நள்ளிரவு மன்னிப்பு மற்றும் நன்றி வழிபாடு டிசம்பர்-31


இறைமகன் இயேசுவில் அன்புக்குரியவர்களே, கடந்த ஆண்டு முழுவதும் இறைவன் நமக்கு செய்த கணக்கிட முடியாத நன்மைகளுக்கு உளமாற அவருக்கு நன்றிசொல்லவும், கடந்த ஓர் ஆண்டு முழுவதும் இறைவனுக்கும், நம் சகோதர சகோதரிகளுக்கும் எதிராக செய்த பாவங்களுக்கு இறைவனிடம் மன்னிப்பு வேண்டியும், வருங்காலம் நமக்கு வசந்த பாலமாக அமைய இறைவனின் அருள் வேண்டி நாம் அனைவரும் இங்கே ஒன்று கூடியிருக்கிறோம். எனவே இந்த வழிபாட்டிலே நாம் அனைவரும் பக்தியோடு பங்கெடுப்போம்.

ஆண்டவருக்கு ஆராதனை செலுத்துவோம்

அன்பார்ந்தவர்களே, நம் இறைவன் நேற்றும் இன்றும் என்றென்றும் மாறாத இறைவன். நம் இறைவன் காலங்களுக்கும், யுகங்களுக்கும் தலைவரான ஆண்டவர். கடந்த ஆண்டு முழுவதும் நம்மை சீரும் சிறப்புமாய் வழிநடத்திய நம்இறைவனை, நம் வாழ்வில் மீண்டும் ஒரு புதிய ஆண்டைக் கொடுக்கப்போகிற இறைவனை நாம் இப்போது ஆராதித்து புகழ்வோம். என்றும் வாழும் நம் ஆண்டவரை போற்றும் வண்ணமாக இந்தப் பாடலை அனைவரும் சேர்ந்துப் பாடி அவரை ஆராதிப்போம்.

பாடல்: ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்... அல்லது தந்தையே இறைவா உம்மில் மகிழ்ந்து ஆராதிக்கின்றோம்.. (பொருத்தமான பாடலைத் தேர்வுசெய்து கொள்ளலாம்) அனைவரும் அமர்ந்து சிறிது நேரம் மௌனம் காக்கவும்.
கண்ணீர் அஞ்சலி: கடந்த ஆண்டு நோய்களினாலும், பல்வேறுப்பட்ட விபத்துக்களினாலும், தீவிரவாத தாக்குதலாலும், இயற்கையின் சீற்றத்தாலும், மதவெறிதாக்குதலாலும் உயிரிழந்த நம் சகோதரர்கள் இறைவனின் பதம் சேந்தருள வேண்டுமென்று இப்போது உருக்கமாக செபிப்போம்.

இறையருள் பெற மன்னிப்பு வேண்டுவோம்: நம் இறைவன் கருணையே உருவானவர். நம்மை தேடிவந்து அன்பு செய்யும் தேவன். அத்தகைய இறைவனிடம் கடந்த ஆண்டு முழுவதும் அவரக்கு எதிராகவும், நம் சகோதர சகோதரிகளுக்கு எதிராகவும், நமக்கு நாமே செய்த பாவங்களுக்கு இவ்வேளையில் மன்னிப்பு மன்றாட்டுகளை இறைவனிடம் எழுப்புவோம்.

பல்லவி: நான் பாவி இயேசுவே என் வாழ்வை மாற்றுமே.
  1. உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருந்தாலும் அவை உறைபனிபோல வெண்மையாகும். எசாயா 1:18. என்று சொன்ன இறைவா, நாங்கள் உம்மிலே எங்கள் மனதைச் செலுத்தாமல் உலகப்போக்கின்படி வாழ்ந்ததற்காக, எங்களை மன்னித்து உம் அருளை எங்கள் மேல் பொழிந்தருளும் ஆண்டவரே.
  2. நானும் தீர்ப்பிடேன் இனி பாவம் செய்யாதே, சமாதானமாய்ப் போ. யோவான் 8:11. என்று சொன்ன இறைவா, நாங்கள் எங்கள் சகோதர சகோதரிகளை அநியாயமாய் தீர்ப்பிட்டு அவர்களது பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய நேரங்களுக்காக இறைவா உம்மிடம் மன்னிப்பு வேண்டுகிறோம்.
  3. காலங்கள், நேரங்கள் அனைத்தையும் படைத்தவரே, எங்களுக்கு கொடுக்க்ப்பட்ட வாய்ப்புகளையும், நேரத்தையம், காலத்தையும் விழிப்புடன் இருந்து நல்ல முறையில் பயன்படுத்திகொள்ள தவறிய தருணங்களுக்காக இறைவா உம்மிடம் மன்னிப்பு வேண்டுகிறோம்.
  4. உன் தந்தையையும், தாயையும் மதித்து நட. எபேசி 6:2. என்று மொழிந்த இறைவா, எங்கள் பெற்றோருக்கும், பெரியோர்களுக்கும் கீழ்படியாமல் அவர்களின் அறிவுரைகளை, நல்லொழுக்கங்களை அலட்சியம் செய்தமைக்காக இறைவா உம்மிடம் மன்னிப்பு வேண்டுகிறோம்.
  5. தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். மாறாக அவர்களை ஆண்டவருக்கேற்ற முறையில் கண்டித்து திருத்தி, அறிவு புகட்டி வளர்த்து வாருங்கள். எபேசி 6:4. என்று மொழிந்த இறைவா, எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் சிறந்த முன்மாதிரிகையாய் இருக்க தவறிய தருணங்களுக்காக இறைவா உம்மிடம் மன்னிப்பு வேண்டுகிறோம்.

ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்: கருணைமிக்க நம் இறைவன் நம் பாவங்களையெல்லாம் மன்னித்து நம்மை அவரது அன்புறவில் சேர்த்துக்கொள்வார் என்ற ஆழ்ந்த நம்பிக்கையோடு கடந்த ஆண்டு முழுவதும் இறைவன் நமக்கு செய்த அனைத்து நன்மைக்ளுக்கு இப்போது நன்றிகூறுவோம்.

வாசகம்: 1தெச 5:16-18
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 105:1-8
பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள் ஏனெனில் அவர் நல்லவர் (இதனை பாடுதல் சிறந்தது)

இப்போது நமது நன்றி மன்றாட்டுக்களை இறைவான்பால் எழுப்ப அனைவரும் எழுந்து நிற்போம். பின்வரும் ஒவ்வொரு மன்றாட்டுக்கு பிறகும் பின்வரும் பல்லவியை பாடவும்.
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா 
நாவாலே துதிக்கிறோம் நாதா
  1. கடந்த ஆண்டு முழுவதும் எங்களோடு இருந்து எங்களை நல்வழியில் நடத்தி சென்றமைக்காக நன்றி கூறுகின்றோம்.
  2. கடந் ஆண்டு எங்களை நோய் நொடியிலிருந்து காத்தமைக்காக இறைவா உமக்கு நன்றி கூறுகிறோம்.
  3. கடந்த ஆண்டு நல்ல மழையைக் கொடுத்தமைக்காக இறைவா உமக்கு நன்றி கூறுகிறோம்.
  4. வேலையின்றி இருந்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பை தந்தமைக்காக இறைவா உமக்கு நன்றி கூறுகிறோம்.
  5. எங்கள் குடும்பத்தில் ஒற்றுமையையும், சமாதானத்தையும் தந்தமைக்காக இறைவா உமக்கு நன்றி கூறுகிறோம்.
  6. எம் பங்கையும், பங்கு மக்களையும், பங்கு குருவையும், கன்னியர்களையும் நல் வழியில் காத்து வந்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்.
  7. எம் பங்கு குழந்தைகள் படிப்பிலும், நல்லொழுக்கத்திலும், ஞானத்திலும் வழிநடத்தி வந்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்.
  8. இந்ந வருடத்திற்கு சிறந்த விளைச்சலையும், வருமானத்தையும் தந்தமைக்காக இறைவா நன்றி கூறுகின்றோம்.

இறைவனின் ஆசிரைப் பெறுவோம்
இறைவனின் ஆசிரைப் பெற அனைவரும் முழந்தாளிட்டு ‘மாண்புயர்’ கீதம் பாடுவோம்.

1 கருத்து: