தேவையறிந்து உதவும் அன்னை

நிறுவனம் ஒன்றில் பணி புரியும் மானேஜர் ஒருவர் நடந்து போய்க்கொண்டிருந்த போது திறந்திருந்த டிரெய்னேஜில் விழுந்து விட்டார். மூழ்கிய நிலையில் அவர் தத்தளித்துக்கொண்டிருந்தபோது, அந்தப்பக்கம் வந்த அவருடன் பணிபுரியும் ஒருவர், “ மானேஜர்னா கணக்கைத் தவிர வேற எந்த வி~யமும் தெரியாதுன்னு சொல்லுவாங்க. அதுக்காக கண்ணுகூடவா தெரியாது?” என்று கூறி நடையைக் கட்டினார். அடுத்ததாக மானேஜரின் பக்கத்து வீட்டுக்காரர் வந்து, “என்ன சார்… இந்த பள்ளத்துக்கு முன்னால கொட்டையா சிவப்பு எழுத்தில் ‘ஜாக்கிரதை’ன்னு பலகை வெச்சிருக்கே! அதைப் பார்க்கலையா? ஹீம் .. நீங்கள்லாம் மானேஜர் உத்தியோகம் பார்த்து என்னத்தைப் பெரிசா கிழிக்கப் போறீங்களோ?” என்று சலித்துக்கொண்டே சென்றார். அடுத்ததாக, வந்த மானேஜரின் நண்பர், நிலையை பார்த்து உடனே சாக்கடைக்குள் குதித்து நண்பரை வெளியேற்றினார்.
• இந்த மூன்றாவது நபரைப் போல இன்று பலர் சமுதாய முன்னேற்றத்திற்கு தேவை. இதே போன்ற ஒரு நிலையைத்தான் இன்றைய நற்செய்தி நமக்குத் தருகிறது. திருமணத்திற்கு வந்தோம். மணமக்களை வழத்;த்pனோம். உண்டோம், குடித்தோம் என்று தங்களை மட்டும் நினைத்துக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் மரியாள் வித்தியாசமாக செயல்பட்டு துன்பத்தின் சூழலை மாற்றுகிறாள்.
• கானாவூர் திருமணத்தில் திராட்சை இரசம் தீர்ந்துவிட்டதைக் குறிப்பறிந்து உணர்ந்த மரியாள் அக்குறையை நீக்க உடனடியாக முயற்சி எடுக்கிறார். பிறர் உதவி கேட்டுத்தான் உதவவேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியில் கேட்காமலேயே உதவிய அன்னை மரியாளின் பண்பு மிக உன்னதமானது. நம்மில் உதயமாகவேண்டியது.
• பொதுவாகவே, கல்யாணவீட்டில் உணவு சரியில்லையென்றால் சற்று அலுத்துக்கொண்டும், சலித்துக்கொண்டும், குறை கூறிக்கொண்டும் இருப்பதே நம்மில் பலருக்கு வழக்கம். திருமண மண்டபங்களில் ஆண்கள் பேசிக் கொள்வது, போன முறை அவுங்க வீட்டு கல்யாணத்துக்கு போனோம். என்ன சாப்பாடு போட்டாங்க, இரசத்தில உப்பு இல்ல, பிரியாணியில கறியே இல்ல. இன்னைக்கு இவுங்க என்ன சாப்பாடு போடப்போறாங்கன்னு பார்ப்போம் என்று பேசிக்கொள்கிறார்கள்.
பிறருடைய குறைகளை அம்பலப்படுத்துவது நமது பண்பு. பிறருடைய குறைகளை நீக்குவது மரியாளின் பண்பு. சிலர் வாய் திறந்து உதவி கேட்பதில் தயக்கம் காண்பிப்பார்கள். அது அவர்களில் இருக்கும் குறைபாடு. அந்தக் குறைபாட்டை நாம் குறைசொல்லக்கூடாது. வசதி படைத்த சிலரிடம் ஓர் இழிகுணம இருக்கிறது. பிறருடைய இயலாமைகளையும் ஏழ்மையையும் தனிப்பட்ட முறையிலோ பலர் முன்னிலையிலோ சுட்டிக்காட்டி உள்ளே உள்ள மன அரிப்பைச்சொரிந்து கொள்ளும் கெட்ட குணம். இதற்கு மாறாக மரியாளின் அணுகுமுறை வித்தியாசப்படுகிறது. குறையிருக்குமிடத்தில் நம் அணுகுமுறை மூலம் அதை நிறைவாக்கிவிடலாம். கானாவூர் திருமணத்தில் இரசம் தீர்ந்து போனதை குறித்து பலர் குறைகாணுமிடத்தில் அன்னைமரியாள் நிறைவாக்கும் செயலை செய்வது நமக்கெல்லாம் நல்வழிகாட்டும் உதாரணமாக அமைகிறது. பாதி தண்ணீர் உள்ள டம்ளரில், தண்ணீர் பாதி நிரம்பியிருக்கிறது. அல்லது பாதி காலியாக இருக்கிறது என்று பார்ப்பது நம் எண்ணத்தைப் பொறுத்தது.
திருமணத்தில் சமூக இழுக்கு வந்துவிடக்கூடாது என்று தெரிந்து அந்தக் குடும்பத்தினரின் நிலையை உணர்ந்து அன்னை மரியாவே அவர்களுக்குத்தேவையான எல்லாவற்றையும் செய்கிறாள்.
ஒரு வீட்டில் பள்ளி மாணவன் ஒருவன் தேர்வுநாள் அன்று கூட காலை ஏழுமணி வரைத் தூங்கிக்கொண்டிருந்தான். அவன் அம்மா அவனைப் பலமுறை எழுப்பிவிட்டும் அவன் எழுந்திருக்கவில்லை. இறுதியாக, ஒரு விவிலிய வசனத்தைக் கொண்டு அவனை எழுப்பிவிட நினைத்த அம்மா, “எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்” (யோ 5:8) என்றார். அவனோ, “அம்மா எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்று சொல்லிவிட்டுத்தொடர்ந்து தூங்கினான். தாயை விஞ்சிய தனயன்.
கலிலேயாவிலிருந்து யூதேயா மலைநாட்டுக்குப் பயணம் செய்வது எளிதானதன்று. இது தனிமை நிறைந்தது, ஆபத்தானது. மலையேறும் பயணம் எப்போதுமே கடினமானதுதான். ஆனால் எலிசபெத்துக்கு அப்போது உதவும் கரங்கள் தேவைப்பட்டன. அவர் ஆறுமாத கர்ப்பிணியாக இருந்ததால் ஊருக்குள் இருக்கும் கிணற்றில் தண்ணீர் எடுக்க இயலாது. தம் தோட்டத்துப் பயிரைப் பராமரிக்க இயலாது: ஆட்டு மந்தையைக் கவனிக்க இயலாது: கடைக்குச் சென்று பொருள்கள் வாங்கி வர இயலாது. எனவே ‘கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம்’ (லூக் 1:36) என்று வானதூதர் கூறியதை கேட்ட மரியாள் விரைந்து சென்று எலிசபெத்துடன் மூன்று மாதங்கள் தங்கினார். அதாவது, எலிசபெத்து குழந்தை பெற்றெடுக்கும் வரை அங்கு தங்கியிருந்தார் என்பது இதன் பொருளாகும். எலிசபெத்துக்குத் தேவையிருந்த நேரத்தில் அவருக்குத் தேவையானதை மரியாள் அளித்தார்.
வயது முதிர்ந்த காலத்தில் தனக்கென உதவி செய்ய யார் வருவார் என்று நினைத்திருந்த நிறைமாத மூதாட்டிக்கு உதவ அங்கு செல்கிறாள்.
-பிறருடைய இன்னல்களைத் தன்னுடையதாக உணர்ந்து போராடுதல,
-பிறருடைய மனத்துயரைப்போக்குதற்காகத் தன்னையே முழுமையாக ஒப்புக்கொடுத்தல்
இவ்விரண்டு உணர்வுகளையும் எவரெல்லாம் தன் இதயத்தில் வைத்து வாழ்ந்து வருகின்றனரோ, அவர்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் இறைவனுடைய மாட்சி முழுமையாக வெளிப்படுகிறது. கானாவூர் திருமணத்தில் அன்னை மரியாள் அத்திருமண வீட்டார் துன்ப நிலையை யாரும் அறிவிக்காமலேயேத் தாமாகவே அறிந்தவராய், அதற்காகத் தன் மைந்தன் இயேசு கிறிஸ்துவிடம் பரிந்து பேசுகிறார். அன்;னை மரியாள் பல்வேறு திருமண வீட்டிற்கு விருந்திற்குச்சென்றிருக்கலாம். அங்கு இதை போலவே திராட்சை இரசம் தீர்ந்து போனதால் ஏற்பட்ட குழப்பங்களைக் கண்டிருக்கலாம். ஆனால் பிறர்க்குத் தன்னால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என்ற மனநிலையைப் பெற்றிருந்ததால்தான் இயேசுவிடம் சென்று, “ஏதாவது செய்” என்று கூறுகின்றாள். நல்லது நடக்கவேண்டும். பிறர் மனம் மகிழ்ச்சியில் மகிழ வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு மரியாள் அங்கு செயல்பட்டது இறைவனை மகிழ வைத்தது. அவர் மாட்சியினை வெளிப்படுத்த உதவியாயிருந்தது.
ராமகிரு~;ண பரமஹம்சர் ஒருமுறை படகில் சென்று கொண்டிருந்தபோது கரையை நெருங்குகின்ற தருணம். வலியால் துடித்தார். அவர் முதுகை மூடியிருந்த துணியை விலக்கியபோது காயங்கள் காணப்பட்டன. அவர் வலியில் முனகியபடியே கரையைச் சுட்டிக்காட்டினார். அந்தக் கரையில் சிலர் ஓர் அப்பாவி மனிதனை அடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு சக மனிதனை சில வன்முறையாளர்கள் அடிப்பதை பார்க்கின்றபோதே பரிவினால் அவர் முதுகு முழுவதும் ரத்தம் கசிந்தது. பல நேரங்களில் பார்வையாளர்களாக இருந்துவிடுகிறோம். மற்றவர் அனுபவிக்கும் பசியை நம்மால் அனுபவிக்க முடிவதில்லை.
செல்வர் ஒருவர் இருந்தார். பணத்தையும் செல்வத்தையும் இறுக்கி முடிந்தபடி அலைவதில் அதிவல்லவர் அவர். ஒருநாள் அவசரக் கடன் வாங்க அவரிடம் வந்தார் ஒரு அறிஞர். செல்வர் நிபந்தனை போட்டார். ‘நண்பரே! இங்கே பாருங்கள். என் கண்களில் ஒன்று செயற்கைக் கண் ஆகும். அது எதுவென்று கண்டுபிடித்துச் சொல்லிவிட்டால் கடன் தருகிறேன்!
உற்றுப்பார்த்த அறிஞன் சொன்னார்:‘உங்கள் இடது கண்தான் செயற்கைக் கண்’‘அதை எப்படி அவ்வளவு சரியாகக் கண்டுபிடித்து விட்டீர்கள்?’ அமைதியாய் சொன்னார் அறிஞர்: ‘அந்த ஒரு கண்ணில்தான் கொஞ்சம் கனிவு தெரிகிறது!’ அந்த நகைச்சுவை அறிஞர்தான் - மார்க் டுவைன.;
கனிவுள்ள இடத்தில் செல்வமில்லை. செல்வமுள்ள இடத்தி;ல் கனிவில்லை. இரண்டும் உள்;ள இடத்தில்… இருளில்லை.
உங்கள் வானகத்தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல் நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்.

அன்று இஸ்ராயேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாகச் சொல்லண்ணா வேதனைகளோடு வாழ்வின் நாட்களை நகர்த்தி கொண்டிருந்த பொழுது, கடவுள் தம் மக்களின் வேதனைகளை அறிந்தவராய், அவர்களின் துன்ப நிலையை உணர்ந்தவராய் அவர்களை அடிமைதளையிலிருந்து மீட்க இறைவாக்கினர் மோசேவை அழைத்தார்.
அவருடைய பிறப்பு முதல் உயிர்ப்பு வரை நிகழ்ந்தவை அனைத்தும் இறைதந்தையின் இரக்கத்தின் வெளிப்பாடுகளே. அவர் மக்களை இரக்கத்தோடு பார்த்தார். அணுகினார். குணப்படுத்தினார். வலுவூட்டினார். இறைவனது இரக்கத்தைப்பற்றி கூறப்பட்ட செயல்கள் எல்லாம் இயேசுவில் நடந்தேறின. பாவியான மரிய மதலேனாளைப்பார்த்து “இவள் அதிகம் நேசித்தாள். எனவே அதிகம் மன்னிக்கப்பட்டாள்” என்றாரே, அது கருணையில்லையா? விபசாரத்தில் கையும் களவுமாக பிடிபட்ட பெண்ணை பார்த்து “நானும் உன்னை தீர்ப்பிடேன். இனிபாவம் செய்யாதே போ” என்றாரே அதுகருணையில்லையா?
இவ்வாறு இயேசு இரக்கப் பெருக்கத்தால் எளியோருக்கு உதவினார். பரிவினால் பசித்தோருக்கு உணவளித்தார். ஏழைகள், குழந்தைகள், ஒடுக்கப்பட்டோர்கள் ஒதுக்கப்பட்டோரின் நண்பரானார். தான் செய்பவற்றைக் காண்பவர் இறைவனைக்கண்டு கொள்ளலாம் என்று திருமுழுக்கு யோவானுக்கு செய்தியனுப்பினார். ஒசேயா இறைவாக்கினரை மேற்கோள்காட்டி தனது வாழ்வில் இரக்கத்திற்கே முதலிடம் என முழக்கமிட்டார் (மத் 9:13, ஒசே 6:6).
இரக்கத்தின் நற்செய்தி என்று அழைக்கப்படும் லூக் 10:25-37 ல் வரும் நல்ல சமாரியனின் அன்பும் இரக்கமும் நம்முடைய இதயத்தை பிமிக்க வைக்கிறது. ஒரு மனிதன் தன் இடுப்பில் கட்டியிருக்கு துணி அவிழ்ந்து விழும் என்றால் அவன் தன்னுடைய தன்மானத்தை மறைக்க எவ்வளவு துரிதமாக இயங்கி அந்த துணியை மீண்டும் சரி செய்வானோ அவ்வளது துரிதமாக நல்ல சமாரியன் காயப்பட்ட மனிதனுக்கு கருணை உள்ளத்தோடு உதவி செய்தான் எனலாம்ட. இரக்க குணத்திற்கு இலக்கணம் வகுத்தவன் அவனே. கருணை உள்ளம் கெண்டவர்களால் மட்டுமே காயத்திற்கு கட்டுப்போட முடியும். இந்த உலகத்தையும் உருமாற்ற முடியும் என்பதை நல்ல சமாரியனிடமிருந்த நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
நல்ல சமாரியனி;ன் இரக்க குணத்தை தனது பணி வாழ்வில் செயலாக்கம் பெற செய்தவள் அன்னை தெரசா என்றால் அது மிகையாகாது. உலகத்தின் மொழி ஒவ்வொன்றின் அகராதியிலும் இனி இரக்கம் என்பதற்கு அன்னையின் பெயரையே அர்த்தமாக கொடுக்கலாம். அந்த தாயின் முகத்த்pல் தான் எத்தனை ரேகைகள்! அந்த சதை சுருக்கத்தில் கோடி ஏழைகளின் கதை சுருக்கத்தையே வாசிக்கலாம். அவை சுருக்கங்கள் அல்ல, இரக்கங்களே. அன்னையின் மூக்கில் அவளது சுவாசம் மட்டுமல்ல. இரக்கமும் சேர்ந்தே சுவாசித்தது எனலாம்.
அன்னை தெரசா கேள்விப்பட்டார்கள்: குடிசைப் பகுதியில் ஏழு குழந்தைகளோடு பல நாட்களாகப் பட்டினிக் கிடக்கிறாள் ஒரு தாய். பதறிப்போன அன்னை போதுமான அரிசியை எடுத்துக்கொண்டு பறந்தார்கள். அங்கே… பசியின் கொடுமையால் தாயும் பிள்ளைகளும் துவண்டு போய்க் கிடந்தார்கள். அரிசியைத் தந்து சமைக்கச் சொன்னார்கள் அன்னை. நன்றியுணர்வோடும், கலங்கிய கண்களோடும், அரிசியை வாங்கிய அந்தத் தாய் அதைச் சமமாய்ப் பிரித்தாள். பாதியைப் பையில் போட்டுக்கொண்டு பக்கத்துத் தெருவுக்குத் தளர்ந்த நடையுடன் கிளம்பினாள். தடுத்துக் கேட்டார்கள் அன்னை: ‘எங்கே கிளம்பிவிட்டீர்கள்?’ ‘அம்மா… எங்களைப் போலவே பக்கத்துத் தெருவில் ஒரு குடும்பம் பல நாளாய் பட்டினி கிடக்கிறது. பாவம் அவர்களும் பசியாறட்டும்…!’ அந்த நொடியில் …. அன்புத் தாயைக் கண்கலங்க வைத்தாள் கருணைத்தாய்.
பகிர்வது மனித குணம். பசியிலும் பகிர்வது தெய்வ குணம்.
பணம் இருப்பவர்கள் தர்மம் செய்வது வியப்பல்ல. மாறாக, பட்டினியோடு இருப்பவர்கள் தானம் செய்வதுதான் வியப்பு. இன்றைய சமுதாயத்தில் மனிதனுடைய இதயங்கள் சுருங்கியதால் கரங்கள் விரிய மறுக்கின்றன. சிந்தனைகள் சீர்கெட்டு இருப்பதால் பார்க்கும் கண்களும் மங்கிக் கிடக்கின்றன. சுயநல வாதங்களும், தன்னல வாதங்களும் பெருகிக் கொண்டு போவதால் வாழ்வின் நெறிமுறைகள் சரிந்து கொண்டிருக்கின்றன. அடுத்தவனை அழித்து நான் வாழ வேண்டும் என்ற எண்ணங்கள் வளரத் தொடங்குகின்றன. இப்படிப்பட்ட சமுதாயத்தில் வாழும் நமக்கு திருமுழுக்கு யோவான் எச்சரிக்கை விடுக்கின்றார். வாழ்வை மாற்றிக்கொள்ள வழியைக் காண்பிக்கின்றார்.
“இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்: உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்” (லூக் 3:11) என்று இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் மக்களைக் கேட்கிறார்.
பணக்காரன் ஒருவன் வாழைப்பழத்தைத் தின்று அதன் தோலை ஜன்னல் வழியாக வெளியே எறிந்தான். அத்தோலைப் பிச்சைக்காரன் ஒருவன் எடுத்துச் சாப்பிட்டான். அப்பிச்சைக்காரனைப் பணக்காரன் கூப்பிட்டு அவன் முதுகில் தொடர்ந்து குத்தினான். அவன் குத்தக்குத்த பிச்சைக்காரன் பலமாகச் சிரித்தான். ஏன்? என்று கேட்டதற்கு அவன் “தோலைத் தின்னவனுக்கு இந்தத் தண்டனை என்றால் பழத்தை தின்னவனுக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகிறதோ?”
பக்தன் ஒருவனிடம் ஆண்டவர் தோன்றி அவனுடைய பக்தியைப் பாராட்டுவதாகவும் அவன் கேட்கும் மூன்று வரங்களைத் தருவதாகவும் சொன்னார். ஆயினும் ஒரு நிபந்தனையையும் கடவுள் சொன்னார். இந்தப் பக்தனுக்குக் கொடுப்பது போல் 10 மடங்கு அதிகமாக எதிர்வீட்டுக் காரனுக்குக் கொடுப்பதே அந்த நிபந்தனை. பக்தனுக்கு இந்த நிபந்தனை மட்டும் பிடிக்கவில்லை. இருப்பினும் முதலில் தனக்கு ஒரு மாளிகை வேண்டும் என்று கேட்டான். உடனே அழகிய மாளிகை கிடைத்தது. ஆனால் அடுத்த நிமிடமே எதிர்வீட்டுக்காரனுக்கு 10 மடங்கு பெரிதான மாளிகை கிடைத்தது. பக்தனுக்குப் பொறாமை, இரண்டாவதாக, தனக்கு ஒரு மெர்சிடஸ் பென்ஸ் கார் வேண்டும் என்று கேட்டான் அதுவும் உடனே கிடைத்தது. ஆனால் எதிர்வீட்டுக்காரனுக்கு 10 மெர்சிடஸ் பென்ஸ் கார்கள் கிடைத்தன. பக்தனுக்குப் பொறாமையான பொறாமை. மூன்றாவதாக பக்தன் இவ்வாறு கேட்டான்: “ஆண்டவரே எனக்கு இலேசான ‘கார்ட் அட்டாக்’ வரட்டும்.
நற்செய்தியிலே நம் ஆண்டவர் ஒரு செல்வந்தனைப்பார்த்து ‘அறிவு கெட்டவனே என்று அழைக்கிறார். தன் அயலானை முட்டாள் என்று சொல்பவன் நரக ஆக்கினைக்கு ஆளாவான் என்றவரே ஒருவனை அறிவு கெட்டவன் என்றால் அவன் உண்மையிலே அறிவுகெட்டுப் போனவனாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆகச்செல்வந்தன் யார்?
அவன் பெரிய சொத்துக்காரன். நிலபுலம் நிறைய வைத்திருந்தான். ஆண்டுக்கு அதில் முப்போகம் விளைந்தது. ஓராண்டு இன்னும் அதில் விளைச்சல். இந்த விளை பொருட்களை என்ன செய்வது. எங்கே கொட்டுவது என்று அவனுக்கு தெரியவில்லை. யோசித்தான் வழி தெரிந்தது.
களஞ்சியத்தை இடித்தான். இடித்து பெரிதாக கட்டினான். வந்த விளைபொருட்களை மூட்டையாகக் கட்டி அதிலே போட்டு மூடி வைத்தான். மூடி வைத்தவன் தன் வீட்டு மூளையில் போய் ஒரு சோபாவில் உட்கார்ந்தான். உட்கார்ந்துகொண்டு வஞ்சகம் இல்லாமல் தன் நெஞ்சோடு பேசினான். என்ன பேசினான்.
ஏய் நெஞ்சே! இனி நீ நிம்மதியாக வாழலாம். நெடுநாள் கவலையின்றி வாழலாம். நன்றாக சாப்பிடலாம். சாப்பிட்டுவிட்டு சீட்டாடலாம். நன்றாக குடிக்கலாம். குடித்துவிட்டு கூத்தாடலாம் என்று பேசினான். ஆனால் அதை கேட்ட கடவுளும் அடுத்து பேசினார். ஏ! அறிவு கெட்டவனே! இன்று இரவு உன் உயிரைக் கேட்பார்களே! அப்பொழுது இவையாவும் என்னவாகும்?
ஏன் செல்வந்தனை அறிவு கெட்டவன் என்று ஆண்டவர் அழைத்தார்? சொத்து சேகரிப்பது முட்டாள் தனமா? வருவாய் பெருக்குவது முட்டாள் தனமா? வருவாய் இன்றி வயிறு எப்படி வாழும்? அன்றன்றுள்ள அப்பம் எங்களுக்கு இன்று தாரும் என்று கேட்க சொல்லியவர் இப்போது அப்பத்திற்காக உழைப்பவனை; ஏன் அறிவு கெட்டவன் என்கிறார்? செல்வத்தையும் அவன் தாறுமாறான வழியில் சேகரிக்கவில்லை. நாட்டில் வருவாயை பெருக்க வேண்டும் என்பதற்காக கள்ளுக்கடைகளை திறந்தானா? குழந்தைக்குட்டிகள் இருந்தால் வீட்டுச் சொத்து குறைந்து போகும் என்பதற்காக செயற்கை குடும்பக் கட்டுப்பாட்டைப் பின்பற்றினானா? அல்லது லாட்டரியில் அதிர்~;டம் அடிக்க திடீர் லட்சாதிபதியாக உயர்ந்தானா? இல்லையே. மாடு வாங்கினான். ஏர் பூட்டினான். உழுதான். உழைத்தான். விளைந்தது முப்போகம். இதில் முட்டாள்தனம் எங்கே இருக்கிறது?
ஆகவே அவன் சொத்துக்காரன் என்பதற்காக அவனை ஆண்டவர் முட்டாள் என்று அழைக்கவில்லை. சொத்தை தவறான வழியில் பயன்படுத்த விரும்பினான் என்பதற்காக அவனை முட்டாள் என்று அழைத்தார்.
தன் நெஞ்சை பார்த்து 60 ஆறுதலான வார்த்தைகள் பேசினான். அந்த 60 வார்த்தைகளில் “நான்” என்னுடைய” என்னும் தன்னல சொற்கள் மட்டும் 12 வருகின்றன. அந்த அறுபதில் ஒன்றாவது அடுத்தவனை பற்றி இல்லை. தன் நிலத்தில விளைந்த விளைச்சலுக்குக் காரணம் தன் உழைப்பு மட்டுமே என்று தவறாக எண்ணினான். அவனது நிலத்தில் எத்தனையோ பேர் உழுதார்கள். தண்ணீர் பாய்ச்சினார்கள், விதைத்தார்கள், அறுத்தார்கள். அவர்களை எல்லாம் மகிழ்ந்திருக்கும் நேரத்தில் மறந்ததற்காக அவனை முட்டாள் என்றார்.
அடுத்தவனை நினைக்கவில்லை. ஆண்டவரை பற்றியாவது நினைத்தானா? ஏதோ தான் காலங்களை இயக்குகிற கர்த்தாதி கர்த்தன் போலவும், இரவுப்பகலுக்குக் காரணமான இறைவன் போலவும், காற்றுக்கு வாயு போலவும், நிலத்துக்கு பூமாதேவி போலவும் நினைத்துக்கொண்டு ஆண்டவரை மறந்து விட்டான். ஆகவே அவனை அறிவு கெட்டவன் என்று அழைத்தார்.
வந்த பொருட்களை வாரி அள்ளிக் களஞ்சியத்தில் போட்டு வைத்ததால் அவனை முட்டாள் என்று கூறவில்லை. மூடி வைத்ததைத் திறந்து வேளாவேளைக்கு ஏழைகளுக்குக் கொடுப்போம் என்று முடிவு செய்ய அவனது சுயநலம் இடம் தரவில்லை என்பதற்காக அப்படி அவனை அழைத்தார். களஞ்சியத்திலே சேகரித்;து வைப்பவற்றை அந்தும், புழுவும் அரித்து தின்னும். ஆனால் ஆண்டவன் பெயரால் அவரது குழந்தைகளுக்குக் கொடுப்பவற்றை அப்படி எதுவும் அரிக்காது என்று அவனுக்கு தெரியவில்லை. மாறாக தன் கையில் இட்ட பிச்சையாகவே இறைவன் அவற்றை ஏற்றுக்கொள்வார் என்பதும் அவனுக்கு தெரியவில்லை. ஆகவே அறிவு கெட்டவன் என்றார்.
பேராசிரியராக இருந்து மதிப்பு மிக்க வேலையை விட்டுவிட்டு, கனடாவில் டொராண்டோ நகரில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களோடு இருந்து, அவர்களுக்காக உழைத்து, அவர்களோடு தன் வாழ்வைப் பகிர்ந்து கொண்டவர் ஹென்றி நூவென் என்ற குரு. வசதியும் வாய்ப்பும் நிரம்பத் தந்த இசைத்துறையை விட்டுவிட்டு ஆப்பிரிக்க பழங்குடி மக்கள் மத்தியில் பணி செய்யச்சென்றவர் ஆல்பர்ட் ஸ்வைட்சலர். தொழுநோயாளர்களுக்கு பணிவிடை செய்ததன் மூலம் தானும் தொழுநோயைப் பெற்றுக்கொண்டவர் புனித தமியான். கிறிஸ்துவின் படிப்பினைகளால் உந்தப்பட்டு தங்கள் வாழ்வைத் தொடக்கக் கிறிஸ்தவர்களைப் போல பிறரோடு பகிர்ந்து கொண்டவர்களில் ஒரு சில எடுத்துக்காட்டுகளே மேலே கூறப்பட்டவர்கள்:
இன்று நம்மைச் சுற்றி பலகோடி மனிதர்கள் அடிபட்டவர்களாக, போராடுபவர்களாக தனிமரமாக, அநாதைகளாக உள்ளனர். இவர்களைப்பார்த்து நம் உள்ளத்தில் கருணை கசிகின்றதா?, நாம் அடுத்தவர்கள் காயப்படும் போது அவர்களுக்காக இரத்தம் சிந்த வேண்டியதில்லை. கண்ணீர் சிந்தினாலே போதும். அவர்கள் வலியால் துடிக்கும் போது அவர்கள் கைகளை ஆறுதலாகப் பற்றினாலே போதும். இதுவரை நாம் யாருடைய கைகளையாவது அன்போடு ஆதரவாகப் பற்றியிருக்கிறோமா?
வழிபாடுகள் வாழ்வின் நோக்கத்தை உணர்த்த வேண்டும். வாழ்வின் மையத்தை சுட்டிக்காட்ட வேண்டும். இயேசு ‘அன்பே எல்லாவற்றிற்கும் மையம்’ என்பதை உணர்த்துகிறார். அன்பினால் நமது இதயம் நனையும் போது இரக்கம் கசியும். கருணை பிறக்கும். நல்ல சமாரியனுடைய பணி நமது வாழ்வில் தொடரும்.
அவதியிறுபவர்களை, க~;டப்படுபவர்களை பார்த்து பரிதாபப்பட்டு அதற்கு அடுத்த நிலையான பரிவு கொள்ளும் நிலைக்கு கடந்து செல்ல நம் மனங்கள் பல நேரங்களில் சக்தியற்று போவதை நாம் உணர்ந்து பார்க்க வேண்டும். அன்பு என்பது வார்த்தைகளோடு நின்றுவிடுகிறது. அதைத் தாண்டி நம்மால் சிந்திக்க முடிவதில்லை. செயல்பட முடிவதில்லை. பரிவு என்னும் தமிழ் வார்த்தைக்கு பொருள் உடன் துன்புறுதல். மற்றவர் படும் துன்பத்தை நம் இதயத்தில் உணர்வது அனுபவிப்பதே.

எல்லாம் கொணர்ந்தோம் திருவடி வைத்தோம் ஏற்றிடுவாய் இறைவா பலியாய் மாற்றிடுவாய் இறiவா
எதை நான் தருவேன் இறைவா
எந்த அளவையால் நீங்கள் அளப்பீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும். அமுக்கிக் குலுக்கி நன்றாக சரிந்து விழும்படி கொடுங்கள்.

நற்கருணை அன்பின் அருள் அடையாளம்: உலகிற்காகப் பிட்கப்படும் அப்பம். அன்பின் அடித்தளம் பகிர்வு. கிறிஸ்து தம்மையே பிட்டுக்கொடுத்தார்;. “அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள்”. கிறிஸ்து தம்மையே பிழிந்து கொடுத்தார்: “அனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள்”.
முதல் கிறிஸ்தவர்கள் ஆலயத்தில் ‘அப்பம் பிட்டனர்’. அதாவது நற்கருணை விருந்தில் பங்குபெற்றனர் (திப 2:42). ஆலயத்தில் அப்பம் பிட்டதுடன் அவர்கள் திருப்தி அடையவில்லை. ‘சென்று வாருங்கள் திருப்பலி முடிந்தது’ என்றவுடன் எல்லாம் முடிந்துவிட்டதாக அவர்கள் கருதவில்லை. வழிபாட்டைத் தங்கள் வாழ்வாக மாற்றினார்கள். எனவே வீடுகளில் அப்பத்தைப் பிட்டு மனமகிழ்வோடும். கபடற்ற உள்ளத்தோடும் பகிர்ந்து கொள்வர் (திப 2:46).
ஆலய வழிபாடு, அவர்களது அன்றாட வாழ்க்கையானது வழிபாட்டிற்கும் வாழ்க்கைக்கும் இடையே எவ்விதப் பிளவும் இல்லை. “அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை. எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது. தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை” (திப 4:32,34). இவ்வாறு முதல் கிறிஸ்தவர்கள் பொதுவுடைமை வாழ்க்கை நடத்தி வந்தனர்.
லூக்கா 16:19-31 வசனங்களில் பணக்காரன், ஏழை லாசர் உவமையை பற்றி வாசிக்கிறோம். இறந்தபிறகு ஏழை லாசர் அபிரகம் மடியில் அமர்த்தப்படுகிறார். பணக்காரன் எரி நரகத்திற்கு தள்ளப்படுகிறார். அவன் செய்த தவறு என்ன? ஒழுக்க கேடாக நடந்து கொண்டதாலா? அநியாயமாக செல்வம் சேர்த்ததலா? அல்லது லாசருடைய சொத்துக்களை அநியாயமாக அபகரித்ததாகவோ குறிப்பிடவில்லை. அதேபோல ஏழை லாசரும் ஏழையாக இருந்ததை தவிற வேறு எந்த நற்செயல்கள் செய்ததாகவோ குறிப்ப்pடபடவில்லை. பிறகு ஏன் பணக்காரன் நரகத்திற்கு செல்ல வேண்டும்? அவன் செய்த மாபெறும் தவறு ஏழை லாசருக்கு இரக்கம் காண்பிக்க மறுத்துவிட்டான். இறைவன் தனக்கு கொடுத்திருக்கும் செல்வத்தை மற்றவரோடு பகிர்ந்து வாழ வேண்டும் என்ற அடிப்படை உண்மையை மறந்துவிட்டான்.
மாற்கு 10:17-30 வசனங்களில் பணக்கார இளைஞன் இயேசுவை அணுகி வாழ்வு பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறான். கட்டளைகளை கடைபிடி என்று இயேசு கூறினார்.
போதகரே இவை அனைத்தையும் என் இளமையிலிருந்து கடைபித்து வருகிறேன் என்ற கூறினான். அப்பொழுது இயேசு அவனை பார்த்து உனக்கு இன்னும் ஒன்று குறைவாக உள்ளது. போய் உனக்குள்ள அனைத்தையும் விற்று ஏழைகளுக்கு பகிர்ந்து கொடு. பிறகு வந்து என்னை பின்செல் என்றார். அவனது பலவீனத்தை தொட்டவுடன் அவன் செயலிழந்து விடுகிறான். அவன் பாதுகாப்பு கோட்டைகள் தகர்ந்து விடுமோ என்று பயந்துவிடுகிறான். இரண்டாவது பகுதியான “என்னை பின் செல்” என்ற இயேசுவின் வார்த்தைகள் அவன் செவியில் விழவே இல்லை.
வாழ்வில் மகிழ்ச்சி பெறுவதை விட கொடுத்தலில் தான் அடங்கியிருக்கிறது. “பெற்றுக்கொள்வதைவிட கொடுத்தலே பேறுடைமை” என்று தி.ப. 20:35ல் வாசிக்கிறோம். பகிர்வின் போது இரண்டு முக்கிய நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியம்.
கொடுப்பதை வேண்டா வெறுப்பாக அல்ல, மகிழ்ச்சியாகக் கொடுக்க வேண்டும். “கோணிக் கோடி கொடுப்பதிலும் கோணாமல் காணி கொடுப்பதே மேல்” என்பது தமிழ் பழமொழி. “மனம் ஒப்பாது கொடுக்கும் ஈகை, அதனைப் பெறுவோர்க்கு எரிச்சலையே கொடுக்கும்” என்று சீராக்கின் ஞானநூல் (18:18) கூறுகிறது. பகிர்வது மகிழ்ச்சிக்கு இட்டுச்செல்ல வேண்டுமென்றால் மகிழ்ச்சியோடு பகிரவேண்டும் என்பது தொடக்கக் கிறிஸ்தவர்கள் கற்றுத்தந்த பாடம்.
“நமக்குத் தேவையில்லாததைப் பிறருக்கு கொடுத்தால் அது பகிர்வு அல்ல”என்கிறார் அன்னை தெரசா. நாம் கொடுப்பது நம்மைப்பாதித்தால் அதுவே உண்மையான பகிர்வு (உம். ஏழைக்கைம்பெண்ணின் காணிக்கை லூக் 21:1-4).
பகிர்வதே ஆனந்தம் பகிர்வதே பேரின்பம்
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அதை யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான்

என்னுடையதும் என்னுடையது உன்னுடையதும் என்னுடையது என்பவன் கடைசி ரக மனிதன், கயவன்.
என்னுடையது என்னுடையது உன்னுடையது உன்னுடையது என்பவன் நடுத்தர மனிதன், வம்பன் அல்ல.
உன்னுடையதும் உன்னுடையது என்னுடையதும் உன்னுடையது என்பவன் ஊதாரி.
எதுவும் உன்னுடையது அன்று, அதுவும் என்னுடையது அன்று, எல்லாம் எல்லார்க்கும் உரியது. பகிர்ந்துண்ணுங்கள் என்பவன் மகான் ஆவான்.

“தென்றல் காற்றுக்கு சொந்தமில்லை தேன் பூவுக்கு சொந்தமில்லை
மழை மேகத்துக்கு சொந்தமில்லை நீர் அருவிக்கு சொந்தமில்லை
நீ உனக்கே சொந்தமில்லை உன்னையே நீ பகிரும்போது கிடைக்கும் இன்பம் தான் உனக்குச் சொந்தம்”.

இறைவனைப்புகழும் அன்னை மரியா

விறகு வெட்டி ஒருவன் இருந்தான். வெட்டிய விறகை விற்று வாழ்க்கை நடத்தி வந்தான். அன்றாடம் கிடைக்கும் விறகுக்காக இறைவனைப்புகழ்ந்து வந்தான். உணவிற்காக, உடைக்காக, உறைவிடத்திற்காக இறைவனைப் புகழ்ந்து வந்தான். தன் மனைவிக்காக, மக்களுக்காக இறைவனைப்புகழ்ந்து வந்தான. ஒரு நாள் இப்படி இறைவனைப் புகழ்ந்து கொண்டிருந்தபோது மேலிருந்து மலர்கள் அவன் மீது பொழியப்பட்டன. ஏறெடுத்துப்பார்த்தான். ஆயிரக்கணக்கானோர் மலர்களை தூவிக்கொண்டிருந்தார்கள். “நீங்கள் யார்?” என்று கேட்டான் விறகு வெட்டி. “நாங்கள் கடவுளுடைய சம்மனசுக்கள்” என்றார்கள். “என் மீது ஏன் மலர்களை தூவுகிறீர்கள்? நான் கடவுளை ஒன்றும் கேட்கவில்லையே” என்றான் விறகு வெட்டி. “அதற்காகத் தான் உன்மீது மலர்களை தூவச்சொன்னார் கடவுள். உலகில் வாழும் கோடிக்கணக்கான மக்களில் நீ ஒருவன் தான் எதையும் கேட்டதில்லை. மற்றவர்கள் எல்லாம் பட்டியல் போட்டு கடவுளை கேட்ட வண்ணமாய் இருக்கிறார்கள். நீயோ எதையும் கேட்டதில்லை. எனவே தான் இறைவன் மகிழ்ந்து உன்னைப் பெருமைப்படுத்தினார்” என்றார்கள். உண்மைதான். இறைவனைப் புகழப் புகழ நாமும் உயர்த்தப்படுவோம்.

இதனைத்தான் கன்னி மரியாளும் செய்தாள். கன்னிமரியாள் காலமெல்லாம் இறைவனை புகழ்ந்து வந்தாள். தொடக்கம் முதல் இறுதி வரை கடவுளைப் புகழ்ந்து கொண்டே இருந்தாள்.

“என் ஆன்மா ஆண்டவரை ஏற்றிப் போற்றுகிறது. என் மீட்பராம் கடவுளை நினைத்து என் இதயம் களிகூர்கின்றது. ஏனெனில் எனக்கு அரும்பெரும் செயல்கள் புரிந்துள்ளார்” என்று இறைவனைப் புகழ்ந்து பாடினார். அன்னை அவர்கள் மங்களகரமான அந்த மங்களவார்த்தை செய்தியை கேட்டபோது மட்டும் மகிழ்ச்சியால் துள்ளி, பெருமிதத்தில் மிதந்து, பாடி அப்படியே அமர்ந்துபோகவில்லை. மாறாக அன்னை அவர்களின் வாழ்வின் ஒவ்வொருநொடிப்பொழுதும் ஒவ்வொரு அங்க அசைவுகளும் இறைவனைப் புகழ்ந்த வண்ணமாக இருந்தன என்று சொன்னால் அது மிகையாகாது.

இயேசுவின் பிறப்பை கபிரியேல் வானதூதர் முன்னறிவித்தபோது சொன்ன வார்த்தைகள்: அவர் பெரியவராய் இருப்பார். உன்னதக்கடவுளின் மகன் எனப்படுவார். தாவீதின் அரியணையை பெறுவார். அவரது ஆட்சிக்கு முடிவே இராது. ஆனால் நடந்தது, குழந்தையை பெற்றடுத்து மாட்டுத்Pவன பெட்டியில் கிடத்த வேண்டியிருந்தது. அதற்காக அன்னை கடவுளை சபிக்கவில்லை. அந்த நேரத்திலும் கடவுளுக்கு எதிராக முணுமுணுக்காமல் மகிழ்ச்சியோடு இறைவனை புகழந்து இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல: திடீரென ஒருநாள் வானதூதர் மரியாளுக்கும் சூசைக்கும் கனவில் தோன்றி குழந்தையை ஏரோது கொல்ல தேடுகிறான். நீ எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு தப்பி ஓடிச் செல்லும் என்ற செய்தியை கேட்டு சற்று கலங்கிப்போனாலும் அந்த நேரத்திலும் இறைவனின் திட்டம் என்று இறைவனைப் புகழ்ந்திருக்க வேண்டும்.

இவ்வாறாக கன்னி கணவனில்லாமல் கருத்தரித்த போதுமஇ; இறைவனை உலகிற்கு கொண்டு வந்தபோதும் இருந்த சூழலைக்கண்டு இடிந்துபோய் விடாமல் இருந்தபோதும் தன் மகனை புத்திமாறிப்போனவனென்று ஊரார் ஏசிய போதும் கொடுமையான கேவலமான மரத்தை தன் மகன் சுமந்துபோனபோதும் கழுமரத்தின் அடியில் நின்று அந்த துன்பத்தை ஏற்ற போதும் இறைவனின் சித்தத்துக்கு அடிபணியும் வகையில் வரிசையாக தன் வாழவில் இன்பம் துன்பம் உயர்வு தாழ்வு எது வந்தாலும் எல்லாம் இறைவனுக்கு என்று வாழ்ந்தவள் நம் அன்னை மரியாள்.

இன்பத்தில் இறைவனுக்கு நன்றி செலுத்துவது இயல்பானது. ஆனால் துன்பத்தில் இறைவனுக்கு எவ்வாறு நன்றி செலுத்த முடியும்? துன்பத்திலும் மரியாள்: தம் அழைத்தலில் பின்வாங்கவில்லை. மரியாள் சிலுவை அருகே நின்றுகொண்டிருந்தார் (யோவா 19:25). கிறிஸ்துவின் அன்பிலிருந்து எதுவுமே அவரைப் பிரிக்க முடியவில்லை (உரோ 8:35).

மோயீசன் செங்கடலைக் கடந்த பிறகு தன் தங்கை மரியத்துடன் கடவுளைப் புகழ்ந்து நடனமாடுகிறார். திருப்பாடல்கள் 150ல் ஏறத்தாழ 100க்கு மேலுள்ள திருப்பாடல்கள் எல்லாம் இறைவனைப்புகழ்வதாகவே அமைந்துள்ளது. இப்படி புகழ்வது என்பது உயரிய நிலை.

தூய லூக்கா தமது நற்செய்தியில் மக்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்தனர் என்று பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார்.

+ மரியா இறைவனைப் போற்றுகின்றார் (லூக் 1:47): செக்கரியா இறைவனைப் போற்றுகின்றார் (லூக் 1:68): சிமியோன் இறைவனைப் போற்றுகின்றார் (லூக் 2:28).
+ முடக்குவாத நோயினின்று குணமடைந்தவர்… கடவுளைப்போற்றிப் புகழ்ந்தவாறே தமது வீட்டிற்குப் போனார். அதைக் கண்ட யாவரும் மெய் மறந்தவராய்க் கடவுளைப் புகழ்ந்தனர்” (லூக் 5: 25-26).
+ நயீன் ஊர்க் கைம்பெண்ணின் இறந்து போன மகனை இயேசு உயிர்பெற்று எழச்செய்தபோது அனைவரும் கடவுளைப் போற்றிப்புகழ்ந்தனர் (லூக் 7:16).
+ பதினெட்டு ஆண்டுகளாக நிமிரமுடியாமல் கூன் விழுந்த நிலையில் இருந்த பெண் குணமடைந்தபோது, அவர் நிமிர்ந்து கடவுளைப் போற்றிப்புகழ்ந்தார் (லூக் 13:13).
+எரிக்கோவில் பார்வையற்ற ஒருவர் இயேசுவால் மீண்டும் பார்வை பெற்றபோது கடவுளைப் போற்றுகிறார். மக்கள் யாவரும் கடவுளைப் புகழந்தனர் (லூக் 18:43).

இயேசுபெருமானின் வாழ்வும் விண்ணகத்தந்தையைப் புகழ்வதாகவே இருந்தது.  தாம் அனுப்பிய எழுபத்திரண்டு சீடர்கள் திரும்பி வந்து, தாங்கள் செய்த பல்வேறு புதுமைகளைப் பற்றித் தம்மிடம் கூறியபோது, இயேசு இறைவனைப் போற்றினார் (லூக் 10:21). ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்தபோதும் (மாற்6:41), எம்மாவுக்குச் சென்ற இரு சீடர்களுடன் பந்தி அமர்ந்த போதும் (லூக் 24: 30), இயேசு கடவுளைப் போற்றினார்.

• இயற்கையும் இறைவனைப்புகழ்கின்றது
• கதிரவன் தன் கிரணக் கைகளால் கடவுளைத் தொழுகிறான்.
• கடல் தனது அலைகளால் ஆர்ப்பரித்து ஆண்டவரைப் போற்றுகிறது.
• மரங்கள் தங்கள் பூக்களைத் தூவித் தூவி அந்தத் தூயவனைத் துதிக்கின்றன.
• நிலம், நீர். காற்று, நெருப்பு, வானம் ஆகிய ஐம்பெரும் பூதங்களும் தத்தம் தொழிலைச் செய்து தங்கள் தலைவரைப் போற்றுகின்றன.

அவ்வாறிருக்க, பகுத்தறிவுடைய மனிதர் மட்டும் கடவுளைப் போற்றாதிருப்பது முறையாகுமா?

இரவில் புகைவண்டியில் பயணம் செய்த ஓர் அருட்சகோதரி நன்றாகத் தூங்கி விட்டார். அவரை டி. டி. ஆர் எழுப்பி ‘டிக்கட்’ கேட்டபோது அவர் கண்களை மூடிய வண்ணம் முழுந்தாளிட்டு சிலுவை அடையாளம் வரைந்து, “இயேசுவின் திரு இருதயமே! என் கண், காதுகளையும் , வாய் இருதயத்தையும் என்னை முழுவதும் உமக்குக் காண்pக்கையாகக் கொடுக்கிறேன்” என்றார். டி. டி. ஆர் சிரித்துக்ககொண்டு “சிஸ்டர் எனக்கு அதெல்லாம் வேண்டாம். டிக்கட்டை மட்டும் கொடுங்க, போதும்” என்றார். அப்போதுதான் அந்த அருட்சகோதரிக்குச் சுயநினைவு வந்தது!

நம்மில் பலர் கிளிப்பிள்ளை போன்று ஒருசில செபங்களைச் சொல்கிறோம். அவை பெரும்பாலும் நம் உதட்டிலிருந்துதான் வருகின்றன. உள்ளத்திலிருந்து வருவதில்லை. இறைவாக்கினர் எசாயாவை மேற்கோற் காட்டி இயேசு கிறிஸ்து “இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர். இவர்கள் உள்ளமோ என்னைவிட்டு வெகுதொலைவில் இருக்கிறது” (மத் 15:8) என்று கூறிப் போலியான வழிபாட்டைக் கண்டனம் செய்கிறார்.

இறைவனைப் போற்றுவதும் அவருக்கு நன்றி செலுத்துவதும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள்: ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க இயலாது. நற்செய்தியில் பல இடங்களில் இயேசு இறைவனுக்கு நன்றி செலுத்துகிறார். ஏழு அப்பங்களைக் கொண்டு நாலாயிரம் பேருக்கு உணவு அளித்தபோது, ஏழு அப்பங்களையும் எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார் (மாற் 8:6). இலாசரை உயிர்த்தெழச் செய்யுமுன் இறைவனுக்கு நன்றி கூறுகிறார் (யோவா 11:4). குணம் பெற்ற பத்துத் தொழுநோயாளிகளில் ஒருவர் மட்டும் திரும்பி வந்து, இயேசுவின் காலில் முகங்குப்புற விழுந்து, அவருக்கு நன்றி செலுத்தியபோது, “பத்துப்பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? (லூக் 17:17) என்று கேட்டதின் மூலம் இயேசு நம்மிடமிருந்து நன்றி உணர்வை எதர்பார்க்கிறார் என்பது தெளிவு.

எல்லாச் சூழ்நிலையிலும் நன்றிகூற (1தெச 5:18) அழைக்கிறார் தூய பவுல்,
தென்னிந்தியத் திருச்சபையைச் சார்ந்த ஒரு ‘பாஸ்டர்’ குதிரை ஒன்று வைத்திருந்தார். அக்குதிரைமேல் ஏறி, ‘இயேசுவுக்குப் புகழ்’ என்றால் அது ஓடும். ‘ஆமென்’ என்று சொன்னால் அது நின்று விடும். விவிலியக் குதிரை. அக்குதிரையைக் கத்ததோலிக்கக் குரு ஒருவர் பாஸ்டரிடமிருந்து விலைக்கு வாங்கினார். அக்குதிரையை ஓட்டுவது எப்படி, நிறுத்துவது எப்படி என்று மிகத் தெளிவாகப் பாஸ்டர் அவருக்குக் கற்றுக்கொடுத்தார்.

மலையில் வாழ்ந்த கத்தோலிக்கக் குரு மறுநாளே அக்குதிரையின் மேல் அமர்ந்து, ‘இயேசுவுக்குப்புகழ்’ என்று சொன்னதும் அக்குதிரை மிகவும் வேகமாக ஓடி, மலையின் விளிம்பிற்குச் சென்றுவிட்டது. இன்னும் ஒர் அடி அது முன்சென்றால் பாதாளத்தில விழவேண்டியிருக்கும். கத்தோலிக்கக் குருவுக்கு உடலெல்லாம் நடுங்கி வேர்த்துக்கொட்டியது. எப்படியோ ‘ஆமென்’ என்று சொல்லி அக்குதிரையை நிறுத்திவிட்டார். பேராபத்திலிருந்து தப்பிய மகிழ்ச்சியில் “இயேசுவுக்குப் புகழ்” என்று சொல்லி விட்டார்! உடனே அக்குதிரை அக்குருவுடன் பாதாளத்தில் குதித்துவிட்டது. விவிலியக் குதிரை விபத்துக் குதிரையானது. இது வெறும் கற்பனைக் கதையே.

‘இயேசுவுக்குப் புகழ்’ என்று கூறுபவர் விபத்திற்கு உள்ளாகமாட்டார்கள். மாறாக, இயேசுவைப் புகழ்வதால் அவர்கள் வாழ்வு வளம் பெறும், நெஞ்சிற்கு அமைதி கிடைக்கும். நாம் இருப்பதும் இயங்குவதும் இறைவனைப் போற்றுவதற்காகவே. ஏன்? வாழ்வு என்பது வாழ்த்துவதற்காகவேயாகும்.

ஓவ்வொரு திரைப்பட கலைஞனின் கனவும் தன் ஆயுள் நாட்களில் எட்டிப்பிடிக்க நினைக்கும் நிலா தான் அமெரிக்க நாடு வழங்கும் ஆஸ்கார் விருது. அந்த நிலாவை தட்டிச்சென்று தமிழகத்திற்கே பெருமை தேடித்தந்தவர் தான் ஏ.ஆர். ரஹ்மான். அவருடைய வாழ்க்கையின் மிக முக்கியமான தருணம் அந்த விருது கொடுக்கும் நேரம.; உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற நேரத்தில் அவன் உதறிய முத்துக்கள் இவைதான். என்ன தெரியுமா! “எல்லா மகிமையும் இறைவனுக்கே!” மனிதன் தன் மணிமகுடத்தை அடைந்தபோதும்கூட தவறாமல் மறவாமல் இறைவனு;கு நன்றி கூறிய தருணம் தான் இத்தருணம்.
தேவையா?

மனைவி ஒருவர் ஒவ்வவொரு நாளும் அருமையான உணவு சமைத்து, அதை அன்புடன் தன் கணவருக்குப் பரிமாறினார். ஆனால் கணவரோ தன் மனைவியின் சமையலை ஒருநாள் கூட பாராட்டியதில்லை. ஆத்திரம் அடைந்த மனைவி ஒருநாள் மாட்டுத் தவிட்டைக் குழைத்து அதைத் தன் கணவருக்கு பரிமாறினார். கணவரோ கடும்கோபத்துடன் “ என்னடி! நான் என்ன மாடா?” என்று கத்தினார்.

மனைவியோ மிகவும் அமைதியாக, “ஆமாங்க நம் மாட்டிற்கு என்ன தீவனம் கொடுத்தாலும் தின்கிறது. நல்லா இருக்குது அல்லது நல்லா இல்லை என்று அது ஒருபோதும் சொல்வதில்லை. அவ்வாறே நீங்களும்“ என்று ஒரு போடு போட்டார்.

மனைவி எவ்வளவு மோசமாகச் சமைத்தாலும் ‘சூப்பர்’ என்று சொல்லி அவரைப் பாராட்டாத கணவர் எவரும் அமைதியான குடும்ப வாழ்க்கை நடத்த முடியாது.

மனிதருக்குத்தான் புகழ்ச்சியும் பாராட்டுதலும் தேவை. புகழ்ச்சிக்கு மயங்காத மனிதர் எவருமில்லை. ஆனால் கடவுளுக்கு நமது புகழ்ச்சி தேவையா? இக்கேள்விகளுக்கு திருச்சபையின் திருவழிபாடு மிகவும் பொருத்தமான பதிலைத்தருகிறது.

நமது புகழுரை இறைவனுக்குத் தேவையில்லை. நாம் இறைவனுக்கு நன்றி செலுத்துவதே அவரது அருட்கொடையால்தான் நாம் இறைவனைப் புகழ்ந்துரைப்பதால் அவரின் மாட்சிமை ஏற்றம் பெறாது: எனினும் நாம் மீட்படையப் பயன்படுகிறது. இறைவன் நமது புகழ்ச்சியால் மயங்குபவர் அல்ல. நாம் அவரைப் புகழவில்லை என்றால் அல்லது அவருக்கு நன்றி செலுத்தவில்லை என்றாலும் அவருக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. இறைவனைப் போற்றுவதால், மகிமைப்படுத்துவதால் நாம் மீட்படைகிறோம்;: நாம் மீட்படைவதால் இ.றைவன் மகிமை அடைகிறார்.
துன்பங்களில் துவண்டு நின்ற நிலையிலும் சரி, வியாகுல வாளால் ஊடுருவப்பட்ட போதிலும் சரி கர்த்தர்க்குத் தாயாக வேண்டும் என்ற இனிய செய்தி அறிவிக்கப்பட் போதும் சரி, “இதோ உன் தாய்” என்று இவளை உலக மாதாவாக உலகிற்கு இறைவன் கொடுத்தபோதும் சரி, கன்னிமரியாள் இறைவனைப் புகழ்ந்து கொண்டே இருந்தாள்.

உலக மக்களெல்லாம் நம் அன்னை மரியாளை உலகமாதாவே என்று வாழ்த்தி போற்றி பாடும் வகையிலும் வாழ்ந்தாள். அன்னைமரியாளை புகழாதோர் இப்புவியில் இல்லை என எனலாம். அவள் அன்பை எண்ணி எண்ணி வியந்து போகிற மக்கள் கூட்டம் ஏராளம் ஏராளம். அன்னை மரியாளைப்பற்றி எழுதப்பட்டுள்ள புத்தகங்கள் எத்தனை எத்தனை வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மாதப்பத்திரிக்ககைள் வாரப்பத்திரிக்ககைகள் துண்டுப்பிரசுரங்கள் எண்ணிலடங்கா. இவையெல்லாம்ட நம் அன்னை மரியாளை புகழந்துபோற்றிப்பாடுவதற்கு சான்றகளாகும்.

உலகில் பலவேறு இடங்களில் காட்சி தந்த அன்னை மரியாள் இன்றும் தன் அன்புப் பிள்ளைகளுக்கு ஏராளமான புதுமைகளைப் புரிந்து கொண்டிருக்கும் அற்புதக் காரியங்கள் எல்லாம் அந்தந்த அலயக் காட்சியகங்களில் வைக்கப்பட்டிக்கின்றன என்றால் இவைகளுகம்ட அன்னை மரியாளைப் புகழந்து கொண்டிருக்கின்றன என்று தானே அர்த்தம். எனவே மானிடப்பிறவிகள் மட்டுமல்ல இயற்கை உலகமே அன்னை மரியாளை புகழ்கிறது.

கடவுள் நமது வாழ்வில் பொழிந்த, பொழிந்துவரும் பல்வேறு நன்மைகளைக் குறித்துத்துதிக்கலாம். என்னைப் பெயர் சொல்லி அழைத்தவரே, கிறிஸ்துவ குடும்பத்தில் என்னைப் பிறக்குமாறு செய்தவரே, நோய்களைக் குணமாக்கியவரே, மன்றாட்டுகளைக் கேட்டுப்பதில் அளிப்பவரே, எனது குற்றங்களை மன்னித்து மறந்துவிடுபவரே, விபத்துக்களிலிருந்தும் ஆபத்துக்களிலிருந்தும் பாதுகாத்து வருபவரே, எனக்காக உயிர் நீத்த உத்தமரே உம்மைத் துதிக்கிறேன் உமக்கு நன்றிகூறுகிறேன்.

“ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் என்ன கைம்மாறு செய்வேன.; மீட்பின் கிண்ணத்தை கையில் எடுத்து ஆண்டவரின் திருப்பெயரை தொழுவேன்” என்று கூறும் திருப்பாடல் 116 ஐ நினைவில் நிறுத்தி தொடர்ந்து வருகிற இவ்வழிபாட்டில் நன்றி உணர்வோடு கலந்து கொண்டு நன்றி பலியாக ஒப்புக்கொடுப்போம்.

மரியாளின் புகழ்ச்சி மற்றும் நன்றி பாடலை நமது புகழ்ச்சி பாடலாகவும் நன்றிப்பாடலாகவும் கொண்டு எந்த நிலையிலும் இறைவனைப்போற்றி அவருக்கு நன்றியுள்ளவர்களாக நாம் வாழ்வதே நாம் நம் தாய்க்கு பாடும் தாலாட்டாகும்.

Rain November 2008

Ordination Preparation 2009

Kolli Hills - trekking & swimming Dec. 2008

Pastoral Exposure at Annamangalam Dec 2008

We have come into this place

We have come into this place
And gathered in His Name to worship Him,
We have come into this place
And gathered in His Name to worship Him,
We have come into this place
And gathered in His Name
To worship Christ the Lord,
Worship Him, Christ the Lord.


So forget about yourself
And concentrate on Him and worship Him,
So forget about yourself
And concentrate on Him and worship Him,
So forget about yourself
And concentrate on Him
And worship Christ the Lord,
Worship Him, Christ the Lord.

He is all my righteousness,
I stand complete in Him and worship Him,
He is all my righteousness,
I stand complete in Him and worship Him,
He is all my righteousness,
I stand complete in Him
And worship Christ the Lord,
Worship Him, Christ the Lord.

Let us lift up holy hands
And magnify His Name and worship Him,
Let us lift up holy hands
And magnify His Name and worship Him,
Let us lift up holy hands
And magnify His Name
And worship Christ the Lord,
Worship Him, Christ the Lord.