டானா?' என்று கேட்டான். நூற்றுவர் தலைவரிடமிருந்து கேட்டு அறிந்ததும் உடலை அவன் யோசேப்பிடம் அளித்தான். யோசேப்பு மெல்லிய துணி ஒன்றை வாங்கி வந்து, இயேசுவின் உடலை இறக்கித் துணியால் சுற்றிப் பாறையில் வெட்டப்பட்டிருந்த கல்லறையில் கொண்டு வைத்தார். அதன் வாயிலில் ஒரு கல்லை உருட்டி வைத்தார்.
செபம்:
அன்பு இறைவா!
தமக்கென ஒன்றும் இல்லாத நிலையில் தம்மையே அளித்த, அன்பு இயேசுவிற்கு கல்லறைக் கூட அடுத்தவர் அளிக்கும் நிலை ஏன்? எல்லாம் எம்மில் நிலைக்கொண்டுள்ள சுயநலத்தால் தானே! தனக்கென எதுவுமில்லாமலிருந்த, எங்கள் நல்ல ஆயனைப் போல் நாங்களும் சுயநலம் இழந்து பிறர்நலம் காண அருள்வீராக! இதன் மூலம் உம் மனிதநேயம் இவ்வுலகில் அனைவருக்கும் சென்று அடைய துணைபுரிவீராக! ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும் .

பதினைந்தாம் நிலை
இயேசு உயிர்த்தெழுந்தார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : மாற்கு 16: 4-6
ஆனால் அவர்கள் நிமிர்ந்து உற்று நோக்கியபொழுது கல் புரட்டப் பட்டிருப்பதைக் கண்டார்கள். அது பெரியதொரு கல். பிறகு அவர்கள் கல்லறைக்குள் சென்றபோது வெண்தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் ஒருவர் வலப்புறம் அமர்ந்திருக்கக் கண்டு திகிலுற்றார்கள். அவர் அவர்களிடம்,திகிலுற வேண்டாம். சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள். அவர் உயிருடன் எழுப்பப் பட்டார். அவர் இங்கே இல்லை. இதோ, அவரை வைத்த இடம்.
செபம்:
வெற்றி திருநாயகனே!
மரணத்தை வென்ற தெய்வமே! இறைவனின் திட்டத்தை முழமையாக்கியவரே! விண்ணக வீட்டில் எங்களுக்கு நீர் செய்துள்ள ஏற்பாடுகளில் நாங்கள் நிலையாய் பங்கு கொள்ள ஆவலுடன் காத்திருக்கும் எங்களை நீரே வழிநடத்தும். இவ்வுலகில் அதற்கு ஏற்ப எங்கள் வாழ்வு அமைந்திட நீர் எங்களின் உள்ளும் ,எங்கள் முன்னும், பின்னும் எங்களை சுற்றி அரணாயிருந்து எங்களை உம் வெற்றி பாதையில் நடத்துவீராக. ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும் .  


No comments:

Post a Comment