தியான பாடல்

பல்லவி
என் தேடல் நீ என் தெய்வமே
நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதே
உன்னை மனம் தேடுதே நீ வழி காட்டுமே

அனுபல்லவி
இறைவா இறைவா வ‌ருவாய் இங்கே
இத‌ய‌ம் அருகில் அம‌ர்வாய் இன்றே
சரணம்
1.
ஒரு கோடி விண்மீன்க‌ள் தின‌ம் தோன்றினும்
நீயின்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும்
பிற‌ர் அன்பை என் ப‌ணியில் நான் ஏற்கையில்
உன் அன்பு உயிர் த‌ந்து வாழ்வாகிடும்
இறைவார்த்தையில் நிறை‌வாகுவேன்
ம‌றைவாழ்விலே நிலையாகுவேன்
வ‌ழிதேடும் எனைக் காக்க‌ நீ வேண்டுமே

2.
உன்னோடு நான் காணும் உற‌வான‌து
உள்ள‌த்தை உருமாற்றி உன‌தாக்கிடும்
ப‌லியான் உனை நானும் தின‌ம் ஏற்கையில்
எளியேனில் உன் வாழ்வு ஒளியாகிடும்
உன் மீட்ட‌லால் எனில் மாற்ற‌ங்க‌ள்
உன் தேட‌லால் எனில் ஆற்ற‌ல்க‌ள்
வ‌ழிதேடும் எனைகாக்க‌ நீ வேண்டுமே

வருகை பாடல்

அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம்
ஆனந்தமாய் புகழ்கீதம் என்றும் பாடுவோம்
அர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வளர்ந்திட‌
ஆசையோடு அருள் வேண்டி பணிகின்றோம் -அர்ச்சனை
1
தாயின் கருவிலே உருவாகும் முன்னரே
அறிந்து எங்களை தேர்ந்த தெய்வமே
பாவியாயினும் பச்சைப் பிள்ளையாயினும்
அர்ச்சித்திருக்கின்றீர் கற்பித்திருக்கின்றீர்
மனிதராக புனிதராக வாழ பணிக்கின்றீர்
பிறரும் வாழ எங்கள் வாழ்வை கொடுக்க அழைக்கின்றீர்
அஞ்சாதே என்று என்னைக்காத்து வருகின்றீர் - அர்ச்சனை

2
உமது வார்த்தையை எங்கள் வாயில் ஊட்டினீர்
உமது பாதையை எங்கள் பாதை ஆக்கினீர்
உமது மாட்சியை எங்கும் துலங்கச் செய்கின்றீர்
உமது சாட்சியாய் நாங்கள் விளங்கச் செய்கின்றீர்
அழித்து ஒழிக்க கவிழ்த்து வீழ்த்த திட்ட்ம் தீட்டினீர்
அஞ்சாதே என்று என்னைக்காத்து வருகின்றீர் - அர்ச்சனை

காணிக்கை பாடல்

காணிக்கை தந்தோம் தேவா-எம்மை
கனிவோடு கரம் தாங்கி ஏற்பாய்-2
எம் வாழ்விலே உம் கனவை வாழ‌-2
அருளாகி நிறைவாக தினந்தோறும் தாரும்
1
மனுவாக வந்தாய் மண் வாழ்விலே
நலமான இறையாட்சியே-2
மனித நலம் காக்க மாண்போடு வாழ‌-2
எம் உயர்வையும் பிறர் உயர்வையும்
உம் பாதம் வைத்தோம்(2)
இறைவா எங்கள் தலைவா
நிறைவாய் வரங்கள் தருவாய்-2

2
நலமாக எந்நாளும் உருவாகவே
நலம் காணும் நல்வாழ்விலே-2
சாதி சமயம் நீங்க சம வாழ்வு ஓங்க‌-2
எம் உணர்வையும் பிறர் உணர்வையும்
உம் பாதம் வைத்தோம்-2
இறைவா எங்கள் தலைவா
நிறைவாய் வரங்கள் தருவாய்(2)

மாதா பாடல்

அன்னை மாமரி எங்கள் அன்பின் தாய்மரி
என்றும் உந்தன் புகழைப் பாடுவோம்
தேடும் மாந்தரை தேற்றிக் காத்திடும்
உந்தன் அருள் வரங்கள் இன்று தேடினோம்
1
எண்ணிறந்த உதவிகளைப் பெற்றுத் தந்த நீ
எங்கள் வாழ்வில் உடனிருந்து காத்து வருகின்றாய்-2
நன்றிப் பூக்கள் ஒன்று சேர்த்தோம் உந்தன் பாதத்தில்
சகாயத் தாய் மரியே எம்மை
அரவணைத்திக் காப்பாய் நீயே

2
அண்ணல் இயேசு அன்பின் வழியைக் கற்றுத் தந்த உன்
அன்பு மிகு ஆதரவில் அச்சம் நீங்குதே-2
நன்றிப் பூக்கள் ஒன்று சேர்த்தோம் உந்தன் பாதத்தில்
சகாயத் தாய் மரியே எம்மை
அரவணைத்திக் காப்பாய் நீயே

மாதா பாடல்

அம்மா எங்கள் தாயே உனைப் பாடாத நாவில்லையே
அருகே நீயும் வரவே உனைத் தேடாத நாளில்லையே
அந்த மேலோக மண்ணிலா தாயாக என்னிலா பூலோகம் வந்த வெண்ணிலா
என்னைத் தேடி அம்மா
1
ஏழையின் கண்ணீர் இங்கு கரைந்தோடுதே
கான மழை நெஞ்சில் பொங்கி வழிந்தோடுதே
ஏந்தி வந்த சுமையெல்லாம் கனவாகுதே
சுகராகம் பாட எங்கள் மனம் தேடுதே
மரியே உன்னை அடைந்தோம் நெஞ்சம் நிறைந்தோம் அன்பிலே- அம்மா

2
கோடான கோடி மக்கள் குறை தீரவே
தின‌ந்தோறும் தேடி வ‌ரும் தாய் நீய‌ல்லோ
கூடிவ‌ந்து திருப்பாத‌ம் ச‌ர‌ணாவ‌தால்
ஆன‌ந்த‌ கான‌மிங்கு அலைபாயுதே
ம‌ல‌ரே ம‌ல‌ரும் நில‌வே உள்ள‌ம் ம‌கிழ்ந்தோம் உன்னிலே- அம்மா