கிறிஸ்துமஸ் இரவு திருப்பலி 24-12-2011
திருப்பலி முன்னுரை:
விண்ணகத் தந்தையின் பிள்ளைகளே!
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனித உருவிலே இம் மண்ணிலே பிறந்த இறைமகன் இயேசு கிறிஸ்து இன்று இந்த இரவிலே நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பிறக்க வேண்டும் என்ற ஏக்கத்தோடு இயேசுவின் பிறப்பை எதிர்நோக்கி இருக்கும் உங்கள் அனைவரையும் இந்த மாபெரும் அருட்சாதனக் கொண்டாட்டத்திற்கு தாயாம் திருச்சபை அன்புடன் வரவேற்கிறது. தந்தையாம் இறைவன் நம்மீது கொண்ட பேரன்பினால் பாவத்திலிருந்து நம்மை மீட்க திருவுளம் கொண்டார். இயேசு கிறிஸ்து தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற கடவுள் நிலையை விட்டு இறங்கி அடிமையின் வடிவை ஏற்று அன்னை மரியிடமிருந்து நம்மைப் போல் ஒரு சாதாரண மனிதனாகப் பிறந்தார்.
மனிதப் பிறப்பின் மூலம் கிறிஸ்து நமக்கு உணர்த்தும் அன்பு தியாகம் ஏழ்மை தாழ்ச்சி ஆகியவற்றைக் நாம் கடைபிடித்து வாழும் போது நம் வாழ்விலே கிறிஸ்து ஒவ்வொரு நாளும் பிறந்து கொண்டு தான் இருப்பார். இதோ இத்தியாகப் பலியினிலே இறைவார்த்தை வழியாகவும் நற்கருணை வடிவிலும் நம் உள்ளத்திலே பிறக்க இருக்கிறார் இயேசுபாலன். இயேசுவின் மாட்சி வெளிப்படப் போகிறது. நம் மேல் பேரொளி வீச உள்ளது. விண்ணகத் தூதரணி உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி பூவுலகில் நல்மனத்தோர்க்கு அமைதி என்று பாலனுக்கு பாடல் பாட இருக்கிறார்கள். நாமும் அவர்களோடு சேர்ந்து இயேசுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறி இயேசு பாலனே என் உள்ளத்திலே நீ பிறக்க வேண்டும். உம்மைப் போல நான் வாழ வேண்டும். உம் பிறப்பு என் வாழ்வில் மட்டுமல்ல எல்லோர் வாழ்விலும் அன்பையும் மகிழ்ச்சியையும் அமைதியையும் நிறைவையும் தர வேண்டும் என்று மன்றாடி பக்தியோடும் பெருமகிழ்ச்சியோடும் இப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகமுன்னுரை:
காரிருளில் நடந்த மக்கள் மீது சுடர் ஒளி உதித்துள்ளது. எனவே மக்கள் மகிழ்ச்சியில் அக்களிக்கிறார்கள். ஏனெனில் இன்று நமக்கு மீட்பர் பிறந்துள்ளார். அவர் ஆட்சி வலிமை மிகுந்தது. அமைதி நிறைந்தது. நீதி செழித்தது என்றும் நிலைபெயராதது என வரவிருக்கும் அரசரைப் பற்றி எசாயா இறைவாக்கினர் கூறும் வாசகத்திற்கு ஆர்வமுடன் செவிமெடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
கடவுளின் அருள் நம்மீது பொழியப்பட்டுள்ளது. இவ்வருளை வளப்படுத்த நாம் தீமையைக் களைய வேண்டும். ஏனெனில் இயேசுவின் மாட்சி வெளிப்படப் போகிறது. எனவே நாம் நம்மையே தூய்மையாக்க வேண்டும் என அறிவுறுத்தும் இவ்வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.
விசுவாசிகளின் மன்றாட்டு:
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.
- இயேசு பாலகனே எம் இறைவா! எம் திருச்சபையை ஆளும் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் திருத்தொண்டர்கள் ஆகியோரை ஆசிர்வதித்தருளும். அவர்கள் உம் மந்தையை விசுவாசத்திலும் செப வாழ்விலும் நாளும் வழி நடத்திச் செல்ல தேவையான அருள் வரங்களால் நிரப்பி அவர்களை நிரப்ப குழந்தை யேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
- அனைவருக்கும் மீட்பளிக்கும் எங்கள் அன்புத் தெய்வமே! நாட்டு நலப்பணிக்காக தங்களையே அர்ப்பணித்தவர்கள் உம்மைப் போன்று செல்லும் இடமெல்லாம் மக்கள் குறையைக்கண்டு அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்ய தாராள மனதை தந்தருள குழந்தை இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
- பாதை காட்டும் பரமனே! எம் பங்கு இளைஞர்கள் அனைவரும் பாதைகள் மாறி பாவ வழியில் சென்றிடாமல் உண்மையும் வாழ்வுமான உமது வழியில் நடந்து தூய்மையான வாழ்க்கை நடத்த தூய ஆவி துணைபுரிய குழந்தை இயேசுவே வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
- வழிகாட்டும் இறைவா! ஒரே குடும்பமாக கூடியுள்ள எம் பங்கு மக்கள் அனைவருக்காகவும் வேண்டுகிறோம். தங்களின் அன்றாட வாழ்வில் உம்மை பிரதிபலிக்கவும் பிறர் நலனில் அவர்கள் அக்கறைக் கொண்டு வாழவும் குழந்தை இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
- ஏழ்மையில் பிறந்த எம் இறைவா! உலகில் உள்ள ஏழைகளுக்காக மன்றாடுகிறோம். அவர்கள் தங்கள் வாழ்வில் மேன்மையை காண மகிழ்ச்சியில் என்றும் வாழ குழந்தை யேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
Prepared by:
- William Edward
- Arokia Rajesh
- Maria Vinod Kumar doing Spirituality Course at St. John’s Propaedeutic Seminary, Cuddalore
கிறிஸ்துமஸ் காலைத் திருப்பலி 25-12-2011
திருப்பலி முன்னுரை:
நல்லவர்கள் இறந்தால் கடவுளிடம் செல்கிறார்கள். நல்லவர்கள் வாழ்ந்தால் கடவுள் அவர்களைத் தேடி வருகிறார். அதுபோலவே வரலாற்றின்படி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து 2000 வருடங்களுக்கு முன்பு பிறந்திருந்தாலும் அவற்றின் நினைவு தினமான இன்று தகுந்த தயாரிப்பிற்கு பி;ன் ஒவ்வொருவரும் தனித்தனியாக அவரவர் உள்ளங்களிலே குழந்தை பாலன் இயேசுவை முழுமையாக பெற காத்திருக்கும் இறைமக்களே! கடவுள் மனிதனை படைத்ததற்கு பல காரணங்கள் இருந்தாலும் அவற்றில் ஒன்று கடவுளைப்போன்று சுதந்தரமாக வாழ்வது ஆனால் அதை புறக்கணித்த ஆதிப்பெற்றோர்கள் மூலம் வந்த பாவத்தை போக்கவே கடவுள் தாம் அன்பு கொண்ட இவ்வுலகத்திற்கு தம் அன்பு மகனை அன்போடு அனுப்பும் நாள் இந்நாள். எனவே இந்நாளிலே ஆண்டவர் இயேசு நம் உள்ளத்திலே பிறப்பது நம் மட்டிலா மகிழ்ச்சிக்காக மட்டுமல்;ல. மாறாக பாவத்தை போக்கி அதன் மூலம் வரும் மட்டில்லா மகிழ்ச்சியைப் பெற என சிந்தித்தவர்களாய் கடவுளுக்கு நன்றி பலி செலுத்துவோம்.
முதல் வாசக முன்னுரை:
எசாயா புத்தகத்தி;ன் கடைசி பகுதி நெறிதவறியோர்க்கு எச்சரிக்கைகளையும் உண்மை வழி நடப்போருக்கு மகிழ்ச்சியான வாக்குறுதிகளையும் கொடுக்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில் மீட்பு வருகின்றது என்ற மகிழ்ச்சியின் வாக்குறுதி தரப்படுகிறது. மனக்கதவை திறந்து வைத்து கவனமுடன் வரவேற்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை:
பல வகையான தீமைகளாலும் தீய நாட்டங்களாலும் அடிமையாக இருந்த நமக்கு தந்தை கடவுள் இரக்கம் காட்டினார். நம்மை புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும் தூய ஆவியாரினாலும் மீட்க அவர் திருவுளம் கொண்டார். இந்த மீட்புச் செயலை தம் ஒரே மகன் இயேசு கிறிஸ்து வழியாக அருளி நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வை நமக்கு சொந்தமாக்கினார் என்று கூறும் இவ்வாசகத்திற்கு கவனமுடன் செவிமெடுப்போம்.
விசுவாசிகளின் மன்றாட்டு:
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.
- அன்பின் இறைவா! எங்கள் திருதந்தை ஆயர்கள் குருக்கள் திருத்தொண்டர்கள் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். அவர்கள் பிறந்த குழந்தை இயேசுவின் ஆசீரோடு திருச்சபையை நன்கு வழிநடத்த கிருபை தர பாலன் இயேசு வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
- அன்பின் இறைவா! எங்கள் நாட்டுத்தலைவர்களுக்காக மன்றாடுகிறோம். அவர்கள் மக்கள் நலனை கருத்தில் கொண்டவர்களாய் மக்கள் தேவைகளை பூர்த்திச் செய்கின்ற நல்ல ஊழியர்களாக இருக்க உமது ஞானத்தை அவர்களுக்கு தர பாலன் இயேசு வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
- அன்பின் இறைவா! இன்று கிறிஸ்துமஸ் பெருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற ஒவ்வொருவரும் வெறும் ஆடம்பரத்தை முன் வைக்காமல் கிறிஸ்து வருகையின் நோக்கத்தை நன்கு புரிந்துக் கொண்டவர்களாக இனிவருகின்ற நாட்களில் வாழ்வை அர்த்தமுள்ளதாக்க உமது நிறைவான ஆசிரை பொழிய பாலன் இயேசு வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
- அன்பின் இறைவா! இன்று எத்தனையோ பேர் வறுமையின் பிடியில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இந்த கிறிஸ்துமஸ் பெருவிழாவில் உண்மையான மகிழ்ச்சியை கண்டுணர பாலன் இயேசு வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
- அன்பின் இறைவா! சமுதாயத்தில் உள்ள அனாதைகள் கைவிடப்பட்டோர் ஒடுக்கப்பட்டவர்கள் மதிப்பற்றவர்கள் அவர்கள் தங்களின் அரசர் பிறந்துள்ளார் என்ற மனநிறைவைப் பெற்றுக் கொள்ள உமது ஆசிரை பொழிய பாலன் இயேசு வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
Prepared by:
- William Edward
- Arokia Rajesh
- Maria Vinod Kumar doing Spirituality Course at St. John’s Propaedeutic Seminary, Cuddalore
இடையர்கள் தந்த காணிக்கை போல
இடையர்கள் தந்த காணிக்கை போல
இருப்பதை நானும் எடுத்து வந்தேன்
கொடைகளில் எல்லாம் சிறந்த என் இதயம்
கொடுப்பது நலம் என படைத்து நின்றேன் (2)
இயேசு பாலனே ஏற்றிடுமே
நேச ராஜனே ஏற்றிடுமே (2)
1. கடைநிலை வாழும் மனிதரை மீட்க
அடிமையின் தன்மையை எடுத்தவனே
உடைமைகள் பதவிகள் யாவையும் துறந்து
மடமையில் மகிமையைக் கொடுத்தவனே (2) - இயேசு...
2. நிலைதடுமாறும் மனங்களில் நிறைந்து
நிம்மதி தந்திட வந்தவனே
வலைகளில் மீன்களைப் பிடிப்பதைப் போல
மனிதரை வானகம் சேர்ப்பவனே (2) - இயேசு...
திருவருகைக்கால 4ஆம் ஞாயிறு (2ஆம் ஆண்டு) 18-12-2011
முன்னுரை: அன்புக்குரிய சகோதரமே, நமது உள்ளம் நமது மனம் அருள் நிறைந்ததாக அதாவது நூற்றுகக்கு நூறு பரிசுத்தமாக இருந்தால் நமது உள்ளத்திற்குள், மனதுக்குள் இயேசு பிறப்பார். இயேசு பிறப்பு விழாவிற்கு வெளி அலங்காரத்தைவிட உள் அலங்காரம் தேவை. நமது கடவுள் மக்கள் நடுவே வாழ ஆசைப்படும் கடவுள். எனவே பிறக்க இருக்கும் இயேசுபாலன் நம்மோடு வாழ வேண்டுமென்றால் இறையருளால் நமது ஆன்மா நிரப்பப்பட வேண்டும். அந்த ஆவியானவரின் அருளைப் பெற தொடரும் இத்திருப்பலியில் மன்றாடுவோம்.
முதல் வாசக முன்னுரை: கடவுள் மக்கள் நடுவே வாழும் கடவுளாக தன்னை வெளிப்படுத்துகிறார். நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது உடனிருப்பால் நமது உள்ளமும், இல்லமும் நிரப்பப்படவேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று இறைவாக்குக் கூறும் கருத்தினை கேட்போம்.
அரசர் தம் அரண்மனையில் குடியேறியப்பின், சுற்றிலிருந்த எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார். அப்போது இறைவாக்கினர் நாத்தானைத் தாவீது அழைத்து, பாரும் நான் கேதுரு மரங்களான அரண்மனையில் நான் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் வாழ்கிறது என்று கூறினார். அதற்கு நாத்தான் நீர் விரும்பிய அனைத்தையும் செய்துவிடும்: ஏனெனில் ஆண்டவர் என்னோடு இருக்கிறார் என்று அரசனிடம் சொன்னார். அன்று இரவே ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது. நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: நான் தங்குவதற்காக எனக்கு கோவில் கட்டப்போகிறாயா? எனது ஊழியன் தாவீதிடம் படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன். நீ சென்றவிடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்: உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்: மேலும் உலகில் வாழும் பெரும் மனிதர் போல் நீ புகழுறச் செய்தேன். எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன். அவர்கள் அந்த இடத்திலேயே வாழ வைப்பேன். என் மக்களாகிய இஸ்ரயேல் மீதும் நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்கத்தில் தீயவர்கள் அவர்கள் ஒடுக்கப்பட்டது போல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். அனைவரின் தொல்லைகளினின்றும் எனக்கு நான் ஓய்வு அளிப்பேன். மேலும் ஆண்டவர் தாமே என் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார். வாழ் நாள் நிறைவுபெற்று நீ என் மூதாதையரோடு துயில்கொள்ளும் போது, உனக்கு பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப் பின் நான் உயர்த்தி அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். நான் அவனுக்கு தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் தவறு செய்யும்போது மனித இயல்புக்கேற்ப அடித்து, மனிதருக்கே உரிய துன்பங்களைத் தருவேன். முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.- இறைவா உமக்கு நன்றி.
இரண்டாம் வாசக முன்னுரை: நாம் ஒவ்வொருவரும் நன்மை செய்து வாழ வேண்டும். பிறரோடு பழகும்போது அன்பாக பழக வேண்டும். நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வேண்டும் என்ற ஆழந்த சிந்தனையுடன் கருத்துக்களை கூறும் பவுல் அடிகளாரின் அறிவுரையை வாசிக்க கேட்போம்.
இயேசு கிறிஸ்துவைப் பற்றி நான் பறைசாற்றும் நற்செய்திக்கு ஏற்ப வாழக் கடவுள் உங்களை உறுதிப்படுத்த வல்லவர். ஊழி காலமாக மறைபொருளாக இருந்த இந்த நற்செய்தி இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இறைவாக்கினர் வாயிலாக இது நமக்குத் தெளிவாகியுள்ளது. என்றும் வாழும் கடவுளின் கட்டளைப்படி எல்லா மக்களினங்களுக்கும் அது தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொள்வர். ஞானமே உருவாகிய கடவுள் ஒருவருக்கே இயேசு கிறிஸ்துவின் வழியாய் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.- இறைவா உமக்கு நன்றி.
நற்செய்தி வாசகம்:
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (லூக். 1:26-38)
ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, 'அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, 'மரியா, அஞ்சவேண்டாம்: கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்: அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்: உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது'என்றார். அதற்கு மரியா வானதூதரிடம், 'இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!' என்றார். வானதூதர் அவரிடம், 'தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை' என்றார். பின்னர் மரியா, 'நான் ஆண்டவரின் அடிமை: உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்' என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
மன்றாட்டுக்கள்:
- அன்பு தெய்வமே இறைவா, எம் திருச்சபையின் தலைவர்களை உமது பாதத்தில் சமர்ப்பிக்கின்றோம். அனைவருக்கும் உமது ஆவியின் அருளைப் பொழிந்து நற்செய்தியை சிறப்புடன் மக்களுக்கு வழங்கி திருச்சபையை சிறந்த முறையில் கட்டி எழுப்ப தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- கருணையின் தெய்வமே, எம் பங்கு பணியாளரை நிறைவாக ஆசீர்வதியும், பங்கின் முன்னேற்றப் பணிகளில் அவர்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளிலும், பங்கு மக்கள் ஒத்துழைப்பு தந்திட அருள்புரிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
- நீதியின் இறைவா, எம் பங்கு மக்கள் ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு உம்மை அன்பு செய்து ஏற்றுக்கொண்டு வாழ அருள் புரிய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- இறைவா! உமது பிறப்பு பெருவிழாவிற்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கும் இந்நாட்களில் ஏழை, எளியவர்களிடத்தில், இரக்கம் உள்ளவர்களாக வாழவும், வியாதினால் வருந்துகின்றவர்களை சந்தித்து ஆதரவு அளித்திடவும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
பெத்தலையில் பிறந்தவரை
பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே - இன்னும்
1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் - இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் - பெத்
2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் - இங்கு
பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் - பெத்
3.முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக ௦ - இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே - பெத்
4.ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் - இங்கு
ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் - பெத்
5.இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை - நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே – பெத்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)