திருவருகைக்கால 2ஆம் ஞாயிறு (2ஆம் ஆண்டு) 04-12-2011
முன்னுரை: இயேசு பாலகனின் பிறப்பைக் தூய்மையான உள்ளத்தோடு கொண்டாட, அவரை இதயத்தில் வரவேற்க இவ்வாலயம் வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்தி வரவேற்கின்றோம்.இயேசு கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளே இன்றைய நற்செய்தியின் வழியாகவும், திருமுழுக்கு யோவான் வழியாகவும் இறைவன் நமக்கு விடுக்கின்ற அழைப்பு என்னவென்றால் “மனமாற்றம்”. நாம் அனைவரும் நம்முடைய பழைய பாவ இயல்பை விட்டுவிட்டு இயேசு பாலகனை நமது இதயத்தில் தாங்க வேண்டும். அதற்கான வரம் வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.
முதல் வாசக முன்னுரை: பிறக்கப்போகும் ஆண்டவர் எப்படிப்பட்டவர் என்பதை எசாயா தெளிவாக சுட்டிக்காட்டுகிறார். அவரது வருகைக்கு நம்மையே நாம் எப்படி தயார்செய்வது என்பதையும் தெளிவாக எடுத்து கூறுகின்றார். நம்மிடம் உள்ள கரடுமுரடானவைகள் எவை எவை என்பதை கண்டுணர்ந்து அவற்றை எல்லாம் விளக்கி விட்டு நல்மனம் கொண்டவர்களாக வாழ்வோம் என்ற உயர்ந்த சிந்தனையுடன் வாசகத்தை கேட்போம்.
‘ஆறுதல் கூறுங்கள்: என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்’ என்கிறார் உங்கள் கடவுள்.எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்: அவள் போராட்டம் நின்றுவிட்டது: அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது: அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள்.குரலொளி ஒன்று முழங்குகின்றது: பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்: பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்: மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்: கோணலானது நேராக்கப்படும்: கரடு முரடானவை சமதளமாக்கப்படும்.ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்: மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்: ஆண்டவர்தாமே இதை மொழிந்தார். சீயோனே! நற்செய்தி தருபவளே, உயர்மலை மேல் நின்றுகொள்! எருசலேமே! நற்செய்தி உரைப்பவரே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! 'இதோ உன் கடவுள்' என்று யூதா நகர்களிடம் முழங்கு! இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்: அவர் ஆற்றலோடு ஆட்சி புரிய இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்: அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன. ஆயனைப்போல் தம்மந்தையை அவர் மேய்ப்பார்: ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்: அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்: சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.’
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.- இறைவா உமக்கு நன்றி.
இரண்டாம் வாசக முன்னுரை: நம்மிடையே உள்ள மூடப்பழக்கங்களை கைவிட்டு ஆண்டவரையே, நாம் பற்றிக்கொள்ள வேண்டும் என்றும், அவர் அனைவரையும் அன்பு செய்யும் நல்ல தந்தையாக இருந்து செயல்படுவார் என்றும் கூறும் வாசகத்தை கவனமுடன் கேட்போம்.
அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மறந்துவிடவேண்டாம். ஆண்டவரின் பார்வையில் ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள் போலவும் இருக்கின்றன. ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலந்தாழ்த்துவதாகச் சிலர் கருதுகின்றனர். ஆனால், அவர் அவ்வாறு காலந்தாழ்த்துவதில்லை. மாறாக, உங்களுக்காகப் பொறுமையோடிக்கிறார். யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாறவேண்டுமென விரும்புகிறார். ஆனால் ஆண்டவருடைய நாள் திருடனைப்போல வரும். வானங்கள் பெருமுழக்கத்துடன் மறைந்தொழியும்: பஞ்சபூதங்கள் வெந்திருகிப் போகும். மண்ணுலகமும் அதன் செயல்களும் தீக்கிரையாகும். இவையாவும் அழிந்து போகுமாதலால் நீங்கள் தூய, இறைப்பற்றுள்ள நடத்தையில் மிகவும் சிறந்து விளங்க வேண்டும்! கடவுளின் நாளை எதிர்பார்த்து அவர் வருகையை விரைவுபடுத்த வேண்டும். அந்நாளில் வானங்கள் எரிந்தழிந்து பஞ்சபூதங்கள் வெந்துருகிப் போகும். அவர் வாக்களித்தபடியே நீதி குடிகொண்டிருக்கும் புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே, அன்பார்ந்தவர்களே, இவற்றை எதிர்பார்த்திருக்கும் உங்களை அவர் மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய்க் காணும் வகையில் முழுமுயற்சி செய்யுங்கள்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.- இறைவா உமக்கு நன்றி.
நற்செய்தி வாசகம்:
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (1:1-8)
கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்: ‘இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்: அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார். பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்: அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்'என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது. இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார். யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்: தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர். யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்: தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்: வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார். அவர் தொடர்ந்து, ‘என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்: அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்' எனப் பறைசாற்றினார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
மன்றாட்டுக்கள்:
- படைப்பின் முதல்வனே இறைவா! இந்த உலகில் பயனம் செய்யும் திருச்சபை, அதன் தலைவர்களும் மக்களின் நலனில் அக்கரைக் கொண்டு, வாழ்விழந்த மக்களுக்கு அன்பின், இரக்கத்தின், மன்னிப்பின், மற்றும் அமைதியின் கருவிகளாகச் செயல்பட, கிறிஸ்துவின் மீட்பைத் தங்கள் நல்ல செயல்கள் மூலம் பிறருக்கு அறிவிக்கும் வரம் தந்திட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- அகதிகளையும் அனாதைகளையும் ஆதரிக்கும் அன்பு இறைவா! வீடிழந்து, உறவிழந்து. மண்ணிழந்து, மானத்தையும் இழந்து வாதை முகாம்களில் முள் வேலிக்குள் துன்பப்படும் தமிழர்களுக்காவும், மற்றும் உலகெங்கும் உள்ள அகதிகளுக்காகவும் மன்றாடுகிறோம். அவர்களுக்கு நீர் கொண்டு வந்த மீட்பு விரைவில் கிடைக்க எம் நாட்டுத் தலைவர்கள் முன்வர வேண்டிய வரம்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- அன்பின் இறைவா! இன்றும் கொடுமைப்படுத்தப்படும் எம் சகோதர சகோதரிகளுக்காக மன்றாடுகிறோம். அவர்களுடைய வாழ்வில் இந்தாள்வரை அவர்கள் சந்திக்கும் துன்பங்களும் துயரங்களும் மறைந்து மக்கள் அனைவரும் ஒருத்தாய் பிள்ளைகளாய் வாழ்ந்திட மக்களின் மனதை மாற்றிட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- மனமாற்றத்தை விரும்பும் இறைவா! உம் பிறப்பிற்காகத் காத்திருக்கும் நாங்கள் எங்கள் பழைய இயல்புகளைக் கலைந்து புதிய மனிதர்களாக மாறி இந்த உலகத்தை உம் பாதையில் கொண்டுவர எங்களுக்கு உமது அருளையும் ஆசீரையும் பொழிந்து காத்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.