Abbreviations:
அப: அருள்பணியாளர்
எல்: எல்லாரும்
தொடக்கச் சடங்குகள்:
அப : தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.
எல் : ஆமென்.
அப : நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
எல் : உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
பாவத்துயர் செயல்:
அப : சகோதர சகோதரிகளே, தூய மறைநிகழ்வைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக் கொள்வோம்.
எல் : எல்லாம் வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளே உங்களிடமும், நான் பாவி என ஏற்றுக் கொள்கிறேன். ஏனெனில், என் சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும், கடமையில் தவறியதாலும், பாவங்கள் பல செய்தேன்.
(மார்பில் தட்டிக் கொண்டு)
என் பாவமே! என் பாவமே! என் பெரும் பாவமே! ஆகையால் எப்போதும் கன்னியான புனித மரியாவையும், வானதூதர், புனிதர் அனைவரையும், சகோதர சகோதரிகளே உங்களையும், நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக் கொள்ள மன்றாடுகிறேன்.
அப : எல்லாம் வல்ல இறைவன் நம் மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.
எல் : ஆமென்.
மன்னிப்பு வேண்டல்:
அப : ஆண்டவரே இரக்கமாயிரும்.
எல் : ஆண்டவரே இரக்கமாயிரும்.
அப : கிறிஸ்துவே இரக்கமாயிரும்.
எல் : கிறிஸ்துவே இரக்கமாயிரும்.
அப : ஆண்டவரே இரக்கமாயிரும்.
எல் : ஆண்டவரே இரக்கமாயிரும்.
உன்னதங்களிலே (பாடல்):
உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக. உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி உண்டாகுக. புகழ்கின்றோம் யாம் உம்மையே, வாழ்த்துகின்றோம் இறைவனே. உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மாட்சிப் படுத்துகின்றோம் யாம். உமது மேலான மாட்சியின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம்.
ஆண்டவராகிய இறைவனே, இணையில்லாத விண்ணரசே. ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் வல்ல தந்தை இறைவனே. ஒரே மகனாக உதித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துஇறைவனே. ஆண்டவராகிய இறைவனே, இறைவனின் திருச் செம்மறியே. தந்தையினின்று என்றென்றுமாக உதித்த இறைவன் மகனே நீர்.
உலகின் பாவம் போக்குபவரே, நீர் எம் மீது இரங்குவீர். உலகின் பாவம் போக்குபவரே, எங்கள் மன்றாட்டை ஏற்றருள்வீர். தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே, நீர் எம் மீது இரங்குவீர்.
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே, நீர் ஒருவரே தூயவர்! நீர் ஒருவரே ஆண்டவர்! நீர் ஒருவரே உன்னதர்! தூய ஆவியோடு தந்தை இறைவனின் மாட்சியில் இருப்பவர் நீரே. ஆமென்.
சபை மன்றாட்டு
மன்றாடுவோமாக: ………. உம்மோடு பரிசுத்த ஆவியின் ஐக்கியத்தில் ஒரே இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனாகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.
வார்த்தை வழிபாடு:
அப : ஆண்டவரின் அருள்வாக்கு.
எல் : இறைவனுக்கு நன்றி.
நற்செய்தி:
அப : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அப : மத்தேயு / மாற்கு / லூக்கா / யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்.
எல் : ஆண்டவரே, மாட்சி உமக்கே.
அப : கிறிஸ்துவின் நற்செய்தி.
எல் : கிறிஸ்துவே, உமக்குப் புகழ்.
நம்பிக்கை அறிக்கை (செபம்):
ஒரே கடவுளை நம்புகிறேன். விண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லம் வல்ல தந்தை அவரே. கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துதுவை நம்புகிறேன்.
இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார். கடவுளினின்று கடவுளாக, ஒளியின்றி ஒளியாக, உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாக உதித்தவர். இவர் உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்.
தந்தையோடு ஒரே பொருளானவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன. மனிதர் நமக்காகவும், நம் மீட்புக்காகவும் விண்ணகம் இருந்து இரங்கினார்.
(“மனிதர் ஆனார்” எனச் சொல்லும் வரை எல்லாரும் தலை வணங்கவும்)
தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார். மேலும் நமக்காகப் பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் சிலுவையில் அறையப்பட்டுப், பாடுபட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூல்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார். வாழ்வோரையும், இறந்தோரையும் தீர்ப்பிட, மாட்சியுடன் மீண்டும் வர இருக்கின்றார். அவரது ஆட்சிக்கு முடிவு இராது. தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான தூய ஆவியாரை நம்புகிறேன். இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக ஆராதணையும் மாட்சியும் பெறுகின்றார். இறைவாக்கினர்கள் வாயிலாகப் பேசியவர் இவரே.
ஒரே புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவரும் திரு அவையை நம்புகிறேன். பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கை ஏற்றுக் கொள்கிறேன். இறந்தோரின் உயிர்ப்பையும், வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கிறேன். ஆமென்.
நம்பிக்கை அறிக்கைப் (பாடல்):
விண்ணையும் மண்ணையும் படைத்தவராம் கடவுள் ஒருவர் இருக்கின்றார். தந்தை, மகன்,தூய ஆவியராய் ஒன்றாய் வாழ்வாரை நம்புகிறேன். தூய ஆவியின் வல்லமையால் இறை மகன் நமக்காய் மனிதரானார். கன்னி மரியிடம் பிறந்தவராம் இயேசுவை உறுதியாய் நம்புகிறேன்.
பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார். சிலுவையில் இறந்து அடக்கப்பட்டார். மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். இறப்பின் மீதே வெற்றி கொண்டார். விண்ணகம் வாழும் தந்தையிடம் அரியணைக் கொண்டு இருக்கின்றார்.
உலகம் முடியும் காலத்திலே நடுவராய் திரும்பவும் வந்திடுவார். தூய ஆவியாரை நம்புகிறேன். பாரினில் அவர் துணை வேண்டுகிறேன். பாவ மன்னிப்பில் தூய்மை பெற்றுப் பரிகார வாழ்வில் நிலைத்திடுவேன்.
திரு அவை உரைப்பதை நம்புகிறேன். புனிதர்கள் உறவை நம்புகிறேன். உடலின் உயிர்ப்பை நிலைவாழ்வை உறுதியுடனே நம்புகிறேன்.
ஆமென்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:
அப : ---------அருள வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.
எல் : எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
நற்கருணை வழிபாடு:
ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக.
ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தை பெற்றுள்ளோம். நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்களுக்கு வாழ்வு அளிக்கும் அப்பமாக மாறும்.
இறைவன் என்றென்றும் வாழ்த்துப்பெறுவாராக!
(கிறிஸ்துநம் மனித இயல்பில் பங்கு கொள்ளத் திருவுளமானார். இத்தண்ணீர், இரசம் இவற்றின் மறைபொருள் வழியாக நாமும் அவருடைய இறை இயல்பில் பங்குபெறுவோமாக.)
ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா,நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளமையிலிருந்து நாங்கள் இந்த இரசத்தை பெற்றுள்ளோ. திராட்சை கொடியும் மனித உழைப்பின் தந்த இந்த இரசத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். இது எங்கள் ஆன்மீகப் பானமாக மாறும்.
இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக!
(குரு தலை குனிந்து அமைதியாகச் சொல்வார்):
ஆண்டவரே, தாழ்மையான மனமும் நொறுங்கிய உள்ளமும் கொண்ட எங்களை ஏற்றருளும். ஆண்டவரே இறiவா, நாங்கள் இன்று உமது திருமுன் ஒப்புக்கொடுக்கும் இத்திருப்பலி உமக்கு உகந்தது ஆவதாக.
ஆண்டவரே, என் குற்றம் நீங்க என்னைக் கழுவிய. பாவத்திலிருந்து என்னைத் தூய்மையாக்கும்.
அப : சகோதரர் சகோதரரிகளே,என்னுடையதும் உங்களுடையதுமான இபலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்
எல். ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும் மாட்சிக்காகவும், நமது நன்மைக்காகவும்,புனிதத் திருஅவை அனைத்தின் நலனுக்காகவும், உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.
காணிக்கை மன்றாட்டு
ஆண்டவரே,... எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்
நற்கருணை மன்றாட்டு:
அப : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அப : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
எல் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
அப : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
எல் : அது தகுதியும் நீதியும் ஆனதே.
ஆண்டவரே தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும். எங்கள் கடமையும் மீட்புக்குறிய செயலுமாகும். ............
ஆகவே,ஆற்றல் மிகுந்த விண்ணவரோடு சேர்ந்து நாங்களும் இம்மண்ணுலகில் இடையறாது உமது மாட்சியைக் கொண்டாடி முடிவின்றி ஆர்ப்பரித்துச் பாடுவதாவது.
தூயவர் பாடல்:
தூயவர், தூயவர், தூயவர்! வான் படைகளின் கடவுளாம் ஆண்டவர். விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன. உன்னதங்களிலே ஓசன்னா!
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர். உன்னதங்களிலே ஓசன்னா! உன்னதங்களிலே ஓசன்னா!
நற்கருணை மன்றாட்டு:
ஆண்டவரே, நீர் மெய்யாகவே தூயவர்
உம்முடைய படைப்புகள் எல்லாம் உம்மைப் புகழ்வது தகுமே.
ஏனெனில் உம் திருமகனாகிய
எங்கள் ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவழியாக
தூய ஆவியாரின் செயலாற்றலால்
ஆனைத்தையும் உய்வித்துத் தூய்மைப்படுத்துகின்றீர்.
கதிரவன் தோன்றி மறையும் வரை
உமது பெயருக்குத் தூய காணிக்கையை ஒப்புக் கொடுக்குமாறு உமக்கன மக்களை இடையறாது ஒன்று சேர்த்து வருகின்றீர்.
எனவே ஆண்டவரே
உமக்கு அர்ப்பணிக்க நாங்கள் கொண்டு வந்துள்ள இக்காணிக்கைகளை அதே ஆவியால் றீய்மைப்படுத்த
உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.
இவ்வாறு, உம் திருமகனாகிய எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமுமாகவும் இவை மாறுவனவாக. அவர் பணித்தவாறே இம்மறைநிகழ்வுகளைக் கொண்டாடுகின்றோம்.
ஏனெனில் அவர் காட்டிகொடுக்கப்பட்ட இரவில்,
அப்பத்தை எடுத்து, உமக்கு நன்றி செலுத்தி, ஆசி வழங்கி, அதைப் பிட்டு தம் சீடர்களுக்கு அளித்துக் அவர் கூறியதாவது
அனைவரும் இதிலிருந்து பெற்று உண்ணுங்கள் : ஏனெனில் இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல்.
அவ்வண்ணமே, இரவு விருந்தை அருந்தியபின்,
கிண்ணத்தை எடுத்து, உமக்கு நன்றி செலுத்தி, ஆசி வழங்கி
அதைத் தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது
அனைவரும் இதிலிருந்து பெற்றுப் பருகுங்கள் : ஏனெனில், இது புதிய, நிலையான உடன்படிக்கைக்கு உரிய என் இரத்தத்தின் கிண்ணம். இது பாவமன்னிப்புக்கென்று உங்களுக்காகவும் பலருக்காகவும் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.
அப : நம்பிக்கையின் மறைபொருள்!
எல் : ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின்றோம்.
(அல்லது)
ஆண்டவரே, நாங்கள் இந்த அப்பத்தை உண்டு
கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம் நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம்.
அப : ஆகவே ஆண்டவரே
உமது திருமகனின் மீட்பு அளிக்கும் பாடுகளையும்,
வியப்புக்கு உரிய உயிர்ப்பையும், விண்ணேற்றத்தையும்
நாங்கள் நினைவுகூர்கின்றோம். இவர் மீண்டும் வருவார் என எதிபார்த்திருக்கும் நாங்கள் இப்புனிதமான, உயிருள்ள பலியை
நன்றி செலுத்தி உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்.
உமது திருஅவையின் காணிக்கையைக் கண்ணோக்கியருள
உம்மை மன்றாடுகிறோம். இப்பலியினால் நீர் உளம் கனியத் திருவுளமானீர். இவ்வாறு உம்முடைய திருமகனின் திருவுடல் திரு இரத்தத்தால் ஊட்டம் பெறும் நாங்கள், அவருடைய தூய ஆவியால் நிரப்பப்பெற்று கிறிஸ்துவுக்குள் ஒரே உடலும், ஒரே உள்ளமும் உடையவராக விளங்கச் செய்வீராக.
இவரே எங்களை உமக்கு என்றும் காணிக்கையாக்குவாராக! இவ்வாறு, உம்மால தேர்ந்துகொள்ளப்பட்வர்களோடு, முதன்முதலாக புனிதமிக்க கன்னியும்,கடவுளின் தாயுமான மரியா, அவருடைய கணவரான புனித யோசேப்பு,
புனித திருத்துதர்கள்,மாட்சிமிகு மறை சாட்சியர்
இன்று நாங்கள் கொண்டாடும் புனித ..............
மற்றும் புனிதாக அனைவரோடும்
நாங்கள் உரிமைப் பேற்றுக்கு தகுதியுடைவோர் ஆவோமாக! இவர்களின் வேண்டுதலால், நாங்கள் என்றும்
உமது உதவியைப் பெறுவோம் என உறுதியோடு இருக்கின்றோம்.
ஆண்டவரே, உங்களை உம்மோடு ஒப்புரவாக்கும் இப்பலி
உலகுகெல்லாம் அமைதியும் மீட்பும்
தரவேண்டும் என மன்றாடுகிறோம்.
இவ்வுலகில் பயணம் செய்யும் உமது திருஅவையை
சிறப்பாக உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை பிரான்சிஸ்;...எங்கள் ஆயர் .......; ஏனைய ஆயர்கள், திருநிலையினர், உமக்குச் சொந்தமான மக்கள் ஆகிய அனைவரையும் நம்பிக்கையிலும் அன்பிலும் உறுதிபெறச் செய்வீராக. நீர் விரும்பியபடி உம் திருமுன் நிற்கின்ற
இக்குடும்பத்தின் வேண்டல்களுக்கு கனிவாய்ச் செவிசாய்த்தருயும்.
கனிவுள்ள தந்தையே,
எங்கும் சிதறுண்டிருக்கும் உம்முடைய பிள்ளைகளைத்
கனிவுடன் உம்மோடு சேர்த்துக் கொள்ளும்.
இறந்து போன எங்கள் சகோதரர் சகோதரிகளையும்
உமக்கு உகந்தவர்களாய் வாழ்ந்து
இவ்வுலகை விட்டுச் சென்ற அனைவரையும்
உமது அரசில் கனிவுடன் ஏற்றருளும்.
நாங்களும் அங்கு வந்து சேர்ந்து
அவர்களோடு உமது மாட்சியால்
என்றும் மனநிறைவு அடைவோம் என
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவழியாக எதிர்நோக்கியிருக்கின்றோம்.
இவர் வழியாகவே நீர் உலகுக்கு எல்லா நன்மைகளையும் வழங்குகின்றீர்.
இவர் வழியாக,
இவரோடு,
இவரில் எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே,
துய ஆவியின் ஒன்றிப்பில்
எல்லாப் புகழும் மாட்சியும்
என்றென்றும் உமக்கு உரியதே - ஆமென்.
அப : மீட்பரின்கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறை படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்.
எல் : விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக. உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக.
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.
அப : ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து.
எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள
உம்மை மன்றாடுகின்றோம்.
உமது இரக்கத்தின் உதவியால்
நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று
யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக.
உங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்திற்காகவும்
எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.
எல் : ஏனெனில், ஆட்சியும், வல்லமையும், மாட்சியும் என்றென்றும் உமதே!
அப : ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே, “அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்,
என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன் என்று உம் திருத்துதர்களுக்கு மொழிந்தீரே. ஏங்கள் பாவங்களைப் பாராமல், உமது திருஅவையின் நம்பிக்கையை கண்ணோக்கி, உமது திருவுளத்துக்கு ஏற்ப அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.
எல் : ஆமென்.
அப : ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.
எல் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அப : ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்து கொள்வோம்.
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திரு உடவும் திரு இரத்தமும் இங்கு ஒன்றாய் கலந்து இதை உட்கொள்ளும் நமக்கு நிலைவாழ்வு அளிப்பதாக.
மன்னிப்பு மன்றாட்டு (பாடல்):
உலகின் பாவம் போக்கும் இறைவனின் செம்மறியே! எம் மேல் இரக்கம் வையும். - 2 உலகின் பாவம் போக்கும் இறைவனின் செம்மறியே! எமக்கு அமைதி அருளும்.
அப : இதோ, இறைவனின் செம்மறி! இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர்! செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்!
எல் : ஆண்டவரே! நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன், ஆனால், ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும் எனது ஆன்மா நலம் அடையும்.
(குரு தலை வணங்கி-ஆண்டவராகிய யேசு கிறிஸ்துவே, நான் உட்கொள்ளும் இத்திருஉடலும் இரத்தமும் என்னை நீதித்தீர்ப்ப்புக்கும் தண்டனைக்கும் உள்ளாக்காமல் உமது பரிவிரக்கத்தால் என் உள்ளத்தையும் உடலையும் காத்திடும் அருமருந்தாகிட அருள் புரியும்)
(கிறிஸ்துவின் திரு உடல் என்னைக் காத்து நித்திய வாழ்வளிப்பதாக -ஆமென்)
(கிறிஸ்துவின் திரு இரத்தம் என்னைக் காத்து நித்திய வாழ்வளிப்பதாக -ஆமென்)
நற்கருணை விருந்து
நன்றி மன்றாட்டு
அப :மன்றாடுவோமாக. ஆண்டவரே,…. . .
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல் : ஆமென்..
இறுதி ஆசீர்
அப : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அப : எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன்,தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவாராக.
எல் : ஆமென்.
அப : சென்று வாருங்கள் திருப்பலி நிறைவேறிற்று
எல் : இறைவனுக்கு நன்றி.