நள்ளிரவு ஆராதனை

ஆராதனை - 1

ஆராதனை பாடல் :
எங்கள் எல்லோருக்காகவும்   
நாள்தோறும் காத்திருக்கும் 
நற்கருணை நாதரே, நன்றிப்புகழ் உமக்கே - 3

* நேரம் -  அது பொன்னானது, உழைப்பதற்கு ஒரு நேரம்...
ஓய்வு எடுப்பதற்கு ஒருநேரம்...  பகிர்வதற்கு, பாசத்திற்கு 
என தனிப்பட்ட தருணங்களில், இது ஒரு 
பொன்னான நேரம் ஆம்! படைத்தாளும் பரமனின், 
எல்லையில்லா அன்பையும், விந்தைமிகு ஞானத்தையும் 
போற்றிப் புகழே வேண்டிய நேரம்.  

உடையாக உன்னை படைக்க நினைத்தேன் 
காலத்தில் கந்தலாகிவிடுவாய் என நினைத்து, 
உடையாக படைக்க மறுத்து விட்டேன்.   

வெறும் உடலாக மட்டும் உன்னை படைக்க நினைத்தால் 
இறப்பினால் மக்கிபோவாய் என உள்மனம் கூற 
உடலாக உனை படைக்க மறுத்துவிட்டேன்.  

எனவே என்னைவிட்டு நீங்காத, அழியாத, பிரியாத 
உயர்வான செல்வமாய் உயிராக படைப்புகளில் 
பண்பட்ட மனிதனாய் உனைப்படைத்தேன்.
நீ என்னோடு வாழ்வதற்கு...  
(Silence -2 minutes)   

வீசும் தென்றல் விரைவாய் கடந்து விடுவது போல, வாழும் காலமும் சற்றென கடந்து விடுகிறது.  இந்த அவசரமான உலகத்திலே நுகர்வு கலச்சாரம், வேலைப்பளு, தொலைக்காட்சி, சொந்த விருப்பு வெறுப்புகள் என படைத்த பரமனை, பார்ப்பதற்கும் கூட, கண் இமையைப்போல காத்துவரும் இறைவனை வழிபட, வாழ்த்தி போற்ற ஏனோ ! தெரியவில்லை வாய்ப்புகள் இல்லாமல் போய்விடுகிறது.  

மன்னிப்பு வழிபாடு

வாழ்வின் பாதையில் சோதனைகள் ஆயிரம், வேதனைகள் பல்லாயிரம்! பரமனே! நீர் எம்முன் செல்கிறீர் என்பதை மறந்து பாவக்குழியில் பலசமயம் தவறிவிழுந்து விடுகிறேன்.  

வாசகம் :  லூக்கா (Luke 15:11-24) ஊதாரி மைந்தன் உவமை 

  • தன்னுடைய அன்பை கொடுப்பதிலே தந்தையாம் கடவுளே ஊதாரியாக அன்பை அள்ளித்தருகிறார்.  நமக்கு எல்லாவித சுதந்திரங்களையும் கொடுத்திருக்கிறார்.ஆனால்,நாம்தான் தவறாக பயன் படுத்திவிடுகிறோம்.  
  • நாம் செய்த பாவங்களுக்கு மனம்வருந்தி, அவரிடம் திரும்பி வருகிற பொழுது, மனம்மாற நினைக்கும் அந்தநொடிப் பொழுதே நம்மை முழுமையாக மன்னிக்கிறார்.  நம்மை அரவணைத்து கொள்கிறார்.
  • மன்னிப்பின் அடையாளமாக நம் மதிப்பினை அதிகரிக்கச் செய்கிறார்.  நமக்கு நிறைமகிழ்ச்சி அளிக்கிறார்.  எனவே கடந்த ஆண்டு முழுவதும் நம்முடைய சிறு சிறு தவறுகள் முதல் பெரிய பாவங்கள் என அனைத்தையும் நினைத்து மனம் வருந்துவோம்.   
திருப்பாடல் 51 : 1-12 
(Silence 5 minutes) 
மன்றாட்டுக்கள்

கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும், தேடுங்கள் கண்டடைவீர்கள் என மொழிந்த அன்பர் இயேசு, நம்முடைய தேவைகளை நாம் கேட்பதற்கு முன்னரே அறிந்து வைத்திருக்கிறார்.  உள்ளங்கையில் பொறித்து காத்து வருகிறார்.  அன்பர் இயேசுவிடம் நம்முடைய மன்றாட்டுக்களை சமர்பிப்போம் !  

    பாடல் : விண்ணப்பத்தை கேட்டு 
விந்தை பல செய்யும் இயேசுவே 
எம் மன்றாட்டை கேட்டருளும்

இன்று ஆண்டின் இறுதிநாள்.  2010-ம் ஆண்டின் கடைசி ஒருமணிநேரம் உருகொடுத்து, உயிர்கொடுத்து, காத்துக் கொண்டிருக்கும் உன்னத தேவனின், உண்மையுள்ள பிரசன்னத்தில் அமர்ந்திருக்கிறோம்.  அமைதியில் ஆண்டவரோடு உரையாடுவோம்.  கடந்த ஆண்டு முழுவதும் நிகழ்ந்தவற்றை நினைத்துப் பார்ப்போம்.      (silence -  3 minutes)  

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக காத்து வருகின்ற கடவுளின் கிருபையை நினைத்து பார்ப்போம்.   
(ஒவ்வொரு மன்றாட்டிற்கும் பின்) 
உம்மை போற்றுகிறேன் 
உம்மை புகழுகின்றேன் 
நன்றி கூறுகின்றேன். 
  1. அன்பின் இறைவா! எனக்கு நல்ல பெற்றோரையும், உற்றார் உறவினர்களையும், நண்பர்களையும் கொடுத்து குடும்பத்தில் சமாதானம், ஒற்றுமை, மகிழ்ச்சி என கொடுத்து வருகின்றீர் உமக்கு நன்றி செலுத்துகிறேன். 
  2. அன்பின் இறைவா! எனக்கு நல்ல கணவரை / பண்புள்ள மனைவியை, பாசமுள்ள பிள்ளைகளை கொடுத்து நல்வருமானமும் கொடுத்து காத்துவரும் கிருபைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.  
  3. கடந்த ஆண்டு முழுவதும் நல்மழையினை கொடுத்து, விளைச்சலைப் பெருக்கி கொடுத்தமைக்காகவும், பல்வேறு விபத்துகள், இயற்கை சீற்றங்கள், பேரிடர்கள் என ஆபத்துகளினின்று காத்த உமது நலனுக்காய் நன்றி செலுத்துகிறோம்.  
  4. ஆன்மீக வழி நடத்த நல்ல அருட்தந்தையையும், அருட்சகோதரிகளையும் கொடுத்ததோடு அல்லாமல் எல்லாவற்றிற்கும் மேலாக உன் அன்பின் மிகுதியால் அன்றாட திருப்பலியில் உடலாகவும், இரத்தமாகவும் எழுந்து, திருவிருந்தளிக்கும் உமக்கு கோடான கோடி நன்றி செலுத்துகிறோம்.  
  5. நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறியதோடு, பலவித நன்மைகளால் அபரிவிதமாக நிரப்பும் இறைவனின் எல்லையில்லா கருணையை நினைத்து பார்த்து எப்பொழுதுமே அவருக்கு நன்றியுள்ளவர்களாய் இருப்போம்.  

 நன்றிப்பாடல் : ஒரு பாடல் நான் பாடுவேன் 

வருங்காலம் வசந்தகாலம் நிச்சயம் நாம் 
இறைவனின் கைபிடித்து நடந்தால்...  அவரை 
முன்னிறுத்தி நம்பிக்கை கொள்வோம்.  புது வருடம் 
நிச்சயம் நம்மை புதுப்படைப்பாய் மாற்றும் 

மாண்புயர் இந்த அனுமானத்தை
தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்

1
பழைய நியம முறைகள் அனைத்தும்
இனி மறைந்து முடிவு பெறுக
‌புதிய நியம முறைகள் வருக‌
புலன்களாலே மனிதன் இதனை
அறிய இயலாலாக் குறையை நீக்க‌
விசுவாசத்தின் உதவி பெறுக‌

2
பிதா அவர்க்கும் சுதனவர்க்கும்
புகழ்ச்சியோடு வெற்றியார்ப்பும்
மீட்பின் பெருமை மகிமையோடு
வலிமை வாழ்த்து யாவுமாக‌
இருவரிடமாய் வருகின்றவராம்
தூய ஆவியானவர்க்கும்
அளவில்லாத சம புகழ்ச்சி
என்றுமே உண்டாகுக- ஆமென்

நற்கருணை ஆசீர்

(தொடர்ந்து புத்தாண்டு திருப்பலி)



Prepared by 
  1. Jayan G.
  2. Johnson S.
  3. Sundar Raj S.
  4. Victor Lawrence
  5. Arun Savariraj X.
Spirituality Course, St. John's Propaedeutic Seminary, Cuddalore




ஆராதனை - 2



முன்னுரை

இறையேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே,
புத்தாடைகளோடும், மனங்களில், பொங்கும் மகிழ்ச்சியோடும் பூமணம் வீசும் இப்பொன்னாளில் புலரும் (அல்லது)  புலர்ந்திருக்கிற புதிய ஆண்டினை இறை ஆசிரோடு தொடங்க, பரமனின் பலியிலே நாம் இணைத்திருக்கிறோம்.   இவ்வினிய வேளையில் கடந்த ஆண்டு முழுவதும் நம்மைக் காத்த இறைவனுக்கு நன்றி சொல்வதோடு, பூத்திருக்கும் இப்புதிய ஆண்டினை புத்துணர்ச்சியோடு தொடங்க, இறைவனின் பிள்ளைகளாய் தொடர்ந்து இறைபாதையில் நடக்க, ஆண்டவரின் அருளை இறைஞ்சுவோம்.

மேலும் இன்று “அன்னைமரி இறைவனின் தாய்” என்ற உண்மையை பெருவிழாவாக எடுத்து நம் தாய்த்திருச்சபை சிறப்பிக்கிறது.  மனுகுலம் மீட்படைய மாபரன், தான் வகுத்த மாபெரும் திட்டத்தினை நிறைவேற்ற, அன்னைமரியை தெரிந்தெடுத்து, பாவக்கறை படியாது அவரைப் பாதுகாத்து, “இறைவனின் தாய்” என்ற ஈடில்லா பேற்றினை அவருக்கு அளித்தார், என்ற உண்மையை நாம் ஒவ்வொரு வரும் அறிந்து கொள்ள திருச்சபை நமக்கு அழைப்பு விடுகிறது.

அன்று சிலுவை மரத்திலே இறக்கும் தறுவாயில் நம் ஆண்டவர் “இதோ உன் தாய்” என்று தன் அன்பு சீடரிடம் அன்னை மரியை ஒப்படைக்கிறார்.   அவரும் அன்னைமரியை தன் இல்லத்தில் ஏற்றுக் கொள்கிறார்.  எனவே, ஆண்டவரில் விசுவாசம் கொண்ட நாமும் அவரின் அன்பு சீடர்களாய் வாழ, அன்னை மரியை நம் உள்ளத்தில் ஏற்று, அவரின் கரம் பிடித்தபடி, பிறந்திருக்கிற இப்புதிய ஆண்டில் இறைவழி நடப்போம்.  

அன்பால் இதயங்கள் இணைந்திட
இம்மண்ணில் மனிதம் மலர்ந்திட
நம்மனங்களில் மகிழ்ச்சி நிறைந்திட
எங்கும் இறையாட்சி பரவிட
தொடர்ந்து இத்திருப்பலியில் மன்றாடுவோம்.  

வாசக முன்னுரைகள் :

முதல் வாசகம் (எண்.  66: 22-27)
எகிப்திய அடிமைத்தனத்தில் இருந்த இஸ்ராயேல் மக்களை மீட்டபின் ஆண்டவர் மோயீசன் வழியாக ஆசீர்வதிக்கிறார்.  புதிய வருடம் இறைவன் கொடுக்கும் ஒரு புதிய கொடை.   இந்நாளில் ஆண்டவரின் ஆசீரை இவ்வாசகத்தின் வழியாக பெற்று மகிழ்வோம்.

இரண்டாம் வாசகம் : (கலா 4 : 4-7)
இயேசு கிறிஸ்துவை இறைவன் நேரடியாக மனுக்குலத்திற்கு அனுப்பவில்லை மாறாக அன்னை கன்னிமரியாள் வழியாக மனுகுலத்திற்கு கையளித்தார்.  இறைவனின் மீட்புத்திட்டத்தில் பங்கேற்ற அன்னை மரியாளின் பரிந்துரையும் ஆசீரும் இவ்வாண்டு முழுதும் தொடர வேண்டி இந்த வாசகத்திற்கு கனிவுடன் செவிமடுப்போம்

மன்றாட்டுக்கள் :-
01. நல்லாயனாம் எம் இறைவா! திருச்சபையை வழிநடத்தும் திருந்தந்தை ஆயர்கள், குருக்கள் திருத்தொண்டர்கள் ஆகியோருக்காக உம்மிடம் மன்றாடுகிறோம்.  இவர்கள் இறை விருப்பத்தை அறிந்து, உம்மைப் போல் வாழ்ந்து, மக்களை உம் அன்பு வழியில் வழி நடத்தி செல்லும், நல்ல மேழப்பர்களாக செயல்பட வேண்டிய அருளை தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

02. வழிகாட்டும் விண்மீனே எம் இறைவா ! எங்கள் நாட்டு தலைவர்களுக்காக உம்மிடம் மன்றாடுகிறோம்.  அவர்கள் குடும்பம் ஜாதி, மதம் போன்ற குறுகிய வட்டங்களை விட்டு வெளியே வந்து மக்களின் நலன்களில் அக்கறைக் கொண்டு அன்பை அடிப்படையாக் கொண்ட புதியதொரு சமுதாயத்தை உருவாக்கும் உம் அன்பின் கருவிகளாக மாற இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

03.    அன்பின் ஊற்றே எம் இறைவா! உலக நாடுகளிடையே சமாதானம் நிலவ உம்மிடம் மன்றாடுகிறோம்.  பிறந்திருக்கிற இப்புதிய ஆண்டில், நாடுகளிடையே நிலவும் சண்டை, சச்சரவு, வெறுப்பு போன்றவை நீங்கி இறைவனின் பிள்ளைகள் என்ற அடிப்படையில் உலகில் உள்ள அனைவரும் ஒரே குடும்பம் என்பதை எல்லோரும் உள்ளங்களால் உணர்ந்து, வேற்றுமைகளை களைந்து, ஒற்றுமையுடன் வாழ இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

04.   உலகின் ஒளியான எம் இறைவா! இளைஞராண்டை சிறப்பிக்கும் இந்தருணத்தில் உலகில் உள்ள அனைத்து இளைஞர், இளம்பெண்களுக்காக உம்மிடம் மன்றாடுகிறோம்.  இவர்கள் அனைவரும் தங்கள் வாழ்வின் நோக்கத்தை உணர்ந்து, அதற்கேற்ப வாழ்ந்து, தீமையை களைந்து, நல்லதை ஏற்று, உம் அன்பு பிள்ளைகளாக, உமக்கு உகந்த வகையில் என்றும் வாழ இறைவா உம்மை மன்றாடுகிறோம்.