பாஸ்காத் திருவிழிப்பு சடங்குகள்

பாஸ்காத் திருவிழிப்புக்குத் தேவையான பொருட்கள் 
1. அனைவரும் மெழுகுதிரி வைத்திருத்தல் வேண்டும்
2. கோவில் முற்றத்தில்
எரியும் நெருப்பு, பாஸ்காத் திரி, பவனிக்குச் சிலுவை, இரண்டு திரிகள், தூபக்கால், ஐந்து சாம்பிராணி மணிகள், எழுதுகோல், திருப்பலி புத்தகம் டார்ச் லைட், தீப்பெட்டி
3. பீடம்: அலங்கரிக்கபட்டு திரிகள் ஏற்றப்படாமல் இருக்கும்
4. பீடம் அருகில்: பாஸ்காத் திரி வைக்கும் தாங்கி, பெரிய பாத்திரம் நிறைய தண்ணீர்
5. சிறிய மேசையில்: தீர்த்தச் செம்பு, கைகழுவத் தண்ணீர், பாத்திரம், சோப்பு, துண்டு, திரு எண்ணெய்கள் (நுளீ, றீளீ) திரு முழுக்குத் திருச்சடங்கு நூல், (ஞானஸ்நானம் இருந்தால்) திருப்பலிக்கு தேவையான பொருட்கள். 

முன்னுரை:  
சாவை வீழ்த்தி வெற்றி கிடைக்க சரித்திர நாயகன் இயேசு, உயிர்க்கப் போகும் உன்னத இரவு இன்று நாம் அனைவரும் கூடியிருக்கும் ஆண்டவரின் பாஸ்கா திருவிழிப்பு, பாஸ்கா என்றாலே கடந்து போதல் என்று பொருள். சாவைக்கடந்து உயிர்ப்பை பெற்ற இயேசுவைப் போன்று, செங்கடலை கடந்து, அடிமைவாழ்வை ஒழித்து வாக்களிக்கப்பட்ட வளமான கானான் நாட்டிற்கு இஸ்ராயேல் மக்கள் கடந்து சென்றது போன்று நாமும் நம்முடைய பாவ இயல்புகளை களைந்து, பழைய வாழ்வை மறந்து இயேசுவின் அன்பைப் பெற்ற புதியமக்களாக, உயிர்ப்பு பெற்று வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுகின்றது. பாவத்திலிருந்து புனித வாழ்விற்கு அடிமைத்தனத்திலிருந்து இயேசுவின் ஒளியிலும் வாழ்வதற்கு தேவையான வரங்கள் வேண்டி இன்றைய திருவிழிப்பு சடங்கிலே பங்கேற்போம். 

இன்றைய வழிபாடானது நான்கு பிரிவுகளை உடையதாக அமைந்துள்ளது

1. ஒளி வழிபாடு
2. இறைவார்த்தை வழிபாடு
3. திருமுழுக்கு வழிபாடு  
4. நற்கருணை வழிபாடு 

எனவே, இத்திருவழிபாட்டில் பக்தியோடு பங்கேற்போம்.

1. ஒளி வழிபாடு
1. புதுத்தீயை மந்திரித்தல்
நெருப்பு பல வகைகளில் மனிதனுக்கு பயன்படுகிறது. நெருப்பு தூய்மை படுத்தும் கருவியாகவும், ஒளியை கொடுக்கக் கூடியதாகவும் விளங்குகிறது. திருவழிபாட்டில் நெருப்பு தூபத்திற்கு பயன்படுகிறது. எனவே இந்த நெருப்பை இப்போது குருவானவர் புனிதப்படுத்துகிறார். 

2. பாஸ்கா திரியின் விளக்கம்
பாஸ்கா திரி கிறிஸ்துவை குறிக்கிறது. அதில் வரையும் சிலுவை அடையாளம், சிலுவை மரத்தின் வழியாகத்தான் உயிர்ப்பின் மகிமை  உண்டு என்பதைக் காட்டுகிறது. கிறிஸ்து காலங்கள் யாவற்றையும் கடந்து நிற்கிறார் என்பதைக் குறிக்கின்ற வகையில் குருவானவர் பாஸ்கா திரியில், அகரமும், னகரமும் என்ற எழுத்துக்களையும், சிலுவையின் நான்கு கோணங்களில், நிகழும் ஆண்டின் எண்களையும் எழுதுகின்றார். பிறகு ஐந்து சாம்பிராணி மணிகளை சிலுவையில் பதிப்பார். அது இயேசுவின் ஐந்து காயங்களைக் குறிக்கிறது. 

3. பாஸ்கா திரி ஒளியேற்றுதல்
பாவம் என்னும் இருள் நிறைந்த வாழ்வை களைந்துவிட்டு புது வாழ்வு என்னும் ஒளியின் படைக்கலன்களை அணிந்து கொள்ள வேண்டும் என்பதன் அடையாளமாக புனிதப்படுத்தப்பட்ட திரியிலிருந்து பாஸ்கா திரி பற்ற வைக்கப்படுகிறது. உயிர்த்த இயேசு நம்முடைய மத்தியில் இருக்கிறார் என்பதை இது காட்டுகிறது. கிறிஸ்து என்ற திரியோடு நாமும் சேர்ந்து தீபமாக எரிவோம். பிறருக்கு ஒளி கொடுப்போம், வழிகாட்டுவோம். 

4. பாஸ்கா பவனி
அன்று இஸ்ரயேல் மக்களை இறைவன் நெருப்புத்தூண் வடிவில் மோயீசன் தலைமையில் வழிநடத்த , செங்கடலை கடந்து வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு சென்றனர். பாஸ்காவின் உண்மையை, அதாவது, பாவத்திலிருந்து நாம் புதுவாழ்வு பெறவும், கிறிஸ்துவின் ஒளியை எல்லா மக்களுக்கும் காட்டி, அவர்களையும், ஒளியாகிய இறைவனிடம் கூட்டி வரவும் இந்த பவனி நமக்கு நினைவுபடுத்துகிறது. 

(ஒவ்வொரு முறையும் குருவானவர் கிறிஸ்துவின் ஒளி இதோ என்று பாடும்போது இறைவா உமக்கு நன்றி என்று அனைவரும் சேர்ந்து பதில் கூறவேண்டும். கிறிஸ்துவின் உயிர்ப்புப் புத்தொளியில் நாமும் பங்கு பெறுவதைக் குறிக்கும் வண்ணம் இரண்டாம் முறையாக நாம் இறைவா உமக்கு நன்றி என்ற பதில் பாடிய பிறகு நம்மிடம் உள்ள மெழுகு திரிகளை பாஸ்கா திரியிருந்து பற்ற வைத்துக் கொள்வோம். மூன்றாம் முறையாக பாடிய பிறகு ஆலயத்தின் அனைத்து விளக்குகளும் ஏற்றப்படும்).  (இது முடிந்தவுடன்)

5. பாஸ்கா புகழுரை
மெசியாவாகிய இயேசு ஒளியானவர். இந்த ஒளி திருச்சபையில் இன்று மீட்பின் கருவியாக செயலாற்றுகின்றது. இந்த மீட்பின் வரலாறு இப்போது புகழுரையாக பாடப்படுகிறது. ஆகவே அனைவரும் கைகளில் எரியும் மெழுகுதிரிகளை பிடித்துக்கொண்டு நின்ற வண்ணம் பக்தியோடு மீட்பின் வரலாற்று உண்மைகளை நமது உள்ளத்தில் ஏற்றுக்கொள்வோம்.

2. இறைவார்த்தை வழிபாடு
முதல் வாசக முன்னுரை (தொநூ 1: 1-2: 2)
இறைவன் அனைத்துலகிற்கும் தலைமை வகிப்பவராக அனைத்தையும் ஆளுபவராக இருக்கிறார். எனவேதான் அவர் அனைத்தையும் படைத்து இருளை இல்லாமல் செய்து இறுதியில் மனிதனை தம் சாயலிலே படைத்து அவனை படைப்பின் சிகரமாக்கினார், அவனோடு உறவுகொண்டு வழிநடத்தினார் எனக் கூறும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசகம் (விப 14:  15 -15:  1)
இறைவன் தொடக்கம் முதல் இஸ்ராயேல் மக்களை பல்வேறு துன்பங்களிலிருந்து காத்தார், மோயீசன் தலைமையில் இஸ்ராயேல் மக்கள் செங்கடலைக் கடந்து சென்ற அற்புத நிகழ்வுகளையும், எகிப்தியரை முறியடித்து மக்களை காப்பாற்றினார் என்பதையும் வாசிக்க கேட்போம். 

மூன்றாம் வாசகம் (எசே 36:  6-28)
இறைவனின் அன்பையும் அரவணைப்பையும் உணராததால் இஸ்ராயேல் மக்கள் பாபிலோனுக்கு நாடு கடத்தப்படுகிறார்கள். பாவத்தால் இறுகிப்போன மனித உள்ளங்கள் திரும்பி ஆண்டவருக்குள் வருகிறபோது, தூய நீரினால் தூய்மையாக்கி தன்னோடு சேர்த்துக்கொள்வார் என்று கூறும் இவ்Vசகத்தைக் கேட்போம்.

(மூன்றாம் வாசகம் முடிந்தவுடன் உன்னதங்கிளிலே பாடப்படும் மணி அடிக்கப்படும், பீடத்தின் திரிகள் பற்றவைக்கப்படும்). 

திருமுகம் (உரோ 6: 3-11)
இயேசு கிறிஸ்துவோடு துன்பப்படுகிறபோது இறக்கிறபோது திருமுழுக்கினால் கிறிஸ்துவோடு உயிர்த்தெழுவோம், எனவே பாவ வாழ்வைக் கடந்து தூய வழிகளில் வாழுங்கள் எனக் கூறும் இவ்வாசகத்தைக் கேட்போம். 

நற்செய்தி வாசகம் (லூக் 24:  1-12) 
3. திருமுழுக்கு வழிபாடு: திருமுழுக்கு வழிபாடு கிறிஸ்தவர்கள் எனப்படுகிற நாம் அனைவரும் இயேசுவின் இறப்பிலும், உயிர்ப்பிலும் பங்கேற்கிறோம் எனபதைக் குறித்துகாட்டுகிறது. கிறிஸ்துவின் உயிர்ப்பு நமது விசுவாசத்தின் ஆணிவேர். ஆகவே கிறிஸ்து இயேசுவின் உயிர்ப்பில் விசுவாசம் கொண்டு, நமது வாழ்வை தூய்மைப்படுத்திக் கொள்ள இந்த வழிபாட்டில் பங்கெடுப்போம்.  
இப்போது குருவானவர் நீரின் மீது இறைவன் இறங்கிவர நம் அனைவரையும் மன்றாட அழைக்கிறார். தொடர்ந்து புனிதர்கள் பிரார்த்தனை பாடப்படுகிறது. அனைத்துப் புனிதர்களின் பரிந்துரை வழியாக இறைவனின் அருள் இந்த திருமுழுக்கு தொட்டியில் உள்ள நீரில் இறங்க அனைவரும் எழுந்து நின்று மன்றாடுவோம். 

புனிதர்களின் பிராத்தனை

திருமுழுக்குத் தண்ணீர் மந்திரிக்கப்படுகிறது:
தண்ணீர் கடவுளுடைய கொடைகளில் முதன்மையானது. உலகம் உண்டாவதற்கு முன் தண்ணீர்தான் எங்கும் நிறைந்திருந்தது. இந்த தண்ணீரின் தன்மைகள், பலன்கள் கணக்கற்றவை. யோர்தான் ஆற்றிலே இயேசுவை ஆவியால் அபிஷேகம் செய்வதற்கு தண்ணீர் தேவைப்பட்டது. இன்றும் நாம் புனிதமடைவதற்கு புதுப்படைப்பாவதற்கு திருமுழுக்குத் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆகவே இப்போது குருவானவர் இந்த தண்ணீரை ஆசீர்வதித்து புனிதப்படுத்துகிறார்.
(குருவானவர் தண்ணீரிலிருந்து திரியை எடுத்தவுடன்)  அனைவரும் இப்போது நான் சொல்வதை தொடர்ந்து சொல்லுங்கள். 
“நீரூற்றுகளே ஆண்டவரைப் போற்றுங்கள்
என்றென்றும் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்”
திருமுழுக்கு வாக்குறுதிகளை புதுப்பித்தல்:  அனைவரும் மெழுகுதிரிகளை பற்றவைத்துக் கொள்ளுங்கள் இது ஒரு மகத்துவமிக்க நேரம். திருமுழுக்கின்போது நமது ஞானபெற்றோர்கள், நமக்கு பதிலாக வாக்குறுதிகளைக் கொடுத்தார்கள். இப்போது அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நாமே புதுப்பித்து கொள்வோம். 

உயிர்த்த இயேசுவின் மகிழ்ச்சியில் பங்குகொள்ள வேண்டுமானால் இறைவனுக்கு எதிராக உள்ள தீயசக்திகளை விட்டுவிடுகிறேன் என்றும் கடவுளின் வெளிப்பாட்டினையும், வழிகாட்டுதலையும் ஏற்றுக்கொள்கிறேன் (அதாவது ஒருமையில் விட்டு விடுகிறேன் ஏற்றுக்கொள்கிறேன்) என்றும் பதிலளிப்போம்.

(வாக்குறுதிகள் புதுப்பித்தவுடன் தீர்த்தம் தெளிக்கப்படும். (தேவாலய வலபுறம்....) அதன்பின் இறைமக்களின் வேண்டல்கள்)

இறைமக்களின் வேண்டல்கள்:
1.  வாழ்வின் நாயகனே இறைவா! நீர் சாவினை வென்று, பாவத்தை அழித்து, இருளை அகற்றி வெற்றி வீரராய் உயிர்த்தது போல, நாங்களும் எங்கள் வாழ்வில் ஏற்படுகின்ற சோதனைகளில் வெற்றி பெற்று உயிர்ப்பின் மக்களாய் வாழ, உம் வழியில் வெற்றி நடை போடத் தேவையான வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. ஒளியின் பிறப்பிடமே இறைவா! இஸ்ரயேல் மக்கள் வேதனைகளையும், இன்னல்களையும் கடந்து பாஸ்காவிழாவைக் கொண்டாடியதுபோல, உமது உடலாகிய எம் திருச்சபையும் அனைத்து எதிர்ப்புகளையும், முரண்பாடுகளையும் கடந்து இந்த உயிர்ப்பின் விழாவினைக் கொண்டாடிடவும், பாஸ்கா விழாவின் கனிகளை நிரம்பப் பெற்று வாழ்ந்திடவும், வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
3. உலகின் மீட்பரே!  உம்முடைய உயிர்ப்பு விழாவைக் கொண்டாடும் என் பங்கு மக்கள் அனைவருக்காகவும் வேண்டுகிறோம். இறைமக்கள் அனைவரும் உம்முடைய உயிர்ப்பின் ஒளியைப் பெற்று, திருச்சபையின் உண்மையான உறுப்பினர்களாக வாழத் தேவையான அருளைத்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
4. வாழ்வின் வள்ளலே! பல்வேறு பிரச்சனைகளால் அல்லல்படும் எம் நாட்டிற்காக வேண்டுகிறோம். எம் நாட்டு மக்கள் உண்மையான விடுதலை பெறவும், எம் நாட்டுத் தலைவர்கள் சிறப்பாகவும், நேர்மையான முறையில் மக்களை வழிநடத்தவும், வேண்டிய ஞானத்தைத்தர இறைவா உம்மை வேண்டுகிறோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக