Sunday லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Sunday லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திருவருகைக்கால 2ஆம் ஞாயிறு (2ஆம் ஆண்டு) 04-12-2011


முன்னுரை: இயேசு பாலகனின் பிறப்பைக் தூய்மையான உள்ளத்தோடு கொண்டாட, அவரை இதயத்தில் வரவேற்க இவ்வாலயம் வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்தி வரவேற்கின்றோம்.இயேசு கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளே இன்றைய நற்செய்தியின் வழியாகவும், திருமுழுக்கு யோவான் வழியாகவும் இறைவன் நமக்கு விடுக்கின்ற அழைப்பு என்னவென்றால் “மனமாற்றம்”. நாம் அனைவரும் நம்முடைய பழைய பாவ இயல்பை விட்டுவிட்டு இயேசு பாலகனை நமது இதயத்தில் தாங்க வேண்டும். அதற்கான வரம் வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம். 

முதல் வாசக முன்னுரை: பிறக்கப்போகும் ஆண்டவர் எப்படிப்பட்டவர் என்பதை எசாயா தெளிவாக சுட்டிக்காட்டுகிறார். அவரது வருகைக்கு நம்மையே நாம் எப்படி தயார்செய்வது என்பதையும் தெளிவாக எடுத்து கூறுகின்றார். நம்மிடம் உள்ள கரடுமுரடானவைகள் எவை எவை என்பதை கண்டுணர்ந்து அவற்றை எல்லாம் விளக்கி விட்டு நல்மனம் கொண்டவர்களாக வாழ்வோம் என்ற உயர்ந்த சிந்தனையுடன் வாசகத்தை கேட்போம்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் (40:1-5, 9-11)

‘ஆறுதல் கூறுங்கள்: என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்’ என்கிறார் உங்கள் கடவுள்.எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்: அவள் போராட்டம் நின்றுவிட்டது: அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது: அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள்.குரலொளி ஒன்று முழங்குகின்றது: பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்: பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்: மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்: கோணலானது நேராக்கப்படும்: கரடு முரடானவை சமதளமாக்கப்படும்.ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்: மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்: ஆண்டவர்தாமே இதை மொழிந்தார். சீயோனே! நற்செய்தி தருபவளே, உயர்மலை மேல் நின்றுகொள்! எருசலேமே! நற்செய்தி உரைப்பவரே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! 'இதோ உன் கடவுள்' என்று யூதா நகர்களிடம் முழங்கு! இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்: அவர் ஆற்றலோடு ஆட்சி புரிய இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்: அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன. ஆயனைப்போல் தம்மந்தையை அவர் மேய்ப்பார்: ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்: அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்: சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.’
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

இரண்டாம் வாசக முன்னுரை: நம்மிடையே உள்ள மூடப்பழக்கங்களை கைவிட்டு ஆண்டவரையே, நாம் பற்றிக்கொள்ள வேண்டும் என்றும், அவர் அனைவரையும் அன்பு செய்யும் நல்ல தந்தையாக இருந்து செயல்படுவார் என்றும் கூறும் வாசகத்தை கவனமுடன் கேட்போம்.

திருத்தூதர் பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் (பேதுரு 3:8-14)

அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மறந்துவிடவேண்டாம். ஆண்டவரின் பார்வையில் ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள் போலவும் இருக்கின்றன. ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலந்தாழ்த்துவதாகச் சிலர் கருதுகின்றனர். ஆனால், அவர் அவ்வாறு காலந்தாழ்த்துவதில்லை. மாறாக, உங்களுக்காகப் பொறுமையோடிக்கிறார். யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாறவேண்டுமென விரும்புகிறார். ஆனால் ஆண்டவருடைய நாள் திருடனைப்போல வரும். வானங்கள் பெருமுழக்கத்துடன் மறைந்தொழியும்: பஞ்சபூதங்கள் வெந்திருகிப் போகும். மண்ணுலகமும் அதன் செயல்களும் தீக்கிரையாகும். இவையாவும் அழிந்து போகுமாதலால் நீங்கள் தூய, இறைப்பற்றுள்ள நடத்தையில் மிகவும் சிறந்து விளங்க வேண்டும்! கடவுளின் நாளை எதிர்பார்த்து அவர் வருகையை விரைவுபடுத்த வேண்டும். அந்நாளில் வானங்கள் எரிந்தழிந்து பஞ்சபூதங்கள் வெந்துருகிப் போகும். அவர் வாக்களித்தபடியே நீதி குடிகொண்டிருக்கும் புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே, அன்பார்ந்தவர்களே, இவற்றை எதிர்பார்த்திருக்கும் உங்களை அவர் மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய்க் காணும் வகையில் முழுமுயற்சி செய்யுங்கள்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

நற்செய்தி வாசகம்: 
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (1:1-8)

கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்: ‘இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்: அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார். பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்: அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்'என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது. இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.  யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்: தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர். யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்: தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்: வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார். அவர் தொடர்ந்து, ‘என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்: அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்' எனப் பறைசாற்றினார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

மன்றாட்டுக்கள்: 
  1. படைப்பின் முதல்வனே இறைவா! இந்த உலகில் பயனம் செய்யும் திருச்சபை, அதன் தலைவர்களும் மக்களின் நலனில் அக்கரைக் கொண்டு, வாழ்விழந்த மக்களுக்கு அன்பின், இரக்கத்தின், மன்னிப்பின், மற்றும் அமைதியின் கருவிகளாகச் செயல்பட, கிறிஸ்துவின் மீட்பைத் தங்கள் நல்ல செயல்கள் மூலம் பிறருக்கு அறிவிக்கும் வரம் தந்திட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  2. அகதிகளையும் அனாதைகளையும் ஆதரிக்கும் அன்பு இறைவா!  வீடிழந்து, உறவிழந்து. மண்ணிழந்து, மானத்தையும் இழந்து வாதை முகாம்களில் முள் வேலிக்குள் துன்பப்படும் தமிழர்களுக்காவும், மற்றும் உலகெங்கும் உள்ள அகதிகளுக்காகவும் மன்றாடுகிறோம். அவர்களுக்கு நீர் கொண்டு வந்த மீட்பு விரைவில் கிடைக்க எம் நாட்டுத் தலைவர்கள் முன்வர வேண்டிய வரம்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  3. அன்பின் இறைவா! இன்றும் கொடுமைப்படுத்தப்படும் எம் சகோதர சகோதரிகளுக்காக மன்றாடுகிறோம். அவர்களுடைய வாழ்வில் இந்தாள்வரை அவர்கள் சந்திக்கும் துன்பங்களும் துயரங்களும் மறைந்து மக்கள் அனைவரும் ஒருத்தாய் பிள்ளைகளாய் வாழ்ந்திட மக்களின் மனதை மாற்றிட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  4. மனமாற்றத்தை விரும்பும் இறைவா! உம் பிறப்பிற்காகத் காத்திருக்கும் நாங்கள் எங்கள் பழைய இயல்புகளைக் கலைந்து புதிய மனிதர்களாக மாறி இந்த உலகத்தை உம் பாதையில் கொண்டுவர எங்களுக்கு உமது அருளையும் ஆசீரையும் பொழிந்து காத்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

திருவருகைக்கால முதல் ஞாயிறு (இரண்டாம் ஆண்டு) 27-11-2011

முன்னுரை: அன்புக்குரியவர்களே! இன்று திருவழிப்பாட்டு ஆண்டில் புதிய ஆண்டை தாய் திருச்சபை தொடங்குகின்றது. திருவருகைக் காலம் எதிர்பார்ப்பின் காலம். நம்பிக்கையின் காலம். கிறிஸ்து பிறப்பு பெருவிழாவிற்கு நம்மை தயாரிக்கும் காலம். உண்மையில், நம்மில் இன்று பலருக்கு போதாத காலமாக உள்ளது. தனி வாழ்விலும், குடும்பவாழ்விலும், பொது வாழ்விலும் பல்வேறு பிரச்சினைகள் நம்மை கசக்கிப் பழிந்தெடுக்கின்றன. எனவே இந்த திருவருகைக் காலத்தில் அயராது செபிப்போம். செபத்திற்கும், வாழ்வுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பசித்திரு! தனித்திரு! விழித்திரு! செபித்திரு. இதுவே இத்திருவருகை காலம் முழுவதும் நம்மை நெறிப்படுத்தும் தாரக மந்திரமாக அமையட்டும். அதற்கான அருள்வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம். 

முதல் வாசக முன்னுரை: நாம் அனைவரும் இறைவனால் உண்டாக்கப்பட்டவர்கள். எனவே நாம் அனைவரும் அவருக்கே செந்தம். அவர் நம்மை எப்போதும் தம் கரங்களில் வைத்து காத்து வழிநடத்தி வருகின்றார். அவருக்கு ஏற்ற மக்களாக வாழ இறைவாக்கினர் எசாயா கூறும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம். 

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் (63:16-17, 64:1, 3-8)

ஏனெனில் நீரே எங்கள் தந்தை: ஆபிரகாம் எங்களை அறியார்: இஸ்ரயேல் எங்களை ஏற்றுக் கொள்ளார்: ஆண்டவரே, நீர்தான் எங்கள் தந்தை: பண்டை நாளிலிருந்து எம் மீட்பர் என்பதே உம் பெயராம். ஆண்டவரே, உம் வழிகளிலிருந்து எங்களைப் பிறழச் செய்வதேன்? உமக்கு அஞ்சி நடவாதவாறு எம் நெஞ்சங்களைக் கடினப்படுத்தியதேன்? உம் ஊழியர்களை முன்னிட்டும், உம் உரிமைச் சொத்தாகிய, குலங்களை முன்னிட்டும் திரும்பிவாரும். நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா? மலைகள் உம் திருமுன் நடுநடுங்குமே! நாங்கள் எதிர்பாராத அச்சம் தரும் செயல்களை நீர் செய்தபோது நீர் இறங்கி வந்தீர்: மலைகள் உம் முன்னே உருகி ஓடின! தம்மை நம்பியிருப்போருக்காகச் செயலாற்றும் கடவுள் உம்மையன்றி வேறு யார்? முற்காலம் முதல் இதுபற்றி எவரும் கேள்வியுற்றதில்லை: செவியுற்றதுமில்லை, கண்ணால் பார்த்ததுமில்லை. மகிழ்ச்சியுடன் நேர்மையைக் கடைப்பிடிப்போர்க்கும் உம்மையும் உம் வழிகளையும் நினைவில் கொள்வோர்க்கும் நீர் துணை செய்ய விரைகிறீர்: இதோ, நீர் சினமடைந்தீர்: நாங்கள் பாவம் செய்தோம்: நெடுங்காலமாய்ப் பாவம் செய்திருக்க, நாங்கள் மீட்கப்படுவது எங்ஙனம்? நாங்கள் அனைவரும் தீட்டுப்பட்டவரைப்போல் உள்ளோம்: எங்கள் நேரிய செயல்கள் எல்லாம் அழுக்கடைந்த ஆடைபோல் ஆயின: நாங்கள் யாவரும் இலைபோல் கருகிப் போகின்றோம்: எங்கள் தீச்செயல்கள் காற்றைப் போல் எங்களை அடித்துச் சென்றன. உம் பெயரைப் போற்றுவார் எவரும் இல்லை: உம்மைப் பற்றிக்கொள்ள முயல்பவர் எவரும் இல்லை: நீர் உம் முகத்தை எங்களுக்கு மறைத்துள்ளீர்: எங்கள் தீச்செயல்களின் பிடியில் எங்களை அழியவிட்டீர். ஆயினும், ஆண்டவரே நீரே எங்கள் தந்தை: நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்: நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

இரண்டாம் வாசக முன்னுரை: நாம் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டுள்ளதால் சொல்வன்மை, நிறையறிவு பெற்று எல்லா வகையிலும் நல்ல நிலையில் வாழ்ந்து வருகின்றோம். அருள்வரங்கள் நிறைய கிடைக்கப்பெற்றதால், இறுதிநாளில் விண்ணக வாழ்வு நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்ற ஆழ்ந்த கருத்தினை கூறும் தூய பவுல் அடிகளாரின் அறிவுரையை அமைந்த மனத்துடன் கேட்போம். 

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் (1கொரி. 1:3-9)

நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக! இயேசு கிறிஸ்து நமக்குமட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர்.கிறிஸ்து இயேசுவின் வழியாக நீங்கள் பெற்றுக்கொண்ட இறையருளை முன்னிட்டு உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்துகிறேன். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்றுச் சொல்வன்மையும் நிறையறிவும் பெற்று, எல்லா வகையிலும் செல்வர்களானீர்கள்.மேலும் கிறிஸ்துவைப்பற்றிய சான்று உங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காகக் காத்திருக்கும் உங்களுக்கு அருள்கொடை எதிலும் குறையே இல்லை.நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் நீங்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க அவர் உங்களை இறுதிவரை உறுதிப்படுத்துவார். கடவுள் நம்பிக்கைக்குரியவர்: தம் மகனும் நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நட்புறவில் பங்குபெற உங்களை அவர் அழைத்துள்ளார்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

நற்செய்தி வாசகம்: 
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (13:3-37)

இயேசு கோவிலுக்கு எதிராக உள்ள ஒலிவ மலைமீது அமர்ந்திருந்த போது பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா ஆகியோர் அவரிடம் தனியாக வந்து, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவையனைத்தும் நிறைவேறப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன? எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டனர். அதற்கு இயேசு அவர்களிடம் கூறியது: உங்களை யாரும் நெறிதவறச் செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, நானே அவர் என்று சொல்லிப் பலரை நெறிதவறச் செய்வர். போர் முழக்கங்களையும் போர்களைப்பற்றிய செய்திகளையும் கேட்கும் பொழுது நீங்கள் திடுக்கிடாதீர்கள். இவை நிகழத்தான் வேண்டும். ஆனால் இவையே முடிவாகா. நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும்: பல இடங்களில் நில நடுக்கங்கள் ஏற்படும்: பஞ்சமும் உண்டாகும். இவை கொடும் வேதனைகளின் தொடக்கமே. நீங்கள் கவனமாயிருங்கள்: உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள்: தொழுகைக்கூடங்களில் உங்களை நையப்புடைப்பார்கள்: என் பொருட்டு ஆளுநர் முன்னும் அரசர் முன்னும் நிறுத்தப்பட்டு அவர்கள் முன் எனக்குச் சான்று பகர்வீர்கள். ஆனால் எல்லா மக்களினத்தவர்க்கும் முதலில் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும். அவர்கள் உங்களைக் கைதுசெய்து கொண்டு செல்லும்போது என்ன பேசுவது என நீங்கள் முன்னதாகவே கவலைப்பட வேண்டாம்: அந்த நேரத்தில் உங்களுக்கு அருளப்படுவதையே பேசுங்கள். ஏனெனில் பேசுவோர் நீங்கள் அல்ல. மாறாக, தூய ஆவியாரே. மேலும் சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும் தந்தை பிள்ளையையும் கொல்வதற்கு என ஒப்புவிப்பர்: பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழும்பி அவர்களைக் கொல்வார்கள். எனது பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பர். ஆனால் இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர். 'நடுங்க வைக்கும் தீட்டு  நிற்கக்கூடாத இடத்தில் நிற்பதை நீங்கள் காண்பீர்கள். படிப்பவர் இதைப் புரிந்து கொள்ளட்டும். அப்போது யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும். வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் கீழே இறங்க வேண்டாம்: தம் வீட்டினின்று எதையும் எடுக்க அதில் நுழையவும் வேண்டாம். வயலில் இருப்பவர் தம் மேலுடையை எடுக்கத் திரும்பி வர வேண்டாம். அந்நாள்களில் கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோர் நிலைமை அந்தோ பரிதாபம்! இவை குளிர்காலத்தில் நிகழாதபடி இறைவனிடம் வேண்டுங்கள். ஏனெனில் இவை துன்பம்தரும் நாள்களாய் இருக்கும். கடவுள் படைக்கத் தொடங்கிய காலத்திலிருந்து இந்நாள்வரை இத்தகைய வேதனை உண்டானதில்லை: இனிமேலும் உண்டாகப் போவதில்லை. ஆண்டவர் அந்நாள்களைக் குறைக்காவிடில் எவரும் தப்பிப் பிழைக்க முடியாது. ஆனால் தாம் தேர்ந்து கொண்டவர்களின் பொருட்டு அவர் அந்நாள்களைக் குறைத்திருக்கிறார். அப்பொழுது யாராவது உங்களிடம், இதோ, மெசியா இங்கே இருக்கிறார்: அதோ, அங்கே இருக்கிறார் எனச் சொன்னால் நீங்கள் நம்ப வேண்டாம். ஏனெனில் போலி மெசியாக்களும் போலி இறைவாக்கினர்களும் தோன்றி, முடியுமானால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களையே நெறிதவறச் செய்ய அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் செய்து காட்டுவர். நீங்களோ கவனமாயிருங்கள். அனைத்தையும் முன்னதாகவே உங்களுக்குச் சொல்லிவிட்டேன். அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்: நிலா ஒளிகொடாது. விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்: வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள். பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார். அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். இவையனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்: ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா. ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது: விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது. கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது. நெடும்பயணம் செல்லவிருக்கும் ஒருவர் தம் வீட்டைவிட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப்பாளராக்கி, விழிப்பாயிருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார். அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது. அவர் திடீரென்று வந்து நீங்கள் தூங்குவதைக் காணக்கூடாது. நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்: விழிப்பாயிருங்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

மன்றாட்டுக்கள்: 
  1. இரக்கமே நிறைந்த எங்கள் இனிய தேவனே! எம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்களையும், அருட்பணியாளர்களையும் நிறைவாக ஆசீர்வதித்து இறைமக்களை இத்திருவருகைக் காலத்தில் சிறப்பாக கிறிஸ்து பிறப்பு பெருவிழாவிற்கு நன்கு தயாரிக்க தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம். 
  2. எல்லாம் வல்ல இறைவா! இத்திருவருகைக் காலத்தில் எம் பங்கு மக்கள் அனைவரும், இறையன்பு, பிறரன்பு இவற்றில் நாளும் வளர்ந்து கிறிஸ்துவுக்கு ஏற்ற சாட்சிகளாக திகழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம். 
  3. நீதியின் இறைவா! எம் நாட்டுத் தலைவர்கள் அனைவரும் நாட்டை முன்னேற்றப் பாதையில் வழிநடத்தி செல்ல நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி தொழில்வளம் பெருகவும், வேலை வாய்ப்பு கிடைத்திடவும் இதன் மூலம் நாட்டில் வறுமை நீங்கிடவும் அனைவரும் வளமுடன் வாழ தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம். 
  4. எங்கள் அன்பின் ஆண்டவரே! எம் பங்கு பணியாளர்கள் பங்கின் வளர்ச்சிக்காக எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் பங்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்து, பங்கை எல்லா துறைகளிலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பொதுக்காலம் 34 ஆம் ஞாயிறு முதல் ஆண்டு 20-11-2011


கிறிஸ்து அரசர் பெருவிழா
முன்னுரை:
அன்புக்குரியவர்களே! இன்று தாய் திருச்சபையானது கிறிஸ்து அரசர் பெருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றது. உண்மைக்கு சாட்சியம் கூறுவதே என் பணி, வழியும், உண்மையும், வாழ்வும் நானே என்ற இறைமகன் இயேசுவின் கூற்று அவரது பணி வாழ்வில் நிறைவேறியது. இவ்வுலகில் எத்தனை அரசுகள் ஆண்டு வந்திருக்கின்றன ஆனால் ஒன்றுகூட நிலையான அரசு இல்லை, காரணம் உண்மை இல்லை. இயேசு இவ்வுலகிற்கு கொண்டு வந்த அரசு நிலையான அரசு. அந்த நிலையான அரசின் மக்களாக வாழ வேண்டுமென்றால நம்மிடம் உண்மை இருக்க வேண்டும். நல்ல ஆயனாகிய இயேசுவின் மக்களாக நாம் வாழ அருள் வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
இறைவன் நீதியுள்ளவர், அன்புள்ளவர், கருணையுள்ளம்கொண்டவர். அவர் நல்லாயனாக இருந்து தன் மந்தையை கண்காணிக்கின்றார். ஒருவரைகூட அவர் தவற விடமாட்டார். இப்படிப்பட்ட நற்பண்புகளை கொண்ட அந்த நல்லாயனின் செயல்களை விளக்கிக்கூறும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 34: 11-12, 15-17

தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக் காப்பேன். ஓர் ஆயன் தன் மந்தையினின்று சிதறுண்ட ஆடுகளைத் தேடிச் செல்வது போல, நானும் என் மந்தையைத் தேடிப் போவேன். மப்பும் மந்தாரமுமான நாளில் அவற்றை எல்லா இடங்களினின்றும் மீட்டு வருவேன். நானே என் மந்தையை மேய்த்து, இளைப்பாறச் செய்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். காணாமல் போனதைத் தேடுவேன்; அலைந்து திரிவதைத் திரும்பக் கொண்டுவருவேன்; காயப்பட்டதற்குக் கட்டுப் போடுவேன்; நலிந்தவற்றைத் திடப்படுத்துவேன். ஆனால், கொழுத்ததையும் வலிமையுள்ளதையும் அழிப்பேன். இவ்வாறு நீதியுடன் அவற்றை மேய்ப்பேன். எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உன்னைப் பொறுத்தவரை, என் மந்தையே, நான் ஆட்டுக்கும் ஆட்டுக்கும் இடையேயும் ஆட்டுக் கிடாய்களுக்கும் வெள்ளாட்டுக் கிடாய்களுக்கும் இடையேயும் நீதி வழங்குவேன்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

இரண்டாம் வாசக முன்னுரை:
கிறிஸ்து தனது இரண்டாம் வருகையின்போது நீதி வழங்கும் அரசராக வருவார். அப்போது அவர் முன் நிற்பவர்களுக்கு எப்படிப்பட்ட தீர்ப்பு கிடைக்கப்போகிறது என்பதை தெளிவுப்படுத்துகிறார். கிறிஸ்து வழியாக வாழ்வு வந்தது அந்த நிலைவாழ்வில் நிலைத்திருக்க நாம் எப்படி வாழ வேண்டும் என்ற கருத்தினை கூறும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 20-26,28

சகோதரர் சகோதரிகளே, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஒரு மனிதர் வழியாகச் சாவு வந்ததுபோல ஒரு மனிதர் வழியாகவே இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர். ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போலக் கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர். ஒவ்வொருவரும் அவரவர் முறை வரும்போது உயிர் பெறுவர். கிறிஸ்துவே முதலில் உயிர் பெற்றார். அடுத்து, கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர். அதன் பின்னர் முடிவு வரும். அப்போது கிறிஸ்து ஆட்சியாளர், அதிகாரம் செலுத்துவோர், வலிமையுடையோர் ஆகிய அனைவரையும் அழித்துவிட்டு, தந்தையாகிய கடவுளிடம் ஆட்சியை ஒப்படைப்பார். எல்லாப் பகைவரையும் அடிபணிய வைக்கும்வரை அவர் ஆட்சி செய்தாக வேண்டும். சாவே கடைசிப் பகைவன், அதுவும் அழிக்கப்படும். அனைத்துமே மகனுக்கு அடிபணியும்போது தமக்கு அனைத்தையும் அடிபணியச் செய்த கடவுளுக்கு மகனும் அடிபணிவார். அப்போது கடவுளே அனைத்திலும் அனைத்துமாயிருப்பார்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி (மாற் 11: 10) 
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்:
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 31-46

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``வானதூதர் அனைவரும் புடைசூழ மானிடமகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்றுகூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப் பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப் பக்கத்திலும் நிறுத்துவது போல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார். பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப் பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, `என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப் பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்' என்பார். அதற்கு நேர்மையாளர்கள் `ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக்கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம்?' என்று கேட்பார்கள். அதற்கு அரசர், `மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்' எனப் பதிலளிப்பார். பின்பு இடப் பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, `சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை' என்பார். அதற்கு அவர்கள், `ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?' எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர்,`மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்.''
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

மன்றாட்டுக்கள்:
  1. அரசர்கெல்லாம் அரசராகிய இறைவா! எம் திருச்சபையின் தலைவர்கள் அனைவரும் மக்களுக்குப் பணிபுரியவே வந்தேன் என்ற இறைவனின் வார்த்தைக்கேற்ப, தங்கள் வாழ்க்கையில் நல்ல ஆயர்களாக இருந்து, தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இறைமக்களை நல்ல வழியில் நடத்திசெல்ல தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  2. நல்லாயனாகிய இறைவா! எம் பங்கு மக்கள் அனைவரும் கிறிஸ்துவின் மதிப்பீடுகளை எப்போதும் தங்கள் கண்முன் கொண்டு வாழவும், மனித நேயத்துடன் ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு, மதித்துவாழ தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  3. அன்பின் இறைவா! எம் நாட்டுத்தலைவர்கள்,சமூகத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள் அனைவரும் நீதியோடும், உண்மையோடும் ஆட்சி செய்து, நாட்டில் சமத்துவத்தை வளர்த்திடவும், வன்முறைகளை ஒழித்திடவும், சிறப்புடன் பல நல்ல திட்டங்களை செயல்படுத்த தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  4. தூயகத்தின் திருவுருவே இறைவா! எங்களைச் சூழ்ந்து வாழ்கின்ற ஒவ்வொரு சகோதரனையும், சகோதரியையும் மதித்து ஏற்றுக்கொண்டு, அன்புசெய்து வாழக்கூடிய உள்ளத்தை எங்கள் ஒவ்வொருவருக்கும் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பொதுக்காலம் 33 ஆம் ஞாயிறு முதல் ஆண்டு 13-11-2011


முன்னுரை:
அன்பின் சகோதரமே! இறைவன் நம் ஒவ்வொருவரையும் அழைத்துள்ளார். அழைத்த இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் ஏராளமான அருள்வரங்களை கொடுத்து, நமக்கு பல திறமைகளையும் கொடுத்துள்ளார். அந்த திறமைகளை நாம் மட்டும் அனுபவித்தால் போதாது. அதை மற்றவர்களுக்கு கொடுத்து, பகிர்ந்து பயனடைய வேண்டும். எனவே வாய்ப்பு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் நமது திறமைகளை வெளிப்படுத்திடவும், அதை வளர்த்து கொள்ளவும் தூய ஆவியானவர் நமக்கு துணை புரிந்திடவும், இறைவனின் அருள் நம்மில் இருக்கவும் வேண்டுமென்று தொடரும் இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:
பெண்ணின் பெருமையைப் பாராட்டி எழுதுகிறார், நீதிமொழி புத்தகத்தின் ஆசிரியர். ஆண்டவரிடன் அச்சம் கொண்டு வாழும் பெண்ணே புகழத்தக்கவள் என்றும், இப்படிப்பட்ட பெண்ணை தன் மனைவியாக அடைந்துள்ள கணவன் அவளை முழுமையாக நம்புகிறான் என்ற கருத்தினை கூறும் வாசகத்தை கேட்போம்.

நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 31: 10-13, 19-20, 30-31

திறமை வாய்ந்த மனத்திடமுள்ள மனையாளைக் காண்பது மிக மிக அரிது; அவள் பவளத்தை விடப் பெருமதிப்புள்ளவள். அவளுடைய கணவன் அவளை மனமார நம்புகிறான்; அவளால் அவனுக்கு நலமும் வளமும் பெருகும். அவள் தன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு நல்லதையே செய்வாள்; ஒருநாளும் தீங்கு நினையாள். கம்பளி, சணல் ஆகிய பொருள்களைத் தானே தேடிக் கொணர்வாள்; தன் வேலை அனைத்தையும் விருப்புடன் தானே செய்வாள். இராட்டினத்தைத் தானே பிடித்து வேலை செய்வாள்; நூல் இழைகளைத் தன் விரல்களால் திரிப்பாள். எளியவனுக்கு உதவி செய்யத் தன் கையை நீட்டுவாள். வறியவனுக்கு வயிறார உணவளிப்பாள். எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்; ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள். அவளுடைய செயல்களின் நற்பயனை எண்ணி அவளை வாழ்த்துங்கள்; அவளது உழைப்பை மக்கள் மன்றம் பாராட்டுவதாக.

- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.


இரண்டாம் வாசக முன்னுரை:
காலங்கள், நேரங்கள் அனைத்தையும் படைத்தவர் ஆண்டவரே. நமக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தையும், காலத்தையும் விழிப்புடன் இருந்து நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவும் ஒளியின் மக்களாக வாழவும் பவுலடியார் கூறும் அறிவுரையைக் கேட்போம்.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6

சகோதரர் சகோதரிகளே, காலங்களையும் நேரங்களையும் குறித்து உங்களுக்கு எழுதத் தேவையில்லை. ஏனெனில் திருடன் இரவில் வருவது போல, ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள். `எங்கும் அமைதி, ஆபத்து இல்லை' என்று மக்கள் கூறிக்கொண்டிருக்கும் பொழுது, கருவுற்றிருப்பவருக்கு வேதனை வருவது போல, திடீரென அவர்களுக்கு அழிவு வரும்; யாரும் தப்பித்துக்கொள்ள இயலாது. ஆனால் அன்பர்களே! நீங்கள் இருளில் நடப்பவர்களல்ல; ஆகவே அந்த நாள் திருடனைப் போல் உங்களுக்கு வராது. நீங்கள் எல்லாரும் ஒளியைச் சார்ந்தவர்கள்; பகலில் நடப்பவர்கள். நாம் இரவையோ இருளையோ சார்ந்தவரல்ல. ஆகவே மற்றவர்களைப் போல் நாமும் உறங்கலாகாது; விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம்.

- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.


நற்செய்தி வாசகம்:
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 14-30

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறிய உவமை: விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்: நெடும் பயணம் செல்ல இருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார். அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார். நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார். ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, `ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்' என்றார். அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், `நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன், உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்' என்றார். இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, `ஐயா, நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்' என்றார். அவருடைய தலைவர் அவரிடம், `நன்று. நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்' என்றார். ஒரு தாலந்தைப் பெற்றுக்கொண்டவரும் அவரை அணுகி, `ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது' என்றார். அதற்கு அவருடைய தலைவர், `சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய்ச் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்' என்று கூறினார். `எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்து பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள். ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்' என்று அவர் கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

மன்றாட்டுக்கள்:
  1. அன்பின் இறைவா! எம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் தலதிருச்சபையின் மக்களை ஒளியின் வழியில் நடத்திச் செல்லத் தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  2. ஞானத்தின் ஊற்றே இறைவா! எம் பங்கு மக்கள் அனைவரும் இறைஅன்பிலும, பிறர் அன்பிலும் நாளும் வளரவும், குடும்பங்களில் சமாதானம் நிலவிடவும், பிள்ளைகள் நன்கு படித்திடவும் தேவையான அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  3. கருணையின் தேவா! எம் பங்கிலுள்ள இளைஞர்கள் இளம் பெண்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளை வீணடித்து விடாமல், எதிர்கால வாழ்வை திட்டமிட்டு செயல்படுத்திட தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  4. நீதியின் தேவா! எம் நாட்டுத் தலைவர்கள், அரசியல் சமூகத்தலைவர்கள் அனைவரும் நாட்டின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பொதுக்காலம் 32வது ஞாயிறு முதல் ஆண்டு 06-11-2011

திருப்பலி முன்னுரை
அனைவருக்கும் அன்பு வணக்கம். இன்று நாம் பொதுக்காலம் 32வது ஞாயிறை கொண்டாடுகிறோம். உலக அறிவு வரையறைக்குட்பட்டது.  மெய்யறிவு எல்லையற்றது.  இவ்வேளையில் நாம் இன்றைய நற்செய்தியில் வரும் அறிவிலிகளைப் போல இல்லாது முன்மதியுள்ளவர்களைப்போல் இருக்க வேண்டும். மானிட மகன் வரும்பொழுது தயாராக இருப்போர் அழைத்துக்கொள்ளப்படுவர். எனவே நாம் அனைவரும் எப்பொழுதும் முன்மதியுடைய தோழிகளைப்போல் ஞானமுள்ளோராய் வாழ வேண்டி இத்திருப்பலியில் தொடர்ந்து பங்கெடுப்போம்;.

முதல் வாசக முன்னுரை
ஞானம் ஒளிமிக்கது மங்காதது தனக்கு தகுதியுள்ளவர்களை தேடிச் செல்கிறது என்று ஞானத்தை பற்றி கூறும் சாலமோனின் ஞான நூலிலிருந்து வரும் முதல் வாசகத்திற்கு செவிக்கொடுப்போம்.


சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 6: 12-16
ஞானம் ஒளிமிக்கது; மங்காதது. அதன்பால் அன்புகூர்வோர் அதை எளிதில் கண்டுகொள்வர்; அதைத் தேடுவோர் கண்டடைவர். தன்னை நாடுவோர்க்கு அது தன்னையே விரைந்து வெளிப்படுத்தும். வைகறையில் அதைத் தேடுவோர் தளர்ச்சி அடைய மாட்டார்கள்; ஏனெனில் தம் கதவு அருகில் அது அமர்ந்திருப்பதை அவர்கள் காண்பார்கள். அதன்மீது மனத்தைச் செலுத்துவதே ஞானத்தின் நிறைவு. அதன் பொருட்டு விழிப்பாய் இருப்போர், கவலையிலிருந்து விரைவில் விடுபடுவர். தனக்குத் தகுதியுள்ளவர்களை ஞானம் தேடிச் செல்கிறது; அவர்களுடைய வழியில் கனிவுடன் தன்னையே காட்டுகிறது; அவர்களின் ஒவ்வொரு நினைவிலும் அது அவர்களை எதிர்கொள்கிறது.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.


இரண்டாம் வாசக முன்னுரை
இறந்தோரும் உயிரோடு இருப்போரும் எப்பொழுதும் ஆண்டவரோடு இருப்போம். எக்காளம் முழங்க ஆண்டவர் வருவார் என்று கூறும் புனித பவுல் கூறும் இரண்டாம் வாசகத்திற்கு செவிக்கொடுப்போம்..


திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13-18
சகோதரர் சகோதரிகளே, இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்; எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயருறக் கூடாது. இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம். அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார். ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்குக் கூறுவது இதுவே: ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், இறந்தோரை முந்திவிட மாட்டோம். கட்டளை பிறக்க, தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க, கடவுளுடைய எக்காளம் முழங்க, ஆண்டவர் வானினின்று இறங்கி வருவார்; அப்பொழுது, கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர். பின்னர் உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், அவர்களோடு மேகங்களில் எடுத்துக்கொண்டுபோகப்பட்டு, வான் வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளச் செல்வோம். இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம். எனவே, இவ்வார்த்தைகளைச் சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக்கொள்ளுங்கள்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.


நற்செய்தி வாசகம்:
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 1-13
இயேசு தம் சீடர்களுக்குச் சொன்ன உவமையாவது: ``விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்: மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப் பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர். மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர். நள்ளிரவில், `இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்' என்ற உரத்த குரல் ஒலித்தது. மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர். அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, `எங்கள் விளக்குகள் அணைந்து கொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்' என்றார்கள். முன்மதியுடையவர்கள் மறுமொழியாக, `உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே, வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக் கொள்வதுதான் நல்லது' என்றார்கள். அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்துவிட்டார். ஆயத்தமாய் இருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. பிறகு மற்றத் தோழிகளும் வந்து, `ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்' என்றார்கள். அவர் மறுமொழியாக, `உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது' என்றார். எனவே விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது.''
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.


விசுவாசிகள் மன்றாட்டுகள்
  1. ஆயனே எம் இறைவா! எம் தாய் திருச்சபையை வழி நடத்தும் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் துறவறத்தார் ஆகிய அனைவரும் பெரிய குருவாகிய இயேசுவின் வழி நடந்து மக்களுக்காக உழைத்திட வேண்டிய ஞானத்தைத் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  2. வழிகாட்டும் எம் இறைவா! எம் நாட்டை ஆளும் தலைவர்கள் அனைவரும் தங்களது கடமைகளை சரிவர செய்து மக்களுக்கு ஏற்ற தலைவர்களாக உண்மை வழியில் வாழவேண்டிய அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  
  3. ஆசிரியரே எம் இறைவா! எங்கள் ஊரில் உள்ள அனைவரும் உம்மை அறிந்து, என்றும் உண்மை உள்ளவர்களாகவும் உம் வழி நடப்பவர்களாகவும் வாழ வேண்டிய அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  
  4. மருத்துவரே எம் இறைவா! எம் ஊரில் உடல் நோயினாலும் மனநோயினாலும் வாடுவோரை உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். இவர்கள் அனைவரும் தங்கள் துன்பத்திலிருந்து விடுபட்டவர்களாக வாழ வேண்டிய அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு (கல்லறைத் திருவிழா) 02.11.2011


முன்னுரை:
இறையேசுவில் பிரியமானவர்களே! இன்று கல்லறையில் மரித்தவர்களுக்காக நாம் விழா எடுக்கிறோம்.  நாம் எடுக்கும் இந்த விழா, நமது வாழ்வு வளர்ந்து கொண்டிருக்கும் முடிவற்ற திருப்பயணம் என்பதை உலகிற்கு எடுத்துகாட்டுகிறது. இறைவன் நமக்கு வழங்கியுள்ள வாழ்வு என்னும் அருள்கொடை மயானத்துடன் முடிந்துவிடும் மாயை அல்ல. மாறாக இது உண்மை, அன்பு, சகோதரத்துவம் என்னும் இறையாட்சி விழுமியங்களை கட்டியெழுப்ப நடத்திக்காட்டிய போராட்டங்களின் வரலாற்றுக் கல்வெட்டுக் காப்பியங்கள். கிறிஸ்தவனின் சாவு அழிவாக பார்க்கப்படுவதில்லை மாறாக வாழ்வுக்குச் செல்லும் வழியாக பார்க்கப்படுகின்றது. 

