முன்னுரை
இறைவன் படைத்த எழில் மிக்க இவ்வுலகம் அதிசயங்களும், அற்புதங்களும் நிறைந்தது. அனைத்தையும் ஆண்டு, அனுபவித்து, மகிழ, இறைவன் மனிதனையும் தன் சாயலாகப் படைத்தார். படைப்பில் பழுதில்லை. ஆனால் படைத்தவனின் கட்டளையை அவன் மீறிய பொழுது, மனித குலத்திற்கே சென்ம பாவத்தை சேர்த்து வைத்துவிட்டான். பாவச் சேற்றிலே மூழ்கிக் கொண்டிருந்த தன் மக்களைக் காக்க தன் ஒரே மகனை இவ்வுலகிற்கு அனுப்ப இறைவன் திருவுளம் கொண்டார்.யார் வழியாக? தனது எல்லாப் படைப்புகளுக்கும் மேலாக உயர்த்தி மகிமைப்படுத்திய ஒரே பெண்ணான கன்னி மரியா வழியாக. ஆம்.
தாயின் வயிற்றில் கருவாகி, உருவாகும் முன்னே தன் மகனை ஈன்றெடுக்கும் பாக்கியவதியாக இறைவனால் தேர்ந்து கொள்ளப்பட்டவள்தான் நம் அன்னை மரியா. சிலுவை மரத்தின் அடியில் இறைமகன் இயேசுவால் நம் தாயாக ஒப்புக்கொடுக்கப்பட்டவள். இயேசுவின் தாய் நம் தாய் நமக்காக தம் மகனிடம் பரிந்து பேசும் இரக்கம் மிகுந்த தாய். பாவக் கட்டுகளிலிருநது நம்மை விடுவிக்க அந்த அன்புத் தாய் நம்மிடம் வேண்டுவது என்ன தெரியுமா? பூ மாலை அல்ல பாமலை அல்ல. கிபி 1214 ஆம் ஆண்டு புனித தோமினிக் வழியாக அன்னை மரியா திருச்சபைக்கு வழங்கிய மாலைதான் செபமாலை. படிப்பறியா பாமரமக்களை கல்நெஞ்சுக்காரர்களை முரடர்களை மூடர்களை புனிதர்களாக்கியது இச்செபமாலை. பாத்திமா நகரிலே காட்சியளித்த அன்னை “நானே செபமாலை மாதா. ” என்று கூறி செபிக்கும் முறையை போதித்தார். ஓவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் செபமாலை மாதாவின் வணக்க மாதமாகக் கடைபிடிக்கப்படுகிறது.
தீமையான பேச்சு – செயல் - எண்ணம் இவற்றிலிருந்து விடுதலை பெற இயற்கைச் சீற்றங்களிலிருந்து உயிர்களை காக்க பயணங்களில் விபத்துகள் ஏற்படாதிருக்க மரண பயத்திலிருந்து விடுவிக்க மோட்சத்தை நோக்கி நம் பயணம் தொடர நம் குடும்பத்தில் நம் நாட்டில் நாம் வாழும் உலகில் அமைதியும் சமாதனமும் மகிழ்ச்சியும் நின்று நிலவ அன்னையின் பக்தி வளர தினமும் தனியாக குடும்பமாக குழுவாக செபிப்போம்.
செபமாலையில் கூறப்படும் மறையுண்மைகள் இயேசு இவ்வுலகில் பிறந்தது முதல் மரித்து உயிர்த்தது வரை நிகழ்ந்த நிகழ்வுகளை நினைவுகூர்வன. சிந்தனையைச் சிதறவிடாது ஒவ்வொரு மறையுண்மைகளையும் தியானித்து 53 மணி செபமாலையை அன்னையின் திருவடிக்குச் சூட்டி ராக்கினியின் ஆசிரைப் பெறுவோம்.
கூறுவதற்கு முன்:
கிறிஸ்தவ வாழ்வின் அடித்தளமான விசுவாசப்பிரமாணம்: பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த ……
கர்த்தர் கற்பித்த செபம்: பரலோகத்தில் இருக்கின்ற. . . .
அருள் நிறைந்த மரியே: மூன்று முறை
பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக
மகிழ்ச்சியின் பேருண்மைகள்
(திங்கள் - சனிக்கிழமைகளில்)
மண்ணகத்தை விண்ணகமாக்க இறைமகன் இயேசு இவ்வுலகிலே அவதரித்து நம்மை விண்ணரசுக்குப் பாத்திரமாக்க விழைந்தது மகிழ்ச்சி நிறைந்த செயல் அல்லவா? அந்த உண்மைகளை இப்போது தியானிப்போம்.
முதலாவது:- கபிரியேல் அதிதூதர் கன்னிமரியாவிற்கு தூதுரைத்தலை தியனிப்போம்
தன் அன்பு மகனை பெற்றெடுக்கும் பேறு பெற்றவளாக அன்னை மரியை தேர்ந்தெடுத்த இறைவன் அவரது விருப்பத்தை அறிய கபிரியேல் தூதரை மரியாவிடம் அனுப்புகிறார். நசரேத்து ஊரில் எளிய இனிய இல்லத்திலே வாழ்ந்து கொண்டிருந்த அன்னையிடம் இறைதூதர், “அருள் நிறைந்தவளே! வாழ்க! கர்த்தர் உம்முடனே பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே” என்று கூற அம்மொழியைக் கேட்ட அன்னை கலங்குகிறாள். அடுத்து தூதர் சொன்ன வார்த்தை அவளை நிலைகுலையச் செய்தது. ‘மூவுலகம் ஆளும் தேவன் உமது உதரத்தில் அவதரித்து பிறக்கப் போகிறார்’ என்ற செய்தி ‘இது எவ்வாறு ஆகும் நான் கணவனை அறியாதவள் ஆயிற்றே’ என்று வினாவ தூதர் ‘பரிசுத்த ஆவியாரால் இது நிகழும் உமது உறவினறான எலிசபெத்திற்கு இது ஆறாம் மாதம் கடவுளால் ஆகாதது எதுவும் இல்லை? என்று கூற ‘இதோ ஆண்டவரின் அடிமை உமது வர்த்தையின் படியே எனக்கு ஆகட்டும்’ என்று சிரம் தாழ்த்தி சம்மதித்தாள.
புனித மாதவே! இறைசித்தத்தை உணர்ந்து உம்மையே அர்ப்பணித்து தாழ்ச்சியின் பெருமையை உணர்த்தினீர். உம்மைப் போல தாழ்ச்சி என்னும் ஆடையை அணிந்து இறை சித்தப்படி எம் வாழ்க்கையை நடத்திட இந்த பத்து மணி மாலையை உமக்கு அர்ப்பணிக்கின்றோம்.
பரலோத்தில் இருக்கின்ற எங்கள். . . . . . . . . . . .
அருள் நிறைந்த மரியே வாழ்க. . . . . . . . . . . . . . 10 முறை
பிதவுக்கும சுதனுக்கும். . . . . . . . .
ஓ! என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகம் தேவையோ, அவர்களுக்குச் சிறப்பான உதவி புரியும். (பாத்திமா செபம்)
இரண்டாவது கன்னிமரியா எலிசபெத்தை சந்தித்ததை தியானிப்போம்
கபிரியேல் தூதர் மூலமாக தனது வயது முதிர்ந்த உறவினளான எலிசபெத்தம்மாள் கருவற்று இருப்பதை அறிந்த மரியாவின் மனம் அவரைக் கண்டு உதவ வேண்டும் என தவிக்கிறது. அதனால் காடு மலை பொருட்படுத்தாது பல நாள்கள் நடந்த செல்கின்றாள். உன் வயிற்றில் வளரும் தெய்வத் திருமகன் அவருக்குச் சுமையாக தெரியவில்லை. ஏன் தெரியுமா? அது அவருக்கு ஒரு சுகமான சுமை அல்லவா?
கன்னிமரியா, எலிசபெத்தின் இல்லத்தை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தியதும் எலிசபெத்தின் வயிற்றில் இருந்த குழந்தை துள்ளியது. அப்போது அவர் பெண்களுக்குள் ஆசிபெற்றவள் நீர் எனக் கூறி அன்போடு தழுவிக் கொள்கிறாள் அன்னை மரியா மூன்று மாதம் தங்கி வயது முதிர்ந்த அவருக்கு பல உதவி செய்து மகிழ்கிறார். தரிசியை பெற இருக்கும் எலிசபெத்தும் தேவகுமாரனை பெற இருக்கும் அன்னை மரியும் இறைவனின் மகிமையைப் புகழ்ந்து போற்றுகின்றனர்.
நாழும் உதவி என்று நம்மை நாடி வந்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி அவர்கது துயர்களை முன்வருவோம். ஆதற்கேற்ற உள்ள உறுதி வேண்டி இந்த பத்து மணிகளை அன்னைக்கு சமர்ப்பிப்போம்.
பரலோத்தில் இருக்கின்ற எங்கள். . . . . . . . . . . .
அருள் நிறைந்த மரியே வாழ்க. . . . . . . . . . . . . . 10 முறை
பிதவுக்கும சுதனுக்கும். . . . . . . . .
ஓ! என் இயேசுவே. . . . . . . . .
மூன்றாவது : இயேசுவின் பிறப்பினை குறித்து தியானிப்போம்
கன்னி மரியாவிற்கு பேறுகாலம் நெருங்கிவிட்டது. அகஸ்து சீசர் அரசனின் கட்டளைப்படி மக்கள் தொகை கணக்கிற்காக தங்களது பெயரை பதிவு செய்ய சூசையப்பரும் அன்னை மரியாவும் ஊருக்கு சென்றனர். அவர்கள் தங்குவதற்கு சத்திரத்தில் இடமில்லை. பேறுகால வேதனையால் துடித்த மரியாவைக் கண்டு சூசையப்பர் துடிதுடித்தார். மண்ணுகைப் படைத்த மாபரன் பிறப்பிற்கு இம்மண்ணுலகில் ஒர் இடமில்லை. அன்னையின் வேதனையை கண்ட ஒருவர் தன் வீட்டிலுள்ள மாடடையும் குடிலையும் காட்டினார். வானவர் கீதம் பாட வையகமும் வானகமும் மகிழ்ச்சி பொங்க ஆடுகளும் மாடுகளும் அன்புடன் தாலட்ட கொட்டும் பனிக்காலத்திலே இயேசு பாலகன் அன்னை மரியாவிடம் அவதரித்தார். ஆட்டிடையர் ஆடிப்பாடி மகிழ விண்மின் துணையோடு ஞானிகள் வந்து ஆராதிக்க இயேசு பாலன் இம்மண்ணில் மலர்ந்தார். இயேசு என்று அவருக்கு பெயரிட்டு மகிழ்ந்தனர்.
எங்கள் மீட்பிற்காக தேவகுமாரனை உம்திருவயிற்றில் சுமர்ந்து எமக்களித்த அன்னையே! உம் திருவடிக்கு இந்த பத்து மணிகளை சமர்ப்பிகின்றோம்.
பரலோத்தில் இருக்கின்ற எங்கள். . . . . . . . . . . .
அருள் நிறைந்த மரியே வாழ்க. . . . . . . . . . . . . . 10 முறை
பிதவுக்கும் சுதனுக்கும். . . . . . . .
ஓ! என் இயேசுவே. . . . . . . . .
நான்காவது: இயேசுவை ஆலயத்தில் அர்ப்பணித்தலை தியானிப்போம்
மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்ற நாள் வந்தபொழுது அன்னை மரியும் சூசையும் குழந்iயை எடுத்துக்கொண்ட கோவிலுக்கு வந்து சடங்குகளை நிறைவேற்றி ஆண்டவருக்கு குழந்தையை அர்ப்பணித்தனர். அப்பொழுது ஆண்டவரின் வருகைக்காக கத்திருந்த நேர்மையாளரான சிமியோன் என்பவர் அத்தெய்வக் குழந்தையே தாம் எதிர்பார்த்த மெசியா என்பதை உணர்ந்து அவரை போற்றி புகழ்ந்தார். அவர் கூரிய தீர்க்கதரிசன வார்த்தைகளை மரியா சிந்தையில் இருத்தி தியானித்தார்.
தாயே! தயை நிறைந்தவளே! இறை சித்தத்தை உணர்ந்த உண்மையும் உமது வாழ்வையும் உடக்கு ஏற்பட்ட துன்ப துயரங்களையும் இறைவனுக்கு அர்ப்பணித்து இயேசு பாலனை வளர்க்க ஆயத்தமானீர். எங்கள் வாழ்விலும் எமக்குள்ள அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணித்து வாழ வரம் வேண்டி உலகில் உள்ள அனைத்து குழந்தைகளின் நல்வாழ்வுக்காக இந்த பத்து மணிகளை அன்னைக்கு சமர்ப்பிப்போம்.
பரலோத்தில் இருக்கின்ற எங்கள். . . . . . . . . . . .
அருள் நிறைந்த மரியே வாழ்க. . . . . . . . . . . . . . 10 முறை
பிதவுக்கும் சுதனுக்கும். . . . . . . .
ஓ! என் இயேசுவே. . . . . . . . .
ஐந்தாவது: காணமல் போன இயேசுவை கோவிலில் கண்டடைந்ததை தியானிப்போம்
நாகரிகம் என்ற போர்வையில் தம்மை மறைத்துக்கொண்டு அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் இன்றைய சமுதாயத்தில் உத்தமர்களாக ஒழுக்கமுள்ளவர்களாக குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கடினம். அன்று நாசரேத்து என்ற குக்கிரமத்தில் எளிமையிலும் ஏழ்மையிலும் ஒரு தச்சனின் மகனாக ஞானத்திலும் அறிவிலும் சிறந்தவராய் இயேசு வளர்க்கப்பட்டார். பெற்றோருக்கு செய்ய வேண்டிய உதவிகளை முகமலர்ச்சியோடு செய்தார். மற்ற நேரங்களில் மறைநூல்களைப் படிப்பதிலும் இறைவனோடு ஒன்றிருப்பதிலும் காலத்தை செலவிட்டார்.
அவருக்கு பன்னிரெண்டு வயதானபோது பாஸ்கா விழாவிற்காக பொற்றோருடன் எருசலேம் சென்றார். விழா முடிந்தபின் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இதை அறியாத பெற்றோர் அவர் பயணிகள் கூட்டத்தில் தங்கியிருப்பார் என எண்ணிவிட்டனர். ஒரு நாள் பயணத்திற்கு பிறகு அவரை காணததால் பரிதவித்து கண்ணீர் வீட்டு கதறி அழுதுகொண்டே மீண்டும் எருசலேம் வந்து மூன்றாம் நாள் கோவிலில் கண்டு ஆறுதல் அடைந்தனர். போதகர் நடுவிலே அமர்ந்து உரையாடியதையும் அவரது தெளிந்த அறிவையும் ஞானத்தையும் கண்டு வியந்து நின்றனர். மகனை நோக்கி 'ஏன் இவ்வாறு செய்தாய்?"
நாங்கள் தவித்து போய் விட்டோம் என்று வினாவ இயேசு 'என் தந்தையின் அலுவலை நான் செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியாதா?" என்று கேட்க அன்னை மரியா அவ்வார்தைகளை தன் மனதில் இருத்தி சிந்தித்தாள். முப்பது ஆண்டுகள் இறைமகன் இயேசு மறைந்த வாழ்க்கை வாழ்ந்தார்.
அன்புத் தாயே! கண்டதே சாட்சியாய் கொண்டதே கோலமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர்களுக்காய் உம்மை வேண்டுகிறோம். நன்மை தீமைகளை அறியும் அறிவையும் ஆற்றலையும் தெய்வ பக்தியையும் அவர்களுக்கு வழங்க வேண்டி இந்த பத்து மணிகளை அன்னைக்கு சமர்ப்பிப்போம்.
பரலோத்தில் இருக்கின்ற எங்கள். . . . . . . . . . . .
அருள் நிறைந்த மரியே வாழ்க. . . . . . . . . . . . . . 10 முறை
பிதவுக்கும் சுதனுக்கும். . . . . . . .
ஓ! என் இயேசுவே. . . . . . . .
ஒளியின் பேருண்மைகள்
(வியாழக்கிழமை)
முப்பது ஆண்டுகள் நாசரேத்தில் அன்னையின் அரவணைப்பிலும் புனித சூசையின் பாதுகாவலிலும் மறைந்த வாழ்க்கை வாழ்ந்த இயேசு அடுத்த மூன்றாண்டுகள் தான் யார் என்பதை உலகிற்கு உணர்த்த ஒளி விளக்காய் காலடி வைக்கின்றார் கடலில் மறைந்திருந்த முத்து மலையில் மறைந்திருந்த மாணிக்கம் மண்ணில் மறைந்திருந்த மாசற்ற தங்கம் வெளியே சுடர் விட்டு பிரகாசிக்கப் போகிறது. அந்த நிகழ்ச்சிகள்தான் ஒளியின் பேருண்மைகள்.
முதலாவது இயேசு யோர்தானில் திருமுழுக்குப் பெறுதல்
செக்கரியா எலிசபெத் இருவரின் அன்பு மகன் யோவான். தீர்க்கதரிசியாக பாலை நிலத்தில் வாழ்ந்து வந்தார். பாவச்சேற்றில் மூழ்கிக் கொண்டிருந்த மக்களை நோக்கி பாவமன்னிப்பு பெற மனம் மாறி திருமுழுக்குப் பெறுங்கள் என்று அதிகாரத்துடன் பறைசாற்றிக் கொண்டிருந்தார். பாவமன்னிப்பிற்கான் வழிகளைக் கூறி மனம்மாறி வந்தோர்க்கு திருமுழுக்குக் கொடுத்து வந்தார். இவர்தான் மெசியாவாக இருப்பாரோ?என மக்கள் ஐயமுற்ற வேளையில் நான் மெசியா இல்லை தூய ஆவியாரால் உங்களுக்குத் திருமுழுக்குக்கொடுக்க என்னை விட வலிமைமிக்கவர் வருகிறார். என்று யோவான் கூறிக்கொண்டிருந்த வேளையில் இயேசு யோர்தான் நதியில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார். அன்று கருவிலே சந்தித்தவர்கள் இன்று உருவிலே சந்திக்கின்றனர். அப்பொழுது வானம் திறக்க தூய ஆவியார் புறா வடிவில் அவர் மீது இறங்க என் அன்பார்ந்த மகன் நீயே. உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் என்று வானில் ஒரு குரல் ஒலித்தது. பாலை நிலத்தில் நாற்பது நாள்கள் அலகையினால் சோதிக்கப்பட்டு வெற்றி வீரராக வெளிவருகின்றார் இயேசு.
அன்பு அன்னையே பெயரளவில் நாங்கள் கிறிஸ்துவராக வாழாமல் மனம் மாறிய உண்மை கிறிஸ்தவர்களாய் இயேசுவின் சாட்சிகளாய் இவ்வுலகில் வாழ வேண்டுமென்று உம்மை மன்றாடி இந்த பத்து மணியை உமக்குச் சமர்பிக்கின்றோம்.
பரலோகத்தில்---------------------
அருள் நிறைந்த மரியே--------------------
பிதாவுக்கும் சுதனுக்கும்----------------
ஓ! என் இயேசுவே--------------
இரண்டாவது கானாவூர் திருமணத்தில் இயேசுவின் முதல் புதுமை
இயேசுவின் மகிமையும் மாட்சியும் வெளிஉலகிற்கு தெரியும் நேரம் வந்தது. அன்று கானா ஊரில் ஒரு திருமணம் அன்னை மரியும் இயேசும் அவரது சீடர்களும் சென்றிருந்தனர். விழாவில் திராட்சை இரசம் தீர்ந்துபோக மணவீட்டார் மனம் வருந்த்கூடாது என்பதற்காக அன்னை மரியா இயேசுவிடம் திராட்சை ரசம் தீர்ந்து விட்டது எனக்கூறி அவர் அனுமதி பெறாமலேயே பணியாளரிடம் அவர் கூறுவதை எல்லாம் செய்யுங்கள் என்றார். அன்னைக்குத் தெரியும் தனது மகனின் வல்லமை. இயேசு பணியாளரிடம் அங்கிருந்த ஆறு கல்தொட்டிகளிலும் தண்ணீரை நிரப்பக்கூறினார். அவரது கருணையினால் தண்ணீர் திராட்சை இரசமாக மாற இரசத்தை பருகியவர்கள் அதன் சுவையை ருசித்து அதிசயித்து மகிழ்ந்தனர். இதுவே அவர் செய்த முதல் புதுமை. அன்னை மரியாவின் பரிந்துரையை தட்டாமல் தாயின் அன்பிற்கு செவிமடுத்த இயேசுவின் மகிமை.
இயேசு செய்த புதுமைகள் அன்றிலிருந்து தொடர்ந்தன. இறந்தவரை உயிர்ப்பித்தல் நோயுற்றோரை குணப்படுத்துதல் குருடருக்குப் பார்வை அளித்தல் என இயேசு செய்த அற்புதங்கள் எண்ணிலடங்கா.
தேவதாயே அன்று உமது பரிந்துரையை ஏற்று தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றிய உம் அன்புத் திருமகளிடம் எங்களது வேண்டுதல்களை வைத்து எங்களது குறைகளைக் களைய வேண்டுமென்று மன்றாடி இந்த பத்து மணிகளை உமக்குச் சமர்ப்பிக்கின்றோம்
பரலோகத்தில்---------------------
அருள் நிறைந்த மரியே------------------10 முறை
பிதாவுக்கும் சுதனுக்கும்----------------
ஓ! என் இயேசுவே--------------
மூன்றாவது இயேசு இறையரசை அறிவித்து மனம்மாற அழைத்தலை தியானிப்போம்
இயேசு செய்த புதுமைகளைக் கண்ட மக்கள் அவர் செல்லும் இடம் எல்லாம் திரள்திரளாக ஒன்று கூடினர். இயேசு புதுமைகளோடு இறையசைப் போதிக்கவும் தொடங்கினார். அவரது போதனைகளைக் கேட்டவர்கள் படிப்பறிவில்லா சாதாரண பாமர மக்கள் மீன்பிடிப்பவர்கள் அவர்கள் புரிந்து கொள்ளும்படி உவமைகள் வாயிலாக இறையரசை பரப்பினார். மக்களிடம் மனமாற்றத்தை உண்டாக்கினார். விதைப்பவர் உவமை களைகளின் உவமை கடுகு விதை புளிப்பு மாவு புதையல் முத்து வலை உவமைகளின் வழியாக நிலையற்ற உலக வாழ்வையும் நிலையான விண்ணக வாழ்வையும் விளக்கினார். அவர் ஆற்றிய மலைப்பொழிவு துன்பத்தால் வறுமையால் நோயால் தனிமையால் வாடும் காயமுற்ற உள்ளங்களுக்கு அருமருந்தாகும்.
புனித மாதாவே! உலகை மீட்க வந்த உம் திருமகன் நரகத்தில் நாங்கள் விழாது மோட்சத்திற்கு செல்லும் வழிகளை எங்களுக்கு திருமறை வழியாக உணர்த்தியுள்ளார். அவர் வழிநடப்பதற்குரிய மனத்திடனை அளிக்குமாறு வேண்டி இந்த பத்து மணிகளை உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம்.
பரலோகத்தில்---------------------
அருள் நிறைந்த மரியே------------------10 முறை
பிதாவுக்கும் சுதனுக்கும்----------------
ஓ! என் இயேசுவே--------------
நான்காவது: இயேசுவின் உருமாற்றத்தை தியானிப்போம்
புதுமைகள் பல புரிந்து ஒவ்வொரு ஊரகச்சென்று இறையரசை பரப்பிவந்த இயேசு தான் யார் என்பதை தன் சீடர்களுக்குக் காட்ட விரும்பி பேதுரு யாக்கோபு யோவான் ஆகியோரை உயர்ந்த மலைக்கு அழைத்து சென்று அங்கே அவர்கள் முன் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளி வீசியது. மோசேயும் எலியாவும் அவரோடு உரையாடிக் கொண்டிருந்தனர். என் அன்பார்ந்த மகன் இவரே என்ற குரல் வானில் ஒலித்தது. சீடர்கள் மூவரும் முகங்குப்புற விழுந்து வணங்கி எழும் போது இயேசுவைத் தவிரவேறு எவரையும் அவர்கள் காணவில்லை. இயேசு இந்நிகழ்ச்சியை யாரிடமும் தெரிவிக்கக்கூடாது எனக் கட்டளையிட்டார். சீடர்கள் அவர் இறைவனின் திருமகன் என்பதை இன்னும் புரிந்துகொள்ளாமலே இருந்தார்கள்.
கருணைக்கடலாம் எங்கள் அன்புத் தாயே! ஒளியாய் உணர்வாய் உயிராய் இவ்வுலகிலே விளங்கிய உம் அன்புத்திருமகன் தான் வாழ்ந்த நாளெல்லாம் நிகழ்த்திய அற்புதங்கள் சிந்தனைக்கு எட்டாத அதிசயங்கள். அவரது அருஞ்செயல்களை தியானித்து இந்த பத்து மணிகளை உமது மலர்ப்பாதம் சமர்ப்பிக்கின்றோம்.
பரலோகத்தில்---------------------
அருள் நிறைந்த மரியே------------------10 முறை
பிதாவுக்கும் சுதனுக்கும்----------------
ஓ! என் இயேசுவே--------------
ஐந்தாவது: இயேசு திவ்விய நற்கருணையை ஏற்படுத்துதல்
தன் தந்தையின் சித்தத்தை நிறைவேற்ற கல்வாரியில் நம் மீட்பிற்காக தன் உடலையும் இரத்தத்தையும் அளிக்க இருப்பதன் முன்னடையாளமாக இயேசு திவ்விய நற்கருணையை ஏற்படுத்தினார். பாஸ்கா திருநாளில் பெரிய வியாழனன்று இரவு தன் சீடர்களோடு பந்தியமர்ந்து உணவருந்தும் போது இயேசு அப்பத்தை எடுத்து கடவுளுக்கு நன்றி கூறி பிட்டு தன் சீடர்களுக்கு கொடுத்து “அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள் இது என் உடல்” என்றார். பின்னர் கிண்ணத்தை எடுத்து கடவுளுக்கு நன்றி கூற ‘இதில் உள்ள இரசத்தை அனைவரும் பருகுங்கள் ஏனெனில் இது என் உடன்படிக்கையின் இரத்தம் பலருடைய பாவமன்னிப்புக்காக சிந்தப்படும் இரத்தம்” என்றார். அப்ப இரச வடிவில் நற்கருணை நாதர் உலகம் முழுவதும் ஒவ்வொரு வினாடியும் பிரசன்னமாகிறார்.
தேவத்தாயே! எமக்காக தன்னையே அர்ப்பணித்த உம் திருமகனின் அன்பிற்கு ஈடாக எதை நாங்கள் தருவோம் மாசற்றவர்களாய் திவ்வியநாதரை ஒவ்வொரு நாளும் பக்தியுடன் பெறக்கூடிய துய உள்ளத்தை எங்களுக்கு அருள வேண்டுமென்று மன்றாடி இந்த பத்து மணியை உம் பாதம் படைக்கின்றோம்.
பரலோகத்தில்---------------------
அருள் நிறைந்த மரியே------------------10 முறை
பிதாவுக்கும் சுதனுக்கும்----------------
ஓ! என் இயேசுவே--------------
துயர் பேருண்மைகள்
(செவ்வாய்-வெள்ளி)
தனது தந்தையின் திட்டத்தை, சித்தத்தை நிறைவேற்ற இவ்வுலகிற்கு வந்த இயேசு, போதனைகள் பல புரிந்தும், புதுமைகள் பல நிகழ்த்தியும் அவரை யார் என்று அறியாத மக்கள் கூட்டம் ஓசன்னா பாடி அவரை புகழ்ந்த கூட்டம் வஞ்சனையாளரான பரிசேயரால் பொருளாசைக்கு அடிப்பணிந்து திசை மாறுகிறது. அவரைக் கொல்ல வழி தேடுகிறது. பிலாத்துவின் தீர்ப்பிற்கு ஆளாகியது முதல் சிலுவைமரத்தில் உயிர்நீத்ததுவரை அவர், உடலாலும் உள்ளத்தாலும் பட்ட கொடிய வேதனைகளை விளக்குவதுதான் துயரப் பேருண்மைகள். அவரது துயரங்களோடு நம் பாவங்களை அறிக்கையிட்டு பாவமன்னிப்பு பெறுவோம்.
முதலாவது: இயேசு கெத்சமனியில் இரத்தம் வியர்த்தலை தியானிப்போம்.
இயேசு தம் சீடர்களோடு அமர்ந்து இரவு உணவு உண்டப்பின் ஒலிவ மலையில் கெதசமனி தோட்டத்திற்க்கு தம் சீடர்களோடு சென்றார். சீடர்களிடம் 'விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்' என்று கூறி, தனியாக செபிக்க சென்றார். முழந்தாள்படியிட்டு 'தந்தையே உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும், என் விருப்பப்படியல்ல உம் விருப்பப்படியே ஆகட்டும் என வேண்டினார். தான் படப்போகும் பாடுகளை என்னி மனம் கலங்கினார். அவரது வியர்வை பெரும் இரத்தத்துளிகளாக நிலத்தில் விழுந்தது.
அப்போது பெரும் மக்கள் கூட்டம் அவரை நெருங்கி வந்தது. அவரது சீடர்களில் ஒருவரான 'யூதாஸ்', அவரை முத்தமிட்டு காட்டிக்கொடுக்க போர் சேவகர்கள் கள்ளவனைப் போல் அவரை கைது செய்து தலைமை குருக்களிடம் இழுத்துச் சென்றனர்.
வியாகுலத் தாயே! உமது திருமகனின் பாடுகளைக்கண்டு எவ்வாறெல்லாம் துடித்திருப்பாய். இவ்வுலகம், துன்பம், துயரம், தோல்வி, ஏமாற்றம் நிறைந்தது. இவைகளினால் நாங்கள் துயரப்படும்பொழுது உம் திருமகனின் பாடுகளில் தைரியம் பெற்று பொறுமையோடு அவற்றை தாங்கும் மனப்பக்குவத்தை அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடி, இப்பத்து மணியை ஒப்புக்கொடுக்கிறோம்.
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே. . . . . . . . . . .
அருள் நிறைந்த மரியே வாழ்க. . . . . . . . . . 10 முறை
பிதாவுக்கும் சுதனுக்கும். . . . . . . . . . . . .
ஓ! என் இயேசுவே. . . . . . . . . . . . .
இரண்டாவது: இயேசு கசையால் அடிக்கப்பட்டது குறித்து தியானிப்போம்.
உலகை தீர்ப்பீட வந்த மானிட மகன் கயவனாக தீர்பிற்கு ஆளாகினார். தலைமை குரு,கைப்பாஸ், ஏரோது, பிலாத்து என்று ஒவ்வொரு கொடியவர்களிடமும் இரவு முழுவதும் அலைக்கழைக்கப்படுகிறார். இறுதியில் பிலாத்துவிடம் தீர்ப்பிற்காக ஒப்படைக்கப்படுகிறார். இயேசு குற்றமற்றவர, நீதிமான் என பிலாத்து அறிந்திருந்தும் யூதர்களின் மனதை மாற்ற, அவரை கசையால் அடிக்க கூறினார். அவர்களின் கல்லான இதயம் கரையவே இல்லை. சாட்டையின் நுனியில் இரும்புக் குண்டுகள். அடிக்கவரும் சேவகர்களைக் கண்டு இயேசுவின் உடல் நடுங்குகிறது. சேவகர்கள் அவரை கல்தூணில் கட்டி கசையால் அடிக்கின்றனர். தோல் உரிகிறது, இத்தம் ஆறாய் பெருக்கெடுத்து ஓடுகிறது, சதை துண்டுத்துண்டாய் சிதருகிறது. கசைப்படாத இடமே இல்லை, கண்ணீர் பெருக நெருப்பில் இட்ட புழு பேல் துடிக்கிறார். யாருக்காக உடல் இச்சைக்காக, மனிதர் செய்யும் பாவங்களுக்கு பரிகாரமாக.
வியாகுல அன்னையே!மாசற்ற உம் திருமகனின் உடல் சிதைந்து சின்னாப்பின்னமாகி இருப்பதை கண்டு, நீரும் கதறி அழுதிருப்பீர். காமுகர்களின் உடல் இன்பத்திற்காக, இன்று எண்ணற்ற சிறுவர் சிறுமியர் பலியாகின்றனர். இயேசுவின் இந்த துன்பங்களைக் கண்டாவது, இது போன்ற கொடூர நீகழ்ச்சிகள் நடக்காதிருக்க வேண்டுமென்று மன்றாடி இந்த பத்து மணியை ஒப்புக்கொடுக்கிறோம்.
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே. . . . . . . . . . .
அருள் நிறைந்த மரியே வாழ்க. . . . . . . . . . 10 முறை
பிதாவுக்கும் சுதனுக்கும். . . . . . . . . . . . .
ஓ! என் இயேசுவே. . . . . . . . . . . . .
முன்றாவது: இயேசுவின் தலையில் முள்முடி சூட்டியது குறித்து தியானிப்போம்.
மனிதன் என்ற போர்வையில் மிருகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த கொடிய சேவகர். இயேசுவை கற்றுணிலே கட்டி சிதைத்தது போததென்று அடுத்த வேதனைக்கு அவரை ஆட்படுத்துகின்றனர். கரடுமுரடான கலலிலே அமரவைத்து சிவப்புத் துணியை அவர் தோள் மேல் போர்த்தி மூங்கில் தண்டை கையில் கொடுத்து முள்ளால் முடிபுனைந்து அவர் தலையில் வைத்து அழுத்துகின்றனர். துலை நெற்றி அனைத்தும் காயம் 53 முட்களும் அவர் சிரசில் பாய இரத்தம் பெருகி கண்களை மறைத்து உடல் முழுவதும் நனைந்து பாதத்தை அடைகிறது. அரக்கர்கள் கூட்டம் "யூதர்களின் ராஜவே வாழ்க" என கைத்தட்டி ஆர்ப்பரிக்கின்றனர். இரும்பு தடியால் அடித்து காறி உமிழ்ந்து கன்னத்தில் அறைந்து ஏளன சொற்கள் கூறி வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சி மகிழ்கின்றனர் ஆணவகாரர்கள
அன்னை மரியே! இக்கொடுமையெல்லாம் எவ்வாறு தாங்கினீர்? அம்மா! எங்களது கடுசொற்களால் பழிச் சொற்களால் எத்தனையோ உள்ளங்களை காயப்படுத்தியுள்ளோம். எங்களது இந்த இழிவான செயல் இயேசுவின் தலையை மட்டுமல்ல அவரது இதயத்தையும் முள்ளாக கிழிக்கும் என்பதை நாங்கள் உணர்வதில்லை. சொல்லால் நாங்கள் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரமாக இந்த பத்து மணியை உமது திருவடி சமர்ப்பிக்கின்றோம்.
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே. . . . . . . . . . .
அருள் நிறைந்த மரியே வாழ்க. . . . . . . . . . 10 முறை
பிதாவுக்கும் சுதனுக்கும். . . . . . . . . . . . .
ஓ! என் இயேசுவே. . . . . . . . . . . . .
நான்காவது: இயேசு பாரமான சிலுவையை சுமந்து சென்றதை தியானிப்போம்.
பிலாத்துவின் ஆணைப்படி, முள்முடி சூடியவராய் உடலெல்லாம் இரணமாய், வீரர்கள் தன் மீது சுமத்திய சிலுவையை சுமந்து கொண்டு கல்வாரி மலையை நோக்கிச் செல்கிறார் தேவமைந்தன். சிலுவையின் பாரத்தினால், பல முறை தடுமாறி விழுகிறார். அண்ணலின் நிலைக்கண்டு அழுது புலம்பும் ஒரு கூட்டமும் ஆணவத்தோடு சிரித்து மகிழும் ஒரு கூட்டமும் அவர் பின்னே வருகிறது.
அதோ! அன்னை மரியா, தன் மகனின் பாடுகளைக் கண்ட அவர் மனம் எப்படித் துடிக்கும். தாயும் மகனும் சந்திக்கின்றனர். பேசவில்லை. இறைவனின் சித்தத்தை நிறைவேற்ற இருவருமே தயாராக இருக்கின்றனர். கல்வாரி பயணத்தில் அவர் பலரை சந்திக்கின்றார். எதிர்பாராது அவர் சிலுவையை சிறிது தூரம் சுமந்து சென்ற சீமோன். அவரது வேதனையைக் குறைக்க ஒடிவரும் வெரோணிக்கா, மார்பிலே அடித்துப்புலம்பும் எருசலேம் நகரப் பெண்கள், குற்றுயிராய் கொல்கத்தா வந்து சேர்ந்த்தும், அவர் சுமந்து வந்த சிலுவையிலே அவரது கைகளையும், கால்களையும், இரத்தநாளங்கள் அறுந்து, குறுதி பெருக்கெடுக்க, ஆணிகளால் அறைந்து இரண்டு கள்வர்களுக்கு இடையே நிறுத்துகின்றனர் கொடிய யூதர்கள்.
வியாகுலத் தாயே! எத்துணை வியாகுல வாள்கள் உம் உள்ளத்தை ஊடுருவி பாய்ந்துள்ளன. உமது அன்புத் திருமகன் சுமந்தது பார சிலுவை அல்ல. எங்களது பாவச் சிலுவைகளே. குழந்தைகள் முதல் முதியவர் வரை, இல்லறத்தார் முதல் துறவறத்தார் வரை செய்யும் பாவங்கள் தான் எத்தனை எத்தனை. என்று நாங்கள் மனம் திருந்திய மைந்தனாக இயேசுவிடம் திரும்பி வருவோம்? எங்கள் பாவங்களுக்கு பரிகாரமாக இந்த பத்து மணியை ஒப்புக்கொடுக்கின்றோம்.
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே. . . . . . . . . . .
அருள் நிறைந்த மரியே வாழ்க. . . . . . . . . . 10 முறை
பிதாவுக்கும் சுதனுக்கும். . . . . . . . . . . . .
ஓ! என் இயேசுவே. . . . . . . . . . . . .
ஐந்தாவது: இயேசு சிலுவையில் உயிர் துறந்ததை தியானிப்போம்
உச்சி வேளை இயேசு தாகத்தினாலும் உடல் வேதனையினாலும் சிலுவையில் துடிதுடிக்கின்றார். தாகத்திற்கு புளித்த திராட்சை ரசத்தைக் கொடுத்து எள்ளி நகையாடுகின்றனர். தன் பாவத்திற்கு வருந்திய கள்ளனுக்குத் தனது பேரின்ப வீட்டில் இடம் அளித்த்தும் தன் தாயை அருளப்பரிடம் ஒப்படைத்தும் அருளப்பரிடம் தன் தாயை ஒப்படைத்தும் ஆறுதல் அடைகிறார். தான் இறக்கும் வேளையிலும் தந்தையே இவர்களை மன்னியும் என்று தன்னை துன்புறுத்தியவர்களுக்காக மன்றாடுகின்றார். பிற்பகல் மூன்று மணி நாடெங்கும் இருள் சூழ கோவிலின் திரை கிழிய 'தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கின்றேன்'என்று கூறி இயேசு உயிர் துறந்தார். இதைக் கண்ட நூற்றுவர் தலைவன் இவர் உண்மையிலேயே நீதிமான் எனக்கூறி கடவுளை வணங்கினான்.
அரிமத்தியா என்ற ஊரைச் சார்ந்த யோசேப்பு என்பவர் பிலாத்துவிடம் அனுமதி பெற்று இயேசுவின் திருவுடலை சிலுவையின்று இறக்கி அன்னை மரியாவின் மடியிலே கிடத்தினார்கள். பாலூட்டி தாலாட்டி சீராட்டி வளர்த்த மகன் உயிரற்ற உடலாய் கிடப்பதை கண்டு கதறுகின்றாள். ஆறுதல் சொல்ல யாரும் இல்லை யோசேப்பு இயேசுவின் திருவுடலை மெல்லிய துணியால் சுற்றி தமக்கென வெட்டியிருந்த கல்லறையில் அடக்கம் செய்து அதன் வாயிலில் பெரிய கல்லை அடைத்து வைத்துச் சென்றார். இயேசு பிறந்த்தும் மாற்றானின் மாட்டுத்தொழுவத்தில். இறந்து அடக்கம் செய்யப்பட்டதும் மாற்றானின் கல்லறையில். மனிதனின் நிலையும் இதுதான்.
மாசில்லா கன்னித்தாயே நிலையில்லா உலகம் நிலையில்லா செல்வம் நிலையில்லா உடலை நிலையானதாக எண்ணி நிம்மதியின்றி அதன் பின்னே ஓடிக்கொண்டிருக்கும் எங்களை நீரே தடுத்து நிறுத்தி நிலையான மோட்ச வாழ்விற்கு எம்மை அழைத்துச்செல்ல வேண்டுமென்று மன்றாடி இந்த பத்து மணிகளை உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம்.
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே. . . . . . . . . . .
அருள் நிறைந்த மரியே வாழ்க. . . . . . . . . . 10 முறை
பிதாவுக்கும் சுதனுக்கும். . . . . . . . . . . . .
ஓ! என் இயேசுவே. . . . . . . . . . . . .
மகிமையின் பேருண்மைகள்:
(புதன், ஞாயிறு)
முன்னுரை:
தேவகுமாரன், கணவனை அறியா கன்னி மரியாவின் திருவயிற்றில் கருவாகி அவதரித்து, எவ்வாறு அதிசயமும், ஆச்சரியமும் மகிமையும் நிறைந்ததோ, அதேபோன்று, இயேசு மரித்து, அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த்து அனைவரும் காண விண்ணகம் சென்றது. தமது துணையாளரான தூய ஆவியாரை நமக்காக அனுப்பியது. ஆத்ம சரீரத்தோடு அன்னைமரி விண்ணேற்ற்ம் அடைந்த்து அவர் விண்ணிற்கும் மண்ணிற்கும் அரசியாக முடிசூட்டப்பட்டது. அனைத்துமே மகிமையின் பேருண்மைகள். கிறிஸ்மதுவ வாழ்வின் விசுவாசத்திற்கு ஊன்று கோல்களாக விளங்குபவை. சரித்திரச்சான்றுகள் வேறு எம்மத்த்திலும் இல்லாத நடைபெறாத பேருண்மைகள். நாமும் விசுவாசிப்போம் நற்கதி அடைய முயற்சி செய்வோம்.
முதலாவது: இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த்தை தியானிப்போம்
வாரத்தின் முதல் நாள் பெண்கள் சிலர் நறுமணப் பொருள்களை எடுத்துக்கெண்டு இயேசு அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறையை நோக்கிச் சென்றார்கள். கல்லறையின் வாயிலில் உள்ள கல் புரட்டப்பட்டிருப்பதை கண்டு உள்ளே சென்று பார்த்தபோது இயேசுவின் உடல் காணப்படவில்லை அச்சத்தோடு அவர்கள் நின்றபொழுது வானதூதர் தோன்றி 'அவர் இங்கு இல்லை உயிரோடு எழுப்பபட்டார்' என்றார் ஆம் மரித்த இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்துவிட்டார். பெண்கள் நடந்த நிகழ்ச்சிகளை சீடர்களிடம் அறிவித்தனர். சீடர்களுக்கு அச்சமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்த்து.
இயேசு அவர்களுக்கு பலமுறை காட்சி தந்து மறை உண்மைகளை விளக்கினார். தமது காயங்களைக் காட்டி அவர்களது ஐயங்களை போக்கினார். அப்பொழுது அவர்களது மனக்கண்கள் திறந்தன. இயேசுவே ஆண்டவர் என்று கண்டு கொண்டு பேரின்பத்தில் ஆழ்ந்தனர்.
தேவதாயே! மகனைப் பறிகொடுத்து நடைபிணமாய் வாழ்ந்த நீர் உயிரோடு எழுந்து வந்து உமது மகன் அம்மா என்று அழைத்தபோது மகிழ்ச்சி வெள்ளத்தில் நிறைந்திருப்பீர் அல்லவா! தாயே பல்லேறு கவலைகளால் பயத்தினால் வாழ்ந்துகொண்டிருக்கும் எங்களது நிலைகண்டு மனமிறங்கி எங்களுக்காக உமது திருமகனிடம் பரிந்துரைக்குமாறு வேண்டி இந்த பத்து மணிகளை உமது திருப்பாதம் சமர்ப்பிக்கின்றோம்
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே. . . . . . . . . . .
அருள் நிறைந்த மரியே வாழ்க. . . . . . . . . . 10 முறை
பிதாவுக்கும் சுதனுக்கும். . . . . . . . . . . . .
ஓ! என் இயேசுவே. . . . . . . . . . . . .
இரண்டாவது: இயேசு விண்ணேற்றமடைந்த்தை தியானிப்போம்
இயேசு தமது சீடர்களை பெத்தானியா என்ற இடத்திற்கு வரவழைத்து அவர்களை நோக்கி "விண்ணிலும் மண்ணிலும் நீங்கள் எல்லா மக்களிடத்தாரையும் எனது சீடராக்குங்கள் தந்தை,மகன்,தூய ஆவியாரின் பெயரால் திருமுழுக்குக்கொடுங்கள் உமக்கு துணையாளராக தூய ஆவியாரை அனுப்புகிறேன். உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களோடு இருப்பேன்" என்று கூறி அவர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்த பொழுதே அவர்களிடமிருந்து விண்ணேற்றம் அடைந்தார். சீடர்களும் அவரை வணங்கி மகிழ்ச்சியோடு அவரைப் போற்றிக் கொண்டுருந்தார்கள். அவரது அரசுக்கு முடிவே இராது மகிமையின் தேவன் மாட்சிமை நிறைந்தவர். மனுக்குலம் செழித்திட என்றும் நம்மோடு இருப்பவர். இதோ நமது இதயக்கதவை தட்டுகிறார். நமது இதயக்கதவை திறந்து நம்மோடு அவர் வாழ வரம் கேட்போம்.
மாசில்லா மாமரியே உமது திருமகனின் விண்ணேற்றம் எங்களின் வாழ்விற்கு ஈடேற்றம் என்பதை நாங்கள் உணர்ந்து அதற்கேற்ற வழிகளில் நாங்கள் வாழ்வதற்குரிய வரம் வேண்டி இந்த பத்து மணிகளை உமது மலர்பாதம் சமர்ப்பிக்கின்றோம்
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே. . . . . . . . . . .
அருள் நிறைந்த மரியே வாழ்க. . . . . . . . . . 10 முறை
பிதாவுக்கும் சுதனுக்கும். . . . . . . . . . . . .
ஓ! என் இயேசுவே. . . . . . . . . . . . .
மூன்றாவது: தூய ஆவியானவரின் வருகையை எண்ணி தியானிப்போம்
பெந்தக்கோஸ்து என்றும் பெருநாளில் அன்னை மரியும் இயேசுவின் அன்புச் சீடர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்றுகூடி ஒருமனத்தினராய் செபித்துக் கொண்டிருந்தபோது பெருங்காற்று வீசுவது போன்று ஒலி எழுந்து பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது அவர்கள் அனைவரும் தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்டு வெவ்வேறு மொழிகளில் பேசத்தொடங்கினர். இதைக்கண்ட மற்ற யாவரும் மனம் குழம்பி அதிசயத்து நின்றனர். பாடுகளில் காலத்தில் பயந்து ஓடிய சீடர்கள் பலமடைந்தனர். ஞானமற்றவர் ஞானிகள் ஆயினர். ஞானம் பிற பயம் மறைந்த்து. இயேசு தமக்கும் போதித்தவைகளையெல்லாம் உலகமெங்கும் சென்று போதித்து உண்மைக்கு சான்றாக தங்கள் உயிரையே தியாகம் செய்தனர்.
