இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு (கல்லறைத் திருவிழா) 02.11.2011


முன்னுரை:
இறையேசுவில் பிரியமானவர்களே! இன்று கல்லறையில் மரித்தவர்களுக்காக நாம் விழா எடுக்கிறோம்.  நாம் எடுக்கும் இந்த விழா, நமது வாழ்வு வளர்ந்து கொண்டிருக்கும் முடிவற்ற திருப்பயணம் என்பதை உலகிற்கு எடுத்துகாட்டுகிறது. இறைவன் நமக்கு வழங்கியுள்ள வாழ்வு என்னும் அருள்கொடை மயானத்துடன் முடிந்துவிடும் மாயை அல்ல. மாறாக இது உண்மை, அன்பு, சகோதரத்துவம் என்னும் இறையாட்சி விழுமியங்களை கட்டியெழுப்ப நடத்திக்காட்டிய போராட்டங்களின் வரலாற்றுக் கல்வெட்டுக் காப்பியங்கள். கிறிஸ்தவனின் சாவு அழிவாக பார்க்கப்படுவதில்லை மாறாக வாழ்வுக்குச் செல்லும் வழியாக பார்க்கப்படுகின்றது. 

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புதான் கிறிஸ்தவனின் சாவை ஒளிர்விக்கிறது. வாழ்வின் முடிவு மரணம் ஆனால் அது நிலைவாழ்வின் தொடக்கம். இயேசுவில் நம்பிக்கை கொள்வோர் என்றுமே வாழ்வர். நாம் வாழ்வை மிகுதியாய் பெரும் பொருட்டே நம்மிடையே கறிஸ்து வந்தார். இறப்பிற்குப் பின் இறை அமைதியில் நிம்மதி பெற இயலாத ஆன்மாக்களுக்கு பாவங்கள் தடையாய் உள்ளன. இத்தடைகளிலிருந்து விடுபடுவதற்கு நமது மன்றாட்டுகளும.   திருப்பலி, பிறரன்புச் செயல்கள் போன்றவையும் தேவைப்படுகின்றன. எனவே தான் திருச்சபை இறந்தவர்களுக்காக மன்றாடுவதில் அக்கறை காட்டுகிறது எனவே அவற்றை உணர்ந்தவர்களாக இறந்த ஆன்மாக்களுக்காக இந்த திருப்பிலியில் மிக உருக்கமுடன் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை: (எசா25:6,7-9)
நம் துன்பங்களை, துயரங்களை, பாவங்களை நாமே மேற்கொள்ளும் அளவிற்கு நாம் பெரியவர்கள் அல்ல மாறாக கடவுளிடம் சரணடைவதே மேல். ஏனென்றால் அவர் ஒருவரே சாவை வெல்ல செய்து நமக்கு மறுவாழ்வெனும் சந்தோசத்தை, அவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்திருக்க அருள்தருபவர் அவர் ஒருவரே எனக்கூறும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை: (1கொரி 15:20-28)
சாவு என்பது கடந்து செல்வதாக இருக்கின்றது. இவற்றில் இரு இயக்கங்கள் உள்ளன. ஒன்று மனிதன் தம்மை முற்றிலும் இறைவனுக்கு கொடுத்தல், மற்றொன்று மனிதனின் அச்செயலை இறைவன் ஏற்றுக்கொள்ளல். கல்வாரி மலையில் இயேசு தம்மையே தந்தையிடம் அர்பணித்தார், தந்தையும் அவரை ஏற்றுக்கொண்டார் அதன் அடையாளம்தான் உயிர்ப்பு என்று கூறும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்:
  1. எம் இறைவா, உம் அன்புத் திருச்சபையை காத்து வழிநடத்தி இறந்த திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், அனைவரும் உம் இரக்கமும் அருளையும் பொழிந்து உம் வானக வீட்டில் சேர்த்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  2. நீதியின் இறைவா, எம் நாட்டை ஆண்டு இறந்த தலைவர்கள், பொதுமக்கள், தியாகிகள் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். உயிர்தெழுதலும், வாழ்வும் நானே என்னிடம் நம்பிக்கை கொள்வோர் இறப்பிலும் வாழ்வார் என்ற உம்வார்த்தையில் நம்பிக்கைகொண்டு இறந்த அனைவரின் பாவங்களை போக்கி அவர்களை உம் வானக வீட்டில் சேர்த்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  3. அன்பு இறைவா, எம் பங்கை வழிநடத்தி இறந்த பங்கு குருவுக்காவும், பங்குமக்களுக்காகவும் மன்றாடுகிறோம். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் என்பதிற்கினங்க உம்மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்து இறந்த ஆன்மாக்கள் அனைத்தும் தங்களுடைய பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்களை நிறைவாக ஆசிர்வதித்து உம் வானக வீட்டில் சேர்த்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  4. அன்பின் இறைவா, யாரும் நினையாத ஆன்மாக்களுக்காக சிறப்பாக மன்றாடுகிறோம். அவர்கள் தாங்கள் செய்த பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்கள் வேதனை குறைந்து உம் தெய்வீக விருந்தில் பங்குபெற அவர்களை ஆசிர்வதித்து உம்மிடம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

No comments:

Post a Comment