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புதான் கிறிஸ்தவனின் சாவை ஒளிர்விக்கிறது. வாழ்வின் முடிவு மரணம் ஆனால் அது நிலைவாழ்வின் தொடக்கம். இயேசுவில் நம்பிக்கை கொள்வோர் என்றுமே வாழ்வர். நாம் வாழ்வை மிகுதியாய் பெரும் பொருட்டே நம்மிடையே கறிஸ்து வந்தார். இறப்பிற்குப் பின் இறை அமைதியில் நிம்மதி பெற இயலாத ஆன்மாக்களுக்கு பாவங்கள் தடையாய் உள்ளன. இத்தடைகளிலிருந்து விடுபடுவதற்கு நமது மன்றாட்டுகளும.   திருப்பலி, பிறரன்புச் செயல்கள் போன்றவையும் தேவைப்படுகின்றன. எனவே தான் திருச்சபை இறந்தவர்களுக்காக மன்றாடுவதில் அக்கறை காட்டுகிறது எனவே அவற்றை உணர்ந்தவர்களாக இறந்த ஆன்மாக்களுக்காக இந்த திருப்பிலியில் மிக உருக்கமுடன் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை: (எசா25:6,7-9)
நம் துன்பங்களை, துயரங்களை, பாவங்களை நாமே மேற்கொள்ளும் அளவிற்கு நாம் பெரியவர்கள் அல்ல மாறாக கடவுளிடம் சரணடைவதே மேல். ஏனென்றால் அவர் ஒருவரே சாவை வெல்ல செய்து நமக்கு மறுவாழ்வெனும் சந்தோசத்தை, அவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்திருக்க அருள்தருபவர் அவர் ஒருவரே எனக்கூறும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை: (1கொரி 15:20-28)
சாவு என்பது கடந்து செல்வதாக இருக்கின்றது. இவற்றில் இரு இயக்கங்கள் உள்ளன. ஒன்று மனிதன் தம்மை முற்றிலும் இறைவனுக்கு கொடுத்தல், மற்றொன்று மனிதனின் அச்செயலை இறைவன் ஏற்றுக்கொள்ளல். கல்வாரி மலையில் இயேசு தம்மையே தந்தையிடம் அர்பணித்தார், தந்தையும் அவரை ஏற்றுக்கொண்டார் அதன் அடையாளம்தான் உயிர்ப்பு என்று கூறும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்:
  1. எம் இறைவா, உம் அன்புத் திருச்சபையை காத்து வழிநடத்தி இறந்த திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், அனைவரும் உம் இரக்கமும் அருளையும் பொழிந்து உம் வானக வீட்டில் சேர்த்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  2. நீதியின் இறைவா, எம் நாட்டை ஆண்டு இறந்த தலைவர்கள், பொதுமக்கள், தியாகிகள் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். உயிர்தெழுதலும், வாழ்வும் நானே என்னிடம் நம்பிக்கை கொள்வோர் இறப்பிலும் வாழ்வார் என்ற உம்வார்த்தையில் நம்பிக்கைகொண்டு இறந்த அனைவரின் பாவங்களை போக்கி அவர்களை உம் வானக வீட்டில் சேர்த்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  3. அன்பு இறைவா, எம் பங்கை வழிநடத்தி இறந்த பங்கு குருவுக்காவும், பங்குமக்களுக்காகவும் மன்றாடுகிறோம். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் என்பதிற்கினங்க உம்மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்து இறந்த ஆன்மாக்கள் அனைத்தும் தங்களுடைய பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்களை நிறைவாக ஆசிர்வதித்து உம் வானக வீட்டில் சேர்த்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  4. அன்பின் இறைவா, யாரும் நினையாத ஆன்மாக்களுக்காக சிறப்பாக மன்றாடுகிறோம். அவர்கள் தாங்கள் செய்த பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்கள் வேதனை குறைந்து உம் தெய்வீக விருந்தில் பங்குபெற அவர்களை ஆசிர்வதித்து உம்மிடம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

தெரிந்து கொள்வோம் திருப்பலியைப் பற்றி...


1.      பங்குபெறுவோர்:
1) திருப்பலியில் பங்குபெறுவோர் குருவானவர்: இவர் திருப்பலி கொண்டாட கூடியிருக்கும் சபையின் தலைவர். இவரின்வழியாக கிறிஸ்து திருப்பலியில் வெளிப்படுகின்றார்.
2)   பீடச்சிறுவர்: இறைமக்களின் சார்பாக பீடத்திலிருந்து திருப்பலி நிறைவேற்றும் குருவானவருக்குத் தேவையான உதவிகளைச் செய்பவர்கள்.
3)   இறைமக்கள் சபை: திருப்பலி கொண்டாட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் ஒரு குடும்பமாகத் திகழ்கின்றனர்.உலகம் முழுவதும் உள்ள விசுவாசிகளின் பிரதிநிதிகளாக உள்ளனர்.இத்திருக்கூட்டத்தின் மூலமும் இறைவன் வெளிப்படுகின்றார்.ஏனெனில் அவர் பெயரால் ஒன்று கூடும்போது அவர்கள் நடுவே அவர் இருக்கிறார் என்பது வெள்ளிடைமலை.
2.      திருப்பலியில் முக்கிய இடங்கள்:
1)   பலிப்பீடம்: கல்வாரியில் தம்மைப் பலியாக்கிய கிறிஸ்து இன்று இப்பீடமதில் கண்களுக்கு மறைந்த வண்ணம் இரத்தம் சிந்தா பலியாவதால் இம்மேடையைப் பலிப்பீடம் என்கிறோம். இதனின்று முக்கியமாக நமக்குக் கிறிஸ்து வெளிப்படுகின்றார். உயிருள்ள இறைமகனாக அப்ப இரச வழியிலே.
2) வாசக மேடை: அன்று இறைவாக்கினரின் மூலமும், தம் திருமகனின் மூலமும் மக்களோடு பேசிய கடவுள், திருநூலின் மூலமும், குருவின் மூலமும் இவ்விடத்திலிருந்து பகிர்ந்து கொள்ளுகிறார். இறைமக்கள் இறைப் பிரசன்னத்தை மீண்டும் உணருகின்றனர்.
3.      திருப்பலி சடங்குகள்:
1)      தொடக்கச் சடங்குகள்:
                                                     i.      சிலுவை அடையாளம்: நாம் மூவோரு கடவுளின் பெயரால், பெற்ற ஞானஸ்நானத்தின் அடையாளமாக திருப்பலியின் தொடக்கத்தில் இதனைப் பயன்படுத்துகின்றோம்.
                                                         ii.      வாழ்த்தும் வரவேற்பும்:  ஆண்டவர் உங்களோடு இருப்பாராக என்று குரு கூடியுள்ள அனைவரையும் வாழ்த்தி வரவேற்கின்றார்.மக்களும் குருவை உம்மோடும் இருப்பாராக என வாழ்த்தி வரவேற்கின்றனர்.
                                                        iii.      மன்னிப்பு வழிபாடு: செய்த குற்றங்களுக்காக இறைவனின் மன்னிப்பு கேட்டு தாய்மையுடன் திருப்பலி கொண்டாட முயல்கின்றோம்.
                                    iv.      சபை மன்றாட்டு: சபையினர் அனைவரின் வேண்டுதல்களையும் உள்ள ஏக்கங்களையும் ஒன்று திரட்டி, குரு இம்மன்றாட்டுச் செபத்தை நிகழ்த்துகின்றார்.
2)      இறைவார்த்தை வழிபாடு
                                                              i.      முதல் இரண்டு வாசகங்கள்: அவை முறையே பழைய ஏற்பாட்டிலிருந்தும், புதிய ஏற்பாட்டிலிருந்தும் (நற்செய்தி ஏடுகள் நீங்களாக) எடுக்கப்பட்டு இறைவார்த்தையாக வாசிக்கப்படும். 
                                                            ii.      தியானப்பாடல்: இறைவார்த்தையைக் கேட்ட மக்கள் இறைவனோடு இப்பாடல் மூலமாக ஒன்றிக்கின்றனர்.
                                                          iii.      மகிழ்ச்சிப்பாடல்: அல்லேலூயா - என்பதன் பொருள் ஆண்டவருக்குள் மகிழ்கின்றோம். இறைவனைப் போற்றுகின்றோம்.
                                                      iv.      நற்செய்தி வாசகம்: (தூய மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்) புதிய ஏற்பாட்டு நற்செய்தி நூல்களிலிருந்து காலத்திற்குத் தகுந்தவாறு எடுத்தாளப்படுகிறது.இதனின் விளக்கத்தை மறையுரையாகக் குருவானவர் மக்களோடு பகிர்ந்து கொள்கிறார்.  
                                                            v.      விசுவாச அறிக்கை: இறைவனையும், அவர் பேசிய இறைவார்த்தையையும், அவர் பிரசன்னம் கொண்ட திருச்சபையையும், அது கொண்டுள்ள உண்மைகளையும் ஏற்றுக் கொள்கிறோம் என அறிக்கையிடுகிறோம்.
                                                          vi.      இறை மக்கள் வேண்டுதல்கள்: நம்பிக்கை கொடுத்த தேவனிடத்தில் வேண்டிய வரங்களை மக்கள் எடுத்துக் கூறுகின்றனர்.இவ்வேண்டுதல்களுக்காக திருச்சபையும் பரிந்துரை செய்கிறது.
3)      நற்கருணை வழிபாடு:
                                                              i.      காணிக்கை: நமது அன்பைக் காட்ட, நன்றியினைத் தெரிவிக்க, விளைபொருள்களையும், வாங்கின பொருள்களையும், தன்னுடைய அன்பை நமக்குக் காட்டின இயேசு தேர்ந்துகொண்டஉணவுப்பொருள்களை அப்ப இரச வடிவிலும் அர்ப்பணிக்கிறோம்.
                                                            ii.      உண்டியல்: ஆலயத்தின் தேவைகளுக்கும், அமைப்புத் திருசபையின் தேவைகளுக்கும் மக்களால் தரப்படும் காணிக்கையாகும்.
                               iii.     காணிக்கை செபம்: காணிக்கைப் பொருள்களை மக்களிடமிருந்து பெற்று அவற்றினை இறைவன் ஏற்றுக் கொள்ளும்படியாகவும், பலிக்கு அவைகள் தகுதிபெறகூம் வேண்டுகின்றோம்.
                                                          iv.      கை கழுவுதல்: மகத்து மிக்க பலி நிறைவேற்ற, குரு அகமும் புறமும் தூய்மையாக, செபித்து அருள்பெறும் அடையாளமாக இதனைச் செய்கின்றார்.
                                                       v. தொடக்கவுரை:இறைவனிடம் நாம் பெற்ற நன்மைகளுக்கும், அவர் நமக்குச் செய்த மீட்புச் செயலுக்கும் நன்றி கூறி, இறை புகழ் கூறும் பகுதியே இது.
                                        vi.      பரிசுத்தர், பரிசுத்தர் (தூயவர், தூயவர்): இறைவனின் மகிமையை இப்பாடல் மூலம் வாழ்த்திக் கூறிப் பாடுகிறோம். (ஓசன்னா- எனில் வாழ்க என்பது பொருள்)
                                                        vii.      புனிதப்படுத்தும் செபம்: காணிக்கையாகப் பெற்ற அப்ப இரசத்தை ஆவியினால் புனிதப்படுத்தி இறைமகன் கிறிஸ்துவின் உடலாகவும், இரத்தமாகவும் மாற செபிக்கின்றோம்.
                                                viii.      திருவுடல் திரு இரத்தம்: இது உங்களுக்காகக் கையளிக்கப் படும் என் சரீரம். இது உங்களுக்காகச் சிந்தப்படும் புதிய நித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தம், எனும் இயேசுவின் அர்ப்பணிப்பு வார்த்தைகளைக்கூறும் போது, அவை இயேசுவின் திருவுடலாகவும், திரு இரத்தமாகவும் மாறி முழுமையாகின்றன.
                                                          ix.      விசுவாசத்தின் மறைபொருள்: வெறும் கண்கள் காணும் அப்பத்திலும் இரசத்திலும், அவரின் திரு உடலையும் திரு இரத்தத்தையும் கண்டுணர்ந்து, அவர்பட்ட பாடுகளையும், எதிர்கொண்ட வீர மரணத்தையும், இலட்சிய புரு­னாக உயிர்த்ததையும் அறிக்கையிடுகின்றோம்.
                                 x.      நினைவு: புனிதர்கள், திருச்சபையின் தலைவர்கள், திருச்சபையின் மக்கள், இறந்தவர்கள் அனைவரையும் ஒரே ஆண்டவரின் பிள்ளைகள் எனும் நோக்கோடு நினைவு கூறுகின்றோம்.
                                                          xi.      இறுதிப் புகழுரை: அன்பில் ஒன்றான திருச்சபை கிறிஸ்து வழியாகக் கிறிஸ்துவோடு, கிறிஸ்துவுக்குள் பிதாவிற்கு புகழ்ச்சியைச் செலுத்துகின்றது.
                                                        xii.      கர்த்தர் கற்பித்த செபம்: அனைவரும் குழந்தைகளுக்குரிய மனநிலையோடு, ஆண்டவர் கிறிஸ்து சொல்லிக் கொடுத்த செபத்தினைச் சொல்கின்றனர்.
                                                      xiii.      சமாதானப் பகிர்வு: திருப்பலி கொண்டாட்டத்தில் பங்கு பெறுவோர் அனைவரும் சகோதர, சகோதரிகளாக இருக்கிறோம், வேறுபாடுகளோ, பகைமையோ இல்லை, என்பதனைக் காட்டுகின்றதன் அடையாளம் இது.
                                        xiv.      நற்கருணை விருந்து: ஆன்ம உணவாக ஆண்டவர் வருகின்றார், நற்கருணை வடிவிலே அவரை ஏற்றுக் கொள்ளும் வண்ணம், ஆமென் என்று சொல்லி அவரைப் பெற்றுக் கொள்கிறோம் (ஆமென் எனில் ஆம் என்பது பொருள்)
                                          xv.      நன்றி செபம்: இறை மக்களின் நன்றியைத் திருக் கூட்டத்தின் தலைவராக இருக்கும் குரு நன்றி செபமாகக் கூறுகின்றார்.
                                                      xvi.      பிரியாவிடை: குருவின் ஆசிகளோடு இறைமக்கள் பலியான கிறிஸ்துவைப் பெற்றுக் கொண்டு பரந்த உலகில் இனி பலியாக, விடைபெற்றுச் செல்கின்றனர்.
4)      திருப்பலியில் உடல் செயல்பாடுகள்
                                     i.     எழுந்து நிற்பது: உயிர்த்த இயேசுவுடன் நாமும் இணைந்தவர்கள் என்பதனை இது காட்டுகின்றது.
                                                            ii.      அமர்தல்: இறைவார்த்தையைக் கவனமாகக் கேட்கவும், தியானிக்கவும் எவ்வித சலனத்திற்கும், இடையூறுக்கும் இடம் கொடாதிருக்க இது மேற்கொள்ளப்படுகிறது.
                                  iii.      மண்டியிடுதல்: இறைவனுக்கு முன் நாம் ஒன்று மில்லாதவர்கள் எனும் நிலையைக் குறிக்கிறது.
                                                     iv.      தலைவணங்குதல்: இறைவனை ஆராதிப்பதற்கும், மரியாதை செய்வதற்கும்அவருக்கு முன் நாம் தகுதியற்றவர்கள் என்பதனை இது காட்டுகின்றது.
                                                            v.      பவனி: (வருகை, காணிக்கை, நற்கருணை) அனைவரும் ஒன்ருகூடி இறைவனை நோக்கி ஆவலுடன் அவர் வழி நடக்கவும், அவரிடம் தஞ்சமடையவும் செல்கிறோம் என்பதற்கான அடையாளம்.
                                                          vi.      நெஞ்சில் அறைதல்: செய்த குற்றத்திற்கு வருந்துகின்ற மனநிலையின் ஓர் அடையாளம்.
                                                        vii.      கரங்களைக் குவித்தல்: இது நாமும், இறைவனுடன் இணைந்துள்ளோம் என்பதனையும், நமது மரியாதையையும் காட்டுகின்றது.
                                                      viii.      சமாதானத்தை அறிவித்தல்: ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு, மன்னித்து, மதிப்பளித்து, அன்பு உறவில் வாழத் தயாராக இருக்கிறோம் என்பதன் வெளி அடையாளம்.
5)      திருப்பலியில் பயன்படுத்தப்படும் பொருள்கள்
                                                              i.      விளக்கு, எரியும் மெழுகுவர்த்திகள்: கிறிஸ்து, உயிருள்ள இறைவனாகத் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளம்.
                                                       ii.      தூபம்: இறைவனை ஆராதிப்பதற்கும் அதனின்று மேலெழும் புகை, போன்று நமது செபங்களும் இறைவனை நோக்கி மேலெழுகின்றன என்பதற்கும் அடையாளம்.
                                                          iii.      மலர்கள்: இயற்கையின் சிகரம் மலர்கள். அவற்றினைப் பீடத்தின் மீது வைத்து இயற்கை வழியாக இறைவனை மகிமைப்படுத்துகிறோம்.
                                                      iv.      தண்ணீர்: இறைவனே நமது வாழ்வின் மையம். அவர் இல்லையெனில் நமது வாழ்வு வறண்டுவிடும். அவராலே வாழ்வு பெற்று தூய்மையாக்கப்படுகிறோம் என்பதன் அடையாளம்.
                                                     v.      அப்பமும் இரசமும்: மனிதன், அவனது உழைப்பு, இன்பங்கள், துன்பங்கள் இவைகளின் முழு உருவாகப் பீடத்தின் காணிக்கையாக அர்ப்பணிக்கப்படுகின்றன.
                                                          vi.      நற்கருணைப் பாத்திரம், திருக்கிண்ணம், நன்மைத்தட்டு: தினந்தோறும் திருச்சடங்கில் பலியாகும் கிறிஸ்துவைத் தாங்கும் பாத்திரங்கள்.
                                                        vii.      திரு உடைகள்: குருவின் பணியையும், இத்திருப்பலிக் கொண்டாட்டத்தின் பொருளையும், மக்களின் மனநிலையையும், இவை குறிக்கின்றன.
                                                      viii.      திருச்சிலுவை: பீடத்தல் நிகழும் பலி, கல்வாரிப் பலியின் நிகழ்வே என்பதனை நமக்கு நினைவுறுத்துகிறது.
............................................


திருவழிபாட்டில்: வழிபாட்டில் அடையாளங்களும் குறியீடுகளும் முக்கிய இடம் பெறுகின்றன.அவை இறைவன் மக்களிடம் கூற விரும்புவதையும், மக்கள் இறைவனிடம் கூற விரும்புவதையும் உணர்த்திக் காட்டும் ஆழ்ந்த பொருள்மிக்க அடையாளங்கள் ஆகும்.மேலும் வழிபாட்டில் பயன்படுத்தப்படும் பல விதமான சொற்களும், செயல்களும், உடல்நிலைகளும், சைகைகளும் பொருள் பொதிந்தவை. இவற்றை நாம் விளக்கிக் கூற வேண்டும்.
சில எடுத்துக்காட்டுகள்
·         ஓய்வு நாள்- ஆண்டவரின் நாள்
·         கோவில்- இறைவனின் இல்லம், புனித இடம்
·         கைகளைக் குவித்தல்- செபத்தின் அடையாளம்
· சொல் (செபங்கள்)- புகழ்ச்சி, நன்றி, மன்னிப்பு ஆகியவற்றின் அடையாளம்
·         மார்பில் பிழைதட்டுதல்- மனவருத்தத்தின் அடையாளம்
·         பணிந்து வணங்குதல்
·      (முழந்தாளிடுதல்)- ஆராதனை, வணக்கம் செலுத்துவதன் அடையாளம்
·         நிற்றல்- எதிர்பார்த்துக் காத்திருத்தலின் அடையாளம்
·         அமர்தல்- கூர்ந்து கவனித்தல், தியானத்தின் அடையாளம்
·         சிரம் தாழ்த்துதல்- பணிவின் அடையாளம்
·         உண்ணா நோன்பு- தவத்தின் அடையாளம்
·         தைலம் பூசுதல்- அருள்பொழிவின் அடையாளம்
·         உடன்படிக்கை - ஒப்பந்தத்தின் அடையாளம்
·         சாம்பல்- தவத்தின் அடையாளம்
·         தீர்த்தம்- தூய்மைப்படுத்துதல், ஆசீர் அளிப்பதன் அடையாளம்

அருள்சாதனங்களில்: அருள்சாதனக் கொண்டாட்டங்களின்போது,
1)      கொண்டாடப்படும் அருள்சாதனத்தின் சிறப்பு,
2)      அதன் தேவை,
3)      அதில் இடம் பெறும் முக்கிய அடையாளச் செயல்கள்,
4)      பயன்படுத்தப்படும் பொருள்கள்,
5)      அதன் முக்கிய சடங்குகள்,
6) அதில் சொல்லப்படும் செபங்கள் போன்றவற்றைப் பற்றிய விளக்கங்களைச் சொல்லலாம்.
சில எடுத்துக்காட்டுகள்:
திருமுழுக்கில்: திருமுழுக்கின்போது,
1)      பெற்றோரின் பணிகள், கடமைகள்,
2)      ஞானப் பெறறோரைத் தெரிவு செய்தல்,
3)      அவர்களுடைய பணிகள், கடமைகள்,
4) விவிலியத்தில் திருமுழுக்கு பற்றிய பகுதிகளையும் விளக்கிச் சொல்லலாம்.  (மேலும் பின்வருபவற்றையும் விளக்கலாம்.)
சில எடுத்துக்காட்டுகள்.,
·         தண்ணீர் - புது வாழ்வின் அடையாளம்
·         ஆயத்த எண்ணெய் பூசுதல் - பேயை ஓட்டி வலிமை அளித்தல்
·  சாத்தானை மறுதலித்தல் - பாவம், தீமை, தீய நாட்டம் ஆகிய அனைத்தையும் துறக்க விரும்புவதன் அடையாளம்
· விசுவாச அறிக்கையிடல் - மூவொரு இறைவனை வெளிப்படையாக அறிக்கையிட்டுஏற்றுக்கொள்வதன் அடையாளம்
·    சடங்குக் குளியல் - திருமுழுக்கு பெறுவதன், பாவம் போக்கப்படுவன் அடையாளம்
·  மூழ்கி எழுதல் -இறப்பிலிருந்து உயிர்ப்புக்கும், பழைய வாழ்விலிருந்து புதிய வாழ்வுக்கும் கடந்து செல்வதன் அடையாளம் 
·         திருத்தைலம் பூசுதல் - அருள்பொழிவின் அடையாளம்
·         பாஸ்கா திரி - ஒளியாம் கிறிஸ்துவின் அடையாளம்
·    எரியும் திரி - பாவ இருள் நீக்கி, அருள் ஒளி பெற்ற ஆன்மாவின் அடையாளம்
·         வெள்ளைத் துணி - தூய உள்ளத்தின் அடையாளம்
· எப்பேத்தா சடங்கு - இறைவார்த்தையைக் கேட்டு, அறிவிக்க அழைக்கப்படுவதன் அடையாளம்

முதல் நற்கருணையில் : முதல் நற்கருணை (புது நன்மை) கொண்டாட்டத்தில், நற்கருணை என்பது
1)      இயேசுவின் திருவுடல், திரு இரத்தம்,
2)      இயேசுவின் பலி உணவு,
3)      நமது ஆன்ம உணவு,
4)      இயேசுவின் மெய்யான உடனிருப்பு
5)      கிறிஸ்தவ வாழ்வின் மையம்,
6)      பகிர்வின் அடையாளம்,
7)      உட்கொள்ளும் முன் செய்ய வேண்டிய முன்தயாரிப்புகள்,
8)      நற்கருணை ஆன்மிகம்,
9) நற்கருணை பக்தி போன்றவை பற்றிச் சொல்லலாம்.  (மேலும் பின்வருபவற்றையும் விளக்கலாம்).
சில எடுத்துக்காட்டுகள்:
·         பீடம் - பலியிடும் இடத்தின் அடையாளம்
·         அப்பம் - கிறிஸ்துவின் உடல்(ஆன்ம உணவு)
·         இரசம் - மகிழ்வின் அடையாளம், கிறிஸ்துவின் திருஇரத்தம்
·         காணிக்கை - தற்கையளிப்பின் அடையாளம்
·         நற்கருணை மன்றாட்டு - இறைப்புகழ்ச்சி, நன்றியின் அடையாளம்
·         அப்பம் பிடுதல் - பகிர்வின் அடையாளம்
·         சமாதானம் கூறுதல் - ஒப்புரவின் அடையாளம்

குருத்துவத்தில்: இக்கொண்டாட்டத்தில் இடம்பெறும் முக்கியச் சடங்குகளைப் பின்வரும் கண்ணோட்டத்தோடு விளக்கலாம்.
·   கைகளை வைத்துச் செபித்தல் - தூய ஆவியாரை வழங்குவதன் அடையாளம்
·         திருவுடை அணிவித்தல் - திருப்பணி நிலைகளின் அடையாளம்
·         புதிய ஆயருக்கு மோதிரம் - விசுவாச முத்திரையின் அடையாளம்
·         தலைச் சீரா - புனிதத்தின் அடையாளம்
·         செங்கோல் - வழிநடத்தும் பணியின் அடையாளம்
·  இருக்கையில் அமரச் செய்தல் - மறைமாவட்டத்தின் பொறுப்பை ஏற்பதன் அடையாளம்
·    ஆயர்களின் சமாதான முத்தம் - மகிழ்ச்சி, ஒன்றிப்பின் அடையாளம்
· கைகளில் திருத்தைலம் பூசுதல்- திருப்பலி நிறைவேற்றுமாறு (குருக்களுக்கு) புனிதப்படுத்துதல்
·   தலையில் திருத்தைலம் பூசுதல் - அருள்பொழிவின் அடையாளம் (ஆயர்களுக்கு)