இயேசுவின் திரு இருதயத்திற்கு குடும்பங்களை ஒப்புக்கொடுக்கின்ற செபம்

இயேசுவின் திரு இருதயமே! கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு தேவரீர் செய்துவரும் சகல உபகாரங்களையும், சொல்லமுடியாத உமது நன்மைத்தனத்தையும் நினைத்து நன்றியறிந்த பட்சத்தோடு உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்துகிடக்கிறோம்.

நேசமுள்ள இயேசுவே! எங்கள் குடும்பங்களிலுள்ள சகலரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். தேவரீர் எங்களை ஆசீர்வதித்து இப்போதும் எப்போதும் உம்முடைய திருஇருதய நிழலில் இளைப்பாறச் செய்தருளும்.
தவறி எங்களில் எவரேனும் உமது இருதயத்தை நோகச்செய்திருந்தால் அவர் குற்றத்திற்கு நாங்களே நிந்தைப் பரிகாரம் செய்கிறோம். உமது திருஇருதயத்தை பார்த்து எங்கள் பரிகாரத்தை ஏற்றுக்கொண்டு அவருக்கு கிருபை செய்தருளும்.

இதுவுமின்றி உலகத்திலிருக்கும் சகல குடும்பங்களுக்காகவும் மன்றாடுகிறோம். பலவீனர்களுக்கு பலமும், விருந்தாப்பியர்களுக்கு ஊன்றுகோலும், விதவைகளுக்கு ஆதரவும், அனாதைப் பிள்ளைகளுக்கு, தஞ்சமுமாயிருக்கத் தயைபுரியும். ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள் அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டிலும் தேவரீர் தாமே விழித்துக் காத்திருப்பீராக.
இயேசுவின் இரக்கமுள்ள திருஇருதயமே! சிறுபிள்ளைகளை எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தீரே. இந்த விசாரணையிலுள்ள சகல பிள்ளைகளையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். அவர்களை ஆசீர்வதியும். அவர்களுடைய இருதயத்தில் விசுவாசத்தையும், தெய்வ பயத்தையும் வளரச்செய்யும். ஜீவிய காலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும் மரண சமயத்தில் ஆறுதலாகவும் இருக்க மன்றாடுகிறோம். திவ்விய இயேசுவே! முறை முறையாய் உமது திருச்சிநேகத்தில் ஜீவித்து, மரித்து நித்திய காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாறக் கிருபை புரிந்தருளும். - ஆமென்

இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன்.
இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன்.
இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன்.

திருக்குடும்பத்தை நோக்கிச் செபம்

இயேசுவின் திரு இருதயமே ! அமலோற்பவ கன்னிமாதாவின் திரு இருதயமே! ஓ! மிகுந்த மகிமைப் பிரதாபம் பொருந்திய புனித சூசையப்பரே! உங்கள் அடைக்கலமாக ஓடி வந்து உங்கள் உபகார சகாயங்களை இறந்து மன்றாடிக் கேட்டஎவனும் அந்த மன்றாட்டுக்களை அடையாமற் போனதில்லையென்று நினைத்தருளுங்கள். இத்தகைய நம்பிக்கையால் ஏவப்பட்டு என் பாவச்சுமையோடே உங்கள் பாத சந்நிதானத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து பிரார்த்திக்கிறேன்.

இரக்கமுள்ள இயேசுவின் திரு இருதயமே! அமலோற்பவ கன்னி மாதாவின் திரு இருதயமே! ஓ! மகிமைப்பிரதாபம் பொருந்திய புனித சூசையப்பரே, அடியேனுடைய மன்றாட்டுக்களை புறக்கணியாமல் தயவாய்க் கேட்டுத் தந்தருளுங்கள். – ஆமென்.

பஞ்சகாலத்தில் செபம்

எலிசேயு இறைவாக்கினரின் காலத்தில் சமாரியாவிலே கடும் பஞ்சத்தைச் சடுதியில் அகற்றி மலிவுண்டாகச் செய்தருளின இரக்கமுள்ள தந்தையே ! எங்கள் பாவங்களின் நிமித்தம் தண்டனையாக வெகு துன்பப்படுகிற எங்களுக்கும் காலத்துக்குத் தகுந்த சகாயம் கிடைக்கும் படி இரக்கம் செய்தருளும். உமது பரம ஆசீரினாலே பூமி அதிக பலனைத் தரும்படி செய்து தேவரீர் தாராளமாய்க் கொடுக்கும் நன்மையைப் பெற்றுக்கொள்ளுகிற நாங்கள் உமக்கு மகிமையும் ஏழைகளுக்கு உதவியும் ஆறுதலுமாய் இருக்கத்தக்கதாக, அதை அனுபவிக்க எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். -ஆமென்.

பூச்சிகளால் அழிக்கப்படுகிற பயிர்களுக்காக செபம்

வானமும் பூமியும் யாவும் படைத்த எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரினால் நலன்களெல்லாம் நமக்குப் பெருகுமாக!

மு.  இறைவா என் மன்றாட்டைக் கேட்டருளும்.
து.  எங்கள் குரலொலி உம் திருமுன் வருவதாக!

செபிப்போமாக
ஆண்டவரே ! நாங்கள் செய்கிற வேண்டுதலைத் தேவரீர் தயாளக் கருணையுடன் கேட்டருள மன்றாடுகிறோம். எங்கள் பாவங்களுக்கு நீதியுள்ள ஆக்கினையாக வந்த இந்த பூச்சிகளுடைய நெருக்கடியை உமது இரக்கப் பெருக்கினால் நோக்கி உமது திருப் பெயருக்குப் புகழ்ச்சி உண்டாகும் படி அவைகளை நீக்கியருளும். அப்படியே இந்த துஷ்டப் பூச்சிகள் உமது ஆணையின் பலத்தினால் தூரத் தள்ளுண்டுபோகவும், இந்தப் பயிர்கள் விக்கினமின்றி நன்றாக விளையவும் இதில் உண்டாகிற பலனும் உமது பணி விடைக்கும், எங்கள் பிழைப்புக்கும் பிரயோசனமாகவும் கிருபை செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். -ஆமென்.

தாய் தந்தையருக்காக செபம்

இறைவா! என் தாய் தந்தையரை உமகு நேசத்தினுடையவும், வல்லமையினுடையவும் சாயலாக உண்டாக்கி என்னை எல்லாவறிறிலும் அவர்களுக்குக் கீழ்படியவும் அவர்களை நேசிக்கவும் கட்டளையிட்டீரே. எல்லாம் வல்ல இறைவா உமது கற்பனைகளை ஆசையோடு முழு இருதயத்தோடும் நான் கைப்பற்ற எனக்கு உமது அருளைத் தந்தருளும். நான் அன்போடு அவர்களை நேசிக்கவும், மதிக்கவும், அவர்களுடைய கட்டளைகளுக்கு உவப்புடன் கீழ்ப்படிந்து அவர்களுடைய விருப்பத்துக்கு இணங்கி நடக்கவும், எல்லாவறிறிலும் அவர்களுடைய நலனை விரும்பி அவர்களுடைய தண்டனைகளைத் தாழ்சியோடும் பொறுமையோடும் சகித்துக்கொள்ளவும், எனக்கு உதவிசெய்தருளும்!

அன்புள்ள இறைவா! அகங்காரத்திலும், கலகத்திலும், வைராக்கியத்திலும், பிடிவாதத்திலும், சோம்பலிலும் அசட்டைத்தனததிலுமிருந்து என்னை விடுவித்தருளும. என் எல்லாப படிப்புகளிலும் வேலைகளிலும் என்னைச் சுறுசுறுப்புடையவனாகவும் சோதனைகளில் பொறுமையுடையவனாகவும் செய்தருளும். நான் அப்படியே என் வாழ்நாள் முழுவதிலும் என் ஆண்டவரான இயேசுக்கிறிஸ்துநாதர் மூலமாக உமது பிள்ளை என்கிற பெயறுக்குத் தகுதியள்ளவனாய் இருப்பேனாக -ஆமென்.

ஊர்தி ஓட்டுநரின் செபம்

அன்புள்ள இறைத் தந்தையே ! உம்மைத் தொழுது நன்றி செலுத்துகிறேன். இந்த வாகனத்தை ஓட்டும் பொறுப்புமிக்கப் பணியை எனக்கு கொடுத்து, என்னைப் பராமரித்து வருவதற்காக நன்றி செலுத்துகிறேன். இந்த ஊர்தியைக் கவனமாக ஓட்ட எனக்கு உதவி புரிவீராக. இதில் பயணம் செய்வோரையும் ஆசீர்வதித்துக் காத்தருளும்.
இறை இயேசுவே ! எம் அன்னையை எங்களுக்கு அன்னையாகத் தந்ததற்காக நன்றி கூறுகிறேன். இறை அன்னையே ! என் அன்பு அம்மா ! அன்று இறைபாலனைப் பத்திரமாக ஏந்தி எகிப்துக்கு பயணமானீரே அதுபோல இன்று நான் ஓட்டுகிற இந்த ஊர்தியையும் உம் கைகளில் ஏந்தி, நாங்கள் சேர வேண்டிய இடத்தைப் பாதுகாப்புடன் சென்றடைய உதவியருளும்.

எங்கள் காவல் தூதர்களே ! எங்களுக்காக இறைவனை மன்றாடுங்கள். இந்தச் சாலையில் பயணம் செய்யும் ஏனைய ஊர்திகளின் ஓட்டுநரும் பாதசாரிகளும் பொறுப்புணர்ந்து கடக்க உதவி புரியும்.

நல்ல பயணத்தின் அன்னையே ! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். புனித கிறிஸ்டோபரே ! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். - ஆமென்.

தாய்மை கொண்ட பெண்கள் செபம்

கன்னியும் தாயுமான புனித மரியாளே ! நீர் இயேசு நாதரை உமது திருவயிற்றில் தாங்கிக் கொண்டிருந்ந நாளெல்லாம் ஆனந்த சந்தோஷத்தில் அமிழ்ந்திக் கடைசியாய் பேறுகாலமானபோது, வாக்குக்கெட்டாத உன்னத பரவசத்தில் திவ்விய பாலகனைப் பெற்றீரே ! அந்தப் புத்திக்கெட்டாத ஆனந்தத்தைப் பார்த்து என்பேரில் கிருபையாயிரும்.

நானோ பாவத்தில் பிறந்து எல்லா உபத்திரவங்களுக்கும் உள்ளாயிருக்கிறேன். ஏவைக்கு இட்ட ஆக்கினை என்பேரிலும் இருக்கிறது. ஆகையால் என் மிடிமையைப் பார்த்து என் பலவீனங்களின் பேரில் இரக்கமாயிருந்து, என் வயிற்றிலிருக்கிற சிசுவுக்கு யாதொரு பொல்லாப்புமின்றி, அதிக சிரமமின்றி ப் பிரசவிக்க அனுக்கிரகம் செய்தருளும்.

மேலும் அந்தப் பாலகனுக்கு புத்தி சித்தம் மேன்மையுள்ளதாகி உமது திருக்குமாரனுடையவும், உம்முடையவும் பணியிலே நிலைக் கொண்டு, சிறப்புடன் வளர்ந்து, பேரின்ப பாக்கியத்தின் வழியிலே நடக்க உமது திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். -ஆமென்.