ஆசிரியரின் செபம்

ஆண்டவராகிய இயேசுவே ! குழந்தையின் உள்ளத்தை உருவாக்கும் உன்னத பணியை எனக்கு அளித்திருக்கிறீர். என் சொல்லும் செயலும் ஒரு குழந்தையின் உள்ளத்தில் ஆழமாய்ப் பதிகின்றன, என்றென்றும் வாழ ஏதுவான பண்புகளை அவர்களிடம் வளர்க்கின்றன என்பதை நான் அறிந்துள்ளேன். எனவே, பாடத் தயாரிப்பிலும் பாடப் போதனையிலும் நான் பெருமுயற்சி எடுக்க எனக்கு உதவியாயிரும்.

அவர்களிடம் ஒழுக்கத்தை உருவாக்குவதில் கண்டிப்புக் காட்டும் அதே நேரத்தில், அவர்களிடம் அன்பாகவும் ஆதரவாகவும் இருப்பேனாக. அவர்களின் சிந்தனைத் திறனைச் சீராக வளர்த்திட நான் உதவுவேனாக. அவர்களிடம் உம்மையே கண்டு, உம் சாயலை அவர்களிடம் உருவாக்கும் அரிய பணியில் அயர்ந்து விடாமல் உழைக்க, நீர் என்றும் என்னோடு இருந்தருளும். -ஆமென்.

பேர் கொண்ட புனிதரை நோக்கி செபம்

என் பேர் கொண்டிருக்கிற புனிதரே ! ....உமது அடைக்கலத்தில் என்னை ஒப்படைத்து விடுகிறேன். எனக்கு இடப்பட்டிருக்கும் பெயருக்கு ஏற்ப சுகிர்த நடத்தை உள்ளவனாய் வாழவும் உம்மிடத்தில் சிறப்புற விளங்கிய புண்ணியங்களை நான் அனுசரிக்கவும், எனக்குத் தேவ கிருபை கிடைக்கத்தக்கதாகப் பலமாய் மனுபேசியருளும். என் வாழ்நாளில் எனக்கு நேரிடும் ஆபத்துகளில் நின்று என்னைத் தற்காத்துப் பயங்கரமான மரணவேளையில் என்னைக் கைவிடாமல் பாதுகாத்தருளும் காவலனே ! - ஆமென்.

நோயாளிகள் சொல்லத்தகும் செபம்

ஒரே சர்வேசுரன் உண்டு என்று விசுவசிக்கிறேன். அவர் நல்லவர்களுக்குச் சன்மானமும், கெட்டவர்களுக்குத் தண்டனையும் கொடுப்பார் என்று விசுவசிக்கிறேன். ஒரே சர்வேசுரனில் தந்தை இறைவன், மகன் இறைவன், பரிசுத்த ஆவியார் இறைவன் ஆகிய மூன்று தெய்வீக ஆட்கள் இருக்கிறார்கள் என்று விசுவசிக்கிறேன்.

மகனாகிய இறைவன் தம் கடவுள் தன்மையை விட்டுவிடாமல் மனிதனானார் என்று விசுவசிக்கிறேன். என் ஆண்டவர், என் இரட்சகர் மனுக்குலத்தின் மீட்பர் என்று விசுவசிக்கிறேன். அவர் எல்லா மனிதருடைய மீட்புக்காகவும் எனக்காகவும் சிலுவையில்
மரித்தார் என்று விசுவசிக்கிறேன். இறைவன் போதித்து வெளிப்படுத்திய அனைத்தையும் அவருடைய ஆதாரத்தின் மேல் விசுவசிக்கிறேன்.

ஓ, என் தேவனே ! எனக்குத் திடமான விசுவாசத்தைத் தந்தருளும். ஓ, என் தேவனே ! நான் உயிருள்ள விசுவாசத்தோடு விசுவசிக்க எனக்கு உதவி செய்யும்.
அளவற்ற நன்மையும் இரக்கமும் உள்ள இறைவா, நான் இரட்சணியம் அடைவேன் என்று எதார்த்தமாய் நம்புகிறேன். எனது இரட்சணியத்துக்கு வேண்டிய சகலத்தையும் நான் செய்யும் படி எனக்கு உதவி செய்யும்.

என் வாழ்நாளில் நான் அநேக பாவங்களை செய்தேன். ஆனால் இப்பொழுது நான் அவைகளைப் புறக்கணிக்கிறேன். அவைகளை வெறுக்கிறேன். அவைகள் எல்லாவற்றிற்காகவும் மெய்யாகவே மனஸ்தாபமாயிருக்கிறேன். அனைத்து நலனும், நிறைவான தூய்மையும், பேரிரக்க தயாளமும் கொண்டுள்ள என் இறைவனுக்கு விரோதமாகவும் சிலுவையில் எனக்காக மரித்த என் தேவனுக்கு விரோதமாகவும் துரோகம் செய்தேன் என்கிறதினாலே மனஸ்தாபமாயிருக்கிறேன்.

ஓ என் தேவனே ! என் முழு இருதயத்தோடு உம்மை நேசிக்கிறேன். தேவரீரை மனநோகச் செய்ததற்க்காக என்னை மன்னிக்கும் படி உம்மை கெஞ்சி மன்றாடுகிறேன்.
ஓ என் தேவனே ! உமது உதவியைக் கொண்டு இனிமேல் ஒருக்காலும் உமக்கு விரோதமாக நடக்கமாட்டேன் என்று வாக்குக் கொடுக்கிறேன்.

என் அன்புள்ள இறைவா ! என் பேரில் இரக்கமாயிரும்.

நல்ல மரணத்துக்கு ஆயத்தம்

நல்ல மரணத்தினாலே நித்திய பேரின்பமும் துன்மரணத்தினாலே நித்திய நரக நிர்பாந்த ஆக்கினையும் வருகிறபடியால் நல்ல மரணத்துக்கு ஆயத்தம் பண்ணுகிறது யாவருக்கும் மகா அவசரமான காரியமாயிருக்கறது. நன்மரண ஆயத்தத்துக்கு ஆத்தும சுத்திகரம் பிரதானமாய் இருக்கிரபடியதாலும், உனக்கு சாவு எப்போது வருமென்கிற நிச்சயம் தெரியாததினாலும், அப்போதைக்கப் போது பாவசங்கீர்த்தனத்தில் உன் ஆத்துமத்தைச் சுத்தி செய்வதுமில்லாமல், உனக்கு வியாதி வந்து உன் புத்தி தடுமாற்றங்கொள்ளும் போது குருவை அழைக்காமல், நல்ல நினைவு இருக்கும் போதே பாவசங்கீர்தனம் செய்து நோயில் பூசுதலைப் பெற்று, அடிக்கடி விசுவாச நம்பிக்கை தேவசிநேக முயற்சிகளையும், உத்தம மனஸ்தாப பரலோக, அருள் நிறைந்த, மந்திரங்களையும் செபித்து இதன் அடியில் வரும் செபத்தையும் செபித்துக் கொண்டு வருவாயாக.

கொடிய நேய்வாய் பட்ட காலத்தில் சொல்லத்தக்க செபம்

ஓ இயேசுவே ! திவ்விய மீட்பரே, எங்கள் பேரிலும், உலகினர் பேரிலும் இரக்கமாய் இரும் !
ஓ வல்லபக் கடவுளே ! ஓ பரம தேவனே ! என்றும் வாழும் இறைவா, எங்கள் பேரிலும் உலகத்தார் அனைவர்பேரிலும் தயையாயிரும்.

என் இயேசுவே ! எங்களுக்குப் பொறுத்தலும் இரக்கமும் அளித்து, இந்த ஆபத்தான காலத்தில் உமது விலையேறப் பெற்ற திரு இரத்தத்தை எங்கள் பேரில் தெளித்தருளும். என்றென்றும் வாழும் தந்தையே ! உமது ஒரே பேறான இயேசுகிறிஸ்துவின் திரு இருதயத்தைப் பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிற எங்கள் பேரில் இரக்கமாயிரும். -ஆமென்.