தொழிலாளிகளின் செபம்

அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவா, நெற்றி வியர்வை தரையில் விழ உழைக்க எமக்குப் பணித்தீரே ! நான் என் வேலைகளை விரும்பவும், அன்பு செய்யவும் அருள்வீராக. நேரத்தோடு வேலைக்குச் சென்று காலத்தையும் பொருளையும், பணத்தையும் வீணாக்காமல், நுணுக்கமான கவனத்துடன் உழைப்பேனாக. எப்பொழுதும் வேலையில் உற்சாகத்தோடும், உடன் ஊழியருடன் மரியாதையோடும், நிறுவனத்தார்க்குப் பிரமாணிக்கத்தோடும் நடந்து கொள்வேனாக. என் வேலையின் பயனால் என் வீடும், எமது தொழிலும், பொது மக்களும் பயனடையச் செய்தருளும்.
தொழிலாளியின் பாதுகாவலரான புனித சூசையப்பரே ! உமது தொழிலை இறைமகனே வாழ்த்தி, உமக்கு உதவியாக வந்து தச்சுத் தொழிலைச் செய்தாரே! உமது தொழிலை நீர் அன்பு செய்து திருக்குடும்பத்தைக் காப்பாற்றியதுபோல், நானும் என் தொழிலைப் பெரிதெனக் கருதி, அதனை அன்பு செய்து, என் குடும்பத்தையும் காப்பாறுவேனாக. இறைவனின் திருவுளத்தை உமது தொழிலால் நிறைவு செய்ததுபோல், என் தொழிலால் இறைவனின் திருவுளத்தை நானும் நிறைவு செய்ய எனக்காக அதே இயேசுவிடனம் மன்றாடுவீராக. -ஆமென்


-----------------
நல்ல இயேசுவே, என் இரட்சகரே! தேவரீர் ஒரு தொழிலாளியாய் இருக்க திருவுளம் கொண்டமையால், என் ஆண்டவரும் மாதிரியுமாகிய உம்மை நான் அணுகி வருகிறேன்.

நாசரேத்தூரில் அந்த எளிய தொழிற்சாலையில், சாந்தமும் தாழ்ச்சியும் உள்ளவராய், தூய்மை, வாய்மை, நேர்மை, மேரை மரியாதை நிறைந்தவராய் வாழ்ந்தீர், உமது தொழில் முயற்சிகளில் பரிகார உணர்ச்சி ததும்பி நின்றது. கடின பிரயாசையான உம் வேலைகளை செபத்தினாலும், கீழ்படிதலினாலும் நீர் அர்ச்சித்தீர்.

ஓ இயேசுவே ! தெய்வீகத் தொழிலாளியே, நானும் இப்படி இருக்க எனக்கு வரமருளும்.

உம்முடைய திருவருளின் உதவியினாலும், வேலையாட்கள், தொழில் பயிலுவோர்களின் பாதுகாவலர்களாகிய தேவ தாயார், சூசையப்பர் இவர்களுடைய ஆசீர்வாதத்தின் பலனாலும் இன்னும் அதிகமதிகமாய் நானும் தேவரீரைப் போல் வாழ்ந்து, உழைப்பேனாக. என் திவ்விய இரட்சகரே, கடும் பிரயாசைகள் நிறைந்த இவ்வுலக வாழ்க்கையை நான் முடித்தபின், உமது நித்திய இளைப்பாற்றியை எனக்குக்குக் கட்டளையிட்டருளும். -ஆமென்.

தொழிலாளரின் மாதிரியாகிய புனித சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கணவன் மனைவியரின் செபம்

கிறிஸ்துவுக்கும், திருச்சபைக்கும் உள்ள நேச ஐக்கியத்தை குறிக்கவும், உலக பரம்புதலுக்காகவும், நெருங்கிய அன்புக்காகவும் புனித திருமணவாழ்வை அர்ச்சித்தருளின இறைவா, அதன் ஆசீர்வாதத்தை இருவரும் வணக்கத்தோடு ஏற்றுக் கொண்டு அதன் கடமைகளை நடத்தக் கிருபைபுரியும். எங்களுடைய ஒன்றிப்பை இடைவிடாமல் ஆசீர்வதிக்கவும், அதனால் நாங்கள் இருவரும் எல்லா கடமைகளையும் சமாதானத்தோடும் அன்போடும் நிறைவேற்றவும், பிரமாணிக்கமாய் எங்களில் ஒருவருக்கொருவர் நடக்கவும் உம்மை மன்றாடுகிறேன். பிரிபடக்கூடாத கட்டினால் கட்டின அந்தப் புனித பந்தத்தை பலவீனப்படுத்தக்கூடிய எவ்விதக் கெட்ட குணத்திலும் பாவச் செயலிலும் இருந்து என்னை விடுவித்தருளும். தன்னலத்தை மறந்து, தியாக உள்ளத்தோடு வாழ்ந்து நான் உமக்குப் பிரியப்பட நடக்க சுறுசுறுப்புள்ளவனாகவும் ஆசையுள்ளவனாகவும் செய்தருளும். இவ்வுலக சோதனை துன்பங்களினால் உமது பேரில் முறுமுறுத்து எல்லாவற்றிற்கும் காரணரும் ஈகிறவருமாயிருக்கிற உம்மை உலக வாழ்வின் நிறைவால் மறந்து விடாமலிருக்கச் செய்தருளும். பொறுமையாலும் கடன் சாந்த குணத்தாலும், செபத்தாலும், நன்றியறிதலாலும் உமக்குக் கீழ்படிந்திருக்க என்னை ஆசீர்வதித்து உமக்குத் தகுந்தவனாகவும் செய்தருளும். -ஆமென்.

காவல் தூதரை நோக்கிச் செபம்

அதிமிக பிரமாணிக்கம் அமைந்த காவலரே ! அடியேனுக்குப் பிரியாத துணைவராக இறைவனால் நியமிக்கப்பட்டு எப்போதும் என் அருகிலிருந்து என்னை ஆண்டு நடத்தி வரும் வான தூதரே! இன்று(பேர்) ஆகிய நான் உம்மை என் பாதுகாவலராகவும் அடைக்கலமாகவும் தெரிந்து கொண்டு என்றென்றைக்கும் என்னை முழுதும் உமது பராமரிப்பில் வைத்து விடுகிறேன். மேலும் நான் உமது மகிமை பிரதாபத்துக்கு விரோதமான எவ்வித சொல்லினாலும் செயலினாலும் உம்மை விட்டுப் பிரியாமலிருப்பதும் அன்றி எனக்கு கீழ்ப்பட்ட மற்றவர்களும் தேவரீருக்கு விரோதமாய் ஏதாவது சொல்லவும் செய்யவும் விடுகிறதில்லை என்றும் உறுதி செய்கிறேன். ஆதலால் இன்று முதல் என் மரண பரியந்தம் உமது ஊழியனாக என்னை ஏற்றுக் கொள்ளும். நான் செய்யும் செயல்களிலும் எனக்கு உதவி செய்து, சிறப்பாக என் மரண நேரத்தில் என்னைக் கைவிடாமல் காத்தருளும். – ஆமென்.

புனித மிக்கேல் அதிதூதரை நோக்கி செபம்

வானுலக சேனை தளங்களின் அதிபதியே, என்றும் வாழும் அரூபிகளில் மகிமை பிரதாபம் நிறைந்த வானதூதரே, அவர்களிலும் உத்தமமானவரே! உன்னத கடவுளின் மந்திராலோதனையின் நிர்ணய பெட்டகமே, தேவ சிம்மாசனத்தின் அருகே நிற்கப் பேறுபெற்ற பிரவுவே, தேவ கட்டளைபடி விண்ணுலக வாசலைத் திறக்கவும், பூட்டவும், அதிகாரம் உள்ள வானவரே, தேவ நீதியின் அரியணையின் முன் எங்களைச் சேர்ப்பிக்கும் தூதாதி தூதரே, மரண அவஸ்தை படுகிறவர்களுக்கு உதவி செய்ய விரைந்து வரும் உபகாரியே, மரித்தவர்களை அழைத்து கொண்டுபோய் திவ்விய கர்தரின் சன்னதியில் சேர்க்கும் காவலரே, பலவீனனும் நிர்ப்பக்கியனுமாகிய அடியேனை கிருபாகடாட்சமாய்ப் பார்த்து என் வாழ்நாள் முழுவதிலும் சிறப்பாக எனது மரண தருவாயிலும் எனக்கு உமது தயை நேச உதவி புரிந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். -ஆமென்.

தூய்மைக்காக இளைஞரின் மன்றாட்டு

எல்லாம் வல்லவரும், அனைத்தையும் காண்கிறவருமான இறைவா, என் ஆத்துமத்தை உமது திவ்விய இலட்சண சாயலாக உண்டாக்கினீரே, அதை நான் களங்கப்படுத்தாதபடி எனக்கு அனுக்கிரகம் செய்தருளும். நமது ஆலயத்தை யாதாமொருமன் அசுசிப்படுத்தினால் அவனைச் சிதைப்போம் என்று திருவுளம்பற்றினீரே,

சுவாமி ! உமது அருள் வாக்கின்படியே என் உடலே உமது தேவாலயமாயிற்று, இதிலே உமது திருவருளினால் தேவரீருடைய பரிசுத்த ஆவியார் உறைந்திடத் திருவுளம் கொண்டது மன்றி அநேக முறை உம்முடைய திருக்குமாரனுமாகி இயேசுநாதரும் தேவநற்கருணை வழியாக எழுந்தருளி வந்து இதனை அர்ச்சித்தருளினார். ஆகையால் தூய்மையின் உருவான இறைவா, உமக்குச் சொந்தமாகிய இத்தேவாலயத்தில் தேவரீர் மிகுந்த அருவருப்புடனே வெறுக்கிற பாவ அக்கிரமங்களை வரவிடாதேயும். தூய்மைக்கு விரோதமான ஓர் அர்ப்ப மாசும் என் ஆத்துமத்திலாவது உடலிலாவது உண்டாகாதபடி கிருபை செய்தருளும். என் திவ்விய இரட்சகரான இயேசுவே ! இந்த விலைமதியாத புண்ணியத்தை அனுசரிக்க உமது சிறப்பான உதவி வேண்டியிருக்கிறதினால், தூய்மையை விரும்புகிறவரும் கன்னியர்களுக்கு நிறைந்த தயையுள்ள அரசருமாகிய தேவரீர் பாதத்தில் இந்தத் தூய்மையான புண்ணியத்தைக் கேட்க வருகிறேன்.

உம்முடைய வரப்பிரசாதத்தினால் எத்தனையோ பேர்கள் இவ்வுலகில் தேவதூதர்களைப் போலத் தூயவர்களாய் நடந்தார்கள் ! அவர்களும் என்னைப் போலப் பலவீனர்களாகத்தானே இருந்தார்கள், ஆகையால் என் பலவீனத்தால் நான் தைரியமற்றுப்போக நியாயமில்லை. மனத்திடம் கொடுக்கிறவராகிய கர்த்தாவே ! தேவரீர் அவர்களை உறுதிப்படுத்தினது போல் என்னையும் தூய நெறியில் உறுதிப்படுத்தியருளும். அவர்களால் ஆனது போல் உம்மைக் கொண்டு எந்நாளும் எல்லா நலமும் ஆகக்கூடும். உமது தோத்திரத்துக்கும் என் இரட்ச்சணியத்துக்கும் விரோதியாகிய சத்துரு தன் சோதனையால் என்னை மயக்கி என் மீது வெற்றிக் கொண்டு விடாதபடி அடியேன் இடைவிடாமல் சுறுசுறுப்போடே வேண்டிக்கொள்ளவும், என் மேலே காவல் காத்து எச்சரிக்கையோடே நடக்கவும் தயைபுரியும். நான் என் புத்தி நினைவைத் திடமாய் ஒழுங்குபடுத்தி என் பொறிகள் ஐந்தினையும் எந்நேரமும் அடக்கிப் பாவ சமயங்களையெல்லாம் தைரியமாக விலக்கி என்னை அசுத்தப்படுத்துவதானன எல்லாவற்றையும் மகா அருவருட்னே ஆலோசித்து ஓர் அர்ப்பக் குற்றத்தின் சாயலுக்கு முதலாய் அஞ்சி நுணுக்கமான பக்தியுடன் சுமித்திரையாய் நடந்து மிகப் புச்சியமும் மழுங்குவதற்கு எளிதுமாகிய இந்தப் புண்ணியத்தைப் பழுதில்லாமல் காப்பாற்ற அனுக்கிரகம் செய்தருளும்.

தூய்மைக்கு இருப்பிடமாகிய கன்னித் தாயே, எனக்கு அடைக்கலமாயிரும். அடியேனுக்காக உம்முடைய திருக்குமாரனை மன்றாடியருளும். என் காவல் தூதரே, சோதனையில் என்னைக் கைவிடாமல் காத்தருளும். - ஆமென்.

இயேசுநாதருடைய திரு இருதயத்திற்கு மனுக்குலத்தை ஒப்புக்கொடுக்கும் செபம்

ஓ! மிகவும் மதுரம் நிறைந்த இயேசுவே! மனுக்குலத்தின் இரட்சகரே! உமது பீடத்தின் முன்பாக சாஷ்டாங்கமாய் விழுந்து கிடக்கும் அடியோர்கள் பேரில் உமது கண்களைத் திருப்பியருளும். நாங்கள் தேவரீர்க்குச் சொந்தமானவர்கள்@ உமக்கு சொந்தமானவர்களாகவே இருக்கும்படி ஆசையாய் இருக்கிறோம். இன்னும் அதிக உண்மையாய் தேவரீரோடு ஒன்றித்திருக்கத்தக்கதாக உங்களில் ஒவ்வொருவரும் எங்கள் மனதார எங்களை இன்றைக்கு உம்முடைய திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுக்கிறோம்.

சுவாமி! மனிதர்களுக்குள்ளே அனேகர் தேவரீரை ஒருபோதும் அறிந்ததேயில்லை@ வேறே அநேகர் உம்முடைய கற்பனைகளை நிந்தித்துப் பழிநத்து உம்மை வேண்டாமென்று தள்ளிப்போட்டார்கள். ஓ! மகா தயாளம் நிறைந்த இயேசுவே! இவர்கள் எல்லார்பேரிலும் இரக்கமாயிரும்@ இவர்கள் எல்லாரையும் உமது திரு இருதயத்தருகில் இழுத்தருளும். ஆண்டவரே! உம்மை விட்டு ஒருபோதும் பிரியாமல், என்றும் பரமாணிக்கமாயிருக்கும் விசுவாசிகளான கிறிஸ்துவர்களுக்கு மாத்திரமேயன்றி, உம்மை விட்டுப் பிரிந்து போன ஊதாரிப்பிள்ளைகளுக்கும் தேவரீர் இராஜாவாக இருப்பீராக@ இவர்கள் எல்லாரும் பசியாலும் துன்பத்தாலும் வருந்திச் சாகாதபடி தங்கள் தகப்பன் வீட்டுக்குச் சீக்கிரத்தில் வந்து சேரும்படி கிருபை செய்வீராக! அபத்தப் பொய்க் கொள்கைகளால் ஏமாந்துபோய் இருப்பவர்களுக்கும், விரோதத்தால் விலகியிருப்பவர்களுக்கும் தேவரீர் இராஜாவாயிருப்பீராக@ எங்கும் ஒரே மேய்ப்பனும் ஒரே மந்தையும் இருக்கும்படி, இவர்கள் எல்லாரையம் சத்தியத்தின் துறைமுகத்திற்கும், விசுவாசத்தின் ஒருமைப்பாட்டிற்கும் அழைத்துக் கூட்டிச் சேர்த்தருளும்.

ஆண்டவரே! உம்முடைய திருச்சபையை தீமையிலிருந்து பாதுகாத்து திண்ணமான சுயாதீனத்தை அதற்குக் கட்டளையிட்டருளும். சகல நாட்டு மக்களுக்கும் ஒழுங்குக் கிரமத்தையும் சமாதனத்தையும் தந்தருளும். இப் பூமியில் ஒருகோடி முனைமுதல் மறுகோடி முனை மட்டும் ஒரே குரலில் சத்தமாய், "நமக்கு இரட்சணியம் கொண்டுவந்த திவ்விய இருதயத்துக்கு தோத்திரம் உண்டாவதாக, மகிமையும் வணக்கமும் சதாகாலமும் வருவதாக" என்ற புகழ் விடாது சப்தித்து ஒலிக்கக் கடவது. - ஆமென்.

இயேசுவின் திரு இருதயத்திற்கு குடும்பங்களை ஒப்புக்கொடுக்கின்ற செபம்

இயேசுவின் திரு இருதயமே! கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு தேவரீர் செய்துவரும் சகல உபகாரங்களையும், சொல்லமுடியாத உமது நன்மைத்தனத்தையும் நினைத்து நன்றியறிந்த பட்சத்தோடு உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்துகிடக்கிறோம்.

நேசமுள்ள இயேசுவே! எங்கள் குடும்பங்களிலுள்ள சகலரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். தேவரீர் எங்களை ஆசீர்வதித்து இப்போதும் எப்போதும் உம்முடைய திருஇருதய நிழலில் இளைப்பாறச் செய்தருளும்.
தவறி எங்களில் எவரேனும் உமது இருதயத்தை நோகச்செய்திருந்தால் அவர் குற்றத்திற்கு நாங்களே நிந்தைப் பரிகாரம் செய்கிறோம். உமது திருஇருதயத்தை பார்த்து எங்கள் பரிகாரத்தை ஏற்றுக்கொண்டு அவருக்கு கிருபை செய்தருளும்.

இதுவுமின்றி உலகத்திலிருக்கும் சகல குடும்பங்களுக்காகவும் மன்றாடுகிறோம். பலவீனர்களுக்கு பலமும், விருந்தாப்பியர்களுக்கு ஊன்றுகோலும், விதவைகளுக்கு ஆதரவும், அனாதைப் பிள்ளைகளுக்கு, தஞ்சமுமாயிருக்கத் தயைபுரியும். ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள் அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டிலும் தேவரீர் தாமே விழித்துக் காத்திருப்பீராக.
இயேசுவின் இரக்கமுள்ள திருஇருதயமே! சிறுபிள்ளைகளை எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தீரே. இந்த விசாரணையிலுள்ள சகல பிள்ளைகளையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். அவர்களை ஆசீர்வதியும். அவர்களுடைய இருதயத்தில் விசுவாசத்தையும், தெய்வ பயத்தையும் வளரச்செய்யும். ஜீவிய காலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும் மரண சமயத்தில் ஆறுதலாகவும் இருக்க மன்றாடுகிறோம். திவ்விய இயேசுவே! முறை முறையாய் உமது திருச்சிநேகத்தில் ஜீவித்து, மரித்து நித்திய காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாறக் கிருபை புரிந்தருளும். - ஆமென்

இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன்.
இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன்.
இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன்.