திருவருகைக்கால முதல் ஞாயிறு (இரண்டாம் ஆண்டு) 27-11-2011
முன்னுரை: அன்புக்குரியவர்களே! இன்று திருவழிப்பாட்டு ஆண்டில் புதிய ஆண்டை தாய் திருச்சபை தொடங்குகின்றது. திருவருகைக் காலம் எதிர்பார்ப்பின் காலம். நம்பிக்கையின் காலம். கிறிஸ்து பிறப்பு பெருவிழாவிற்கு நம்மை தயாரிக்கும் காலம். உண்மையில், நம்மில் இன்று பலருக்கு போதாத காலமாக உள்ளது. தனி வாழ்விலும், குடும்பவாழ்விலும், பொது வாழ்விலும் பல்வேறு பிரச்சினைகள் நம்மை கசக்கிப் பழிந்தெடுக்கின்றன. எனவே இந்த திருவருகைக் காலத்தில் அயராது செபிப்போம். செபத்திற்கும், வாழ்வுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பசித்திரு! தனித்திரு! விழித்திரு! செபித்திரு. இதுவே இத்திருவருகை காலம் முழுவதும் நம்மை நெறிப்படுத்தும் தாரக மந்திரமாக அமையட்டும். அதற்கான அருள்வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.
முதல் வாசக முன்னுரை: நாம் அனைவரும் இறைவனால் உண்டாக்கப்பட்டவர்கள். எனவே நாம் அனைவரும் அவருக்கே செந்தம். அவர் நம்மை எப்போதும் தம் கரங்களில் வைத்து காத்து வழிநடத்தி வருகின்றார். அவருக்கு ஏற்ற மக்களாக வாழ இறைவாக்கினர் எசாயா கூறும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.
ஏனெனில் நீரே எங்கள் தந்தை: ஆபிரகாம் எங்களை அறியார்: இஸ்ரயேல் எங்களை ஏற்றுக் கொள்ளார்: ஆண்டவரே, நீர்தான் எங்கள் தந்தை: பண்டை நாளிலிருந்து எம் மீட்பர் என்பதே உம் பெயராம். ஆண்டவரே, உம் வழிகளிலிருந்து எங்களைப் பிறழச் செய்வதேன்? உமக்கு அஞ்சி நடவாதவாறு எம் நெஞ்சங்களைக் கடினப்படுத்தியதேன்? உம் ஊழியர்களை முன்னிட்டும், உம் உரிமைச் சொத்தாகிய, குலங்களை முன்னிட்டும் திரும்பிவாரும். நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா? மலைகள் உம் திருமுன் நடுநடுங்குமே! நாங்கள் எதிர்பாராத அச்சம் தரும் செயல்களை நீர் செய்தபோது நீர் இறங்கி வந்தீர்: மலைகள் உம் முன்னே உருகி ஓடின! தம்மை நம்பியிருப்போருக்காகச் செயலாற்றும் கடவுள் உம்மையன்றி வேறு யார்? முற்காலம் முதல் இதுபற்றி எவரும் கேள்வியுற்றதில்லை: செவியுற்றதுமில்லை, கண்ணால் பார்த்ததுமில்லை. மகிழ்ச்சியுடன் நேர்மையைக் கடைப்பிடிப்போர்க்கும் உம்மையும் உம் வழிகளையும் நினைவில் கொள்வோர்க்கும் நீர் துணை செய்ய விரைகிறீர்: இதோ, நீர் சினமடைந்தீர்: நாங்கள் பாவம் செய்தோம்: நெடுங்காலமாய்ப் பாவம் செய்திருக்க, நாங்கள் மீட்கப்படுவது எங்ஙனம்? நாங்கள் அனைவரும் தீட்டுப்பட்டவரைப்போல் உள்ளோம்: எங்கள் நேரிய செயல்கள் எல்லாம் அழுக்கடைந்த ஆடைபோல் ஆயின: நாங்கள் யாவரும் இலைபோல் கருகிப் போகின்றோம்: எங்கள் தீச்செயல்கள் காற்றைப் போல் எங்களை அடித்துச் சென்றன. உம் பெயரைப் போற்றுவார் எவரும் இல்லை: உம்மைப் பற்றிக்கொள்ள முயல்பவர் எவரும் இல்லை: நீர் உம் முகத்தை எங்களுக்கு மறைத்துள்ளீர்: எங்கள் தீச்செயல்களின் பிடியில் எங்களை அழியவிட்டீர். ஆயினும், ஆண்டவரே நீரே எங்கள் தந்தை: நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்: நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.- இறைவா உமக்கு நன்றி.
இரண்டாம் வாசக முன்னுரை: நாம் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டுள்ளதால் சொல்வன்மை, நிறையறிவு பெற்று எல்லா வகையிலும் நல்ல நிலையில் வாழ்ந்து வருகின்றோம். அருள்வரங்கள் நிறைய கிடைக்கப்பெற்றதால், இறுதிநாளில் விண்ணக வாழ்வு நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்ற ஆழ்ந்த கருத்தினை கூறும் தூய பவுல் அடிகளாரின் அறிவுரையை அமைந்த மனத்துடன் கேட்போம்.
நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக! இயேசு கிறிஸ்து நமக்குமட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர்.கிறிஸ்து இயேசுவின் வழியாக நீங்கள் பெற்றுக்கொண்ட இறையருளை முன்னிட்டு உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்துகிறேன். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்றுச் சொல்வன்மையும் நிறையறிவும் பெற்று, எல்லா வகையிலும் செல்வர்களானீர்கள்.மேலும் கிறிஸ்துவைப்பற்றிய சான்று உங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காகக் காத்திருக்கும் உங்களுக்கு அருள்கொடை எதிலும் குறையே இல்லை.நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் நீங்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க அவர் உங்களை இறுதிவரை உறுதிப்படுத்துவார். கடவுள் நம்பிக்கைக்குரியவர்: தம் மகனும் நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நட்புறவில் பங்குபெற உங்களை அவர் அழைத்துள்ளார்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.- இறைவா உமக்கு நன்றி.
நற்செய்தி வாசகம்:
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (13:3-37)
இயேசு கோவிலுக்கு எதிராக உள்ள ஒலிவ மலைமீது அமர்ந்திருந்த போது பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா ஆகியோர் அவரிடம் தனியாக வந்து, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவையனைத்தும் நிறைவேறப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன? எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டனர். அதற்கு இயேசு அவர்களிடம் கூறியது: உங்களை யாரும் நெறிதவறச் செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, நானே அவர் என்று சொல்லிப் பலரை நெறிதவறச் செய்வர். போர் முழக்கங்களையும் போர்களைப்பற்றிய செய்திகளையும் கேட்கும் பொழுது நீங்கள் திடுக்கிடாதீர்கள். இவை நிகழத்தான் வேண்டும். ஆனால் இவையே முடிவாகா. நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும்: பல இடங்களில் நில நடுக்கங்கள் ஏற்படும்: பஞ்சமும் உண்டாகும். இவை கொடும் வேதனைகளின் தொடக்கமே. நீங்கள் கவனமாயிருங்கள்: உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள்: தொழுகைக்கூடங்களில் உங்களை நையப்புடைப்பார்கள்: என் பொருட்டு ஆளுநர் முன்னும் அரசர் முன்னும் நிறுத்தப்பட்டு அவர்கள் முன் எனக்குச் சான்று பகர்வீர்கள். ஆனால் எல்லா மக்களினத்தவர்க்கும் முதலில் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும். அவர்கள் உங்களைக் கைதுசெய்து கொண்டு செல்லும்போது என்ன பேசுவது என நீங்கள் முன்னதாகவே கவலைப்பட வேண்டாம்: அந்த நேரத்தில் உங்களுக்கு அருளப்படுவதையே பேசுங்கள். ஏனெனில் பேசுவோர் நீங்கள் அல்ல. மாறாக, தூய ஆவியாரே. மேலும் சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும் தந்தை பிள்ளையையும் கொல்வதற்கு என ஒப்புவிப்பர்: பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழும்பி அவர்களைக் கொல்வார்கள். எனது பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பர். ஆனால் இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர். 'நடுங்க வைக்கும் தீட்டு நிற்கக்கூடாத இடத்தில் நிற்பதை நீங்கள் காண்பீர்கள். படிப்பவர் இதைப் புரிந்து கொள்ளட்டும். அப்போது யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும். வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் கீழே இறங்க வேண்டாம்: தம் வீட்டினின்று எதையும் எடுக்க அதில் நுழையவும் வேண்டாம். வயலில் இருப்பவர் தம் மேலுடையை எடுக்கத் திரும்பி வர வேண்டாம். அந்நாள்களில் கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோர் நிலைமை அந்தோ பரிதாபம்! இவை குளிர்காலத்தில் நிகழாதபடி இறைவனிடம் வேண்டுங்கள். ஏனெனில் இவை துன்பம்தரும் நாள்களாய் இருக்கும். கடவுள் படைக்கத் தொடங்கிய காலத்திலிருந்து இந்நாள்வரை இத்தகைய வேதனை உண்டானதில்லை: இனிமேலும் உண்டாகப் போவதில்லை. ஆண்டவர் அந்நாள்களைக் குறைக்காவிடில் எவரும் தப்பிப் பிழைக்க முடியாது. ஆனால் தாம் தேர்ந்து கொண்டவர்களின் பொருட்டு அவர் அந்நாள்களைக் குறைத்திருக்கிறார். அப்பொழுது யாராவது உங்களிடம், இதோ, மெசியா இங்கே இருக்கிறார்: அதோ, அங்கே இருக்கிறார் எனச் சொன்னால் நீங்கள் நம்ப வேண்டாம். ஏனெனில் போலி மெசியாக்களும் போலி இறைவாக்கினர்களும் தோன்றி, முடியுமானால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களையே நெறிதவறச் செய்ய அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் செய்து காட்டுவர். நீங்களோ கவனமாயிருங்கள். அனைத்தையும் முன்னதாகவே உங்களுக்குச் சொல்லிவிட்டேன். அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்: நிலா ஒளிகொடாது. விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்: வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள். பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார். அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். இவையனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்: ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா. ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது: விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது. கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது. நெடும்பயணம் செல்லவிருக்கும் ஒருவர் தம் வீட்டைவிட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப்பாளராக்கி, விழிப்பாயிருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார். அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது. அவர் திடீரென்று வந்து நீங்கள் தூங்குவதைக் காணக்கூடாது. நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்: விழிப்பாயிருங்கள்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
மன்றாட்டுக்கள்:
- இரக்கமே நிறைந்த எங்கள் இனிய தேவனே! எம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்களையும், அருட்பணியாளர்களையும் நிறைவாக ஆசீர்வதித்து இறைமக்களை இத்திருவருகைக் காலத்தில் சிறப்பாக கிறிஸ்து பிறப்பு பெருவிழாவிற்கு நன்கு தயாரிக்க தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- எல்லாம் வல்ல இறைவா! இத்திருவருகைக் காலத்தில் எம் பங்கு மக்கள் அனைவரும், இறையன்பு, பிறரன்பு இவற்றில் நாளும் வளர்ந்து கிறிஸ்துவுக்கு ஏற்ற சாட்சிகளாக திகழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- நீதியின் இறைவா! எம் நாட்டுத் தலைவர்கள் அனைவரும் நாட்டை முன்னேற்றப் பாதையில் வழிநடத்தி செல்ல நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி தொழில்வளம் பெருகவும், வேலை வாய்ப்பு கிடைத்திடவும் இதன் மூலம் நாட்டில் வறுமை நீங்கிடவும் அனைவரும் வளமுடன் வாழ தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- எங்கள் அன்பின் ஆண்டவரே! எம் பங்கு பணியாளர்கள் பங்கின் வளர்ச்சிக்காக எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் பங்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்து, பங்கை எல்லா துறைகளிலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.