யேசுவே என்னுடன் நீ பேசு


யேசுவே என்னுடன் நீ பேசு
என்னிதயம் கூறுவதைக் கேளு
நான் ஒரு பாவி ஆறுதல் நீ கூறு
நாள் முழுதும் என்னை வழி நடத்து


1
உன் திருப் பெயர் நான் பாடிடும் கீதம்
உம் திரு இதயம் பேரானந்தம் (2)
உம் திரு வாழ்வெனக்கருளும்
இறைவா இறைவா
உம் திரு வாழ்வெனக்கருளும்
உம் திரு நிழலில் நான் குடி கொள்ள
என்றும் என்னுடன் இருப்பாய்


2
யேசுவின் பெயருக்கு மூவுலகெங்கும்
இணையடி பணிந்து தலை வணங்கிடுமே(2)
யேசுவே உம் புகழ் வாழ்க வாழ்க வாழ்க
யேசுவே உம் புகழ் வாழ்க
யேசுவே நீ என் இதயத்தின் வேந்தன்
என்னைத் தள்ளி விடாதீர்

யேசுவின் அன்பை மறந்திடுவாயோ


யேசுவின் அன்பை மறந்திடுவாயோ
மறந்திடுவாயோ மனிதபண்பிருந்தால்
மறந்திடாதிருக்க நீர் சிலுவையிலே அவர்
மரித்து தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ
யேசுவின் அன்பை…

1
அளவில்லா அன்பு அதிசய அன்பு
ஆழம் அகலம் நீளம் எல்லைகாணா அன்பு
களங்கமில்லா அன்பு கருணைசேர் அன்பு
கல்வாரி மலைக் கண்ணீர் ததும்பும் அவரன்பு

2
அலைகடலைவிடப் பரந்த பேரன்பு
அன்னைமார் அன்பெல்லாம் திரையிடும் அன்பு
மலைபோல் வளர்ந்தென்னை வளைத்திடுமன்பு
சிலையெனப் பிரமையில் நிறுத்திடுமன்பு

3
எனக்காக மனுவுரு தரித்த நல்லன்பு
எனக்காகத் தன்னையே உணவாக்கும் அன்பு
எனக்காகப் பாடுகள் ஏற்ற பேரன்பு
எனக்காக உயிரையே தந்த தேவனன்பு

சுமை சுமந்து சோர்ந்திருப்போரே


சுமை சுமந்து சோர்ந்திருப்போரே
என்னிடம் எல்லோரும் வாருங்கள்( 2 )

1)
உங்களை நான் இளைப்பாற்றுவேன்
உங்களை நான் காப்பாற்றுவேன்( 2 )
உங்களை நான் தேற்றிடுவேன்
உங்களை நான் ஏற்றிடுவேன்

2)
உங்களை நான் நடத்திச் செல்வேன்
உங்களை நான் அன்பு செய்வேன் ( 2 )
உங்களை நான் அரவணைப்பேன்
உங்களை நான் வாழச்செய்வேன்

3)
உங்களை நான் வளரச்செய்வேன்
உங்களை நான் ஒளிரச்செய்வேன்( 2 )
உங்களை நான் மலரச்செய்வேன்
உங்களை நான் மிளிரச்செய்வேன்

தமிழால் உன் புகழ் பாடி


தமிழால் உன் புகழ் பாடி
தேவா நான் தினம் வாழ
வருவாயே திருநாயகா  
வரம் தருவாயே உருவானவா ( 2 )

1
எனைச் சூழும் துன்பங்கள்
கணையாக வரும்போது
துணையாகி எனை ஆள்பவா( 2 )
மனநோயில் நான் மூழ்கி
மடிகின்ற பொழுதிங்கு ( 2 )
குணமாக்க வருவாயப்பா
எனை உனதாக்கி அருள்வாயப்பா
2
உலகெல்லாம் இருளாகி
உடனுள்ளோர் சென்றாலும்
வழிகாட்டும் ஒளியானவா ( 2 )
நீதானே எனக்கெல்லாம்
நினைவெல்லாம் நீ தானே ( 2 )
நாதா உன் புகழ்பாடுவேன்
எனை நாளெல்லாம் நீ ஆளுவாய்

தமிழால் உன் புகழ் பாடி


தமிழால் உன் புகழ் பாடி
தேவா நான் தினம் வாழ
வருவாயே திருநாயகா  
வரம் தருவாயே உருவானவா ( 2 )

1
எனைச் சூழும் துன்பங்கள்
கணையாக வரும்போது
துணையாகி எனை ஆள்;பவா ( 2 )
மனநோயில் நான் மூழ்கி
மடிகின்ற பொழுதிங்கு ( 2 )
குணமாக்க வருவாயப்பா
எனை உனதாக்கி அருள்வாயப்பா
2
உலகெல்லாம் இருளாகி
உடனுள்ளோர் சென்றாலும்
வழிகாட்டும் ஒளியானவா ( 2 )
நீதானே எனக்கெல்லாம்
நினைவெல்லாம் நீ தானே ( 2 )
நாதா உன் புகழ்பாடுவேன்
எனை நாளெல்லாம் நீ ஆளுவாய்

தூய தேவ அன்னையின் (மன்றாட்டு மாலை) பிராத்தனை


சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சருவேசுரா
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சருவேசுரா
பரிசுத்த ஆவியாகிய சருவேசுரா .
அர்ச்சியசிஸ்ட தம திரித்துவமாயிருக்கிற ஏக சருவேசுரா

அர்ச்சியசிஸ்ட மரியாயே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
சருவேசுரனுடைய அர்ச்சியசிஸ்ட மாதாவே
கன்னியாஸ்திரிகளுக்குள்ளே உத்தம அர்ச்சியசிஸ்ட மாதாவே
கிறிஸ்துவினுடைய மாதாவே
தேவப்பிரசாதத்தின் மாதாவே
மகா பரிசுத்த மாதாவே
அத்தியந்த விரத்தியாயிருக்கிற மாதாவே
பழுதற்ற கன்னியாஸ்திரியாயிருக்கிற மாதாவே
கன்னி சுத்தங் கெடாத மாதாவே
மகா அன்புக்குப் பாத்திரமாயிருக்கிற மாதாவே
ஆச்சரியத்துக்கு உரிய மாதாவே
நல்ல ஆலோசனை மாதாவே
சிருஸ்டிகருடைய மாதாவே
இரட்சகருடைய மாதாவே
மகா புத்தி உடைத்தான கன்னிகையே
மகா வணக்கத்துக்கு உரிய கன்னிகையே
பிரகாசமாய் இஸ்துதிக்கப்படயோக்கியமாயிருக்கிற கன்னிகையே
சக்தி உடையவளாயிருக்கிற கன்னிகையே
தயையுள்ள கன்னிகையே
விசுவாசியாயிருக்கிற கன்னிகையே
தருமத்தினுடைய கண்ணாடியே
ஞானத்துக்கு இருப்பிடமே
எங்கள் சந்தோசத்தின் காரணமே
ஞான பாத்திரமே
மகிமைக்குரிய பாத்திரமே
அத்தியந்த பக்தி உடைத்தான பாத்திரமே
தேவ இரகசியத்தைக்கொண்டிருக்கிற ரோசா என்கிற புஸ்பமே
தாவீது இராசாவினுடைய உப்பரிகையே
தந்த மயமாயிருக்கிற உப்பரிகையே
சொர்ண மயமாயிருக்கிற ஆலயமே
வாக்குத் தத்தத்தின் பெட்டகமே
பரலோகத்தினுடைய வாசலே
விடியற் காலத்தின் நட்சத்திரமே
வியாதிக் காரருக்கு ஆரோக்கியமே
பாவிகளுக்கு அடைக்கலமே
கஸ்திப் படுகிறவர்களுக்குத் தேற்றரவே
கிறிஸ்தவர்களுடைய சகாயமே
சம்மனசுகளுடைய இராக்கினியே
பிதாப் பிதாக்களுடைய இராக்கினியே
தீர்க்கதரிசிகளுடைய இராக்கினியே
அப்போஸ்தலர்களுடைய இராக்கினியே
வேத சாட்சிகளுடைய இராக்கினியே
இஸ்துதியருடைய இராக்கினியே
சென்ம பாவம் இல்லாமல் உற்பவித்த இராக்கினியே
பரலோகத்துக்கு ஆரோபணமான இராக்கினியே
பரிசுத்த செபமாலை இராக்கினியே
சமாதானத்தின் இராக்கினியே

உலகத்தின் பாவங்களைப் போக்கும் சருவேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே – எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்கும் சருவேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே – எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்கும் சருவேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே – எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி

முதல்வர்: இயேசுக் கிறிஸ்து நாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக
அனைவரும்: சருவேசுரனுடைய பரிசுத்த மாதாவே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

செபிப்போமாக

சருவேசுரா சுவாமி! முழுமனதுடனே தண்டணாக விழுந்து கிடக்கிற இந்தக் குடும்பத்தைப் பார்த்து எப்பொழுதும் பரிசுத்த கன்னிகையான முத்திப் பேறுபெற்ற மரியாயினுடைய வேண்டுதலினாற் சகல சத்துருக்களின் சற்பனையிலே நின்று பிரசன்னராய்த் தயை செய்து இரட்சியும். இந்த மன்நாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவரான இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் - ஆமென்.

புனித அருளானந்தர் நவநாள் செபம்


செந்தமிழ் நாட்டிலே இயேசுமறையைப் போதிக்க வந்த மகிமை நிறைந்த அப்போஸ்தலரே! சொல்லிலும், செயலிலும் வல்லமை மிகுந்த புனித அருளானந்தரே, எங்களைக் கருணையுடன் நோக்கியருளும். எங்கள் குடும்பங்கள், உற்றார் உறவினர் மீதும், மாந்தர் அனைவர் மீதும் இரங்கியருளும். இறைவனின் ஏவுதலுக்கு இடைவிடாது செவிசாய்த்த உமது வியப்புக்குரிய பிரமாணிக்கத்தையும், கடின பயணங்களை மேற்கொண்டு. வேதனைகள், துன்பங்களைத் தாங்க உம்மைத் தூண்டின தளராத ஊக்கத்தையும் எண்ணி உம்மைப் புகழுகிறோம். உமது இதயத்தில் பற்றியெரிந்த அன்புத் தீ எங்கள் இதயத்திலும் பற்றியெரியச் செய்தருளும். மீட்புப் பணியினை நாங்களும் மனமுவந்து நிறைவேற்ற எங்களைத் தூண்டியருளும்
மகிமை நிறைந்த பாதுகாவலரே! மறவ நாட்டின் நல்ல ஆயரே! உம்முடைய உழைப்புகளையும், செப தவங்களையும், வீரத் தியாகத்தையும் முன்னிட்டு இறைவனிடமிருந்து நாங்கள் கேட்கும் மன்றாட்டைப் பெற்றுத் தந்தருளும். – ஆமென். (தேவையான மன்றாட்டை மௌனமாகக் கூறவும்)

புனித அருளானந்தருக்குச் செபம்
கிறிஸ்துவின் அன்பினால் நிறைந்த புனித அருளானந்தரே, அரண்மனை வாழ்வையும், உலக இன்பங்களையும், உற்றார் உறவினரையும், சொந்த நாட்டையும் துறந்து, தொலை நாடாகிய இந்தியாவுக்கு வந்து, மறவ நாட்டிலே கிறிஸ்துவின் அரசை நிறுவ, எண்ணில்லாத் துன்ப துயரங்களையும் இன்னல் இடைஞ்சல்களையும் பொருட்படுத்தாது, பத்தொன்பது ஆண்டுகளாய் உழைத்து, கணக்கற்ற ஆன்மாக்களை திருமந்தையில் சேர்த்த ஒப்பற்ற வீரரே! உமது குருதியால் புனிதமாக்கப்பட்ட தமிழ்நாட்டின் மக்களாகிய எங்கள் மீது உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும்.
புனித சவேரியாரைப் பின்பற்றி மெய்மறையைப் பரப்ப வந்த உத்தம போதகரே! மறவ நாட்டு மாணிக்கமே! எல்லார்க்கும் எல்லாமாக விளங்கி, எங்கள் முன்னோர்க்கு வாழ்வுதரும் நற்செய்தியை அறிவித்தீர். சோர்வின்றி நல்லன செய்யவும், அஞ்சா நெஞ்சத்தோடு ஆபத்துக்களை எதிர்கொள்ளவும், சோதனைகளையும், சாவையும் உறுதியுடன் ஏற்றுக் கொண்டீர்.
ஓ வீரம் மிகுந்த தியாகியே! இயேசு சபையின் ஒப்பற்ற மறைச்சாட்சியே! உம் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இந்த நாட்டில் உழைத்து வரும் குருக்களுக்கும் திருத்தொண்டர், துறவியர், வேதியர் அனைவருக்கும் உமக்கிருந்த இறையன்பும், ஆன்ம தாகமும், உயிரையும் பொருட்படுத்தாத தீரமும் உண்டாகச் செய்தருளும். கிறிஸ்துவின் மந்தையைச் சேராத எத்தனையோ இலட்சம் ஆடுகள் இந்நாட்டில் உண்டு. அவர்களுக்கெல்லாம் வழிகாட்டி ஒளியேற்ற இன்னும் பல குருக்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளராகிய ஆண்டவரை மன்றாடியருளும். தவிர, துன்பத்தாலும் நோயாலும் வறுமையாலும் நலிந்து வாழும் ஏழை மக்கள் மீதும்; இரக்கமாயிரும். அனைவர் நடுவிலும் கிறிஸ்துவின் அன்பும் அமைதியும் நிலைத்து நிற்பனவாக!
இறுதியாக, புனித அருளானந்தரே, எங்கள் ஆயர்கள், குருக்கள், துறவியர், மக்கள் அனைவரையும் உமது பாதுகாவலில் வைக்கிறோம். அவர்கள் எல்லாரும் நம் ஆண்டவர் கிறிஸ்துவின் அன்பில் எல்லா நலன்களையும் பெற்று, பரம தந்தையின் திருவுளத்துக்கு அமைந்து, புனிதர்களாய் வாழ்ந்து, என்றும் மாறாத பேரின்ப வாழ்வுக்கு வந்து சேரச் செய்தருளும். – ஆமென். 

புனித அருளானந்தரின் மன்றாட்டுமாலை
சுவாமி கிருபையாயிரும் 
கிறிஸ்துவே கிருபையாயிரும் 
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் 
கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா 
-எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி. 
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா 
-எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா 
-எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி 
தூய தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா 
-எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
மறைச்சாட்சியரின் மாண்புமிகு அரசியாகிய மரியாவே. மறைசாட்சியான புனித அருளானந்தரே. 
போர்த்துக்கல் நாட்டிலே லிஸ்பன் நகரிலே 1647 இல் உதித்தவரான புனித அருளானந்தரே. 
அரசவையிலே இளவரசர் டான் பேத்ரோவின் தோழராய் வளர்ந்தாலும் கறையிலாத் தூய்மையாலும், கண்ணியமிக்கப் பொறுமையாலும் “வானத்தூதர்” என்றும், “மறைச்சாட்சி” என்றும் அழைக்கப்பட்ட புனித அருளானந்தரே. 
இளமையில் கொடிய நோயுற்றபோது, புனித சவேரியாருக்கு வேண்டுதல் செய்து குணமடைந்ததால், துறவிகளின் ஆடை அணிந்து வாழ்ந்த புனித அருளானந்தரே. 
புதினைந்து வயதிலே உலகைத் துறந்து, அன்னையையும் சுற்றத்தார் நண்பர்களையும் விட்டு, இயேசு சபையில் நுழைந்தவரான புனித அருளானந்தரே. 
உள்ளத்தின் தாழ்மையினாலும் உடலின் ஒறுத்தலினாலும் பெரியோருக்குக் காட்டிய கீழ்ப்படிதலாலும் ஞான வாழ்விலே உயர்ந்தவரான புனித அருளானந்தரே. 
பாரத நாட்டிலே மறைபரப்ப இறைவன் அழைப்பதை உணர்ந்ததும், அன்னையின் கண்ணீரையோ, அரசரின் வற்புறுத்தலையோப் பொருட்படுத்தாமல், மனத்திடன் காட்டினவரான புனித அருளானந்தரே. 
1673-ல் பாய்மரக் கப்பலில் பயணமாகி பாரத நாட்டிற்கு வரும் வழியில், புயலிலும் நோயிலும் பயணிகள் அவதியுற்றபோது, செபத்தாலும் புன்முறுவல் மாறாத பணியாலும் அனைவரையும் கவர்ந்தவரான புனித அருளானந்தரே. 
கோவா நகரிலே பல்வேறு பணிகளைப் பாங்குடன் செய்ததால் இரண்டாம் சவேரியார் என்ற சிறப்புப் பெயர் பெற்றவரான புனித அருளானந்தரே. 
14 ஆண்டுகளாக மதுரை, தஞ்சை, செஞ்சி, வேலூர், கோல்கொண்டா ஆகிய ஐந்து நாடுகளிலும் ஆர்வத்துடன் திருமறையைப் போதித்த திருத்தூதுவரான புனித அருளானந்தரே. 
தமிழ்நாட்டின் மாண்புமிக்க அப்போஸ்தலரான புனித அருளானந்தரே. 
வேதியர்களைப் பக்குவமாகத் தயாரித்தும் ஊக்குவித்தும் அவர்கள் வழியாகத் திருமறையை நிலைநாட்டியவரான புனித அருளானந்தரே. 
பல புதுமைகளால் இயேசுவின் திவ்விய போதகத்தைத் துலங்கச் செய்தவரான புனித அருளானந்தரே. 
கிறிஸ்தவர்களைத் திடப்படுத்தவும், ஏனையோரை மனம் திருப்பவும் சொல்லிலடங்காத் துணிவோடும், துயர்களோடும் நாடெங்கும் விசாரணைக் குருவாய் அலைந்து பணியாற்றிய புனித அருளானந்தரே. 
குறையாத பக்தியும், குன்றாத விசுவாசமும், சலியாத தயையும், மெலியாத தவமும் கொண்டு நற்பண்புகளின் குன்றாக விளங்கியவரான புனித அருளானந்தரே. 
துன்பங்களைத் துணிவோடு எதிர்கொண்டு. துயருறும்போது எல்லையற்ற பொறுமை காட்டியவரான புனித அருளானந்தரே. 
தாழ்ந்தவர்கள் எனக் கருதப்பட்ட மக்களுக்கு அருட்பணியாற்றுவதற்காக, பண்டார சுவாமிகள் என்ற நிலையைத் தேர்ந்து கொண்டவரான புனித அருளானந்தரே. 
பகைவர் உம்மைக் கொல்லப் பலமுறை முயன்றாலும் இறையருளால் பலமுறை தப்பியவரான புனித அருளானந்தரே. 
மறைச்சாட்சி முடி அடைய வேண்டுமென்ற ஆவலால் பற்றியெரிந்தவரான புனித அருளானந்தரே. 
சண்டாளர் கையில் பிடிபட்டு மங்கலம், காளையார் கோவில் பாகணி முதலிய இடங்களில் நிந்தையையும், அடிமிதிகளையும் அனுபவித்தவரான புனித அருளானந்தரே. 
உம்முடன் வாதிக்கப்பட்ட சிலுவை நாயக்கர் வேதியரின் தெறித்து விழுந்த கண்ணை புதுமையால் குணப்படுத்தியவரான புனித அருளானந்தரே.
உமது அருள் வாக்கிலே வியப்புக் கொண்ட சேதுபதி அரசரால் வியப்புறுவிதமாய் விடுதலையாக்கப்பட்டவரான புனித அருளானந்தரே. 
உயர் பொறுப்பிற்காக 1686 ஆம் ஆண்டு இறுதியில் ஐரோப்பாவிற்குத் திரும்பியபோது அரசராலும் பெரியோர்களாலும் மிகுந்த ஆர்வத்தோடு வரவேற்கப்பட்டவரான புனித அருளானந்தரே. 
எத்தனையோ தடைகளையெல்லாம் பொறுமையுடன் அகற்றி, மகிழ்வுடன் பயணமாகி, மீண்டும் எங்கள் நாட்டுக்கு 1690 இல் வந்தவரான புனித அருளானந்தரே. 
சில மாதங்களுக்குள்ளாகவே மறவ நாட்டில் திரளான மக்களுக்கு மெஞ்ஞானத்தை ஊட்டியவரான புனித அருளானந்தரே. 
புகழ் பெற்ற் தடியத்தேவரையும், இன்னும் பல பெருமக்களையும் திருச்சபையில் சேர்த்தவரான புனித அருளானந்தரே.
மறவ நாட்டின் மங்காத மாணிக்கமான புனித அருளானந்தரே. 
இயேசுவைப் பின்பற்றி, உம்மைப் பிடிக்க வந்தவர்களிடம் உம்மையே கையளித்தவரான புனித அருளானந்தரே. 
கொடுமையாய்க் கட்டுண்டு, நெடும் பயணத்தில் மானபங்கமாய் இழுக்கப்பட்டு, இருண்ட சிறையில் அடைக்கப்பட்டு துயருற்றவரான புனித அருளானந்தரே. 
மாந்திரியக்காரரின் வித்தை சகுனங்களையெல்லாம் திரு விசுவாசத்தால் முறியடித்தவரான புனித அருளானந்தரே. 
ஓரியூரிலே, 1693 பெப்ருவரி 4-ம் தேதி. புதன்கிழமை நண்பகல் வேளையிலே, எண்ணற்ற மக்களின் முன்னிலையிலே மறைச்சாட்சியாகக் கொல்லப்பட்டவரான புனித அருளானந்தரே. 
எங்களை விசுவாசத்தில் வளர்க்க உமது இரத்தத்தையே சிந்தியவரான புனித அருளானந்தரே 
மகிழ்வோடும் ஆவலோடும் இயேசுவுக்காய் உயிரைத் தந்தவரான புனித அருளானந்தரே. 
அஞ்சாத நெஞ்சத்தினராய் கொலைஞன் முன் தலை நீட்டி முழந்தாளிட்டவரான புனித அருளானந்தரே. 
தம் சடலத்தைக் காட்டு விலங்குகளுக்கு உணவாக்கிய புனித அருளானந்தரே. தலைவெட்டுண்டதும் வேதாளைப் பங்குக்குரு அருள்தந்தை ஜான் டி கோஸ்டாவுக்கு கனவில் தோன்றி, வெட்டுண்ட தலையைக் கையில் ஏந்தியவராகக் காட்சி தந்த புனித அருளானந்தரே.
விண்ணரசில் ஒளிமிக்க மறைச்சாட்சிகள் நடுவில் முடிசூடி நிற்பவரான புனித அருளானந்தரே. 
உம்மை மன்றாடுவோருக்கு எண்ணிறந்த புதுமைகளைச் செய்யும் வள்ளலான புனித அருளானந்தரே. 
ஆன்மப் பிணிகளையும், உடல் நோய்களையும் அறவேயொழிக்கும் நல்ல வைத்தியரான புனித அருளானந்தரே. 
மறைப்போதகர்களுக்கு முன்மாதிரியான புனித அருளானந்தரே. 
உலகின் பாவங்களைப் போக்குகிற…… மற்றதும்
மு. – கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி. 
து. – புனித அருளானந்தரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

செபிப்போமாக: மனிதருக்கு மனவுறுதி அளிக்கும் இறiவா! மறைச்சாட்சியான புனித அருளானந்தருக்குத் தளராத் திடனையும் விடாமுயற்சியையும் கொடுத்து, உமது நற்செய்தியை எம் மக்களுக்கு அறிவிக்கச் செய்தீர். அவர் இரத்தம் சிந்தி நாட்டிய விசுவாச சாட்சியத்தை நாங்கள் நன்றியோடு நினைவு கூர்வதுடன், கிறிஸ்துவின் நற்செய்தியைச் சுவைத்து மகிழவும் எங்களைச் சுற்றி வாழும் மக்களுக்கு அதை மகிழ்வோடு அறிவிக்கவும் அருள்தாரும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். – ஆமென்.