பத்துக் கட்டளைகள்

1. நாமே உன் கடவுளாகிய ஆண்டவர். / எம்மைத் தவிர வேறு தெய்வங்கள்
உனக்கு இருத்தல் ஆகாது.
2. உன் கடவுளாகிய ஆன்டவரின் பெயரை / வீணாகப் பயன்படுத்தாதே.
3. μய்வுநாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் / கருத்தாய் இரு.
4. உன் தந்தையையும் தாயையும் மதித்து நட.
5. கொலை செய்யாதே.
6. விபச்சாரம் செய்யாதே.
7. களவு செய்யாதே.
8. பிறருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்லாதே.
9. பிறர் மனைவிமீது ஆசை கொள்ளாதே.
10. பிறருக்கு உரியது எதையும் கவர்ந்திட விரும்பாதே.

இந்தப் பத்துக் கட்டளைகளும் இரண்டு கட்டளைகளில் அடங்கும்:

முதலாவது / எல்லாவற்றிற்கும் மேலாக / கடவுளை அன்பு செய்வது.
இரண்டாவது / தன்னை அன்பு செய்வது போல / பிறரையும் அன்பு செய்வது.

பாஸ்கா கால மூவேளை மன்றாட்டு

விண்ணக அரசியே மனம் களிகூறும். - அல்லேலூயா.
ஏனெனில் இறைவனைக் கருத்தாங்கும் பேறு பெற்றீர். - அல்லேலூயா.
தாம் சொன்னபடியே அவர் உயிர்த்தெழுந்தார்.- அல்லேலூயா.
எங்களுககாக இறைவனை மன்றாடும். - அல்லேலூயா.
கன்னி மரியே! அகமகிழ்ந்து பூரிப்பு அடைவீர்.- அல்லேலூயா.
ஏனெனில் ஆண்டவர் உண்மையாகவே உயிர்த்தெழுந்தார். - அல்லேலூயா.

மன்றாடுவோமாக
இறைவா / உம்முடைய திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின்
உயிர்த்தெழுதலால் / உலகம் மகிழத் திருவுளம் கொண்டீரே! /அவருடைய
அன்னையாகிய கன்னி மரியாவின் பரிந்துரையால் / நாங்கள் நிலை வாழ்வின் பெரு
மகிழ்வில் பங்கு பெற / அருள் புரியும். / எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து
வழியாக / உம்மை மன்றாடுகிறோம். / ஆமென்

மூவேளை மன்றாட்டு

ஆண்டவருடைய தூதர் மரியாளுக்கு தூது உரைத்தார் - மரியா தூய ஆவியாரால் கருவுற்றார்
இதோ ஆண்டவரின் அடிமை. - உமது சொற்படியே எனக்கு நிகழட்டும்.
வாக்கு மனிதர் ஆனார். - நம்மிடையே குடிகொண்டார்.
கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி / இறைவனின் தூய
அன்னையே / எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மன்றாடுவோமாக
இறைவா / உம் திருமகன் மனிதர் ஆனதை / உம்முடைய வானதூதர் வழி
யாக / நாங்கள் அறிந்திருக்கிறோம். / அவருடைய பாடுகளினாலும் இறப்பினாலும் /
நாங்கள் உயிர்ப்பின் மாட்சி பெற / உமது அருளைப் பொழிவீராக. / எங்கள்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக / உம்மை மன்றாடுகிறோம். / ஆமென்.

மனத்துயர் செபம்


சுருக்கமான மனத்துயர் செபம்
என் இறைவனாகிய தந்தையே! நீர் நன்மை நிறைந்தவர்; எனவே, எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் அன்பு செய்கிறேன். என் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக மனம் வருந்துகிறேன். உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லையென்று உறுதி கூறுகிறேன். ஆமென்.


ஒப்புரவில் சொல்லத்தகும் மனத்துயர் செபம்
என் இறைவா, நன்மை நிறைந்தவர் நீர்,
அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவர் நீரே,
என் பாவங்களால் உம்மை மனநோகச் செய்து விட்டேன். ஆகவே நான் குற்றங்கள் பல செய்தேன் எனவும்,
நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும் மனம் நொந்து வருந்துகிறேன்.
உமது அருள் துணையால் நான் மனம்திரும்பி இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கொண்டிருக்கிறேன்.
எங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் பயனாக, இறைவா, என்மேல் இரக்கமாயிரும். ஆமென்.

செபமாலை செபித்தல்



சிலுவை அடையாளம்
சிலுவையைக் கையிலேந்தி சிலுவை அடையாளம் வரையவும்.
பிதா,சுதன், தூய ஆவியின் பெயராலே - ஆமென்.

விசுவாசப்பிரமாணம்
பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன்.
அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவை
விசுவசிக்கிறேன்.
இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியிடமிருந்து பிறந்தார்.
போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.
பாதளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
பரலோகத்திற்கு எழுந்தருளி,எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கம் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார்.

பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன்.
பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன்.
புனிதர்களுடைய சமூக உறவை விசுவசிக்கிறேன்.
பாவப் பொறுத்தலை விசுவசிக்கிறேன்.
சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன்.
நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன் - ஆமென்.

கர்த்தர் கற்ப்பித்த செபம்
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே,
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக,
உம்முடைய இராச்சியம் வருக.
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல,பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.
எங்களுக்குத் தீமை செய்பவர்களை நாங்கள் பொறுப்பதுபோல, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்.
தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும் - ஆமென்.

மங்கள வார்த்தை செபம்
அருள் நிறைந்த மரியே வாழ்க!
கர்த்தர் உம்முடனே,
பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே,
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.
அர்ச்சியசிஷ்ட மரியாளே,
சர்வேசுரனுடைய மாதாவே,
பாவிகளாயிருக்கிற எங்களுக்காக,இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும் - ஆமென்.

மகிமை செபம்
பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக - ஆமென்.

பாத்திமா செபம்
ஓ என் இயேசுவே!
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரகநெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ அவர்களுக்குச் சிறப்பான உதவிபுரியும்.