புத்தாண்டு விழா

முன்னுரை
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்.
இறை இயேசுவில் பிரியமானவர்களே! இந்த நாள் இனிய நாள். இன்று புத்தாண்டு விழாவையும், அன்னை மரியா இறைவனின் தாய் என்ற விழாவையும் இணைத்து திருச்சபை கொண்டாடுகிறது. புதிய நாளை காண வாய்ப்புக் கொடுத்த ஆண்டவரைப் போற்றுவோம், நன்றி கூறுவோம். கடந்த ஆண்டு இறைவன் வழியாக பெற்ற நன்மைகளை நன்றியோடு நினைவு கூறுவோம். நம் உறவுகளுக்கு உறுதியூட்டுவோம் ஒவ்வொரு கணமும் ஆண்டவரின் அருள் தரும் நாளாக மாற ஆண்டவரை இறைஞ்சுவோம். தீர்க்கமான முடிவுகளை எடுக்கவும், இன்ப துன்பங்களை சமமாக பார்த்து சரித்திரம் படைக்கவும், அமைதியான உலகை உருவாக்க அன்னையின் துணையை வேண்டி இக்கல்வாரி பலியில் ஒன்றிணைவோம்.
முதல் வாசகம் (எண் 6:22-27)
ஆண்டவர் அனைவருக்கும் ஆசீர் வழங்குகின்றார் அதை நாம்தான் உணரவில்லை. ஆண்டவரின் ஆசீர் பாதுகாப்பை உறுதிசெய்கிறது. அமைதியை தருகிறது. அருள் பொழிகிறது என விளக்கும் முதல் வாசகத்தை திறந்த மனதுடன் கேட்போம்.
இரண்டாம் வாசகம் (கலா 4:4-7)
சட்டத்திற்கு அடிமையாகி, சுதந்தர வாழ்வை இழந்து வாழ்ந்த நம்மை மீட்கவே கடவுள் மனிதரானார். கடவுள் தம் ஆவியை பொழிந்ததினால் நாம் அவரை அப்பா என அழைக்கும் உரிமை பிள்ளைகளானோம். இறை பிள்ளைகளாய் வாழ இரண்டாம் வாசகத்தை கவனமுடன் கேட்போம்.
இறைமக்களின் வேண்டல்

1. அன்பின் இறைவா! திருச்சபையை வழிநடத்தும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் அனைவரும் உம் சமாதான கருவிகளாய் திகழவும், இறையரசின் விழுமியங்களை நிலைநாட்ட தேவையான உடல், உள்ள நலனை தர இறiவா உம்மை மன்றாடுகிறோம்.
2. சமாதானம் அளிக்கும் இறைவா! எம் நாட்டுத் தலைவர்கள், சமூகத் தலைவர்களை உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். அவர்கள் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லவும், இவ்வுலகில் அமைதியை நிலைநாட்டி, நாடுகளிடையே சமூக உறவை வளர்க்க தேவையான பரந்த மனதை தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. அருள் பொழியும் தலைவா! உலக மக்கள் சுயநலத்தை விடுத்து, பிறர் நலம் காக்க சுற்றுபுற சுகாதாரத்தை பாதுகாக்கவும், வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு உதவி செய்யவும், சமூக பாகுபாடுகள் ஒழிந்து சமத்துவம் கிடைக்கவும், ஏழ்மை நீங்கி மக்கள் புதுவாழ்வு பெற வேண்டிய வரங்களை தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. அரவணைக்கும் நல்தெய்வமே! புதிய ஆண்டில் நாங்கள் செய்யும் தொழிலை ஆசீர்வதியும். எங்கள் குடும்பத்தில் சமாதானம் நிலவவும், எங்கள் செயல்கள் உமக்கு உகந்தவைகளாய் மாறவும், எங்கள் அருகில் வாழும் மக்களின் தேவைகள் நிறைவேறவும், தேவையான அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நற்செய்தி முழக்கம் (லூக் 2: 16-21)

இறை இயேசுவில் பிரியமானவர்களே! இன்று தாய் திருச்சபை இரண்டு விழாக்களை இணைத்து கொண்டாடி மகிழ்கிறது. 1. அன்னை மரியா இறைவனின் தாய் 2. புத்தாண்டு விழா. ஜானஸ் என்ற உரோமை கடவுளின் பெயரில் இருந்து ஜனவரி என்ற மாதம் உருவானது. இந்த உரோமை கடவுளுக்கு இரண்டு தலைகள் இருக்கும். ஒன்று முன்னோக்கியும், மற்றொன்று பின்னோக்கியும் இருக்கும், இது எதை குறிக்கிறது? நாம் கடந்து வந்த காலம், விட்டு வந்த தடங்கள், மகிழ்ச்சியான நேரங்கள், கசப்பான அனுபவங்கள், சாதனைகளை திரும்பி பார்த்து நினைவு கூறவும், வரவிருக்கின்ற புதிய ஆண்டில் நம் கண்முன் நிற்கும் சவால்களை எதிர்நோக்கிச் செல்ல வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
அன்னை மரியா - இறைவனின் தாய்
மரியா, இயேசுவின் தாய், இறைவனின் தாய் என்னும் உண்மை, விவிலியத்திலும், வரலாற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட, மறுக்கப்படமுடியாத ஓர் உண்மை. தொடக்க காலத்திலிருந்தே, மரியாவை இறைவனின் தாய் என போற்றி வணங்கி வந்தனர். கி.பி.429 ம் ஆண்டு ஒரு ஞாயிற்று கிழமையன்று கான்ஸ்ந்தாந்தி நோபிள் என்ற நகரில் நெஸ்டோரியஸ் என்ற ஆயர் தன்னுடைய மறையுரையில் மரியா மனித தன்மையில் இருந்த இயேசுவின் தாயேயன்றி, இறைவனின் தாயல்ல என்று குறிப்பிட்டு, யார் யாரெல்லாம் மரியாவை இறைவனின் தாய் என்கிறார்களோ அவர்கள் திருச்சபைக்கு எதிரானவர்கள் என்று குறிப்பிட்டார்.

இதை மறுத்து கி.பி.431ல் எபேசு நகர் பொது சங்கம் theotokos (தெயோடோகோஸ்) என்ற கிரேக்க சொல்லை பயன்படுத்தி, மரியா இறைவனின் தாய் என்று பிரகடனப்படுத்தியது. தெயோஸ் என்றால் கடவுள், டோக்கோஸ் என்றால் ஈன்றெடுத்தவர் என்பது பொருள்.

புதிய ஆண்டிலே அடி எடுத்து வைக்கின்ற நமக்கும் நம்முடைய குடும்பத்தினருக்கும் ஆண்டவர் கூறுவது: எனது ஆசீர்வாதம் என்றும் உங்களுக்கு உண்டு. இந்த ஆண்டு முழுவதும் உனக்கு அமைதி தருவேன் என்கிறார். இன்றைய முதல் வாசகம் (எண் 6:22-27) குருத்துவ ஆசிமொழிகள் பற்றி குறிப்பிடுகிறது. ஆண்டவரின் ஆசீர்வாதம் பெற ஒவ்வொரு மனிதரும் விரும்புகின்றனர். மக்கள் செல்வங்களில் ஆண்மக்கள் ஆசீர், பெண்மக்கள் சாபம் என்ற கருத்து மக்கள் மனதில் இருந்தது. தால்மூத் என்னும் யூத விளக்கவுரை நூல் எண் 6:24 க்கு இவ்வாறு விளக்கமளிக்கிறது.

ஆண்டவர் உனக்கு ஆண்பிள்ளை என்னும் ஆசி வழங்கி, பெண் பிள்ளையினின்று உன்னை காப்பாராக என்கிறது. பழைய ஏற்பாட்டில், ஆண்டவர் ஆபிரகாமிடம் உனக்கு ஆசி வழங்குவேன் … நீயே ஆசியாக விளங்குவாய்… உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் ஆசி பெறும் என்றார் (தொநூ 12:2-3). யாக்கோபு ஆற்றுத்துறையில் ஒரு நபரோடு போராடியபோது, நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மை போகவிடமாட்டேன் என்று கூறினார் (தொநூ 32:26).

புதிய ஏற்பாட்டில், பெண்களுக்குள் ஆசி பெற்றவர் என்ற வாழ்த்தினை பெற்ற மரியா (லூக் 1:42) கடவுளின் திருவுளத்தை செயல்படுத்த துன்பம் ஏற்ற ஓர் உண்மையான அடியவராக விளங்கினார்.

ஆண்டவரின் ஆசீர்வாதம்தான் தீமையிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. திபா 121:8ல் பார்க்கிறோம். “ஆண்டவர் நீ போகும்போதும் காப்பார்: வரும்போதும் காப்பார்: இப்போதும் எப்போதும் உன்னை காப்பார்.” ஆண்டவரின் கரம் நம்மைக் காத்து வழி நடத்தும் போது நமது வாழ்வில் அமைதி நிலைக்கும்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (கலா 4:4-7), பெண் வழியாக எவ்வாறு மனித குலத்திற்கு அழிவு வந்ததோ, அதே போன்று, பெண் வழியாகவே மனித குலத்திற்கு மீட்பு கிடைத்தது. கிறிஸ்து மனிதனாகவில்லை, கடவுளாக மட்டுமே இருந்தார். வானவர் போன்று காட்சி தந்தார் என்னும் கருத்தை எதிர்த்து, அவர் உண்மையில் மனித நிலையை ஏற்றார் என வலியுறுத்துகிறது. அவர் மனித இயல்பில் மட்டும் பங்கு கொள்ளாமல், எல்லா மனிதரைப் போல சட்டத்திற்கும் கட்டுப்பட்டார்.

கிறிஸ்து மேற்கொண்ட மீட்பு பணியின் இரு நோக்கங்களும் கூறப்படுகிறது. 1.திருச்சட்டத்திற்கு கீழ்ப்பட்டிருந்தவர்களை மீட்பது 2. இறைவனின் பிளைளைகளாக்குவது. யூதர் தம் தந்தையரை அன்போடு அழைக்க ‘அப்பா’ (யுடிடிய) என்னும் அரமேயச் சொல்லை பயன்படுத்துவர். ஆனால் இதே வார்த்தையை கொண்டு தந்தை கடவுளை அழைக்க எந்த ஒரு யூதனும் துணியமாட்டான். இயேசுவோ அப்பா என அழைப்பதோடு நின்று விடாமல், மற்றவர்களுக்கும் அவ்வாறு அழைக்கும் உரிமையை கொடுத்தார். நாம் அவரின் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் ஆவியை பொழிந்துள்ளார். எனவே நாம் அடிமையல்ல அவரின் உரிமை மக்கள் என்பதை தெளிவுப்படுத்துகிறது.

இன்றைய நற்செய்தியில் (லூக் 2:16-21) இடையர்கள் வியப்பு மிக்கவர்களாய் பெத்லகேமிற்கு சென்று தூதர் கூறிய ஒவ்வொன்றும், வார்த்தைக்கு வார்த்தை உண்மையாயிருப்பதை கண்டனர். தங்களுக்கு தூதர் அறிவித்ததை; யோசேப்புக்கும், மரியாவுக்கும், மக்களுக்கும் தெரிவித்தனர். மக்கள் வியந்தனர். அதோடு மறந்திருக்க கூடும். ஆனால் ஒரு பெண் மட்டும் மறக்கவில்லை அவர்தான் மரியா. அதையும் உள்ளத்தில் சிந்தித்தார். இறைவன் விரும்பிய விதத்திலே மரியா இறைவார்த்தைக்கு செவி கொடுத்தார்.
குழந்தைக்கு பெயர் கொடுப்பது தந்தையின் உரிமையாகும். இங்கு கடவுளே தூதர் வழியாக “யாவே மீட்கிறார்” என பொருள்படும் இயேசு என்ற பெயரை கொடுக்கிறார்.

இறையேசுவில் பிரியமானவர்களே! இந்த நன்னானில் அண்டவரின் ஆசிரும், அமைதியும் நமக்கு நிறைவாய் கிடைக்க ஜெபிப்போம். கடந்த காலத்தில் ஆண்டவர் அன்னை மரியா வழியாக செய்த நன்மைகளுக்கு நன்றி கூறுவோம். வருகின்ற ஆண்டிலே நாம் செய்யும் செயலை இறைவன் நிறைவாய் ஆசிர்வதிக்கவும், அனைத்தும் வெற்றியடையவும் நம் விண்ணப்பங்களை ஆண்டவர் பாதம் சமர்ப்பிப்போம்.

அமைதி என்பது சண்டை, சச்சரவு இன்றி வாழ்வது மட்டுமல்ல, ஒருங்கிணைந்த தூய வாழ்வு வாழ்வதேயாகும். இறைவன் மட்டுமே அதை கொடுக்கமுடியும். யோவா 14:27ல் “அமைதியை உங்களுக்கு விட்டு செல்கிறேன், என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்”, என்று இயேசு கூறினார். அமைதியை பெற்ற நாம் அதை எல்லா இடங்களிலும் நிலைநாட்ட வேண்டும். நம்முடைய குடும்பங்களில், உறவு நிலைகளில், அமைதியை ஏற்படுத்துவது நமது கடமை, ஏனெனில் ஆண்டவர் இயேசு பிறந்த போதும், இறந்து உயிர்த்த பின்னும் அவர் நமக்கு விட்டு சென்றது அமைதி. இந்த புதிய ஆண்டில் இறைவனை மையப்படுத்தி நம் செயலை தொடங்கும் போது நாமும் வாழ்வோம், பிறரையும் வாழ வைப்போம்.

- பெ. யூஜின் அருண்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக