குருத்துவ அருள்பொழிவு கொண்டாட்டம்
சபை மன்றாட்டு
பணியாளரை அழைக்கும் இறைவா, பணிவிடை பெறவன்று பணிவிடை புரியவே உம் திருச்சபையின் பணியாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளீர். இன்று உம் மக்களுக்கு பணிபுரிய நீர் அழைத்துள்ள இவர்கள், இறை வேண்டலில் நிலைத்திருந்து, தங்கள் பணியில் ஈடுபாடும், சாந்தமும் கொண்டு வாழச் செய்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
1. இறை வார்த்தை வழிபாடு
- முதல் வாசகம்: எரேமியா 1: 4-9
- இரண்டாம் வாசகம்: 1திமோ 4: 12-16
- நற்செய்தி: யோவான் 3: 25-30
(ஆயர் அவர்கள் தனது ஆயத்த உடையோடு இருக்கையில் அமர்கிறார்)
Commentary: இன்றைய சிறப்பு வழிபாட்டின் இரண்டாவது நிகழ்வாக திருநிலைப்படுத்தப்படும் சடங்கு ஆரம்பமாகிறது. ஆண்டவர், சாமுவேலை அழைத்தபோது சாமுவேல் அதை ஏற்று ஆண்டவரே பேசும் அடியவன் கேட்கிறேன் என்று பதில் அளித்ததுபோல், இன்று சகோதரர்கள் தங்களது அழைப்புக்கு இதோ வருகிறேன் என்று சொல்லி முன் வருவார்கள். பின் ஆயர் அவர்கள் இவர்கள் இப்பணிக்கு தகுதி உள்ளவர்களா என்று இவர்களின் அதிபர் தந்தையிடம் கேட்டறிந்த பின் குருத்துவ பணிக்கு இவர்களை தேர்ந்து கொள்கிறோம் என்று சொல்வார். இதன் முடிவில் இறைமக்கள் அனைவரும் “இறைவனுக்கு நன்றி” என்று பதில் கூறுவோம்.
அழைப்பு விடுத்தல் - சோதித்தறிதல் - தேர்வு செய்தல்
அதிபர்: குருக்களாக திருநிலைப் படுத்தப்பட வேண்டியவர்கள் முன் வருக.
( பெயர் சொல்லி அழைத்தல். பதில் - இதோ வருகின்றேன் )
அதிபர்: பேரருள் தந்தையே, நம் சகோதரர் இவர்களைக் குருக்களாக திருநிலைப்படுத்த அன்னையாம் திருச்சபை தங்களைக் கேட்டுக் கொள்கின்றது.
ஆயர்: இப்பணிக்கு இவர்கள் தகுதியுள்ளவர்கள் என உமக்குத் தெரியுமா?
குரு: கிறிஸ்துவ மக்களை கேட்டறிந்ததிலிருந்தும் இவர்களுக்கு பயிற்சி அளித்தவர்களின் பரிந்துரைகளிலிருந்தும் இவர்கள் தகுதியுள்ளவர்கள் என சான்று பகர்கின்றேன்.
ஆயர்: நம் ஆண்டவராகிய இறைவனிலும் நம் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் அருள்துணையிலும் நம்பிக்கை வைத்து நம் சகோதரர்கள் இவர்களைக் குருத்துவ நிலைக்கு தேர்ந்து கொள்கின்றோம்.
Commentary: அனைவரும் இறைவனுக்கு நன்றி என்று பதில் கூறுவோம்.
எல்: இறைவனுக்கு நன்றி
அறிவுரை ( மறையுரை )
ஆயரின் மறையுரைக்கு பின்
Commentary: இப்பொழுது குருவாக உயர்த்தப்பட இருக்கிற திருத்தொண்டர்கள் எழுந்து நிற்பார்கள். கிறிஸ்துவின் திருவுடலையும், திருஇரத்தத்தையும் வாழ்வாக்க தயாராய் இருக்கின்ற இவர்கள் குருவாவதற்கு இவர்களின் சம்மதத்தையும், விருப்பத்தையும் நேரடியாக இறைச் சமுகத்தின் முன் ஆயர் கேட்டறிகின்றார்.
(Afterwards the candidates stand before the Bishop who questions all of them together)
ஆய்வு - குருக்களாக திருநிலைப்படுத்தப்படுபவர்களிடம் ...
ஆயர்: அன்பார்ந்த மக்களே, நீங்கள் குருத்துவ நிலை பெறுமுன் அப்பொறுப்பை ஏற்றுக் கொள்ளத் தீர்மானித்திருக்கின்றீர்கள் என்று இத்திருக்கூட்டத்திற்குமுன் எடுத்துரைப்பது பொருத்தமானதாகும். எனவே, நீங்கள் குருத்துவநிலையில் இருந்துகொண்டு ஆயர் நிலையில் இருப்போருக்கு உண்மையான உதவியாளர்களாக விளங்கி, தூய ஆவியாரின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப ஆண்டவருடைய மந்தையை இடைவிடாமல் மேய்த்து உங்கள் பணியை நிறைவேற்ற விரும்புகின்றீர்களா?
பதில்: விரும்புகின்றேன்.
ஆயர்: நற்செய்தியை அறிவிப்பது, கத்தோலிக்க விசுவாசத்தை விளக்குவது ஆகிய அருள்வாக்குப் பணியைத் தகுதியுடனும் ஞானத்துடனும் நிறைவேற்ற நீங்கள் விரும்புகின்றீர்களா?
பதில்: விரும்புகின்றேன்.
ஆயர்: இறைவனின் மகிமைக்காகவும், கிறிஸ்துவ மக்களின் அர்ச்சிப்புக்காகவும், கிறிஸ்துவின் மறைநிகழ்ச்சிகளை, சிறப்பாக நற்கருணைப் பலியையும் ஒப்புரவு அருள்சாதனத்தையும் திருச்சபையின் மரபுக்கேற்ப பக்தியுடனும் பிரமாணிக்கத்துடனும் நிறைவேற்ற நீங்கள் விரும்புகின்றீர்களா?
பதில்: விரும்புகின்றேன்.
ஆயர்: இடையறாது செபிக்க வேண்டுமென்ற கட்டளைக்குப் பணிந்து, உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களுக்காக எம்மோடு இணைந்து இறைவனின் இரக்கத்தை இறைஞ்சி மன்றாட நீங்கள் விரும்புகின்றீர்களா?
பதில்: விரும்புகின்றேன்.
ஆயர்: நமக்காகத் தம்மையே தூய பலிப்பொருளாகத் தந்தைக்கு ஒப்புக்கொடுத்த நம் பெரிய குருவாகிய கிறிஸ்துவுடன் நீங்கள் நாளுக்குநாள் நெருங்கி ஒன்றித்து, மனிதரின் மீட்புக்காக அவரோடு உங்களையே கடவுளுக்கு அர்ப்பணிக்க விரும்புகின்றீர்களா?
பதில்: இறைவனின் துணையை நம்பி நான் விரும்புகின்றேன்.
கீழ்ப்படிதல் வாக்குறுதி
Commentary : இப்பொழுது குருவாக திருநிலைப்படுத்தப்படவேண்டிய இவர்கள், ஆயர் முன் முழந்தாள்படியிடுவார்கள். இவர்கள் தங்களது கரங்களை ஆயரின் கரங்களில் ஒப்படைத்து கீழ்படிகின்றேன் என்று வாக்களித்து சம்மதம் தெரிவிப்பார்கள்.
(Then each one of the candidates goes to the Bishop and kneeling before him, places his joined hands between those of the Bishop. If this seems less suitable in some places, the Episcopal conference may choose another rite. If the Bishop is the candidate’s own Ordinary, he asks:)
ஆயர்: எனக்கும், என் வழி வரும் ஆயருக்கும் நீர் வணக்கமும் கீழ்ப்படிதலும் தர வாக்களிக்கின்றீரா?
பதில்: வாக்களிக்கின்றேன்.
ஆயர்: இந்த நற்செயலை உம்மிடம் தொடங்கிய கடவுள் அதை நிறைவுறச் செய்வாராக.
செபிக்க அழைப்பு
Commentary: குருக்களுக்காக செபிப்பது நம் ஒவ்வொருவருடைய கடமை. இயேசுவின் திருவுடலை ஏந்தும் அவர்களுடைய கரங்களும், திருஇரத்ததை அருந்தும் அவர்களுடைய உதடுகளும் கரைபடாமல் இருக்கவும், உலக பற்றற்றவர்களாக வாழ்ந்துகாட்டவும் நமது செபம் தேவை. அவ்வண்ணமே குருவாக திருநிலைபடுத்தபட இருக்கும் நம் சகோதரர்கள் ஆயர் முன் நிற்க ஆயர் இவர்களுக்காக செபிக்கிறார். நாமும் அமைதியாக செபிப்போம்.
(Then all stand. The Bishop faces the people without the mitre and with his hands joined, says:
If the Bishop is the candidate’s own Ordinary, he asks:)
ஆயர்: (எழுந்து நின்று) அன்புமிக்க சகோதரர்களே, சகோதரிகளே, எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவன் தம் ஊழியர் இவர்களைக் குருத்துவ நிலைக்கு தேர்ந்துக் கொள்ள திருவுளமானார். அவரே இவர்கள் மீது தம் ஆசியையும் அருளையும் தயவாய்ப் பொழியுமாறு மன்றாடுவோம்.
Commentary: இப்பொழுது திருப்பீடத்தில் திருத்தொண்டர்கள் முகம் குப்புறவிழுந்து கிறிஸ்துவின் ஒளியையும் அன்பையும் பிரதிபலிக்க இதோ வந்துவிட்டேன் என்று இறைவனிடம் சரணடைகின்றார்கள். நாம் அனைவரும் முழந்தாள் படியிட புனிதர்களின் மன்றாட்டு மாலை பாடி செபிக்கப்படுகின்றது.
(The Bishop kneels at his seat; the candidates prostrate themselves; all the rest kneel).
புனிதர்களின் பிராத்தனை (Litany of the saints)
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
புனித மரியாயே, இறைவனின் தாயே,
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித மிக்கேலே,
இறைவனின் புனித தூதர்களே,
புனித சூசையப்பரே,
புனித ஸ்நானக அருளப்பரே,
புனித இராயப்பரே, சின்னப்பரே,
புனித பெலவேந்திரரே,
புனித அருளப்பரே,
புனித மரிய மதலேனம்மாளே,
புனித முடியப்பரே,
புனித லவுரேஞ்சியாரே,
புனித அந்தியோக்கு இஞ்ஞாசியாரே,
புனித அஞ்ஞேசம்மாளே,
புனித பெர்பேத்துவா, பெலிசித்தம்மாளே,
புனித கிரகோரியாரே,
புனித அகுஸ்தீனாரே,
புனித அத்தனாசியாரே,
புனித பசிலியாரே,
புனித மார்த்தீனாரே,
புனித ஆசீர்வாதப்பரே,
புனித பிராஞ்சீஸ்குவே, சாமிநாதரே,
புனித பிராஞ்சீஸ்கு சவேரியாரே,
புனித வியான்னி மரிய அருளப்பரே,
புனித தெரேசம்மாளே,
புனித சீயன்னா கத்தரீனம்மாளே,
இறைவனின் எல்லாப் புனிதரே, புனிதையரே,
கருணைகூர்ந்து, எங்களை மீட்டருளும் ஆண்டவரே,
தீமை அனைத்திலுமிருந்து, எங்களை மீட்டருளும் ஆண்டவரே,
பாவம் அனைத்திலுமிருந்து, எங்களை மீட்டருளும் ஆண்டவரே,
நித்திய மரணத்திலிருந்து, எங்களை மீட்டருளும் ஆண்டவரே,
உமது மனிதவதாரத்தினாலே, எங்களை மீட்டருளும் ஆண்டவரே,
உமது மரணத்தினாலும் உயிர்ப்பினாலும், எங்களை மீட்டருளும் ஆண்டவரே,
பரிசுத்த ஆவியின் வருகையினாலே, எங்களை மீட்டருளும் ஆண்டவரே,
உமது பரிசுத்த திருச்சபையை, ஆண்டு காத்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்...எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
திருச்சபைத் தலைவரையும், திருநிலைகளில் பணியாற்றும் அனைவரையும், திருமறை வாழ்வில் நிலைத்திருக்கச் செய்யவேண்டுமென்று, உம்மை மன்றாடுகிறோம்...
அனைத்துலக மக்களுக்கும், சமாதானமும் மெய்யான ஒற்றுமையும் தந்தருளவேண்டுமென்று, உம்மை மன்றாடுகிறோம்...
உமது புனித ஊழியத்தில், எங்களை உறுதிபடுத்திக் காத்தருள வேண்டுமென்று, உம்மை மன்றாடுகிறோம்...
தேர்ந்து கொள்ளப் பெற்ற இவர்களை, ஆசீர்வதிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
தேர்ந்து கொள்ளப் பெற்ற இவர்களை ஆசீர்வதித்து, புனிதப்படுத்த வேண்டுமென்று
உம்மை மன்றாடுகிறோம். .
தேர்ந்துகொள்ளப்பெற்ற இவர்களை ஆசீர்வதித்து, புனிதப்படுத்தி, அர்ச்சிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். .
உயிர் வாழும் கடவுளின் திருமகனாகிய யேசுவே, உம்மை மன்றாடுகிறோம்.. .
கிறிஸ்துவே, எங்களுக்குச் செவி சாய்த்தருளும் (2)
கிறிஸ்துவே, எங்களுக்குச் செவி சாய்த்தருளும் (2)
Commentary : இப்போது குருவாக திருநிலைப்படுத்தப்பட இருக்கும் திருத்தொண்டர்களுக்காக ஆயர் அவர்கள் செபிக்கின்றார். செபத்தின் முடிவில் அனைவரும் ஆமென் என்று சொல்லவும்.
(Then the Bishop stands alone and, with his hands joined, sings or says in a loud voice)
ஆயர்: ஆண்டவரே, எம் இறைவா, எங்கள் மன்றாட்டுக்குச் செவி சாய்த்தருளும். உம் ஊழியர் இவர்கள் மீது தூய ஆவியாரின் ஆசியையும், குருத்துவ அருளின் ஆற்றலையும் பொழிவீராக. நீர் அர்ச்சிக்குமாறு, உம் திருமுன் நாங்கள் கொண்டுவரும் இவ்வூழியர்களைக் கருணையுடன் நோக்கி உமது கொடைகளை எந்நாளும் இவர்கள் மீது நிறைவாய்ப் பொழிந்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
பதில்: ஆமென்.
Commentary : அனைவரும் எழுந்து நிற்போமாக.
திருநிலைப்பாட்டு செபத்திற்கு முன்
Commentary: நம் திருத்தொண்டர்களை குருத்துவ நிலைக்கு உயர்த்துகின்ற மிகவும் உன்னதமான நேரம் இது. இப்பொழுது திருத்தொண்டர்கள் ஆயர் முன் முழந்தாள்படியிடுவார்கள் . அன்று இறைவனால் அழைக்கப்பட்டவர்களின் தலைகள் மீது கைவைத்து அருள்பொழிவு செய்தார்கள். இன்றும் அந்த புனிதமான சடங்கை நிறைவேற்ற நமது ஆயரும் தமது திருக்கரங்களை திருத்தொண்டர்களின் தலை மீது வைத்து அமைதியாக செபிப்பார். இதனைத் தொடர்ந்து அனைத்து குருக்களும் இவர்கள் தலை மீது தங்களது கரங்களை வைத்து செபிப்பார்கள்.
(Next, all the priests present, wearing stoles, lay their hands upon each of the candidates saying nothing. After the imposition of hands, the priests remain at the sides of the Bishop until the prayer of consecration is completed.)
திருநிலைப்பாட்டு செபம்
Commentary : இப்போது ஆயர் திருநிலைப்பாட்டு செபத்தை சொல்லி செபிப்பார் அப்போது இறைமக்களாகிய நாமும் அமைதியுடன் செபிப்போம்
(The candidates kneel before the Bishop. With his hands extended, he sings the prayer of consecration or says it in a loud voice:)
ஆயர்: ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்குத் துணையாக வந்தருளும். மனித மாண்பின் ஊற்றும், அனைத்து அருள்கொடைகளின் வள்ளலும் நீரே. அனைத்தும் உம்மால் தோன்றுகின்றன. உம்மால் நிலைப்பெறுகின்றன. குருத்துவ மக்களினத்தைக் கிறிஸ்துவின் திருப்பணியாளர்களாய் உருவாக்க, தூய ஆவியாரின் ஆற்றலினால் அம்மக்களிலே வௌவேறு நிலைகளை ஏற்படுத்துபவர் நீரே. பழைய உடன்படிக்கையின்போதே, மறைபொருளாக அமைந்திருந்த அருள்சாதனங்கள் வழியாக ஏற்படுத்தப்பட்ட பணி நிலைகள் வளரலாயின. மக்களை ஆண்டு நடத்திப் புனிதப்படுத்த மோசேயையும் ஆரோனையும் நியமித்தபோது அவர்களுடன் தோழமை கொண்டிருக்கவும் அவர்களது பணியில் துணை நிற்கவும் நீர் பல்வேறு நிலையிலும் மாண்பிலும் மனிதர்களைத் தேர்ந்தெடுத்தீர். எவ்வாறெனில் பாலைவனத்தில் மோசேயின் மனநிலையை விவேகமுள்ள எழுபது பேருக்கு அளித்து, அவர்கள் வழியாக அது பரவச் செய்தீர். அவர்களை உதவியாளர்களாகப் பயன்படுத்தி மோசே உம் மக்களை எளிதாக வழி நடத்தினார். அவ்வண்ணமே வரப்போகும் நலன்களின் நிழல்போல் அமைத்திருந்த கூடாரப்பலிகள், குருக்களின் சட்ட முறைமைப்படி குறைவுபடாமல் நிகழ்ந்திட ஆரோனின் வழிவந்தோர் மீது அவர்தம் தந்தைக்குரிய நிறைவின் வளமையை வழிவழியாய்ப் பொழிந்தீர்.
தூயவரான தந்தையே, இறுதியாக உமது திருமகனையே இவ்வுலகுக்கு அனுப்பி வைத்தீர். அந்த இயேசுவையே தனிப்பெரும் திருத்தூதர் என்றும், தலைமைக்குரு என்றும் நாங்கள் அறிக்கையிடுகின்றோம்.
இவரே தூய ஆவியாரின் வழியாக மாசற்ற காணிக்கையாகத் தம்மையே உமக்கு ஒப்புக்கொடுத்தார். தம் திருத்தூதர்களை உண்மையினால் புனிதப்படுத்தித் தம் பணியில் பங்கேற்கச் செய்தார். அவர்களோடு மீட்புப் பணியை உலகெங்கும் அறிவிக்கவும் செயல்படுத்தவும் நீர் அவர்களுக்கு உதவியாளர்களைத் தந்தீர்.
இப்போதும் ஆண்டவரே வலுக்குறைந்த எமக்கு இத்தகைய உதவியாளரைத் தந்தருள உம்மை மன்றாடுகின்றோம்.திருத்தூதருக்குரிய குருத்துவப் பணியில் எமக்கு இவர்கள் தேவைப்படுகின்றார்கள்.
(Now Priests extend their rihgt hands)
எல்லாம் வல்ல தந்தையே, உம் அடியார்களாகிய இவர்களுக்கு குருத்துவ நிலைக்குரிய மாண்பினை அளித்தருள உம்மை மன்றாடுகின்றோம். இவர்களுடைய உள்ளத்தின் ஆழத்தில் புனிதத்தின் ஆவியாரைப் புதுப்பித்தருளும். இறைவா, உமது கொடையாகக் குருத்துவத்தின் இரண்டாம் நிலைக்குரிய பொறுப்பை இவர்கள் பெற்றுக் கொள்வார்களாக. தங்கள் சிறந்த வாழ்வால் நன்னடத்தைக்கு எடுத்துக்காட்டாய் திகழ்வார்களாக.
இறைவா, இவர்கள் எம் ஆயர் நிலைக்குத் தகுந்த உதவியாளராய் இருப்பார்களாக. இவர்கள் போதனையின் வழியாகத் தூய ஆவியாரின் அருளால், நற்செய்தியின் வார்த்தைகள் உலகின் கடை எல்லைவரை மனிதரின் உள்ளங்களில் நிறைபலன் தருவனவாக.
உம்முடைய மக்கள் மறுபிறப்பளிக்கும் திருமுழுக்கால் புதுப்பிக்கப்படவும், உமது திருப்பீடத்திலிருந்து திருவுணவு உண்டு ஊட்டம் பெறவும், பாவிகள் ஒப்புரவாக்கப்படவும், பிணியாளர்கள் வலுப்பெற்றெழவும் இவர்கள் எம்மோடு சேர்ந்து உம்முடைய மறைப்பொருள்களைப் பிரமாணிக்கமாய் வழங்குவார்களாக.
ஆண்டவரே, இவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களுக்காகவும் உலகம் அனைத்திற்காகவும் உமது இரக்கப் பெருக்கத்தை இறைஞ்சி மன்றாட எம்மோடு இவர்கள் இணைந்திருப்பார்களாக. இவ்வாறு, அனைத்து நாடுகளும் கிறிஸ்துவில் ஒன்று சேர்க்கப்பட்டு உமது அரசில் ஒரே மக்கள் குலமாக மாற்றம் அடைவனவாக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும், உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல். ஆமென்.
திருவுடை அணிவித்தல்
Commentary: இறைவனால், குருத்துவ வாழ்வுக்கென தேர்ந்து கொள்ளப்பட்ட நம் புதிய அருள்பணியாளர்களுக்கு குருக்கள் அணியும் திருவுடை அணிவிக்கப்படுகின்றது.
(After the prayer of consecration the Bishop sits with his mitre on)
கைகளில் திரு எண்ணெய் பூசுதல்
Commentary : இப்பொழுது ஆயர், புதிய அருள்பணியாளர்களின் கரங்களில் கிறிஸ்மா என்னும் திருத்தைலத்தை பூசுகின்றார். நம் புதிய அருள்பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைவாக்கினர்களைப்போல, நீதித்தலைவர்களைப்போல, திருத்தூதர்களைப்போல பணி செய்ய, தேவையான உடல் உள்ள நலமும், ஆவியாரின் வரமும் பெறுகின்றார்கள்.
(Next the Bishop puts on the linen gremial, and anoints with holy chrism the palms of each new priest who kneels before him. He says:
ஆயர்: தூய ஆவியாரினாலும், அருளாற்றலினாலும, தந்தையாம் இறைவன, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைத் திருநிலைப்படுத்தினார். இறைவனுக்குப் பலி செலுத்தவும, கிறிஸ்துவ மக்களை புனிதப்படுத்தவும் வேண்டிய அருளை அதே இயேசு கிறிஸ்து உமக்கு வழங்கி, உம்மைக் காப்பாராக.
இரசப்பாத்திரமும் அப்பத்தட்டும் வழங்குதல்
Commentary: இப்போது அருள்பணியாளரின் பெற்றோர் திருப்பலி நிறைவேற்ற பயன்படத்தப்படும் அப்பமும், இரசமும் உள்ள திருக்கிண்ணத்தை ஆயர் அவர்களிடம் அர்ப்பணிக்கின்றார்கள். அதனை ஆயர் அவர்கள் புதிய அருள்பணியாளர்களிடம் கொடுத்து அமைதியின் முத்தம் வழங்கி வாழ்த்துகின்றார்.
(Meanwhile the deacon prepares the bread on the paten and the wine and water in the chalice for the celebration of Mass. He brings the paten and chalice to the Bishop, who presents them to each of the new priests as he kneels before the Bishop)
ஆயர்: இறைவனுக்கு ஒப்புக் கொடுக்க, இறைமக்கள் கொண்டுவந்த இக்காணிக்கையைப் பெற்றுக் கொள்ளும். நீர் நிகழ்த்தும் திருச்சடங்கிற்கு ஏற்றபடி, புனிதராயிரும். திருச்சிலுவையின் மறையுண்மைக்கு ஏற்ப உமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும்.
அமைதியின் முத்தம்
(Lastly the Bishop gives the kiss of peace to each of the new Priests, saying)
ஆயர்: இறை அமைதி உம்மோடு இருப்பதாக.
பதில்: உம்மோடும் இருப்பதாக.
Commentary : இப்பொழுது காணிக்கை பவனி நடைபெறும்.
காணிக்கை மன்றாட்டு
தூயவரான தந்தாய், எங்களுக்கு எடுத்துக்காட்டாய் இருக்க உம் திருமகன் தம் சீடர்களின் பாதங்களைக் கழுவினார். உம்முடைய ஊழியர்களின் காணிக்கையை ஏற்றருளும். இதனால் ஆன்மீகப்பலியாக எங்களையே உமக்கு நேர்ந்தளித்து, நாங்கள் தாழ்ச்சியும் அன்புமிகு மனப்பான்மையும் நிறைவாகப் பெற்று மகிழ்வோமாக. எங்கள்…
நன்றி மன்றாட்டு
மன்றாடுவோமாக: ஊழியர்க்கு உறுதியளிக்கும் இறைவா, விண்ணக உணவையும், பானத்தையும் நிறைவாக அருந்தியுள்ளோம். உமது மகிமைக்காகவும் விசுவாசிகளின் மீட்புக்காகவும் நாங்கள் நற்செய்தியை அறிவிப்பதிலும் திருவருள்சாதனங்களை வழங்குவதிலும் பிறரன்பு தொண்டாற்றுவதிலும் உண்மையுள்ள ஊழியராய் இருக்கச் செய்தருளும். எங்கள்…
ஆயரின் சிறப்பு ஆசீர்
- இறைவனுக்கும் மக்களுக்கும் தம்மையே முழுதும் அர்ப்பணிக்க முன்வந்த உங்களை இன்று குருக்களாக திருநிலைப்படுத்திய நமது வானகத் தந்தை பணிவாழ்வில் மனநிறைவையும், மகிழ்ச்சியையும் தந்து ஆசிர்வதிப்பாராக…
- தமது கல்வாரிப் பலியில் பங்கு கொடுத்து பலி நிறைவேற்ற அழைத்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தம் அருள்சாதனங்களை தகுந்த முறையில் நிறைவேற்ற மனத்தூய்மையும், அருளையும் பொழிவாராக…
- துணையாளராகிய தூய ஆவியார் தேவையான ஆற்றலையும், அருளையும், ஞானத்தையும், விவேகத்தையும், திடனையும் அளித்து உடல், உள்ள நலத்தோடு உங்களை காப்பாராக…
Commentary: (திருப்பலி இறுதியில் ஆயரின் சிறப்பு ஆசீருக்குப் பிறகு) இப்பொழுது புதிய அருள்பணியாளர்கள் அருள்பொழிவு செய்யப்பட்ட தமது திருக்கரங்களால் ஆசீர் அளிக்கின்றார்கள்.
திருப்பலி முடிவில் Commentary:
- இப்போது ஆயரும் மேடையில் இருக்கின்ற அருள்தந்தையரும் புதிய குருக்களை வாழ்த்துவார்கள். அதன் பிறகு புதிய குருக்கள் ஆயருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள்.
- புகைப்படம் எடுத்த பிறகு அனைத்து குருக்களும் மேடைக்கு வந்து புதிய குருக்களை வாழ்த்துவார்கள்.
- நிறைவாக புதிய குருக்கள் மேடையிலிருந்து கீலே வருவார்கள் அப்போது இறைமக்கள் அனைவரும் அமைதியாக வந்து புதிய குருக்களின் அர்ச்சிக்கப்பட்ட புனித கரங்களை திருச்சபையின் பாரம்பரிய விசுவாசத்தின்படி பரிசுத்த முத்தம் செய்து அருளை நிறைவாக பெற்றுச்செல்லுங்கள்.