குருத்து ஞாயிறு
பொது முன்னுரை
இன்று குருத்து ஞாயிறைக் கொண்டாடுகிறோம். புனித வாரத்தின் தொடக்கமாகவும், நுழைவு வாயிலாகவும் குருத்து ஞாயிறு அமைகின்றது. தாவீதின் மகனுக்கு ஓசான்னா முழக்ககங்களோடும், ஒலிவ கிளைகளை கைகளிலே ஏந்திய வண்ணமாய் எபிரேயர் எருசலேமிற்குள் வீரப்பயணம் மேற்கொள்கிறார்கள். இந்தப் பயணம், தான் இயேசு இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதாகவும், மீட்பின் முதல் படியாகவும் அமைகிறது. ஈராயிரம் ஆண்டுகளாய் விடுதலைக்காய், வாழ்வின் விடியலுக்காய் ஏழை எளிய மக்களுக்கு நம்பிக்கையும், புத்துயிரையும் கொடுப்பதாகவும் அமைகிறது. அத்தகைய நாளை நினைவு கூறும் இன்று நாமும் குருத்தோலைகளை உயர்த்தி கொண்டு பவனியில் பங்கெடுக்க இருக்கிறன்றோம். பட்டங்களையும், பதவிகளையும் எதிர்பார்த்து இயேசுவின் பின் சென்றால் அவரின் பயணத்தில் நிச்சயம் நமக்கு இடமிருக்காது. இயேசுவைப்போல நாமும் தன்னலப் போர்வையை தகர்த்தும், ஆணவத்தை அழித்தும் இயேசுவின் பின் பயணிப்போம். அப்போது இப்புனித வாரம் நம்மை புனிதர்களாக நிச்சயம் மாற்றும் என்ற மனநிலையோடு இத்திருவழிபாட்டில் பங்கெடுப்போம். இத்திருப்பவனியின் வழியாக இயேசுவோடு கல்வாரிக்குப் பயணமாவோம்.
பவனிக்கு முன்னுரை
இப்போது நாம் குருத்தோலை பவனியைத் தொடங்குகிறோம். பவனி என்றால் மக்கள் குதூகலமாக கூடி சாலைகளிலே திரண்டு செல்ல, அரசனோ அல்லது அதிகாரியோ அல்லது விழா நாயகனோ பவனியின் இறுதியிலே ஆரவாரமாக அழைத்து வரப்படுவர். ஆனால் நாம் இப்போது பங்கெடுக்கப்போகின்ற பவனியானது இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. தாவீதின் மகன் என்று போற்றப்பட்ட இயேசு, பவனியின் முன்னால் வழிநடக்க உலகம் அனைத்தையுமே தனக்குப் பின்னால் இழுத்துக்கொண்டும் இயக்கிக்கொண்டும் எருசலேம் நோக்கி முனைந்து விரைகிறார். எனவே குருவானவர் நம் எல்லோரையும் அழைத்தவராக, பாஸ்கா கொண்டாட இழுத்துச் செல்பவராக பவனியின் முன்னால் செல்ல, நாம் அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து, பாடல்களைப் பாடிக்கொண்டும், இயேசுவைப் புகழ்ந்துகொண்டும், அவரது எருசலேம் நுழைவில் பங்கு பெறவும், அங்கு அவரது இறப்பு, உயிர்ப்பு என்ற பாஸ்கா கொண்டாடவும் புறப்பட்டு செல்வோம்.
பவனி : தக்க நேரத்தில் மக்கள் கோயிலுக்கு வெளியே ஒரு சிற்றாலயத்தில் அல்லது மற்றொரு தகுந்த இடத்தில் கூடுவார்கள். அவர்கள் கையில் குருத்தோலை பிடித்திருப்பார்கள்.பல்லவி மத் 21: 9
சிவப்புநிறத் திருப்பலி உடைகளை அணிந்த குரு பணியாளருடன் அங்கு வருவார். குரு (காப்பா) மேற்போர்வையை அணியலாம். புவனி முடிந்ததும் இதை அகற்றிவிடுவார்.
குரு வருகையில் கீழ்க்கண்ட பல்லவி அல்லது மற்றொரு பொருத்தமான பாடல் பாடப்படும்.
தாவீதின் மகனுக்கு ஓசான்னா!
ஆண்டவர் பெயரால் வருகிறவர்
ஆசி நிரம்பப் பெற்றவரே!
இஸ்ராயேலின் பேரரசே,
உன்னதங்களிலே ஓசான்னா!
பின்னர் குரு வழக்கம்போல மக்களை வாழ்த்துகிறார். சிற்றுரை ஆற்றி, இந்நாள் கொண்டாட்டத்தை அனைவரும் நன்கு அறிந்து அதில் ஈடுபட்டுப் பங்கெடுக்கத் தூண்டுகிறார். இதற்குக் கீழுள்ள உரையை அல்லது அதுபோன்ற சொற்களைப் பயன்படுத்தலாம்.
சிற்றுரைக்குப்பின் குரு கீழுள்ள மன்றாட்டுகளில் ஒன்றைக் கைகளைக் குவித்துச் சொலகிறார்:செபிப்போமாக (மன்றாடுவோமாக)
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா,
இந்தக் குருத்தோலைகளை உமது ஆசியால் புனிதப்படுத்தியருளும்.
கிறிஸ்து அரசரை அக்களிப்புடன் பின்பற்றும் நாங்கள் அவர் வழியாக அவரோடு புதிய எருசலேமுக்கு வந்துசேர்வோமாக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சிசெய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல். ஆமென்.
(அல்லது)
செபிப்போமாக (மன்றாடுவோமாக)
இரக்கமுள்ள இறைவா,
உம்முடைய மக்களாகிய எங்கள் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வளர்த்தருளும். எங்கள் வேண்டுதலைக் கனிவுடன் கேட்டருளும்.
வெற்றி வீரராய்ப் பவனிவரும் கிறிஸ்துவின் திருமுன் நாங்கள் குருத்தோலைகளை ஏந்தி வருகின்றோம்.
கிறிஸ்துவில் ஒன்றித்து வாழ்ந்து நாங்கள் ஒவ்வொருவரும் நற்செயல்களால் அவரை மகிமைப்படுத்த அருள்புரிவீராக.
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல். ஆமென்.
குரு மௌனமாக குருத்தோலைகள்மீது தீர்த்தம் தெளிக்கிறார். ஆண்டவரின் வருகையைப்பற்றி நான்கு நற்செய்தியாளர் எழுதியவற்றிலிருந்து நற்செய்தி வாசிக்கப்படும். அதை வழக்கம்போலத் திருத்தொண்டரோ, அவர் இல்லையெனில் குருவோ வாசிப்பார்.(முதல் ஆண்டு: 2011,2014,2017)
தூய மத்தேயு எழுதிய புனித நற்செய்தியிலிருந்து வாசகம் 21:1-11
இயேசு தம் சீடரோடு எருசலேமை நெருங்கிச் சென்று ஒலிவ மலை அருகிலிருந்த பெத்பகு என்னும் ஊரை அடைந்தபோது இரு சீடர்களை அனுப்பி, "நீங்கள் உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் செல்லுங்கள். சென்ற உடனே அங்கே கட்டிவைக்கப்பட்டிருக்கிற ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம் ஏதேனும் சொன்னால், "இவை ஆண்டவருக்குத் தேவை" எனச் சொல்லுங்கள். உடனே அவர் அவற்றை அனுப்பிவிடுவார்" என்றார்."மகள் சீயோனிடம் சொல்லுங்கள்; இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார்; அவர் எளிமையுள்ளவர்; கழுதையின் மேல் ஏறி வருகிறார்; கழுதைக்குட்டியாகிய மறியின் மேல் அமர்ந்து வருகிறார்" என்று இறைவாக்கினர் உரைத்தது நிறைவேற இவ்வாறு நிகழ்ந்தது. சீடர்கள் போய் இயேசு தங்களுக்குப் பணித்த படியே செய்தார்கள்.அவர்கள் கழுதையையும் குட்டியையும் ஓட்டிக் கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அமரச் செய்தார்கள். பெருந்திரளான மக்கள் தங்கள் மேல் உடைகளை வழியில் விரித்தார்கள். வேறு சிலர் மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினர். அவருக்கு முன்னேயும் பின்னேயும் சென்ற கூட்டத்தினர், "தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!" என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். அவர் எருசலேமுக்குள் சென்றபோது நகரம் முழுவதும் பரபரப்படைய, "இவர் யார்?" என்னும் கேள்வி எழுந்தது. அதற்குக் கூட்டத்தினர், "இவர் இறைவாக்கினர் இயேசு; கலிலேயாவிலுள்ள நாசரேத்தைச் சேர்ந்தவர்" என்று பதிலளித்தனர்.
இது ஆண்டவரின் அருள்வாக்கு.
இரண்டாம் ஆண்டு: (2012,2015,2018)
தூய மாற்கு எழுதிய புனித நற்செய்தியிலிருந்து வாசகம் 11:1-10
இயேசு தம் சீடரோடு ஒலிவமலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்து, எருசலேமை நெருங்கியபொழுது இரு சீடர்களை அனுப்பி, "உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்தவுடன், இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம், "ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?" என்று கேட்டால், "இது ஆண்டவருக்குத் தேவை, இதை அவர் உடனே திருப்பி இங்கு அனுப்பிவிடுவார்" எனச் சொல்லுங்கள்" என்றார். அவர்கள் சென்று ஒரு வீட்டுவாயிலுக்கு வெளியே, தெருவில் ஒரு கழுதைக் குட்டியைக் கட்டி வைத்திருப்பதைக் கண்டு அதை அவிழ்த்துக் கொண்டுவந்தார்கள். அங்கே நின்றுகொண்டிருந்த சிலர் அவர்களிடம், "என்ன செய்கிறீர்கள்? கழுதைக் குட்டியையா அவிழ்க்கிறீர்கள்?" என்று கேட்டனர். அவர்கள் இயேசு தங்களுக்குக் கூறியபடியே சொல்ல, அங்கு நின்றவர்களும் போகவிட்டனர். பிறகு அக்கழுதைக்குட்டியை இயேசுவிடம் கொண்டு வந்து, அதன் மேல் தங்கள் மேலுடைகளைப் போட, அவர் அதன் மீது அமர்ந்தார். பலர் தங்கள் மேலுடைகளையும், வேறு சிலர் வயல் வெளிகளில் வெட்டிய இலைதழைகளையும் வழியில் பரப்பினர். முன்னேயும் பின்னேயும் சென்றவர்கள், "ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!" என்று ஆர்ப்பரித்தனர்.
இது ஆண்டவரின் அருள்வாக்கு.
மூன்றாம் ஆண்டு: (2013,2016,2019)
தூய லூக்கா எழுதிய புனித நற்செய்தியிலிருந்து வாசகம் 19:29-40
ஒலிவம் என வழங்கப்படும் மலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்ற ஊர்களை அவர் நெருங்கி வந்தபோது இரு சீடர்களை அனுப்பினார். அப்போது அவர் அவர்களிடம், "எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்ததும் இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக் குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம், "ஏன் அவிழ்க்கிறீர்கள்?" என்று கேட்டால், "இது ஆண்டவருக்குத் தேவை" எனச் சொல்லுங்கள்" என்றார். அனுப்பப்பட்டவர்கள் சென்று அவர் தங்களுக்குச் சொன்னவாறே இருக்கக் கண்டார்கள். அவர்கள் அதை அவிழ்த்துக் கொண்டிருந்தபோது கழுதையின் உரிமையாளர்கள், "கழுதையை ஏன் அவிழ்க்கிறீர்கள்?" என்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள், "இது ஆண்டவருக்குத் தேவை" என்றார்கள்; பின்பு அதை இயேசுவிடம் ஓட்டி வந்தார்கள்; அக்கழுதையின்மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அதன்மேல் ஏற்றி வைத்தார்கள். அவர் போய்க் கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் மேலுடைகளை வழியில் விரித்துக் கொண்டே சென்றார்கள். இயேசு ஒலிவ மலைச்சரிவை நெருங்கினார். அப்போது திரண்டிருந்த சீடர் அனைவரும் தாங்கள் கண்ட எல்லா வல்ல செயல்களுக்காகவும் உரத்தக் குரலில் மகிழ்ச்சியோடு கடவுளைப் புகழத் தொடங்கினர்; "ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப் பெறுக! விண்ணகத்தில் அமைதியும் மாட்சியும் உண்டாகுக!" என்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த பரிசேயர்களுள் சிலர் அவரை நோக்கி, "போதகரே, உம் சீடர்களைக் கடிந்து கொள்ளும்" என்றனர். அதற்கு அவர் மறுமொழியாக, "இவர்கள் பேசாதிருந்தால் கற்களே கத்தும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.
இது ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்குப்பின் சுருக்கமாக மறையுரை ஆற்றலாம். பவனி தொடங்குமுன் குரு அல்லது பணியாளர் கீழுள்ளவாறு அல்லது அதுபோன்று அழைப்பு விடுப்பார்:அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே! இயேசுவைப் புகழ்ந்து ஆர்ப்பரித்த மக்கள் திரளைப் பின்பற்றி, நாமும் சமாதானமாகப் புறப்பட்டுப் பவனியாகச் செல்வோம்.
திருப்பலி நடக்கவிருக்கும் கோயிலுக்குப் பவனி புறப்படுகிறது. தூபம் பயன்படுத்தினால் புகையும் கலத்துடன் தூபப் பணியாளர் முன்செல்ல, எரியும் திரிகளைத் தாங்கும் இருபணியாளர்களிடையே அலங்கரிக்கப்பட்ட சிலுவை பிடித்திருப்பவரும், அவர்களுக்குப்பின் குருவும் மற்றப் பணியாளரும் செல்வர். இறுதியாக இறைமக்;கள் குருத்தோலை பிடித்துக் கொண்டு அணிவகுத்துச் செல்வர்.
பவனியின்போது, பாடகர் குழுவும் மக்களும் கீழ்க்கண்ட அல்லது வேறு பொருத்தமான பாடல்களைப் பாடுவர்.
ஆயிரக்கணக்கான வருடங்களாய் -எம்
ஆண்டவரே உம்மை எதிர் பார்த்தோம்
இஸ்ராயேல் ஜனங்களை ஆளவரும் - எம் இயேசு
இரட்சகரே எழுந்தருளும்.
ஓசானா தாவீதின் புதல்வா
ஓசானா ஓசானா ஓசானா
மாமரி வயிற்றினில் பிறந்தவரே - மா
முனிசூசைக் கரங்களில் வளர்ந்தவரே
மானிடர் குலத்தினில் உதித்தவரே - எம்
மன்னவரே எழுந்தருள்வீரே - ஓசானா....
அற்புத யோர்தானில் தீட்சை பெற்றீர் - மா
அருள் தாபோதனரால் புகழப்பட்டீர்
ஆகாயங்களை நீர் திறக்க விட்டீர் - உம்
ஆதி பிதாவிடம் பதவி பெற்றீர் - ஓசானா....
தாவீது அரசரின் புத்திரரே - ஓர்
தெய்வீக முடியோடு வந்தவரே
தருமரெனப் புகழ் அடைந்தவரே - எம்
தேவனே தேவனே வருவீரே - ஓசானா....
கானான் மணத்தினில் அழைக்கப்பட்டீர் - நீர்
கலங்கினவர்கள் பேரில் இரக்கப்பட்டீர்
கொண்டுவரச் சொன்னீர் சுத்த தண்ணீர் - அதை
சுத்த ரசமாக்கிப் பெயரடைந்தீர் - ஓசானா....
புவியினில் புரிந்தீர் புண்ணியங்கள் - எம்
புத்தியில் புகுத்தினீர் அருள் மொழிகள்
பக்தியில் சேர்த்தீர் பல சீடர்கள் - மா
பவனியோடு வாரீர் படைத்தவரே - ஓசானா....
குருடர்கள் அனேகர் ஒளி பெற்றார் - முடம்
கூன் செவிடர் பலர் சுகம் பெற்றார்
குஷ்டர் அதிகமே நலம் பெற்றார் - எம்
கடவுளே எம்மோடே வாரும் நீரே - ஓசானா....
மரித்தவர்கள் பலர் உயிர் பெற்றார் - ஒரு
மனமுடைந்த விதவை மகன் அடைந்தார்
மரிமதலேன் சகோதரன் பெற்றொர் - எம்
மனுக்குலம் இரட்சிக்க வந்தவரே - ஓசானா....
யூதேயா நாட்டினில் புகழப் பெற்றீர் - எம்
யூதர் ராஜனென்று முடிபெற்றீர்
யெருசலேம் நகர் தனில் களிப்புற்றீர் - எம்
இயேசு அரசனே அரசாள்வீர் - ஓசானா....
பாவிகளைகத் தேடி வந்தவரே - எம்
பாவங்கள் போக்க வல்லவரே
பாடுகள் பட்டு உழைத்தவரே - எம்
பராபரனே உட்செல்வீரே - ஓசானா....
கோவேறு குட்டியை ஆசனமாய் - எம்
குழந்தைகள் துணியே பஞ்சணையாய்
கிளைகளே உமது ஜெயக் கொடியாய் - எம்
கர்த்தரே சீக்கிரம் நடப்பீரே - ஓசானா....
உலகமே உமது அரிய வேலை - எம்
உயிருமே உமது மா புதுமை
உலகத்தை ஆண்டு வருபவரே - எம்
உலகரசே உள்ளே புகுவீரே - ஓசானா....
பல்லவி 1:
எபிரேயர்களின் சிறுவர் குழாம்
ஒலிவக் கிளைகளைப் பிடித்தவராய்
உன்னதங்களிலே ஓசான்னா
என்று முழங்கி ஆர்ப்பரித்து
ஆண்டவரை எதிர்கொண்டனரே.
\
மண்ணுலகும் அதில் நிறைந்த யாவும் ஆண்டவருடையன,
பூவுலகும் அதில்வாழும் குடிகள் யாவரும் அவர்தம் உடைமையே,
ஏனென்றால், கடல்களின்மீது பூவுலகை நிலைநிறுத்தியவர் அவரே, ஆறுகளின்மீது அதை நிலைநாட்டியவர் அவரே.
ஆண்டவரது மலைமீது ஏறிச்செல்லத் தகுந்தவன் யார்?
அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவன் யார்?
மாசற்ற செயலினன், தூய உள்ளத்தினன்.
பயனற்றதில் தன் மனத்தைச் செலுத்தாதவன்,தன் அயலானுக்கு எதிராகவஞ்சகமாய் ஆணையிடாதவன்.
இவனே ஆண்டவரிடம் ஆசிபெறுவான்,
இவனே தன்னைக் காக்கும் ஆண்டவரிடம் மீட்பு அடைவான்.
இறைவனைத் தேடும் மக்களின் இதுவே,
யாக்கோபின் கடவுளது திருமுகம் நாடுவோர் இவர்களே.
வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்,
பழங்காலக் கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்.
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ
வீரமும் வலிமையும் கொண்ட ஆண்டவரே இவர்.போரில் வல்லவரான கொண்ட ஆண்டவரே இவர்.
வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்.
பழங்காலக் கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்.
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ
சேனைகளின் ஆண்டவரே இவர். மாட்சிமிகு மன்னர் இவரே."
பல்லவி 2
எபிரேயர்களின் சிறுவர் குழாம்
வழியில் ஆடைகள் விரித்தவராய்
"தாவீதின் மகனுக்கு ஓசான்னா!
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி நிரம்பப் பெற்றவரே"
என்று முழங்கி ஆர்ப்பரித்தார்.
(தேவைக்கேற்ப இப்பல்லவியை 46ஆம் சங்கீதத்தின் அடிகளுக்கு இடையே பல்லவியாகப் பாடலாம்.)
சங்கீதம் 46
மக்களினத்தாரே, நீங்கள் யாவரும் கைகொட்டுங்கள்:
அக்களிப்போடு இறைவனுக்குப் புகழ்பாடி ஆர்ப்பரியுங்கள்.
ஏனெனில் அண்டவர் உன்னதமானவர், அஞ்சுதற்குரியவர்,
உலகுக்கெல்லாம் பேரரசர்.
மக்களை நமக்குக் கீழ்ப்படுத்தினார்.
நாடுகளை நமக்கு அடிபணிய வைத்தார்.
நமக்கு உரிமைப் பொருளாக நாட்டைத் தேடித் தந்தார்.
தாம் அன்புசெய்யும் யாக்கோபுக்கு அது பெருமை தருவதாகும்.
மக்கள் ஆர்ப்பரிக்க இறைவன் அரியணை ஏறுகிறார்.
எக்காளம் முழங்க, ஆண்டவர் எழுந்தருளுகிறார்.
பாடுங்கள் நம் இறைவனுக்குப் புகழ் பாடுங்கள்
பாடுங்கள் நம் வேந்தனுக்குப் புகழ் பாடுங்கள்.
ஏனெனில் கடவுள் உலகுக்கெல்லாம் அரசர்.
அவருக்கு இன்னிசை எழுப்புங்கள்.
நாடுகள் அனைத்தின்மீதும் இறைவன் ஆட்சிபுரிகின்றார்.
தம் புனித அரியணைமீது இறைவன் வீற்றிருக்கின்றார்.
ஆபிரகாமின் இறைமக்களோடு புறவினத்தாரின் தலைவர்கள் கூடியிருக்கின்றனர்
ஏனெனில் உலகின் தலைவர்களெல்லாம் இறைவகுக்குரியவர்கள்.
அவரே மிக உன்னதமானவர்.
கிறிஸ்து அரசருக்குப் பாடல்
கிறிஸ்து அரசே,இரட்சகரே, மகிமை, வணக்கம், புகழ் உமக்கே:
எழிலார் சிறுவர் திரள் உமக்கு அன்புடன் பாடினர்: "ஓசான்னா!"
எல். கிறிஸ்து அரசே.....
பாடகர்: இஸ்ராயேலின் அரசர் நீர், தாவிதின் புகழ்சேர் புதல்வர் நீர்,
ஆசிபெற்ற அரசே நீர் ஆண்டவர் பெயரால் வருகின்றீர்.
எல். கிறிஸ்து அரசே,....
பாடகர்: வானோர் அணிகள் அத்தனையும் உன்னதங்களிலே உமைப் புகழ்
அழிவுறும் மனிதரும் படைப்புகளும் யாவும் ஒன்றாய்ப் புகழ்ந்திடுமே.
எல். கிறிஸ்து அரசே,....
பாடகர்: எபிரேயர்களின் மக்கள் திரள் குருத்துகள் ஏந்தி எதிர்கொண்டார்;
செபமும் கீதமும் காணிக்கையும் கொண்டு யாம் இதோ வருகின்றோம்.
எல். கிறிஸ்து அரசே.....
பாடகர்: பாடுகள் படுமுன் உமக்கவர் தம் வாழ்த்துக் கடனைச் செலுத்தினரே:
ஆட்சி செய்திடும் உமக்கன்றே யாம் இதோ இன்னிசை எழுப்புகின்றோம்.
எல். கிறிஸ்து அரசே.....
பாடகர்: அவர்தம் பக்தியை ஏற்றீரே, நலமார் அரசே, அருள் அரசே,
நல்லன எல்லாம் ஏற்கும் நீர் எங்கள் பக்தியும் ஏற்பீரே.
எல். கிறிஸ்து அரசே.....பவனி கொயிலுக்குள் நுழைகையில் கீழுள்ள பதிலுரைப் பாடல் அல்லது இக்கருத்துள்ள வேறு பாடல் பாடப்படும்.
ஆண்டவர் புனித நகரத்தில் நுழைகையில், எபிரேயச் சிறுவர் குழாம்
உயிர்த்தெழுதலை அறிவித்தவராய். குருத்து மடல்களை ஏந்திநின்று
"உன்னதங்களிலே ஓசான்னா!" என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார்.
எருசலேம் நகருக்கு இயேசுபிரான் வருவதைக் கேட்ட மக்களெலாம்
அவரை எதிர்கொண்டழைத்தனரே. குருத்து மடல்களை ஏந்திநின்று
"உன்னதங்களிலே ஓசான்னா!" என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார்.
குரு பீடத்தை அடைந்ததும் அதற்கு வணக்கம் செலுத்துவார்; வசதிபோலத் தூபம் காட்டலாம். பின்னர் தம் இருக்கைக்குச் சென்று ("காப்பா" மேல்போர்வையை அகற்றித் திருப்பலி உடை அணிந்து), திருப்பலியின் தொடக்கச் சடங்கை விட்டுவிட்டு, பவனியின் முடிவுரையாகத் திருப்பலியின் சபை மன்றாட்டைச் சொல்வார். வழக்கம்போலத் திருப்பலி தொடர்ந்து நடைபெறும்.சபை மன்றாட்டு
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உம்முடைய திருவுளத்திற்குப் பணிந்து எங்கள் மீட்பர் மனிதராகி, சிலுவைச் சாவுமட்டும் தம்மையே தாழ்த்தினார். நாங்கள் அவர்தம் பாடுகளின் பாதையைப் ப்pன்பற்றி அவரது உயிர்ப்பின் மகிமையிலும் பங்குபெறத் தயவாய் அருள்வீராக.
உம்மோடு பரிசுத்த ஆவியின் ஐக்கியத்தில் ஒரே இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
முதல் வாசகம் (எசாயா 50, 4-7)
அநீதிகளும், அராஜகங்களும், சுயநலமும் நிறைந்த உலகத்தினை எதிர்த்து போராடுகிறபோது, பல துன்பங்களும் அவமானங்களும், ஏற்படும். பலர் இகழ்வார்கள், ஆனால் தாழ்ச்சியோடும், துணிவோடும் அவைகளை எதிர்த்துப் போராட ஆண்டவர் இயேசு நமக்கு துணையாயிருக்கிறார். அவரை நாடுங்கள் அவர் நம்மை எல்லாச் சூழ்நிலையிலும் வழிநடத்துவார் என்று எசாயாவின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளுக்குச் செவிமடுப்போம்.
இறைவாக்கினர் எசாயா திருநூலிருந்து வாசகம்:
நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின்; நாவை எனக்கு அளித்துள்ளார்; காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்; கற்போர் கேட்பது போல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார். ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்; நான் கிளர்ந்தெழவில்லை; விலகிச் செல்லவுமில்லை. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோhக்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை.
ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக் கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்றறிவேன்.
இது ஆண்டவரின் அருள்வாக்கு - இறைவா உமக்கு நன்றி
தியானப்பாடல்: திருப்பாடல்: 22:8-9, 17-18, 19-20, 23-24
பல்லவி: என் இறைவா என் இறைவா ஏன் என்னை கை நெகிழ்தீர்
என்னைப் பார்ப்போர் எல்லோரும் என்னை ஏளனம் செய்கின்றனர்
உதட்டைப் பிதுக்கித் தலையை அசைக்கின்றனர்
ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்தானே அவர் மீட்கட்டும்
அவருக்கு இவன் மீது பிரியமிருந்தால் இவனை விடுவிக்கட்டும் என்றார்கள்
ஏனெனில் பல நாய்கள் என்னை சூழ்துகொண்டன
பொலலாதவர்கள் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது
என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள்
என் எலும்புகளை யெல்லாம் நான் எண்ணிவிட முடியும்
அவர்களோ என்னைப பார்கின்றார்கள் பார்த்து அக்களிக்கின்றார்கள்
என் ஆடைகளைகத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள்
என் உடைமீது சீட்டுப்போடுகிறார்கள்
ஆனால் நீரோ ஆண்டவரே என்னை விட்டுத் தொலைவில் போய் விடாதேயும்
எனக்குத் துணையான நீர் எனக்கு உதவி புரிய விரைந்து வாரும்.
