சிலுவைப் பாதை -1
பசுமையான பாதைகள்
முன்னுரை
மானுடமே!
நீ விரித்த பாவச் சிறகு
ஒரு மனிதனின் கழுத்தைச் சிரச் சேதம் செய்த்து.
நீ கடந்த இருட்டு
ஒரு மனிதனுக்கு கல்லறை கட்டியது.
ஒரு மனிதனுக்கு கல்லறை கட்டியது.
நீ மீட்டிய அபசுரங்கள்
ஒரு சிம்மாசனம் சிதைக்கப்பட்டது.
உன் முள்முடிகளுக்காய்
உன் முகம் உமிழ் பட்டுவிடாமல் இருக்க
ஒரு முகம் குப்பைத் தொட்டியானது
உன் சிலுவைகளுக்காய்
ஒரு நிமிடம் மௌனமாய் சிந்திப்போம்
இந்த குடிசைப் பற்றி எரிய
நானும் ஒரு தீக்குச்சி கிழித்துப் போட்டேனா...?
இந்த சமுத்திரம் வற்றிப் போக
நானும் ஒரு கிளிஞ்சல் நீரை வெளியேற்றினேனா...?
இந்த பூவை அழிக்க
நானும் ஒரு பூகம்பத்தை உற்பத்தி செய்தேனா...?
சிந்திப்போம்....
யேசுவின் பாதை கல்வாரிப்பாதை...
யேசுவின் வாழ்வு போராட்ட வாழ்வு...
யேசுவின் மரணம் ஈசனின் மரணம்...
வாருங்கள் அதனை வாழ்ந்து பார்ப்போம்.
முதல் நிலை
- படைத்தவன் படைப்புக்குத் தீர்ப்பு வழங்குவது முறை. ஆனால், இங்கு அந்த நிலை மாறி மானிடகுலம் தன்னைப்படைத்த இறைமகன் இயேசுவுக்கே தீர்ப்பு வழங்குகிறது.
யூத மதகுருக்களுக்கும் பரிசேயர்களுக்கும் பயந்து இயேசுவை சாவுக்குத் தீர்ப்பிட்டான் பிலாத்து. அவன் மட்டுமா? தவறு என்று தெரிந்தும் எல்லோரும் செய்கிறார்களே என்று கூட்டத்தையே சேர்த்து கொள்ளும்போது, தன்மானத்தை காக்க பொய் சொல்லும் போது, தற்பெருமையில் தவறிழைக்கும்போது, சந்தேக குணத்தால் அடுத்தவரின் மனதை
புண்படுத்தும்போது நாமுந்தான் இயேசுவைத் தீர்ப்பிடுகிறோம். ஆகவே நமது வாழ்வில் மற்றவர்களால் நமக்கு இழைக்கப்படும் கொடுமைகள் இன்னல்கள் அனைத்தையும் இயேசுவின் சிலுவையின் ஒரு சில பகுதிகள் என உணர்ந்து அவைகளை முழுமனதுடன் ஏற்று இறைவழியில் நடப்போம். மனிதாபிமானம் கொண்ட இயேசு பேசுகிறார்:
தீர்ப்பிட வேண்டாம் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக வேண்டாம் மன்னியுங்கள் நீங்களும் மன்னிக்கப் படுவீர்கள்.
சிந்தனை:
இவையெல்லாம் யாருக்காக? எண்ணிப்பார்க்க நாம் அழைக்கப்படுகிறோம். பாவத்தின் சம்பளம் சாவு. அந்த சம்பளத்துக்குரியவர் நாம் தான். நம்மை மீட்கும் பொருட்டே அந்த சாவை தானே முன் வந்து வாங்கிக் கொண்டார் இயேசு.
செபம்:
அமைதியின் தெய்வமே! எங்கள் வாழ்வில் மற்றவர்களால் இழைக்கப்படும் சிறு சிறு துன்பங்களும் நீர் சுமந்த சிலுவையின் பாகங்களே என்பதை உணர்ந்து அவைகளை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள உமது அருளைத்தாரும்...ஆமென்.
2_ம் நிலை
- ஆண்டவனின் தோளில் அவமானத்தின் சின்னம்
பழி சுமத்தாதபடி பார்த்துக் கொள்ளுங்கள் உன் நுகத்தை அகற்றாது பிறர் அகத்தை புரட்டாதீர்கள்.
சிந்தனை:
இயேசுவை போல தியாகம் நம்மிடமில்லை. ஏனெனில் பிறர்நலம் நம்மில் இல்லை சுயநலம் இருள்மயமாக இருப்பதால் அடுத்தவர் நம் கண்களில் தெரிவதில்லை. எனவே தான் வேதனைகளும் சோதனைகளும் நம்மில் விதவிதமாய் விலாசம் தேடுகின்றன.
செபம்:
எங்களன்பு இறைமகனே! உம் மக்களாகிய நாங்கள் அனைவரும் எங்களது சிலுவைகளைச் சுமந்து உம்மைப் பின் தொடர்ந்து உமக்கு சான்று பகரத் தேவையான அருள் வரம் தந்தருளும்!
3 _ம் நிலை
- மண்ணுக்கு கிடைத்த முதல் முத்தம்
ஆனால் துன்பங்களை ஏற்க மறுப்பதும் தோல்விகளைக் கண்டு துவண்டு போவதும் மனித இயல்பு இதோ இயேசுவின் வார்த்தை இன்றும் ஒலிக்கிறது வாழ்வில் விழுந்துவிட்டாயா? ''பயப்படாதே எழுந்து நட''என கூறுகிறார். உன் வாழ்க்கைச் சுமையை தூக்கிக் கொண்டு எல்லா சுமைகளையும் சுமந்து கொண்டு எழுந்து நட என்று கூறுகிறார். வாழ்வின் எல்லா சுமைகளையும் சுமந்து வெற்றிகான வேண்டும் என்பது தான் இறைவனின் விருப்பம். தேர்வில் தோல்வியா? தேர்தலில் தோல்வியா? நண்பர்கள் கை விட்டுவிட்டார்களா? ஆகவே மகனே! மகளே! அகந்தை, அவநம்பிக்கை, இறுமாப்பு, வீண் பிடிவாதம், பலவீனம், தாழ்வு மனப்பான்மை, வீண் பெருமை, பொறாமை போன்ற அனைத்திலுருந்தும் எழுந்து நட. எனது மன்னிப்பும் அன்பும் உன்னை வழிநடத்தும். இயேசு விழுந்த நிலையிலும் எழுந்து சொன்னார்:
தளர்ந்து போன கைகளைத் திடப்படுத்துங்கள் உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி திடம் கொள்ளுங்கள் அஞ்சாதிருங்கள்.
சிந்தனை:
ஆன்மா பலம் வாய்ந்தது தான் ஆனால் ஊனுடலோ வலுவற்றது. நீரில் விழுந்தவனைக் காப்பாற்ற நாமும் நீரில் தானே விழ வேண்டும்.
செபம்:
எல்லாம் வல்ல இறைவா எங்கள் வாழ்வில் நாங்கள் முதல்முறை விழுந்தவுடன் சோர்ந்துப் போகாமல் மீண்டும் எழுந்து பயணத்தை தொடர பலவீனங்களிலிருந்து விடுதலை பெற அருள் தாரும்! ஆமென்.
4-ம் நிலை
- கண்ணிரை தாங்கும் கருப்பை
உன் தாயையும் தந்தையையும் மதித்து கீழ்படிந்து சங்கமித்து இருப்பாயாக
சிந்தனை:
தன் மகன் நோபல் பரிசு பெற்றாலும் தண்டனைப் பெற்றாலும் தூக்கி வாரி தோளில் போட்டுக்கொள்பவர் தான் அன்னை. ஆனால் முதல் ஆசிரியராய் செவிலியராய் இருக்கும் பெற்றோரை நீ படுத்தும் கொடுமையை எண்ணிப்பார்.
செபம்:
தியாக வேள்வியின் சின்னமே இறைவா! இனிவரும் நாளில் நாங்கள் எங்கள் சந்ததிகளை உம்மை போல் உருவாக்க தேவையான அருள் வரங்களைத் தாரும். ஆமென்.
5-ம் நிலை
- தோள் கொடுக்கும் தோழன்
பத்து பேரும் குணம் பெறவில்லையா? மீதி ஒன்பது பேர் எங்கே? திரும்பி வந்து இறைவனை மகிமைப்படுத்த இந்த அந்நியனைத் தவிர வேறு ஒருவரையும் காணோமே
சின்னஞ்சிறிய உதவி என் சகோதர்களுக்கு செய்த போதெல்லாம் எனக்கே செய்தீர்கள்
என்கிறார். ஆகவே தேவைப்படும் போது மற்றவர்களுக்கு உதவிகள் செய்வோம் அத்துடன் நின்றுவிடாது மற்றவர்கள் துன்பத்தில் பங்கு கொள்வோம். ஆகவே நாம் இது நாள் வரைக்கும் கண்ணிருந்தும் குருடர்களாக! காதிருந்தும் செவிடர்களாக! கையிருந்தும் முடவர்களாக! கால் இருந்தும் ஊனர்களாக! வாய் இருந்தும் ஊமையர்களாக! எதையும் தட்டிகேட்கும் உரிமை இருந்தும் உரிமையை இழந்தவர்களாக வாழ்ந்து இருக்கிறோம் அதற்காக இறைவனிடம் மன்னிப்பு கேட்போம். சீமோனை கண்ட இயேசு புன்முறுவலிட்டு சுமக்காத மனிதங்களை நோக்கி:
மனதில் தாழ்ச்சியும் சாந்தமும் கொள்ளுங்கள்.
சிந்தனை:
சின்னஞ்சிறியவர்களுக்கு செய்த போதெல்லாம் எனக்கே செய்தாய் என்று சொன்னவர் இயேசு. நீ துனபத்தில் தவறும் சகோதரனாகியா இயேசுவுக்கு எத்தனை முறை உதவியுள்ளாய்?
செபம்:
இறையரசை மண்ணில் பரப்பிய இயேசுவே! உம் மக்களாகிய நாங்கள் உம்மை பின்பற்றி வாழவும், உம் சீடர்களாக மாறவும் பிறருக்கு உதவி செய்யும் இளகிய மனதை தாரும்! ஆமென்.
6-ம் நிலை
- முகம் துடைக்கும் மலர்க் கொத்து
பகைவனையும் அன்பு செய் எதிர்பவனையும் ஏற்றுக்கொள். தீர்ப்பிட்டவனையும் திருத்திக்கொள்.
சிந்தனை:
ஏழை எளியவர்களிடம் இரக்கம் காட்டுவது எளியது தான் சில நேரங்களில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பிடப்பட்டவர் மீதும் சமுக விரோதி என்று தண்டிக்கப்பட்டவர் மீதும் பரிவும், அன்பும் காட்டுவது மட்டும் போதாது. அதைத்தாண்டி மனித நேயமும் தேவை.
செபம்:
அன்பு இறைவா! பெண்களின் உள்ளம் கருணையினால் நிறைந்தது. இது அன்பின் பிறப்பிடம் தியாகத்தின் உறைவிடம் கருணையின் சமுத்திரம் அப்படிப்பட்ட இறை மதிப்பீடுகளை எங்கள் அனைவருக்கும் தந்தருளும். ஆமென்.
7-ம் நிலை
- இரண்டாம் தடுமாற்றம்
நீங்களும் விழுங்கள் கோணலான மானுடத்தை நேராக்க கேவலமான நடத்தைகளை சீரமைக்க...
சிந்தனை:
புலம், பலவீனம் இரண்டும் கலந்த கலவைதான் மனித உள்ளம். பலவீனங்களிலே விழுந்தால் பலம்கொண்டு எழுதல் வேண்டும். அதுதான் போராட்டம். ஆனால் போராட மறுத்தவனாய் பலவீனங்களின் வேரிலே சாய்ந்து வாழ்வை வீணடித்தது வருந்தத்தக்கது அல்லவா?
செபம்:
இரக்கத்தின் இறைவா! எங்கள் வாழ்வில் வரும் கொடுமைகள் இன்னல்களைக் கண்டு மனம் சோர்ந்து விடாமல் மீண்டும் புத்துயிர் பெற்று உம் திட்டத்தை நிறைவேற்றவும் எங்கள் வாழ்க்கைப் பாதையில் தடைகள் வரினும் சோர்ந்து போகாமல் புது முயற்ச்சிகளில் ஆர்வமுடன் ஈடுபட அருள் தாரும். ஆமென்.
8-ம் நிலை
- ஆறுதல் சொல்லும் அபலைகள்.
துன்பத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறுங்கள்
என்கிறார் இயேசு.
சிந்தனை:
மனிதமே அழுவதில் பலவகை உண்டு. நிலவுக்காக அழும் விட்டில்களும் உண்டு. நனையும் ஆட்டிற்காக அழும் ஒநாய்களும் உண்டு. உன் கண்ணீர் எந்த வகையைச் சேர்ந்தது? எண்ணிப்பார்.
செபம்:
புதுமைகள் பல பொழிந்து புதுபொலிவாற்றிய புரட்சி நாயகனே இயேசுவே! உம்மைப் போன்று நாங்களும் மற்றவர்கள் தங்கள் வாழ்க்கையில் துன்புறும் போது ஆறுதல் தருபவர்களாக மாற வரம் தாரும்! ஆமென்.
9-ம் நிலை
- தடை வந்தும் தடைப்படா பயணம்
நீ விழும் போதெல்லாம் நானும் எழுகிறேன் காரணம் நீ கடக்க வேண்டிய தூரம் இன்னும் இருக்கு என்பதற்காய்.
சிந்தனை:
மனிதமே இதோ நீ தடைகள் வரும் போது முடங்கி போன முதுகெலும்பற்ற மனிதனாய் இருந்த தருணங்களை எண்ணிப்பார்.
செபம்:
ஒ இயேசுவே! நாங்கள் அனைவரும் உம்மைப்பின் செல்ல எம்மையே மறுத்து உம் சிலுவையைச் சுமந்துக்கொண்டு உம்மைப்பின் தொடரவும் உம் பொருட்டு எம் உயிரை இழக்கவும் உமக்கு சான்று பகரவும் தேவையான ஆற்றலையும் அருளையும் சக்தியையும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தந்தருளும்! ஆமென்.
10-ம் நிலை
- நிர்வாணம் நிரந்தரம்
சிந்தனை:
இயேசுவுக்கு ஏற்பட்ட அவலநிலை உனக்கு வந்தாலும் மதிப்பீடுகளை உனதாக்கி துணிச்சலோடு திணிக்கப்படும் அடக்குமுறைகளை எதிர் கொண்டு என்றும் அவரின் சாட்சிகளாக நிற்க நீங்கள் தயாரா?
செபம்:
எல்லாம் வல்ல இயேசுவே எங்கள் வாழ்வில் பிறருக்காக நாங்கள் அவமானப்படுத்தப்படும் போது உம்மைப் போன்று பொறுமையுடன் ஏற்றுக்கொள்ள தேவையான ஆற்றலையும் சக்தியையும் தாரும்! ஆமென்.
11-ம் நிலை
- ஆணிகளுக்கு ஆண்டவர்
எங்கே அவமானத்தை சந்திக்கிறயோ அங்கே உன் நிலையைப்பற்றி சிந்திக்கிறாய்.
என்கிறார் இயேசு
சிந்தனை:
சிந்தனை:
மனிதமே எத்தனை ஆணிகளால் இன்றும் இயேசுவை அறைந்து கொண்டிருக்கிறாய்? சாதி, மதம், லஞ்சம், ஊழல், பதவி வெறி, பழித்தூற்றல், வரத்தட்டசனை, தீண்டாமை, வறுமை, ஏற்றத்தாழ்வு, என்று எண்ணற்ற ஆணிகளால் இயேசுவை இன்றும் அறைந்துக்கொண்டிருக்கிறாய்.
செபம்:
இயேசுவே! நாங்களும் உம்மைப்போன்று எம் வாழ்வை மற்றவர்களுக்காக அர்பணித்து உண்மையின் சாட்சிகளாக உமக்கு சான்று பகர வரம் தாரும். ஆமென்.
12-ம் நிலை
- ஆதவனின் அஸ்தமனம்
யாருக்கும் தீங்கு செய்யாத கோரமான சிலுவை இயேசுவைக் கொலை செய்து தன்னைப் புனிதப் படுத்திக்கொண்டது. உயிர்விடும் தறுவாயிலும் கூட தம்மை துன்புறுத்தியவர்களுக்காக மனம்விட்டு தம் தந்தையிடம் மன்னிப்பு கேட்கிறார். இன்று நம்மில் எத்தனைப் பேர் இப்படி இருக்கிறோம் என்று சிந்திப்போம்.
இறந்து தொங்கும் இயேசுவே நாங்களும் உம்மைப்போல் பிறர் சுமையைச் சுமக்க வரம் தாரும்.
சிந்தனை:
மனிதமே! நண்பனுக்காய் உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு வேறொன்றுமில்லை என்றவர். நட்பின் இலக்கணமாய் நாடித்துடிப்பை முடித்துக்கொண்டார். அவருக்காக நீ என்ன செய்துள்ளாய்?
செபம்:
ஆம் தந்தாய், எங்களிடம் இருக்கின்ற சுயநலம் மாறி எங்களை துன்புறுத்துவோருக்காக செபிக்க உம்மை நோக்கி நாள்தோறும் முழு மனதுடன் மன்றாட வரம் தாரும். ஆமென்.
13-ம் நிலை
- இடி தாங்கும் மடி
எக்காரியத்தையும் தொடங்குவது எளிது தொடர்ந்து செயலாற்ற இறைவனின் பலன் தேவை நம்பிக்கையோடு கேளுங்கள் பெற்று கொள்ளுங்கள்
என்கிறார் அன்னை மரியா.
சிந்தனை:
மனிதமே! நீயும் நானும் எத்தனை முறை பத்து மாதம் சுமந்து பெற்ற தாயையும் தந்தையையும் சொல்லாலும் செயலாலும் புண்படுத்தியிருக்கிறோம். அதற்காய் மனம் வருந்துவோம்.
செபம்:
படைப்பின் பரம்பொருளே! எம் வாழ்விற்க்காக தம் மகனைத் தந்து எங்களுக்கு சான்று பகர்ந்த எங்கள் வியாகுல அன்னையைப் பின்பற்றி வாழ வரம் தாரும். ஆமென்.
14-ம் நிலை
- கல்லறைக்குள் கர்த்தர்
நண்பா நம்பிக்கையோடு புறப்படு நாளைய விடியலுக்காய் காத்திருக்காதே.
சிந்தனை:
உண்மைகள் உறங்கலாம்,மறைக்கப்படலாம். ஆனால் நிரந்தரமாக மாண்டுவிடாது. மனித நேயத்தை புதைத்தாலும் அது சிதைந்து விடாது. சிந்தித்து செயல்பட மனிதனே நீ தயாரா?
செபம்:
நிறைவின் இருப்பிடமே இறைவா! மனித குலம் சேர்த்துக் வைக்கவும் காத்துக்கொள்ளவும் விரும்புகின்றதே ஒழிய உன்னைப்போல இழக்க விரும்புவதில்லை. இயேசுவே உம்மைப் போன்று தியாக உள்ளத்தை இந்த மானிட மனங்களுக்குத் தாரும். ஆமென்.
Thanks for joining us in our journey with the Lord
- J. Arokia Rajesh
- M. Arul Raj
- S. John Cornelius
- A. Bruseline
- E. Sathia Seelan
Graduates 2011 - Sacred Heart Seminary
Kumbakonam
Kumbakonam