மாந்தருள் மாணிக்கம்- இயேசு

நற்பண்புகளை ஒருங்கே கொண்டிருக்கும் நல்ல மனிதர்கள் நாளும் வளமையோடு போற்றப்படுவர். மனிதருள் மாமனிதர் எனவும் போற்றப்படுவர். எல்லா சமயத்தவரும் சமய நம்பிக்கையற்றோரும் சிறந்த மனிதரை என்றும் மானிட வாழ்வுக்கு உயர்ந்த எடுத்துக்காட்டாக என்றும் ஏற்றுக்கொள்வர். இயேசுவை இறைவனாகப் போற்றும் அனைவரும் அவரை சிறந்த மனிதனாகவும் இவ்வுலக வாழ்விற்கு இணையற்ற மாதிரியாகவும் கருதுகின்றனர். பிலாத்து இயேசுவைக் காட்டி, “பாருங்கள், இதோ! மனிதன்” எனக் கூறினார். (யோவன் 19:5). இயேசு தம் வாழ்நாளில் அவரது மக்கள் பணி தொடர்ந்தது மூன்று  ஆண்டுகள் எண்ணற்ற மக்கள் அவரது ஆளுமையால் ஈர்க்கப்பட்டனர். அவரது இலட்சிய வாழ்வால் ஈர்க்கப்பட்டு அவரைப்பின் தொடர்ந்த சீடர்கள் பலர். கோடான கோடி மனிதர்களை நெறிப்படுத்தி, அவர்களுடைய வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்த இயேசு தன் ஆளுமையால் மாபெரும் மானிடராய் விளங்கினார். அவரது வாழ்க்கை பண்புநலன்கள் குறிந்து விரிவாக அறிந்து கொள்ள முற்படுவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

இயேசுவின் ஆளுமை
ஒருவருடைய ஒருங்கிணைந்த நற்பண்புகளையே ஆளுமை என்பர். இயேசுவின் நற்பண்புகளே அவரது ஆளுமை. 19-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இயேசுவின் வாழ்க்கை வரலாறு பல உளவியல் பாணியில் அவரது ஆளுமையை விவரிக்க முயன்றாலும் அவை எழுதியோரின் ஆளுமையையே வெளிப்படுத்துவதாக அமைந்தள்ளது. இயேசுவின் ஆழ்மன ஆளுமையின் உட்கூறுகள் நற்செய்தியில் நேரடியாக பேசவில்லை என்பது உண்மை. எனினும், புதிய ஏற்பாட்டில் வரலாற்றில் வாழ்ந்த இயேசுவின் சொற்களைக் காணலாம். அதில் அவருடைய செயல்களை காண்கின்றோம். வாழ்வு நிகழ்ச்சிகள், பணிகள் உறவுகள் மற்றும் இலட்சிய ஈடுபாடுகளின்வழி அவரது ஆளுமையை நாம் ஊகித்து அறியலாம்.

இயேசுவின் நற்பண்புகள்
இவ்வுலகில் சாதாரண மனிதரைப்போல் அல்லாமால் மாந்தரின் உள்ளார்ந்த நல்ல உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நற்குணத்தை இயேசு பெற்றவர். அவரது உள்ளம் கருணையே வடிவாகக் கொண்டு, தம்மைச் சுற்றி உள்ளோரின் வாழ்க்கை வளத்திற்காக பாடுபட்டார். இவ்வுலகில் `யாருக்கு என்ன நடந்தால் எனக்கு என்ன?’ எனும் குறுகிற சிந்தனைக்கு இடம் தராமல் பரந்த நெஞ்சத்தைக் கொண்டிருந்தார். அவரது உணர்வுகள் மெல்லியவை, ஆழமானவை; ஏழை எளியவரின் இன்ப துன்பங்களை, துயரங்களைத் தமதாக்கிக் கொண்ட தொண்டுள்ளம் கொண்டவர்.

இயேசு பிறர் உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்து தம் இதயத்தை விசாலமாக்கினார்; அவர்களுடைய கண்ணீரிலும் கவலையிலும் தம் உள்ளத்தைக் கரையவிட்டார். வாடிய பயிரையும் துன்புறும் உயிர்களைக் கண்டபோதெல்லாம் தனது உள்ளத்தால் வாடினார். பச்சிளம் குழந்தைகளின் சிரிப்பைக் கண்டு தாமும் சிந்தை நெகிழ்ந்தார். சிரித்து மகிழ்ந்தார்; அடிமையாக்கப்பட்டோரின் வாழ்வு சிறக்க நாளும் முயன்றார். உரிமைக்கேட்டு உடைக்கப்பட்ட ஏழைகளின் குருதியால் தம் உள்ளத்தையம் உணர்வுகளையும் தோய்த்தவர்.

உணர்ச்சிகளுக்கு இயேசு அடிமையாகவில்லை; உணர்ச்சி வேகத்திலோ, வெறியிலோ அவர் செயற்பட்டதில்லை. மலையாக எழுந்து மறுநிமிடமே அலைபோல் வீழ்ந்துவிட்டவை அல்ல அவருடைய உணர்ச்சிகள். அவரது மக்கள் ஈடுபாட்டு அனுபவத்திலிருந்து பிறந்தன; அவருடைய இதயத்தின் ஆழத்தில் நிறைந்தன, நின்று நிலைத்தன. அவருடைய உறுதியான உள்ளத் தெளிவும் இலட்சியங்களும் அவரது தீவிரத் தியாகச் செயல்களாக வடிவெடுத்தன. வெறும் உணர்ச்சி மட்டுமன்று அவரது வாழ்வு. பொங்கிவந்த உணர்ச்சிகளை அவர் ஆற்றுப்படுத்தினார்; ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்தினார். அவருடைய உணர்ச்சிகளே அவரது சக்திக்கும் சாதனைக்கும் பிறப்பிடமாக அமைந்தது. அவரது உணர்ச்சியின் வெளிப்பாடுகள் நாடறிந்த உண்மை எனலாம். அவரது உணர்ச்சிகளுள் ஆழமானது, அடிப்படையானது அவரது இரக்கம். மனிதரின் துன்பத்தைக் காணும்போது மனமிளகினார். தொழுநோயளியைக் கண்டு அவர் மனமிரங்கினார் (மாற் 1:41); தன் ஓரே மகனைப் பறிகொடுத்த கைம்பெண்ணின் கண்ணீரைக் கண்டு அவர் உள்ளம் உருகினார் (லூக் 7:13); நல்ல மேய்ப்பன் இல்லா ஆடுகள்போல் மக்கள் நலிவதைக் கண்டு மனம் வருந்தினார். (மாற் 6:34); மூன்று நாள் உணவின்றி வாடிய மக்களைக் கண்டு தானும் வாடினார். (மாற் 8:2). இவ்வாறு இயேசுவின் இரக்க உணர்வுபற்றி வெளிப்படையாகக் காணலாம். நற்செய்தி ஏடுகளை ஆழ நோக்கினால் அவரது மக்கள் பணிக்கு அடிவேராக இருந்தது ஏழைகளிடத்தில் அவர் கொண்டிருந்த இரக்க உணர்வே என்பது தௌளத் தெளிவாகத் தெரியவரும்.

துன்புறுவோருடன் தம்மையே ஒன்றுபடுத்திக் கொண்டார். “அவர் பிறர் பிணிகளை ஏற்றுக் கொண்டார்” (மத் 8:17). துன்புறுவோருடன் அவர் துவள்கிறார்; கண்ணீர் வடிப்போரின் துன்பத்தில் அவரும் பங்கேற்கிறார். அடுத்தவர் துயர்கண்டு அழுவது ஆண்மைக்கு இழுக்காகுமோ என அவர் எண்ணவில்லை. பிறரது வேதனை தம்மைத் அண்டாதவறு தம் இதயத்தை இறுக்கிக்கொள்வது நல்ல மனிதத்திற்கு இழுக்கெனக் கருதினார். (மத் 18:23 தெ.; லூக் 16:19 தொ.). இக்குணங்களைப் பெற்றிருப்பதால் அவர் தங்கள் சகோதரனின் கல்லறைக்கு முன் நின்று கண்ணீர்விட்டழுத மார்த்தாளையும் மரியாளையும் கண்டு “மனம் குமுறிக் கலங்கி, கண்ணீர் விட்டார்” (அரு 11:33,35).

கோபம்
துன்புறுவோர், துயருறுவோர்பால் இரக்கம் கொண்டாலும், ஏழையோர்க்கு, அதிலும் குறிப்பாக ஏழை எளியவருக்குக் கொடுமை இழைபபவரைக் கண்டு அவர் பெரிதும் சினம் கொண்டர். மனிதம் சிதைந்து சீர்குலைந்து போவதைக் கண்டு மனம் கொதித்தார்; ஆதிக்கப்போக்குகளையும் அநீதிகளையும் கண்டு ஆத்திரமடைந்தார், ஆலயமுற்றத்தில் ஏழைகளைச் சுரண்டும் ஏமாற்று வேலையைக் கண்டு வெகுண்டெழுந்தார். அந்த ஏமாற்று வேலையைச் செய்த வியாபாரிகளை விரட்டி அடித்தார் (மாற் 11:15 தொ.) சட்டத்தின், சமய மரபுகளின் பெயரால் சாதாரண மக்கள்மீது சுமக்கவியலாத பாரங்களைச் சுமத்திய பரிசேயர், மறைநூல் அறிஞர், சட்ட வல்லுனர் போன்றோரின் பொய்களை, போலித்தனங்களை வன்மையாகச் சாடி கண்டித்தார் (மத் 23:13 தொ).

சமூதாயப் பார்வை
மனிதர்களைப் பற்றியும் சமுதாயத்தைப்பற்றியும் இயேசு கொண்டிருந்த கண்ணோட்டமும் கணிப்பும் மேலோட்டமானவையாகக் கொள்ளவியலாது. மேலாதிக்க வகுப்பினார் பார்வைகளையும் மதிப்பீடுகளையும் அவர் தமதாக்கிக் கொள்ளவில்லை அவரது பார்வை ஆழமானது, அடித்தட்டு மக்களின் நிலை சார்ந்தது. அவர் வீண் பகட்டுகளைக் கண்டு ஏமாறவில்லை, பரிசேயர் குணங்களை விரும்பவில்லை. எனினும், அரசியல்வாதிகளின் பொய்மைகளையும் சமயவாதிகளின் பக்திச் சாயங்களையும் இனம் கண்டார். அன்றைய சமூகம் நீதிமான்கள் எனக் கருதியவர்கள் எல்லாம் அவரது பார்வையில் நீதிமான்களாகப்படவில்லை; அன்றைய சமூகத்தால் பாவிகள் எனக் கருதியவர்களை அவர் பாவிகளாகக் கருதவில்லை. (லூக் 18:9-14;19:1-10;7:36-45). இறைவனது ஆசீபெற்றவர்கள் எனக் கருதப் பெற்ற அன்றைய செல்வர்களை நோக்கி அவர் “பணக்காரர்களே, உங்களுக்கு ஐயோ கேடு!” (லூக்6:24) என்றும்; இறைவனின் சாபத்துக்கு உள்ளானவர்கள் என எண்ணப்பட்ட ஏழைகளை நோக்கி “ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள்” (லூக் 6:20) என்றும் கூறுகிறார்.

இயேசுவின் அறிவு ஆழமானது மட்டுமன்று, கூர்மையானதும் கூட. அவர் வாதம் செய்வதிலும் பேச்சில் தம்மைப் பிடிக்கப் பார்ப்பவர்களின் வாயடைப்பதிலும் வல்லவராக இருந்தார். அதற்குப் பல தெறிவான எடுத்துக்காட்டுகள் நற்செய்தி ஏடுகளில் உள்ளன. செசாருக்கு வரி கொடுக்கலாமா எனும் கேள்விக்கு அவர் அளித்த பதில் (மாற் 12:12-17), உயிர்த்தெழுதல் உண்டா எனக் கேட்டோருக்கு அவர் தந்த மறுமொழி (மாற் 12:18-27), அவரது அதிகாரத்தைக் கேள்விக்கு உள்ளாக்கியோருக்கு அவர் விடுத்த எதிர் கேள்வி (மாற் 11:27-33), விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணைக் கல்லெறிய வந்தோர்க்கு அவர் தந்த சொல்லடி (அரு 9:3-9) என்பன போன்றவையாகும்.

மனிதநேயப் பண்பாளர்
ஆண்களிடம் மட்டுமின்றி பெண்களிடமும் இயேசு இனிதாகப் பழகுகின்றார். அன்றைய ஆணாதிக்க யூத சமூகத்திற்கே உரிய தவறான எண்ணங்களை வெறுத்தார். சான்றோர்களும் சமயப் பெரியவர்களும் பெண்களுடன் பேசுவதும் பழகுவதும் இழுக்கானது எனக் கருதிய சமூகத்தில் அவர்களுடன் இயல்பாகவும் சுதந்தரமாகவும் பேசிப் பழகினார். அவர்களை அவர் மனித ஆட்களாக மதித்தார்; மனித நேயத்துடன் நடந்துகொண்டார். இவ்வாறு சமாரியப் பெண்ணிடம் அவர் தாமாகவே முன்வந்து தயக்கமின்றிப் பேசத் தெடங்குகிறார் (யோவா 4:5 தொ); கனானேயப் பெண் தம் சொல்லுக்குத் தக்க மறுப்பு சொல்வதைக் கேட்டு வியந்து மகிழ்ந்து பாராட்டுகின்றார், அவள் கேட்டதைச் செய்கின்றார் (மாற் 7:24-30); மார்த்தாளும் மரியாளும் உரிமையடன் தம்மிடம் உரையாடுவதை அவர் ஏற்றுக்கொள்கின்றார் (லூக் 10:38-42;அரு11:21தொ) தேவைப்படும்போது பெண்களைத் தொடவும் அவர் தயங்கவில்லை (மாற் 1:31; 5:41); பெண்கள் தம்மைத் தொடுவதையம் அவர் தவறாகக் கருதவில்லை (லூக் 7:36 தொ; மாற் 5:25 தொ). சில பெண்களைத் தம் சீடராகக் கொண்டதோடு அவர்களது பொருளாதார ஆதரவையும் ஏற்றுக்கொண்டார் (லூக்8:1-3).

அவருக்கு யாரும் பகையில்லை. பரிசேயர், சதுசேயரின் தவறுகளை அவர் கண்டித்தபோதிலும் அவர்களில் அவர் யாரையும் வெறுக்கவில்லை. பரிசேயரான நிக்கோதேமு இரவில் அவரைப் பார்க்கவந்தபொழுது அவரை இயேசு வரவேற்று உரையாடுகிறார் (லூக்7:3). இப்பண்பு “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” எனும் தமிழரின் உயர் மரபிற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இயேசுவின் காலத்தில் இசுராயேல் சமூகமானது உரோமை ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அதன் ஆதிக்கத்தில் சமய, சமூக, பொருளாதார, பண்பாட்டு நசிவுக்கு ஆளாகி நின்றது. அத்தகைய சமூகத்தில் பிறந்து வளர்ந்தாலும் இயேசு அடிமையாகச் சிந்திக்கவில்லை, செயல்படவில்லை. மாறாக விடுதலை மனிதனாக வாழ்ந்தார்; அந்தத் தன்னுரிமை உணர்வையே ஏனையோருக்கும்தர முயன்றார். “நாமார்க்கும் குடியல்லோம், நமனையஞ்சோம்” எனும் வெற்றி உணர்வு அவருக்கு இருந்தது. நமக்கெல்லாம் தலைவன் இறைவனே, வேறு எவரும் இல்லை எனும் யூத சமய மரபுக்கு உரிய விடுதலைச் சிந்தனை அவரிடம் ஓங்கி நின்றது.