இரண்டாம் வாசகம் (பிலி 2, 6-11)
இயேசு இறைமகன் எல்லாவற்றின் மேலும் அதிகாரமும், வல்லமையும் இருந்தாலும் அன்புகருதி, அமைதி கருதி, சமாதானம் கருதி தன்னையே வெறுமையாக்கினார். தாழ்த்திக்கொண்டார். தாழ்ச்சி என்பது வீழ்ச்சி அல்ல. ஆனால் அவரை அனைத்திற்கும் மேலாக உயர்த்தினார். நாமும் நமக்கு அறிவுத்திறமை, ஆள்திறமை, பணம் பதவி இருந்தாலும் பணிவோடு பிறர் வாழ்வு முன்னேற முயற்சி செய்யும்போது கடவுள் நம்மை மேன்மைப்படுத்துவார், என்று கூறும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
அப்போஸ்தலரான தூய பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்:
கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக "இயேசு கிறிஸ்து ஆண்டவர்" என எல்லா நாவுமே அறிக்கையிடும்.
இது ஆண்டவரின் அருள்வாக்கு - இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வசனம்: பிலிப் 2:8-9
கிறிஸ்து தம்மைத் தாழ்த்திச் சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிபவரானார். ஆதலால் தான் கடவுள் அவரை எல்லாருக்கும் மேலாய் உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.
ஆண்டவருடைய திருப்பாடுகளில் வரலாறு. எரியும் திரிகளும் தூபமும் இன்றி, வாழ்த்துரை கூறாமலும் திருநூலில் சிலுவை அடையாளம் வரையாமலும் வாசிக்கப்படும். திருத்தொண்டர் அல்லது அவரில்லையெனில், குரு அதை வாசிப்பார். வாசகர்களும் அதை வாங்கிக்கலாம். ஆனால் கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கூடியமட்டும் குருவே வாசிக்க வேண்டும்.
திருப்பாடுகளின் வரலாற்றைப் பாடுமுன் திருத்தொண்டர்கள் மட்டும் நற்செய்திக்குமுன் நடப்பது போல குருவிடம் ஆசி பெறுவார்கள்.முதல் ஆண்டு: (2011, 2014, 2017) மத்தேயு 26:14 - 27:66
இரண்டாம் ஆண்டு: (2012, 2015, 2018)மாற்கு 14:1 - 15:47
மூன்றாம் ஆண்டு: (2013, 2016,2019) லூக்கா 22:14 - 23:56
இறைமக்களின் வேண்டல்
1. எந்நாளும் எங்களை வழிநடத்தும் அன்பு தெய்வமே! திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் மற்றும் துறவறத்தார் அனைவரையும் ஆசீர்வதியும், அவர்கள் ஆற்றும் பணி வாழ்வில் சந்திக்கும் துன்ப துயரங்கள் மற்றும் இடையூறுகள் போன்றவைகளில் உடன் இருந்து அவர்களை காத்து வழிநடத்தியருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. பாராளும் பரமனே எம் இறைவா! நாட்டிற்காகவும் நாட்டை ஆளுகின்ற தலைவர்களுக்காகவும் மன்றாடுகின்றோம். அவர்களை நிறைவாய் ஆசீர்வதியும். அவர்கள் தன்னலத்தோடு வாழாமல், தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் தேவைகளை நிறைவேற்றவும், நாடு வளமும், நலமும் பெற அவர்கள் உழைக்கவும், அவர்களுக்கு நல்மனதை தந்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. துன்பமில்லாமல் இன்பம் இல்லை சிலுவையில்லாமல் சிம்மாசனம் இல்லை என்பதை உணர்த்திய எம் இயேசுவே! எங்களுக்கு வரும் துன்பத் துயரங்களை தாங்கிக்கொள்ளவும், பிறர் வாழ்வில் உள்ள சுமைகளை பகிர்ந்து, கொண்டு அவர்களுக்கு உதவி செய்யும் நல் மனதைத் தந்தருள இறைவா உம்மை வேண்டுகிறோம்.
4. இரக்கமுள்ள இறைவா! புனித வாரத்தில் நுழைகின்ற நாங்கள், உமது பாடுகளையும், இறப்பையும் சிந்தித்த எங்கள் வாழ்க்கையில் மாற்றம் கண்டு, எங்களுடைய பாவ வாழ்வைக் களையவும், உமது அருளின் துணையால் புதிய சமுதாயத்தை உருவாக்கி உமக்கேற்றவர்களாய் வாழவும் வேண்டிய வரம் அருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.