புனித தோமையார் நவநாள்


அப்போஸ்தலரான புனித தோமையாரை நோக்கி செபம்

எங்கள் செல்வ நாட்டில் திருமறையைப் போதிக்க வரம் பெற்ற் புனித தோமையாரே, நீர் ஆண்டவர் மீது கொண்டிருந்த பற்றுதலால் அவரோடு இறக்கவும் துணிந்திருந்தீரே! காணாமல் நம்புவோரின் வீர விசுவாசத்தையும், சாவுக்கும் அஞ்சாத தீர அன்பையும், எங்களுக்குப் பெற்றுத் தந்தருளும். நீர் எங்கள் நாட்டில் திருமறையைப் போதித்து, அரும் அடையாளங்களால் எங்கள் முன்னோர்களில் கணக்கற்ற பேரை மெய் மறையின் ஒளிக்குக் கொண்டு வந்தீர்! இன்னும் இந்த நாட்டில் எங்கள் சகோதரர்களில் எத்தனை கோடிப்பேர் இயேசுவை அறிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் மனந்திரும்பி, இந்தியா முழுவதும் ஒரே மந்தையாய், கிறிஸ்துவின் அன்பரசின்கீழ் வருவது எப்போது? விசுவாசத்தில் உறுதியடைந்த அப்போஸ்தலரே, எங்கள் அனைவரையும் விசுவாசத்திலும் பக்தி ஒழுக்கத்திலும் உறுதிப்படுத்தி, எங்களில் துலங்கும் விசுவாசத்தின் ஞானஒளி எங்கும் பரவி, இந்தியா முழுவதும் கிறிஸ்து கொண்டு வந்த விடுதலையையும் அமைதியையும் பெற்று அவருடைய அரசின்கீழ் அணிவகுத்து நிற்கும்படியாக இறைவனை மன்றாட உம்மை வேண்டுகிறோம்.  ஆமென்.

புனித தோமையார் மன்றாட்டுமாலை

சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
தூய தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

இறையன்னையை மிகவும் அன்பு செய்த அப்போஸ்தலரான புனித தோமையயாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
கலிலேயா நாட்டில் பிறந்த புனித தோமையாரே. எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
முடிவில்லா அமைதி தரும் நற்செய்தியைப் போதித்த புனித தோமையாரே.

தூய மரியாயே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இளம் வயதிலேயே தந்தையின் சொற்படி அவர் தொழிலை நடத்திக் கொண்டு வந்த புனித தோமையாரே.
இயேசு மெய்யாகவே உலக மீட்பரென்று விசுவாசம் கொண்ட புனித தோமையாரே.
இயேசு தம்முடைய சீடர்களுக்குள்ளே ஒருவராகத் தெரிந்து கொண்ட புனித தோமையாரே.
இயேசுவின் மீது கொண்டிருக்கும் பற்றுதலால் “நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்!” என்று கூறிய புனித தோமையாரே.
ஆண்டவரே, நீர் போகிறதற்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?” என்ற வினாவை எழுப்பி, “வழியும் உண்மையும் வாழ்வும் நானே!” என்ற இயேசுவின் பதிலைப் பெற்ற புனித தோமையாரே. 
இயேசு உயிர்த்த பிறகு “நான் அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்!” என்ற புனித தோமையாரே
அவர் உமக்குத் தோன்றியதும் அவரைக் கண்டு மகிழ்ந்து “நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்!” என்று சொன்ன புனித தோமையாரே. 
இயேசு, “தோமா, நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறு பெற்றோர்!” என்று சொல்லக் கேட்ட புனித தோமையாரே.
தூய ஆவியாரால் ஏவப்பட்டு இறையன்னையும் அப்போஸ்தலர்களும் கூடிய சபையிலே மேதியா முதலான நாடுகளில் நற்செய்தியைப் போதிக்கக் குறிப்பிடப்பட்ட புனித தோமையாரே.
இறையன்னையின் அடக்கத்துக்கு மிகவும் ஆவலுடனே ஓடி வந்த புனித தோமையாரே.
மாபெரும் மகிழ்ச்சியோடே இயேசுவுக்கு உயிரை ஒப்புக் கொடுத்து பெரிய விருந்துக்கு அழைக்கப்பட்டவர் போல உமது இரத்தத்தைச் சிந்தி திருமறைக்காக உயிரைக் கொடுக்க விரும்பிய புனித தோமையாரே.
மண்ணுலகில் உள்ள எல்லா பொருள்களையும் உம்மையும் விட இறைவனை அதிகமாக அன்பு செய்த புனித தோமையாரே.
வேற்று நாடுகளிலே உமக்கு வரப்போகிற வேதனைகளையும் தடைகளையும் எண்ணி மகிழ்ச்சி கொண்ட புனித தோமையாரே.
இயேசுவையும் இறையன்னையையும் நினைத்து இரவும் பகலும் விண்ணகத்தை நோக்கிக் கையேந்திக் கொண்டு இடைவிடாமல் செபித்த புனித தோமையாரே.
தூய ஆவியாரால் ஏவப்பட்டு மக்களுக்குத் திருவுரையாற்றும்போது வானத்தூதர் போல காணப்பட்ட புனித தோமையாரே.
உயிரையும் உடலையும் தத்தம் செய்து, படாத பாடுபட்டு, மக்களை மெய்மறையில் சேர்க்க ஆவல்கொண்ட புனித தோமையாரே.
விண்ணுல வரங்களைத் தாங்கிய உன்னத மரக்கலமாகிய புனித தோமையாரே.
மூன்று அறிஞர்களுக்கு திருமுழுக்கு அளித்து அவர்களை மெய்மறையில் சேர்த்த புனித தோமையாரே.
பார்த்தியா நாட்டிலே மக்கள் மெய்மறையைக் கண்டடையச் செய்த புனித தோமையாரே.
மேதியா நாட்டிலேயும் பெர்சியா நாட்டிலேயும் வெகு துன்பப்பட்டு ஈடேற்றத்தின் வழியிலே திருப்பிக் கொண்டு வந்த புனித தோமையாரே.
ஈக்கானியா நாட்டிலே வந்த சோதனைகளை எல்லாம், அன்பினாலும், செபத்தினாலும் வென்று, அஞ்சா நெஞ்சத்தவராய் திருமறையை அவர்களுக்குப் போதித்த புனித தோமையாரே.
எத்தியோப்பியா நாட்டுக்கு ஒளியாக நின்ற புனித தோமையாரே.
சிந்து தேசத்தில் கந்தபோரஸ் அரச குடும்பத்துக்குத திருமுழுக்குக் கொடுத்து ஞான ஒளி பெருகச் செய்த புனித தோமையாரே.
கடலில் சுற்றி வந்த பிரமாண்டமான மரத்தை உமது இடுப்பில் இருந்த கயிற்றினாலே கட்டித் திருச்சிலுவை அடையாளத்தை வரைந்து இழுந்துக் கொண்டு வந்து கரையிற் சேர்ந்த புனித தோமையாரே.
இறந்த குழந்தையை இறைவனுடைய அருளாலே உயிர்ப்பித்தவரான புனித தோமையாரே
இயேசுவுக்கான பணிகளை எல்லாம் மகா அன்போடும் தாழ்ச்சியோடும் செய்த புனித தோமையாரே.
உமக்குப் பின் புனித சவேரியார் பாரத நாட்டுக்கு வரப்போகிறதை தொலைப் பார்வையால் கண்டு மக்களுக்கு வெளிப்படுத்தின புனித தோமையாரே.
ஈட்டியால் குத்தப்பட்டு பெருமகிழ்வோடே மறைச்சாட்சி முடி பெற்று முடிவில்லாக் காலம் வாழ விண்ணுலகிற்குச் சென்ற புனித தோமையாரே
கிறிஸ்துவில் நாங்கள் உறுதியான விசுவாசம் கொள்ளும்படியாக, புனித தோமையாரே.
கிறிஸ்துவின் நற்செய்தி உலகெங்கும் பரவும் படியாக, புனித தோமையாரே.
உமது திருவடியைத் தாங்கிய பாரதநாடு மனம் திரும்பும்படியாக, புனித தோமையாரே.

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே - எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே - எங்கள் மன்றாட்டை தயவாய் கேட்டருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே - எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
மு. – கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படியாக.
து. – புனித தோமையாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக
தந்தையே, எங்கள் பாரத நாட்டிற்கு உமது நற்செய்தியை முதன்முதல் கொணர்ந்த புனித தோமையார் எங்கள் நாட்டிலே மறைபரப்பி, இரத்தம் சிந்தி, அடக்கமானார் என்பதைப் பெருமையுடன் கொண்டாடி உம்மைப் புகழ்கின்றோம். குhலங்காலமாக உண்மைக் கடவைள பல்வேறு வகைகளில் தேடியலைந்து கொண்டிருக்கும் இந்தியராகிய நாங்கள், புனித தோமையாரின் வேண்டுதலால் இயேசுவே எங்கள் ஆண்டவர் என்று கண்டு. “நீரே என் ஆண்டவர். நீரே என் கடவுள்!” என்று அறிக்கையிட்டு அவர் திருவடிகளில் சரணடையச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். – ஆமென்.

ஆயனைத் தேடும் ஆடுகளே

ஆயனைத் தேடும் ஆடுகளே
ஆயன் நம்மை தேடுகிறார் -2
சிதறிய சிறுமந்தை நாமே -2
சேர்ந்தே அவரிடம் செல்வோம்
சிறுமந்தையே சேர்ந்திடுவோம்
இறையாட்சியை அமைத்திடுவோம் -2
1.
பசும்புல் மேய்ச்சலில் இளைப்பாற செய்வேன்
பாயும் நீர் அருவிக்கு நடத்தி செல்வேன் -2
நலிவுற்றதும் வலுவற்றதும்
களைப்புற்றதும் சோர்வுற்றதும்
நிலை வாழ்விலே நிலைபெற செய்வேன்
சிறுமந்தையே சேர்ந்திடுவோம்
இறையாட்சியை அமைத்திடுவோம் -2
2.
பெரும்சுமை சுமர்ந்து சோர்ந்திருப்போரே
பணிவும் கனிவும் எனக்குண்டு -2
என சுமையோ எளிதானது என் நுகமும் எளிதானது
என்னிடம் பகின்று இளைப்பாற்றி காண்பீர்
சிறுமந்தையே சேர்ந்திடுவோம்
இறையாட்சியை அமைத்திடுவோம் -2

திருவிருந்து பாடல்

எனில் வாரும் என் இயேசுவே
என்றும் என்னோடு உறவாடவே
நீயின்றி ஒன்றில்லையே
என்றும் நீதானே என் எல்லையே

1.
என் நெஞ்ச வீட்டினில் என் இன்ப பாட்டினிலே
உன் நாமம் நான் பாட என் உள்ளம் நீர் வாழவே
என் அன்பு தாயாக என் நாளும் எனைக் காக்கவே
என் சொந்தம் நீயாக என் வாழ்வும் நீயாகவே
தேவா எழுந்து வா தேடும் அமைதி தா - 2
உனையழைத்தேன் உயிர்கொடுத்தேன்
உறவைத் தேடியே
2.
பயணம் தான் நான் செல்ல பாதையும் நீயாகவே
வழியெல்லாம் துணையாக வாழ்வெல்லாம் இனிதாகவே
சுமையெல்லாம் சுகமாக பகையெல்லாம் பரிவாகவே
நினைவெல்லாம் நிறைவாக நெஞ்சோடு நீ வாழவே
தேவா எழுந்து வா தேடும் அமைதி தா - 2
உனையழைத்தேன் உயிர்கொடுத்தேன்
உறவைத் தேடியே

திருவிருந்து பாடல்

என்தேடல் நீ என் தெய்வமே நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதே
உனை மனம் தேடுதே நீ வழிகாட்டுமே

இறைவா இறைவா வருவாய் இங்கே
இதயம் அருகில் அமர்வாய் இன்றே - 2

1.
ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும்
நீயின்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும்
பிறர் அன்பை என் பணியில் நான் ஏற்கையில்
உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும்
இறைவார்த்தையில் நிறையாகுவேன்
மறைவாழ்விலே நிலையாகுவேன்
வழிதேடும் எனைக் காக்க நீ வேண்டுமே.. (இறைவா)
2.
உன்னோடு நான் காணும் உறவானது
உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும்
பலியான உனை நானும் தினம் ஏற்கையில்
எளியேனில் உன் வாழ்வு ஒளியாகிடும்
உன் மீட்டலால் எனில் மாற்றங்கள்
உன் தேடலால் எனில் ஆற்றல்கள்
வழிதேடும் எனைக் காக்க நீ வேண்டுமே.. (இறைவா)

காணிக்கைப் பாடல் - பொன்னும் பொருளும் இல்லை


பொன்னும் பொருளும் இல்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் சொந்தம் பந்தமுமெல்லாம்
நீயென சொல்லி வந்தேன் எந்தையும் என்தாயும் நீயன்றோ - நீயே
என்னை ஆளும் மன்னவனன்றோ.
1.
நிலையில்லா உலகினில் நிலைத்து நான் வாழ
என் நிம்மதி இழந்து நின்றேன்
வளமில்லா வாழிவினில் வசந்தங்கள் தேடி நான்
அளவில்லா பாவம் செய்தேன்
தனது இன்னுயிரை பலியென தந்தவரே
உனக்கு நான் எதையளிப்பேன்
இன்று உனக்கு நான் எனையளிப்பேன்
2.
வறுமையும் ஏழ்மையும் பசியும் பிணியும்
ஒழிந்திட உழைத்திடுவேன்
அமைதியும் நீதியும் அன்பும் அறமும்
நிலைத்திட பணி செய்வேன்
உன்னத தேவனே உனதருள் கருவியாய்
உலகினில் வாழ்ந்திடுவேன்
என்றும் உன்னிலே வாழ்ந்திடுவேன்

தியானப்பாடல்

அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் (2) நான்
மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்
நிரந்தரம் - 2 நீயே நிரந்தரம் - 2

1.
தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் - நான்
சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் -2
நிரந்தரம் - 2 நீயே நிரந்தரம் - 2
2.
செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்
பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்
நிலைவாழ்வு என்றும் நிஜமான நீயே நிரந்தரம் - அதன்
விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம் - 2
நிரந்தரம் - 2 நீயே நிரந்தரம் - 2

வருகைப்பாடல்

அழைக்கிறார் இயேசு ஆண்டவர் ஆவலாய் நாம் செல்லுவோம்
அவர் பலியினில் கலந்திட அவர் ஒளிpயினில் நடந்திட
சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே
1.
தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார்
தோள்களில் நம்மை தாங்குவார் துயரினில் நம்மை தேற்றுவார்
சுமைகளை சுகங்களாக மாற்றுவார்
வளமுடன் வாழும் வழியை காட்டுவார்
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானக தந்தையை நாம் வணங்கிடுவோம்
2.
அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்புவார்
அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்
விடியலின் கீதமாக முழங்குவார் விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார். வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானக தந்தையை நாம் வணங்கிடுவோம்