Holy Triduum - பெரிய வியாழன், புனித வெள்ளி, பாஸ்கா திருவிழிப்பு
பெரிய வியாழன் - ஆண்டவரின் இராவுணவு
மாலைத் திருப்பலி
திருச்சபையின் மிகப் பழமையான வழக்கப்படி, இறைமக்கள் பங்குபெறாத திருப்பலிகள் எல்லாம் இன்று தடை செய்யப்படும். மாலை வேளையில், வசதியான நேரத்தில், ஆண்டவருடைய இராவுணவுத் திருப்பலி இறைமக்கள் அனைவரும் முழுப் பங்கேற்க, கொண்டாடப்படும். அதில் குருக்கள், திருப்பணியாளர்கள் எல்லாரும் தத்தம் பணி புரிவார்கள். திருத்தைலத் திருப்பலி அல்லது மக்கள் நலனுக்காக வேறு திருப்பலி ஒப்புக்கொடுத்த குருக்கள் மீண்டும் மாலையில் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றலாம். இறைமக்களின் நலனைக் கருதி, கோயிலிலோ சிற்றாலயங்களிலோ, மாலையில் அல்லது மிகமிகத் தேவையானால் காலையில், மற்றொரு திருப்பலி ஒப்புக்கொடுக்க ஆயர் அனுமதி வழங்கலாம். மாலைத் திருப்பலியில் பங்கேற்க யாதொரு வழியும் அற்றவர்களுக்கமட்டும் காலைத் திருப்பலிக்கு அனுமதி தரலாம்: இத்தகைய அனுமதி ஒருசிலரின் தனி வசதிக்காக அளிக்கக்கூடாது. மேலும், மாலையில் நடக்கும் முக்கியமான திருப்பலிக்கு இது ஊறுவிளைவிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.தொடக்கச் சடங்கும் இறைவாக்கு வழிபாடும்
திருப்பலியில் மட்டும் இறைமக்களுக்கு நற்கருணை வழங்கலாம்: நோயாளிகளுக்கு எந்த நேரத்திலும் திருவுணவு வழங்கலாம்.
திருப்பலி தொடங்குமுன் நற்கருணைப் பேழை வெறுமையாயிருக்கவேண்டும். இன்றும் மறுநாளும் மக்களுக்குத் திருவுணவு வழங்கப் போதுமான திரு அப்பத்தை இத்திருப்பலியில் வசீகரிக்க வேண்டும்.வருகைப் பல்லவி கலா 6:14 காண்: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையில்தான் நாம் பெருமை கொள்ள வேண்டும்: அவரிலேதான் நமக்கு மீட்பும் உயிரும் உயிர்ப்பும் உண்டு; அவராலேதான் நாம் ஈடேற்றமும் விடுதலையும் அடைந்தோம்.
முன்னுரை
இயேசுவின் பாஸ்கா விழாவை இன்று கொண்டாடுகின்றோம். பாஸ்கா என்றால் கடத்தல் என்று பொருள் பழைய ஏற்பாட்டில் யாவே கடவுளின் இரக்கத்தினால் பாரவோனின் ஆதிக்கத்திலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் இஸ்ரயேல் மக்கள் செழிப்புமிக்க... வளமையான கானான் தேசத்திற்குக் கொண்டுவரப்பட்டார்கள். அதாவது பாஸ்கா என்ற கடத்தல் நிகழ்வின் வழியாகத் தீமையின் ஆதிக்கத்திலிருந்து கடந்து வந்து இறைவனை பற்றிக்கொண்டனர். ஆனால் இன்று உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களோடு இருப்பேன் என்று சொன்ன இயேசு தன்னை உடைத்து தனது உடலையும் இரத்தத்தையும் நம்மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாக நமக்கு உணவாகத் தருகின்றார். அத்தோடு தன் மீட்புப் பணி இவ்வுலத்தில் தொடர குருத்துவத்தையும் ஏற்படுத்துகின்றார்.
இத்தருணத்தில் இயேசு தன்னல நாட்டமின்றி இந்த மானிடரின் மீட்புக்காக தன்னையே வழங்கியதுபோல நம் அருகில் வாழும் மனிதர்களை அன்பு செய்துவாழவும், மேலும் குருக்கள் ஆண்டினை கொண்டாடும் நாம், குருக்கள் அனைவரும் இயேசு செய்த பணியை மனத்துணிவுடனும், மனித மாண்புடனும் தொடர்ந்து செய்து நீதி, அன்பு சகோதரத்துவம், சமுத்துவம் போன்றவற்றை நிலைநாட்டாவும், இயேசுவை மக்களுக்கு கொடுப்பவர்களாகவும் திகழ வேண்டிய வரத்தை தந்தருள குருக்களுக்காகவும் நமக்காகவும் சிறப்பாக இத்திருப்பலியில் செபிப்போம்.
இன்றைய திருவழிபாடானது நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது.
- இறைவார்த்தை வழிபாடு
- பாதம் கழுவும் சடங்கு
- நற்கருணை வழிபாடு
- நற்கருணை இடமாற்றம் பவனி.
இந்த வாழிபாட்டு நிகழ்வுகளில் பொருளுணர்ந்து பக்தியோடு பங்கெடுப்போம். வழக்கம் போல திருப்பலி தொடங்கிறது. 12 ஆண்களுடன் குருவானவர் பவனியாக பீடம் நோக்கி வருவார்.இன்று உன்னதங்களிலே கீதம் பாடும்போது அனைத்து மணிகளும் ஒலிக்க வேண்டும். இது முதல் பாஸ்கா திருவிழிப்பு வரை மணி ஒலிக்காது.
1. இறைவார்த்தை வழிபாடு
முதல் வாசகம் (வி.ப 12, 1-8, 11-14)
பாஸ்கா என்றால் கடந்து செல்லுதல் என்று பொருள். தங்கள் சொந்த நாட்டை விட்டு, எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்த தம் மக்களை கடவுள் விடுவித்து, கானான் தேசத்திற்குக் கொண்டு வந்தார். அந்த நிகழ்வுதான் பாஸ்கா, நாமும் பாவத்திலிருந்து விடுபட்டு இறைவனோடு இணைய நம் பழைய நிலையிலிருந்து கடந்துவர நம்மை அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
தியானப்பாடல்: சங் 116 12-13, 15-16, 17-18
நாம் ஆசீர்வதிக்கும் கிண்ணம் கிறிஸ்துவின் இரத்ததில் பங்குகொள்ளல் அன்றோ!
ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும்
நான் என்ன கைம்மாறு செய்வேன்?
மீட்புக்காக நன்றிகூறி கிண்ணத்தைக் கையில் எடுத்து,
ஆண்டவருடைய திருப் பெயரைச் சொல்லி கூப்பிடுவேன்.
ஆண்டவர் தம் அடியாரின் மரணம்
அவருடைய பார்வையில் மிக மதிப்புக்குரியது
நான் உம் அடியேன் உம் அடியாளின் மகன்
என் கட்டுகளை நீர் அவிழ்த்துவிட்டீர்.
புகழ்ச்சிப் பலியை உமக்குச் செலுத்துவேன்
ஆண்டவருடைய திருப்பெயரை கூவி அழைப்பேன்
ஆண்டவருடைய மக்கள் அனைவரிடையேயும்
அவருக்கு என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்
இரண்டாம் வாசகம் (1கொரி 11, 23-26)
அர்த்தமற்ற வழிபாடுகள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. வழிபாடுகள் வாழ்வாகும்போதுதான் வாழ்வில் மாற்றம் பிறக்கிறது. வாழ்வு சிறக்கிறது. எனவே திருப்பலியின் போது இயேசுவின் உடலை உண்டு அவரது இரத்தததைப் பருகுவது என்பது வெற்றுச் சடங்காக மாறிவிடாமல் நாம் அன்றாட வாழ்வில் இறையரசை வாழ்வாக்க வேண்டும் என்ற புனித பவுலின் வார்த்தைகளுக்குச் செவிமடுப்போம்.
நற்செய்திக்குமுன் வசனம் யோவான் 13:34
புதியதோர் கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.
2. பாதம் கழுவும் சடங்கு
யூத சமுகத்தில் தன் வீட்டில் இருக்கும் பணியாளர் வெளியில் சென்று வரும் தனது தலைவரின் கால்களைக் கழுவுவது வழக்கம். ஆனால் இதே சமுதாயத்தில் பிறந்த இயேசு ஒரு வித்தியாசமான செயலைச் செய்கிறார். பணிவிடைப் பெற அன்று,பணிவிடைப் புரியவே வந்தார் என்று வார்த்தையில் மட்டுமல்ல. தன் சீடர்களின் பாதங்களை கழுவி அவ்வார்த்தைகளுக்கு உருவம் கொடுத்தார் இயேசு. தன்னையே தாழ்த்திக் கொண்டார் இறைமகன் இயேசு. எனவே இப்பாதம் கழுவும் சடங்கில் பார்வையாளர்களாக, வேடிக்கையாளர்களாக இல்லாமல், நாம் சாதி, மதம், இனம், தூய்மைத்தீட்டு, ஏழைகள், பணக்காரர்கள், இருப்பவர், இல்லாதவர் போன்ற மனிதத்தை உருக்குலைக்கும் வேற்றுமைகளைக் களைந்து அருகில் வாழும் மனிதர் இறைவன் படைப்பு என்பதை உணர்ந்து இச்சடங்கில் பங்குபெறுவோம்.
குறிப்பு:பாதம் கழுவும் சடங்கு முடிந்தபின் விசுவாசிகளின் மன்றாட்டு நடைபெறும். இத்திருப்பலியில் விசுவாச அறிக்கை சொல்வதில்லை.பல்லவி 2 அரு 13:6-8
"ஆண்டவரே, நீரோ என் பாதங்களைக் கழுவுவது?"
அதற்கு இயேசு: "நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்
உனக்கு என்னோடு பங்கில்லை" என்றார்.
சீமோன் இராயப்பரிடம் அவர் வரவே
இராயப்பர் அவரை நோக்கிச் சொன்னது:
"ஆண்டவரே, நீரோ என் பாதகங்களைக் கழுவவது?"
அதற்கு இயேசு: "நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்
உனக்கு என்னோடு பங்கில்லை" என்றார்.
"நான் செய்வது இன்னதென்று உனக்கு
இப்போது தெரியாது, பின்னரே விளங்கும்."
"ஆண்டவரே, நீரோ என் பாதங்களைக் கழுவுவது?"
அதற்கு இயேசு: "நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்
உனக்கு என்னோடு பங்கில்லை" என்றார்.
இறைமக்களின் வேண்டல்
1. பணிவிடை புரியவே வந்தேன் என்று சொன்ன இறைவா!
திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, அவரோடு இணைந்து பணியாற்றும் ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவரையும் உடல் உள்ள ஆன்ம நலனோடு வாழவும், இறைமக்களை ஒருவருக்கொருவர் பணிபுரிந்து வாழ்பவர்களாக வழிநடத்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
2. வழிநடத்திடும் மாபரனே!
எங்கள் நாட்டை வழிநடத்திடும் தலைவர்கள் சுயநலத்தில் மூழ்கிடாது, நாட்டு மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தந்து, அமைதியாக மக்களை வழிநடத்திட வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
3. அன்பின் இறைவா!
நீர் சீடர்களின் பாதங்களை கழுவி அன்பின் முக்கியத்துவத்தை முழுçமாயக எங்களுக்கு உணர்த்தினீர். இதை உணர்ந்து, உமது அன்பின் அடிச்சுவட்டில் நாங்கள் தொடர்ந்து நடக்கவும், எங்களுடைய உள்ளத்தையும், சிந்தனைகளையும் பிறருக்கு அர்பணித்திடவும் வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
4. ஒப்பற்ற குருவே!
தனிக்குருத்துவத்தில் உம் பணி செய்யும் குருக்கள் யாவரும் தங்களது வாழ்வில் எதிர்கொள்ளும் போரட்டங்களில் வெற்றிக்கொள்ள தேவையான மன உறுதியைçயும், ஆற்றலையும் தந்து வழிநடத்திடவும், பொது குருத்துவத்தில் உமது வழி வாழ அழைப்பு பெற்ற இறைமக்களும் அவ்வாறே வாழ்ந்திடவும் வரம்தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
நற்கருணை வழிபாடு
காணிக்கைப் பாடல் : அன்பும் நட்பும் எங்குள்ளதோ....
அன்பும் நட்பும் எங்குள்ளதோ அங்கே இறைவன் இருக்கின்றார் -2
கிறிஸ்துவின் அன்பு நம்மை எல்லாம் ஒன்றாய் கூட்டி சேர்த்ததுவே
அவரில் அக்களித்திடுவோம் யாம் அவரில் மகிழ்சி கொள்வோமே
ஜீவிய தேவனுக்கு அஞ்சிடுவோம் அவருக்கன்பு செய்திடுவோம்
நேரிய உள்ளத்துடனே யாம் ஒருவரை ஒருவர் நேசிப்போம்
எனவே ஒன்றாய் நாமெல்லாம் வந்து கூடும் போதினிலே
மனதில் வேற்றுமை கொள்ளாமல் விழிப்பாய் இருந்து கொள்வோமே
தீய சச்சரவுகள் ஒளிந்திடுக பிணக்குகள் எல்லாம் போய் ஒழிக
நமது மத்தியில் நம் இறைவன்கிறிஸ்து நாதர் இருந்திடுக
முக்தி அடைந்தோர் கூட்டத்தில் நாமும் ஒன்றாய் சேர்ந்து மனம்
மகிழ்ந்து கிறிஸ்து இறைவா நின் மகிமை வதனம் காண்போமே
முடிவில்லாமல் என்றென்றும் நித்திய காலம் அனைத்திற்கும்
அளவில்லாக மாண்புடைய பேரானந்தம் இதுவே யாம்
(காணிக்கை மன்றாட்டுடன் திருப்பலி தொடரும், நன்றி மன்றாட்டு முடிந்த பிறகு நற்கருணை இடமாற்றப் பவனி)நற்கருணை இடமாற்றம்
இயேசு சென்றவிடமெல்லாம் நன்மைகளையே செய்துகொண்டுச் சென்றார். என்னை அவர் தொடமாட்டாரா? என்னை அவர் பார்க்க மாட்டாரா? என் குரலுக்கு அவர் செவி கொடுக்கமாட்டாரா என இயேசுவை எண்ணி ஏங்கியோர் பலருண்டு அவரை அண்டிச் சென்றவர்கள் அருள்மழையில் நனைந்தார்கள். அவரரை அனுகியோர் அவரின் ஆசிர்வாத்தில் ஆனந்த கூத்தாடினார்கள். இன்றும் அதே இயேசு அப்ப வடிவில் நம் மத்தியில் பவனி வரப் போகின்றனர். இயேசுவை திறந்த உள்ளத்தோடு ஏற்க மறுத்த யூத குருமார்கள், பிலாத்து, ஏரோதுவைப் போல் அல்லாமல் நம் உள்ளத்தில் பச்சைக் கம்பளம் விரித்து அவருக்கு வரவேற்பு கொடுப்போம். அவரின் ஆசிர்வாதத்தால் நிரப்பப்படுவோம்.
பாடுவாய் என் நாவே மாண்புமிக்க உடலின் இரகசியத்தை
பாரின் அரசர் சீருயர்ந்த வயிற்றுதித்த கனியவர் தம்
புதலத்தை மீட்கச் சிந்தும் விலைமதிப்பில்லா துயர்ந்த
தேவ இரத்த இரகசியத்ததை எந்தன் நாவே பாடுவாயே
அவர் நமக்காய் அளிக்கப்படவே மாசில்லாத கன்னி நின்று
நமக்கென்றே பிறக்கலானார் அவனி மீதில் அவர் வதிந்து
அரிய தேவ வார்த்தையான வித்து அதனை விதைத்த பின்னர்
உலக வாழ்வின் நாளை மிகவே வியக்கும் முறையில் முடிக்கலானார்
இறுதி உணவை அருந்த இரவில் சகோதரர்கள் யாவரோடும்
அவர் அமர்ந்து நியமனத்தின் உணவை உண்டு நியமனங்கள்
அனைத்தும் நிறைவு பெற்ற பின்னர் பன்னிரண்டு சீடருக்குத்
தம்மைத்தாமே திவ்விய உணவாய்த் தம் கையாலே அருளினாரே
ஊன் உருவான வார்த்தையானவர் வார்த்தையாலே உண்மை அப்பம்
அதனைச் சரீரம் ஆக்கினாரே இரசமும் கிறிஸ்து இரத்தமாகும்
மாற்றம் இது நம் மனித அறிவை முற்றிலும் கடந்த தெனினும்
நேர்மையுள்ளம் உறுதிகோள்ள மெய் விசுவாசம் ஒன்றே போதும்
அவ்விடத்தை அடைந்ததும் குரு நற்கருணைப் பாத்திரத்தை வைப்பார்: சாம்பிராணியிட்டபின் முழந்தாளிட்டுத் தூபம் காட்டுவார். அப்போது "மாண்புயர் இவ்வருட் சாதனத்தை" என்னும் அடி பாடப்படும். பின் பேழை பூட்டப்படும்.
சிறிது நேரம் மௌனமாக மன்றாடியபின் குருவும் பணியாளரும் தாழ்ந்து பணிந்து வணங்கிவிட்டுத் திருப்பண்ட அறைக்குச் செல்வர்.
பின் பீடத்தின் அணிகள் எல்லாம் நீக்கப்படும்: கூடுமானால் சிலுவைகள் எல்லாம் கோயிலிலிருந்து அகற்றப்படும். அகற்ற முடியாத சிலுவைகள் திரையிடப்படும்.
மாலைத் திருப்பலியில் பங்கெடுத்தவர்கள் திருப்புகழ்மாலையின் மாலைப்புகழ் சொல்வது இல்லை.
இடத்தின் வழக்கத்திற்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு நற்கருணை ஆராதனை இரவிலும் நடைபெற இறைமக்களுக்கு அறிவுரை கூறவேண்டும்; ஆனால் நள்ளிரவுக்குப் பின் ஆராதனை வெளியாடம்பரமின்றி நடைபெறவேண்டும்.
-----------------------------------------------------
புனித வெள்ளி (06.04.2012) ஆண்டவரின் திருப்பாடுகளின் கொண்டாட்டம்
தயாரிப்பு
பீடம் வெறுமையாக இருக்கும்தொடக்கச் சடங்குகள்
சிவப்பு நிற உடைகள்
துணியால் மூடப்பட்ட சிலுவை
பீடத்தின் முன் படுக்கை விரிப்பு
- பொது முன்னுரை
- பவனி
- முகங்குப்புற விழுந்து செபிக்கிறார்
- மன்றாட்டு
- முதல் வாசக முன்னுரை
- முதல் வாசகம் - எசாயா52: 13-53: 12
- பதிலுரைப்பாடல் - தந்தையே உம்கையில்
- இரண்டாம் வாசக முன்னுரை
- இரண்டாம் வாசகம் - எபி 4 :14 -16,5:7-9
- நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
- நற்செய்தி வாசகம்
- மறையுரை
- முன்னுரை
- பெரிய மன்றாட்டுகள்
- முன்னுரை
- திருச்சிலுவை பவனி (எரியும் திரிகள்)
- குருக்களும் பீடப்பணியாளரும் ஆராதனை செய்தல்
- மக்கள் திருச்சிலுவைக்கு ஆராதனை செய்தல்
- முன்னுரை
- அனைவரும் நின்றுகொண்டிருப்பர்
- பீடத்தின்மீது துணி விரித்தல்,
- திருமேனித் துகில்,
- திருப்பலி புத்தகம் வைக்கப்படும்,
- நற்கருணை பீடத்திற்கு கொண்டுவருதல்
- மீட்பரின் கட்டளையால்...
- திருவிருந்து
- நன்றி மன்றாட்டு
- இறுதி செபம்
-----------------------------------------------------
ஆண்டவருடைய திருப்பாடுகளின் கொண்டாட்டம்
மிகப் பழைமையான வழ்க்கப்படி, இன்றும் நாளையும் திருச்சபை திருவருட்சாதனங்களைக் கொண்டாடுவதில்லை.
சிலுவை திரிகள் பீடத்துகில் அனைத்தும் அகற்றப்பட்டு, பீடம் வெறுமையாயிருக்கும்.
பிற்பகலில், குறிப்பாக மூன்று மணி அளவில் திருப்பாடுகளின் வழிபாடு நடைபெறும். மக்களின் வசதிக்கேற்ப, இதற்குப் பிந்தின நேரத்தையும் தேர்ந்துகொள்ளலாம். வழிபாடு மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும்: இறைவாக்கு வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை, திருவிருந்து.
இன்று இறைமக்களுக்கு இச்சடங்கில்மட்டும் திருவுணவு கொடுக்கலாம். சடங்கில் பங்கெடுக்க முடியாத நோயாளிக்கும் எந்நேரத்திலும் திருவுணவு கொண்டுபோகலாம்.
திருப்பலிக்குரிய சிவப்பு நிற உடைகள் அணிந்த குருவும் திருத்தொண்டரும் பீடத்தின்முன் வந்து, வணக்கம் செலுத்தி, முகம் குப்புற விழுந்து அல்லது வசதிக்கேற்ப முழந்தாட் பணிந்து இருப்பார்கள்: எல்லாரும் சிறிது நேரம் மௌனமாக மன்றாடுவர்.
பின் குருவும் பணியாளரும் தத்தம் இருக்கைக்குச் செல்வர். குரு அங்கு மக்களை நோக்கி நின்று, கைகுவித்துக் கீழுள்ள மன்றாட்டுகளில் ஒன்றைச் சொல்வார்.பொது முன்னுரை
சுமைசுமந்து சோர்ந்திருப்போரே எல்லோரும் என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் அளிப்பேன் என்று அனைவரையும் அன்பு செய்தவருக்கு, புதுமைகள் பல செய்தவருக்கு, அநீதியை, ஆதிக்க சக்திகளை எதிர்த்து போராடியவர்க்கு, கிடைத்த மாபெரும் பரிசு அவமானத்தின் சின்னம் சிலுவை. ஆனால் இயேசு நம்மீது கொண்ட அன்பினால் அதையும் ஏற்றுக்கொண்டார். தன்னுயிரையே தியாகம் செய்தார். அன்பின் உச்சக்கட்டம் பிறருக்காக தன் உயிரைக் கொடுப்பதுதான் அதைவிட மேலான அன்பு வேறு இல்லை என்பதை இதோ மாபரன் இயேசு நிருபித்து விட்டார். விண்ணிற்கும், மண்ணிற்கும் இடையில் சிலுவையில் பலியான செம்மறியாக உயர்த்தப்பட்டிருக்கிற இயேசுவைப் பார்த்து மீட்புப் பெற நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். அவமானத்தின் சின்னமாக இருந்த சிலுவை இயேசுவின் தியாக பலியால் மீட்பின் சின்னமாக மாறியது. எனவே, இயேசுவின் பாடுகளையும் இறப்பையும் சிந்தித்தவர்களாக இந்த வழிபாட்டில் பக்தியோடு பங்கு கொள்வோம். நம் ஆண்டவர் இயேசுவின் மரணத்தால் தாய்த் திருச்சபை துக்கத்தில் மூழ்கி ஈரப்பதை வெறுனையான பீடமும், எரியாத மெழுகுவத்திகளும், ஒலிக்காத மணிகளும் நமக்கு நினைவூட்டுகின்றன. இன்றைய வழிபாடானது நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. இறைவார்த்தை வழிபாடு, பொது மன்றாட்டுகள், திருச்சிலுவை ஆராதனை, நற்கருணை விருந்து. முழு கவனத்தோடு பங்கு பெற்று நமக்காக இறந்த இயேசுவின் பாடுகளின் பயனை பெற்று செல்வோம். அனைவரும் எழுந்து நின்று குருவை வரவேற்போம்.
(குருவானவர் முகம் குப்புற விழுந்து செபிக்கும் போது)
தற்போது குருவானவர் இயேசுவின் பாடுகளையும் இரத்தக்களங்களையும் நினைவுப்படுத்தி செந்நிற உடை அணிந்து முகம் குப்புற விழுந்து நம் அனைவரோடும் சேர்ந்து செபிக்கிறார். இந்த நிகழ்வு கிறிஸ்துவின் மரணத்தால் வந்த துயரத்தையும், அவருக்கு முன்னால் நமது தகுதியில்லாத தன்மையையும் வெறுமையையும் காட்டுகிறது. அதோடு நாம் அனைவரும் அவரைச் சார்ந்து வாழுகிறோம் என்பதையும் காட்டுகிறது. நாமும் மண்டியிட்டு அமைதியாக குருவோடு செபிப்போம்.
எழுந்தவுடன் இப்போது குரு இயேசுவின் பாடுகளால் கிடைத்த மீட்பின் பலனை நமக்குக் கொடையாக கொடுத்தருளுமாறு தந்தையாம் இறைவனிடம் செபிப்பார். அனைவரும் எழுந்து நின்று செபிப்போம்.
மன்றாட்டு:(செபிப்போமாக அல்லது மன்றாடுவோமாக என்று சொல்வதில்லை)
இறைவா, உம் திருமகன் கிறிஸ்து உம் மக்கள் எங்களுக்காகத் தமது இரத்தத்தைச் சிந்தி உயிர் நீத்துப் பாஸ்கா மறைநிகழ்ச்சியை நிறைவேற்றினார்.
அவரது சாவிகளை இன்று சிறப்பாக நினைவுகூர்ந்து கொண்டாடுகின்ற நாங்கள் எங்கள் சிந்தனை, சொல, செயல் அனைத்தாலும் இத்திருவழிபாட்டில் ஆழ்ந்து பங்கேற்கச் செய்தருளும். எங்கள்.
எல். ஆமென்.
(அல்லது)
இரக்கமுள்ள இறiவா,
முதல் மனிதரின் பாவத்தின் விளைவான சாவுக்குத் தலைமுறை தலைமுறையாக நாங்கள் ஆளாகித் தவிக்கின்றோம். எங்கள் ஆண்டவராகிய உம் திருமகன் கிறிஸ்துவின் பாடுகளினால் நீவிர் அந்தச் சாவினை அழித்தீர். இயற்கை நியதிப்படி பழைய ஆதாமின் சாயாலைத் தாங்கியிருக்கும் நாங்கள்,உமது அருளால் புனிதமடைந்து, புதிய ஆதாமாகிய கிறிஸ்துவின் சாயலைத் தாங்கி, அனைத்திலும் அவரைப்போல் ஆகிடச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்
முதற் பகுதி இறைவாக்கு வழிபாடு
முதல் வாசக முன்னுரை (எசாயா 52: 13 - 53: 12)
எசாய இறைவாக்கினர் நான்கு இடங்களில் துன்புறும் ஊழியன் என்ற கருத்தில் கவிதை வடிவில் இயேசுவின் பாடுகளை முன்னுரைத்துள்ளார். இயேசு கிறிஸ்து துன்புறும் ஊழியர் என்பதையும், அவர் பாடுகள் பட்டு, துன்பங்களை ஏற்று எவ்வாறு இவ்வுலகத்தை மீட்க தன்னையே கையளிக்கப் போகிறார் என்பதை முதல் வாசகத்தில் வாசித்து தியானிப்போம்.
இறைவாக்கினர் எசாயா திருநூலிருந்து வாசகம்:
13 இதோ, என் ஊழியர் சிறப்படைவார். அவர் மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறுவார்.
14 அவரைக் கண்ட பலர் திகைப்புற்றனர். அவரது தோற்றம் பெரிதும் உருக்குலைந்ததால் மனித சாயலே அவருக்கு இல்லாதிருந்தது. மானிடரின் உருவமே அவருக்கு இல்லை.
15 அவ்வாறே, அவர் பல பிறஇனத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்குவார். அரசர்களும் அவரை முன்னிட்டு வாய்பொத்தி நிற்பர். ஏனெனில் தங்களுக்குச் சொல்லப் படாததை அவர்கள் காண்பர். தாங்கள் கேள்விப்படாததை அவர்கள் புரிந்து கொள்வர்.
அதிகாரம் 53
1 நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்? ஆண்டவரின் ஆற்றல் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?
2 இளந்தளிர்போலும் வறண்டநில வேர்போலும் ஆண்டவர் முன்னிலையில் அவர் வளர்ந்தார். நாம் பார்ப்பதற்கேற்ற அமைப்போ அவருக்கில்லை. நாம் விரும்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை.
3 அவர் இகழப்பட்டார். மனிதரால் புறக்கணிக்கப்பட்டார். வேதனையுற்ற மனிதராய் இருந்தார். நோயுற்று நலிந்தார். காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார். அவர் இழிவுபடுத்தப்பட்டார். அவரை நாம் மதிக்கவில்லை.
4 மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார். நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார். நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும் சிறுமைப் படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம்.
5 அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார். நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார். நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார். அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.
6 ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம். நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம். ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார்.
7 அவர் ஒடுக்கப்பட்டார். சிறுமைப்படுத்தப்பட்டார். ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை. அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார்.
8 அவர் கைது செய்யப்பட்டு, தீர்ப்பிடப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டார். அவருக்கு நேர்ந்ததைப்பற்றி அக்கறை கொண்டவர் யார்? ஏனெனில், வாழ்வோர் உலகினின்று அவர் அகற்றப்பட்டார். என் மக்களின் குற்றத்தை முன்னிட்டுக் கொலையுண்டார்.
9 வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை. வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை. ஆயினும், தீயவரிடையே அவருக்குக் கல்லறை அமைத்தார்கள். செத்தபோது அவர் செல்வரோடு இருந்தார்.
10 அவரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார். அவர் தம் உயிரைக் குற்றநீக்கப்பலியாகத் தந்தார். எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார். ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும்.
11 அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார். நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளராக்குவார். அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்து கொள்வார்.
12 ஆதலால், நான் அவருக்கு மதிப்பு மிக்கவரிடையே சிறப்பளிப்பேன். அவரும் வலியவரோடு கொள்ளைப் பொருளைப் பங்கிடுவார். ஏனெனில், அவர் தம்மையே சாவுக்கு கையளித்தார். கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார். ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார். கொடியோருக்காகப் பரிந்து பேசினர்.
இது ஆண்டவரின் அருள்வாக்கு
இறைவா உமக்கு நன்றி
தியானப்பாடல் : திருப்பாடல் 31: 2,6 12-13, 15-16, 17, 25
பல்லவி: தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்
ஆண்டவரே உம்மிடம் அடைக்கலம் புகுகிறேன்
ஒருநாளும் ஏமாற்றம் அடைய விடாதேயும்
உம்முடைய நீதியின்படி என்னை விடுவித்தருளும்.
உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் ஆண்டவரே
வார்தையில் தவறாத இறைவா
நீர் என்னை மீட்டருள்வீர்
என் எதிரிகள் அனைவரும்டையவும் பழிச்சொல்லுக்கு நான் ஆளானேன்
என் அயலாரின் நகைப்புக்கு இலக்கானேன்
எனக்கு அறிமுகமானவர்களின் அச்சத்துக்குரியவன் ஆனேன்
வெளியே என்னைக் காண்கிறவர்கள் என்னைவிட்டு ஓடுகின்றனர்
இறந்து போனவன் போல் பிறர் கண்களுக்கு மறைவானேன்
உடைந்து போன மட்கலத்தைப் போலானேன்
ஆனால் ஆண்டவரே நான் உம்மீது நான் உம்மீது நம்பிக்கை வைக்கன்றேன்
நீரே என் கடவுள் என்றேன்
என்கதி உம் கையில் உள்ளது ஆண்டவரே
என் எதிரிகளிடமிருந்தும் என்னைத்
துன்புறுத்து வோரிடமிருந்தும்
நீர் என்னை விடுவித்தருளும்
கனிந்த உம் திருமுகத்தை எனக்குக் காட்டியருளும்
உம் அருளன்பைக் காட்டி என்னை ஈடேற்றும்
ஆண்டவர் மீது நம்பிக்கையுள்ளவர்களே
மனத்திடன் கொள்ளுங்கள்
உங்கள் நெஞ்சம் உறுதி கொள்ளட்டும்
இரண்டாம் வாசக முன்னுரை (எபி 4 : 14 - 16, 5 : 7-9)
இயேசுவை நித்திய தலைமை குருவாக படம்பிடித்துக்காட்டி அவர் எவ்வாறு பழைய ஏற்பாடடின் குருக்களிலிருந்து மாறுபட்டவராக இருக்கின்றார் என்பதையும், பழைய ஏற்பாட்டின் பலிபொருட்கள் குறையுடையதாய் இருக்கும்போது, புதிய பலிப் பொருளாகிய இயேசு எப்படி குறைவில்லாத செம்மறியாக இருக்கிறார் என்பதையும் விளக்கும் இரண்டாம் வாசகத்திற்கு செவிகொடுப்போம்.
எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்
14 எனவே, வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால் நாம் அறிக்கையிடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக!
15 ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல@ மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்@ எனினும் பாவம் செய்யாதவர்.
16 எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.
7 அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவி சாய்த்தார்.
8 அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.
9 அவர் நிறைவுள்ளவராகி, "தமக்குத் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.
இது ஆண்டவரின் அருள்வாக்கு
இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வசனம் பிலிப்பியர் 2:8-9
8 தம்மைத் தாழ்த்திச் சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிபவரானார்.
9 ஆதலால் தான் கடவுள் அவரை எல்லாருக்கும் மேலாய் உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்
பின்பு, அருளப்பர் எழுதிய திருப்பாடுகளின் வரலாறு (18:1-19:42) வாசிக்கப்படும்.(வாசகம் இங்கே)(முடிவில் வசதிக்கேற்ப, சுருக்கமாக மறையுரையாற்றலாம். பின் சிறிது நேரம் மௌனமாக மன்றாட குரு மக்களை அழைக்கலாம்).
விசுவாசிகளின் மன்றாட்டு
இறைவாக்கு வழிபாடு விசுவாசிகளின் மன்றாட்டுடன் முடிவடையும். அதன் முறையாவது: திருத்தொண்டர்வாசக மேடையில் நின்றுகொண்டு, பின்வரும் மன்றாட்டின் கருத்தை அறிவிப்பார். அக்கருத்துக்காக அனைவரும் சிறிது நேரம் மௌனமாகச் செபிப்பர். பின் குரு, இருக்கையருகில் அல்லது தேவையானால் பீடத்தருகில் நின்றுகொண்டு, கைகளை விரித்து மன்றாட்டைச் சொல்வார். விசுவாசிகளின் மன்றாட்டின்போது மக்கள் முழந்தாளில் இருக்கலாம் அல்லது நிற்கலாம்.
குருவின் மன்றாட்டிற்குமுன் இறைமக்கள் (எடுத்துக்காட்டாக: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் என்று) ஒன்றாக ஆர்ப்பரிக்க வேண்டும் அல்லது திருத்தொண்டர்: முழந்தாளிடுங்கள் - எழுந்திருங்கள் என்று அழைப்பு விடுக்க, எல்லாரும் முழந்தாட்பணிந்து பணிக்கலாம்.
மிக முக்கியமானதொரு பொதுத் தேவைக்காகத் தனிப்பட்ட கருத்தையும் சேர்த்துக்கொள்ள ஆயர் அனுமதி அல்லது கட்டளை தரலாம்.
இங்குத் தரப்பட்ட கருத்துகளில் இடத்திற்கும் காலத்திற்கும் மிகப் பொருத்தமானவற்றைக் குரு தேர்ந்துகொள்ளலாம்: ஆனால் விசுவாசிகளில் மன்றாட்டிற்குப் பொதுவாகக் குறிப்பிட்ட கருத்துகளை விட்டுவிடக்கூடாது (இவற்றைப் "பொதுப் போதனை", எண் 46இல் காண்க)விசுவாசிகளின் மன்றாட்டு முன்னுரை
நமக்காக பலியாகி நம்முடைய தேவைகளுக்காக தந்தையிடம பரிந்துரைத்து செபிக்க இயேசு சிலுவையில் கரங்களை விரித்துள்ளார். எனவே இத்தகைய சக்தி வாய்ந்த இணைப்பாளராக இயேசுவைப் பெற்றுள்ள இந்த வேளையில் நம் செபம் கட்டாயம் கேட்கப்படும் என்ற நம்பிக்கையில் திருச்சபை 10 பெரிய மன்றாட்டுகளைச் செபிக்கிறது. ஒவ்வொரு மன்றாட்டுக்கு பிறகும் ஆண்டவரை எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் என்று பாடி செபிப்போம்.
1. தூய திருச்சபைக்காக:
அன்புச் சகோதரர்களே சகோரிகளே இறைவனின் புனித திருச்சபைக்காக மன்றாடுவோம்.
நம் இறைவனாகிய ஆண்டவர் திருச்சபைக்கு அமைதியும் ஒற்றுமையும் அளித்து, அதனைப் பேணிக்காக்க வேண்டுமென்றும், நாம் கலக்கமின்றி அமைதியான வாழ்வு நடத்தி எல்லாம் வல்ல இறைத்தந்தையை மகிமைப்படுத்த நமக்கு அருள்புரிய வேண்டுமென்றும் மன்றாடுவோமாக.
மௌன மன்றாட்டு. பின்பு குரு:என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, கிறிஸ்து வழியாக உமது மாட்சியை உலக மக்களுக்கெல்லாம் வெளிப்படுத்தினீர்: நீர் இரக்கத்துடன் ஏற்படுத்திய திருச்சபையைப் பேணிக்காத்து, அது உலகெங்கும் பரவி, உறுதியான விசுவாசம் கொண்டு, உமது திருப்பெயரை என்றும் புகழ்வதில் நிலைத்திருக்கச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல். ஆமென்.
2. திருத்தந்தைக்காக
நம் திருத்தந்தை (பெயர். . . )க்காக மன்றாடுவோம்.
துலைமை ஆயர் நிலைக்கு அவரைத் தேர்ந்தெடுத்த நம் இறைவனாகிய ஆண்டவர் எவ்வகைத் தீங்குமின்றி அவரைப் பேணிக்கர்ப்பாராக. இதனால் அவர் இறைமக்களை வழிநடத்தித் திருச்சபை வளம் பெறச் செய்யவேண்டுமென்று மன்றாடுவோமாக.
மௌன மன்றாட்டு. பின்பு குரு:என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உமது திட்டப்படியே அனைத்தும் அமைந்திருக்கின்றன.உமது அதிகாரத்தினால் ஆளப்படும் கிறிஸ்தவ மக்களாகிய எங்கள் வேண்டுதலைக் கேட்டு, திருத்தந்தையின் தலைமையின்கீழ் நாங்கள் விசுவாசத்தில் வளரும்படி அவரைப் பரிவுடன் காத்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல். ஆமென்.
3. திருச்சிபையில் பல்வேறு நிலைகளில் உள்ளவர்களுக்காக
இங்குக் குறிப்பிடவேண்டிய ஆயர்களையும், குறிப்பிடும் முறையையும் "பொதுப் போதனை" எண் 109இல் காண்க.
நம் ஆயர் (பெயர்...)க்காகவும், திருச்சபையிலுள்ள எல்லா ஆயர்கள், குருக்கள், திருத் தொண்டர்க்காகவும், விசுவாசிகள் அனைவர்க்காகவும் மன்றாடுவோமாக.
மௌன மன்றாட்டு. பின்பு குரு:என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உம்முடைய ஆவியால் திருச்சபை அனைத்தும் அர்ச்சிக்கப்பெற்று, ஆளப்படுகின்றது. உம்முடைய திருப்பணியாளர்கள் அனைவர்க்காகவும் நாங்கள் செய்யும் செபத்தை கனிவோடு கேட்டருளும். எல்லா நிலையினரும் உமது அருள்துணையால்
உமக்கு உண்மையோடு ஊழியம் புரிவார்களாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல். ஆமென்.
4.திருமுழுக்குப் பெறத் தயாரிப்புச் செய்வோர்க்காக
திருமுழுக்குப் பெறத் தயாரிப்புச் செய்வோர்கக்காகவும் மன்றாடுவோம்.
நம் இறைவனாகிய ஆண்டவர் தம் இரக்கத்தைப் பொழிந்து அவர்களுடைய இதயங்களைத் திறந்துவிடுவாராக் இவ்வாறு அவர்கள், புதுப்பிறப்பளிக்கும் திருமுழுக்கினால், பாவங்களுக்கெல்லாம் மன்னிப்படைந்து, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் வாழவேண்டுமென்று மன்றாடுவோமாக.
மௌன மன்றாட்டு. பின்பு குரு:என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, புதிய மக்களைச் சேர்த்துத் திருச்சபை வளம்பெறச் செய்கின்றீர். திருமுழுக்கு பெற இருப்போரிடம் விசுவாசமும் அறிவும் வளரச் செய்தருளும். இவர்கள் திருமுழுக்கு நீரினால் புதுப்பிறப்படைந்து, தேர்ந்துகொள்ளப்பட்ட உம்முடைய மக்களின் திருக்கூட்டத்தில் சேர்ந்துகொள்வார்களாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல். ஆமென்.
5. கிறிஸ்துவர்களின் ஒற்றுமைக்காக
கிறிஸ்துவில் விசுவாசம் கொண்டுள்ள நம் சகோதரர் சகோதரிகள் அனைவர்க்காகவும் மன்றாடுவோம். நம் இறைவனாகிய ஆண்டவர் தம்மில் விசுவாசம் கொண்டோர் அனைவரையும் உண்மையின் பாதையில் வழிநடத்தித் தமது ஒரே திருச்சபையில் கூட்டிச்சேர்த்துக் காத்தருள வேண்டுமென்று மன்றாடுவோமாக.
மௌன மன்றாட்டு. பின்பு குரு:என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, பிரிந்தவற்றை இணைப்பவரும் இணைந்தவற்றைப் பேணிக்காப்பவரும் நீரே. உம் திருமகனின் மந்தையைக் கனிவுடன் கண்ணோக்கியருளும். ஒரே திருமுழுக்கினால் திருநிலைப்படுத்தப்பெற்ற அனைவரையும், விசுவாசத்தின் முழுமையால் இணைத்து, அன்பின் பிணைப்பால் ஒன்றுசேர்த்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
6. யூத மக்களுக்காக
யூத மக்களுக்காக மன்றாடுவோம்.
முற்காலத்தில் அவர்களோடு பேசிய நம் இறைவனாகிய ஆண்டவர், தமது திருப்பெயரின் மீதுள்ள அன்பிலும் தமது உடன்படிக்கை மீதுள்ள பற்றுறுதியிலும் இவர்களை வளர்ச்சியடையச் செய்தருள வேண்டுமென்று மன்றாடுவோமாக.
மௌன மன்றாட்டு. பின்பு குரு:என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா,
ஆபிராகாமுக்கும் அவர்தம் வழிவந்தோர்க்கும். நீர் அளித்த வாக்குறுதிகளை நினைவுகூரும். உமது திருச்சபையின் வேண்டுதலுக்குத் தயவாய்ச் செவிசாய்த்து, முதன்முதலாக நீர் தேர்ந்துகொண்ட இம்மக்கள் உமது மீட்பின் நிறைவைப் பெற அருள்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல். ஆமென்
7. கிறிஸ்துவில் இன்னும் விசுவாசம் கொள்ளாதவர்களுக்காக
கிறிஸ்துவில் இன்னும் விசுவாசம் கொள்ளாதவர்களுக்காகவும் மன்றாடுவோம்.
இவர்கள் தூய ஆவியின் ஒளியைப் பெற்று மீட்புப் பாதைக்கு வந்துசெர வேண்டுமென்று மன்றாடுவோமாக.
மௌன மன்றாட்டு. பின்பு குரு:என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, கிறிஸ்துவை இன்னும் ஏற்றுக்கொள்ளாத மக்கள் உம் திருமுன் நேர்மையான உள்ளத்தோடு நடந்து, உண்மையைக் கண்டடைவார்களாக. நாங்களும் உம் வாழ்வின் மறையுண்மைகளை மேன்மேலும் ஆழமாகக் கண்டுணர்வோமாக. மேலும் உமது அன்புக்கு இவ்வுலகில் சிறந்த சாட்சிகளாய் விளங்குமாறு, ஒருவர் ஒருவரை அன்புசெய்து வாழவும், பிற சமய சகோதரர் சகோதரிகளோடு அன்புறவு கொண்டு ஒழுகவும் வரமருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல். ஆமென்.
8. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்காக
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்காகவும் மன்றாடுவோம்.
இவர்கள் நேர்மையான உள்ளத்தோடு நன்னெறியில் வாழ்ந்து, உண்மைக் கடவுளைக் கண்டடையுமாறு மன்றாடுவோமாக.
மௌன மன்றாட்டு. பின்பு குரு:என்றும் வாழும் எல்லாம் வல் இறைவா, மாந்தர் அனைவரும் எப்போதும் உம்மையே விரும்பித் தேடவும், உம்மை அடைவதால் அமைதி பெறவுமே நீர் அவர்களைப் படைத்தீர். இவ்வுலகில் ஏற்பாடும் எல்லாவித இடையூறுகளுக்கு நடுவிலும், அவர்கள் அனைவரும் உமது அன்பைக் காட்டும் அறிகுறிகளையும்,
உம்மை விசுவாசிப்போர் ஆற்றும் நற்செயல்களின் சான்றுகளையும் கண்டுணர்ந்து, உம்மை ஒரே மெய்யங்கடவுள் என்றும் மக்களின் தந்தை என்றும்மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல். ஆமென்.
9. நாடுகளை ஆள்வோர்க்காக
நாடுகளை ஆளும் அனைவர்க்காகவும் மன்றாடுவோம்.
உலக மக்கள் அனைவரும் உண்மையான அமைதியும் உரிமை வாழ்வும் பெறும்பொருட்டு, நம் இறைவனாகிய ஆண்டவர் தம் திருவுளப்படி இவர்களுடைய சிந்தனை, சொல், செயல் அனைத்தையும் ஆண்டு நடத்தியருள வேண்டுமென்று மன்றாடுவோமாக.
மௌன மன்றாட்டு. பின்பு குரு:என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, மனித இதயங்களின் எதிர்ப்பார்ப்புகளை நீர் அறிவீர் அவர்களின் உரிமைகளை நீரே பேணிக்காக்கின்றீர். உலகமெங்கும் அமைதியும் பாதுகாப்பும் வளமான வாழ்வும் சமய உரிமையும் நிலைபெறுமாறு, எங்கள் தலைவர்களை உம்முடைய ஞானத்தால் நிரப்பி, அவர்கள் உண்மையான மக்கள் தொண்டர்களாக விளங்கிடச் செய்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல். ஆமென்
10. துன்புறுவோர்க்காக
அன்புச் சகோதரர்களே சகோதரிகளே, துன்புறும் அனைவர்க்காகவும் மன்றாடுவோம்.
எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனின் அருளால், உலகிலிருந்து தவறுகள் அகலவும், பிணிகள் நீங்கிப் பஞ்சம் ஒழியவும், சிறைகள் திறக்கப்பட்டுத் தளைகள் தகர்க்கப்படவும், வழிப்போக்கர் பாதுகாப்புப் பெறவும், பயணம் செய்வோர் நலமாக வீடு திரும்பவும், நோயுற்றோர் நலம் பெறவும், இறக்கின்றவர் மீட்பின் நிறைவு பெறவும் மன்றாடுவோமாக.
மௌன மன்றாட்டு. பின்பு குரு:என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, துயருற்றோர்க்கு ஆறதலும், வருந்துவோர்க்குத் திடனும் நீரே. எத்தகையே துன்ப வேளையிலும் உம்மை நோக்கிக் கூவியழைப்போரின் வேண்டுதலைக் கேட்டருளும்.இவர்கள் தங்கள் தேவைகளில் நீர் இரக்கத்துடன் துணைபுரிவதைக் கண்டு மகிழ்வார்களாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல். ஆமென்.
திருச்சிலுவை ஆராதனை முன்னுரை
இப்போது திருச்சிலுவை ஆராதனை ஆரம்பமாகிறது. இயேசு கிறிஸ்துவின் தியாக பலியில் சிலுவை வெற்றியின் சின்னமாக, மீட்பின் சின்னமாக, தியாகத்தின் சின்னமாக மாறியது. சுமார் 4ம் நூற்றாண்டில் இயேசுவின் பாடுபட்ட சிலுவைக் கண்டுபிடிக்கப்பட்டது. அன்றிலிருந்து திருச்சிலுவைக்கு ஆராதனை செய்து முத்தி செய்யும் முறை உருவானது. அதன் அடிப்படையில் குருவானவர் மூடப்பட்டிருக்கும் திருச்சிலுவையை பீடத்தை நோக்கி பவனியாக கொண்டுவருவார். குருவானவர் மூடப்பட்டிருக்கும் சிலுவையை சிறிது சிறிதாக முதலில் வலதுகரம், பிறகு இடதுகரம், இறுதியில் முழுவதும் அகற்றி திருச்சிலுவை மரம் இதோ என்று பாடி ஆராதனை செய்ய அழைப்பார் அப்போது நாம் அனைவரும் சேர்ந்து ‘வருவீர் ஆராதிப்போம்’ என பாடுவோம்.
குருக்களும் பீடச்சிறுவர்களும் திருச்சிலுவையை முத்தி செய்வார்கள். இன்றைய வழிபாட்டின் இருதியில் நாம் அனைவரும் திருச்சிலுவையை முத்திசெய்வோம்.
திருச்சிலுவையைக் காட்டும்போது அழைப்புகுரு: திருச்சிலுவை மரம் இதோ! இதிலேதான் தொங்கியது உலகத்தின் இரட்சணியம் (3 முறை)
எல். வருவீர், ஆராதிப்போம்.(3 முறை)
திருச்சிலுவை ஆராதனை
திருச்சிலுவை ஆராதனைக்குக் குருவும் திருப்பணியாளரும் இறைமக்களும் ஒழுங்காகப் பவனி போல வந்து வணக்கம் செலுத்திச் செல்வர். முழந்தாட்படிந்தோ, நாட்டுப் பழக்கத்திற்கேற்ப வேறு வகையிலோ, உ-ம்: முத்திசெய்தோ கைகளில் தொட்டுக் கண்களில் (நெற்றியில்) ஒற்றிக்கொண்டோ இவ்வணக்கத்தைக் காட்டலாம்.
ஆராதனையின்போது ஆண்டவரே யாம் என்னும் பல்லவி, திருமுறைப்பாடுகள் அல்லது வேறு பொருத்தமான பாடல்கள் பாடப்படும். அப்போது ஆராதனைபுரிந்தவர்கள் எல்லாரும் அமர்ந்திருப்பர்.
ஒரே ஒரு சிலுவைதான் ஆராதனைக்கு வைக்கப்படவேண்டும். பெருங் கூட்டத்தின் காரணமாக ஒவ்வொருவரும் தனித்தனியே ஆராதனை செலுத்த முடியாதெனில். ஒருசிலர் ஆராதனை செய்தபின் குரு சிலுவையை எடுத்துப் பீடத்தின்முன் நின்றுகொண்டு. சிற்றுரையாற்றி அனைவரையும் ஆராதனை செய்ய அழைப்பார். அவர் சிலுவையைச் சிறிது நேரம் உயர்த்திப் பிடித்துக்கொண்டிருக்க, எல்லாரும் மௌனமாக ஆராதிப்பர்.
ஆராதனைக்குப்பின் சிலுவை பீடத்திற்கு அருகில் அதற்குரிய இடத்தில் வைக்கப்படும். திரிகள் அதன் இருபுறம் அல்லது பீடத்தின்மீதோ அருகிலோ வைக்கப்படும்.திருச்சிலுவை ஆராதனையின்போது பாடல்கள்:
எனது ஜனமே நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன் சொல்
எதிலே உனக்குத் துயர் தந்தேன் எனக்குப் பதில் நீ கூறிடுவாய்
எகிப்து நாட்டில் நின்றுன்னை மீட்டுக்கொண்டு வந்தேனே
அதனாலோ உன் மீட்பருக்கு சிலுவை மரத்தை நீ தந்தாய்
நாற்பது ஆண்டுகள் நான் உன்னை பாலைவனத்தில் வழிநடத்தி
உமக்கு மன்னா உணவூட்டி வளமிகு நாட்டினுள் வரச்செய்தேன்
அதனாலோ உன் மீட்பருக்கு சிலுவை மரத்தை நீ தந்தாய்
நான் உனக்காக எகிப்தியரை அவர் தம் தலைச்சன் பிள்ளைகளை
வதைத்து ஒழித்தேன் நீ என்னை கசையால் வதைத்து கையளித்தாய்
பாரவோனைச் செங்கடலிலாழ்த்தி எகிப்தில் நின்றுன்னை விடுவித்தேன்
நீயோ என்னைத் தலைமையாம் குருக்களிடத்தில் கையளித்தாய்
நானே உனக்கு முன்பாகக் கடலைக் திறந்து வழி செய்தேன்
நீயோ எனது விலாவை ஓர் ஈட்டியினாலே திறந்தாயே
மேகத் தூணில் வழிகாட்டி உனக்கு முன்னே யான் சென்றேன்
நீயோ பிலாத்தின் நீதி மன்றம் என்னை இழுத்து சென்றாயே
பாலைவனத்தில் மன்னாவால் நானே உன்னைக் உண்பித்தேன்
நீயோ என்னைக் கன்னத்தில் அடித்து கசையால் வதைத்தாயே
இனிய நீரைப் பாறை நின்று உனக்குக் குடிக்க தந்தேனே
நீயோ பிச்சும் காடியுமே எனக்கு குடிக்கத் தந்தாயே
கானான் அரசரை உனக்காக நானே அடித்து நொறுக்கினேன்
நீயோ நாணல் தடி கொண்டு எந்தன் தலையில் அடித்தாயே
அரசருக்குரிய செங்கோலை உனக்குத் தந்தகு நானன்றோ
நீயோ எந்தன் சிரசிற்கு முள்ளின் முடியைத் தந்தாயே
உன்னை மிகுந்த வன்மையுடன் சிறந்த நிலைக்கு உயர்த்தினேன்
நீயோ என்னை சிலுவை மரத்தில் தொங்க வைத்தாய்
நம்பிக்கை தரும் சிலுவையே நீ மரத்துள் சிறந்த மரமாவாய்
உன்னைப் போன்ற தழை பூ கனியை எந்தக் காவும் ஈந்திடுமோ
இனிய சுமையை இனிய ஆணியால் இனிது தாங்கும் மரமே நீ
மாட்சிமை மிக்க போரின் வெற்றி விருதை நாவே பாடுவாய்
உலக மீட்பர் பலியதாகி வென்ற விதத்தைக் கூறியே
சிலுவைச் சின்னமதைப புகழ்ந்து செயத்தின் கீதம் ஓதுவாய்
தீமையான கனியைத் தின்று சாவிலே விழுந்த நம்
ஆதித் தந்தைக்குற்ற தீங்கை கண்டு நொந்த சிருஷ்டிகர்
மரத்தால் வந்த தீங்கை நீக்க மரத்தை அன்றே குறித்தனர்
கசந்த காடி அருந்திச் சோர்ந்து முட்கள் ஈட்டி ஆணிகள்
மென்மை உடலைத் துளைத்ததாலே செந்நீர் பெருகிப் பாயவே
விண்ணும் மண்ணும் கடலும் உலகும் அதனால் தூய்மை ஆயின
வளர்ந்த மரமே உன் கிளை தாழ்த்தி விரைத்த உடலைத் தளர்த்துவாய்
இயற்கை உனக்கு ஈந்த வைரம் இளகி மென்மை ஆகி நீ
உயர்ந்த வானின் அரசர் உடலின் வருத்தம் தணித்து தாங்குவாய்
மரமே நீயே உலகின் விலையைத் தாங்குகத் தகுதியாகினை
திருச்செம்மறியின் குருதி உன்மேல பாய்ந்து தோய்ந்த தாதலால்
புயில் தவிக்கும் உலகிற் கெல்லாம் புகலிடம் நீ பேழை நீ
பரம திரித்துவ இறைவனுக்கு முடிவில்லாத மங்களம்
தந்தை மகனும் தூய ஆவியும் சரிசமப் புகழ் பெறுகவே
அவர் தம் அன்பின் அருளினாலே நம்மைக் காத்து மீட்கின்றார்
தயை செய்வாய் நாதா என் பாவங்ளை நீக்கி
அன்புடனே ஏழை என்மேல் இரக்கம் வையும்
அனுதபித்து என்பிழையை அகற்றுமையா
பாவமதை நீக்கி என்னை பனிபோலாக்கும்
தோஷமெல்லாம் தீர்த்து என்னை தூய்மையாக்கும்
என்குற்றம் நானறிவேன் வெள்ளிடை மலைபோல்
தீவினையை மறவாதென் மனது என்றும்
உம் புனிதத்தை போக்கி நான் பாவியானேன்
நீர் தீமையென்று கருதுவதை துணிந்து செய்தேன்
உள்ளத்தில் உண்மையை நீர் விரும்புகிறீர்
என் ஆத்துமத்தில் அந்தரத்தில் அறிவையூட்டும்
என்பாவம் தீர்ப்பாய் உன் தூய்மையாவேன்
பனிவெண்மைக்கு உயர்வாகப் புனிதமாவேன்
ஆணிகொண்ட உம் காயங்களை அன்புடன் முத்தி செய்கின்றேன்
பாவத்தாலுமைக் கொன்றேனே ஆயனே என்னை மன்னியும்
வலது கரத்தின் காயமே அழகு நிறைந்த இரத்தினமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்
இடது கரத்தின் காயமே கடவுளின் திரு அன்புருவே
அன்புடன் முத்தி செய்கின்றேன்
வலது பாத காயமே பலம் மிகத் தரும் நற்கனியே
அன்புடன் முத்தி செய்கின்றேன்
இடது பாதக் காயமே திடம் மிகத் தரும் தேனமுதே
அன்புடன் முத்தி செய்கின்றேன்
திருவிலாவின் காயமே அருள் சொரிந்திடும் ஆலயமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்
காணிக்கை பகுதி
இன்று நாம் தருகின்ற காணிக்கை எருசலேமில் உள்ள இயேசு பாடுபட்டு இறந்து, உயிர்த்த புனித பூமியை பராமரிக்க அனுப்பி வைக்கப்படும்
திருவிருந்து பகுதி முன்னுரை
அனைவரும் எழுந்து நிற்போம். இன்றைய வழிபாட்டின் இறுதி பகுதியை அடைந்திருக்கிறோம். திருச்சபையின் திருவழிபாட்டில் திருப்பலியும், திருவருட்சாதனங்களும் நடைபெறாத ஒரே நாள் பெரிய வெள்ளிதான். ஏனென்றால் திருப்பலியில் நாம் நினைவு கூர்ந்து புதுபிக்கும் கல்வாரி நிகழ்ச்சிகளை இன்றைய சிலுவைப்பாடுகள் மூலம் இயேசு நிகழ்த்திவிட்டார். எனவே நேற்றைய திருப்பலியில் வசீகரம் செய்யப்பட்ட பரிசுத்த நற்கருணை இப்போது பீடத்திற்கு கொண்டுவரப்படுகின்றது. ஆண்டவரின் பாடுகளைத் தியானித்து அதில் பங்கேற்று அதன் பலனை முழுமையாய் பெறும் ஏக்கத்தோடு திருவிருந்தில் பங்கு பெறுவோம்.
நற்கருணை வழங்கியபின், அதிகாரமுள்ள மற்றொரு பணியாளர் நற்கருணைப் பாத்திரத்தைக் கோயிலுக்கு வெளியே தகுதியான இடத்திற்குக் கொண்டுபோய் வைப்பர் அல்லது வேறு வழியில்லையென்றால், அதை நற்கருணைப் பேழையில் வைக்கலாம்.
இறுதியில்
சிலுவை யூதருக்கு தடைக்கல்லாகவும், பிற இனத்தவருக்கு மடமையாகவும் இருந்தது ஆனால் அழைக்கப்பட்ட நமக்கோ சிலுவை கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறது. கல்வாரிப் பலியும், சிலுவையும் இறை வல்லமையான அருளும், ஆசிரும் பொங்கி வருகின்ற சக்தியின் இருப்பிடம். எனவே ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவின் பாடுகளையும், மரணத்தையும் தியானித்து அருள் வாழ்விற்காய் உயிர்க்க வேண்டும். மேலும் நமக்கு மீட்பைக் கொணர்ந்த வெற்றியின் சின்னம் சிலுவையையும், அதில் பலியான நம் மீட்பர் இயேசுவையும் திருச்சிலுவையில் முத்தி செய்து அவருடைய பாடுகளை தியானித்த வண்ணம் அமைதியாக வீடு செல்வோம்.
நன்றி மன்றாட்டு:
செபிப்போமாக (மன்றாடுவோமாக)
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உம்முடைய திருமகனின் பாடுகளாலும் சிலுவைச் சாவினாலும் உயிர்ப்பினாலும் எங்களை மீட்டருளினீர். பேரிரக்கத்துடன் நீர் ஆற்றிய இம்மீட்புச் செயலின் பலன் எங்களில் என்றும் நிலைத்திருக்கச் செய்தருளும். எங்கள் ஆண்டவருடைய மரணத்தில் வெளிப்பட்ட உமது பேரன்பைக் கண்டுணர்ந்து, நாங்கள் அவ்வன்பிலே என்றும் நிலைத்து வாழ்த்திட அருள்வீராக. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்
பிரியாவிடை கூற, குரு மக்களைநோக்கி நின்று அவர்கள்மீது தம் கைகளை விரித்துக் கொண்டு இச் செபத்தைச் சொல்கிறார்:தயை நிறை தந்தையே,
உம் திருமகனின் உயிர்ப்பு எங்களுக்கு அளிக்கும் நம்பிக்கையோடு, அவரது சாவை இப்பொழுது நினைவுகூர்ந்த உம் மக்கள் எங்கள் மீது உமது ஆசி நிறைவாய் இறங்குவதாக. உமது திருமகனின் பாடுகளுக்குக் காரணமாயிருந்த எங்களுக்கு மன்னிப்பு கிடைப்பதாக. துன்பங்களால் துயருறும் நாங்கள் ஆறுதல் அடைவோமாக. தளர்வுறும் எங்கள் விசுவாசம் வளர்ச்சி பெறுவதாக. முடிவில்லா வாழ்வு கிடைக்கும் என்ற எங்கள் நம்பிக்கை உறுதி பெறுவதாக. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்
எல்லாரும் மௌனமாகக் கலைந்து செல்கின்றனர். வசதியான நேரத்தில் பீடத்தின் அணிகளெல்லாம் அகற்றப்படும். இத்திருச்சடங்கில் பங்கெடுத்தவர்கள் திருப்புகழ்மாலையின் மாலை வழிபாட்டைச் செபிப்பதில்லை. திருச்சிலுவை வழிபாட்டிற்கு பின்னரோ அல்லது அனைவருக்கும் பொருத்தமான வேறொறு நேரத்திலோ சிலுவைப்பாதை செய்யலாம்.
பாஸ்கா திருவிழிப்பு 08.04.2012
புனித சனியன்று திருச்சபை ஆண்டவருடைய கல்லறையருகில் அவருடைய பாடுகளையும் மரணத்தையும் சிந்தித்துக்கொண்டு இருக்கின்றது. பீடம் வெறுமையாயிருக்கிறது. திருப்பலி ஒப்புக்கொடுப்பதில்லை. திருவிழிப்புக்குப்பின் பாஸ்கா மகிழ்ச்சிக்கு வாய்ப்பு கிடைக்கிறது. இம்மகிழ்ச்சி ஐம்பது நாள்கள் தொடரும். திருப்பயண உணவாக மட்டுமே இன்று நற்கருணை வழங்கலாம்.
தொன்றுதொட்டே இவ்விரவு ஆண்டவருடைய வருகைக்காகத் திருவிழிப்புக் காக்கும் இரவாக இருந்து வந்துள்ளது (யாத் 12:42): அன்று இறைமக்கள் நற்செய்தியின் அறிவுரைப்படி (லூக் 12:35 முதல் காண்க) எரியும் விளக்குளுடன் ஆண்டவர் எப்பொழுது வருவார் எனக் காத்திருப்போரைப் போன்றிருப்பார்கள். இவ்வாறு, அவர் வந்ததும், அவர்கள் விழித்திருக்கக் கண்டு அவர்களைத் தம் பந்தியில் அமர்ந்துவார்.
இத்திருவிழிப்பைக் கொண்டாடும் முறையாவது:
- திருஒளி வழிபாடு (முதற்பகுதி)
- இறைவாக்கு வழிபாடு (இரண்டாம் பகுதி): இறைவன் தொடக்கத்திலிருந்தே தம் மக்களிடையில் புரிந்துள்ள ஆற்றல்மிகு செயல்களைத் திருச்சபை சிந்தித்து. அவர் தந்த வாக்குறுதிகளில் நம்பிக்கை கொள்ள முனைகிறது.
- திருமுழுக்கு வழிபாடு (மூன்றாம் பகுதி): உயிர்ப்பு விழா இதற்குள் நெருங்கி வர, திருச்சபையின் புது உறுப்பினர் திருமுழுக்கால் புதுப் பிறப்பு அடைவர்.
- நற்கருணை வழிபாடு (நானகாம் பகுதி): இறுதியாக, ஆண்டவர் தம் இறப்பாலும் உயிர்ப்பாலும் முன்னேற்பாடு செய்த திருவிருந்துக்குத் திருச்சபை அழைக்கப்;;படுகின்றது.
பாஸ்காத் திருவிழிப்பு விழா முழுவதும் இரவில் கொண்டாடப்படும்: எனவே, அதை இரவுக்குமுன் தொடங்கக் கூடாது, ஞாயிறு விடியுமுன் முடிக்க வேண்டும். இவ்விரவுத் திருப்பலியை நள்ளிரவுக்கு முன்னரே ஒப்புக்கொடுத்தாலும். ஆது ஆண்டவருடைய உயிர்த்தெழுதலின் பாஸ்கா ஞாயிறு திருப்பலியாகும். இவ்விரவுத் திருப்பலியில் பங்கெடுத்தவர்கள், இரண்டாவது பாஸ்காத் திருப்பலியிலும் நற்கருணை உட்கொள்ளலாம். தனியாகவோ கூட்டுத்திருப்பலியாகவோ இவ்விரவுத் திருப்பலியை நிறைவேற்றிய குரு மீண்டும் தனித்தோ கூட்டுத்திருப்பலியாகவோ இரண்டாவது பாஸ்காத் திருப்பலியை நிறைவேற்றலாம். குருவும் திருத்தொண்டரும் வெண்ணிறத் திருப்பலி உடைகளை அணிவர். திருவிழிப்பில் பங்கெடுக்கும் அனைவரும் மெழுகுதிரிகளை வைத்திருக்க வேண்டும்.தயாரிப்பு
- கோவிலின் விளக்குகள் அணைக்கப்பட்டிருக்கும்
- பாத்திரத்தில் தண்ணீர் , புது நெருப்பு
- பாஸ்கா மெழுகுவத்தி
- திருமுழுக்கு பெறுவோர்
முதற்பகுதி - ஒளிவழிபாடு
முன்னுரை
வாழ்த்துரை எண்- 8
தீயை ஆசீர்வதித்தல் எண் - 9
முன்னுரை
பாஸ்காதிரியை புனிதப்படுத்துதல் - எண் - 10
புது தீயிலிருந்து திரியை பற்றவைத்தல்
பவனி - கிறிஸ்துவின் ஒளி இதோ
பாஸ்கா திரிக்கு தூபம்
பாஸ்கா புகழுரை
இரண்டாம் பகுதி - இறைவாக்கு வழிபாடு
திரிகள் அனைத்து வைக்கப்படும்
முன்னுரை
முதல் வாசகம் - தொ. நூ 1:1-2:2
பதிலுரைப்பாடல் -1 (ஆண்டவரே உம் பெருமையும்)
செபிப்போமாக - எண் 24
இரண்டாம் வாசகம் - வி.ப. 14:15-15:1
பதிலுரைப்பாடல் -2 (ஆண்டவர் மாண்புடன்)
செபிப்போமாக - எண் 26
மூன்றாம் வாசகம் - எசேக் 36:16-17, 18-28
பதிலுரைப்பாடல் -3 (கலைமான் நீரோடையை)
செபிப்போமாக - எண் 30
உன்னதங்களிலே (மணிகள் ஒலிக்கும்)
செபிப்போமாக - எண் 32
நான்காம் வாசகம் - உரோ 6:3-11
அல்லேலூயா
நற்செய்தி - லூக் 24:1-12
மறையுரை
மூன்றாம் பகுதி - திருமுழுக்கு வழிபாடு
முன்னுரை
திருமுழுக்கு பெறுவோர் முன்வருதல்
குரு அறிவுரை கூறுதல் - எண் 38
புனிதர்களின் மன்றாட்டுமாலை
திருமுழுக்குத் தண்ணீருக்கு ஆசிவழங்குதல்-எண் 42, 43
திருமுழுக்கு அளித்தல்
எண் 45 இல்லை
திருமுழுக்கு வாக்குறுதிகளை புதுப்பித்தல் - எண் - 46
தீர்த்தம் தெளித்தல் - தேவாலய வலப்புறமிருந்து
விசுவாசிகளின் மன்றாட்டு - (விசுவாச அறிக்கை இல்லை)
நான்காம் பகுதி - நற்கருணை வழிபாடு
முன்னுரை
காணிக்கை மன்றாட்டு
நற்கருணை மன்றாட்டு
நன்றி மன்றாட்டு
திருப்பலி முடிவு
பாஸ்கா திருவிழிப்பு
முன்னுரை
இயேசு கிறிஸ்துவில் பிரியமானவர்களே, இந்நாள் நமக்கெல்லாம் பொன்னாள். மகிழ்ச்சியின் நாள். இன்றைய இரவு வெற்றியின் கொண்டாட்டமாகவும், மகிழ்ச்சியின் ஆரவாரமாகவும் திகழ்கிறது. திருச்சபையும், நம் விசுவாச வாழ்வும், கிறிஸ்துவின் உயிர்ப்பில் புது பிறப்பையும் புதுத்தெம்பையும் பெறுகிறது. பாஸ்கா என்ற எபிரேய சொல்லுக்கு ‘கடத்தல்’ அல்லது ‘கடந்து போதல்’ என்று பொருள். பழைய ஏற்பாட்டில் இஸ்ராயேல் மக்கள், செங்கடலையும், எகிப்தின் அடிமைத்தனத்தையும் கடந்து வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு சுதந்திர குடிமக்களாக வந்தார்கள். இயேசுவின் உயிர்ப்பில் பாஸ்கா நமக்கு ஒரு புதிய பொருளைக் கற்றுத் தருகிறது. அதாவது, பாவத்திலிருந்து - புனித வாழ்விற்கும், இருளிலிருந்து ஒளிக்கும், சாவிலிருந்து நிலைவாழ்விற்கும் இயேசுவோடு நாம் கடந்து வருவதைத்தான் இந்த புதிய பாஸ்கா நமக்கு உணர்த்துகிறது. இனியும் நாம் ஊனியல்பிற்கு உட்பட்டவர்கள் அல்ல, மாறாக உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் செயலுக்கு உட்பட்டவர்கள். நாம் இயேசுவின் விலை மதிப்பில்லாத திரு இரத்தத்தினால் மீட்கப்பட்ட மக்களாய், புது வாழ்வு பெற்றவர்களாய் வாழ இன்றைய வழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இன்றைய திருவழிபாடானது நான்கு பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. 1. ஒளி வழிபாடு 2. இறைவார்த்தை வழிபாடு 3. திருமுழுக்கு வழிபாடு 4. நற்கருணை வழிபாடு ஆகவே இன்றைய இத்திருவழிபாட்டில் பக்தியோடு பங்கு பெறுவோம், பலன் பெறுவோம்.
1. ஒளி வழிபாடு
பொது முன்னுரை
அணுக முடியாத ஒளியில் வாழ்பவர் இறைவன். எனவே சிறியதும் பெரியதுமான ஒளி விளக்குகளால் இறைவனின் பிரசன்னத்தை நாம் உணர முடிகிறது. அன்று இஸ்ராயேல் மக்களை விடுதலை பயணத்தல் ஈடுபடுத்திய இறைவன், மேகத்தூணாகவும் நெருப்புத்தூணாகவும் அவர்களுக்கு முன்னும் பின்னும், இரவும் பகலுமாக நடந்தார். இந்த பாஸ்கா என்னும் கடத்தல் நிகழ்வை நினைவுகூறும் விதமாக இஸ்ராயல் மக்கள் பாஸ்கா விழாவிலே, இரவு நேரங்களில் விளக்கை ஏற்றி, அதை மந்திரித்து, அதன் ஒளியில் திருப்பாடல்களை வாசித்து வந்தனர். புதிய இஸ்ராயேல் மக்களாகிய நாம் ஒளிவிழாவை கிறிஸ்துவின் உயிர்ப்புடன் தொடர்புபடுத்தி இந்த இரவில் கொண்டாடுகிறோம். இப்போது குருவானவர் நம்மை வாழ்த்தி இந்த பாஸ்கா இரவைப்பற்றி அறிரை கூறுவார். (எண். 8)
(எண் 8 முடிந்த உடன்) தீயை ஆசீர்வதித்தல்
புதிய பாஸ்காவின் நினைவாக இப்போது புதுத்தீயை குரு மந்திரிக்கிறார். நெருப்பு தூய்மைபடுத்தும் கருவியாகவும், ஒளியைக் கொடுக்கக் கூடியதாகவும் விளங்குகிறது. திருவழிபாட்டில் நெருப்பு தூபத்திற்கு பயன்படுகிறது. எனவே இந்த நெருப்பை இப்போது குருவானவர் புனிதப்படுத்துகிறார். (எண் 9)
(எண் 10) பாஸ்காத் திரியை மந்திரித்தல் - இப்போது குருவானவர் பாஸ்கா திரியை புனிதப்படுத்தவிருக்கிறார். பாஸ்காத் திரி கிறிஸ்துவை குறிக்கிறது.
சிலுவை - சிலுவை மரத்தின் வழியாகத்தான் உயிர்ப்பின் மகிமை விளங்குகிறது என்பதைக் குறிக்க இப்போது குருவானவர் பாஸ்கா திரியில் சிலுவையின் நேர்கோட்டையும் குறுக்குக்கோட்டையும் வரைகிறார்.
அகரமும் னகரமும் - கிறிஸ்து காலங்கள் யாவற்றையும் கடந்து நிற்கிறார் என்பதைக் குறிக்கின்ற வகையில் குருவானவர் பாஸ்கா திரியில் தமிழ் எழுத்துகளின் முதல் எழுத்தான அகரம் என்ற எழுத்தையும் , கடைசி எழுத்தான ன என்ற எழுத்தையும், வரைகிறார்.
ஆண்டின் எண் 2010 - காலங்களும் யூகங்களும், மாட்சியும் ஆட்சியும் ஆண்டவருக்கே உரியன என்பதை குறிக்கும் விதமாக சிலுவையின் நான்கு கோணங்களில் நிகழும் ஆண்டின் எண்களையும் எழுதுகின்றார்.
(எண் 11.) ஆண்டவர் இயேசுவின் தன்னுடைய ஐந்து காயங்களால் நம்மை கண்காணித்து பேணி காக்க வேண்டுமென்று ஐந்து சாம்பிராணி மணிகளை சிலுவையில் பதிக்கிறார்ஐந்து சாம்பிராணி மணிகளை சிலுவையில் பதிக்கிறார்.
பாஸ்கா திரி ஒளியேற்றுதல் (எண் 12) - பாவம் என்னும் இருள் நிறைந்த வாழ்வைத் களைத்துவிட்டு புது வாழ்வு என்னும் ஒளியின் படைக்கலன்களை அணிந்துகொள்ள வேண்டும் என்பதன் அடையாளமாக புனிதப்படுத்தப்பட்ட தீயிலிருந்து பாஸ்காத் திரி பற்ற வைக்கப்படுகிறது. உயிர்த்த இயேசு நம்முடைய மத்தியில் இருக்கிறார் என்பதை இது காட்டுகிறது.
பாஸ்கா பவனி
முன்னுரை
அன்று இஸ்ராயேல் மக்களை இறைவன் நெருப்புத்தூண் வடிவில் மோயீசன் தலைமையில் வழிநடத்த, செங்கடலை கடந்து வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குச் சென்றனர். பாஸ்காவின் உண்மையை அதாவது. பாவத்திலிருந்து, நாம் புதுவாழ்வு பெறவும், கிறிஸ்துவின் ஒளியை எல்லா மக்களுக்கும் காட்டி அவர்களையும், ஒளியாகிய இறைவனிடம் கூட்டி வரவும் இந்த பவனி நமக்கு நினைவுப்படுத்துகிறது.
பவனியின் போது, ஒவ்வொரு முறையும் குருவானவர் கிறிஸ்துவின் ஒளி இதோ என்று பாடும்போதும் இறைவா உமக்கு நன்றி என்று அனைவரும் சேர்ந்து பதில் பாடுவோம். கிறிஸ்துவின் உயிர்ப்பு புத்தொளியில் நாமும் பங்கு பெறுவதை குறிக்கும் வண்ணம் இரண்டாம் முறையாக இறைவா உமக்கு நன்றி என்ற பதில் பாடிய பிறகு நம்மிடம் உள்ள மெழுகு திரிகளை பாஸ்கா திரியிலிருந்து பற்ற வைத்துக் கொள்வோம். மூன்றாம் முறையாக பாடிய பிறகு அனைத்து விளக்குகளும் ஏற்றப்படும்.
பாஸ்கா புகழுரை
மெசியாவாகிய இயேசு ஒளியானவர். இந்த ஒளி திருச்சபையில் இன்று மீட்பின் கருவியாக செயலாற்றுகின்றது. இந்த மீட்பின் வரலாறு இப்போது புகழுரையாக பாடப்படுகிறது. ஆகவே அனைவரும் கைகளில் எரியும் மெழுகுதிரிகளை பிடித்துக்கொண்டு, நின்ற வண்ணம் பக்தியோடு மீட்பின் வரலாற்று உண்மைகளை நமது உள்ளத்தில் ஏற்றுக்கொள்வோம்.
எண் 17. குரு பாஸ்கா புகழுரை பாடுபவருக்கு ஆசி வழங்கிவிட்டு பாஸ்கா திரிக்கு தூபமிடுவார்.
பாஸ்காப் புகழுரை:
வானகத் தூதர் அணி மகிழ்வதாக
இத்திருச்சடங்கிலே பெருமகிழ்ச்சி பொங்குவதாக
மாண்புமிக்க மன்னரது வெற்றிக்காக
எக்காளம் தொனித்து மீட்பை அறிவிப்பதாக.
இப்பெருஞ் சுடர்களால் ஒளிவீசப் பெற்று
இவ்வுலகும் பெருமகிழ்ச்சி கொள்வதாக
முடிவில்லா மன்னரது பேரொளியால்
உலகெல்லாம் துலங்கி, தன்னைச் சூழ்ந்த
இருளனைத்தும் ஒழிந்ததென உணர்வதாக.
திருவிளக்கின் பெருஞ்சுடரால் அழகுபெற்று
அன்னையாம் திருச்சபையும் களிகூர்வதாக.
இறைமக்கள் அனைவரது பேரொலியால்
இக்கோயில் எதிரொலித்து முழங்குவதாக.
எனவே, இத்திருவிளக்கின் வியத்தகு ஒளியைச்
சூழ்ந்துநிற்கும் அன்புமிக்க சகோதரர் சகோதரிகளே,
உங்களை வேண்டுகிறேன்:
என்னுடன் சேர்ந்து, எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவீரே.
தகுதியற்ற அடியேனைத் திருப்பணியாளருள்
சேர்த்திடத் தயைகூர்ந்த இறைவன்தாமே
திருவிளக்கின் பேரொளியை என்மேல் வீசி
இத்திரியின் புகழ்சாற்றச் செய்வாராக).
முன்மொழி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில்: உம்மோடு இருப்பாராக.
முன்: இதயங்களை ஆண்டவரிடம் எழுப்புங்கள்.
பதில்: ஆண்டவரிடம் எழுப்பிள்ளோம்.
முன்: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றிகூறுவோம்.
பதில்: அது தகுதியும் நீதியுமானதே.
கண்ணுக்குப் புலப்படாத இறைவனாகிய எல்லாம் வல்ல தந்தையையும்,
அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும்
இதயப் பற்றுதலோடு வாயாரப் பாடிப் புகழ்வது
மெய்யாகவே தகுதியும் நீதியுமாகும்.
கிறிஸ்துவே ஆதாமினால் வந்த கடனை
நமது பெயரால் என்றும் வாழும் தந்தைக்குச் செலுத்தி,
பாவத்துக்குரிய கடன்சீட்டை தம் திருஇரத்தத்தால் அழிந்துவிட்டார்.
ஏனெனில், பாஸ்கா விழா இதுவே
இதில், மெய்யான செம்மறியாகிய கிறிஸ்து கொலையுண்டார்
இவரது இரத்தத்தால் விசுவாசிகளின் கதவுநிலைகள் அர்ச்சிக்கப்படுகின்றன.
முற்காலத்தில், நம் முன்னோரான இஸ்ராயேல் மக்களை
எகிப்திலிருந்து விடுவித்து அவர்கள் பாதம் நனையாமல்
செங்கடலைக் கடக்கச் செய்தது இந்த இரவிலேதான்.
நெருப்புத் தூணின் வெளிச்சத்தால்
பாவத்தின் இருளை அகற்றிய இரவும் இதுவே.
பூவுலகெங்கும் இன்று கிறிஸ்துவில் விசுவாசங்கொண்டவர்களை
உலகின் தீய வழியிலிருந்தும் பாவ இருளிலிருந்தும் பிரித்து,
அருள்வாழ்வில் மீண்டும் சேர்த்துத் தூயவராக்கியதும் இந்த இரவிலேதான்.
சாவின் தளைகளைத் தகர்த்தெறிந்து,
கிறிஸ்து பாதாளத்திலிருந்து வெற்றி வீரராய் எழுந்ததும் இந்த இரவிலேதான்.
இத்தகைய மீட்பின் பயனை யாம் பெறாவிடில்
பிறந்ததால் எப்பயனும் இல்லையே.
நீர் எம்மீது தறைகூர்ந்து காட்டிய இரக்கம் எத்துணை வியப்புக்குரியது!
அடிமையை மீட்குமாறு மகனையே கையளித்த அளவில்லா அன்புப்பெருக்கே!
ஓ ஆதாமின் பாவமே!
உன்னை அழிக்க கிறிஸ்துவின் மரணம் திண்ணமாய்த் தேவைப்பட்டது!
இத்துணை மாண்புமிக்க மீட்பரை அடையப் பேறுபெற்றதால்
பாக்கியமான குற்றமே!
ஓ மெய்யாகவே பேறுபெற்ற இரவே!
பாதாளத்திலிருந்து கிறிஸ்து உயிர்த்தெழுந்தகாலமும் நேரமும் அறிய
நீ மட்டுமே பேறுபெற்றாய்!
இரவு பகல்போல் ஒளிபெறும்.
நான் மகிழ்வுற இரவும் ஒளிதரும் என எழுதியுள்ளது இந்த இரவைக் குறித்தே.
எனவே, புனிதப்படுத்தும் இவ்விரவின் திருநிகழ்ச்சி
அக்கிரமங்களை ஒழிக்கின்றது,
குற்றங்களைக் கழுவிப் போக்குகின்றது
தவறினோர்க்கு மாசின்மையையும்
துயருற்றோர்க்கு மகிழ்ச்சியையும் அளிக்கின்றது
பகைமையை விரட்டுகின்றது,
ஆணவத்தை அடக்குகின்றது
மன ஒற்றுமையை உருவாக்குகின்றது.
ஆகவே, தூய தந்தையே,
இப்புனிதமான இரவில்
நாங்கள் உமது புகழ்ச்சிக்காக அளிக்கும் மாலைப் பலியை ஏற்றருளும்
தேனிக்களின் உழைப்பாலான மெழுகிலிருந்து உருவான இத்திரியைப
புனித திருச்சபை தன் பணியாளரின் கையால்
பக்திச் சிறப்புடன் உமக்கு ஒப்புக்கொடுத்து மாலைப் பலி செலுத்துகின்றது.
இறைவனின் மகிமைக்காகச் செந்தீயாய்ச் சுடர்விட்டெரியும்
இந்த நெருப்புத் தூணின் பெருமையை அறிந்திருக்கின்றோம்.
இத்தீயிலிருந்து பல விளக்குகளை ஏற்ற,
தன் ஒளியிலிருந்து பங்குகொடுத்தாலும், அது குறைவுபடுவதில்லை.
ஏனெனில், தாய்த்தேனீ தந்த மெழுகு உருகுவதால்
இத் தீ வளர்க்கப்படுகின்றது.
விண்ணுக்குரியவை மண்ணுக்குரியவையோடும்
கடவுளுக்குரியவை மனிதனுக்குரியவையோடும் இணைந்தது
மெய்யாகவே பாக்கியமான இந்த இரவிலேதான்!
ஆகவே ஆண்டவரே, உம்மை வேண்டுகிறோம்.
உமது திருப்பெயரின் மகிமைக்காக அர்ச்சிக்கப்பெற்ற இந்த மெழுகுதிரி,
இவ்வுரவின் இருளை ஒழிக்குமாறு,
குறைவுபடாமல் நின்று எரிவதாக.
இது இனிமைதரும் நறுமணமாக ஏற்கப்பட்டு,
விண்ணக விளக்குகளுடன் கலந்துகொள்வதாக.
விடிவெள்ளி எழும்போதும் இது சுடர்விட்டு எரிவதாக.
ஓருபோதும் மறையாத இந்த விடிவெள்ளி
உம் திருமகன் கிறிஸ்துவேதான்.
பாதாளத்திலிருந்து திரும்பி வந்து,
மனித இனத்தின்மீது அமைதியுடன் ஒளிவீசி,
என்றென்றும் வாழ்ந்து ஆட்சிசெய்கின்றவர் அவரே.
எல்: ஆமென்
2. இறைவாக்கு வழிபாடு
மெழுகு திரிகளை அனைத்துவிட்டு அமர்வோம். இன்றைய வழிபாட்டின் இரண்டாம் பகுதியான இறைவாக்கு வழிபாடு ஆரம்பமாகிறது. பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்கள் இரவு நேரங்களில் கண் விழித்திருந்து, கடவுள் தங்களுக்கு செய்த மாபெரும் மீட்பு செயல்களைத் திரு நூலிலிருந்து வாசித்து திருப்பாடல்களை பாடி செபிப்பார்கள். புதிய இஸ்ராயேல் மக்களான நாமும் கிறிஸ்துவின் வழியாக கடவுள் செய்த மாபெரும் மீட்பின் செயல்களை தியானிக்கும் விதமாக பழைய ஏற்பாட்டிலிருந்து மூன்று வாசகங்கள் வாசிக்ககேட்போம் ஒவ்வொரு வாசகத்திற்கு பிறகும் அதன் தொடர்புடைய திருப்பாடல்களும் பாடப்படும், பின்னர் குரு அவ்வாசகத்தின் பின்னனியில் செபிப்பார்.
வாசக முன்னுரை
- இறைவன் அனைத்துலகிற்கும் தலைமை வகிப்பவராக அனைத்தையும் ஆளுபவராக இருக்கிறார். எனவேதான் அவர் அனைத்தையும் படைத்து, இருளை இல்லாமல் செய்து, இறுதியில் மனிதனை தம் சாயலிலே படைத்து அவனை படைப்பின் சிகரமாக்கினார், அவனோடு உறவுகொண்டு வழிநடத்தினார் என்று முதல் வாசகத்தில் வாசிக்க கேட்போம்.
- இறைவன் தொடக்கம் முதல் இஸ்ராயேல் மக்களை பல்வேறு துன்பங்களிலிருந்து காத்தார். மோயீசன் தலைமையில் இஸ்ராயேல் மக்கள் செங்கடலைக் கடந்து சென்ற அற்புத நிகழ்வுகளையும், எகிப்தியரை முறியடித்து மக்களைக் காப்பாற்றினார் என்பதை இரண்டாம் வாசகத்தில் வாசிக்க கேட்போம்.
- இத்தகைய இறைவனின் அன்பையும் அரவணைப்பையும் உணராததால் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்ட இஸ்ராயேல் மக்கள், தங்கள் பாவத்திலிருந்து மனம்திரும்பி ஆண்டவருக்குள் வருகிறபோது, தூய நீரினால் தூய்மையாக்கி தன்னோடு சேர்த்துக்கொள்வார் என்று மூன்றாம் வாசகத்தில் வாசிக்க கேட்போம்.
- நான்காம் வாசகம்: ஞானஸ்நானம் பெற்ற ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் மரணத்திலும் உயிர்ப்பிலும் இணைக்கப்பட்டவர்கள் என்ற கருத்தை எடுத்துக் கூறும் புனித பவுல், இயேசு கிறிஸ்துவோடு துன்பப்படுகிறபோதும், நம் திருமுழுக்கினால் பாவத்திற்கு இறக்கிறபோது கிறிஸ்துவோடு உயிர்த்தெழுவோம் என்று கூறுவதை வாசிக்க கேட்போம்.
இப்போது மகிழ்ச்சியின் கீதமான உன்னதங்களிலே கீதம் பாடப்படுகிறது. மணிகள் ஒலிக்க, நாமும் இயேசுவின் உயிர்ப்பின் மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக அனைவரும் சேர்ந்து ஆர்பரித்து பாடுவோம்.
அல்லேலூயா
அனைவரும் எழுந்து நிற்போம். அல்லேலூயா என்ற பாடல் கிறிஸ்தவர்களுக்கே உரிய சிறப்பான பாடல், உயிர்த்த மக்களுடைய புகழ்ச்சிப்பாடல். அல்லேலூயா என்றால் ஆண்டவரை புகழுங்கள் என்று பொருள். இந்த மகிழ்ச்சியின் பாடலை தவத்தின் அடையாளமாக தவக்காலத்தில் நாம் பாடவில்லை. எனவே இப்போது குருவானவர் துவக்கிவிட முழு உற்சாகத்தோடும் மகிழுச்சியோடும் இப்பாடலை பாடி கிறிஸ்து உயிர்த்து விட்டார் என்று முழக்கம் செய்வோம்.
3. திருமுழுக்கு வழிபாடு
முன்னுரை
அனைவரும் எழுந்து நிற்போம். இன்றைய வழிபாட்டின் மூன்றாம் பகுதியான திருமுழுக்கு வழிபாடு இப்போது தொடங்குகிறது. இந்த திருமுழுக்கு வழிபாடு, கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் இய¼சுவின் இறப்பிலும், உயிர்ப்பிலும் பங்கேற்கிறோம் என்பதைக் குறித்து காட்டுகிறது, கிறிஸ்துவின் உயிர்ப்பு நமது விசுவாசத்தின் ஆணிவேர். ஆகவே கிறிஸ்து இயேசுவின் உயிர்ப்பில் விசுவாசம் கொண்டு, நமது வாழ்வை தூய்மைப்படுத்திக் கொள்ளவோம். இப்போது குருவானவர் இந்த வழிபாட்டில் பங்கெடுக்க நமக்கு அழைப்பும் அறிவுரை வழங்குகிறார். (எண் 38).
புனிதர்களின் மன்றாட்டு மாலை
இந்த பகுதியில் நாம் நம்முடைய ஞானஸ்நான வாக்குறுதிகளை புதுபிக்க இருக்கிறோம், அதற்கான தகுதியான மனநிலையை அளிக்குமாறு செபிக்கும் நேரமிது. நமக்குமுன் இயேசுவின் உயிர்ப்பில் பங்கு பெற்றுள்ள அனைத்து புனிதர்களையும் அழைத்து அவர்களின் உதவியைக் கேட்டு புனிதர்களின் பிரார்த்தனையை பாடுவோம்.
ஆண்டவரே, இரக்கமாயிரும் - ஆண்டவரே, இரக்கமாயிரும்
கிறிஸ்துவே, இரக்கமாயிரும் - கிறிஸ்துவே, இரக்கமாயிரும்
ஆண்டவரே, இரக்கமாயிரும் - ஆண்டவரே, இரக்கமாயிரும்
புனித மரியாயே, இறைவனின் தாயே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித மிக்கேலே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இறைவனின் புனித தூதர்களே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
புனித ஸ்நாபக அருளப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித சூசையப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித இராயப்பரே, புனித சின்னப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
புனித பெலவேந்திரரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித அருளப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித மதலேன் மரியம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித ஸ்தேபானே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித அந்தியோக்கு இஞ்ஞாசியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித லவுரேஞ்சியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித பெர்பேத்துவா பெரிசித்தம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித அஞ்ஞேசம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித கிரகோரியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித அகுஸ்தீனாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித அத்தனாசியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித பசிலியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித மார்த்தீனாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித ஆசீர்வாதப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித பிரான்சிஸ்குவே, சுவாமிநாதரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித பிரான்சிஸ்கு சவேரியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித வியான்னி மரிய அருளப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித சியன்னா கத்தரீனம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித அவிலா தொரேசம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இறைவனின் எல்லாப் புனிதர்களே, புனிதையர்களே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
கருணைகூர்ந்து - எங்களை மீட்டருளும் ஆண்டவரே
தீமை அனைத்திலுமிருந்து - எங்களை மீட்டருளும் ஆண்டவரே
பாவம் அனைத்திலிமிருந்து - எங்களை மீட்டருளும் ஆண்டவரே
நித்திய மரணத்திலிருந்து - எங்களை மீட்டருளும் ஆண்டவரே
உமது மனித அவதாரத்தினாலே - எங்களை மீட்டருளும் ஆண்டவரே
உமது மரணத்தினாலே, உயிர்ப்பினாலே - எங்களை மீட்டருளும் ஆண்டவரே
தூய ஆவியின் வருகையினாலே - எங்களை மீட்டருளும் ஆண்டவரே
பாவிகளாகிய நாங்கள் உம்மை மன்றாடுகிறோம் - எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
திருமுழுக்குப் பெறவேண்டியவர் இருந்தால்:தேர்ந்துகொள்ளப் பெற்ற இம்மக்கள் திருமுழுக்கின் அருளினால் புத்துயிர் பெறச் செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம் - எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
திருமுழுக்குப் பெறவேண்டியவர் இல்லையென்றால்:உமக்குப் பிள்ளைகளாக மக்கள் மறுபிறப்பு அடையுமாறு, இந்த நீருற்றை உமது அருளினால் புனிதமாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம் - எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
உயிருள்ள கடவுளின் திருமகனாகிய இயேசுவே, உம்மை மன்றாடுகிறோம் - எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்களுக்கு செவிசாய்தரும் - கிறிஸ்துவே எங்களுக்கு செவிசாய்தரும்.
கிறிஸ்துவே தயவாய் செவிசாய்தரும் - கிறிஸ்துவே தயவாய் செவிசாய்தரும்
திருமுழுக்குப் பெறுவோர் அங்கிருந்தால், குரு கைகுவித்துப் பின்வரும் மன்றாட்டைச் சொல்வார்:என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா,
உமது இரக்கத்தின் திருவருட்சாதனங்களில் நீர் உடனிருந்து செயலாற்றுகின்றீர். இத்திருமுழுக்கின் ஊற்றிலிருந்து உமக்கெனப் புதிய மக்களைப் பிறப்பிக்குமாறு உம்முடைய திருமகனின் ஆவியை அனுப்பியருளும். இந்த எங்கள் எளிய திருப்பணி உம்முடைய பேராற்றலால் நிறைபயன் தருவதாக. - எங்கள்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல். ஆமென்.
எண் 42- திருமுழுக்கு தண்ணீருக்கு ஆசி வழங்குதல் - இப்போது குருவானவர் நீரின் மீது இறைவனின் ஆசி இறங்கிவர நம் அனைவரையும் மன்றாட அழைக்கிறார். தொடர்ந்து புனிதர்கள் மன்றாட்டு பாடப்படுகிறது. அனைத்துப் புனிதர்களின் பரிந்துரை வழியாக இறைவனின் அருள் இந்த திருமுழுக்குத் தொட்டியில் உள்ள நீரில் இறங்க அனைவரும் மன்றாடுவோம்.
இறுதியில் எல்லோரும் - நீறுற்றுகளே, ஆண்டரைப் போற்றுங்கள், என்றென்றும் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்.திருமுழுக்கு வாக்குறுதிகளை புதுப்பித்தல்
அனைவரும் மெழுகுத்திரிகளை பற்றவைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு மகத்துவமிக்க நேரம். திருமுழுக்கின்போது நமது ஞானப் பெற்றோர் நமக்காக அறிவிக்கயிட்ட விசுவாசப் பேருண்மைகளைக் நாம் கடைப்பிடிப்பதாக உறுதி கூறுவோம். உயிர்த்த இயேசுவின் மகிழ்ச்சியில் பங்குகொள்ள வேண்டுமானால், இறைவனுக்கு எதிரான தீயசக்திகளை விட்டுவிடுகிறேன் என்றும், கடவுளின் வெளிப்பாட்டினையும், வழிகாட்டுதலையும் ஏற்றுக்கொள்கிறேன் என்றும் ஒருமையில் பதிலளிப்போம்.
குரு மக்கள்மீது மந்திரித்த தண்ணீர் தெளிப்பார்; அப்போது அனைவரும் பாடுவதாவது:பல்லவி: தேவாலய வலப்புறமிருந்து தண்ணீர் புறப்படக் கண்டேன் - அல்லேலூயா
அந்தத தண்ணீர் யாரிடம் வந்ததோ அவர்கள் யாவருமே ஈடேற்றம் பெற்றுக் கூறுவர்:
அல்லேலூயா, அல்லேலூயா.
ஆண்டவரைப் போற்றுங்கள் ஏனெனில் அவர் நல்லவர்
அவர் தம் இரக்கம் என்றென்றும் உள்ளதே
பிதாவும் சுதனும் தூய ஆவியும் துதியும் புகழும் ஒன்றாய் பெறுக
ஆதியில் இருந்ததுபோல் இன்றும் என்றும் நித்தியமாகவும் - ஆமென்
1. உயிரளிக்கும் உடனிருப்பே எம் இறைவா!
எம் தாய் திருச்சபையை உம் கையில் அர்ப்பணிக்கிறோம். முழுவிடுதலையை நோக்கி பயணமாகும் திருச்சபை புத்துயிர் பெற்ற புதிய எருசலேம் திருநகராக திகழ்ந்து உலகிற்கு ஒளியாய் திகழவும். திருச்சபை வழிகாட்டிகள் அனைவரும் உம் திருவுளத்தின்படி அன்பையும், நீதியையும் சமாதானத்தையும் இப்புவியில் பரப்பிட எங்களை வழிநடத்த எம் தலைவர்களுக்கு வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. உலகின் பேரொளியே இறைவா!
சாவை வென்று வெற்றி வீரராய் நீர் பவனி வந்ததை போன்று, நாங்களும் துன்பங்களைக் கண்டு துவண்டுவிடாமல் இருக்கவும், சோதனைகளைக் கண்டு கண்ணீர் வடிக்காமல் அவற்றைத் துணிவோடு போராடி வெற்றிகொள்ளவும் வரம் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. உலகின் ஒளியே இறைவா!
பாஸ்கா என்றாலே கடத்தல் என்பதை உணர்ந்து, எங்களது பழைய பாவ இயல்புகளில் இருந்து கடந்து உம் அன்பின் சிறகுகளுக்குள் தஞ்சம் அடையவும், நம்பிக்கை அன்பு, அருள் போன்ற பாஸ்கா விழாவின் கனிகளை நிரம்ப பெற்று வாழ்ந்திடவும் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. உலகின் மீட்பரே எம் இறைவா!
உயிர்ப்பின் பாஸ்கா பலியை கொண்டாடும் உம் பிள்ளைகள் எங்கள் ஒவ்வொருவரையும் நீர் நிறைவாக ஆசீர்வதியும். உமது உயிர்ப்பின் ஒளியால் வளமான எதிர்காலத்தையும், ஆசீர்வாதத்தையும் பெற்று வாழ்வில் வெற்றி பெற இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
(விசுவாச அறிக்கை சொல்வதில்லை).4. நற்கருணை வழிபாடு
நாம் இப்போது நற்கருணை வழிபாட்டில் நுழைகிறோம். அன்பினால் மீட்பைக் கொண்டு வந்த இறைமகன் இயேசு, அதிலிருந்து தனக்கென்று எதையும் திரும்ப எடுத்துச் செல்லவில்லை. சிலுவைப் பலியில் தன்னைக் கொடுத்த இறைமகன், இன்றைய திருப்பலி வழியாக நம்மையே அவரோடு இணைய அழைப்பு விடுக்கிறார். இறைவன் கரத்தில் நம்மையே காணிக்கையாக்கி, சிறுதுளி நீராய் நாமும் இறைமகன் இயேசுவின் பலியில் கலந்துகொள்வோம்.
திருப்பலி முடிவு
நன்றி மன்றாட்டு: இறைவா, இம்மாபெரும் இரவில் விழித்திருந்து உம் வார்த்தைகளைக் கேட்டு, உம் திருமகனுடைய உயிர்த்தெழுதலைக் கொண்டாடி மகிழ்ந்தோம். சாவை வென்று உயிர்த்தெழுந்த உம் திருமகனின் ஆவியை எங்கள் மீது நிறைவாகப் பொழிந்தருளும். இதனால் நாங்கள் எங்கள் வாழ்வில் நேரிடும் அனைத்தையும் பாஸ்காவின் வெற்றிப் பூரிப்புடன் எதிர்கொள்ளத் துணிந்து செல்வோமாக. எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
மக்கள் : உம்மோடும் இருப்பாராக.
குரு : எல்லாம் வல்ல இறைவன் பிதா, சுதன், பரிசுத்த ஆவி உங்களை ஆசீர்வதிப்பாராக!
மக்கள் : ஆமென்.
பிரியாவிடையாக, திருத்தொண்டர்/குரு: சென்று வாழுங்கள், திருப்பலி நிறைவேறிற்று, அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா.
மக்கள் : இறைவா, உமக்கு நன்றி, அல்லேலூயா, அல்லேலூயா,அல்லேலூயா.
உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துகளுடன்இறையியல் மாணவர்கள் நல்லாயன் குருத்துவ கல்லூரி கோவை