ஆதியிலே நீர்த்திரளின் மேல் நிழலாடிக்கொண்டிருந்த பரிசுத்த ஆவியார் மரியா மீது நிழலிட்ட ஆவியார், இயேசுவின் திருமுழுக்குக்கில் புறா வடிவில் அவர்மீது வந்திறங்கிய தூய ஆவியார் அக்கினி வடிவமாய் அப்போஸ்தலர்கள் மீது வந்து இறங்கினார். எண்ணற்ற புதுமைகள் அவர்கள் செய்ய வரம் அருளினார். தூய ஆவியார் அனபின் அருளின் இரக்கத்தின் சமாதானத்தின் தேவன் வந்தவர் சென்றுவிடவில்லை உலகம் முழுவதும் நிறைந்து இருக்கிறார். உலகம் முடியும் வரை நம்மோடு இருப்பார்.
தூய ஆவியாரால் நிரப்பட்ட தேவதாயே பரிசுத்த ஆவியாரின் வல்லமையை நாங்கள் உணர்ந்து அவரின் துணையால் நாங்கள் ஜெபமாலையை பக்தியாய் செபித்து அதன் மகிமையை அனைவரும் உணர்ந்தும் ஆற்றலை எமக்கு அருளும்படி வேண்டி இந்த பத்து மணிகளை உம் மலர்ப்பாதம் சமர்ப்பிக்கின்றோம்.
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே. . . . . . . . . . .
அருள் நிறைந்த மரியே வாழ்க. . . . . . . . . . 10 முறை
பிதாவுக்கும் சுதனுக்கும். . . . . . . . . . . . .
ஓ! என் இயேசுவே. . . . . . . . . . . . .
நான்காவது: கன்னிமரியா விண்ணேற்றம் அடைந்த்தை தியானிப்போம்.
தேவதாய் இறைத்தந்தையின் இனிய மகள்; இறைமகன் இயேசுவின் அன்புத்தாய்; தூய ஆவியாரின் அருள்நிறைப் பத்தினி. உடலிலும் உள்ளத்திலும் தூய்மை நிறைந்தவள். பத்துமாதம் இயேசுவை சுமந்த வாக்குத்தத்தத்தின் பேழை. இயேசுவின் தசையின் தசையாய் இரத்ததின் இரத்தமாய் விளங்கிய அன்னையின் திருவுடல் கல்லறையில் மண்ணோடு மண்ணாய் மக்கிப்போகலாமா? இறைவன் எந்த திட்டத்திற்காய் இவ்வுலகிற்கு அன்னையை அனுப்பினாரோ அது நிறைவேறியதும், ஆத்ம சரீரத்தோடு விண்ணரசிற்கு இருகரம் நீட்டி அழைத்துக்கொள்கிறார்.
சென்ம மாசின்றி உற்பவித்த அன்னை மரியா! எளிமையும், தாழ்ச்சியும் நிறைந்த உள்ளத்தோடு இவ்வுலகில் வாழ்ந்தீர். நீர்தான் எங்கள் நம்பிக்கை. எங்கள் பாவங்களைக் கழுவும் தாய். நாங்களும் உம் அடிச்சுவடுகளைப் பின்பற்றி மறைந்த வாழ்வில் புனிதத்தை தேட வரம் வேண்டி இந்த பத்து மணியை உமக்கு சமர்பிக்கின்றோம்.
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே. . . . . . . .
அருள்நிறைந்த மரியே. . . . . . . . . . . 10 முறை
பிதாவுக்கும் சுதனுக்கும். . . . . . . . .
ஓ! எங்கள் இயேசுவே. . . . . .
ஐந்தாவது: கன்னி மரியா விண்ணுலக மண்ணுலக அரசியாக முடி சூட்டப்பட்டதை தியானிப்போம்.
மனுகுலத்தை இரட்சிக்க வந்த, தேவ குமாரனை திருவயிற்றில் சுமந்து, பெற்றெடுத்து, சீராட்டி பாராட்டி வளர்த்து, அவரது இறப்பிலும் உயிரப்பிலும் பங்கேற்று தூய ஆவியால் நிரப்பப்பட்டு, நமது குறைகளைக் களையும் தாயாக, தம் திருமகனிடம் நமக்காக பரிந்து பேசும் கருணையுள்ளவளாக, எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனால் நம் தாயாக ஒப்புக்கொடுக்கப்பட்டதால் மண்ணுலக அரசியாகின்றாள்.
இவ்வுலகம் தோன்றுவதற்கு முன்னே இறைவனால் தேர்ந்து கொள்ளப்பட்டவள். பாவநிழலே அணுகாத பாக்கியவதி. அவர் வழியாக மானிடர் அனைவரும் முடிவில்லா வாழ்வு பெற இறைவன் விரும்பினார். வானதூதர்களால் போற்றப்பட்டவர் புகழ்பெற்றவர். அதனால் விண்ணிற்கும் அரசியாய் முடி சூட்டம் பெறுகிறார், ஆரோக்கிய அன்னையாய், அடைக்கல மாதாவாய், புதுமைத்தாயாய், அமல உற்பவியாய், சகாயத்தாயாய் பலவேறு பெயர்களில் மானிடரின் குறைகளை உலகம் முழுவதும், பல்வேறு இடங்களில் கொலுவீற்றிருந்து அருள்மழை பொழிகின்றாள்.
விண்ணிற்கும் மண்ணிற்கு அரசியே! தஞ்சமென உம்மையே நாடி வந்தோம் உமக்கும் உமது திருமகனுக்கும் ஏற்றவர்களாக நாங்கள் வாழ வரம் வேண்டி இந்த பத்து மணிகளை உமக்கு கொடுக்கின்றோம்.
பரலோகத்தில்---------------------
அருள் நிறைந்த மரியே------------------10 முறை
பிதாவுக்கும் சுதனுக்கும்----------------
ஓ! என் இயேசுவே--------------
அன்பரசு உலகில் பரவிட செபிப்போம்
ஆணவம் அடியோடு ஒழிந்திட செபிப்போம்
இன்னல்கள் யாவும் நீங்கிட செபிப்போம்
ஈனச் செயல்கள் அழிந்திட செபிப்போம்
உலகில் அமைதி நிலவிட செபிப்போம்
ஊக்கத்தோடு உழைத்திட செபிப்போம்
எங்கும் இன்பம் தழைத்திட செபிப்போம்
ஏற்றத்தோடு வாழ்ந்திட செபிப்போம்
ஐம்புலன் அடக்கி ஆண்டிட செபிப்போம்
ஓற்றுமை எங்கும் நிறைந்திட செபிப்போம்
ஓதல் என்றும் தொடர்ந்திட செபிப்போம்
ஓளவியம் தவிர்த்து வாழ்ந்திட செபிப்போம்
மரியே வாழ்க! என் ஆண்டவளே வாழ்க!
இயேசுவின் தாய் என் தாய்.
- Another Tribute to our Mother Mary for this October, month of Rosary, by Tamil Pandit, Vijayavalli of Sacred Heart Hospital, Kumbakonam.