நள்ளிரவு மன்னிப்பு மற்றும் நன்றி வழிபாடு - டிசம்பர் 31, 2010

தேவ நற்கருணையை அலங்கார திருப்பீடத்தில் வைத்தல்:
1. ஆராதனை (அ) புகழ்ச்சி செபம் விவிலிய பிண்ணனியில் சொல்லுதல்
2. ஆராதனைப் பாடல் (பொருத்தமான பாடலை தேர்வு செய்து கொள்ளவும்)


வழிபாட்டு முன்னுரை
“கடவுளின் செயலுக்காக நான் மௌனமாய் காத்திருக்கின்றேன், எனக்கு மீட்பு கிடைப்பது அவரிடமிருந்தே, உண்மையாகவே என் கற்பாறையும் மீட்பும் அவரே, என் கோட்டையும் அவரே, எனவே நான் சிறிதும் அசைவுறேன்.” (தி.பா. 62:1-2). ஆண்டவரின் அருள்வரத்தால் கடந்த 2009 ஆம் ஆண்டு சிறப்பாக கடந்து சென்றது. அதே கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார். நாம் இடுக்கணுற்ற வேளையில் நமக்கு உற்ற துணையும் அவரே. படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார். கடவுளின் துணை நமக்கு என்றும் உண்டு. அவரே நமக்கு அரண். அந்த படைகளின் ஆண்டவர் கடந்த ஆண்டைப் போலவே நமக்கு மீண்டும் ஒரு புதிய வருடத்தை (2010) கூட்டிக் கொடுத்துள்ளார். இது கடவுள் நமக்கு கொடுக்கும் ஆசீர்வாதம். இதை எண்ணி கடவுளை வணங்கி, ஆராதித்து, மகிழ வேண்டும், இன்று இந்த இரவு வழிபாட்டில் ஆண்டவரை துதித்து, பாடி, புகழ நாம் அழைக்கப்படுகிறோம். இந்த இரவு செப வழிபாடு நமக்கு விடுக்கும் அழைப்பு என்னவெனில் பழைய பாவ வாழ்வை விடுத்து புது வாழ்வு பெறுதல், புதிய மனிதனாக மாறுதல் ஆகும். அதே சமயத்தில் கடந்த ஆண்டு (2009) முழுவதும் ஆண்டவர் நமக்குச் செய்த அனைத்து நன்மைகளுக்கும் நன்றி செலுத்தவேண்டிய நன்னாள். இவ்வுலகைப் படைத்து, காத்து, வழிநடத்திவரும் நமது ஆண்டவருக்கு ஒரு புகழ்பாடல் பாடி சில மணித்துளிகள் அவரை ஆராதிப்போம்.

புகழ்ச்சிப் பாடல்:
பொருத்தமான பாடலை தேர்வு செய்து கொள்ளலாம்.

1. நன்றி வழிபாடு

“ஆண்டவர் வழங்கிய நீதிக்காக அவருக்கு நன்றி கூறுவேன். உன்னதரான ஆண்டவரின் பெயரைப் போற்றிப்பாடுவேன்”(திபா 7:17). இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள், தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள் (திபா 30:4). அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே, புதிய ஆண்டில் இன்னும் சிறிது நேரத்தில் காலடி பதிக்க போகிறோம். இத்தருணத்தில் நமது பாவங்களுக்காக மனம் வருந்தி கடவுளிடம் மன்னமிப்பு மன்றாட்டை ஏறெடுத்தோம். பழைய பாவ வாழ்க்கையை விடுத்து புதிய மனிதனாக வாழ முடிவெடுத்தோம். இந்த தருணத்தில் கடந்த 2009-ம் ஆண்டில் நமக்கு செய்த அனைத்து காரியங்களுக்காகவும் நன்றி கூறுவோம்.

பாடல்: நன்றியால் துதிபாடு..... (அல்லது) பொருத்தமான பாடலை பாடலாம்.

நன்றி மன்றாட்டுக்கள்:
ஓரிரு வார்ததைகளில் இருப்பது சிறந்தது. சில சமயங்களில பொதுமக்கள் தங்களின் சொந்த மன்றாட்டுகளை வெளிப்படுத்துவது சாலச் சிறந்தது. விவிலிய வார்த்ததைகள் (எகா. திவெ 11:17; 7:12; 4:9; எபி 12:28; 2தெச 1:3; 1தெச 5:18; கொலோ 3:17; 3:15; 1:3; பிலி 4:6; 1:3) சொல்லி கடவுளுக்கு நன்றி செலுத்துவதால் நன்றி வழிபாடு இன்னும் அர்த்தமுள்ள் வகையில் அமையும்.

