பொதுக்காலம் 5 ஆம் ஞாயிறு (இரண்டாம் ஆண்டு) 05-02-2012


முன்னுரை:  இறையேசுவில் பிரியமானவர்களே! பரபரப்பான சூழலில் பல்வேறு பொறுப்புகளால் நமது வாழ்வு நெருக்கடிக்குள்ளாகி தடுமாறுகிறது.  அமைதியில், குடும்பத்தில், உறவுகளில் இறைவனை கண்டு இளைப்பாறுதல் பெற நமது ஆண்டவர் இயேசு அவரது திருப்பலிக்கு அழைக்கிறார். தனிமையான இடத்தில் இறைவேண்டுதல் வழியாக இயேசு  ஆற்றல் பெற்றது போல நாமும் குறிப்பாக நமது குழந்தைகள் ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ (லூக்கா 2:52) இப்பலியில் பங்கேற்போம். 

முதல் வாசக முன்னுரை:  மனிதனுடைய வாழ்வு போரட்டம் நிறைந்ததாகத்தான் இருக்கின்றது. அந்தப் போராட்டத்தில் அவன் சந்திக்கக்கூடியது ஒன்று நோய். எந்தவிதமான நோய் எனக்குள் வந்து பாதித்தாலும் நான் அதற்கு அஞ்சமாட்டேன் ஏனென்றால் நான் கடவுளிள் முழுமையான நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்; என்று துன்புறும் உழியனாகிய யோபு கூறுவதை வாசிக்க கேட்போம்.

யோபு நூலிலிருந்து வாசகம் (யோபு 7:1-4,6-7)

மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போரட்டந்தானே? அவர்களின் நாள்கள் கூலியாள்களின் நாள்களைப் போன்றவைதாமே? நிழலுக்கு ஏங்கும் அடிமை போலவும், கூலிக்குக் காத்திருக்கும் வேலையாள் போலவும், வெறுமையான திங்கள்கள் எனக்கு வாய்த்தன: இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின. படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்! இரவோ நீண்டிருக்கும்: விடியும்வரை புரண்டு உழல்வேன, என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும் விரைந்தோடுகின்றன: அவை நம்பிக்கையின்றி முடிவடைகின்றன. என் உயிர் வெறுங்காற்றே என்பதை நினைவுகூருவீர்: என் கண்கள் மீண்டும் நன்மையைக் காணா.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

இரண்டாம் வாசக முன்னுரை:  தமது புகழ்க்காக, நற்பெயருக்காக வாழாமல், உண்மையான தொண்டுள்ளத்தோடு மக்கட்பணி செய்தவர். நற்செய்திப் பணி வழி நம்பிக்கையை ஊட்டியவர். நற்செய்தி அறிவிக்காவிடில் ஜயோ எனக்குக்கேடு என்று பவுல் அடியார் நம் அனைவரையும் இறையன்புக்குச் சான்றுபகர்வோம் என்றும் நம்பிக்கை இழந்த மக்களுக்கு நம்பிக்கை ஒளியாவோம் என்றும் நல்லது செய்வதில் என்றுமே முனைப்பாயிருப்போம் என்று கூறும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் (1கொரி. 9:16-19,22-23)

நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! இதை நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு. நானாக விரும்பாவிட்டாலும் இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பாக இருக்கிறது. அப்படியானால், எனக்குக் கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள மனநிறைவே அக்கைம்மாறு: நான் நற்செய்தி அறிவிப்போருக்குரிய உரிமையைக் கொஞ்சம் கூடப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன். வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவனானேன். எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன். நற்செய்தியால் வரும் ஆசியில் பங்கு பெறவேண்டி நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

நற்செய்தி வாசகம்: 
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (1:29-39)

பின்பு அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார். மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள். நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது. பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்: அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை. இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள். அவரைக் கண்டதும், எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் " என்றார்கள். அதற்கு அவர், "நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்: ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன்" என்று சொன்னார். பின்பு அவர் கலிலேய நாடு முழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி பேய்களை ஓட்டி வந்தார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

மன்றாட்டுக்கள்: 
  1. அனைவரும் என்னைப் போல் நற்செய்தியை அறிவியுங்கள் என்று சொன்ன எம் இறைவா! உம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள்,குருக்கள்,கன்னியர் பொதுநிலையினர் அனைவரும் உம்மைப்போல வாழ்ந்து தங்களது வாழ்வால் மற்றவருக்கு நற்செய்தியை அறிவித்திட தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  2. தலைவனாக விரும்புபவன் பணியாளனாக இருக்கட்டும் என்று சொன்ன தெய்வமே, சகோதரத்துவத்தின் பார்வையில் எங்கள் நாட்டுத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் வாழ்ந்து நீதியின் கண் கொண்டு எங்களை வழிநடத்த தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  3. எங்களையெல்லாம் பராமரிக்கும் நல்தெய்வமே, நாங்கள் வாழுகின்ற நிலையில் மற்றவரின் உணர்வுகளை மதிக்கவும் தனி மனித சுதந்திரத்திற்கு மதிப்புக் கொடுக்கவும் தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  4. இரக்கமுள்ள இறைவா எங்கள் ஊரில் வாழும் குடும்பத்தார்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பு செய்துவாழவும், அவர்களில் உம் அன்பை பெற்றிடவும், அவர்களுக்கு என்றும் ஆதரவாக அவர்கள் உற்றார் உறவினார்கள் இருக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

No comments:

Post a Comment