புனித வியாழன் மறையுரை Holy Thursday Tamil Sermon



Click to listen to Fr. Arul Prakasam's Sermon on Holy Thursday 2011
(பெரிய வியாழன் மறையுரை ஒலி வடிவில்)


மறைந்த நம் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரின் சொந்த நாடான போலந்து கம்யூனிச ஆதிக்கம் ஓங்கியிருந்த நாடு. இரண்டாம் உலகப்போரின் சமயத்தில் மாக்சிமிலன் கோல்பே என்னும் ஒரு கத்தோலிக்க குருவானவருடன் பலரும் கைது செய்யப்பட்டனர். இந்த கைதிகளில் யாரோ தப்பிவிட்டான் என்று திடீரென தலைவன் வந்து பத்து பேரை பிடித்து கொல்லப் போவதாக அறிவித்தான். அந்தப் பத்து பேரில் ஒருவன் ஐயோ என் மனைவி மக்களை யார் காப்பாற்றுவது யாருமில்லையே எனக்கதறி அழுது புலம்ப ஆரம்பித்து விட்டான். கேட்டுக்கொண்டிருந்த இந்த குருவானவர் மாக்சிமில்லன் கோல்பே முன்னே சென்று அவரை விட்டு விடுங்கள் அவரிடத்தில் நான் சாகத் தயார் என்று கூறினார் பின் அவர் விடுவிக்கப்பட்டு, குருவானவர் கொல்லப்பட்டார் கொடூரமாக.

இறை இயேசுக் கிறிஸ்துவில் பிரியமானவர்களே, இன்றைய முதல் வாசகத்தில், எப்படி இந்த பாஸ்காவைக் கொண்டாட வேண்டும் என்று சொன்னதைக் கேட்போம். இதன் இறுதியில் ஆண்டவர்: “நீங்களோ அந்நாளை, நினைவு கூற வேண்டிய நாளாகக் கொண்டு அதை உங்கள் தலைமுறைதோறும் ஆண்டவருடைய திருவிழா என்று எக்காலமும் கொண்டாடி வருவீர்கள்” என்று விடுதலைப்பயணப் புத்தகத்தில் அதிகாரம் 12, 14ல் படிக்க கேட்டோம். அதனையே கட்டளையாகவும் இறைவன் கொடுக்கின்றார். அதன்படியே யூதர்கள் அனைவரும் ஆண்டுதோறும் இந்த பாஸ்காவைக் கொண்டாடி வந்தனர்.
றைமகன் இயேசுவும் 32 ஆண்டுகளாக இதையேதான் கொண்டாடினார்.  ஆனால் பழைய பாஸ்காவானது தன்னிலே ஒரு நிறைவடைந்தாகத் தெரியவில்லை. ஆனால் இயேசுவின் பாஸ்காவானது ஏதோ ஒரு முழுமையாக மாபெரும் ஒரு பாஸ்காவை சுட்டிக் காட்டியது.

இந்த முன் குறித்த மகத்தான பாஸ்காவை நிகழ்த்தப் போகும் நோக்கத்தோடுதான் பாஸ்காவுக்கு தயார் படுத்தும்படி இயேசு கூறியதாக புனித லூக்கா நற்செய்தியில் அதிகாரம் 22, 8-11, விவரிக்கின்றார். இந்த இறுதி பாஸ்கா உணவில் பழைய பாஸ்காவை இயேசு உருமாற்றுகிறார். அன்று இரவு பிடிபட்டு, கொடூரமாக மரிக்கப் போகும் நிலையை உணர்ந்து என்றுமே தன் பிரசன்னம் நிலைக்கவும், ஒருமைப்பாட்டை வளர்க்கவும், அந்த புளியாத அப்பத்தையும் இரத்தததையும் தன் உடலாகவும், இரத்தமாகவும் மாற்றிவிட்டார். இதுதான் விசுவாசத்தின் மறைபொருள், ஆண்டவரே தேவரீர் வருமளவும் உமது மரணத்தை அறிக்கையிடுக்கிறோம் என்று இன்றைய இரண்டாம் வாசகமாக புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் கடிதத்தில் கூறுவதைத்தான் நாம் ஒவ்வொரு திருப்பலியில் நடுப்பகுதியில் அறிக்கையிடுகிறோம். கிறிஸ்துவே தமது திருஇரத்ததால் நம்மை தந்தைக் கடவுளோடு இணைக்கும் இணைப்பாளராக உள்ளார். கிறிஸ்துதான் இந்த புதிய உடன்படிக்கையின் பலிப்பொருள், பலிப்பீடம், பலியிடும் குரு.

இந்த உன்னத பலியின் மூலம் கிறிஸ்து தாமே கடவுளின் தலைமை குருவாக இருக்கிறார். அதே சமயம் அவர் பாவத்தைத்த தவிர மற்ற அனைத்திலும் மனிதர்களைப் போல இருந்தார். அவர்களை சகோதரர்கள் என்று அழைக்க வெட்கப்படவுமில்லை (எபி 2, 11) நம்மோடு இப்படி உறவாட வந்த அவர் கொடுத்த இந்த சமத்துவமும், உரிமையும்தான் மற்ற மனிதர்களை அதாவது நம்மை அவரின் உன்னத குருத்துவத்தில் பங்கெடுக்கும் வாய்ப்பளிக்கிறது. வழியும் செய்கிறது.

எப்படி இந்த குருத்துவத்தில் இறைமக்கள் நாம் அனைவரும் பங்கெடுப்பது, புனித பேதுரு எழுதிய முதல் கடிதம் 2, 4-5 சொல்வது போல் இறைமக்கள் அனைவரும் தங்களையே கடவுளுக்கு உகந்த ஞானபலியால் காணிக்கை பங்கு பெரும் உரிமை பெற்று, அழைக்கப்பட்டிருகிறோம். 

இந்த பொதுக் குருத்துவத்தைத்தான் அதே கடிதம் முதல் பேதுரு 2 , 9ல் படிக்கக் கேட்கிறோம். எதில் இந்த பொதுக் குருத்துவம் அடங்கி இருக்கின்றது? ஏற்கெனவே பார்த்தது போல வாழ்க்கை பலியில் அடங்கி இருக்கிறது. இந்த வாழ்க்கை பலி என்பதென்ன?

இதற்கு அதே கடிதம் முதல் பேதுரு 2, 9ல் மேலும் நற்செய்தியின் மதீப்பீடுகளை வாழ்வதும், இறைவனின் வல்ல செயல்களுக்கு வாழ்வில் சான்று பகர்வதும் தான் வாழ்க்கைப்பலி.
  1. குழந்தை இறந்துவிடும் போலிருக்குங்க, கையில காசு இல்ல... ஒரு 1000 ரூபாய் கொடுத்தா திருப்பி கொடுத்திடுறேன் என்று கேட்டு ஒருவர் கண்ணீர் விடும்போது சாப்பாட்டுக்கு வைத்திருக்கும் பணத்தையும் கொடுப்பதுதான் வாழ்க்கைபலி.
  2. சம்பளம் மேசை மேல், கிம்பளம் மேசைக்கடியில், என்று இருப்பவர் மத்தியில் நான் கிறிஸ்தவன், சம்பளத்திற்கு உகந்த வேலை செய்வேன் என்பது வாழ்க்கைபலி.
  3. இருக்கும் உணவையெல்லாம் தன் 4, 5 குழந்தைகளுக்குப் போட்டுவிட்டு, வெறும் சோற்று நீரைக் குடித்துவிட்டு படுத்துவிடும் தாய் செய்வது வாழ்க்கைபலி.
  4. என்னைத் தரக்குறைவாக அனைவர் முன்னாடி பேசிவிட்டானே, இருந்தாலும் நான் அவனை மனதார மன்னிக்கிறேன் என்பது வாழக்கைபலி.
அன்றாடம் நாம் சந்திக்கும் இந்த உண்மைகளை செயல்படுத்துவதுதான் வாழ்க்கைபலி. கிறிஸ்து நம் மீது அன்புகொண்டு, தன் உயிரையும் கையளித்ததைப் போல நாமும் அயலானுக்காய் அவ்வாறு செய்யும் அளவுக்கு அன்பு செய்ய வேண்டும். அவர் கடவுளின் மகனாய் இருந்ததால் அவ்வாறு செய்ய முடிந்தது. நாம் மனிதர்கள் என்ன செய்ய முடியும்? என்ற கேள்வி கேட்க முடியாது. ஏனெனில் மறையுரையின் துவக்கத்தில் கேட்ட அந்த உண்மை சம்பவத்தில் தன் உயிரை விட்டது ஒரு சாதாரண குருதான். எப்படி முடிந்தது?

மனிதபலம் மனித சக்தி இதனை நிறைவேற்ற முடியாது. இதற்கு சக்தியும் வல்லமையும் அளிப்பதுதான் இந்த நற்கருணை எனும் ஒப்பற்ற திருவருட்சாதனம்தான் இந்த வாழ்க்கை பலியை நிறைவேற்றும் முயற்சியில் மனிதனுக்கு பொது குருத்துவத்திலிருந்து பணிக்குருத்துவத்தை இறைமகன் இன்று ஏற்படுத்தினார்.  ஆகவே அரச குருத்துவ திருக்கூட்டமாக கூடியுள்ள நாம் இந்த வாழக்கை பலியை வாழ, வலிமையும், வல்லமையும் தரும் இந்த கல்வாரி பலியில் தொடர்ந்து மன்றாடுவோம்.


இறையியல் மாணவர்கள்
கோவை நல்லாயன் குருத்துவக் கல்லூரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக