பொதுக்காலம் 34 ஆம் ஞாயிறு முதல் ஆண்டு 20-11-2011


கிறிஸ்து அரசர் பெருவிழா
முன்னுரை:
அன்புக்குரியவர்களே! இன்று தாய் திருச்சபையானது கிறிஸ்து அரசர் பெருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றது. உண்மைக்கு சாட்சியம் கூறுவதே என் பணி, வழியும், உண்மையும், வாழ்வும் நானே என்ற இறைமகன் இயேசுவின் கூற்று அவரது பணி வாழ்வில் நிறைவேறியது. இவ்வுலகில் எத்தனை அரசுகள் ஆண்டு வந்திருக்கின்றன ஆனால் ஒன்றுகூட நிலையான அரசு இல்லை, காரணம் உண்மை இல்லை. இயேசு இவ்வுலகிற்கு கொண்டு வந்த அரசு நிலையான அரசு. அந்த நிலையான அரசின் மக்களாக வாழ வேண்டுமென்றால நம்மிடம் உண்மை இருக்க வேண்டும். நல்ல ஆயனாகிய இயேசுவின் மக்களாக நாம் வாழ அருள் வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
இறைவன் நீதியுள்ளவர், அன்புள்ளவர், கருணையுள்ளம்கொண்டவர். அவர் நல்லாயனாக இருந்து தன் மந்தையை கண்காணிக்கின்றார். ஒருவரைகூட அவர் தவற விடமாட்டார். இப்படிப்பட்ட நற்பண்புகளை கொண்ட அந்த நல்லாயனின் செயல்களை விளக்கிக்கூறும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 34: 11-12, 15-17

தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக் காப்பேன். ஓர் ஆயன் தன் மந்தையினின்று சிதறுண்ட ஆடுகளைத் தேடிச் செல்வது போல, நானும் என் மந்தையைத் தேடிப் போவேன். மப்பும் மந்தாரமுமான நாளில் அவற்றை எல்லா இடங்களினின்றும் மீட்டு வருவேன். நானே என் மந்தையை மேய்த்து, இளைப்பாறச் செய்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். காணாமல் போனதைத் தேடுவேன்; அலைந்து திரிவதைத் திரும்பக் கொண்டுவருவேன்; காயப்பட்டதற்குக் கட்டுப் போடுவேன்; நலிந்தவற்றைத் திடப்படுத்துவேன். ஆனால், கொழுத்ததையும் வலிமையுள்ளதையும் அழிப்பேன். இவ்வாறு நீதியுடன் அவற்றை மேய்ப்பேன். எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உன்னைப் பொறுத்தவரை, என் மந்தையே, நான் ஆட்டுக்கும் ஆட்டுக்கும் இடையேயும் ஆட்டுக் கிடாய்களுக்கும் வெள்ளாட்டுக் கிடாய்களுக்கும் இடையேயும் நீதி வழங்குவேன்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

இரண்டாம் வாசக முன்னுரை:
கிறிஸ்து தனது இரண்டாம் வருகையின்போது நீதி வழங்கும் அரசராக வருவார். அப்போது அவர் முன் நிற்பவர்களுக்கு எப்படிப்பட்ட தீர்ப்பு கிடைக்கப்போகிறது என்பதை தெளிவுப்படுத்துகிறார். கிறிஸ்து வழியாக வாழ்வு வந்தது அந்த நிலைவாழ்வில் நிலைத்திருக்க நாம் எப்படி வாழ வேண்டும் என்ற கருத்தினை கூறும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 20-26,28

சகோதரர் சகோதரிகளே, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஒரு மனிதர் வழியாகச் சாவு வந்ததுபோல ஒரு மனிதர் வழியாகவே இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர். ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போலக் கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர். ஒவ்வொருவரும் அவரவர் முறை வரும்போது உயிர் பெறுவர். கிறிஸ்துவே முதலில் உயிர் பெற்றார். அடுத்து, கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர். அதன் பின்னர் முடிவு வரும். அப்போது கிறிஸ்து ஆட்சியாளர், அதிகாரம் செலுத்துவோர், வலிமையுடையோர் ஆகிய அனைவரையும் அழித்துவிட்டு, தந்தையாகிய கடவுளிடம் ஆட்சியை ஒப்படைப்பார். எல்லாப் பகைவரையும் அடிபணிய வைக்கும்வரை அவர் ஆட்சி செய்தாக வேண்டும். சாவே கடைசிப் பகைவன், அதுவும் அழிக்கப்படும். அனைத்துமே மகனுக்கு அடிபணியும்போது தமக்கு அனைத்தையும் அடிபணியச் செய்த கடவுளுக்கு மகனும் அடிபணிவார். அப்போது கடவுளே அனைத்திலும் அனைத்துமாயிருப்பார்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி (மாற் 11: 10) 
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்:
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 31-46

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``வானதூதர் அனைவரும் புடைசூழ மானிடமகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்றுகூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப் பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப் பக்கத்திலும் நிறுத்துவது போல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார். பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப் பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, `என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப் பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்' என்பார். அதற்கு நேர்மையாளர்கள் `ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக்கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம்?' என்று கேட்பார்கள். அதற்கு அரசர், `மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்' எனப் பதிலளிப்பார். பின்பு இடப் பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, `சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை' என்பார். அதற்கு அவர்கள், `ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?' எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர்,`மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்.''
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

மன்றாட்டுக்கள்:
  1. அரசர்கெல்லாம் அரசராகிய இறைவா! எம் திருச்சபையின் தலைவர்கள் அனைவரும் மக்களுக்குப் பணிபுரியவே வந்தேன் என்ற இறைவனின் வார்த்தைக்கேற்ப, தங்கள் வாழ்க்கையில் நல்ல ஆயர்களாக இருந்து, தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இறைமக்களை நல்ல வழியில் நடத்திசெல்ல தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  2. நல்லாயனாகிய இறைவா! எம் பங்கு மக்கள் அனைவரும் கிறிஸ்துவின் மதிப்பீடுகளை எப்போதும் தங்கள் கண்முன் கொண்டு வாழவும், மனித நேயத்துடன் ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு, மதித்துவாழ தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  3. அன்பின் இறைவா! எம் நாட்டுத்தலைவர்கள்,சமூகத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள் அனைவரும் நீதியோடும், உண்மையோடும் ஆட்சி செய்து, நாட்டில் சமத்துவத்தை வளர்த்திடவும், வன்முறைகளை ஒழித்திடவும், சிறப்புடன் பல நல்ல திட்டங்களை செயல்படுத்த தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  4. தூயகத்தின் திருவுருவே இறைவா! எங்களைச் சூழ்ந்து வாழ்கின்ற ஒவ்வொரு சகோதரனையும், சகோதரியையும் மதித்து ஏற்றுக்கொண்டு, அன்புசெய்து வாழக்கூடிய உள்ளத்தை எங்கள் ஒவ்வொருவருக்கும் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக