கிறிஸ்துமஸ் இரவு திருப்பலி 24-12-2011
திருப்பலி முன்னுரை:
விண்ணகத் தந்தையின் பிள்ளைகளே!
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனித உருவிலே இம் மண்ணிலே பிறந்த இறைமகன் இயேசு கிறிஸ்து இன்று இந்த இரவிலே நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பிறக்க வேண்டும் என்ற ஏக்கத்தோடு இயேசுவின் பிறப்பை எதிர்நோக்கி இருக்கும் உங்கள் அனைவரையும் இந்த மாபெரும் அருட்சாதனக் கொண்டாட்டத்திற்கு தாயாம் திருச்சபை அன்புடன் வரவேற்கிறது. தந்தையாம் இறைவன் நம்மீது கொண்ட பேரன்பினால் பாவத்திலிருந்து நம்மை மீட்க திருவுளம் கொண்டார். இயேசு கிறிஸ்து தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற கடவுள் நிலையை விட்டு இறங்கி அடிமையின் வடிவை ஏற்று அன்னை மரியிடமிருந்து நம்மைப் போல் ஒரு சாதாரண மனிதனாகப் பிறந்தார்.
மனிதப் பிறப்பின் மூலம் கிறிஸ்து நமக்கு உணர்த்தும் அன்பு தியாகம் ஏழ்மை தாழ்ச்சி ஆகியவற்றைக் நாம் கடைபிடித்து வாழும் போது நம் வாழ்விலே கிறிஸ்து ஒவ்வொரு நாளும் பிறந்து கொண்டு தான் இருப்பார். இதோ இத்தியாகப் பலியினிலே இறைவார்த்தை வழியாகவும் நற்கருணை வடிவிலும் நம் உள்ளத்திலே பிறக்க இருக்கிறார் இயேசுபாலன். இயேசுவின் மாட்சி வெளிப்படப் போகிறது. நம் மேல் பேரொளி வீச உள்ளது. விண்ணகத் தூதரணி உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி பூவுலகில் நல்மனத்தோர்க்கு அமைதி என்று பாலனுக்கு பாடல் பாட இருக்கிறார்கள். நாமும் அவர்களோடு சேர்ந்து இயேசுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறி இயேசு பாலனே என் உள்ளத்திலே நீ பிறக்க வேண்டும். உம்மைப் போல நான் வாழ வேண்டும். உம் பிறப்பு என் வாழ்வில் மட்டுமல்ல எல்லோர் வாழ்விலும் அன்பையும் மகிழ்ச்சியையும் அமைதியையும் நிறைவையும் தர வேண்டும் என்று மன்றாடி பக்தியோடும் பெருமகிழ்ச்சியோடும் இப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகமுன்னுரை:
காரிருளில் நடந்த மக்கள் மீது சுடர் ஒளி உதித்துள்ளது. எனவே மக்கள் மகிழ்ச்சியில் அக்களிக்கிறார்கள். ஏனெனில் இன்று நமக்கு மீட்பர் பிறந்துள்ளார். அவர் ஆட்சி வலிமை மிகுந்தது. அமைதி நிறைந்தது. நீதி செழித்தது என்றும் நிலைபெயராதது என வரவிருக்கும் அரசரைப் பற்றி எசாயா இறைவாக்கினர் கூறும் வாசகத்திற்கு ஆர்வமுடன் செவிமெடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
கடவுளின் அருள் நம்மீது பொழியப்பட்டுள்ளது. இவ்வருளை வளப்படுத்த நாம் தீமையைக் களைய வேண்டும். ஏனெனில் இயேசுவின் மாட்சி வெளிப்படப் போகிறது. எனவே நாம் நம்மையே தூய்மையாக்க வேண்டும் என அறிவுறுத்தும் இவ்வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.
விசுவாசிகளின் மன்றாட்டு:
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.
- இயேசு பாலகனே எம் இறைவா! எம் திருச்சபையை ஆளும் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் திருத்தொண்டர்கள் ஆகியோரை ஆசிர்வதித்தருளும். அவர்கள் உம் மந்தையை விசுவாசத்திலும் செப வாழ்விலும் நாளும் வழி நடத்திச் செல்ல தேவையான அருள் வரங்களால் நிரப்பி அவர்களை நிரப்ப குழந்தை யேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
- அனைவருக்கும் மீட்பளிக்கும் எங்கள் அன்புத் தெய்வமே! நாட்டு நலப்பணிக்காக தங்களையே அர்ப்பணித்தவர்கள் உம்மைப் போன்று செல்லும் இடமெல்லாம் மக்கள் குறையைக்கண்டு அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்ய தாராள மனதை தந்தருள குழந்தை இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
- பாதை காட்டும் பரமனே! எம் பங்கு இளைஞர்கள் அனைவரும் பாதைகள் மாறி பாவ வழியில் சென்றிடாமல் உண்மையும் வாழ்வுமான உமது வழியில் நடந்து தூய்மையான வாழ்க்கை நடத்த தூய ஆவி துணைபுரிய குழந்தை இயேசுவே வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
- வழிகாட்டும் இறைவா! ஒரே குடும்பமாக கூடியுள்ள எம் பங்கு மக்கள் அனைவருக்காகவும் வேண்டுகிறோம். தங்களின் அன்றாட வாழ்வில் உம்மை பிரதிபலிக்கவும் பிறர் நலனில் அவர்கள் அக்கறைக் கொண்டு வாழவும் குழந்தை இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
- ஏழ்மையில் பிறந்த எம் இறைவா! உலகில் உள்ள ஏழைகளுக்காக மன்றாடுகிறோம். அவர்கள் தங்கள் வாழ்வில் மேன்மையை காண மகிழ்ச்சியில் என்றும் வாழ குழந்தை யேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
Prepared by:
- William Edward
- Arokia Rajesh
- Maria Vinod Kumar doing Spirituality Course at St. John’s Propaedeutic Seminary, Cuddalore
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக