பொதுக்காலம் 2-ம் ஞாயிறு (இரண்டாம் ஆண்டு)15-01-2012


முன்னுரை:  புத்தொளி வீசிட, புதுமணம் கமழ்ந்திட புதிய நாள் பிறந்தது, இறைவனின் அருளை இறைபலியினில் பெறவே புனித நாள் புலர்ந்தது.
இறைவனின் திருக்கூட்டமே இன்று நாம் பொதுக்காலம் 2ம் ஞாயிறை சிறப்பிக்கிறோம். இன்றைய இறைவார்த்தை பகுதிகள் நமக்கு வெளிப்படுத்தும் மையக்கருத்து யாதெனில் நாம் அனைவரும் இறைவனின் ஆலயம் என்பதாகும்.

அன்று, இறைநம்பிக்கை கொண்டவர்கள் இயேசு இருந்த இடத்தை பார்த்தார்கள், அவரோடு தங்கினார்கள், இறைசீடர்களாக மாறினார்கள். இன்று, இறைவனுடைடய இறைகுலமாய், இருக்கும் நாமும் இறைவனை நமது உள்ளத்தில் ஏந்தி, இறைசீடர்களாக உருமாற அருள் வேண்டி இந்த இறை உறவு பலியிலே பங்கெடுப்போம்.  இறையாசீர் பெற்றுக் கொள்வோம்.

முதல் வாசக முன்னுரை:  இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் சாமுவேலோடு  உரையாடுவதை வெளிப்படுத்துகிறது. இந்த இறை-மனித உரையாடலின் உச்சக்கட்டம், ‘ஆண்டவரே பேசும் அடியேன் கேட்கிறேன்’ என்று சாமுவேல் பணிவுடன் கூறுகிறார்.இந்த இறைபலியிலே இறைவார்த்தை வழியாக இறைவன் நம்மோடு உரையாடப் போகிறார். இதற்கு நாம் என்ன பதில் தரப்போகிறோம் என்று சிந்தித்தவர்களாய் வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இறைவாக்கினர் சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் (1சாமு.3:3-10,19)

கடவுளின் விளக்கு இன்னும் அணையவில்லை. கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் இல்லத்தில் சாமுவேல் படுத்திருந்தார்.அப்போது ஆண்டவர் ' சாமுவேல் ' என்று அழைத்தார். அதற்கு அவன் 'இதோ! அடியேன்' என்று சொல்லி, ஏலியிடம் ஓடி, இதோ! அடியேன் என்னை அழைத்தீர்களா? என்று கேட்டான். அதற்கு அவர் 'நான் அழைக்கவில்லை. திரும்பிச் சென்று படுத்துக்கொள்' என்றார். அவனும் சென்றுபடுத்துக் கொண்டான்.ஆண்டவர் மீண்டும் 'சாமுவேல்' என்று அழைக்க, அவன் ஏலியிடம் சென்று, 'இதோ அடியேன். என்னை அழைத்தீர்களா? ' என்று கேட்டான். அவரோ 'நான் அழைக்கவில்லை மகனே! சென்று படுத்துக்கொள்' என்றார். சாமுவேல் ஆண்டவரை இன்னும் அறியவில்லை. அவனுக்கு ஆண்டவரின் வார்த்தை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. மூன்றாம் முறையாக ஆண்டவர் 'சாமுவேல்' என்று அழைத்தார். அவன் எழுந்து ஏலியிடம் சென்று 'இதோ அடியேன். என்னை அழைத்தீர்களா? 'என்று கேட்டான். அப்பொழுது சிறுவனை ஆண்டவர் தாம் அழைத்தார் என்று ஏலி தெரிந்துகொண்டான். பின்பு ஏலி சாமுவேலை நோக்கி சென்று படுத்துக்கொள். உன்னை அவர் மீண்டும் அழைத்தால் அதற்கு நீ 'ஆண்டவரே பேசும் உம் அடியேன் கேட்கிறேன் ' என்று பதில் சொல் ' என்றார். சாமுவேலும் தம் இடத்திற்குச் சென்று படுத்துக் கொண்டான்.அப்போது ஆண்டவர் வந்து நின்று, 'சாமுவேல் ' சாமுவேல் ' என்று முன்பு போல் அழைத்தார். அதற்கு சாமுவேல்'பேசும், உம் அடியேன் கேட்கிறேன் ' என்று மறு மொழி கூறினான்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

இரண்டாம் வாசக முன்னுரை:  இவ்வாசகத்தில் திருத்தூதர் பவுல்  உடல் இறை ஆலயம், இறைமக்கள் ஒவ்வொரும் தூய ஆவியானவரின் ஆலயம் என்பதையும், இந்த ஆலயத்தை சார்ந்த உடல் உறுப்புகள் கிறிஸ்துவின் உறுப்புகள் என்பதை வலியுறுத்தி உடல் சார்ந்த பாவத்தை விளக்க அறிவுரை கூறுகிறார். கவனமுடன் வாசகத்திற்கு செவிமடுப்போம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் (1 கொரி 6:13-15,17-20)

'வயிற்றுக்கென்றே உணவு, உணவுக்கென்றே வயிறு. ' இவை இரண்டையுமே கடவுள் அழித்து விடுவார். உடல் பரத்தைமைக்கு அல்ல, ஆண்டவருக்கே உரியது. ஆண்டவரும் உடலுக்கே உரியவர். ஆண்டவரை உயிர்த்தெழச் செய்த கடவுள் தம் வல்லமையால் நம்மையும் உயிர்த்தெழச் செய்வார். உங்கள் உடல்கள் கிறிஸ்துவின் உறுப்புகள் என்று தெரியாதா? கிறிஸ்துவின் உறுப்புகளை எடுத்து ஒரு விலை மகளின் உறுப்புகளாகும்படி நான் செய்யலாமா? கூடவே கூடாது. ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார். எனவே பரத்தைமையை விட்டு விலகுங்கள். மனிதர் செய்யும் எப்பாவமும் உடலுக்குப் புறம்பானது. ஆனால் பரத்தைமையில் ஈடுபடுவோர் தம் சொந்த உடலுக்கு எதிராகவே பாவம் செய்கின்றனர். உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவியார் தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல. கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

நற்செய்தி வாசகம்: 
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (1:35-42)

மறு நாள் யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் அங்கு நின்று கொண்டிருந்தார்.இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, 'இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி' என்றார். அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர். இயேசு திரும்பிப் பார்த்து 'அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு, 'என்ன தேடுகிறீர்கள்? ' என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், 'ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்? ' என்று கேட்டார்கள்.அவர் அவர்களிடம், 'வந்து பாருங்கள்' என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள். யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர்.அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, 'மெசியாவைக் கண்டோம்' என்றார். 'மெசியா' என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள். பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, 'நீ யோவானின் மகன் சீமோன். இனி 'கேபா ' எனப்படுவாய் என்றார். 'கேபா' என்றால் 'பாறை ' என்பது பொருள்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

மன்றாட்டுக்கள்: 
  1. நல்ல ஆயனே, எங்களை வழிநடத்த நீர் தேர்ந்தெடுத்த திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் உமக்கு என்றும் பணிசெய்து, தாங்கள் பெற்றுக் கொண்ட கொடைகளுக்கு நன்றியுள்ளவர்களாக திகழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. உன்னத தேவனே, எங்களை ஆள நாங்கள் தேர்ந்தெடுத்த தலைவர்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். கைம்மாறு எதிர்பாராமல் உழைக்கும் வரத்தை அவர்களுக்கு தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. அன்பின் இறைவா, எம் பங்கில் உள்ள அனைத்து குடும்பங்களையும், குழுக்களையும் நினைத்து உமக்கு நன்றி கூறுகின்றோம். இவற்றில் நாங்கள் வேற்றுமைகளை களைந்து, உம்மோடு இணைந்து நலமுடன் வாழ வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. சிறார்களை நேசிக்கும் இறைவா, எம் பங்கின் சிறுவர், சிறுமியரை நினைத்து உமக்கு நன்றி கூறுகின்றோம். பிள்ளைகளின் வளர்ச்சியில் பெற்றோரும், நாங்களும் துணைபுரியவும், அவர்களுக்கு தேவையான கல்வி ஞானத்தை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  No comments:

  Post a Comment