வாழ்விற்குப் பொருத்தமற்ற எத்தனையோ சமய மரபுகளையும் சமூகச் சட்டங்களையும் மீறத் துணிகிறார். ஊனமுற்ற நோயாளியைக் குணமாக்குவதற்காக ஓய்வுநாள் மரபினை மீறவும் துணிந்தவர். (மாற்3:1-6 2:23தொ); ஆசாரத் துப்புரவு முறைகளைத் தூக்கி எறிந்தவர் (மாற் 7:1 தொ,19); அன்றைய சமயவாதிகளின் நடைமுறைக்கு மாறாக அவர் பாவிகள் மற்றும் பெண்களுடன் நற்சிந்தனையுடன் பழகுகிறார்; அக்கால சமூகப் பழக்கவழக்கத்திற்கு, விதிக்கு மாறாக அவர் தொழுநோயளரைக்கூட தயக்கமின்றி சிறிதும் கூச்சமின்றி பிறர் தம்மை இழிவுபடுத்தினாலும் அதைப் பொருட்படுத்தாமல் தொட்டார் (மாற் 1:41); பெரும்பாடு கொண்ட பெண் தம்மைத் தொட்ட நிகழ்வை ஊரறியச் சொல்லவைத்து அது தீட்டு அல்ல என ஊரறிய தெரியப்படுத்துகிறார். (மாற் 5:25 தொ).

பல யூத சமய-சமூக மரபுகளையும் சட்டங்களையும் நடைமுறையில் மீறியது மட்டுமன்று, கடவுளின் வார்த்தை எனக் கருதப்பட்ட யூத சமயத் திருநூலாகிய தோராவின் (பழைய ஏற்பாடு) சில பகுதிகளைக்கூட அவர் கேள்விக்கு உள்ளாக்குகிறார் (மாற் 10:2-12; உபா24:1-4); தூய உணவு வகைகள் பற்றிய சட்டங்களை அவர் அடியோடு மாற்றுகிறார் (மாற் 7:14-23). மேலும் அன்றைய யூத சமயத்தின் மையமாக இருந்த எருசலேம் ஆலய வழிபாட்டையே கேள்விக்கு உள்ளாக்கி உண்மை மனித வாழ்வே உயர்ந்த வழிபாடு என்கிறார் (அரு 4:21-23). இறுதியாக அந்த ஆலயமே இடிக்கப்படும் என இறைவாக்கு உரைப்பதோடு (மாற் 13:1-2) அதை இடித்துவிடுங்கள் என அறைகூவலும் விடுத்தார் (அரு 2:19 ; மாற் 14:57-58).

சாதி, சமய, இன, மொழி எனும் வரம்புகளைக் கடந்தது அவரது மனிதநேயம். ஆண்-பெண், யூதன்-புற இனத்தான் எனும் வேறுபாடுகள் இன்றி எல்லார் நலனிலும் அவர் அக்கறை காட்டினார். தேடி வந்தவரையெல்லாம் வரவேற்று, தேவைப்பட்டோருக்கெல்லாம் உதவினார். அவர் சார்புறுதி எவர்மீதும் இன்றி சமச்சீராக எல்லாருக்கும் ஒரே வகையில் அன்பு செய்யவில்லை. ஏழை - பணக்கரார், சுரண்டப்படுவோர் - சுரண்டுவோர், அடக்கப்படுவோர் – அதிகாரம் உடையோர் எனும் இரு பிரிவுக்குமிடையில் நடுநிலையோடு, வறியவர் சிறியவர், நோயாளர் ஆதரவற்றோர் . தாழ்த்தப்பட்ட ஒதுக்கப்பட்ட மக்களிடம் அவர் கொண்டுள்ள அக்கறை தனிச் சிறப்பானது. எல்லோருக்கும் தொண்டனாகவும் ஏழைகளுக்குத் தோழனாகவும், அனைத்து மனிதரிடமும் அன்புகாட்டி வறியோர், வாழ்விழந்தோர், போன்ற அனைவருக்கும் அன்பு காட்டியது அவரது உயர்ந்த நற்பண்புக்கு எடுத்துக்காட்டாகும்.

மனிதநேயம் உள்ளத்து அளவில் நின்றுவிட்ட உணர்ச்சியாக மட்டுமில்லாமல் அவரது முழமையான ஈடுபாடு, வாழ்வின் தொடர் செயற்பாடு என்றளவில் அது பேச்சுடன் முடிந்துவிட்ட வெறும் போதனையுமின்றி துன்புற்றோரின் துயரைக் களைந்து, கவலையுற்றோரின் கண்ணீரையும் துடைக்கின்றார். பாவம் செய்தவரை மன்னிக்கும் பெருந்தன்மை கொண்டவர்; நோயுற்றோருக்கு மருத்துவராகவும் சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டோருக்கு உற்ற துணையாகவும்  விளங்குபவர்; அவருடன் சகோதரத்துவ சம பந்தியில் அமர்ந்து மகிழ்ந்தனர். ஒடுக்கப்படடோர் அவரிடம் உரிமைவாழ்வைப் பெற்றனர். “எளியோருக்கு நற்செய்தி அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலையடைவர், குருடர் பார்வை பெறுவர் என அறிவிக்கவும், ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வு வழங்கவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை அறிவிக்கவும்” (லூக் 4:19) என்பது அவரது எண்ணம். அதுமட்டுமன்று; அதுவே அவரது பணிவாழ்வின் தொடக்கமும், நிறைவுமாகும். இதனால்தான் “எல்லாம் நன்றாகவே செய்திருக்கிறார்” (மாற் 7:37) என மக்கள் திரள் அவரைப் பாராட்டுகின்றது; “எங்கும் அவா நன்மை செய்துகொண்டே சென்றார்” (தி.துப10:38) என அப்போஸ்தலர் பணி அவரது வாழ்க்கை வரலாற்றையே சுருக்கமாக எடுத்துரைக்கிறது.

அன்பு மேல்நிலையில் நின்று அவர் காட்டும் கருணை நயம் அன்று. தம் நிலையை விட்டுவிடாது, தம் பாதுகாப்புகளை இழந்துவிடாது ஏழைகளுக்கு இரங்கி அவ்வப்போது இறங்கி உதவி செய்யம் வகையில் இயேசுவின் அன்புப்பணி அமையவில்லை. அவரது அன்பு தம்மையே வெறுமையாக்கியது. ஏழை எளியவருடன் தம்மையே ஒன்றுபடுத்திக் கொண்டது. “அவர் செல்வமிக்கவராய் இருந்தும்…. உங்களுக்காக ஏழையானார்” (2 கொரி 8:9). இறையியலார் மோல்ட்டமான் கூறுவதுபோல், “அவர் ஏழைகளின் சகோதரன், மக்களின் தோழன், கைவிடப்பட்டோரின் நண்பன், நோயுற்றோருக்கு இரங்கும் ஆதரவாளன். தம் அன்புறவால் தம் விடுதலையையும் நலமாக்கும் ஆற்றலையும் அவர்களுக்கு நல்குகிறார். அவரில் ஆண்களும் பெண்களும் சகோதரத்துவ மனிதனைக் கண்டுகொள்கின்றனர்.

சரித்திரப் பண்பாளர்
உயர் மனிதனாகக் கருதும் மரபு நோக்கும் சராசரி மனிதனகாக் கருதும் இன்றைய சிலரது நோக்கு ஏற்கக்கூடியவையல்ல. மரபு நோக்கில் அவர் இன்னொரு உலகைச் சார்ந்த மனிதன், இயல்புக்கு அப்பாற்பட்டவர். அவர் ஒரு தனிப்பிறவி, பிறப்பிலேயே எல்லா அறிவும் ஆற்றலும் பெற்றிருந்தார். உண்மையில் பிரச்சினையோ, மனதில் குழப்பமோ, தயக்கமோ, பலவீனமோ, குறைபாடோ எதுவுமே இருந்ததில்லை. மரபு கற்பனை செய்துகொள்ளும் இயேசு, உண்மை மனிதனாக இருந்திருக்க முடியாது. நற்செய்தி ஏடுகளும் இத்தகைய கண்ணோட்டத்திற்கு எதிராக எழுப்பம் கேள்விகள் பல. இதற்கு மாறாக இன்று சிலர் அவரைச் சராசரி மனிதனாக மட்டுமே பார்க்கின்றனர். தொடக்கம் முதல் இறுதிவரை தாம் யார், தம் இலட்சியம் யாது? அதை நிறைவேற்றுவது எவ்வாறு என்பன பற்றித் தெளிவின்றி நின்றவர்; ஆயிரம் சந்தேகங்களுக்கிடையில் எது உண்மை, என்ன நிலைப்பாட்டினைத் தாம் எடுப்பது எனத் தெரியாது தயங்கியவர்; எனினும் திறந்த மனதுடன் என்றும் உண்மையைத் தேடிய சிறப்பு உடையவர் என்றே அவரை காண்கின்றனர். இந்த நோக்கும் ஏற்க முடியாததே. ஏனெனில் சராசரி வாழ்வு வாழ்ந்த ஒரு மனிதன், உண்மைத் தெளிவோ இலட்சிய உறுதிப்பாடோ இல்லாத ஒருவன் வாழ்ந்த காலத்திலும் சரி, வரலாற்றின் தொடர்ச்சியிலும் சரி இவ்வளவு பெரிய தாக்கத்தை எவ்வாறு ஏற்படுத்தியிருக்க முடியும்? என்ற கேள்வி எழலாம். நற்செய்தி ஏடுகள் இயேசுவை கேள்விகள், குழப்பங்களுக்கிடையிலும் இலட்சியத் தெளிவும் தீவிர செயல்பாடும் கொண்டவராகவே காட்டுகின்றன; எத்தனையோ சராசரி மனிதர்களுக்கு இடையே வாழ்ந்த இன்னொரு சராசரி மனிதன்.

முடிவுரை
இயேசுவின் பல்வேறு முக்கியப் பண்புகளை அவரது மூலமுதல் பண்புடன் இணைத்துப் பார்த்தால் நம் பார்வையில் பளிச்சிடுவது அவரது ஆளுமையின் முதிர்ச்சியே எனலாம். உளப்பக்குவத்திற்கு உன்னத எடுத்துக்காட்டாக, மனநலத்திற்குச் சிறந்த உதாரணமாகவே நம் கண்முன் நிலைத்திருக்கிறார். ஆளுமை வளர்ச்சியின் அடையாளங்கள் என உளவியலார் கருதும் பல கூறுகள் வியப்பளிக்குமளவு அவரிடம் நற்பண்புகள் ஆக்கம்பெற்று விளங்குகின்றன. இவற்றில் அவரது ஆளுமையின் ஒருங்கிணைந்த நற்பண்புகளையே குறிப்பிடத்தக்கதாகக் கொள்ளலாம்.

உணர்ச்சிகளும் இலட்சியங்களும் ஒன்றோடு ஒன்று மிக அருமையாக அவரிடம் ஒருங்கிணைந்து நிற்கின்றன. பசி, தாகம் எனும் இயல்பு நாட்டங்கள்கூட இறையரசுப் பணி எனும் இலட்சியத்தால் நிறைவுபெறுகின்றன (யோவா 4:34). அதுபோல் மிகச் சிறப்பாக அவரிடம் ஒருங்கிணைந்து நிற்பவை அவரது அகத்தன்மையும் புறத்தன்மையும். தனிமையில் மகிழ்கிறார், பிறரிடம் அன்புகாட்டும் நல்ல உறவுகளில் திளைத்து, ஆழ சிந்தித்து, ஆர்வமுடன் செயல்படுகிறார். எவ்வளவு அதிகமாகப் பணிசெய்கிறாரோ அவ்வளவு ஆழமான இறைசிந்தனையில் திழைப்பார். அவரது வாழ்வில் பணியும், செபமும் ஒன்றையொன்று ஆழப்படுத்துவதால் பணியா? செபமா? எனும் போலியான பிரச்சனை அவருக்கு இல்லை. மேலும் அவரது சொல்லுக்கும் செயலுக்கும் முரண்பாடில்லை. பிறருக்குப் போதித்ததைத் தம்வாழ்நாளில் வாழ்ந்தும் காட்டுகிறார். நமக்கு நல்ல வாழ்க்கைக்கு வழிகாட்டி என்றும் போதிக்கிறார்.

ஒருங்கிணைந்த ஆளுமை அவர் பிறப்பிலேயே இருந்ததில்லை. அன்றாட வாழ்வின் அக-புற இழுபறியான சமூகம் போராட்டங்களிடையே அவரிடம் வளர்ந்த ஒன்றுதான் எனலாம். மக்கள் தம் வாழ்வில் சந்திக்கும் பல சிக்கல்களை; எதிர்மறைகளை தம்வாழ்வில் அன்றாடம் தாமும் சந்தித்தார். தம் பணிகளில் அவர் எத்தனையோ நெருக்கடிகளுக்கும், மனக் குழப்பங்களுக்கும், அக முரண்பாடுகளுக்கும் ஆளானார். சதாரண மனிதரைப் போல் அவரும் சோதனைத் துன்பங்களுக்கு உள்ளானார் (எபி 4:15). பணியின் துவக்கத்தில் அவர் எதிர்கொண்ட சோதனைகள் (மத் 41-11), மக்களும் சீடரும் யார் எனத் தம்மைக் கருதுகிறார்கள் என்று அறிய அவர் கேட்ட கேள்விகள் (மாற் 8:27-29), இறுதியில் கெத்சமெனியிலும் கல்வாரியிலும் அவருக்கு ஏற்பட்ட கலக்கங்கள் (மாற் 14:34 தொ.; 15:35) இதற்குத் தெளிவான சான்றுகளாகும். இத்தகைய தயக்கங்களிலும் மனக்குழப்பங்களிலும் தம் இறையரசு இலட்சியத்தையே முன்வைத்து அதன் அடிப்படையில் அவற்றிற்கு ஏற்ற முடிவைக் காண்கிறார்.

இயேசு ஒரு சாதாரண மனிதன், கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஓர் ஏழைத் தொழிலாளி என்றாலும் சராசரி மனிதனாக வாழவில்லை. வாழ்வில் ஆழமாக ஈடுபட்டு மனிதனின் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் உயர்ந்த குறிக்கோளினை உள்ளத்தில் தெளிவுபடுத்தி தம் உழைப்பையும் உயிரையும் அதற்கு முழுமையாகத் தருகின்றார். மனிதர்கள் நாளும் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சனைகள், தயக்கங்கள், குறைகள். குழப்பங்கள் போன்றவற்றையும் சந்திக்கின்றார். `எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும்’ - எனும் இறையரசு இலட்சியத்தின் அன்பு சக்தியால், அர்ப்பணத்தால் அவற்றை மேற்கொள்ளுகின்றார். சராசரி மனிதரிடம் இல்லாத இந்தச் சாதனை காரணமாகத்தான் மாமனிதன் எனச் சரித்திரம் அவரைப் போற்றுகின்றது போலும். சராசரி மனிதரிடம் இல்லாத இந்த அன்பு வாழ்வால்தான்,  தியாக இறப்பால்தான் மனித தெய்வம் மாந்தருள் மாணிக்கம் என இன்றளவும் மக்கள் நாளும் வழிபடுவது இயல்பே.

சுருக்கக் குறியீடுகள் :
மத்.– மத்தேயு
மாற்.– மாற்கு
லூக்.– லூக்கா
அரு.– அருளப்பர்
யோவா – யோவான்
திதுப.– திருத்தூதர் பணிகள்
பிலி.– பிலிப்பியர்
கொரி.– கொரிந்தியர்
எபி.– எபிரேயர்

தி. மரியசீலன்
முனைவர் பட்ட ஆய்வாளர்
மொழியியல் துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர் 613 010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக