திருக்குடும்பத் திருவிழா 30-12-2011
இறையேசுவில் அன்புநிறை இறைமக்களே!
இன்றைய இறைவாக்கு, திருக்குடும்பத்தைப் பற்றி நமக்கு தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது. திருக்குடும்பம் என்பது பூமியின் மேல் கற்களாலும், மண்ணாலும், மனிதனால் கட்டி எழுப்பப்பட்ட ஒரு கட்டிடம் அல்ல. மாறாக குடும்பம் என்றால் அவ்வீட்டில் வசிக்கும் ஒவ்வொரு அங்கத்தினர்களிடையே உள்ள இறையன்பு-பிறரன்பு, பண்பு, பாசம் மற்றும் ஒருவரை ஒருவர் மன்னிக்கும் தன்மை இவற்றைப் பொறுத்துள்ளது. குடும்பம் இன்றி எந்த ஒரு சமுதாயமோ அல்லது நாடோ செயல் பட முடியாது. தந்தை, தாய், பிள்ளைகள் சேர்ந்துதான் குடும்பம் என்று கூறுகின்றோம்.
தாயாம் திருச்சபை இன்று திருக்குடும்பத் திருநாளைக் கொண்டாடுவதன் காரணம் என்னவென்றால் உலகிலுள்ள அத்தனைக் குடும்பங்களுக்கும் முன்மாதிரியான உன்னதக் குடும்பம் ஒன்று சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நாசரேத்தூரில் வாழ்ந்து காட்டியது என்று எடுத்துக் காட்டாத்தான். அந்தக் குடும்பம்தான் இயேசு, மரியாள், சு10சையப்பர் வாழ்ந்த திருக்குடும்பம்.
மனிதனை மனிதனாக்குவது
மனிதன் தோன்றிய நாளே குடும்பம் தோன்றிய நாள். வரலாறு அறிந்த காலங்கள் எல்லாம் மனிதனை ஒரு குடும்பமாகத்தான் பார்க்கின்றது. அக்காலம் முதல் இக்காலம் வரை கோடி மாற்றங்கள் சமூகத்திலே, அறிவியலிலே, அரசியல் அமைப்புகளிலே! ஆனால் குடும்ப அமைப்பு அப்படியே இருக்கின்றது.
காலங்கள் மாறுகின்றன. நாகரீகங்கள் மறைகின்றன. ஆனால் தந்தை, தாய், பிள்ளை உறவு என்றும் நீடிக்கின்றது. அதை எவராலும் அழிக்க முடியாது. காரணம் மனிதன் “கடவுளின் சாயல்” (ஆதி 1:227). கடவுள் ஒரு குடும்பமாக இருக்கிறார். அப்படியே மனிதனும். அவனை மிருகத்திலிருந்து வேறுபாடாக்கி காட்டுவது இந்த குடும்பத் தன்மைதான். எனவே இயேசு இவ்வுலகில் பிறந்த போதும், ஒரு குடும்பத்தில்தான் பிறக்கின்றாh.; அந்த திருக்குடும்பத்தில்தான் அவர் “ஞானத்திலும், அறிவிலும் முதிர்ந்து கடவுளுக்கும், மனிதருக்கும் மேன்மேலும் உகந்தவரானார். இவ்வாறு இன்றைய காலகட்டத்திலும் குடும்பம் திருச்சபையின் அடித்தளமாக, ஆணிவேராகவும் விளங்குகிறது. இதை தான் “குடும்பம் ஒரு குட்டித் திருச்சபை” என்ற வாக்கியம் தெளிவுப்படுத்துகிறது.
நமது குடும்பங்கள் திருக்குடும்பங்களாக வாழ குடும்பத்திலுள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய பத்துக்கட்டளைகள்:
- புனித யோசேப்பைப் போல் கணவன் தன் துணைவி மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும். (மத். 1:24)
- அன்னை மரியாவைப் போல் மனைவி தன் துணைவருக்குப் பணிந்து நடக்க வேண்டும். (மத். 2:14, 19-23)
- புனித யோசேப்பைப் போன்று கணவன் எந்தச் சு10ழ்நிலையிலும் வீணான பேச்சுக்கு இடம் கொடாமல் குடும்பத்தை மேம்படுத்தவும் நற்சிந்தனைக்கும், நற்செயலுக்கும் முதலிடம் கொடுக்க வேண்டும். (மத். 1-2)
- ஏழு முறை மட்டுமே பேசிய அன்னை மரியாவை போன்று மனைவி குறைவாகப் பேசி அதிகமாக குடும்பத்திற்காக பாடுபட முன் வர வேண்டும். (லூக். 1:34,38, 39-44, 46-55, 2:48, யோவா. 2:3,5)
- குழந்தைகள், இயேசுவைப் போல் பெற்றோருக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டும். (லூக் 2:51-52, கொலோ 3:20)
- குழந்தைகள் தங்கள் பெற்றோருக்குப் பணியாளர்களாக விளங்க வேண்டும். (சீ. ஞா 3:7)
- பெற்றோர்கள் பிள்ளைகளின் குறைகளை மட்டும் சுட்டிக்காட்டாமல், அவர்களது நிறைவையும் சுட்டிக்காட்டி அவர்களுக்கு உற்சாகமூட்டவேண்டும். (கொலே. 3:21)
- குடும்பத்திலுள்ள எல்லோரும் தங்களை மனத்தாழ்மை, கனிவு, பொறுமை போன்ற நல்லெண்ணங்களால் அலங்கரித்துக் கொள்ளவேண்டும். (கொலே 3:12)
- குடும்பத்திலுள்ளவர் ஒருவர் மற்றொருவரின் குற்றங்களை மனமுவந்து மன்னித்து மறந்துவிட வேண்டும். (கொலே 3:13)
- அன்புடனும், பொறுமையுடனும், அமைதியுடனும் குடும்பத்திலுள்ள எல்லாரையும் நெறிப்படுத்த வேண்டும். (கொலே 3:14-15).
நமது குடும்பங்களை திருக்குடும்பத்தோடு ஒப்பிட்டு பார்போம். இன்று குடும்பங்கள் மத்தியில் நடப்பது போன்ற கணவன், மனைவி சண்டை சச்சரவுகள்,குடும்பத் தகராறுகள்,குழப்பங்கள் அங்கு தலைவிரித்தாடவில்லை.மாறாக ஒவ்வொருவரிடமும் அவரவர் கடைமைகளை உணர்ந்து செயல்பட்டதன் வழியாக இறைவனின் சித்தத்தை முற்றிலுமாக நிறைவேற்றி வந்தனர். இவ்வாறு இறைவனின் சித்தத்தை நிறைவேற்றுவது என்பது எளிதான காரியமல்ல. இறைவன் சாயலில் மனிதர்களாய்ப் பிறந்த நாம் ஒவ்வொருவரும் குறைபாடுள்ளவர்கள் என்று ஏற்றுக் கொள்வோம்.
புனித யோசேப்பும், மரியாவும், பாலன் இயேசுவும் நமக்கு ஒரு முன் மாதிரிகையாகவும் எடுத்துக்காட்டாகவும் விளங்குகின்றார்கள். நாசரேத்தூரில் வாழ்ந்த இத்திருக்குடும்பமானது பல வகையான இன்னல் இக்கட்டுக்களை சந்திக்க வேண்டியிருந்தது. ஆயினும் ஒருவரை ஒருவர் பொறுமையோடு ஏற்றுக் கொண்டு எளிய வாழ்க்கை நடத்திவந்தனர். இதைத்தான் இன்று நம் ஒவ்வொருவரிடமும் இறைவன் எதிர்பார்கின்றார். மேலும் திருக்குடும்பத்தில் நிலவிய தன்னலமற்ற அன்பை பிரதிபலித்து வாழ தேவையான அருளை இத்திருப்பலியில் தொடந்து மன்றாடுவோம்!
திருத்தொண்டர் ராபர்ட்
பத்துக் கட்டளைகளும் மிகவும் பயனுள்ளவையே
பதிலளிநீக்கு