விவிலியச் சிலுவை பாதை (Biblical Stations of the Cross)
தொடக்க செபம்
முதல்வர்: தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே, ஆமென்!
எல்லோரும்: இரக்கத்தின் ஊற்றே இறைவா, உம் திருமகன் இயேசுவின் பாடுகளையும் இறப்பையும் நாங்கள் நினைவுகூர்கின்றோம். அவர் நடந்துசென்ற சிலுவையின் பாதையில் அவரைப் பின்சென்று நடந்திட நாங்கள் வந்துள்ளோம். இறுதிவரை இயேசுவின் உண்மைச் சீடராக நாங்கள் வாழ வரமருள வேண்டுமென்று உம்மை இறைஞ்சி மன்றாடுகின்றோம். ஆமென்!
(திருச்சிலுவைப் பாதையின் ஒவ்வொரு தளத்தின் தொடக்கத்திலும் இறுதியிலும் கீழ்வரும் செபங்களைச் சொல்லவும்)
தொடக்கத்தில்:
முதல்வர்: இயேசுவே, உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
எல்லோரும்:ஏனெனில், உமது திருச்சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
இறுதியில்: (பரலோகத்தில்; அருள்நிறைந்த; பிதாவுக்கும்)
முதல்வர் மற்றும் எல்லோரும்: எங்கள்மேல் இரக்கமாயிரும், ஆண்டவரே, எங்கள்மேல் இரக்கமாயிரும்!
இறந்த விசுவாசிகள் அனைவரின் ஆன்மாக்களும் முடிவில்லா அமைதியில் இளைப்பாறுவனவாக! ஆமென்!
1. இயேசு சாவுக்குக் கையளிக்கப்படுகிறார்
விவிலியச் சிந்தனை (மத்தேயு 27:1-2, 22-24, 26)
பொழுது விடிந்ததும் தலைமைக் குருக்கள், மக்களின் மூப்பர்கள் யாவரும் இயேசுவைக் கொல்ல அவருக்கு எதிராக ஆலோசனை செய்தனர். அவரைக் கட்டி இழுத்துச் சென்று ஆளுநன் பிலாத்திடம் ஒப்புவித்தனர். பிலாத்து அவர்களிடம், “அப்படியானால் மெசியா என்னும் இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். அனைவரும், “சிலுவையில் அறையும்” என்று பதிலளித்தனர். அதற்கு அவன், “இவன் செய்த குற்றம் என்ன?” என்று கேட்டான். அவர்களோ, “சிலுவையில் அறையும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள். பிலாத்து தன் முயற்சியால் பயனேதும் ஏற்படவில்லை, மாறாகக் கலகமே உருவாகிறது என்று கண்டு, கூட்டத்தினா¢ன் முன்னிலையில் தண்ணீரை எடுத்து, “இவனது இரத்தப்பழியில் எனக்குப் பங்கில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறித் தன் கைகளைக் கழுவினான். அப்போது அவன் பரபாவை அவர்கள் விருப்பத்திற்கிணங்க விடுதலை செய்தான்; இயேசுவைக் கசையால் அடித்துச் சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான்.
செபம்: எங்கள் அன்பு இயேசுவே! யாதொரு குற்றமோ பாவமோ அறியாத உம்மைச் சாவுக்குத் தீர்ப்பிட்டார்கள். வாழ்வும், வழியும், உண்மையுமான உம்மையே நாங்கள் பின்பற்றவும், தவறான தீர்ப்பு வழங்காதிருக்கவும் எங்களுக்கு அருள்தாரும். ஆமென்!
2. இயேசுவின் தோள்மேல் சிலுவையைச் சுமத்துகிறார்கள்
விவிலியச் சிந்தனை (மத்தேயு 27:27-31)
ஆளுநனின் படைவீரர் இயேசுவை ஆளுநன் மாளிகைக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்த படைப்பிரிவினர் அனைவரையும் அவர்முன் ஒன்று கூட்டினர்; அவருடைய ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தனர். அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மேல் வைத்து, அவருடைய வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு, “யூதரின் அரசரே, வாழ்க!” என்று சொல்லி ஏளனம் செய்தனர்; அவர்மேல் துப்பி, அக்கோலை எடுத்து அவருடைய தலையில் அடித்தனர்; அவரை ஏளனம் செய்தபின், அவர்மேல் இருந்த தளர் அங்கியைக் கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக இழுத்துச் சென்றனர்.
செபம்: அன்பு இயேசுவே! உம்மேல் சுமத்தப்பட்ட சிலுவை எங்கள் பாவங்களின் விளைவு என்பதை உணர்கின்றோம். யார்மீதும் அநியாயமாகப் பழிசுமத்தாமல் இருக்கவும், எங்கள் வாழ்வில் வருகின்ற துன்பங்கள் என்னும் சிலுவையைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்ளவும் எங்களுக்கு அருள்தாரும். ஆமென்!
3. இயேசு முதல் முறை கீழே விழுகிறார்
விவிலியச் சிந்தனை (புலம்பல் 1:14, 16-17)
என் குற்றங்கள் என்னும் நுகம் அவர் கையால் பூட்டப்பட்டுள்ளது; அவை பிணைக்கப்பட்டு, என் கழுத்தைச் சுற்றிக் கொண்டன; அவர் என் வலிமையைக் குன்றச் செய்தார்; நான் எழ இயலாதவாறு என் தலைவர் என்னை அவர்கள் கையில் ஒப்புவித்தார். இவற்றின் பொருட்டு நான் புலம்புகின்றேன்; என் இரு கண்களும் கண்ணீரைப் பொழிகின்றன; என் உயிரைக் காத்து ஆறுதல் அளிப்பவர் எனக்கு வெகு தொலையில் உள்ளார்; பகைவன் வெற்றி கொண்டதால் என் பிள்ளைகள் பாழாய்ப் போயினர். சீயோன் தன் கைகளை உயர்த்துகின்றாள்; அவளைத் தேற்றுவார் யாருமில்லை; சூழந்து வாழ்வோர் யாக்கோபுக்கு எதிரிகளாயிருக்குமாறு ஆண்டவர் கட்டளையிட்டார்; எருசலேம் அவர்களிடையே தீட்டுப்பொருள் ஆயிற்று.
செபம்: அன்பு இயேசுவே! சிலுவையின் பாரத்தால் நீர் முகம் குப்புறக் கீழே விழுந்தீர். துன்ப துயரங்களின் சுமையால் வாடுகின்ற மக்களைக் கனிவோடு கண்ணோக்கிட எங்களுக்கு அருள்வீராக. ஆமென்!
4. இயேசு தம் தாயைச் சந்திக்கிறார்
விவிலியச் சிந்தனை (புலம்பல் 2:13, 15, 18)
மகளே! எருசலேம்! உன் சார்பாக நான் என்ன சொல்வேன்? உன்னை எதற்கு ஒப்பிடுவேன்? மகள் சீயோனே! கன்னிப் பெண்ணே! யாருக்கு உன்னை இணையாக்கித் தேற்றுவேன் உன்னை? உன் காயம் கடலைப்போல் விரிந்துள்ளதே! உன்னைக் குணமாக்க யாரால் முடியும்? அவ்வழியாய்க் கடந்து செல்வோர் உன்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தனர்! மகள் எருசலேமை நோக்கித் தலையை ஆட்டிச் சீழ்க்கையடித்தனர்! “அழகின் நிறைவும் மண்ணுலகின் மகிழ்ச்சியுமாக இருந்த மாநகர் இதுதானா?” என்றனர். அவர்களின் இதயம் என் தலைவனை நோக்கிக் கூக்குரலிடுகின்றது; மகள் சீயோனின் மதிலே! இரவும் பகலும் வெள்ளமெனக் கண்ணீர் பொழி! உனக்கு ஓய்வு வேண்டாம்! கண்ணீர் விடாமல் நீ இருக்க வேண்டாம்!
செபம்: அன்பு இயேசுவே! உம்மை ஈன்றெடுத்த அன்னை மரியா உம் துன்பங்களைக் கண்டு மனமுடைந்தார். அந்த அன்னையின் அரவணைப்பில் நாங்கள் என்றும் மகிழ்வுகொள்ள அருள்வீராக. ஆமென்!
5. இயேசுவின் சிலுவையைச் சுமக்க சீமோன் உதவிசெய்கிறார்
விவிலியச் சிந்தனை (லூக்கா 23:26)
அவர்கள் இயேசுவை இழுத்துச் சென்று கொண்டிருந்தபோது சிரேன் ஊரைச்சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்துகொண்டிருந்தார். அவர்கள் அவரைப் பிடித்து அவர்மேல் இயேசுவின் சிலுவையை வைத்து, அவருக்குப்பின் அதைச் சுமந்து கொண்டுபோகச் செய்தார்கள்.
(மத்தேயு 16:24)
பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்” என்றார்.
(மத்தேயு 11:29-30)
இயேசு, “நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” என்றார்.
செபம்: அன்பு இயேசுவே! கடின சிலுவையை நீர் சுமந்துசெல்ல சீமோன் என்பவர் துணைசெய்தார். எங்கள் சகோதரர் சகோதரிகளின் துன்பங்களைப் பகிர்ந்துகொண்டு, அவர்களின் சிலுவைப் பாரத்தைக் குறைத்திட எங்களுக்குத் துணைசெய்வீராக. ஆமென்!
6. வெரோணிக்கா இயேசுவின் திருமுகத்தைத் துடைக்கிறார்
விவிலியச் சிந்தனை (மத்தேயு 25:37-40)
அதற்கு நேர்மையாளர்கள் “ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்?
எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம்?” என்று கேட்பார்கள்.
அதற்கு அரசர், “மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்” எனப் பதிலளிப்பார்.
செபம்: அன்பு இயேசுவே! வியர்வையாலும் இரத்தத்தாலும் கறைபட்ட உம் திருமுகத்தை ஒரு பெண்மணி அன்போடு துடைத்து உமக்கு ஆறுதலளித்தார். எங்கள் வீட்டிலும் நாட்டிலும் உலகிலும் கவலையால் வாடும் அனைவரின் துன்பங்களையும் துடைத்திட எங்களுக்கு அருள்வீராக. ஆமென்!
7. இயேசு இரண்டாம் முறை கீழே விழுகிறார்
விவிலியச் சிந்தனை (எசாயா 53:3-6)
அவர் இகழப்பட்டார்; மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்; வேதனையுற்ற மனிதராய் இருந்தார்; நோயுற்று நலிந்தார்; காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார்; அவர் இழிவுபடுத்தப்பட்டார்; அவரை நாம் மதிக்கவில்லை. மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்; நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும் சிறுமைப்படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம். அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம். ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம்; நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்; ஆண்டவரோ நம்அனைவா¢ன் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார்.
செபம்: அன்பு இயேசுவே! சிலுவையின் பாரம் உம் தோள்களை அழுத்தியதால் நீர் மீண்டும் ஒருமுறை கீழே விழுந்தீர். ஆனால் மன உறுதியோடு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தீர். நாங்களும் ஏமாற்றத்தையும் தோல்வியையும் கண்டு துவழ்ந்துவிடாமல் துணிந்து எழுந்து, உம்மேல் நம்பிக்கைவைத்து முன்னேறிச் சென்றிட அருள்வீராக. ஆமென்!
8. எருசலேம் மகளிருக்கு இயேசு ஆறுதல் கூறுகிறார்
விவிலியச் சிந்தனை (லூக்கா 23:27-28)
பெருந்திரளான மக்களும் அவருக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்த பெண்களும் அவர் பின்னே சென்றார்கள். இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி, “எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழவேண்டாம்; மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள்” என்றார்.
(திருத்தூதர் பணிகள் 21:13)
அதற்குப் பவுல் மறுமொழியாக, “நீங்கள் அழுது ஏன் என் உள்ளத்தை உடைக்கிறீர்கள்? நான் ஆண்டவர் இயேசுவின் பெயருக்காக எருசலேமில் கட்டப்படுவதற்கு மட்டுமல்ல, சாவதற்கும் தயார்” என்றார்.
செபம்: அன்பு இயேசுவே! உமக்கு நேர்ந்த சொல்லற்கரிய துன்பத்தையும் பாராமல் நீர் பிறருக்கு ஆறுதல் கூறினீர். தன்னலம் பாராது பிறர்நலம் நோக்கவும், துன்புறுவோருக்கு ஆறுதல் கூறவும் எங்களுக்கு நல்மனத்தைத் தந்து, தூய வழியில் நாங்கள் நடந்திட அருள்வீராக. ஆமென்!
9. இயேசு மூன்றாம் முறை கீழே விழுகிறார்
விவிலியச் சிந்தனை (திருப்பாடல்கள் 22:1; 40:11-13)
இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும் ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்?ஸ ஆண்டவரே, உமது போ¢ரக்கத்தை எனக்குக் காட்ட மறுக்காதேயும்; உமது பேரன்பும் உண்மையும் தொடர்ந்து என்னைப் பாதுகாப்பனவாக! ஏனெனில் எண்ணிறந்த தீமைகள் எனைச் சூழ்ந்து கொண்டன; என் குற்றங்கள் என்மீது கவிந்து என் பார்வையை மறைத்துக்கொண்டன. அவை என் தலைமுடிகளைவிட மிகுதியானவை; என் உள்ளம் தளர்ந்து என்னைக் கைவிட்டது. ஆண்டவரே, என்னை விடுவிக்க மனமிசைந்தருளும்; ஆண்டவரே, எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்.
செபம்: அன்பு இயேசுவே! மீண்டும் மீண்டும் கீழே விழுந்ததால் உம் உடல் எல்லாம் இரத்தமயமாயிற்று. எங்கள் பாவங்களுக்காக நீர் நொறுக்கப்பட்டீர். எங்கள் சிந்தனை, சொல், செயல் அனைத்திலும் நாங்கள் தூய்மையோடு வாழவும், பாவத்தை வெறுத்து, உம் அன்பில் எந்நாளும் வளரவும் எங்களுக்கு அருள்வீராக. ஆமென்!
10. இயேசுவின் ஆடைகள் களையப்படுகின்றன
விவிலியச் சிந்தனை (யோவான் 19:23-24)
இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின் படைவீரர் அவருடைய மேலுடைகளை நான்கு பாகமாகப் பிரித்து ஆளுக்கு ஒரு பாகம் எடுத்துக் கொண்டார்கள். அங்கியையும் அவர்களே எடுத்துக்கொண்டனர். அந்த அங்கி மேலிருந்து கீழ்வரை தையலே இல்லாமல் நெய்யப்பட்டிருந்தது. எனவே அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி, “அதைக் கிழிக்க வேண்டாம். அது யாருக்கும் கிடைக்கும் என்று பார்க்கச் சீட்டுக் குலுக்கிப் போடுவோம்” என்றார்கள். “என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து என் உடைமீது சீட்டுப் போட்டார்கள்” என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது.
செபம்: அன்பு இயேசுவே! உம் உடைகளைக் களைந்தவர்கள் உம்மை அவமானத்திற்கு உள்ளாக்கினார்கள். வறுமை, அரசியல் அடக்குமுறை, அதிகாரப்பாணி போன்ற அவலங்களால் மனித உரிமையும் மாண்பும் உரியப்பட்டு நிர்வாணமாக்கப்படுகின்ற எம் சகோதரர் சகோதரியரை நினைத்துப் பார்க்கின்றோம். உம் உடன்பிறப்புகளாகிய அவர்களது மாண்பினைக் காத்துப் போற்றிட எங்களுக்கு அருள்வீராக. ஆமென்!
11. இயேசுவைச் சிலுவையில் அறைகிறார்கள்
விவிலியச் சிந்தனை (யோவான் 19:16-19,25)
அப்போது பிலாத்து அவரைச் சிலுவையில் அறையுமாறு அவர்களிடம் ஒப்புவித்தான். அவர்கள் இயேசுவைத் தம் பொறுப்பில் ஏற்றுக்கொண்டார்கள். இயேசு சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு “மண்டை ஓட்டு இடம்” என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் “கொல்கொதா” என்பது பெயர். அங்கே அவர்கள் இயேசுவையும் அவரோடு வேறு இருவரையும் சிலுவைகளில் அறைந்தார்கள்; அவ்விருவரையும் இரு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாக அறைந்தார்கள். பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் “நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்” என்று எழுதியிருந்தது. சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்றுகொண்டிருந்தனர்.
செபம்: அன்பு இயேசுவே! சிலுவையில் நீர் அறையப்பட்டபோது உம் கைகளையும் கால்களையும் ஆணிகளால் துளைத்தார்கள். உம் திருக்காயங்களால் நீர் எங்கள் காயங்களைக் குணமாக்கினீர். நீர் சிந்திய இரத்தத்தால் நாங்கள் கழுவப்பட்டுள்ளோம். அவமானச் சின்னமாகிய சிலுவையை நீர் மீட்பின் கருவியாக்கியதுபோல நாங்களும் எங்கள் துன்பதுயரங்களை உம் சிலுவையோடு இணைத்து உம் மீட்பின் பலன்களை இடைவிடாது துய்த்து அனுபவித்திட எங்களுக்கு அருள்வீராக. ஆமென்!
12. இயேசு சிலுவையில் உயிர்துறக்கின்றார்
விவிலியச் சிந்தனை (மத்தேயு 27:45-46, 50, 54)
நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று. மூன்று மணியளவில் இயேசு, “ஏலி, ஏலி லெமா சபக்தானி!” அதாவது, “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்!” என்று உரத்த குரலில் கத்தினார். இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர்விட்டார். நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்த யாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி, “இவர் உண்மையாகவே இறைமகன்” என்றார்கள்.
செபம்: அன்பு இயேசுவே! வானத்திற்கும் பூமிக்கும் இடையே நீர் சிலுவையில் தொங்கினீர். மனிதரைக் கடவுளின் பிள்ளைகளாக்கிட நீர் எம்மில் ஒருவராக மாறினீர். சிலுவையில் தொங்கியபோது நீர் உரைத்த சொற்களை நினைத்துப் பார்க்கிறோம். “தாகமாயிருக்கிறது” என்று கூறிய இயேசுவே, எங்கள் ஆன்ம தாகத்தை வளர்த்தருளும். “எல்லாம் நிறைவேறிற்று” என்று கூறி உயிர்நீத்த இயேசுவே, நாங்கள் கடவுளின் திருவுளத்தை இறுதிவரை நிலைத்துநின்று நிறைவேற்றிட அருள்தாரும். ஆமென்!
13. இயேசுவைச் சிலுவையிலிருந்து கீழே இறக்குகிறார்கள்
விவிலியச் சிந்தனை (யோவான் 19:38-40)
அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் இயேசுவின் சீடர்களுள் ஒருவர்; யூதருக்கு அஞ்சியதால் தம்மைச் சீடர் என்று வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாதவர். அவர் இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டுபோகப் பிலாத்திடம் அனுமதி கேட்டார். பிலாத்தும் அனுமதி கொடுத்தான். யோசேப்பு வந்து இயேசுவின் சடலத்தை எடுத்துக்கொண்டு போனார். முன்பு ஒருமுறை இரவில் இயேசுவிடம் வந்த நிக்கதேம் என்பவரும் அங்கு வந்து சேர்ந்தார். அவர் வெள்ளைப்போளமும் சந்தனத் தூளும் கலந்து ஏறக்குறைய முப்பது கிலோ கிராம் கொண்டுவந்தார். அவர்கள் இயேசுவின் உடலை எடுத்து யூத அடக்க முறைப்படி நறுமணப் பொருள்களுடன் துணிகளால் சுற்றிக் கட்டினார்கள்.
செபம்: அன்பு இயேசுவே! உயிரற்ற உம் சடலத்தை உம் அன்னை மரியா தம் மடியில் கிடத்தி அழுது புலம்பினார். அவரை எங்களுக்கு அன்னையாக அளித்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். எங்கள்மேல் கொண்ட எல்லையற்ற அன்பினால் நீர் எங்களுக்காக உயிர்துறந்தீர். உமது சாவு எங்களுக்கு வாழ்வு வழங்கிற்று. நாங்களும் உமது புகழ்ச்சிக்காகவும் பிறருடைய ஈடேற்றத்திற்காகவும் அயராது உழைத்திட அருள்வீராக. ஆமென்!
14. இயேசுவைக் கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள்
விவிலியச் சிந்தனை (யோவான் 19:41-42)
அவர் சிலுவையில் அறையப்பட்டிருந்த இடத்தில் ஒருதோட்டம் இருந்தது. அங்கே புதிய கல்லறை ஒன்று இருந்தது. அதில் அதுவரை யாரும் அடக்கம் செய்யப்படவில்லை. அன்று பாஸ்கா விழாவுக்கு ஆயத்த நாளாய் இருந்ததாலும் அக்கல்லறை அருகில் இருந்ததாலும் அவர்கள் இயேசுவை அதில் அடக்கம் செய்தார்கள்.
(லூக்கா 23:55-56)
கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த பெண்கள் பின்தொடர்ந்து சென்று கல்லறையைக் கண்டார்கள்; அவருடைய உடலை வைத்த விதத்தைப் பார்த்து விட்டு, திரும்பிப் போய் நறுமணப் பொருள்களையும் நறுமணத் தைலத்தையும் ஆயத்தம் செய்தார்கள். கட்டளைப்படி, அவர்கள் ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.
செபம்: அன்பு இயேசுவே! உமது உடல் கல்லறையில் வைக்கப்பட்டாலும் மண்ணோடு மண்ணாகி அழிந்துபோகவில்லை. நாங்களும் திருமுழுக்கின் வழியாக உம்மோடு கல்லறையில் அடக்கப்பட்டோம். பாவத்திற்கு இறந்தோம். ஆனால், நீர் புத்துயிர் பெற்று எழுந்ததுபோல எங்களுக்கும் ஆன்மீக வாழ்வு அளித்து, புதிய மனிதர்களாக வாழ நீர் வழிசெய்தீர். யாம் பெற்ற வாழ்வு இவ்வையகம் பெற்று மகிழ்ந்திட அருள்வீராக. ஆமென்!
15. இயேசு சாவினை வென்று உயிர்த்தெழுகின்றார்
விவிலியச் சிந்தனை (லூக்கா 24: 1-6)
வாரத்தின் ஆதல் நாள் விடியற் காலையிலேயே தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருள்களை எடுத்துக் கொண்டு அப்பெண்கள் கல்லறைக்குச் சென்றார்கள்; கல்லறை வாயிலிலிருந்து கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அவர்கள் உள்ளே நுழைந்தபோது அங்கே ஆண்டவர் இயேசுவின் உடலைக் காணவில்லை. அதைக் குறித்து அவர்கள் குழப்பமுற்றார்கள். அப்போது திடீரென, மின்னலைப் போன்று ஒளிவீசும் ஆடை அணிந்த இருவர் அவர்களுக்குத் தோன்றினர். இதனால் அப்பெண்கள் அச்சமுற்றுத் தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் அப்பெண்களை நோக்கி, “உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்? அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்” என்றனர்.
செபம்: அன்பு இயேசுவே! கடவுளின் ஆட்சியை இவ்வுலகில் கொணர நீர் வந்தீர். உமக்கு எதிராகச் செயல்பட்ட தீய சக்திகள் உமக்குக் கொலைத்தண்டனை விதித்தபோதிலும், நீர் சாவின்மீது வெற்றிகொண்டீர். எங்களைப் பாவத்தின் அடிமைத் தளையிலிருந்து விடுவித்து எங்களுக்குப் புதுவாழ்வு தந்தீர். உயிர்த்தெழுந்த ஆண்டவராகத் தந்தையின் வலம் அமர்ந்து எங்கள் அரசராக ஆட்சிசெய்கின்றீர். “உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்று வாக்குறுதி அளித்துள்ளீர். உமது அன்புச் சீடராக நாங்கள் வாழவும், நீர் சென்ற வழியில் நடக்கவும் எங்களுக்கு அருள்வீராக. ஆமென்.
(சிலுவைப் பாதையின் இறுதியில் நம் திருத்தந்தையின் கருத்துக்கள் நிறைவேறும்படி கிறிஸ்து கற்பித்த செபம், மங்கள் வார்த்தை செபம், திருத்துவப் புகழ் சொல்வோம். நம் பாவங்களுக்காக முழுமையாக மனம் வருந்துவோம். நற்கருணை விருந்தில் பங்கேற்போம். இவ்வாறு, இறையருள் துணையால் நம் ஆன்ம நலனுக்காக நாம் பரிபூரண பலன் பெறலாம். அதை இறந்தோருக்காகவும் ஒப்புக்கொடுக்கலாம்).
Please check and correct the ABOUT ME" in the right side of ur site. Something is overwritten that we are unable to read.Thanks dear Father.
பதிலளிநீக்குதரவிறக்கம் செய்யும் படி பதிவிட்டல் நலம்
பதிலளிநீக்கு