மாதா பாடல்

அலையொளிர் அருணனை
அணிந்திடுமா மணிமுடி மாமரி நீ
வாழ்க்கையின் பேரரசி
வழுவில்லா மாதரசி
கலையெல்லாம் சேர்ந்தெழு தலைவியும் நீயல்லோ
காலமும் காத்திடுவாய்

அகால வேளையிலே அம்மா உன் கருணையாலே
பொல்லாத ஊழியின் தொல்லைகள் நீங்கிட‌
வல்ல உன் மகனிடம் கேள்

மாதா பாடல்

ஞானம் நிறை கன்னிகையே
நாதனைத் தாங்கிய ஆலயமே
மாண்புயர் ஏழு தூண்களுமாய்(2)
பலிப்பீடமுமாய் அலங்கரித்தாயே(2)

பாவ நிழலே அணுகா
பாதுகாத்தான் உனையே பரமன்
தாய் உதரம் நீ தரித்திடவே(2)
தனதோர் அமலன் தனமெனக் கொண்டார்(2)

வாழ்வோர் அனைவரின் தாயே
வானுலகை அடையும் வழியே
மக்கள் இஸ்ராயேல் தாரகையே(2)
வானோர் துதிக்கும் இறைவியே வாழி(2)

அப்பா பிதாவே

அப்பா பிதாவே (3) பிதாவே
1.
உம் தூய நாமம் வாழ்கவே
உம் தூய அரசு வருகவே
உம் அன்பு எம்மில் பெருகவே
உம் பண்பு எம்மில் வளரவே
2.
விண்ணக வாசிகள் வாழ்வது போல்
மண்ணக மாந்தரும் வாழ்ந்திடுக‌
உம் சித்தம் எம்மில் நிறைவேறுக‌
உம் திட்டம் எம்மில் பலன் தருக
3.
அன்றாட உணவைத் தந்தருளும்
ஆவியை எம்மேல் பொழிந்தருளும்
உம்திரு வாக்கை நல் உணவாக‌
உண்டு மகிழவே செய்தருளும்
4.
பிறர் குற்றம் நாங்கள் பொறுப்பது போல்
எம் குற்ற‌ம் நீரே பொறுத்த‌ருளும்
சோத‌னை நின்று நீர் காத்த‌ருளும்
சோதிக்கும் சாத்தானை விர‌ட்டி விடும்

அன்பின் தேவ நற்கருணையிலே

அன்பின் தேவநற் கருணையிலே
அழியாப் புகழோடு வாழ்பவரே
அன்புப் பாதையில் வழி நடந்தே
அடியோர் வாழ்ந்திட துணை செய்வீர்
1.
அற்புதமாக எமைப் படைத்தீர்
தற்பரன் நீரே எமை மீட்டீர்
பொற்புடன் அப்ப ரச குணத்தில்
எப்பொழுதும் வாழ் இறைவா நீர்
எத்தனை வழிகளில் உமதன்பை
எண்பித்தெமை நீர் ஆட்கொண்டீர்


2.
கல்வாரி மலையின் சிகரமதில்
கனிவுடன் தினம் எம்மை நிலை நிறுத்தும்
நல் கருணை விசுவாசமதில்
நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர்
இளமையின் பொலிவால் திகழ் திருச்சபையும்
யாவரும் வாழ தயை புரிவீர்.

இயேசுவே உன் வார்த்தை ஒன்றே ஆறுதல்

இயேசுவே உன் வார்த்தை ஒன்றே ஆறுதல்-2
இயேசுவே என் வாழ்க்கை காணும் தேறுதல்-2
பாசமே உன் நாமம் வாழ்வின் ஆனந்தம்-2
நேசமே உன் பார்வை நாறும் பேரின்பம்-2
ஆசையாய் நான் பாடுவேன் புது கீர்த்தனம்-2
துதிகளின் தேவனின் திருப்பெயர் பாடி
புகழ்வோம் மானிடரே
நல்லவர் தேவனின் வல்லமை பாடி
புகழ்வோம் மானிடரே
ஆறுதல் தேறுதல் இயேசுவே உன் வார்த்தை

I
வாய்மையும் நேர்மையும் எனக்கரணாகும்
என்னோடு நீ இருக்க 2
வாழ்விலும் தாழ்விலும் நம்பிக்கை ஆளும்
உன்னோடு நான் நடக்க
ஆழ்கடல் கடந்தேன் பாழ்வெளி நடந்தேன்
தோள்களில் சுமந்து சென்றீர் 2
பேரிடர் நேரம் பெருமழை காலம்
உயிரினைக் காத்து நின்றீர்-2
ஆண்டவரே என் ஒளியாகும் அவரே எனது மீட்பாகும்-2
உயிருக்கு அடைக்கலம் அவரிருக்க
யாருக்கு அஞ்சி நான் நடுங்க வேண்டும் 2
II
தீயோர் வளமுடன் வாழ்வதை கண்டு தினம்
மனம் வெதும்ப மாட்டேன்
காலடி சுவடுகள் கவனித்துக் கொள்வார்
கலக்கங்கள் கொள்ளமாட்டேன்
நன்மைகள் நிறைத்து தீமைகள் தகர்த்து
புகலிடம் அளித்திடுவார்-2
வாழ்வோரின் மொழியில் கடவுளின் திருமுன்
நாள்தோறும் நடத்திருவார்-2