பொதுக்காலம் 5 ஆம் ஞாயிறு (இரண்டாம் ஆண்டு) 05-02-2012


முன்னுரை:  இறையேசுவில் பிரியமானவர்களே! பரபரப்பான சூழலில் பல்வேறு பொறுப்புகளால் நமது வாழ்வு நெருக்கடிக்குள்ளாகி தடுமாறுகிறது.  அமைதியில், குடும்பத்தில், உறவுகளில் இறைவனை கண்டு இளைப்பாறுதல் பெற நமது ஆண்டவர் இயேசு அவரது திருப்பலிக்கு அழைக்கிறார். தனிமையான இடத்தில் இறைவேண்டுதல் வழியாக இயேசு  ஆற்றல் பெற்றது போல நாமும் குறிப்பாக நமது குழந்தைகள் ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ (லூக்கா 2:52) இப்பலியில் பங்கேற்போம். 

முதல் வாசக முன்னுரை:  மனிதனுடைய வாழ்வு போரட்டம் நிறைந்ததாகத்தான் இருக்கின்றது. அந்தப் போராட்டத்தில் அவன் சந்திக்கக்கூடியது ஒன்று நோய். எந்தவிதமான நோய் எனக்குள் வந்து பாதித்தாலும் நான் அதற்கு அஞ்சமாட்டேன் ஏனென்றால் நான் கடவுளிள் முழுமையான நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்; என்று துன்புறும் உழியனாகிய யோபு கூறுவதை வாசிக்க கேட்போம்.

யோபு நூலிலிருந்து வாசகம் (யோபு 7:1-4,6-7)

மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போரட்டந்தானே? அவர்களின் நாள்கள் கூலியாள்களின் நாள்களைப் போன்றவைதாமே? நிழலுக்கு ஏங்கும் அடிமை போலவும், கூலிக்குக் காத்திருக்கும் வேலையாள் போலவும், வெறுமையான திங்கள்கள் எனக்கு வாய்த்தன: இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின. படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்! இரவோ நீண்டிருக்கும்: விடியும்வரை புரண்டு உழல்வேன, என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும் விரைந்தோடுகின்றன: அவை நம்பிக்கையின்றி முடிவடைகின்றன. என் உயிர் வெறுங்காற்றே என்பதை நினைவுகூருவீர்: என் கண்கள் மீண்டும் நன்மையைக் காணா.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

இரண்டாம் வாசக முன்னுரை:  தமது புகழ்க்காக, நற்பெயருக்காக வாழாமல், உண்மையான தொண்டுள்ளத்தோடு மக்கட்பணி செய்தவர். நற்செய்திப் பணி வழி நம்பிக்கையை ஊட்டியவர். நற்செய்தி அறிவிக்காவிடில் ஜயோ எனக்குக்கேடு என்று பவுல் அடியார் நம் அனைவரையும் இறையன்புக்குச் சான்றுபகர்வோம் என்றும் நம்பிக்கை இழந்த மக்களுக்கு நம்பிக்கை ஒளியாவோம் என்றும் நல்லது செய்வதில் என்றுமே முனைப்பாயிருப்போம் என்று கூறும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் (1கொரி. 9:16-19,22-23)

நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! இதை நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு. நானாக விரும்பாவிட்டாலும் இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பாக இருக்கிறது. அப்படியானால், எனக்குக் கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள மனநிறைவே அக்கைம்மாறு: நான் நற்செய்தி அறிவிப்போருக்குரிய உரிமையைக் கொஞ்சம் கூடப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன். வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவனானேன். எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன். நற்செய்தியால் வரும் ஆசியில் பங்கு பெறவேண்டி நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

நற்செய்தி வாசகம்: 
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (1:29-39)

பின்பு அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார். மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள். நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது. பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்: அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை. இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள். அவரைக் கண்டதும், எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் " என்றார்கள். அதற்கு அவர், "நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்: ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன்" என்று சொன்னார். பின்பு அவர் கலிலேய நாடு முழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி பேய்களை ஓட்டி வந்தார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

மன்றாட்டுக்கள்: 
  1. அனைவரும் என்னைப் போல் நற்செய்தியை அறிவியுங்கள் என்று சொன்ன எம் இறைவா! உம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள்,குருக்கள்,கன்னியர் பொதுநிலையினர் அனைவரும் உம்மைப்போல வாழ்ந்து தங்களது வாழ்வால் மற்றவருக்கு நற்செய்தியை அறிவித்திட தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  2. தலைவனாக விரும்புபவன் பணியாளனாக இருக்கட்டும் என்று சொன்ன தெய்வமே, சகோதரத்துவத்தின் பார்வையில் எங்கள் நாட்டுத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் வாழ்ந்து நீதியின் கண் கொண்டு எங்களை வழிநடத்த தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  3. எங்களையெல்லாம் பராமரிக்கும் நல்தெய்வமே, நாங்கள் வாழுகின்ற நிலையில் மற்றவரின் உணர்வுகளை மதிக்கவும் தனி மனித சுதந்திரத்திற்கு மதிப்புக் கொடுக்கவும் தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  4. இரக்கமுள்ள இறைவா எங்கள் ஊரில் வாழும் குடும்பத்தார்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பு செய்துவாழவும், அவர்களில் உம் அன்பை பெற்றிடவும், அவர்களுக்கு என்றும் ஆதரவாக அவர்கள் உற்றார் உறவினார்கள் இருக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பொதுக்காலம் 4 ஆம் ஞாயிறு (இரண்டாம் ஆண்டு) 29-01-2012


முன்னுரை:  இயேசுவின வாழ்வு என்றுமே “உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள் , ஆண்டவர் குரலுக்குச் செவிசாய்ப்பீர்”  என்று கூறி நம்மைக் சிந்திக்க அழைக்கிறது ஆண்டின் பொதுக்காலம் நான்காம் ஞாயிறு. தீய சக்திகளாகிய இருளாட்சியை, ஆதிக்கத்தை, அக்கிரமத்தை அழித்தொழித்து இறையாட்சியை நிலை நிறுத்தி செயலாக்கிட நம்மை அழைக்கிறார் நம் இறைமகன் இயேசு கிறிஸ்து. தீமையின் ஒட்டுமொத்த உருவமாயிருக்கின்ற சுயநலம், சுரண்டல், அடிமைத்தனம், சாதி, பயங்கரவாதம், பாலியல் வன்கொடுமை, அடக்கியாளும் அதிகாரம், பிளவுப்படுத்தும் எண்ணம், ஏழைப் பணக்காரன், போட்டி பொறாமை ஆகிய அனைத்தும் சிறிய பெரிய விதங்களில் நம்மையும், நமது குடும்பத்தையும் சமுதாயத்தையும் ஆட்டி அலைக்கழித்து வரும் இந்த தீய சக்திகளை எதிர்த்து வாழும்போது இறைவனுக்கு உகந்தவர்களாக, மகிமையானவர்களாக மாறுவோம். நாம் அத்தகைய மகிமையை அடைய இத்திருப்பலியிலம் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:  மனித மனம் அது ஒரு நிலம.  அங்கே விதைக்கப்படும் இறைவார்த்தைகள் அனைத்தும் தவறாது முளைக்கும.  அவ்வார்த்தையின்படி நடக்கிறவர்கள் சிறகடித்துப் பறப்பார்கள், அவ்விறைவார்த்தையின்படி நடவாதவர்கள் அனைவரையும் வேரறுப்பேனென்று கடவுள் இறைவாக்கினர் மோசேயிடம் கூறுவதைக் கவனமுடன் கேட்போம்.

இணைச்சட்டம் நூலிலிருந்து வாசகம் (இச 18:15-20)

கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னைப்போல் ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவார். நீ அவருக்குச் செவிகொடு. ஓரேபில் திருப்பேரவை கூடிய நாளில், நீ உன் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடி, "நான் இறந்து போகாதபடி, என் கடவுளாகிய ஆண்டவரின் குரலொலியை இனி நான் கேட்காமலும் இப்பெரும் நெருப்பை இனி நான் காணாமலும் இருப்பேனாக" என்று விண்ணப்பித்தபோது, ஆண்டவர் என்னைநோக்கி, "அவர்கள் சொன்னதெல்லாம் சரி" என்றார். உன்னைப்போல் ஓர் இறைவாக்கினனை அவர்களுடைய சகோதரர்களினின்று நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன். நான் கட்டளையிடுவது அனைத்தையும் அவன் அவர்களுக்குச் சொல்வான். என்பெயரால் அவன் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவி கொடாதவனை நான் வேரறுப்பான். ஆனால், ஓர் இறைவாக்கினன் எனது பெயரால் பேசுவதாக எண்ணிக்கொண்டு, நான் அவனுக்குக் கட்டளையிடாதவற்றைப் பேசினால், அல்லது வேற்றுத் தெய்வங்களின் பெயரால் பேசினால், அந்த இறைவாக்கினன் சாவான்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

இரண்டாம் வாசக முன்னுரை:  இல்லறம் என்பது இமயம் போன்றது. அதன் உச்சத்தை அடைய எண்ணற்ற தியாகங்களை செய்வதில் கணவனுக்கு மட்டும் என்று நின்று விடாமல் ஆண்டவரிடமும் பற்றுக்கொண்டு இருக்க வேண்டும் என்று கூறும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் (1கொரி.7:32-35)

நீங்கள் கவலையற்றவர்களாய் இருக்கவேண்டுமென்றே நான் விரும்புகிறேன், மணமாகாதவர் ஆண்டவருக்குரியவற்றில் அக்கறை கொள்கிறார்; எப்படி அவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார். ஆனால் மணமானவர் உலகுக்குரியவற்றில் அக்கறைகொள்கிறார்; எப்படித் தம் மனைவிக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் மனம் பிளவுபட்டுள்ளது. மணமாகாத பெண்ணும் கன்னிப்பெண்ணும் ஆண்டவருக்குரியவற்றில் அக்கறை கொள்வதால் அவர்கள் உடலிலும் உள்ளத்திலும் தூயோராகின்றனர். ஆனால் மணமான பெண், உலகுக்குரியவற்றில் அக்கறை கொள்வதால் எப்படித் தம் கணவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறார். உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல, உங்கள் நலனுக்காகவே இதை நான் சொல்கிறேன். எல்லாம் ஒழுங்காய் இருக்கவும் நீங்கள் முழுமனத்தோடு ஆண்டவரிடம் பற்றுக் கொண்டிருக்கவுமே இவ்வாறு சொல்கிறேன்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

நற்செய்தி வாசகம்: 
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (1:21-28)

அவர்கள் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார். அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த ஆவி, "நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்" என்று கத்தியது. "வாயை மூடு; இவரை விட்டு வெளியோ போ" என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று. அவர்கள் அனைவரும் திகைப்புற்று, "இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!" என்று தங்களிடையே பேசிக் கொண்டனர். அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

மன்றாட்டுக்கள்: 
  1. அனைவரும் என்னைப் போல இருங்கள் என்று சொன்ன எம் இறைவா! உம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள,  குருக்கள,  கன்னியர் பொதுநிலையினர் அனைவரும் உம்மைப்போல வாழ்ந்து தங்களது வாழ்வால் மற்றவருக்கு நற்செய்தியை அறிவித்திட தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  2. தலைவனாக விரும்புபவன் பணியாளனாக இருக்கட்டும் என்று சொன்ன தெய்வமே, சுதந்தரம், சமத்துவம,  சகோதரத்துவத்தின் பார்வையில் எங்கள் நாட்டுத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் வாழ்ந்து நீதியின் கண் கொண்டு எங்களை வழிநடத்த தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  3. எங்களையெல்லாம் பராமரிக்கும் நல்தெய்வமே, நவீனம் என்னும் பெயரில் கலாச்சாரத்தையும,  பண்பாட்டையும் துளைத்து நிற்கும் இச்சமுதாயத்திற்காக மன்றாடுகிறோம். நாங்கள் வாழுகின்ற நிலையில் மற்றவரின் உணர்வுகளை மதிக்கவும் தனி மனித சுதந்தரத்திற்கு மதிப்புக் கொடுக்கவும் தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  4. இரக்கமுள்ள இறைவா எங்கள் ஊரில் வாழும் குடும்பத்தார்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்புசெய்து வாழவும், அவர்களில் உம் தரிசனத்தை பெற்றிடவும், அவர்களுக்கு என்றும் ஆதரவாக அவர்கள் குழந்தைகள் விளங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

உறவோடு வாழும் உள்ளங்கள்

உறவோடு வாழும் உள்ளங்கள் நடுவில் தெய்வம் தரிசனம்
உலகாளும் தேவன் நெறி வாழும் இதயத் தெய்வம் தரிசனம்
மறைவழியில் வளரும் இல்லங்கள் எல்லாம் தெய்வம் தரிசனம்
நிறைவோடு மலரும் உலகங்கள் எல்லாம் தெய்வம் தரிசனம்
தெய்வம் தரிசனம் தெய்வம் தரிசனம் தெய்வம் தரிசனம்


(1)
அன்பாகி அன்பில் நிலையாகும் நெஞ்சில் தெய்வம் தரிசனம்
மெய்யாகி பொய்மை பழிநீக்கும் நெறியில் தெய்வம் தரிசனம்
ஒளியாகி உலகில் இருள்போக்கும் பணியில் தெய்வம் தரிசனம்
கனலாகி நீதி நெருப்பாகும் செயலில் தெய்வம் தரிசனம்
தெய்வம் தரிசனம் தெய்வம் தரிசனம் தெய்வம் தாசனம்
(2)
மதம் யாவும் மனித இனபேதம் ஒழித்தால் தெய்வம் தரிசனம்
சமதர்மம் ஓங்க ஓயாது உழைத்தால் தெய்வம் தரிசனம்
உரிமைகள் காக்க உயிர்த் தியாகம் செய்தால் தெய்வம் தரிசனம்
இறையரசின் கனவு நனவாகி விடிந்தால் தெய்வம் தரிசனம்
தெய்வம் தரிசனம் தெய்வம் தரிசனம் தெய்வம் தரிசனம்

நீ ஒளியாகும்


நீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும்
நீ வழியாகும் என் வாழ்வுக்கு துணையாகும்
அரணும் நீயே கோட்டையும் நீயே
அன்பனும் நீயே நண்பனும் நீயே
இறைவனும் நீயே


1.
நீ வரும் நாளில் உன் அமைதி வரும் - உன்
நீதியும் அருளும் சுமந்து வரும்
இரவின் இருளிலும் பயம்விலகும் - உன்
கரத்தின் வலிமையில் உயர்வு வரும்
கால்களும் இடறி வீழ்வதில்லை
தோள்களும் சுமையாய் சாய்வதில்லை
என் ஆற்றலும் வலிமையும் நீயாவாய் - 2
2.
விடியலைத் தேடிடும் விழிகளிலே புது
விளக்கினை ஏற்றிடும் பேரொளி நீ
பால்நினைந்தூட்டும் தாயும் என்
பால்வழி பயணத்தின் பாதையும் நீ
அருவிக்கு நடத்திடும் ஆயனும் நீ
அகமனம் அமர்ந்தென்னை ஆள்பவன் நீ
என் மீட்பரும் நேசரும் நீயாகும் -2

பொன்மாலை நேரம்

பொன்மாலை நேரம் பூந்தென்றல் காற்றில்
என் ஜீவ ராகம் கரைந்தோடுதே
என் இயேசு உன்னில் உறவாடும் நேரம்
என் துன்ப மேகம் கரைந்தோடுதே
உன்வாழ்வு ஒன்றே என் தேடலாகும்
உன் அன்பு ஒன்றே என் பாடலாகும்.

1.
நீயில்லாத நாளெல்லாம் நிலவில்லாத வானம் நான் - உன்
நினைவில்லாத வாழ்வெல்லாம் மழையில்லாத மேகம்தான்
காலம் தோறும் கண்ணின் மணிபோல் காக்கும் தெய்வமே
சுமை சுமந்து சோர்ந்த வாழ்வை தேற்றும் தெய்வமே
என் இயேசுவே அபயம் நீ தரவேண்டுமே
என் தெய்வமே அருகில் நீ வரவேண்டுமே
காற்றில் ஆடும் தீபம் என்னை சிறகில் மூடுமே
ஆ..ஆ..ம்..ம்..

2.
ஒருகணம் என் அருகினில் அமரும்போது ஒருயுகம்
உனைதினம் நான் புகழ்கையில் எனக்குள்
தோன்றும் புது யுகம்
முள்ளில் பூக்கும் ரோஜா என்னை அள்ளிப்பறிப்பதேன்
சொல்ல முடியா அன்பில் என்னை சூடி மகிழ்வதேன்
என் இயேசுவே என் அன்புக்கு வானம் எல்லை
என் தெய்வமே உன் அன்புக்கு வானம் எல்லை
அன்பின் நிழலில் நின்ற இதயம் உன் அன்பை பாடுதே
ஆ..ஆ..ம்..ம்..

அஞ்சலி


என் தெய்வமே உனக்காகும் அஞ்சலி – 2
தீபாஞ்சலி, மலரஞ்சலி தூபாஞ்சலி


தீமையினை எரிக்கின்ற நெருப்பே
இருளினை அழிக்கின்ற விளக்கே
பொய்மையை ஒழிக்கின்ற வாய்மையே
மெய்மையில் நடத்துவாய் தீபாஞ்சலி

நிதம் காலை மலர்கின்ற மலரே
நுகர்வோரை மகிழ்விக்கும் மணமே
நிலையற்ற வாழ்வுக்கு சாட்சியே
நிறைவினை அருள்வாயே மலரஞ்சலி

நறுமணம் தருகின்ற தூபமே
நாதனின் பூஜைக்கு உதவும்
நலம் பல வழங்கும் நல்தேவன்
பணிக்காக வருகின்றோம் தூபாஞ்சலி

ஒளியானவா உயிரானவா


ஒளியானவா உயிரானவா மன்னவன் நீயே
ஒன்றானவா உருவானவா நின் மலர் பாதத்திலே
எனைமறந்து உனையடைந்து எழிலடைந்திட பாடுகின்றேன்


1.
உனக்காக என் ஜீவன் உயிர்வாழுது
உலகில் நான் உனைக்காண துடிக்கின்றது.
உன்பார்வை நிதம் காண மனம் ஏங்குது – 2
நாளும் பொழும் நீ எனில் வளர
நானிலமெங்கும் நின் மனம் கமழ
உயிர் கொடுத்திட துடித்தெழுந்திட எனைமறந்து பாடுகின்றேன்

2.
உள்ளங்கள் நிதம் தேடும் மகிழ்வானது
உறவில் உன் உறவே சுகமானது
உன்நெஞ்சம் எனக்கென்றும் மடியானது - 2
நீயேதானே நினைவினில் மலர
நின் உயிர்தானே எனில் என்றும் வளர

உயிர் கொடுத்திட துடித்தெழுந்திட எனைமறந்து பாடுகின்றேன்