தூய அந்தோணியாரை நோக்கி பொது மன்றாட்டு


எங்கள் பாதுகாவலரான தூய அந்தோணியாரே, இறைவனின் அன்புள்ள அடியாரே கிறிஸ்து பாலகனை கையில் ஏந்தும் பேறுபெற்ற தூயவரே, திருமறையை ஆர்வமுடன் போதித்த சிறந்த போதகரே தப்பறைகளை தகர்த்தெறிந்த வித்தகரே, இறைவனின் தனி அருளால் அலகையை ஓட்டுபவரே, துன்புறுவோரின் துயர் துடைப்பவரே, பாவியராகிய நாங்கள் உமது உதவியை நாடி உம்மிடம் ஓடி வந்தோம்.
புதுமை வரம் பெற்றிருக்கும் எம் ஞானத்தந்தையே! நம்பிக்கையுடன் உம்மிடம் ஓடி வந்துள்ள உம் பிள்ளைகளின் மனறாட்டுக்களை கேட்டருளும். உமது ஆதரவை நாடி வந்துள்ள உம் அடியார் எம்மீது உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும். துன்பம், பிணி, வறுமை, சிறுமை ஆகியற்றால் வாடி வந்திருக்கும் எங்களுக்கு உதவியருளும். அழுவோரின் கண்ணீரைத் துடைத்தருளும். நோயாளிகளுக்கு உடல் நலம் கொடுத்தருளும்.
எங்கள் அன்புக்குரிய தூய அந்தோணியாரே! இறைவனின் திருவுளப்படி எப்பொழுதும் நீர் நடந்தது போல நாங்களும் இன்பத்திலும் துன்பத்திலும் எப்பொழுதும் அவரது திருவுளத்துக்கு இசைந்து நடக்கவும், நீர் தூய வாழ்வு வாழ்ந்தது போல, நாங்களும் ஒருவருக்கும் வஞ்சகம் நினையாமலும், செய்யாமலும் தீமையை அகற்றி புனிதராய் வாழவும், திருச்சபை தளைக்கவும், நாடு செழிக்கவும், நாங்கள் நேர்மையுடன் உழைக்கவும், மக்கள் யாவரும் மெய்யங்கடவுளைக் கண்டறிந்து, தக்க முறையில் அவரை வழிபடவும் எங்களுக்காக இயேசுவை வேண்டியருளும்.
எங்களையும் எங்கள் குடும்பங்களையும், எங்கள் தொழில் முயற்சிகளையும், உழைப்பினையும் ஆசீர்வதித்தருளும். எங்கள் விண்ணப்பங்கள் நிறைவேற எங்களுக்காக இறைவனை மன்றாட வேண்டுகிறோம். - ஆமென்.

வேளாங்கன்னி மாதாவுக்கு நவநாள் செபம்


மகா பரிசுத்த கன்னிகையே, இயேசுவின் தாயாராயிருக்குமாறு நித்தியமாக பரிசுத்த மூவொரு கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட தூய மணியே! குடவுளுடைய திருப்புதல்வன் உமது திரு உதரத்தில் அவதாரமான போதும், ஒன்பது மாதமளவாக அவரை உமது மாசணுகாத கருவில் தாங்கிய போதும், நீர் அடைந்த பேரின்பத்தை உமது ஏழை ஊழியனாகிய அடியேன் உமக்கு நினைவூட்டுகிறேன். எனது அன்பினாலும், செபங்களாலும் நீர் அப்போது அனுபவித்த இன்பத்தை மீண்டும் புதுப்பிக்கவும் கூடுமானால் அதிகரிக்கவும் விரும்புகிறேன்.
துன்பப்படுகிறவர்களுக்கு இரக்கம் மிகுந்த அன்னையே! நீர் அப்போது அனுபவித்த இப்பெருமகிழ்ச்சியைக் கொண்டாடுபவர்களுக்கு நீர் வாக்களித்துள்ள விசேச உதவியையும், பாதுகாப்பையும் எனக்கு இத்துன்ப நேரத்தில் தந்தருளும். உமது தெய்வப் புதல்வனுடைய அளவற்ற வல்லமையில் நம்பிக்கை கொண்டுள்ளேன். கேட்பவருக்கு அளிப்பதாக அவர் தந்த வாக்குறுதியை நினைத்து, உமது பெரும் வல்லமை நிறைந்த மன்றாட்டுக்களில் உறுதி கொண்டுள்ளேன். இந்த நவநாளின் போது நான் செய்யும் விண்ணப்பங்களை கடவுளுடைய திருச்சித்தத்திற்கு ஏற்றவையானால் அவரிடம் பரிந்து பேசி அடைந்து தந்தருளும். நான் கேட்கும் மன்றாட்டுகள் கடவுளுடைய திரு விருப்பத்திற்கு மாறானதாயிருந்தால் எனக்கு எவ்வரம் மிகவும் தேவையோ அதையே அடைந்து தந்தருளும்.
(இங்கு உம்மன்றாட்டு இன்னதெனச் சொல்லவும்)
தேவனின் தாயே! இப்போது உமக்கு வணக்கமாக நான்செய்யும் இந்நவநாளை உம்மில் நான் கொண்டிருக்கும் பெரும் நம்பிக்கையை காட்டுவதற்காகவே செய்கிறேன். இயேசு மனிதனான போது உமது திரு உள்ளம் அடைந்த தெய்வீக மகிழ்ச்சியை நினைத்து அதற்கு வணக்கமாக நான் செய்யும் இந்நவநாளையும் இப்போது நான் சொல்லப் போகும் அருள் நிறை செபத்தையும் அன்புடன் ஏற்றுக் கொள்ளும்.
(இங்கு அருள் நிறை செபத்தை ஒன்பது முறை சொல்லவும்)
கடவுளின் மாட்சி பெற்ற அன்னையே! அருள் நிறைந்தவள் என முதன் முதல் அதிதூதர் கபிரியேல் சொன்னபோது கொண்டிருந்த பணிவு வணக்கத்துடன் நானும் இவ்வாழ்த்துல்களைக் கூறுகிறேன். ஏற்றுக் கொள்ளும்.
நீர் அணிந்திருக்கும் முடியில் என் செபங்கள் அத்தனையும் விண்மீன்களெனத் துலங்குமாறு விரும்புகிறேன். வருந்துவோருக்கு ஆறுதலே, நான் உம்மிடம் இப்போது மன்றாடும் விண்ணப்பங்கள் நிறைவேறுமாறு உமக்கு வணக்கமாக இதுவரை பரிசுத்தவான்களால் செய்யப்பட்ட எல்லாப் புனித செயல்களையும் ஒப்புக் கொடுக்கிறேன். உமது திரு
மகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு நாதருடைய திரு இருதயத்தில் பொங்கி வழியும் பேரன்பையும் அது போன்ற உமது அன்பையும் பார்த்து, ஏழையான எனது செபத்தை ஏற்று என்மன்றாட்டை அடைந்து அடைந்து தந்தருளும் தாயே! - ஆமென்.

ஆபத்தான வேளையில்அன்னையை நோக்கி ஜெபம்


நிரந்தர சகாயத்தின் நேச ஆண்டவளே! மாசணுகாத்தாயே உம்மை நாங்கள் இவ்வீட்டின் ஆண்டவளாகவும், எஜமாட்டியாகவும் தெரிந்து கொள்கிறோம். கொள்ளை நோய், இடி, மின்னல் புயல் காற்றிலிருந்தும் விமானத்தாக்குதல் விரோதிகளின் பகை குரோதத்திலிருந்தும் இவ்வீட்டைப் பாதுகாத்தருளும், மிகவும் அன்புள்ள தாயே! இங்கு வசிக்கிறவர்களை ஆதரியும். அவர்கள் இங்கிருந்து வெளியில் போகும் போதும், உள்ளே வரும் போதும் அவர்களுக்குத் துணையாயிருந்து சடுதி மரணத்தினின்றும் அவர்களை இரட்சியும், எங்களை சகல பாவங்களிலும் ஆபத்துக்களிலும் நின்றும் காப்பாற்றும். இவ்வுலகில் நாங்கள் சர்வேஸ்வரனுக்கு பிரமாணிக்கமாய் ஊழியம் செய்து உம்மோடு கூட நித்தியத்திற்கும் அவரின் இன்பமான தேவ தரிசனத்தை அடைந்து சுகிக்க எங்களுக்காகப் பிரார்த்தித்தருளும் தாயே! - ஆமென்.

தவக்கால ஆரதனை வழிபாட்டுக்குரியவைகள்


பிழை தீர்க்கிற மந்திரம்

சர்வ தயாபர இயேசுவே! பாவிகளாயிருக்கிற எங்கள் பேரில்
தயவாயிரும் சுவாமி தயவாயிரும்

மண்ணால் மனுசனை உண்டாக்கி
திவ்விய கருணையால் வல்லவனாக்கி
அவன் கையாற் பாடுபடத் திருவுளமான
என் தயாபர இயேசுவே - தயவாயிரும் சுவாமி தயவாயிரும்

துஸ்டயூதர் கையிற் சிறைப்பட்டு
திருக்கண்டத்தில் கரத்திற் கயிறிட்டு
செம்மறி போலப் பலிக்கேகப்பட்ட
என் தயாபர இயேசுவே -தயவாயிரும் சுவாமி தயவாயிரும்

அந்நீத குருச்சபையிலமைந்து
பொய்ச் சாட்சிகளுக்குப் பணிந்து
தேவ பழிகாரணாகக் கூறப்பட்ட
என் தயாபர இயேசுவே - தயவாயிரும் சுவாமி தயவாயிரும்

திருக் கண்ணத்தில் அறையுண்டு
திரு விழிகள் மறைக்கப்பட்டு
இரா முழுவதும் கோறணி வாதைகள் அனுபவித்த
என் தயாபர இயேசுவே - தயவாயிரும் சுவாமி தயவாயிரும்

பிலாத்திட்ட துஸ்ட தீர்வையாற் கற்றுணில் கட்டுண்டு
நிஸ்டுரமாக ஐயாயிரத்துக்கு அதிகமாக அடிபட்டு
சர்வாங்கமும் இரத்தவாறாக்கப்பட்ட
என் தயாபர இயேசுவே - தயவாயிரும் சுவாமி தயவாயிரும்

திருச்சிரசில் முள்முடி தரித்து
பீற்றற் சகலாத்தை மேலிற் போர்த்து
பரிகாச ராசனாக நிந்திக்கப்பட்ட
என் தயாபர இயேசுவே - தயவாயிரும் சுவாமி தயவாயிரும்

பாரதுரச் சிலுவை தோளிற் சுமந்து
கபால மலைமட்டும் தொய்வோடே நடந்து
பெலவீனமாகத் தரையிலே விழுந்த
என் தயாபர இயேசுவே - தயவாயிரும் சுவாமி தயவாயிரும்

திருத் துகிலைக் கடுரமாயுரிந்து
சர்வாங்க காயங்கள் விரிவாய் மிகுந்து
சபை முன்பாக நாணித்து வாதிக்கப்பட்ட
என் தயாபர இயேசுவே - தயவாயிரும் சுவாமி தயவாயிரும்

சிலுவை மரத்தின் மீதே சயனித்து
திருப்பாத கரங்களில் ஆணிகளால் அறைந்து
இரு கள்வருக்கு நடுவே நிறுத்தப்பட்ட
என் தயாபர இயேசுவே - தயவாயிரும் சுவாமி தயவாயிரும்

சிலுவையிலேறிச் சுகிர்தம் மொழிந்து
வாதிக்கிற சத்துராதிகளுக்குப் பாவம் பொறுத்து
அனைவருக்கும் தயவு காண்பித்த
என் தயாபர இயேசுவே - தயவாயிரும் சுவாமி தயவாயிரும்

சகல வாதைகளையுந் தீர அனுபவித்து
பாவிகள் இடேற்றம் முகிய முகித்து
சீவ பலியாகப் பிராணனைக் கொடுத்த
என் தயாபர இயேசுவே - தயவாயிரும் சுவாமி தயவாயிரும்

திரு முக மலர்வு மடிந்து
திரு விழிகள் மறைந்து
திருத் தலை கவிழ்ந்து மரணித்த
என் தயாபர இயேசுவே - தயவாயிரும் சுவாமி தயவாயிரும்

எனக்காக இத்தனை பாடுகளைப் பட்டீரே
என் பாவம் உத்தரிக்க உமது உதிரம் சிந்தினீரே
எனது ஆத்துமத்துக்காக உமது ஆத்துமத்தைக் கொடுத்த
என் தயாபர இயேசுவே -    தயவாயிரும் சுவாமி தயவாயிரும்

இந்த நன்றிகளை யெல்லாம் அடியேன் பாராமல்
எனக்காகப் பாடுபட்டதையும் எண்ணாமல்
மகா துட்ட துரோகத்தைச் செய்தேனே
என் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும்

இதோ என்னிருதயஞ் சகலமும் உதிர்ந்து
விதனத்தாற் பொடிப் பொடியாகப் பிளந்து
கண்களால் கண்ணீர் சொரிந்தழுது நிற்கிறேன்
என் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும்

என் பாவத்தின் அதிகத்தையும் கொடுமையையும் பாராமல்
என் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும்

உம்முடைய கிருபையையும் மகிமையின் மிகுதியையும் பார்த்து
என் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும்

உம்முடைய கசையடிகளையும் முள்முடியையும் பார்த்து
என் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும்

உம்முடைய சிலுவையையும் திருமரணத்தையும் பார்த்து
என் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும்

உம்முடைய சர்வாங்க காயங்களையும் திரு உதிரத்தையும் பார்த்து
என் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும்

சர்வ தயாபர இயேசுவே பாவிகளாயிருக்கிற எங்கள் பேரில்
தயவாயிரும் சுவாமி தயவாயிரும் - 3 முறை
(மூன்று பரலோக மந்திரம் சொல்லி முடிக்கவும்)

இயேசுவின் திரு இருதயத்திற்கு குடும்பத்தை ஒப்புக் கொடுக்கும் செபம்


இயேசுவின் திரு இருதயமே! கிறிஸ்தவ குடும்பங்களிலே தேவரீர் இராசாவாக இருந்து ஆண்டருள வேண்டுமென்ற ஆசையை புனித மார்க்கரீத் மரியம்மாளுக்கு வெளிப்படுத்தினீரே! இந்தக்குடும்பத்தின் மேலே உமக்கு மாத்திரமே உள்ள முழுஅதிகாரத்தையும் அறிக்கையிட இங்கு கூடியிருக்கிறோம். 

உம்முடைய சீவிய மாதிரிகையாக நாங்களும் சீவிக்க விரும்புகிறோம். எந்தெந்தப் புண்ணியத்தினால் உலகத்துக்குச் சமாதானம் உண்டாகுமென்று தேவரீர் ஏலவே வாக்குப்பண்ணி இருக்கிறீரே! அந்தப் புண்ணியம் இந்தக் குடும்பத்தில் செழித்து வளரவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம். தேவரீர் சபித்துத் தள்ளிவிட்ட உலகப்பற்றுதல்களை எங்கள் மத்தியிலிருந்து புறக்கணித்து அகற்றிவிட ஆசிக்கிறோம். கபடற்ற விசுவாசத்தைத் தந்தருளிஇ எங்கள் புத்தியின்மேல் தேவரீர் உமது அரசாட்சியைச் செலுத்தியருளும். சிநே அக்கினியால் மூண்டெரிந்து உம்மையே முற்றாக நேசிக்கும் அன்பைத்தந்துஇ எங்கள் இருதயங்களிலே உமது அரசாட்சியைச் செலுத்தியருளும். அடிக்கடி தேவநற்கருணை உட்கொள்ளுவதனால் இந்த நேச அக்கினிச்சுவாலை வளர்க்கப்பட்டு வருவதாக. 


இயேசுவின் திவ்விய இருதயமே! நாங்கள் ஒன்றுகூடும் வேளைகளில் தேவரீரே எங்கள் கூட்டங்களக்குத் தலைவராக இருந்தருளும். எங்கள் ஞான அலுவல்களையும் ஆசீர்வதித்தருளும். எங்கள் கவலைகள் எல்லாவற்றையும் நீக்கியருளும். எங்கள் சந்தோ~ங்களைப் பரிசுத்தமாக்கியருளும். எங்களது துன்ப துரிதங்களில் எங்களுக்குத் தேற்றரவாயிருந்தருளும்.

எப்போதாவது எங்களில் எவரேனும் தேவரீரைப் பிரியவீனப் படுத்தும் நிர்ப்பாக்கியத்திற்கு உள்ளாக நேரிடுமானால் மகா பரிசுத்தமுள்ள இருதயமே! நீர் மனந்திரும்பும் பாவிகள் மட்டில் நல்லவரும் இரக்கமும் உள்ளவராய் இருக்கிறீர் என்பதனை அப்படிப்பட்டவர்களுக்கு நினைவு படுத்தியருளும். நாங்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரியும் நேரம் வரும்போதும் மரணமானது எங்களது மத்தியில் துக்கங்களை உண்டுபண்ணும் போதும் பிரிகிறவர்களும் பிரியாதிருப்பவர்களுமாகிய நாங்கள் எல்லோரும் உம்முடைய நித்திய ஏற்பாடுகளுக்குப் பணிவான மனதுடன் இருக்கக் கிருபை செய்தருளும். இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் எல்லோரும் பரலோகத்தில் ஒருமித்துச் சேர்ந்து தேவரீருடைய மகிமைகளையும் நீர் எங்களுக்குச் செய்த உபகாரங்களையும் நித்தியமாய்ப் புகழ்ந்து பாடும் ஒரு நாள் வருமென்ற எண்ணம் எங்கள் எல்லோருக்கும் ஆறுதல் தருவதாக. 

மாசற்ற இருதய நாயகியும் மகத்துவம் பொருந்திய அதி பிதாவாகிய புனித சூசையப்பரும் இந்தக் காணிக்கையை உமக்கு ஒப்புக்கொடுத்து எங்கள் உயிருள்ளளவும் எங்களுக்கு இதனை நினைவ+ட்டுவார்களாக. எங்கள் அரசரும் தந்தையுமாகிய இயேசுவின் திரு இருதயம் துதிக்கப்படுவதாக. 

(இறந்து போன உறவினர்களுக்காக வேண்டிக்கொள்வோமாக. இவ்வேளையில் சிறிது நேரம் குடும்பங்களில் இறந்து போனவர்களை மௌனமாக நினைவு கூரவும்)

இரக்கத்தின் இறைவா! எமதுகுடும்பத்தில் இறந்துபோன உறவினர்களுக்காக நாங்கள் ஒப்புக் கொடுக்கும் இவ்வேண்டுதல் இறந்துபோன உமது அடியார்கள் அனைவருடைய ஆன்மாக்களுக்கும் பயன்படுவதாக. பாவம் அனைத்திலிமிருந்து அவர்களை விடுவித்து அவர்கள் உமது மீட்பில் பங்குபெற அருள்புரிவீராக. ஏன்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அதே கிறிஸ்து இயேசு வழியாக உம்மை மன்றாடுகின்றோம் - ஆமென்.

(1பரமண்டலம் 1அருள்நிறை மரியே சொல்லவும்)

இயேசுக்கிறிஸ்துவின் திருவாக்குறுதிகளுக்கு நாங்கள் பாத்திரராய் இருக்கத்தக்கதாக.

மகா பரிசுத்த இயேசுவின் திவ்விய இருதயமே எங்கள் பேரில் இரக்கமாயிரும் 

(3முறை)

மரியாயின் மாசற்ற இருதயமே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

புனித சூசையப்பரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்


புனித மார்க்கரீத்து மரியம்மாளே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். 
(பொருத்தமான பாடல் பாடலாம். பின்னர் குருவானவர் அனைவரையும் ஆசீர்வதிப்பார்)

விடுதலை ராகங்கள் விடியலின் கீதங்கள்

விடுதலை ராகங்கள் விடியலின் கீதங்கள்
முழங்கிடவாருங்களே
புது உலகமைத்திட புது வழி படைத்திட அன்புடன்வாருங்களே
வாருங்கள் வாருங்கள் ஆலயம் வாருங்கள்
அனைவரும் வாருங்களே...  அனைவரும் வாருங்களே


1
அன்புக்காகவும் அமைதிக்காகவும்
யேசு மனுவானார்
உண்மைக்காகவும் நீதிக்காகவும்
அவரே பலியானார் ( 2 )
ஒன்று கூடுவோம்... உணர்ந்து வாழுவோம் (2)
சுயநலம் நீக்கி பிறநலம் காத்து
அன்பினில் நாம் இணைவோம்
வாருங்கள் வாருங்கள் ஆலயம் வாருங்கள்
அனைவரும் வாருங்களே.. அனைவரும் வாருங்களே

2
ஏழை எளியவர் வாழும் இடங்களே
இறைவனின் வீடாகும்
வறுமைப் பிடியிலே அலறும் குடிகளே
இறைவனின் ஒளியாகும் ( 2 )
பகிர்ந்து வாழுவோம் பசியை நீக்குவோம்(2)
இறைவனின் அரசில் இனிமையைக் காண
இன்றே முயன்றிடுவோம்
வாருங்கள் வாருங்கள் ஆலயம் வாருங்கள்
அனைவரும் வாருங்களே.. அனைவரும் வாருங்களே

யேசுவே என்னுடன் நீ பேசு


யேசுவே என்னுடன் நீ பேசு
என்னிதயம் கூறுவதைக் கேளு
நான் ஒரு பாவி ஆறுதல் நீ கூறு
நாள் முழுதும் என்னை வழி நடத்து

1
உன் திருப் பெயர் நான் பாடிடும் கீதம்
உம் திரு இதயம் பேரானந்தம் (2)
உம் திரு வாழ்வெனக்கருளும்
இறைவா இறைவா
உம் திரு வாழ்வெனக்கருளும்
உம் திரு நிழலில் நான் குடி கொள்ள
என்றும் என்னுடன் இருப்பாய்

2
யேசுவின் பெயருக்கு மூவுலகெங்கும்
இணையடி பணிந்து தலை வணங்கிடுமே(2)
யேசுவே உம் புகழ் வாழ்க வாழ்க வாழ்க
யேசுவே உம் புகழ் வாழ்க
யேசுவே நீ என் இதயத்தின் வேந்தன்
என்னைத் தள்ளி விடாதீர்