திருவருகைக்கால 3ஆம் ஞாயிறு (2ஆம் ஆண்டு) 11-12-2011



முன்னுரை:  இறைவன் நம் ஒவ்வொருவரையும் அழைத்துள்ளார். அதுவும் நம் பெயரைச் சொல்லி அழைத்துள்ளார். அழைக்கப்பட்ட ஒவ்வொருவரும் தமது அழைப்பின் மேன்மையை உணர்ந்து வாழ வேண்டும். திருமுழுக்கு யோவானைப் போன்று தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு, வெறுமை நிறை மனதோடு நாம் வாழ இன்று இறைவன் நம்மை அழைக்கிறார். எனவே அவரை ஆசீர்வதித்தது போல, நம்மையும் ஆசீர்வதிக்க விரும்புகிறார். அமைதி அருளும் ஆண்டவரால் நமது உள்ளமும், ஆன்மாவும், உடலும் முழுமைபெற விரும்பினால் வெறுமை நிறைந்த, தாழ்ச்சி நிறைந்த மனதோடு இயேசுவின் பிறப்பிற்காக காத்திருந்து, விழித்திருந்து, செபத்தில் நிலைத்திருந்து தகுந்த தயாரிப்போடு இருக்க அருள்வேண்டி செபிப்போம்.

முதல் வாசக முன்னுரை:  ஆண்டவரால் அருள்பொழிவு செய்யப்பட்டோரின் பணிகள் பற்றியும், அவ்வாறு தம்மால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களை ஆண்டவர் விடுதலை, நேர்மை போன்றவற்றால் அழுகுறச்செய்து நல்லநிலத்தினைபோல் பலன் கொடுக்கச் செய்வார் எனக்கூறும் இறைவாக்கினர் எசாயாவின் வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் (எசா. 61:1-2,10,11)

ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது: ஏனெனில், அவர் எனக்கு அருள் பொழிவு செய்துள்ளார்: ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார். ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும், நம் கடவுள் அநீதிக்குப் பழிவாங்கும் நாளை அறிவிக்கவும், துயருற்று அழுவோர்க்கு ஆறுதல் அளிக்கவும், ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்: என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்: மலர்மாலை அணிந்த மணமகன் போலும், நகைகளால் அழகுபடுத்தப்பட்ட மணமகள் போலும், விடுதலை என்னும் உடைகளை அவர் எனக்கு உடுத்தினார்: நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார். நிலம் முளைகளைத் துளிர்க்கச் செய்வது போன்றும், தோட்டம் விதைகளை முளைக்கச் செய்வது போன்றும், ஆண்டவராகிய என் தலைவர் பிற இனத்தார் பார்வையில் நேர்மையும் புகழ்ச்சியும் துளிர்த்தெழச் செய்வார்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

இரண்டாம் வாசக முன்னுரை:  நமது உள்ளமும், ஆன்மாவும், உடலும் முழுமைபெற விரும்பினால் வெறுமை நிறைந்த, தாழ்ச்சி நிறைந்த காலியான மனதுடன் காத்திருக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் பவுல் அடியாரின் குரலுக்கு செவிமடுப்போம்.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் (1 தெச. 5:16-24)

எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே. தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம். இறைவாக்குகளைப் புறக்கணிக்க வேண்டாம். அனைத்தையும் சீர்தூக்கிப்பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள். அமைதி அருளும் கடவுள்தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக. அவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது உங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் குற்றமின்றி முழமையாகக் காப்பாராக! உங்களை அழைக்கும் அவர் நம்பிக்கைக்குரியவர். அவர் இதைச் செய்வார்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

நற்செய்தி வாசகம்: 
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (1:6-8,19-28)

கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்: அவர் பெயர் யோவான். அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக்குறித்துச் சான்று பகர்ந்தார். அவர் அந்த ஒளி அல்ல: மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர். எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, நீர் யார்? என்று கேட்டபோது அவர், நான் மெசியா அல்ல என்று அறிவித்தார். இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார். அப்போது, அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா? என்று அவர்கள் கேட்க, அவர், நானல்ல என்றார். நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா? என்று கேட்டபோதும், அவர், இல்லை என்று மறுமொழி கூறினார். அவர்கள் அவரிடம், நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்: எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்? என்று கேட்டார்கள். "அதற்கு அவர், 'ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது""என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப்பற்றியே என்றார்." பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள் அவரிடம், நீர் மெசியாவோ எலியாவோ வர வேண்டிய இறைவாக்கினரே அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்?  என்று கேட்டார்கள். யோவான் அவர்களிடம், நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்: அவர் எனக்குப்பின் வருபவர்: அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை என்றார். இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

மன்றாட்டுக்கள்: 


  1. எல்லாம் வல்ல இறைவா, எம்திருத்தந்தை 16 ஆம் ஆசிர்வாதப்பரையும், எம் ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரையும் நீர் நிறைவாக ஆசீர்வதியும். நற்செய்தியை அறிவிப்பதே எனது கடமை என்பதை உணர்ந்து செயல்பட தேவையான தூய ஆவியின் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  2. தியாகத்தின் இறைவா, எம் பங்கிலுள்ள அனைத்து அன்பியங்களும் சிறப்பாக செயல்பட்டு எம் பங்கை ஒரு அன்பிய சமூகமாக உருவாக்கிட அனைவரும் சிறப்பாக உழைக்க தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  3. நீதியின் தேவனே இறைவா, எம் நாட்டுத்தலைவர்கள், சமூக தலைவர்கள், அரசியல் தலைவர்கள் அனைவரும் எதற்காக மக்கள் தங்களை தேர்ந்தெடுத்தார்களோ அந்த நோக்கத்தை நிறைவேற்ற தியாக உள்ளத்துடன் பணிபுரிய தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  4. அன்பு தெய்வமே இறைவா எம் பங்கு பணியாளர் பங்கின் வளர்ச்சிக்காக எடுக்கும் அனைத்து முயற்சிகளும் பங்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்


எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன்


ஆதியும் நீரே - அந்தமும் நீரே
ஜோதியும் நீரே - என் சொந்தமும் நீரே

தாய் தந்தை நீரே - தாழ்விலும் நீரே
தாபரம் நீரே - என் தாரகம் நீரே

வாழ்விலும் நீரே - தாழ்விலும் நீரே
வாதையில் நீரே - என் பாதையில் நீரே

வானிலும் நீரே - பூவிலும் நீரே
ஆழியில் நீரே - என் ஆபத்தில் நீரே

துன்ப நேரத்தில் - இன்பமும் நீரே
இன்னல் வேளையில் மாறாதவர் நீரே

தேவனும் நீரே - என் ஜீவனும் நீரே
ராஜராஜனும் - என் சர்வமும் நீரே

ஆத்துமமே, என் முழு உள்ளமே


ஆத்துமமே, என் முழு உள்ளமே - உன்
ஆண்டவரை தொழுதேத்து - இந்நாள்வரை
அன்பு வைத்தாதரித்த - உன்
ஆண்டவரைத் தொழுதேத்து

1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர்
சாற்றுதற்கரிய தன்மையுள்ள

2. தலைமுறை தலைமுறை தாங்கும் விநோத
உலகமுன் தோன்றி ஒழியாத

3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத்தருளும், மேலான

4. வாதை, நோய், துன்பம் மாற்றி, அனந்த
ஓதரும் தயைசெய் துயிர்தந்த

5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,
முற்றும் கிருபையினால் முடிசூட்டும்

6. துதி மிகுந்தேற தோத்திரி தினமே
இதயமே, உள்ளமே, என் மனமே

குருத்துவம் - மறையறிவு


முன்னுரை:  ஓர் உடலாக விசுவாசிகளை ஒன்று சேர்க்கும்படி, அவர்களில் சிலரை ஆண்டவர் பணியாளர்களாக ஏற்படுத்தினார். அவ்வுடலில் உறுப்புகள் எல்லாம் ஒரே செயலைச் செய்வதில்லை. (உரோ.12 : 4) இப்பணியாளர்கள் விசுவாசிகளின் சமூகத்தில் குருத்துவ நிலையின் புனித அதிகாரத்தைக் கொண்டு பலி ஒப்புக் கொடுக்கிறார்கள், பாவங்களை மன்னிக்கிறார்கள், மேலும் குருத்துவ அலுவலை மக்களுக்கு கிறிஸ்துவின் பெயரால் வெளிப்படையாக நிறைவேற்றுகிறார்கள். ஆகவே, தந்தையால் தாம் அனுப்பபட்டது போல், கிறிஸ்து மறை தூதர்களை அனுப்பி வைத்தார்.

அதே மறைதூதர்களின் வழியாகவே அவர்களின் வழிவருபவர்களான ஆயர்களுக்குத் தம்முடைய அர்ச்சிப்பிலும் பணியிலும் பங்கு அளித்தார். ஆயர்களோடு சார்ந்து நின்று அவர்களது பணியில் குருக்கள் பங்கு கொள்கிறார்கள். இவ்வாறு குருத்துவ நிலையில் நியமிக்கப்பட்டவர்கள் கிறிஸ்துவால் ஒப்படைக்கப்பட்ட மறைத்தூதுப் பணியைச் சரிவர நிறைவேற்றும் பொறுட்டு ஆயர் திருநிலையுடன் ஒத்துழைப்பவர்கள் ஆகிறார்கள்.

குருத்துவம் வழியே குருக்கள் தூய ஆவியின் பூசுதலால் ஒரு தனிப்பட்ட முத்திரை கொண்டு குறிக்கப்படுகிறார்கள். இவ்வாறு தலையாகிய கிறிஸ்துவின் பெயரால் செயல்படும்படி, அவர்கள் குருவாகிய கிறிஸ்துவின் சாயலைப் பெறுகிறார்கள். (குருக்களின் பணியும் வாழ்வும், 2) 

பொதுக் குருத்துவம்:  கிறிஸ்துவில் திருமுழுக்குப் பெற்ற நாம் அனைவரும் கிறிஸ்துவின் பொது குருத்துவத்தில் பங்கு கொள்கிறோம். நமது சொல்லாலும் செயலாலும் கிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்க அழைக்கப்படுகிறோம். இப்பணிக்காக இறைவன் சிலரை தனிப்பட்ட முறையில் அழைக்கிறார்.இந்த அழைப்பை பெறுகிறவர்கள் இறைப்பணி செய்வதற்காக தங்கள் வாழ்கையை அர்ப்பணிக்கிறார்கள். மனைவி, பிள்ளைகள் என்ற குடும்ப உறவைத் தவிர்த்து இறைவனுக்கும் அவருடைய மக்களுக்கும் பணிசெய்ய சிறப்பாக அழைக்கப்படுகிறார்கள். 

குருத்துவத்தின் மூன்று நிலைகள்:  இவ்வழைப்பில் மூன்று நிலைகள் உள்ளன. திருத்தொண்டர் (தியாக்கோன்), குரு, மற்றும் ஆயர். இந்திய திருநாட்டில் இறைப்பணி செய்வதற்கு அதிக பேர் முன்வருவதால் திருத்தொண்டர் பணிக்கென யாரும் தனியாகத் திருநிலைப்படுத்தப் படுவதில்லை. குருவாககப் பயிற்சி பெறும் அனைத்து குருமாணவர்களும் தங்களின் பயிற்சியின் இறுதி ஆண்டிற்கு முந்திய ஆண்டில் திருத்தொண்டராக திருநிலைப்படுத்தப்படுகின்றனர். மேலை நாடுகளில் திருத்தொண்டர் பணிக்கென பயிற்சி பெற்று திருத்தெண்டர்களாக திருநிலைப்படுத்தப் படுகின்றனர். இத் திருத்தொண்டர்கள் திருமுழுக்கு, திருமணம், நோயில் பூசுதல் ஆகிய மூன்று திருவருட்சாதனங்களை நிறைவேற்றலாம். அவர்களின் முக்கிய பணி நற்செய்தி அறிவுப்புப் பணி. இவர்கள் பங்கு பணித்தள குருவோடு இணைந்து பணியாற்றுவார்கள்.

மறைமாவட்ட குருக்கள் :  குருக்களாக திருநிலைப்படுத்தப் படுகிறவர்கள் இரு விதமான வாழ்கை முறையை தெரிந்து கொள்ளலாம். மறைமாவட்ட குருக்களாக தங்களின் ஆயரின் வழிநடத்துதலில், கற்பு, கீழ்படிதல் வாக்குறுதியின் படி வாழ்வார்கள். பொதுவாக தங்களின் சொந்த மறைமாவட்டத்தில் பங்குகளில் அல்லது மறைமாவட்ட நிர்வாகத்தின் ஏதாவது பொறுப்புகளில் பணிபுரிவார்கள். தங்களுடைய ஆயருக்கு கட்டுப்பட்டவர்கள். 

சபை சார்ந்த குருக்கள்:  கத்தோலிகக திருச்சபையில் மறைமாவட்ட குருக்கள் தவிர சபை சார்ந்த குருக்களும் திருநிலைப்படுத்தப் படுகிறார்கள். இவர்கள் தங்கள் சபை எத்தகைய பணி வாழ்வை மையமாக வைத்து ஆரம்பிக்கப்பட்டதோ அத்தகைய பணிவாழ்விற்கு முக்கியத்துவம் கொடுத்து, தங்களில் சபைத் தலைவருடைய வழிநடத்துதலின் கீழ் கற்பு, கீழ்படிதல், ஏழ்மை ஆகிய வாக்குறுதியின் படி பொதுவாக இணைந்து(குறைந்தது இரண்டு அல்லது மூன்று பேர்) பணிசெய்வார்கள். உதாரணமாக இயேசு சபை குருக்கள், தூய பிரான்சிஸ்கன் அஸிஸி, சலேசிய குருக்கள், பல்வேறு கல்வி, சமூக, நிறுவனங்களிலும், பங்குத் தளங்களிலும் பணிசெய்வதைக் காணலாம். இவர்கள் தங்கள் சபை தலைவருக்கோ அல்லது அவரால் நியமிக்கப்பட்ட பதிலி தலைவருக்கோ கட்டுப்பட்டவர்கள். 

குருக்களின் பணிவாழ்வு:  குருக்களின் பணிகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். நற்செய்தி அறிவிக்கும் பணி, வழிநடத்தும் பணி, ஆளும் பணி. குருக்களின் நற்செய்தி அறிவிப்புப் பணி என்பது பணித்தளத்தில் திருப்பலி ஒப்புக்கொடுப்பதிலும் மற்ற அருட்ச் சாதனங்களை நிறைவேற்றுவதும் சிறப்பாக நற்செய்தியை போதிப்பதிலும் வாழ்ந்து காட்டுவதிலும் அடங்கியுள்ளது. வழிநடத்தும் பணியானது பணித்தள மக்களை ஆன்மீக, சமுக தேவைகளில் தலைவராயிருந்து மக்களை வழிநடத்துவதிலும், வழிகாட்டுவதிலும் அடங்கியுள்ளது. ஆழும் பணியானது பங்குத் தளத்தில் நிர்வாக ரீதியாக அவர் ஆற்றும் பணிகளை உள்ளடக்கியது.

ஆயர் நிலை:  குருத்துவத்தின் நிறைவு ஆயராக திருநிலைப்படுத்தப்படுதல். ஆயர் என்பவர் இயேசு கிறிஸ்துவின் நேரடி அப்போஸ்தலர்களின் வழிவந்தவர்கள். ஆயர் என்பவர் தம்முடைய பொறுப்பின் படி தம்மிடன் ஒப்படைக்கப்பட்ட மந்தையை காத்து, வழிநடத்தும் சிறப்புப் பணியைச் செய்ய அழைக்கப்படுகிறார். ஆயருக்கும் நற்செய்தி அறிவிக்கும் பணியும், வழிநடத்தும் பணியும் ஆளும் பணியும் முக்கியமான பணிகள். 

தேவ அழைத்தல்:   தேவ அழைத்தல் என்பது இறைவன் அருளும் கொடை. யாரும் அதைப் பெற உரிமை கொண்டாட முடியாது. இறைவன் அழைத்தாலன்றி யாரும் இப்பணிக்கு வர இயலாது அதில் நிலைத்து நிற்கவும் இயலாது. குருவாவதற்கு கிறிஸ்தவராகவும், நல்ல உள்ளம் கொண்டவராகவும் இறைப்பணிசெய்ய ஆர்வமுள்ளவராகவும் நல்ல உடல்நலத்தைக் கொண்டவராகவும் இருக்கவேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள் அல்லது கல்லூரி முடித்தவர்கள் சேரத் தகுதியுடையவர்கள். முதலில் இரண்டு வருடங்கள் தயாரிப்பாகவும் மூன்று வருடங்கள் தத்துவ இயலும் ஒரு வருடம் இடைநிலைப் பயிற்சியும் பின்னர் நான்கு வருடங்கள் இறைஇயலும் பயிலவேண்டும். ஆக மொத்தம் குறைந்தது பத்து வருட தயாரிப்பு தேவை. மேலும் விபங்களுக்கு உங்கள் பங்குத் தந்தையை அனுகலாம்: தக்க விபரம் தருவார்கள். 

"இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்." (மத்தேயு 10 :42) என்ற நம் ஆண்டவரின் வார்த்தைக்கேற்ப இறைஅடியார்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்ய முற்பட வேண்டும். தேவ அழைத்தலுக்காகவும் குருக்களுக்காகவும் நாம் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும்.

திவ்ய நற்கருணை - மறையறிவு


கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை:  திருமுழுக்கு, உறுதிப் பூசுதல், நற்கருணை ஆகிய மூன்றும் புகுமுக திருவருள்சாதனங்கள். இவற்றின் வழியாகவே நாம் "இருளின் அதிகாரத்தினின்று விடுவிக்கப்பட்டு , கிறிஸ்துவோடு இறந்து, அவரோடு உயிர்க்கிறோம்: சுவிகாரப் பிள்ளைகளுக்கு உரிய ஆவியாரைப் பெற்றுக் கொள்கிறோம்: இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து ஆண்டவருடைய சாவு, உயிர்ப்பு இவற்றின் நினைவாகக் கொண்டாடுகிறோம்" (மறை அறிவிப்புப் பணி, 14)

திருப்பலி கிறிஸ்தவ வாழ்வின் ஆதாரமும் கொடுமுடியுமாகும். அனைத்து மற்ற அருள்சாதனங்கள் இதோடு பிணைக்கப்பட்டுள்ளன. குருவானவர் திருப்பலி நிறைவேற்றும் போது கோதுமை அப்பமும் திராட்சை இரசமும் மெய்யாகவே இயேசு கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுகிறது என்பதே கத்தோலிக்க விசுவாசம். மற்ற திருவருள்சாதனங்களில் கடவுளின் கொடைகளை நாம் பெறுகிறோம். ஆனால் நற்கருணை என்னும் இத்திருவருள்சாதனத்தில் கடவுள் தம்மையே நமக்குத் தருகிறார்.

நற்கருணை என்னும் இத்திருவருள்சாதனம் பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வருகிறது: திருப்பலி, பலிப்பூசை, திருப்பலி கொண்டாட்டம், திருப்பலி வழிபாடு. திருமுழுக்கு நம்மை உயிருள்ள ஆலயத்தின் உயிருள்ள கற்களாக ஆக்குகிறது. அந்த ஆலயத்தில் கிறிஸ்துவையே இறைவனுக்குகந்த பலிப்பொருளாக ஒப்புக் கொடுப்பதே நற்கருணை வழிபாடு. கிறிஸ்துவே ஆலயம், அவரே குரு, அவரே பலிபீடம், அவரே செம்மறி! நாம் அவரோடு இணைந்து, அவரில் இத்தனையும் ஆகிறோம். 

அன்பின் பலி:  இயேசு கிறிஸ்து தம்மையே கல்வாரியில் பலியாக்கப் போவதின் முன் அடையாளமாக நற்கருணையை ஏற்படுத்தினார். இயேசு சிலுவையில் நமக்காக உயிர் தியாகம் செய்ததை இந்த திருப்பலியில் நினைவு கூர்கிறோம். ஏனெனில் தாம் சாவதற்கு முந்திய நாள் இரவில் அப்பத்தை எடுத்து அதைப் பிட்டு தம் சீடர்களுக்கு அளித்துக் கூரியதாவது : "அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள் எனெனில் இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல்" என்றார் அவ்வண்ணமே திராட்சை இரசம் நிறைந்த கிண்ணத்தை எடுத்து தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது: "அனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள்: ஏனெனில், இது புதிய, நித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தம்.இது பாவமன்னிப்புக்கென்று உங்களுக்காகவும் எல்லாருக்காகவும் சிந்தப்படும். இதை என் நினைவாகச் செய்யுங்கள்" என்றார்.

எனவே திருப்பலி என்பது அன்பின் உன்னத பலி. பழைய எற்பாட்டின் பலிகள் அனைத்திலும் மேலான பலி. இயேசு கிறிஸ்துவின் மேலான அன்பை இதில் நினைவுகூர்கிறோம். இத்தகைய அன்பின் திருவிருந்தில் நாம் பங்குகொள்ளும் போது அவருடைய பலியில் நாமும் பங்குகொள்கிறோம். கிறிஸ்து தம்மையே வானகத் தந்தைக்கு பலியாகத் தந்தார். இந்த அன்புப் பலியில் நாமும் பங்குபெறும் போது நாமும் நம்மையே வானக தந்தைக்கு பலியாக ஒப்புக்கொடுக்கிறோம். 

திருவிருந்தில் ஒருமைப்பாடு: மேலும் திருப்பலியின் பகுதியாகிய நற்கருணை விருந்தில் நாம் பங்கு பெறும் போது நாம் அனைவரும் கடவுளின் அன்புமக்கள் ஆகிறோம். எவ்வித வேறுபாடுமின்றி, நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதர சகோதரிகள் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. திருப்பலி முடிந்ததும் "திருப்பலி முடிந்தது, இனி நமது வாழ்க்கைப் பலியைத் தொடர்வோம்" என்னும் அறைகூவலுக்கு ஏற்ப கிறிஸ்து காட்டிய அன்பை நமது என்றாட வாழ்வில் காட்ட அழைக்கப்படுகிறோம்.

கத்தோலிக்கத் திருச்சபையில் திருப்பலி என்னும் இந்த திருவருள்சாதனம் உலகம் முழுவதும் ஒரே முறையில் கொண்டாடப்படுகிறது. ஒருவர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் எந்த மொழியில் திருப்பலி நடைபெற்றாலும், மொழி தெரியாவிட்டாலும் கூட அதில் முழுமையாகப் பங்குபெற முடியும். உலகம் முழுவதும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட வாசகங்களுடன் குறிப்பிட்ட திருநாளாக இருந்தால் அதே வழிபாட்டுடன் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. பல்வேறு நாடுகளில் பல்வேறு நேரமாயிருப்பதால் உலகெங்ககும் எந்த ஒரு மணித்துளியும் விடாமல் திருப்பலி தொடர்ந்து கொண்டாடப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

திருவருகைக்கால 2ஆம் ஞாயிறு (2ஆம் ஆண்டு) 04-12-2011


முன்னுரை: இயேசு பாலகனின் பிறப்பைக் தூய்மையான உள்ளத்தோடு கொண்டாட, அவரை இதயத்தில் வரவேற்க இவ்வாலயம் வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்தி வரவேற்கின்றோம்.இயேசு கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளே இன்றைய நற்செய்தியின் வழியாகவும், திருமுழுக்கு யோவான் வழியாகவும் இறைவன் நமக்கு விடுக்கின்ற அழைப்பு என்னவென்றால் “மனமாற்றம்”. நாம் அனைவரும் நம்முடைய பழைய பாவ இயல்பை விட்டுவிட்டு இயேசு பாலகனை நமது இதயத்தில் தாங்க வேண்டும். அதற்கான வரம் வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம். 

முதல் வாசக முன்னுரை: பிறக்கப்போகும் ஆண்டவர் எப்படிப்பட்டவர் என்பதை எசாயா தெளிவாக சுட்டிக்காட்டுகிறார். அவரது வருகைக்கு நம்மையே நாம் எப்படி தயார்செய்வது என்பதையும் தெளிவாக எடுத்து கூறுகின்றார். நம்மிடம் உள்ள கரடுமுரடானவைகள் எவை எவை என்பதை கண்டுணர்ந்து அவற்றை எல்லாம் விளக்கி விட்டு நல்மனம் கொண்டவர்களாக வாழ்வோம் என்ற உயர்ந்த சிந்தனையுடன் வாசகத்தை கேட்போம்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் (40:1-5, 9-11)

‘ஆறுதல் கூறுங்கள்: என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்’ என்கிறார் உங்கள் கடவுள்.எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்: அவள் போராட்டம் நின்றுவிட்டது: அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது: அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள்.குரலொளி ஒன்று முழங்குகின்றது: பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்: பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்: மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்: கோணலானது நேராக்கப்படும்: கரடு முரடானவை சமதளமாக்கப்படும்.ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்: மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்: ஆண்டவர்தாமே இதை மொழிந்தார். சீயோனே! நற்செய்தி தருபவளே, உயர்மலை மேல் நின்றுகொள்! எருசலேமே! நற்செய்தி உரைப்பவரே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! 'இதோ உன் கடவுள்' என்று யூதா நகர்களிடம் முழங்கு! இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்: அவர் ஆற்றலோடு ஆட்சி புரிய இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்: அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன. ஆயனைப்போல் தம்மந்தையை அவர் மேய்ப்பார்: ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்: அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்: சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.’
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

இரண்டாம் வாசக முன்னுரை: நம்மிடையே உள்ள மூடப்பழக்கங்களை கைவிட்டு ஆண்டவரையே, நாம் பற்றிக்கொள்ள வேண்டும் என்றும், அவர் அனைவரையும் அன்பு செய்யும் நல்ல தந்தையாக இருந்து செயல்படுவார் என்றும் கூறும் வாசகத்தை கவனமுடன் கேட்போம்.

திருத்தூதர் பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் (பேதுரு 3:8-14)

அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மறந்துவிடவேண்டாம். ஆண்டவரின் பார்வையில் ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள் போலவும் இருக்கின்றன. ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலந்தாழ்த்துவதாகச் சிலர் கருதுகின்றனர். ஆனால், அவர் அவ்வாறு காலந்தாழ்த்துவதில்லை. மாறாக, உங்களுக்காகப் பொறுமையோடிக்கிறார். யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாறவேண்டுமென விரும்புகிறார். ஆனால் ஆண்டவருடைய நாள் திருடனைப்போல வரும். வானங்கள் பெருமுழக்கத்துடன் மறைந்தொழியும்: பஞ்சபூதங்கள் வெந்திருகிப் போகும். மண்ணுலகமும் அதன் செயல்களும் தீக்கிரையாகும். இவையாவும் அழிந்து போகுமாதலால் நீங்கள் தூய, இறைப்பற்றுள்ள நடத்தையில் மிகவும் சிறந்து விளங்க வேண்டும்! கடவுளின் நாளை எதிர்பார்த்து அவர் வருகையை விரைவுபடுத்த வேண்டும். அந்நாளில் வானங்கள் எரிந்தழிந்து பஞ்சபூதங்கள் வெந்துருகிப் போகும். அவர் வாக்களித்தபடியே நீதி குடிகொண்டிருக்கும் புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே, அன்பார்ந்தவர்களே, இவற்றை எதிர்பார்த்திருக்கும் உங்களை அவர் மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய்க் காணும் வகையில் முழுமுயற்சி செய்யுங்கள்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

நற்செய்தி வாசகம்: 
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (1:1-8)

கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்: ‘இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்: அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார். பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்: அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்'என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது. இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.  யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்: தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர். யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்: தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்: வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார். அவர் தொடர்ந்து, ‘என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்: அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்' எனப் பறைசாற்றினார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

மன்றாட்டுக்கள்: 
  1. படைப்பின் முதல்வனே இறைவா! இந்த உலகில் பயனம் செய்யும் திருச்சபை, அதன் தலைவர்களும் மக்களின் நலனில் அக்கரைக் கொண்டு, வாழ்விழந்த மக்களுக்கு அன்பின், இரக்கத்தின், மன்னிப்பின், மற்றும் அமைதியின் கருவிகளாகச் செயல்பட, கிறிஸ்துவின் மீட்பைத் தங்கள் நல்ல செயல்கள் மூலம் பிறருக்கு அறிவிக்கும் வரம் தந்திட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  2. அகதிகளையும் அனாதைகளையும் ஆதரிக்கும் அன்பு இறைவா!  வீடிழந்து, உறவிழந்து. மண்ணிழந்து, மானத்தையும் இழந்து வாதை முகாம்களில் முள் வேலிக்குள் துன்பப்படும் தமிழர்களுக்காவும், மற்றும் உலகெங்கும் உள்ள அகதிகளுக்காகவும் மன்றாடுகிறோம். அவர்களுக்கு நீர் கொண்டு வந்த மீட்பு விரைவில் கிடைக்க எம் நாட்டுத் தலைவர்கள் முன்வர வேண்டிய வரம்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  3. அன்பின் இறைவா! இன்றும் கொடுமைப்படுத்தப்படும் எம் சகோதர சகோதரிகளுக்காக மன்றாடுகிறோம். அவர்களுடைய வாழ்வில் இந்தாள்வரை அவர்கள் சந்திக்கும் துன்பங்களும் துயரங்களும் மறைந்து மக்கள் அனைவரும் ஒருத்தாய் பிள்ளைகளாய் வாழ்ந்திட மக்களின் மனதை மாற்றிட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  4. மனமாற்றத்தை விரும்பும் இறைவா! உம் பிறப்பிற்காகத் காத்திருக்கும் நாங்கள் எங்கள் பழைய இயல்புகளைக் கலைந்து புதிய மனிதர்களாக மாறி இந்த உலகத்தை உம் பாதையில் கொண்டுவர எங்களுக்கு உமது அருளையும் ஆசீரையும் பொழிந்து காத்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.