இயேசு கிறிஸ்து உயிர்ப்பு ஞாயிறு Easter Tamil Sermon


Click to listen to Fr. Arul Prakasam Sermon on Easter Vigil 2011
(உயிர்ப்பு ஞாயிறு மறையுரை ஒலி வடிவில்)



கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே
பரந்து விரிந்த கடல்
ஓரிடத்தில் ஊற்றெடுத்த நீர்தான்
பரந்து விரிந்த வானத்தின் வண்ணம்
ஓரிடத்தில் ஊற்றெடுத்த நிறம்தான்.
பரந்து விரிந்த இந்த உலகம்
ஓரிடத்தில் ஊற்றெடுத்த கருதான்.

எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமுமாய், ஆதியும் அந்தமுமாய் 
‘அ’ கரம் முதல் ‘ன’ கரம் வரையுமாய் ஊனாய் உயிராய் உண்மையாய் ஒளியாயிருக்கும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு விழா வாழ்த்துகள்.

உண்மைக்கு இல்லை உறக்கம். 

அன்பிற்குரியவர்களே இன்றைய வாசகங்கள் அனைத்தும் உயிரோட்டமுள்ள செயல்வீரர்களாக, வெற்றியின் விழா நாயகர்களாக நாம் திகழ வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றது. இன்றைய நற்செய்தியில் யோவான் குறிப்பிடுகின்ற ஒவ்வொரு அடையாளங்களும் வார்த்தைகளும் அதிக இறையியல் அர்த்தமுள்ளதாகவும் தினந்தோறும் இயேசுவின் உயிர்ப்பு நம்மில் நிகழ வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டுள்ளது போல் தோன்றுகின்றது.

‘வாரத்தின் முதல் நாளான்று’ என்று நற்செய்தியாளர் குறிப்பிடுகின்றார். எனவே இவ்வார்த்தை யூத மக்களின் பழக்கமான தொழுகைக் கூடத்தில் கூடுவதையும் கடவுள் முதல் நாளன்று (தொநூ 1, 3) ‘ஒளி தோன்றுக’ என்றார்.  உடனே கடவுள் ஒளிக்குப் பகல் என்றும் இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார் என்பதையும் சுட்டிக்காட்டுவதாக அமைகின்றது. நம் கத்தோலிக்க திருச்சபையில் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் கடவுளின் நாளாக  அனுசரிக்கப்படுகின்றது. ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் கிறிஸ்துவ மக்கள் யூதர்களைப் போல் ஆலயத்தில் கூடுகின்றோம்.  அப்போது நாம் உயிர்த்த கிறிஸ்துவை சந்திக்கிறோமா அல்லது உணர்கிறோமா என யோசிக்க வேண்டும். 

‘விடியற்காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்’.  இவ்வார்த்தையை ஆழமாக சிந்தித்து பார்த்தோமென்றால் இதன் அர்த்தம் தெளிவாகப் புரியும். அதாவது இயேசுவின் சீடர்களுக்கும் மகதலா மரியாவுக்கும் இயேசு தான் இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன் என்று சொன்னது மறந்து போனதால் அவர்களுக்குள் ஓர் அச்சம் நிலவியிருக்கலாம். காரணம் இயேசுவின் உடலை மறைநூல் அறிஞர்கள், சதுசேயர்கள், பரிசேயர்கள் எங்காவது எடுத்துச் சென்று மறைத்து வைத்துவிடுவார்களோ என்றும் அல்லது திருடர்கள் கல்லறைக்குள் தங்க ஆபரணங்களோ விலைமதிப்பு மிக்க பொருளோ ஏதாவது இருக்கும் என்று எண்ணி நுழைந்து இயேசுவின் உடலை திருடிச் சென்று விடுவார்களோ என்ற அச்சம் அவர்களுக்குள் இருந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த அச்ச உணர்வால் அவர்கள் உள்ளம் இருள் சூழ்ந்திருக்கலாம். மேலும் இயேசுவுக்கு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகள் செய்ய கல்லறைக்குச் சென்றிருக்கலாம். ஆனால் அவர்கள் கண்டதோ கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருந்தது. எனவே இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா என்ற மாபெரும் மகிழ்ச்சியுணர்வு அவளுக்குள் ஏற்பட்டு அவளுள் படர்ந்திருந்த இருளை நீக்கி, ஒளியினால் பேருவகை அடைந்திருக்கலாம்.  மேலும் இயேசு இருள் படர்ந்திருந்த போதே உயிர்த்திருக்கிறார் என்ற செய்தியும் நமக்கு கிடைக்கிறது. அதாவது இருளுக்கும் ஒளிக்குமான போராட்டம், சாவுக்கும் உயிர்ப்புக்குமான போராட்டம், கெட்டதுக்கும் நல்லதுக்குமான போராட்டம், சாத்தானுக்கும் இயேசுவுக்கும் இடையிலானப் போராட்டத்தில் இயேசு என்னும் ஒளியானவர் சாவை பாவத்தை வென்று இருளின் ஆட்சியை பாவத்தின் கொடுக்கை பிடுங்கியுள்ளார் என்பது விளங்குகின்றது. 

மகதலாமரியா இயேசுவின் உயிர்ப்புச் செய்தியை சீடர்களுக்கு அறிவிக்கப்பட்டபோது அது அவர்களுக்குள் ஒரு தேடலையும், விசுவாச உறுதிப்பாட்டையும், இறையனுபவத்தையும் பெற உதவியாக அமைந்திருக்கிறது என்பதை (யோவா 3-8) பார்க்கிறோம். 

பேதுருவும், இயேசுவின் அன்பு சீடருமான யோவானும் ஒருமித்து இலக்கு நோக்கி ஓடியுள்ளனர். ஆனால் அன்பு சீடர் இயேசுவின் கல்லறையை முதலாவதாக அடைந்தார் என வாசிக்கிறோம். இடையில் பேதுருவுக்கு என்னவாயிற்று. ஒருவேளை பேதுரு ஓடும்போது இயேசுவை மும்முறை மறுதலித்தேனே இப்போது எந்த முகத்துடன் பார்ப்பது என்ற கலக்கமான இறுக்கம் அடைந்த மனநிலையுடன் ஓடியிருப்பார்.  ஆனால் பேதுருவுக்கு பாவத்தின் குற்ற உணர்வை விட  இயேசுவின் மீதிருந்த அன்பு அவரை கல்லறைக்கு உந்திக்தள்ளியது.  யோவான் வெறும் கல்லறைக்கு சாட்சியாக வெளியில் நிற்கிறார். ஆனால் பேதுருவோ இயேசுவின் உயிர்ப்புக்குச் சாட்சியாக கல்லறையினுள் செல்கின்றார். 

இயேசுவின் மீதிருந்த  துணி அப்படியே இருக்க இயேசு உயிர்த்தெழுந்திருக்கிறார். எனவே உயிர்த்த இயேசுவுக்கு மனித உடலா? கடவுளின் உடலா? என்கிற விவாதத்தை விட நாமும் ஒரு நாள் உயிர்ப்போம் என்பதை உறுதியாக்கிக் கொள்வோம்.  இயேசு ஏன் தன் தலைமீதிருந்த துண்டை ஓரிடத்தில் தனியாக சுருட்டி வைத்திருந்தார்?

நம் தமிழ்கலாச்சாரத்தில் கிராமப்புறங்களில் பார்த்தோமென்றால் ஏதாவது அவமானமோ நஷ்டமோ ஏற்பட்டால் தலைமீது துண்டுபோட்டுக் கொண்டு செல்வர். ஆனால் இயேசுவின் உயிர்ப்பு அவமானத்திற்குரியதோ நஷ்டத்திற்குரியதோ அல்ல, நாம் தலைநிமிர்ந்து நிற்க, இயேசு அறிவித்த இறைவார்த்தை உயிருள்ளதாய், ஆற்றல்மிக்கதாய் நம்மிடையே உள்ளது என்பதை அர்த்தமாக வாழ அடையாளமாய் உள்ளதாகக் கொள்ளலாம். 
பேதுரு தான் கண்ட உயிர்த்த இயேசுவின் காட்சிக்கு சாட்சியாய், பிற இனத்தவர் மத்தியில் சென்று அறிவிக்கிறார். கொர்னேலியு ஓர் அரசாங்க அதிகாரியாய், வேற்றினத்தவனாய் இருந்தும் இயேசுவின் உயிர்ப்புச் செய்தியை நம்பியதால் இயேசு என்னும் ஒளி அவனுள்ளும், அவன் குடும்பத்தாரோடும் என்றும் இருக்கவும், இயேசுவின் சாட்சியாய் திகழவும், பாவத்தை வென்றவரை அறிக்கையிடவும் திருமுழுக்கு பெறுகின்றனர் என்று இன்றைய முதல் வாசகமும் விவரிக்கிறது. 

திருமுழுக்கு பெற்ற நாம் இறைவனோடு இணைக்கப்பட்டவர்கள், கிறிஸ்து என்னும் ஒளியின் பங்காளிகளாக மறைமுகமாக அவருடன் உள்ளுக்குள் ஒன்றாக இணைந்திருக்கிறோம். எனவே இறைவனின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்ற ஒளியாகிய இயேசுவுக்கு ஏற்ற சீடர்களாய் மாட்சி பெற்றவராய் நாம் தொடர்ந்து வாழ அவருக்குரியவற்றை நாம் நாட வேண்டும் என இரண்டாம் வாசகமும் வலியுறுத்துகின்றது. 

இயேசுவுக்கு உரியவற்றை நாடுதல்.  இவனை மன்னிக்கவே முடியாது இவன் முகத்தை நான் பார்க்க கூடாது என்றும், நான் செத்தாலும் அவனுடன் பேசமாட்டேன் என்கிற இருளான கோபங்களையும், வெறுப்பையும் விட்டுவிட்டு மன்னிக்கின்றபோது நாமும் கிறிஸ்துவோடு உயிர்த்தவர்கள் என்பதில் அர்த்தமிருக்கிறது.  அவனை/அவளைப் பற்றி தெரியதா? அவன்/அவள் தப்பனாவள், ஊர் ஏமாற்றி பிழைத்தவள் என தவறான சந்தேகங்களை விட்டுக் கொடுக்கும்போது நாம் இயேசுவில் உயிர்த்தவர்களாகிறோம். 

இயேசுவின் உயிர்ப்பு
மகதலா மரியாவின் சந்தேகத்தை போக்கியது
இறைஅனுபவத்தைத் தந்தது
பேதுருவின் கலக்கத்தை போக்கியது
மனதிடத்தை தந்தது
யோவானுக்கு அன்பை உறுதியாக்கியது

நமக்குள் இயேசுவின் உயிர்ப்பு நிகழ நாம் அனைவரும் இயேசுவுக்காக வாழுவோம், அர்த்தமுள்ள வகையில் நாம் அனைவரையும் மன்னிப்போம், ஏற்றுக்கொள்வோம்.

இருளைத் தவிர்ப்போம்
ஒளியில் வாழ்வோம்
ஏனெனில்
தருமத்தின் வாழ்வுதனை
சூது கவ்வும் - ஆனால் தருமம் மறுபடியும் வெல்லும்
உண்மைக்கு இல்லை உறக்கம்.


- இறையியல் மாணவர்கள்
கோவை நல்லாயன் குருத்துவக் கல்லூரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக