கிறிஸ்து பிறப்பு பெருவிழா
திருப்பலி முன்னுரை
மார்கழி பெற்றெடுத்த மனிதநேயம் பூமிக்கு புறப்பட்டு வந்த புண்ணிய நாள்தான் இந்த கிறிஸ்து பிறப்புப் பெருவிழா.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கன்னிமரி வயிற்றில் மனுவுரு எடுத்த இறைவன், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இன்றும், இந்த மண்ணில் மனுஉரு எடுக்கிறார். மீண்டும் ஒருமுறை மனிதருக்கு போதிக்க, புதுமைகள் புரிய மண்ணகத்தை படைத்தவன், இன்று நம்மிடையே மனிதனாக பிறக்கிறார்.
அன்று இறைமகன் இயேசுவின் நோக்கம் எதுவாக இருந்ததோ, அதுவே இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்த கூடியதாக இருக்கிறது. இதைதான் விவிலியத்தில் வானதூதர்களின் வாய்வழியாக “உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக” என்று வாசிக்கிறோம்.
“அமைதி உருவாக்கம” என்பதுதான் கிறிஸ்து பிறப்பின் மையமாக இருக்கிறது. உள அமைதி தொடங்கி உலக அமைதி வரைக்கும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய அமைதியை உருவாக்கம் செய்வது தான் கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியாக உள்ளது.
ஆகவே அச்சத்தை அகற்றி, அன்பை பெருக்கியும், உறவுகளை உண்டாக்கி, உயிரூட்டியும், எளியோரையும், வலியோரையும், ஏழையையும், பணக்காரரையும், ஆணையும், பெண்ணையும் சக மனிதராக சமமான மனிதராக உறுதி செய்யவும், நச்சு மனங்களை நல்ல மனங்களாக பிறக்கவும் தான் இந்த கிறிஸ்து பிறப்பு பெருவிழா நமக்கு அழைப்பு விடுகிறது.
ஆகவே ஆண்டவரின் அருள், அவனியில் அபரிவிதமாக அருளப்படவும், ஆண்டவரின் பிறப்பு அவனியில் அனுகூலமாகவும், இந்த திருப்பலியில் தொடர்ந்து செபிப்போம்.
நள்ளிரவு வாசக முன்னுரைகள்
முதல் வாசகம் : எசா. 9: 2-4, 6-7
இஸ்ராயேல் மக்கள் அடிமை நிலையில், துன்பம் என்ற இருளில் சிக்கி உழன்றபோது எசாயா இறைவாக்கினர் மீட்பரின் வருகையைப் பற்றி கூறி திடமளிக்கிறார். ஒளியாகிய கிறிஸ்து தோன்றி, அரசாள்வார், எழ்மை நிலையில் இருந்த தாவீதை உயர்த்திய கடவுள் தாவீதின் வழிமரபிலே வரும் மெசியாவை பற்றி தெளிவாக கூறும் இந்த வாசகத்திற்கு செவிகொடுப்போம்.
இரண்டாம் வாசகம் : தீத்து 2 : 11-4
மனுகுலத்தை பாவத்திலிருந்து மீட்க இயேசு மீண்டும் வருவார் என்ற எதிர்நோக்கை தூய பவுல் முன் வைக்கிறார். மீட்பு என்பது ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு சொந்தமில்லை. மாறாக கிறிஸ்துவில் விசுவாசம் கொள்ளும் அனைவருக்கும் உண்டு எனக் கூறும் வாசகத்தைக் கேட்போம்
கிறிஸ்து பிறப்பு காலை திருப்பலி
வாசக முன்னுரைகள்
வாசக முன்னுரைகள்
முதல் வாசக முன்னுரை : எசா. 52:7-10
இஸ்ராயேல் மக்கள் அடிமை நிலையில் அடிப்பட்டு வேதனையோடு இறைவனை நோக்கி அழுதபோது, இரக்கமுள்ள இறைவன் இறைவாக்கினர்களை அனுப்பினார் அவர்களின் தலையாய பணியாய், நம்பிக்கையூட்டும் பணி அமைந்ததை இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகளை கேட்டு நமது நம்பிக்கையை ஆழப்படுத்துவோம்.
இரண்டாம் வாசக முன்னுரை : எபிரேயர் 1 :1-6
மிகச் சிறந்த தொடர்பாளராய் இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையே வாழ வந்தவர்தான் இறைமகன் இயேசு கிறிஸ்து. அவரால் அவர் வழியாக உருவாக்கம் பெற்றதுதான் உலகம் இறைத்தூதர் வணங்க, இன்முகத்துடன் கடவுளின் முதற்பேறான இயேசு கிறிஸ்துவின் மீது, ஆழமான விசுவாசம் பெற வேண்டி இந்த வாசகத்திற்கு செவிமடுப்போம்.
மன்றாட்டுக்கள்
01. அன்பின் இறைவா, எம் திருச்சபையை வழிநடத்திக் கொண்டிருக்கும் திருந்தந்தை, ஆயர்கள், குருக்கள் மற்றும் திருத்தொண்டர்கள் அனைவரையம ஆசிர்வதித்து, உம் அன்பு மகனின் அருள்பணியை செவ்வனே செய்ய தேவையான உடல் உள்ள சுகத்தை தந்தருள வேண்டுமாய் பிறந்திருக்கிற இயேசுபாலன் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
02. இரக்கத்தின் இறைவா! நீர் படைத்த உலகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஒவ்வொரு தலைவர்களையும் ஆசீர்வதித்து அமைதி என்னும் ஆண்டவரின் பண்பை அவனிக்கு அவர்கள் பெற்று தர, பிறந்திருக்கின்ற இயேசு பாலன் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
03. அவனியில் அவதரித்த அன்பு இறைவா! எங்கள் ஒவ்வொருடைய உள்ளத்திலும் அவதரித்து அன்பு, அமைதி, சமாதானம் போன்ற புண்ணியங்களை எங்களுக்கு பொழிந்தருள வேண்டுமாய், பிறந்திருக்கின்ற இயேசுபாலன் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
04. மனிதனாக அவதரித்த மாபரனின் தந்தையே! எங்கள் சமூகத்தில் இடம் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கும் ஏழைகள், அநாதைகள், கைவிடப்பட்டோர், மாற்று திறனாளிகள் அனைவரையும் ஆசீர்வதித்து அவர்கள் மறுவாழ்வு பெற பிறந்திருக்கும் இயேசு பாலன் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- Jayan G.
- Johnson S.
- Sundar Raj S.
- Victor Lawrence
- Arun Savariraj X.
Spirituality Course, St. John's Propaedeutic Seminary, Cuddalore