சம்மதமே இறைவா சம்மதமே தலைவா

சம்மதமே இறைவா சம்மதமே தலைவா- உன்
மாலையிலே ஒரு மலராகவும்
பாலையிலே சிறு மணலாகவும்
வாழ்ந்திட சம்மதமே இறைவா
மாறிட சம்மதமே
1.
தயங்கும் மனதுடைய நான் உனக்காகவே
உம் பணிக்காகவே வாழ்ந்திட வரம் அருள்வாய்(2)
கருவாக எனைப் படைத்து உயர்
கண்மணியாய் எனை வளர்த்து(2)
கரமதிலே உருப் பதித்து
கருத்துடனே என்னைக் காக்கின்றாய்

2.
மலையாய் நான் கணித்த பெருங்காரியமும்
உயர் காவியமும் மறைந்தே போனது(2)
திருவாக உனை நினைத்து உயர்
உறவாகவே நெஞ்சில் பதித்து(2)
உன் பெயரைச் சாற்றிடவே
நலம் தரவே என்னை அணைக்கின்றாய்

ஏழிசை நாதனே எழுவாய்

ஏழிசை நாதனே எழுவாய் இறை
அருளை என்னில் நீ பொழிவாய்
பல‌வரங்கள் தந்து எனைக் காப்பாய்
வழி காட்ட எழுந்து வருவாய்
1.
வாழ்வும் வழியும் நீ எனக்கு
வளங்கள் சேர்க்கும் அருமருந்து-2
உறவை வளர்க்கும் விருந்து -2- என்னில்
நிறைவை அளிக்கும் அருளமுது
பாடுவேன் பாடுவேன் பல சிந்து
பாரினில் வாழுவேன் உனில் இணைந்து-2

2.
விழியும் ஒளியும் நீ எனக்கு
விடியல் காட்டும் ஒளிவிளக்கு-2
மனிதம் வாழும் தெய்வம்-2- என்னில்
புனிதம் வளர்க்கும் நல் இதயம்
பாடுவேன் பாடுவேன் பல சிந்து
பாரினில் வாழுவேன் உனில் இணைந்து-2

உன் புகழை பாடுவது

உன் புகழை பாடுவது
என் வாழ்வின் இன்பமய்யா
உன் அருளை போற்றுவது
என் வாழ்வின் செல்வமய்யா
1.
துன்பத்திலும் இன்பத்திலும் -நல்
தந்தையாய் நீயிருப்பாய்
கண்ணயர காத்திருக்கும்- நல்
அன்னையாய் அருகிருப்பாய்
அன்பு என்னும் அமுதத்தினை நான்
அருந்திட எனக்களிப்பாய்
உன் நின்று பிரியாமல்
நீ என்றும் அணைத்திருப்பாய்-2

2.
பல்லுயிரை படைத்திருப்பாய்
நீ என்னையும் ஏன் படைத்தாய்
பாவத்திலே வாழ்ந்திருந்தும்
நீ என்னையும் ஏன் அழைத்தாய்
அன்பினுக்கு அடைக்கும் தாழ்
ஒன்று இல்லை என்றுணர்ந்தேன்
உன் அன்பை மறவாமல்
நான் என்றும் வாழ்ந்திருப்பேன்-2

அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்

அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்
நான் வாழ்ந்த பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்
நிரந்தரம் ....நிரந்தரம்.....நீயே நிரந்தரம்(2)
1.
தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்
நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்(2)
நிரந்தரம்...நிரந்தரம்.....நீயே நிரந்தரம்...(2)

2.
செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்
பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்
நினைவாழ்வு என்றும் நிஜமாவதில்லை நிரந்தரம்
அதன் விலையாக என்னை உன்னில் இணைப்பாய் நிரந்தரம்(2)
நிரந்தரம்....நிரந்தரம்.....நீயே நிரந்தரம்.....(2)

ஒளியாம் இறையே வாராய்

ஒளியாம் இறையே வாராய்
எளியோர் நெஞ்சம் தனிலே
ஒளியாம் இறையே வாராய்-2
1.
விண்ணில் வாழும் விமலா
மண்ணில் வாழும் மாந்தர்
உம்மில் என்றும் வாழ
‌எம்மில் எழுமே இறைவா
ஒளியே எழிலே வருக‌-2

2.
நீரும் மழையும் முகிலால்
பூவும் கனியும் ஒளியால்
உயிரும் உருவும் உம்மால்
வளமும் வாழ்வும் உம்மால் - ஒளியே

3.
அருளே பொங்கும் அமலா
இருளைப் போக்க வாராய்
குறையை நீக்கும் நிமலா
நிறையை வளர்க்க வாராய்- ஒளியே