கிறிஸ்துமஸ் பாடல் - மார்கழியில் உதித்த மன்னவனே

மார்கழியில் உதித்த மன்னவனே உன்
மகிமையைத் துறந்து மண்ணகம் வந்தாய்
மனிதத்தை இழந்த இம்மண்ணில் நீ
மனுவாய் மலர்ந்து விந்தையுமானாய்


1
வருந்தியே உழைத்தும் வறியவரானோர்
உண்மையில் நடந்தும் ஊர்பழி சுமந்தோர்
அன்புக்கு பணிந்து அவமானம் அடைந்தோர்
அவனியை மாற்ற அடி உதை ஏற்றோர்
இவர் நிலை மாற இறைமையை துறந்தாய்
மனுவுருவாகி மாண்பினைச் சொன்னாய்

2
புனிதத்தில் வாழ்ந்து மனிதத்தை மறந்தோர்
செல்வத்தில் திளைத்து செருக்குடன் வாழ்ந்தோர்
அரியணை ஏறி அடக்கியே ஆள்வோர்
அணு ஆயுதத்தால் அகிலத்தை அழிப்போர்
இவர் நிலை மாற இறைமையை துறந்தாய்
மனுவுருவாகி மாண்பினைச் சொன்னாய்

கிறிஸ்துமஸ் பாடல் - நமக்காய் ஒரு குழந்தை

நமக்காய் ஒரு குழந்தை- இந்த
நானிலம் தவழ்ந்தது
நலிந்த நிலை மாறும் என்னும்
நம்பிக்கை மலர்ந்தது
ஆராரோ கண்ணுறங்கு உந்தன் ஊரேதோ கண்ணுறங்கு
விண்ணகமோ மண்ணகமோ இல்லை
இரண்டும் உந்தன் பிறந்தகமோ


1
வானின் தூதர்களே இன்று
வாழ்த்து பாடுங்களேன்
விண்ணகத்தில் என்றும் மகிமைதான்- ஆனால்
மண்ணகத்தில் அமைதி எங்கே
மாடடை குடிலில் பிறந்தவனே இந்த
மானிடர் நடுவில் பிறந்தாலென்ன
‌ஆடுகளே மாடுகளே நீங்கள்
மாந்தரிலும் சிறந்தவரே

2
மாந்தர் மைந்தர்கள் யாம்- எங்கள்
வாழ்க்கை எண்ணுகின்றோம்
மனித மாண்பு என்னவென்று- முற்றும்
மறந்த கூட்டம் உண்டு இங்கு
மனிதனாய் பிறந்த இறைமகனே- எங்கள்
மான்பினை எமக்கு கூறாயோ
வறுமை நோய் பிளவுகள்- இனி
வாராதிருக்கச் செய்வாயோ

கிறிஸ்துமஸ் பாடல் - பெத்லகேம் நகரிலே

பெத்லகேம் நகரிலே பூபாள ராகம் ஒன்று கேட்குதா இங்கு கேட்குதா
இடையர்கள் வியந்திட வானதூதர் பாடும் கானம் கேட்குதா உனக்கு கேட்குதா
கனவான காலங்கள் நனவாகிட பாவங்கள் சாபங்கள் மறைந்தோடிட‌
இறைமகனும் பிறந்துவிட்டார் வாருங்களே பாருங்களே


1
வார்த்தை வடிவிலே தந்தையோடு இருந்தவர் -தூய
‌ஆவியாலே மனிதன் ஆனாரே
மழலை உருவிலே நம் மன்னன் வந்தாரே -அன்னை
கன்னிமரி மைந்தன் ஆனாரே(2)
இடையர்களும் பாலகனை கண்டு களிக்கின்றார்
வேந்தர் மூவர் வான்மலரை வணங்கி மகிழ்கின்றார்
வாருங்களே... பாருங்களே.... பலகனை ..- நம்

2
மனிதன் வாழவே ஆதி சாபம் நீங்கவே- ஏழை
அடிமைக் கோலம் பூண்டு வந்தாரே
தந்தை திருவுளம் ஏற்று தம்மைத் தாழ்த்தியே- இந்த
‌தரணி மீது மழலை ஆனாரே(2)
மாந்தரெல்லாம் வாழ்வு பெற மீட்பர் பிறந்துள்ளார்
மனித நேயம் மலர்ந்திடவே மன்னன் பிறந்துள்ளார்
வாருங்களே... பாருங்களே.... பலகனை ..- நம்

கிறிஸ்துமஸ் பாடல் - கருணைக் கடலே

கருணைக் கடலே! வா
துதித்த தயாபரா! வா
சுருதி மறையோர்க்கு
சுடரொளியே வா

|
அதோனாயீ ஆனந்தமே
ஆவலுடன் காத்திருக்கும்
அடிமைகளை சந்திக்க

||
எம்மான்வேல் ஏசு நாதர்
எங்கள் பாவதோஷம் தீர
ஏன் இன்னும் வரத்தாமதம்

|||
பேய் மயக்கு பாவ வழிப்
பீடையினால் வாடும் உந்தன்
பிள்ளைகளின் மேலிரங்கி

கிறிஸ்துமஸ் பாடல் - எந்தன் நெஞ்சுகுள்ளே

எந்தன் நெஞ்சுகுள்ளே நீ பிறக்க
எனக்கென்ன கவலை என் இறைவா - இனி
அச்சம் என்பது எனக்கில்லை
வழி எங்கும் தடையில்லை தலைவா -2
உந்தன் பிறப்பு சிறப்பு தருமே..ஆ...ஆ...
இறையரசு நனவாகுமே....ஆ....ஆ... -2
உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே -2
எந்தன் நெஞ்சுகுள்ளே -3 பிறக்கவா


|
பாதைகள் தெரியாமல் நான் திரிந்தேன்
வழிகாட்டிடும் விண்மீனாய் நீ பிறந்தாய்
உந்தன் கரமானது ஆ...ஆ...
எந்தன் துணையாகுமே...ஆ....ஆ....
உந்தன் கரமானது எந்தன் துணையாகுமே -உந்தன் வார்த்தை

||
வாழ்க்கையை இழந்து நான் திரிந்தேன்
நான் உன்னோடு என்று என்னில் மலர்ந்தாய்
உந்தன் உறவானது ....ஆ...ஆ....
உயிர் துணையாகுமே..ஆ...ஆ....
உந்தன் உறவானது உயிர் துணையாகுமே -உந்தன் வார்த்தை