முன்னுரை: இயேசுவின வாழ்வு என்றுமே “உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள் , ஆண்டவர் குரலுக்குச் செவிசாய்ப்பீர்” என்று கூறி நம்மைக் சிந்திக்க அழைக்கிறது ஆண்டின் பொதுக்காலம் நான்காம் ஞாயிறு. தீய சக்திகளாகிய இருளாட்சியை, ஆதிக்கத்தை, அக்கிரமத்தை அழித்தொழித்து இறையாட்சியை நிலை நிறுத்தி செயலாக்கிட நம்மை அழைக்கிறார் நம் இறைமகன் இயேசு கிறிஸ்து. தீமையின் ஒட்டுமொத்த உருவமாயிருக்கின்ற சுயநலம், சுரண்டல், அடிமைத்தனம், சாதி, பயங்கரவாதம், பாலியல் வன்கொடுமை, அடக்கியாளும் அதிகாரம், பிளவுப்படுத்தும் எண்ணம், ஏழைப் பணக்காரன், போட்டி பொறாமை ஆகிய அனைத்தும் சிறிய பெரிய விதங்களில் நம்மையும், நமது குடும்பத்தையும் சமுதாயத்தையும் ஆட்டி அலைக்கழித்து வரும் இந்த தீய சக்திகளை எதிர்த்து வாழும்போது இறைவனுக்கு உகந்தவர்களாக, மகிமையானவர்களாக மாறுவோம். நாம் அத்தகைய மகிமையை அடைய இத்திருப்பலியிலம் மன்றாடுவோம்.
முதல் வாசக முன்னுரை: மனித மனம் அது ஒரு நிலம. அங்கே விதைக்கப்படும் இறைவார்த்தைகள் அனைத்தும் தவறாது முளைக்கும. அவ்வார்த்தையின்படி நடக்கிறவர்கள் சிறகடித்துப் பறப்பார்கள், அவ்விறைவார்த்தையின்படி நடவாதவர்கள் அனைவரையும் வேரறுப்பேனென்று கடவுள் இறைவாக்கினர் மோசேயிடம் கூறுவதைக் கவனமுடன் கேட்போம்.
இணைச்சட்டம் நூலிலிருந்து வாசகம் (இச 18:15-20)
கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னைப்போல் ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவார். நீ அவருக்குச் செவிகொடு. ஓரேபில் திருப்பேரவை கூடிய நாளில், நீ உன் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடி, "நான் இறந்து போகாதபடி, என் கடவுளாகிய ஆண்டவரின் குரலொலியை இனி நான் கேட்காமலும் இப்பெரும் நெருப்பை இனி நான் காணாமலும் இருப்பேனாக" என்று விண்ணப்பித்தபோது, ஆண்டவர் என்னைநோக்கி, "அவர்கள் சொன்னதெல்லாம் சரி" என்றார். உன்னைப்போல் ஓர் இறைவாக்கினனை அவர்களுடைய சகோதரர்களினின்று நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன். நான் கட்டளையிடுவது அனைத்தையும் அவன் அவர்களுக்குச் சொல்வான். என்பெயரால் அவன் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவி கொடாதவனை நான் வேரறுப்பான். ஆனால், ஓர் இறைவாக்கினன் எனது பெயரால் பேசுவதாக எண்ணிக்கொண்டு, நான் அவனுக்குக் கட்டளையிடாதவற்றைப் பேசினால், அல்லது வேற்றுத் தெய்வங்களின் பெயரால் பேசினால், அந்த இறைவாக்கினன் சாவான்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.
இரண்டாம் வாசக முன்னுரை: இல்லறம் என்பது இமயம் போன்றது. அதன் உச்சத்தை அடைய எண்ணற்ற தியாகங்களை செய்வதில் கணவனுக்கு மட்டும் என்று நின்று விடாமல் ஆண்டவரிடமும் பற்றுக்கொண்டு இருக்க வேண்டும் என்று கூறும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் (1கொரி.7:32-35)
நீங்கள் கவலையற்றவர்களாய் இருக்கவேண்டுமென்றே நான் விரும்புகிறேன், மணமாகாதவர் ஆண்டவருக்குரியவற்றில் அக்கறை கொள்கிறார்; எப்படி அவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார். ஆனால் மணமானவர் உலகுக்குரியவற்றில் அக்கறைகொள்கிறார்; எப்படித் தம் மனைவிக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் மனம் பிளவுபட்டுள்ளது. மணமாகாத பெண்ணும் கன்னிப்பெண்ணும் ஆண்டவருக்குரியவற்றில் அக்கறை கொள்வதால் அவர்கள் உடலிலும் உள்ளத்திலும் தூயோராகின்றனர். ஆனால் மணமான பெண், உலகுக்குரியவற்றில் அக்கறை கொள்வதால் எப்படித் தம் கணவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறார். உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல, உங்கள் நலனுக்காகவே இதை நான் சொல்கிறேன். எல்லாம் ஒழுங்காய் இருக்கவும் நீங்கள் முழுமனத்தோடு ஆண்டவரிடம் பற்றுக் கொண்டிருக்கவுமே இவ்வாறு சொல்கிறேன்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.
நற்செய்தி வாசகம்:
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (1:21-28)
அவர்கள் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார். அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த ஆவி, "நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்" என்று கத்தியது. "வாயை மூடு; இவரை விட்டு வெளியோ போ" என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று. அவர்கள் அனைவரும் திகைப்புற்று, "இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!" என்று தங்களிடையே பேசிக் கொண்டனர். அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
மன்றாட்டுக்கள்:
- அனைவரும் என்னைப் போல இருங்கள் என்று சொன்ன எம் இறைவா! உம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள, குருக்கள, கன்னியர் பொதுநிலையினர் அனைவரும் உம்மைப்போல வாழ்ந்து தங்களது வாழ்வால் மற்றவருக்கு நற்செய்தியை அறிவித்திட தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- தலைவனாக விரும்புபவன் பணியாளனாக இருக்கட்டும் என்று சொன்ன தெய்வமே, சுதந்தரம், சமத்துவம, சகோதரத்துவத்தின் பார்வையில் எங்கள் நாட்டுத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் வாழ்ந்து நீதியின் கண் கொண்டு எங்களை வழிநடத்த தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- எங்களையெல்லாம் பராமரிக்கும் நல்தெய்வமே, நவீனம் என்னும் பெயரில் கலாச்சாரத்தையும, பண்பாட்டையும் துளைத்து நிற்கும் இச்சமுதாயத்திற்காக மன்றாடுகிறோம். நாங்கள் வாழுகின்ற நிலையில் மற்றவரின் உணர்வுகளை மதிக்கவும் தனி மனித சுதந்தரத்திற்கு மதிப்புக் கொடுக்கவும் தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- இரக்கமுள்ள இறைவா எங்கள் ஊரில் வாழும் குடும்பத்தார்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்புசெய்து வாழவும், அவர்களில் உம் தரிசனத்தை பெற்றிடவும், அவர்களுக்கு என்றும் ஆதரவாக அவர்கள் குழந்தைகள் விளங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.