ஒவ்வொரு நன்றி மன்றாட்டுக்குப் பிறகும் பொருத்தமான் நன்றிப் பாடலைத் தேர்வு செய்து அதன் சரணத்தை மட்டும் பாடலாம். எல்லா நன்றி மன்றாட்டுகளும் முடிந்த பின்பு அந்தப் பாடலை முழுமையாகப் பாடி நன்றி வழிபாட்டை நிறைவுச் செய்யவேண்டும்.

2. மன்னிப்பு வழிபாடு
“தீச்செயல் அனைத்தும் பாவம்” (1யோவா 5:17). “கடவுளோடு இணைந்திருக்கும் எவரும் பாவம் செய்வதில்லை. பாவம் செய்பவர் எவரும் அவரைக் கண்டதில்லை. அறிந்ததுமில்லை” (1யோவா 3:6). இவ்வாறு நீங்கள் வலுவற்ற மனச்சான்றைக் காயப்படுத்திச் சகோதரர் சகோதரிகளுக்கு எதிராகப் பாவம் செய்தால், அது கிறிஸ்துவுக்கே எதிரான பாவமாகும் (1 கொரி 8:12). எனவே இந்த அமைதியான இரவு நேரத்தில், புத்தாண்டில் காலடி எடுத்துவைத்து புதிய மனிதனாக மாற தடையாகவுள்ள அனைத்து பாவங்களையும் நம் மனக்கண்முன் கொண்டுவந்து, அதற்காக மனம் வருந்தி நற்கருணை நாதரிடம் மன்னிப்பு கேட்போம்.

மன்னிப்பு மன்றாட்டுகள்:

பதில்: என்னை மன்னியும் என்னை மன்னியும்
இயேசுவே என்னை மன்னியும் (அல்லது)
பொருத்தமான பாடலைத் தேர்வுசெய்து கொள்ளவும்.

1. உமக்கெதிராக பாவம் செய்தோம். ஏனெனில் நாங்கள் எங்கள் கடவுளாகிய உம்மைவிட்டு விலகிப் பாகாலுக்கு ஊழியம் புரிந்தோம் என்று கூறிக் கூக்குரலிட்டனர் (நீதி 10:10). நம்மை படைத்த கடவுள் நமக்கு எத்தனையோ நன்மைகளைச் செய்துள்ளார். ஆனால் அவர் செய்த அத்தனை அருஞ்செயல்களையும் மறந்து, பிரிந்து, கடவுளின் உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்த தருணங்களை நினைந்து மனம் வருந்துவோம். இறைவனிடம் மனனிப்பு வேண்டுவோம்.
பதில்: என்னை மன்னியும்....

2. ஆண்டவரே, எனக்கு இரங்கும், என்னைக் குணப்படுத்தும் உமக்கு எதிராகப் பாவம் செய்தேன் என்று மன்றாடினேன் (திபா 41:4). சில சமயங்களில் நாம் பாவம் செய்தாலும், நாம் பாவத்தில.தான் இருக்கிறோம், பாவம் செய்துவிட்டோம் என்பதை உணராத நிமிடங்களை நமது மனக்கண்முன் கொண்டு வந்து, இறைவனிடம் மன்னிப்பு வேண்டுவோம்.
பதில்: என்னை மன்னியும்....

3. தலைவராகிய ஆண்டவரின் கண்கள் பாவம் செய்யும் அரசை உற்றுப் பார்க்கின்றன (ஆமோ 9:8). பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ( யோவா 8:34). இந்த மாறிவரும் உலகில், இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தீமை எனைவெனில் மனிதன் பாவத்தின் தீய விளைவுகளைப்பற்றிய உணர்வே இல்லாமல் இருக்கிறான். குறிப்பாக கிறிஸ்துவர்களாகிய நாம் நமது மீட்பின் அருமையை, பெருமையை உணராமல் இருந்த நேரங்களை நினைந்து இறைவனிடம் மன்னிப்பு வேண்டுவோம்.
 பதில்: என்னை மன்னியும்...


புத்தாண்டில் இறைவனின் பராமரிப்பு கிடைக்க மன்றாடல்
புலர இருக்கிற புத்தாண்டில் இறைவனின் பராமரிப்பு மற்றும் அவருடைய பாதுகாப்பு கிடைக்க கீழ்கண்ட விவிலிய மேற்கோள்களைப பயன்படுத்திமன்றாடலாம்:
யோபு 12:10; யோவா 1: 3-4 ; திபா 36: 7-10; திபா 40:1; இச 28:8.

இறுதியாக.. நற்கருணை ஆசிர்:

குருவானவர் நற்கருணை ஆசிரை வழங்குவதற்கு முன்பு சிறு அருங்கொடைச் செபத்தைச்சொல்லி ஆசிரை வழங்கலாம்.
- ஆல்வின் அன்பரசு