பேர் கொண்ட புனிதரை நோக்கி செபம்

என் பேர் கொண்டிருக்கிற புனிதரே ! ....உமது அடைக்கலத்தில் என்னை ஒப்படைத்து விடுகிறேன். எனக்கு இடப்பட்டிருக்கும் பெயருக்கு ஏற்ப சுகிர்த நடத்தை உள்ளவனாய் வாழவும் உம்மிடத்தில் சிறப்புற விளங்கிய புண்ணியங்களை நான் அனுசரிக்கவும், எனக்குத் தேவ கிருபை கிடைக்கத்தக்கதாகப் பலமாய் மனுபேசியருளும். என் வாழ்நாளில் எனக்கு நேரிடும் ஆபத்துகளில் நின்று என்னைத் தற்காத்துப் பயங்கரமான மரணவேளையில் என்னைக் கைவிடாமல் பாதுகாத்தருளும் காவலனே ! - ஆமென்.

நோயாளிகள் சொல்லத்தகும் செபம்

ஒரே சர்வேசுரன் உண்டு என்று விசுவசிக்கிறேன். அவர் நல்லவர்களுக்குச் சன்மானமும், கெட்டவர்களுக்குத் தண்டனையும் கொடுப்பார் என்று விசுவசிக்கிறேன். ஒரே சர்வேசுரனில் தந்தை இறைவன், மகன் இறைவன், பரிசுத்த ஆவியார் இறைவன் ஆகிய மூன்று தெய்வீக ஆட்கள் இருக்கிறார்கள் என்று விசுவசிக்கிறேன்.

மகனாகிய இறைவன் தம் கடவுள் தன்மையை விட்டுவிடாமல் மனிதனானார் என்று விசுவசிக்கிறேன். என் ஆண்டவர், என் இரட்சகர் மனுக்குலத்தின் மீட்பர் என்று விசுவசிக்கிறேன். அவர் எல்லா மனிதருடைய மீட்புக்காகவும் எனக்காகவும் சிலுவையில்
மரித்தார் என்று விசுவசிக்கிறேன். இறைவன் போதித்து வெளிப்படுத்திய அனைத்தையும் அவருடைய ஆதாரத்தின் மேல் விசுவசிக்கிறேன்.

ஓ, என் தேவனே ! எனக்குத் திடமான விசுவாசத்தைத் தந்தருளும். ஓ, என் தேவனே ! நான் உயிருள்ள விசுவாசத்தோடு விசுவசிக்க எனக்கு உதவி செய்யும்.
அளவற்ற நன்மையும் இரக்கமும் உள்ள இறைவா, நான் இரட்சணியம் அடைவேன் என்று எதார்த்தமாய் நம்புகிறேன். எனது இரட்சணியத்துக்கு வேண்டிய சகலத்தையும் நான் செய்யும் படி எனக்கு உதவி செய்யும்.

என் வாழ்நாளில் நான் அநேக பாவங்களை செய்தேன். ஆனால் இப்பொழுது நான் அவைகளைப் புறக்கணிக்கிறேன். அவைகளை வெறுக்கிறேன். அவைகள் எல்லாவற்றிற்காகவும் மெய்யாகவே மனஸ்தாபமாயிருக்கிறேன். அனைத்து நலனும், நிறைவான தூய்மையும், பேரிரக்க தயாளமும் கொண்டுள்ள என் இறைவனுக்கு விரோதமாகவும் சிலுவையில் எனக்காக மரித்த என் தேவனுக்கு விரோதமாகவும் துரோகம் செய்தேன் என்கிறதினாலே மனஸ்தாபமாயிருக்கிறேன்.

ஓ என் தேவனே ! என் முழு இருதயத்தோடு உம்மை நேசிக்கிறேன். தேவரீரை மனநோகச் செய்ததற்க்காக என்னை மன்னிக்கும் படி உம்மை கெஞ்சி மன்றாடுகிறேன்.
ஓ என் தேவனே ! உமது உதவியைக் கொண்டு இனிமேல் ஒருக்காலும் உமக்கு விரோதமாக நடக்கமாட்டேன் என்று வாக்குக் கொடுக்கிறேன்.

என் அன்புள்ள இறைவா ! என் பேரில் இரக்கமாயிரும்.

நல்ல மரணத்துக்கு ஆயத்தம்

நல்ல மரணத்தினாலே நித்திய பேரின்பமும் துன்மரணத்தினாலே நித்திய நரக நிர்பாந்த ஆக்கினையும் வருகிறபடியால் நல்ல மரணத்துக்கு ஆயத்தம் பண்ணுகிறது யாவருக்கும் மகா அவசரமான காரியமாயிருக்கறது. நன்மரண ஆயத்தத்துக்கு ஆத்தும சுத்திகரம் பிரதானமாய் இருக்கிரபடியதாலும், உனக்கு சாவு எப்போது வருமென்கிற நிச்சயம் தெரியாததினாலும், அப்போதைக்கப் போது பாவசங்கீர்த்தனத்தில் உன் ஆத்துமத்தைச் சுத்தி செய்வதுமில்லாமல், உனக்கு வியாதி வந்து உன் புத்தி தடுமாற்றங்கொள்ளும் போது குருவை அழைக்காமல், நல்ல நினைவு இருக்கும் போதே பாவசங்கீர்தனம் செய்து நோயில் பூசுதலைப் பெற்று, அடிக்கடி விசுவாச நம்பிக்கை தேவசிநேக முயற்சிகளையும், உத்தம மனஸ்தாப பரலோக, அருள் நிறைந்த, மந்திரங்களையும் செபித்து இதன் அடியில் வரும் செபத்தையும் செபித்துக் கொண்டு வருவாயாக.

கொடிய நேய்வாய் பட்ட காலத்தில் சொல்லத்தக்க செபம்

ஓ இயேசுவே ! திவ்விய மீட்பரே, எங்கள் பேரிலும், உலகினர் பேரிலும் இரக்கமாய் இரும் !
ஓ வல்லபக் கடவுளே ! ஓ பரம தேவனே ! என்றும் வாழும் இறைவா, எங்கள் பேரிலும் உலகத்தார் அனைவர்பேரிலும் தயையாயிரும்.

என் இயேசுவே ! எங்களுக்குப் பொறுத்தலும் இரக்கமும் அளித்து, இந்த ஆபத்தான காலத்தில் உமது விலையேறப் பெற்ற திரு இரத்தத்தை எங்கள் பேரில் தெளித்தருளும். என்றென்றும் வாழும் தந்தையே ! உமது ஒரே பேறான இயேசுகிறிஸ்துவின் திரு இருதயத்தைப் பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிற எங்கள் பேரில் இரக்கமாயிரும். -ஆமென்.

நோய்ப்பட்ட கால்நடைகளுக்கான செபம்

ஆண்டவரே ! மிகுந்த தாழ்ச்சியோடே வணங்கி உம்முடைய இரக்கத்தைக் கேட்கிறோம். கடின நோயால் பீடிக்கப்பட்டு இருக்கிற இந்த மிருகம் உம்முடைய ஆசீரினால் சுகம் அடைந்து, இனி யாதொரு நோய் படாதபடி எல்லாத் தொந்தரைகளும் விலகிப்போகச் செய்யும். நீரே அவைகளுக்குச் சீவனும் ஆரோக்கியமுமாயிரும். இரக்கம் மிகுந்த இறைவா, தேவரீர் தாமே இத்தகைய வாயில்லா ஜீவன்களை மனிதரின் நன்மைக்காக அளித்திருப்பதால், எங்கள் பிழைப்புக்கு வேண்டியிருக்கின்ற அவைகளுடைய உபகாரம் எங்களுக்கு இல்லாமல் போகாதபடிக்குக் கிருபை செய்தருளும். இந்த மன்றாட்டை எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். -ஆமென்.

பெற்றோரின் செபம்:

மனுமக்களின் தந்தையே, இந்தப் பிள்ளைகளை எனக்குக் கொடுத்து என் பொறுப்பில் வைத்துக் காத்து உமக்கேற்ப நடக்கவும், அவர்களை நித்திய சீவியத்துக்குக் கொணடு வரவும் செய்தீரே. இந்தப் புனித ஊழியத்தையும், கண்காணிப்புப் பொறுப்பையும் நிறைவேற்ற உனக்கு உதவியாக உமது ஞான வரத்தை தந்தருளும். நான் அவர்களுக்கு எதை கொடுக்கவேண்டியதோ அதையும், எதை நிறுத்த வேண்டியதோ அதையும் கற்பியும். எப்போது கண்டிக்க வேண்டியதோ அப்போது கண்டிக்கவும், எப்போது அரவணைக்க வேண்டியதோ அப்போது அரவணைக்கவும் செய்வீராக. இன்னமும் சாந்த குணத்தில் என்னைப் பலப்படுத்தியருளும். அவர்கள் பேரில் கவலையும் ஜாக்கிரதையுமாய் இருக்கவும் அந்தப் பிள்ளைகளுக்கு இளக்காரம் கொடுக்கிறதாலும், அதிகமாய்த் தண்டிக்கிற மூடத்தனத்திலும் இருந்து என்னை விடுவித்தருளும். சொல்லாலும் செயலாலும் அவர்களை ஞானத்திலும், பத்தியிலும் கூர்மையாய் நடத்த எனக்கு உதவி செய்யும். அதனால் விண்ணுலக வீடாகிய பேரின்ப அரசில் நாங்கள் அளவறுக்கப்படாத நித்திய பேற்றினை அனுபவிக்கச் சேர்த்துக் கொள்ளும்.

ஓ ! விண்ணுலகத் தந்தையே ! என் பிள்ளைகளை உம்மிடத்தில் ஒப்புவிக்கிறேன். நீரே அவர்களுடைய கடவுளாகவும், தகப்பனாகவும் இரும். எனது இரட்சணியத்துக்கு வேண்டிய ஞான வரங்களை தந்தருளுவதுடன் என் பிள்ளைகள் இவ்வுலக தந்திரங்களில் சாதுரியமாய் நடந்து, சோதனைகளை வெல்லவும் பசாசின் கண்ணிகளினின்று அவர்களை விடுவிக்கவும் தயைபுரியும். அவர்கள் இதயத்தில் உமது அருளைப் பொழிந்து பரிசுத்த ஆவியாரின் கொடைகளைப் கொடுத்தருளும். அந்த அருளினால் அவர்கள் எங்கள் ஆண்டவரான இயேசுகிறிஸ்துவிடம் உயர்ந்து, விசுவாசத்தோடு உமக்கு ஊழியம் செய்தபின் உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் அரசு செய்கிற எங்கள் ஆண்டவரான கிறிஸ்து வழியாக உமது சமூகத்தில் வந்து ஆனந்த பாக்கியத்தை அடையக்கடவார்கள். -ஆமென்.

தேர்வு எழுதுவோருக்காக செபம்

ஞானத்தின் ஊற்றே இறைவா! எங்களின் இந்த இளம் வயதில் பல நன்மைகளை எங்களுக்குப் பொழிந்து வழிநடத்தி வந்த நேரங்களை நன்றியோடு நினைக்கிறோம்.. எங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்வுகளை எழுதவிருக்கும் நாங்கள், இந்த இறுதி நாட்களில் எங்கள் பாடங்களைக் கடின முயற்சியுடன் படித்து, தேர்வுகளைச் சிறப்பாக எழுதி முடிக்கவும், அனைத்து தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறவும், தேவையான ஞானத்தையும், நினைவாற்றலையும், தெளிந்த மனதையும் உடல் உள்ள வலிமைகளையும் எங்களுக்கு கொடுத்தருளுமாறு உம்மைத் தாழ்மையோடு வேண்டுகிறோம். ஞானத்தின் இருப்பிடமே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
- ஆமென்.