சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (சனவரி 1 – 7, 2012)


ஓடிக் கொண்டிருக்கின்ற இந்த உலகத்தை ஓடியே வென்று விட நினைத்தாலும் பரவாயில்லை. ஆனால் நாம் சற்று அதிவேகமாக வாகனத்தில் சென்று அதை வென்றுவிட நினைக்கிறோம். இதன் விளைவுதான் இன்று ஏற்படுகின்ற சாலை விபத்துகள்.  ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு என்று அன்று ஆன்றோர் சொன்னார்கள். அதையும் நாம் சற்று மாற்றி அவசரக்காரனுக்கும் புத்திமட்டு என்று நிருப்த்திருக்கின்றோம் எப்படி என்று கேட்கிறீர்களா? 

30 மாடி கட்டிடம் ஒன்றின் மேல் மாடியில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருந்த ஒருவனிடம் ஒருவன் சென்று “டேய் சேகர் உன் மனைவி பிரசவத்தில் இறந்து விட்டாள்”என்று கூறினானாம் உடனே அவன்  அவசரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் “என் மனைவி இல்லாத இந்த உலகத்தில் நான் வாழ விரும்பவில்லை”என்று கூறி அவன் தன் உயிரை மாய்த்துக்கொள்வதற்காக ஓடிச்சென்று அருகில் இருந்த ஜன்னலின் வழியே கீழே குதித்து விட்டான். அவன் 5 மாடிகள் கடந்த பின்புதான் தெரிந்தது அவன் மனைவி கர்பமாகவே இல்லை என்று.  மேலும் 5 மாடிகள் கடந்த பின்புதான் தெரிந்தது அவனுக்கு திருமணம் ஆகவில்லை என்று.  அவன் கீழே விழபோகும் முன்தான் அவனுக்கு நினைவிற்கு வந்தது அவன் பெயரே சேகர் இல்லை என்பது.  என்ன செய்வது கீழே விழுந்து இறந்துவிட்டான். 

அவசரக்காரனுக்கும் புத்தி மட்டுதான் என்று நான் சொன்னது சரிதானே?இன்று பல சாலை விபத்துகள் நடப்பதற்கு காரணமும் இதுதான். நாம் அவசரம் அவசரம் என்று கூறிக்கொண்டு சாலை விதிகளை மதிக்காமல் போவதால்தான் இத்தகைய விபத்துகள் நிகழ்கின்றன. இதில் நாம் மிகவும் வருத்தபட வேண்டிய விஷயம் என்ன தெரியுமா?கடந்த ஆண்டின் கணக்கின்படி விபத்தில் அதிகம் பலியானவர்கள் இளைஞர்கள் என்பதுதான். நம் இளைஞர்களின் பலம் பலவீனம் இரண்டுமே இளமைதான்.  இளைமை துடிப்பில் உள்ள அவர்கள் வாகனங்களில் அதிவேகமாக செல்வதையே பெரும் மதிப்பாக கருதுகின்றார்கள். 

மேலும் அவர்கள் தன்னை சுற்றி இருக்கும் அனைவரும் தன்னை சற்று உற்று பார்க்க வேண்டும் என்பதற்காகவே வாகனங்களில் அதிக சப்தம் எழுப்பிக்கொண்டு செல்கிறார்கள். அதன் விளைவு விபத்தில் தங்கள் இறப்பதோடு மட்டும் அல்லாமல் வழியில் வருகின்ற அப்பாவிகளின் உயிரையும் பறித்து விடுகிறார்கள். இது ஒரு புறம் இருக்க அவர்களுடைய கவனம் சிதறிபோகின்றது. கைபேசியும் மதுவும் அவர்களுடைய கவனத்தை சற்று களவாண்டு விடுகின்றார்கள். 

அமெரிக்கா போன்ற அயல்நாடுகளிலெல்லாம் வாகனங்கள் சுமார் 120 மைல் வேகத்தில் பயணம் செய்கின்றன. அவ்வாறு வாகனங்கள் செல்லும் போது அதன் சக்கரத்திற்கும் சாலைக்கும் இடையில் 2 விரல் அளவு இடைவேளி இருக்குமாம் அதாவது வாகனங்கள் பறந்து கொண்டு செல்கின்றன என்பது அர்த்தம். அப்படி அதிவேகமாக செல்லும் போதும் கூட அங்கு விபத்துகள் நடப்பது மிகவும் குறைவாக இருக்கின்றது. ஆனால் நாம் இங்கு வெறும் 50 மைல் தூரத்தில் சென்றாலும் ஏராளமான விபத்துகள் நடக்கின்றனவே இதை பற்றி நாம் சிந்திதிருக்கின்றோமா?இதற்கான காரணம் இரண்டு.  ஒன்று, அவர்கள் எவ்வளவு வேகத்தில் சென்றாலும் சாலை விதிகளை சரியாக கடைப்பிடிக்கின்றார்கள்.  இரண்டாவது, அவ்வாறு அவர்கள் கடைப்பிடிக்க தவறும் பொழுது உடனடியாக அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். அவர்களுடைய காவலர்கள் கடைமை உணர்வுடன் பணியாற்றுகின்றார்கள். ஏன் நம் நாட்டில் இத்தகைய கடைமை உணர்வு நிறைந்த அதிகாரிகள் இருந்ததில்லையா? ஏன் இல்லை பிரதமரின் வாகனத்திற்கும் கூட வாகன நிறுத்தம் ரசீதை வழங்கிய துணிச்சல் மிகு காவலர்கள் இருந்த நாடு நம் நாடு. அந்த காவலர் ஒரு பெண். அவர் வேறுயாரும் இல்லை முதல் பெண் I.P.S. கிரண் பேடிதான் அவர்.  அவருக்கு முன்னும் அவருக்கு பின்னும் இதுவரை எவரும் இத்தகைய துணிச்சல் மிகுந்த காரியத்தினை செய்தது கிடையாது. அத்தகைய பொறுப்பு மிக்க காவலர்கள் இருந்த இந்த நாடு இன்று எப்படி இருக்கின்றது? மாத கடைசியில் கையில் வருமானம் தீர்ந்த பிறகு மட்டும் காவலர்கள் சாலை ஓரங்களில் நின்று கொண்டு வாகன ஓட்டும் உரிமம் இல்லாமல் வருகிறவர்களை பிடித்து அவர்களிடம் 50தும் 100ம் மாமூல் பெறுகின்றார்கள். இவ்வாறு இருந்தால் எப்படி நம்மால் சாலை விபத்துகளை கட்டுபடுத்த முடியும்?

இந்நிலை மாற வேண்டும். இதற்கு இரண்டு விஷயங்களை நாம் செய்ய வேண்டும். ஒன்று, ஒவ்வொறு குடிமகனும் நான் சாலைவிதிகளை சரியாக கடைபிடிப்பேன் என்று உறுதி எடுக்க வேண்டும். இரண்டாவது, அதனை பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கின்ற காவலர்கள் ஒவ்வொருவரும் கடமையுணர்வோடு பணியாற்ற வேண்டும். இது நடந்தால் நம்மால் கண்டிப்பாக சாலை விபத்துகளை தடுக்க முடியும். 

- ம. அருள்ராஜ், இளங்கலை 2ஆம் ஆண்டு வேதியல் 
கும்பகோணம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி, தமிழ்த் துறை, ஏற்பாடு செய்த சாலை பாதுகாப்பு நிகழ்ச்சியில் நடைபெற்ற பேச்சு போட்டியில் பங்கேற்று முதல் பரிசைப் பெற்ற உரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக