புனிதம் தேடும் பூபாளங்கள் - இறையழைத்தல் நாடகம்



காட்சி 1
பின்குரல்:  மிக்கேல்புரம்.... கிறிஸ்தவர்கள் மிகுந்து வாழும் ஓர் கிராமம். இவர்களது வழிபாடுகளும், கொண்டாட்டங்களும், வெறும் வெளிஆடம்பரங்களாக, சம்பிரதாயங்களாக நின்று விடுகின்றன. ஒற்றுமை உணர்வை, அன்பை, குடும்ப உணர்வை வளர்க்க வேண்டிய திருப்பலியில் கூட வேற்றுமை உணர்வுகளும், பகை உணர்வுகளும் தலைவிரித்தாடுங்கின்றன.... இறைவனின் திருப்பந்தியில் அமரச்செல்பவர்கள் அனைவரும் ஒன்றித்த கரத்தோடு செல்வது கிடையாது. ஒவ்வோருவர்க்குள்ளேயும் ஒரு சுயநலநோக்கு இருக்கத்தான் செய்கிறது...!
அந்தோணி:  அடடா பூசை ஆரம்பிக்கப்போவுதா....? வேற எவனாவது வாசகம் வாசிக்க வந்துடபோறானுங்க...! இந்த ஓசியாரு வாசக புத்தகத்தை எங்க வச்சாரோ தெரியலயே....?
{ எதிரே ராபர்ட் வாசகப் புத்தகத்துடன் வருதல் }
அந்தோணி:  ஏய் ராபர்ட்.... வாசகப் புத்தகத்தை மரியாதையா கொடுத்துடு....!
ராபர்ட்:  ஏம்பா... நீ மட்டும்தான் பூசையில் வாசகம் வாசிக்கனும்முன்னு எங்கேயாவது எழுதி வச்சிருக்கா...?
அந்தோணி: இத்தனை நாளா நான்தான் வாசிக்கிறேன்...இப்ப நீ என்னடா புதுசா வந்திருக்கே? வம்பு வளக்கனும்முன்னு ஆசையா இருக்கா...?
ராபர்ட்:   ஆமாம்டா ஆசையாத்தான் இருக்கு...! வாடா இன்னைக்கு ஒன்னால என்னால ஆனத பாத்துடலாம்! 
அந்தோணி:  அதைத்தான் இன்னைக்கு பாத்துடுவோமே..... டேய்
{சண்டை போட பாய்தல்}
ராபர்ட்:  டேய்! வாடா ஓன் வாலை இன்னைக்கு நறுக்கிப்புடுறேன்...!
{இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு, அடித்துக்கொண்டவர்களாய் வெளியேறுகின்றனர்... தொடர்ந்து உபதேசியாரும், ஊர் பெரியவர் ஒருவரும் மேடையில் தோன்றுகின்றனர்....}
பெரியவர்:  யோவ் உபதேசியாரே....
உபதேசியார்:  என்ன விஷயமுங்க.....?
பெரியவர்:  வெள்ளிக்கிழமை என்னோட தாத்தா இறந்த நினைவு நாளு... அன்னைக்கு பாட்டுப்பூசை வைக்கனும்.... இந்தாங்க 25 ரூபா.... எப்பவும் 6 மணிக்குத்தானே பூசை...? சாமியாரை கொஞ்சம் 7 மணிக்கு ஆரம்பிக்கச் சொல்லுங்க. ஏன்னா வெளியூர்லேந்தெல்லாம் என்னுடைய மாமன் மச்சானெல்லாம் வரவேண்டியிருக்கு.....! இன்னும் நாலு அஞ்சி சாமியாருங்க சேர்ந்து பூசை வைச்சாக்கூட, நல்லா சிறப்பா இருக்கும்... எனக்கும் கௌரவமாக இருக்கும். அதுக்கு கொஞ்சம் ஏற்பாடு பண்ணிடுயா... அப்ப வரட்டுமா....?
உபதேசியார்:  {ஏளனமாக} ம்... ஒரு நாள்கூட இந்தக்கோவில் பக்கம் தலைவைச்சி படுக்கமாட்டாரு... தாத்தா செத்த நாள் பூசை மட்டும் சிறப்பா இருக்கனுமாம். வெளிவேடக்கார பயலுங்க...!இவனுங்களுக்கு பக்தியை விட கௌரவமும், ஆடம்பரமும்தான் முக்கியமாபோயிடுச்சி...!போக்கிரி பயலுங்க...!
{கோயிலில் ஒருவர் கையில் செபமாலை உருட்டிக்கொண்டிருக்க இளைஞர் இருவர் பேசிக்கொள்கின்றனர் }  
இளைஞர் 1:  மாப்பிள்ள... அந்த ஆளப்பத்தியா...?உழைக்கிறவனுக்கு ஒழுங்காகூலி தரமாட்டான்... செபமாலை உருட்டுறதப்பாரு.....
இளைஞன் 2:  மச்சி... அதை ஏண்டா நீ போய் பாத்துக்கிட்டிருக்க... நம்ம சின்னக் குட்டி இன்னைக்கு சிக்குன்னு வந்நிருக்கா பாருடா...! மாடர்ன் டிரஸ் போட்டு அசத்துறா பாரு!
இளைஞன் 1: ஆமாம் மாப்பிள... பிரசங்கம் ஆரம்பிக்கப்போவுது... நம்ம கொஞ்சம் காத்தாட போய்வருவோமா....?
இளைஞன் 2:  தம்மு இருக்குல ...? வா வா போகலாம்....!
{இருவரும் உல்லாசமாக வெளியேற விளக்கு அணைக்கப்படுகிறது}

காட்சி 2
பின்குரல்:  சூசைபுரம் என்னும் மற்றுமோர் கிராமம். இங்கு வாழ்பவர்கள் பரம்பரை கிறிஸ்தவர்கள் தான்... ஆனால் பெயரளவு கிறிஸ்தவர்கள்... அருள்வாழ்வின் ஊற்றும்,கிறிஸ்தவ வாழ்வை புனிதமாக்க வழிகளுமாகிய திருவருள்சாதனங்களின் மேன்மைய உணராதவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்...! ஆதலால், இவ்வூர் மக்களின் வாழ்வில் ஒழுக்கக்கேடுகளும், முறைக்கெட்ட வாழ்க்கையுமே வாடிக்கையாகிவிட்டன. உண்மையான கிறிஸ்தவ வாழ்வுக்கு அடிப்படைத்தேவையான மறைக்கல்வியில் அவர்களுக்கு ஆர்வமில்லை..... இச்சூழ்நிலையில் அருள்சகோதரர் ஒருவர் சூசைபுரத்தில் அடியெடுத்து வைக்கிறார்....!
பங்கேற்போர்:  
  • சகோதரர்
  • தாத்தா
  • பேரன்{ சிறுவன் }
சகோ:  தோஸ்திரம் தாத்தா....! நல்லாயிருக்கிங்களா....?
தாத்தா:  யாருப்பா இது? தெரியிலையே...! பாழாப்போன கண்ணும் தெரியமாட்டுதே...!
சகோ:  நான் பிரதர் தாத்தா. சாமியாராக இன்னும் ரெண்டு வருஷம் இருக்குது...!சும்மா உங்க ஊரை பாத்துட்டு போலாம்னு வந்தேன்... {பக்கத்தில் இருக்கும் சிறுவனைப் பார்த்து} இது யாரு தாத்தா உங்கப் பேரனா....?
தாத்தா:  ஆமாம்.....மாம்....என் பேரன்தான்...!
சகோ:  உன் பேரு என்னப்பா...?
சிறுவன்:  என் பேரு சின்னது...!
சகோ:  சின்னதா....!?! அதுசரி உன் ஞானஸ்தானப் பேரு என்னப்பா தம்பி...?  {சிறுவன் முழித்தல்... கைவிரித்தல்}
தாத்தா: அதை ஏன் தம்பி கேக்குறீங்க...? இவன் அப்பன் அதான் என் மொவன்.சரியான பொறுக்கி.. அவனுக்கு 17 வயசு இருந்தப்பவே எவளோ ஒருத்தியை கூட்டிகிட்டு வந்துட்டான்... அவளுக்கு பொறந்ததுதான் இவன்...!
சகோ:  அய்யய்யோ...பதினேழு வயசிலேவா...?
தாத்தா:  ஆமாம் தம்பி! இந்த ஊர்ல எவன் வயசை பார்க்கிறான். கொஞ்சம் மீசை முளைச்சாலே எவளையாவது இழுத்துட்டுப்போய் மாரியம்மன் கோவில்ல வைச்சு தாலி
கட்டுறானுங்க... இல்லைனா ரெ¬¬ஜிஸ்டர் கல்யாணம் பண்ணிபுடுறானுங்க...!
சகோ:  அடப்பாவமே...அதுசரி உங்க மகனை அப்படியே விட்டுட்டீங்களா...?
தாத்தா:  வேற என்ன தம்பி செய்யிறது...?
சகோ:  ஏய் பையா...? எங்க சிலுவைப்போடு பாக்கலாம்....!
{ சிறுவன் தெரியாமல் முழிக்கிறான் }
தாத்தா:  எங்க தம்பி இவுங்களுக்கு செபமெல்லாம் தெரியுது....? சினிமாப் படத்தை பத்தி கேளுங்க.... விவரமா, விளக்கமா சொல்வான்....!
சகோ:  சரி வர்றேன் பெரியவரே... { சிறிது தூரம் சென்றபின் } ச்சே... இப்படியும் ஒரு ஊரா...? கிறிஸ்துவ வாழ்வுக்கு தேவையான அடிப்படை மறைஅறிவும், இறைவனோடு ஒன்றிக்கச்செய்யும் புனித வழிகளாகிய திருவருள்சாதனங்களைப் பற்றியும் அறியாம, தெரியாம இருக்கிறாங்ளே...!?!

காட்சி. 3
பின்குரல்:  மூடப்பழக்கங்களிலே மூழ்கிப்போன சிற்றூர்தான் சின்னப்பன்பட்டி. அவ்வப்பொழுது எழும் இயற்கை சீற்றங்களுக்கும் நோய் நொடிகளுக்கும் சாபத்தின் விளைவு. பேய் பூதங்களின் வேலைபாடுகள் என காரணங்கள் காட்டப்பட்டன. நோய் கண்ட போதும் துன்பதுயரங்கள் சூழ்ந்து கொண்டபோதும் இவர்கள் குணமளிக்கும் இயேசு கிறிஸ்துவை துறந்து பூசாரிகளை நாடினர். மாய ஜால மந்திரிப்புகளில் நம்பிக்கை கொண்டனர். குருவின் வழியாய் இறைவன் செயல்படுத்தி குணப்படுத்தி புனிதமடையச் செய்கிறார் என்பதை ஏனோ மறந்தனர்....?
பங்கேற்போர்:   
  • பூசாரி, 
  • தகப்பன் குழந்தையுடன் 
  • பேய் பிடித்தவனோடு இருவர்.
{ பூசாரி தனக்குள் பேசிக் கொண்டிருத்தல் }
பூசாரி:  என்னடா இது... வழக்கமா சின்னப்பன் பட்டியிலிருந்து தெனம் பத்து பேருக்கு குறையாம வரும். இன்னைக்கு இன்னும் ஒருத்தனையும் காணோமே... ஆங்... யாரோ வரானே
தகப்பன்:  சாமி...{பதற்றத்துடன்} என்னுடைய புள்ளைக்கு ரெண்டு நாளா ஜூரம். நெருப்பா கொதிக்குதுங்க கொஞ்சம் மந்திரிச்சி விடுங்க...
பூசாரி:  அதுசரி... ஆத்தாளுக்கு தச்சனையா 20 ரூபா எடுத்து வைய்யு.
தகப்பன்:  வைக்கிறேன் சாமி... எவ்வளவு பணம் வேணும்னாலும் வைக்கிறேன்... என் புள்ள பொழச்சா போதுங்க
பூசாரி:  சரி உட்காரு { வேப்பிலையை வைத்து கொண்டு மந்திரம் சொல்லி திருநீரை ஊதிவிட்டு நெற்றியில் வைத்து அனுப்புதல் }
இன்னும் இரண்டு நாளைக்கு வந்து மந்திரிச்சிட்டுப் போ...
தந்தை:  சரிங்க சாமி... {செல்லுதல்... உடனே பேய் பிடித்தவனை சிலர் கூட்டி வர அவன் ஆடிக்கொண்டு வருதல்}
பூசாரி:  என்னங்கய்யா... பேய் பிடிச்ச கேசா?
ஒருவன்:  ஆமாங்க... மாடு மேய்க்கப்போன இடத்துலே ஈச்சமரத்து முனி பிடிச்சிடுச்சி... போவ மாட்டேங்குது...ஆள போட்டு அலங்க மலங்க அடிக்குது சாமி...
பூசாரி:  இங்க இப்படி கொண்டா...?{வேப்பில்லையை கொண்டு அடித்தல்}பேய் ஆடி அட்டகாசம் செய்கிறது.
இவனை விட்டு போறியா இல்லையா?
பேய்:  ஹ¨ம்... போறேன் அதற்கு முன்னாடி...
பூசாரி:  அதுக்கு முன்னடி....?
பேய்:  எனக்கு சேர வேண்டியதை  கொடுத்தாகனும்...
பூசாரி:  உனக்கு என்ன வேணும் சீக்கரம் சொல்லு?
பேய்:  சேவக் கோழியை காவு கொடு. பாக்கெட்டு மலிவு விலை சாராயம் கொன்டா.ஹ¨ம்... ஹ¨ம்... 2 பாக்கெட் கடாமார்க் சுருட்டு கொணாடா...{ஆடுதல்}
பூசாரி:  யோவ்... முனிபேய் சீக்கரம் போயிடாது.அது கேட்ட எல்லாம் எடுத்துக்கிட்டு சாயங்காலம் கூட்டிக்கிட்டு வாங்க.
எல்லோ:  சரிங்க சாமி {இழுத்துக்கொண்டு செல்தல்}
முடிவுரை:  இக்காட்சிகளில் கண்ட மூன்று கிறிஸ்தவ கிராம மக்களைப் போன்று எத்தனையோ பேர் இன்னும் திருப்பலியின் மேன்மையையும் உண்மைபொருளையும் உணராதவர்களாய் திருவருள்சாதனங்களை அறியாதவரகளாய் இறைவன் இத்திருவருள்சாதனங்கள் வழியே புனிதபடுத்தி தம்மோடு உறவு கொள்ள செய்கிறார் என்பதை தெரியாதவர்களாக திருமறைக் கல்வியை பெறாதவர்களாக, மூடநம்பிக்கையில் மூழ்கியவர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களை இறையரசின் துணைக்கொண்டு அர்ச்சித்து ஆசி வழங்கி புனித பாதையில் நடத்தி செல்ல மறு கிறிஸ்துகளாம் குருக்கள் தேவை. இவ்வர்ச்சிக்கும் பணியை ஏற்க குருத்துவ நிலையை தேர்ந்து கொள்ள உங்களில் எத்தனை பேர் முன்வரப் போகிறார்கள்... சிந்திப்பீர்... செயல்படுவீர்...
நன்றி....!!!

தியானப் பாடல்



நீ என் மகனல்லவா
உன்னை அழைத்ததும் நானல்லவா
நீ என் மகனல்லவா
உன்னை அழைத்ததும் நானல்லவா
கலக்கம் வேண்டாம் கவலை வேண்டாம்
காலமுழுவதும் உடனிருப்பேன்
நீ என் மகனல்லவா
ஆண்டவரின் ஆவி என்மேலே
ஏனெனில் என்னை அருட்பொழிவு செய்தார்
ஆண்டவர் வாழ்க

1
அருட்மிகு பலியாய் அரவணைத்து
நலிவுற்ற நெஞ்சத்திற்கு உறுதியூட்டு
மேடு பள்ளங்களை சமன்செய்ய
ஏற்றத் தாழ்வுகளை வேரறுக்க
உன்னைத் தேர்ந்துள்ளேன்
அழிக்கவே ஆக்கவே உன்னை அனுப்புகிறேன்
ஆண்டவரின்....




2
இடிந்து கிடப்பதை சீர்படுத்த
அழிந்து போனதை உருவாக்க -2
வாழ்வை அழந்தோர் வாழ்வு பெற-2
சிறையில் வாடுவோர் விடுதலையாய்
உன்னை தேர்ந்துள்ளேன்
படைக்கவே வளர்க்கவே
உன்னை அனுப்புகிறேன்
ஆண்டவரின்.......