பொதுக்காலம் 33 ஆம் ஞாயிறு முதல் ஆண்டு 13-11-2011
முன்னுரை:
அன்பின் சகோதரமே! இறைவன் நம் ஒவ்வொருவரையும் அழைத்துள்ளார். அழைத்த இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் ஏராளமான அருள்வரங்களை கொடுத்து, நமக்கு பல திறமைகளையும் கொடுத்துள்ளார். அந்த திறமைகளை நாம் மட்டும் அனுபவித்தால் போதாது. அதை மற்றவர்களுக்கு கொடுத்து, பகிர்ந்து பயனடைய வேண்டும். எனவே வாய்ப்பு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் நமது திறமைகளை வெளிப்படுத்திடவும், அதை வளர்த்து கொள்ளவும் தூய ஆவியானவர் நமக்கு துணை புரிந்திடவும், இறைவனின் அருள் நம்மில் இருக்கவும் வேண்டுமென்று தொடரும் இத்திருப்பலியில் மன்றாடுவோம்.
முதல் வாசக முன்னுரை:
பெண்ணின் பெருமையைப் பாராட்டி எழுதுகிறார், நீதிமொழி புத்தகத்தின் ஆசிரியர். ஆண்டவரிடன் அச்சம் கொண்டு வாழும் பெண்ணே புகழத்தக்கவள் என்றும், இப்படிப்பட்ட பெண்ணை தன் மனைவியாக அடைந்துள்ள கணவன் அவளை முழுமையாக நம்புகிறான் என்ற கருத்தினை கூறும் வாசகத்தை கேட்போம்.
நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 31: 10-13, 19-20, 30-31
திறமை வாய்ந்த மனத்திடமுள்ள மனையாளைக் காண்பது மிக மிக அரிது; அவள் பவளத்தை விடப் பெருமதிப்புள்ளவள். அவளுடைய கணவன் அவளை மனமார நம்புகிறான்; அவளால் அவனுக்கு நலமும் வளமும் பெருகும். அவள் தன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு நல்லதையே செய்வாள்; ஒருநாளும் தீங்கு நினையாள். கம்பளி, சணல் ஆகிய பொருள்களைத் தானே தேடிக் கொணர்வாள்; தன் வேலை அனைத்தையும் விருப்புடன் தானே செய்வாள். இராட்டினத்தைத் தானே பிடித்து வேலை செய்வாள்; நூல் இழைகளைத் தன் விரல்களால் திரிப்பாள். எளியவனுக்கு உதவி செய்யத் தன் கையை நீட்டுவாள். வறியவனுக்கு வயிறார உணவளிப்பாள். எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்; ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள். அவளுடைய செயல்களின் நற்பயனை எண்ணி அவளை வாழ்த்துங்கள்; அவளது உழைப்பை மக்கள் மன்றம் பாராட்டுவதாக.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.
- இறைவா உமக்கு நன்றி.
இரண்டாம் வாசக முன்னுரை:
காலங்கள், நேரங்கள் அனைத்தையும் படைத்தவர் ஆண்டவரே. நமக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தையும், காலத்தையும் விழிப்புடன் இருந்து நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவும் ஒளியின் மக்களாக வாழவும் பவுலடியார் கூறும் அறிவுரையைக் கேட்போம்.
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6
சகோதரர் சகோதரிகளே, காலங்களையும் நேரங்களையும் குறித்து உங்களுக்கு எழுதத் தேவையில்லை. ஏனெனில் திருடன் இரவில் வருவது போல, ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள். `எங்கும் அமைதி, ஆபத்து இல்லை' என்று மக்கள் கூறிக்கொண்டிருக்கும் பொழுது, கருவுற்றிருப்பவருக்கு வேதனை வருவது போல, திடீரென அவர்களுக்கு அழிவு வரும்; யாரும் தப்பித்துக்கொள்ள இயலாது. ஆனால் அன்பர்களே! நீங்கள் இருளில் நடப்பவர்களல்ல; ஆகவே அந்த நாள் திருடனைப் போல் உங்களுக்கு வராது. நீங்கள் எல்லாரும் ஒளியைச் சார்ந்தவர்கள்; பகலில் நடப்பவர்கள். நாம் இரவையோ இருளையோ சார்ந்தவரல்ல. ஆகவே மற்றவர்களைப் போல் நாமும் உறங்கலாகாது; விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.
- இறைவா உமக்கு நன்றி.
நற்செய்தி வாசகம்:
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 14-30
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறிய உவமை: விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்: நெடும் பயணம் செல்ல இருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார். அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார். நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார். ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, `ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்' என்றார். அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், `நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன், உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்' என்றார். இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, `ஐயா, நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்' என்றார். அவருடைய தலைவர் அவரிடம், `நன்று. நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்' என்றார். ஒரு தாலந்தைப் பெற்றுக்கொண்டவரும் அவரை அணுகி, `ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது' என்றார். அதற்கு அவருடைய தலைவர், `சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய்ச் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்' என்று கூறினார். `எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்து பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள். ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்' என்று அவர் கூறினார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
மன்றாட்டுக்கள்:
- அன்பின் இறைவா! எம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் தலதிருச்சபையின் மக்களை ஒளியின் வழியில் நடத்திச் செல்லத் தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- ஞானத்தின் ஊற்றே இறைவா! எம் பங்கு மக்கள் அனைவரும் இறைஅன்பிலும, பிறர் அன்பிலும் நாளும் வளரவும், குடும்பங்களில் சமாதானம் நிலவிடவும், பிள்ளைகள் நன்கு படித்திடவும் தேவையான அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- கருணையின் தேவா! எம் பங்கிலுள்ள இளைஞர்கள் இளம் பெண்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளை வீணடித்து விடாமல், எதிர்கால வாழ்வை திட்டமிட்டு செயல்படுத்திட தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- நீதியின் தேவா! எம் நாட்டுத் தலைவர்கள், அரசியல் சமூகத்தலைவர்கள் அனைவரும் நாட்டின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.