குருத்துவம் - மறையறிவு
முன்னுரை: ஓர் உடலாக விசுவாசிகளை ஒன்று சேர்க்கும்படி, அவர்களில் சிலரை ஆண்டவர் பணியாளர்களாக ஏற்படுத்தினார். அவ்வுடலில் உறுப்புகள் எல்லாம் ஒரே செயலைச் செய்வதில்லை. (உரோ.12 : 4) இப்பணியாளர்கள் விசுவாசிகளின் சமூகத்தில் குருத்துவ நிலையின் புனித அதிகாரத்தைக் கொண்டு பலி ஒப்புக் கொடுக்கிறார்கள், பாவங்களை மன்னிக்கிறார்கள், மேலும் குருத்துவ அலுவலை மக்களுக்கு கிறிஸ்துவின் பெயரால் வெளிப்படையாக நிறைவேற்றுகிறார்கள். ஆகவே, தந்தையால் தாம் அனுப்பபட்டது போல், கிறிஸ்து மறை தூதர்களை அனுப்பி வைத்தார்.
அதே மறைதூதர்களின் வழியாகவே அவர்களின் வழிவருபவர்களான ஆயர்களுக்குத் தம்முடைய அர்ச்சிப்பிலும் பணியிலும் பங்கு அளித்தார். ஆயர்களோடு சார்ந்து நின்று அவர்களது பணியில் குருக்கள் பங்கு கொள்கிறார்கள். இவ்வாறு குருத்துவ நிலையில் நியமிக்கப்பட்டவர்கள் கிறிஸ்துவால் ஒப்படைக்கப்பட்ட மறைத்தூதுப் பணியைச் சரிவர நிறைவேற்றும் பொறுட்டு ஆயர் திருநிலையுடன் ஒத்துழைப்பவர்கள் ஆகிறார்கள்.
குருத்துவம் வழியே குருக்கள் தூய ஆவியின் பூசுதலால் ஒரு தனிப்பட்ட முத்திரை கொண்டு குறிக்கப்படுகிறார்கள். இவ்வாறு தலையாகிய கிறிஸ்துவின் பெயரால் செயல்படும்படி, அவர்கள் குருவாகிய கிறிஸ்துவின் சாயலைப் பெறுகிறார்கள். (குருக்களின் பணியும் வாழ்வும், 2)
பொதுக் குருத்துவம்: கிறிஸ்துவில் திருமுழுக்குப் பெற்ற நாம் அனைவரும் கிறிஸ்துவின் பொது குருத்துவத்தில் பங்கு கொள்கிறோம். நமது சொல்லாலும் செயலாலும் கிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்க அழைக்கப்படுகிறோம். இப்பணிக்காக இறைவன் சிலரை தனிப்பட்ட முறையில் அழைக்கிறார்.இந்த அழைப்பை பெறுகிறவர்கள் இறைப்பணி செய்வதற்காக தங்கள் வாழ்கையை அர்ப்பணிக்கிறார்கள். மனைவி, பிள்ளைகள் என்ற குடும்ப உறவைத் தவிர்த்து இறைவனுக்கும் அவருடைய மக்களுக்கும் பணிசெய்ய சிறப்பாக அழைக்கப்படுகிறார்கள்.
குருத்துவத்தின் மூன்று நிலைகள்: இவ்வழைப்பில் மூன்று நிலைகள் உள்ளன. திருத்தொண்டர் (தியாக்கோன்), குரு, மற்றும் ஆயர். இந்திய திருநாட்டில் இறைப்பணி செய்வதற்கு அதிக பேர் முன்வருவதால் திருத்தொண்டர் பணிக்கென யாரும் தனியாகத் திருநிலைப்படுத்தப் படுவதில்லை. குருவாககப் பயிற்சி பெறும் அனைத்து குருமாணவர்களும் தங்களின் பயிற்சியின் இறுதி ஆண்டிற்கு முந்திய ஆண்டில் திருத்தொண்டராக திருநிலைப்படுத்தப்படுகின்றனர். மேலை நாடுகளில் திருத்தொண்டர் பணிக்கென பயிற்சி பெற்று திருத்தெண்டர்களாக திருநிலைப்படுத்தப் படுகின்றனர். இத் திருத்தொண்டர்கள் திருமுழுக்கு, திருமணம், நோயில் பூசுதல் ஆகிய மூன்று திருவருட்சாதனங்களை நிறைவேற்றலாம். அவர்களின் முக்கிய பணி நற்செய்தி அறிவுப்புப் பணி. இவர்கள் பங்கு பணித்தள குருவோடு இணைந்து பணியாற்றுவார்கள்.
மறைமாவட்ட குருக்கள் : குருக்களாக திருநிலைப்படுத்தப் படுகிறவர்கள் இரு விதமான வாழ்கை முறையை தெரிந்து கொள்ளலாம். மறைமாவட்ட குருக்களாக தங்களின் ஆயரின் வழிநடத்துதலில், கற்பு, கீழ்படிதல் வாக்குறுதியின் படி வாழ்வார்கள். பொதுவாக தங்களின் சொந்த மறைமாவட்டத்தில் பங்குகளில் அல்லது மறைமாவட்ட நிர்வாகத்தின் ஏதாவது பொறுப்புகளில் பணிபுரிவார்கள். தங்களுடைய ஆயருக்கு கட்டுப்பட்டவர்கள்.
சபை சார்ந்த குருக்கள்: கத்தோலிகக திருச்சபையில் மறைமாவட்ட குருக்கள் தவிர சபை சார்ந்த குருக்களும் திருநிலைப்படுத்தப் படுகிறார்கள். இவர்கள் தங்கள் சபை எத்தகைய பணி வாழ்வை மையமாக வைத்து ஆரம்பிக்கப்பட்டதோ அத்தகைய பணிவாழ்விற்கு முக்கியத்துவம் கொடுத்து, தங்களில் சபைத் தலைவருடைய வழிநடத்துதலின் கீழ் கற்பு, கீழ்படிதல், ஏழ்மை ஆகிய வாக்குறுதியின் படி பொதுவாக இணைந்து(குறைந்தது இரண்டு அல்லது மூன்று பேர்) பணிசெய்வார்கள். உதாரணமாக இயேசு சபை குருக்கள், தூய பிரான்சிஸ்கன் அஸிஸி, சலேசிய குருக்கள், பல்வேறு கல்வி, சமூக, நிறுவனங்களிலும், பங்குத் தளங்களிலும் பணிசெய்வதைக் காணலாம். இவர்கள் தங்கள் சபை தலைவருக்கோ அல்லது அவரால் நியமிக்கப்பட்ட பதிலி தலைவருக்கோ கட்டுப்பட்டவர்கள்.
குருக்களின் பணிவாழ்வு: குருக்களின் பணிகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். நற்செய்தி அறிவிக்கும் பணி, வழிநடத்தும் பணி, ஆளும் பணி. குருக்களின் நற்செய்தி அறிவிப்புப் பணி என்பது பணித்தளத்தில் திருப்பலி ஒப்புக்கொடுப்பதிலும் மற்ற அருட்ச் சாதனங்களை நிறைவேற்றுவதும் சிறப்பாக நற்செய்தியை போதிப்பதிலும் வாழ்ந்து காட்டுவதிலும் அடங்கியுள்ளது. வழிநடத்தும் பணியானது பணித்தள மக்களை ஆன்மீக, சமுக தேவைகளில் தலைவராயிருந்து மக்களை வழிநடத்துவதிலும், வழிகாட்டுவதிலும் அடங்கியுள்ளது. ஆழும் பணியானது பங்குத் தளத்தில் நிர்வாக ரீதியாக அவர் ஆற்றும் பணிகளை உள்ளடக்கியது.
ஆயர் நிலை: குருத்துவத்தின் நிறைவு ஆயராக திருநிலைப்படுத்தப்படுதல். ஆயர் என்பவர் இயேசு கிறிஸ்துவின் நேரடி அப்போஸ்தலர்களின் வழிவந்தவர்கள். ஆயர் என்பவர் தம்முடைய பொறுப்பின் படி தம்மிடன் ஒப்படைக்கப்பட்ட மந்தையை காத்து, வழிநடத்தும் சிறப்புப் பணியைச் செய்ய அழைக்கப்படுகிறார். ஆயருக்கும் நற்செய்தி அறிவிக்கும் பணியும், வழிநடத்தும் பணியும் ஆளும் பணியும் முக்கியமான பணிகள்.
தேவ அழைத்தல்: தேவ அழைத்தல் என்பது இறைவன் அருளும் கொடை. யாரும் அதைப் பெற உரிமை கொண்டாட முடியாது. இறைவன் அழைத்தாலன்றி யாரும் இப்பணிக்கு வர இயலாது அதில் நிலைத்து நிற்கவும் இயலாது. குருவாவதற்கு கிறிஸ்தவராகவும், நல்ல உள்ளம் கொண்டவராகவும் இறைப்பணிசெய்ய ஆர்வமுள்ளவராகவும் நல்ல உடல்நலத்தைக் கொண்டவராகவும் இருக்கவேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள் அல்லது கல்லூரி முடித்தவர்கள் சேரத் தகுதியுடையவர்கள். முதலில் இரண்டு வருடங்கள் தயாரிப்பாகவும் மூன்று வருடங்கள் தத்துவ இயலும் ஒரு வருடம் இடைநிலைப் பயிற்சியும் பின்னர் நான்கு வருடங்கள் இறைஇயலும் பயிலவேண்டும். ஆக மொத்தம் குறைந்தது பத்து வருட தயாரிப்பு தேவை. மேலும் விபங்களுக்கு உங்கள் பங்குத் தந்தையை அனுகலாம்: தக்க விபரம் தருவார்கள்.
"இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்." (மத்தேயு 10 :42) என்ற நம் ஆண்டவரின் வார்த்தைக்கேற்ப இறைஅடியார்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்ய முற்பட வேண்டும். தேவ அழைத்தலுக்காகவும் குருக்களுக்காகவும் நாம் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும்.