புனித வெள்ளி Good Friday Tamil Sermon


கடவுள் இறந்துவிட்டார்.

எங்கே நீதி இல்லையோ. எங்கே உண்மை இல்லையோ, எங்கே அன்பு இல்லையோ, எங்கே சமாதானம் இல்லையோ, எங்கே தியாகம் இல்லையோ, அங்கே கடவுள் இறந்து விட்டான்.

அன்புக்குரிய இறைமக்களே,

எனது தந்தை மரணப்படுக்கையில் இருந்து பிறகு இறந்து விடுகிறார். நான் வெளியூரில் இருப்பதால் அடக்க சடங்கிலே கலந்து கொள்ள முடியவில்லை என்று வைத்துக்கொள்வோம். எனது தந்தை மரணப்படுக்கையில் இருக்கும் போது எனக்கான, எனக்குரிய செய்திகளை என் உடன் பிறந்த சகோதரர்களிடம் விட்டுச் சென்றிருப்பார். நான் ஊருக்கு சென்றவுடன் என் சகோதரர்கள், தந்தை எனக்காக விட்டுச் சென்ற செய்திகளை அறிவுரைகளை என்னிடம் கூறுவார்கள். நானும் இந்தச் செய்தியினை, அறிவுரைகளை பின்பற்றி வாழுவேன். நிறைவேற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவேன். 2000 ஆண்டுகளுக்கு முன் நமக்காக, நமது பாவங்களுக்காக இறந்த கடவுள், நமக்கான செய்திகளை, வழிமுறைகளை மூன்று சகோதரர்கள் வழியாக விட்டுச் சென்றிருக்கிறார். 

1. முதலாவது சகோதரர் எசாயா இறைவாக்கினர் வழியாக மூன்று வித செய்திகளை தருகிறார்.
  1. இயேசுவின் துன்பங்களுக்கு முழுக்காரணமும் நமது பாவங்கள்  அதாவது நீங்களும் நானும் செய்துகொண்டிருக்கும் பாவங்கள் நம் குற்றங்களுக்காக காயமடைந்தார். (எசா 53, 5 )
  2. நமக்காக, இறைவன் நிலையிலிருந்து தாழ்ந்து மனித நிலைக்கு வந்து சிலுவைச் சாவை ஏற்கிறார். (எசாயா 53, 2-3)
  3. அடுத்தவரின் நலனுக்காக நாம் செய்யும் தியாகம் ஒருபோதும் வீண்போகாது. (எசாயா 53, 11).

2. இரண்டாவது சகோதரர் பெயர் தெரியாத அன்புச் சீடர்.  அவர் இன்று நமக்கு கொடுக்கும் செய்தி. 
  1. நம்மில் யாரும் இயேசுவைப் போல் துன்பப் பட்டதில்லை. இனி அவ்வாறு துன்பப் பட போவதுமில்லை.
  2. மனிதனாக பிறந்த இயேசுவுக்கும் நம்மைப் போல் சோதனைகள் வந்தன. நமக்கும் இயேசுவுக்கும் வித்தியாசம் என்னவென்றால் அவர் சோதனைகளை வெற்றிக்கண்டார். நாம் சோதனைகளை வெற்றிக் கொள்ள மறுக்கிறோம்.

3. மூன்றாவதாக இன்றைய நற்செய்தியாளர்.....
தன் வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்து இயேசு அநீதியை தட்டிக் கேட்க தயங்கவில்லை. நான் பேசியது தவறு என்றால் தவற்றை சுட்டிக் காட்டுங்கள் ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டாலும் தந்தையின் விருப்பத்திற்கு தாழ்ச்சியுடன் தன்னை கையளிக்கிறார்.  இந்த மூன்று சகோதரர்களும் இன்று நமக்கு கொடுக்கும் செய்தி எல்லோருடைய வாழ்க்கையிலும் சோதனைகள், துன்பங்கள் கண்டிப்பாக வரும்.  குறிப்பாக சமுதாய நலன்களுக்காக பாடுபடும் உள்ளங்களுக்கு துன்பங்கள் கொஞ்சம் அதிகமாகவே வரும். துன்பங்களை கண்டு விலகிவிடக் கூடாது. மாறாக இயேசுவைப் போல் வெற்றி பெறும் வரை,  இறுதிவரை போராடிக் கொண்டேயிருக்க வேண்டும்.

மக்களின் நலனுக்காக இயேசுவைப் போல் நாமும் தாழந்து போக வேண்டும்.
நம் எதிரிகளை மன்னிக்க வேண்டும். குறிப்பாக நாம் இறக்கும் போது நமக்கென எதிரிகள் யாரும் இருக்க கூடாது. இயேசு இறக்கும் தருவாயில் கூட தந்தையே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் இவர்களை மன்னியும் என்று தன் பகைவர்களை மன்னிக்கிறார்.

இறுதியாக இயேசுவைப் போல், தியாக வாழ்வு வாழ அழைக்கப் படுகிறோம். நமது வாழ்க்கையில் தியாகம் என்பது எடுத்த உடனே வந்து விடாது. தனிமனித உதவியிலிருந்து சமுதாய உதவிக்கும் பிறகு ஒட்டுமொத்த உலகத்தின் உதவிக்கும் நமது வாழ்வை மாற்றும் போதுதான் தியாக வாழ்வானது நமது வாழ்வில் பிறப்பெடுக்கும்.

எடின்பர்க் என்றொரு நகரம். அதன் எதிரே மற்றுமொரு அழகிய நகரம். இரண்டுமே சுற்றுலாத்தலங்கள். இரண்டு நகரங்களுக்கிடையே ட்ரே என்றொரு மிகப்பெரிய ஆறு. சுற்றுலாத்தலமாதலால் இரண்டு நகரங்களையும் இணைக்க இரயில் பாலம் கட்டியிருந்தார்கள். அந்தப் பெரிய ஆற்றலே தினசரி கப்பல் போக்குவரத்தும் உண்டு. கப்பல் போகும் போது பாலம் மேலே திறந்து கொள்ளும். இரயில் போகும் போது பாலம் சமநிலைக்கு வந்துவிடும். சரியான நேரத்தில் பாலத்தை திறக்கவும், மூடவும் ஒரு நபர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர்தன் பணியினை செவ்வனே செய்து கொண்டிருந்தார். 1898-ம் வருடம் ஜூன் மாதம் ஒரு நாள் இரயில் வருவதற்கான நேரம். பாலம் திறந்திருக்கிறது. சமநிலைக்கு கொண்டு வரவேண்டும். அதை இயக்குகின்ற இயந்திரம் திடீரென்று பழுதாகி விட்டது மிகவும் போராடி, சரி செய்தாகிவிட்டது. இரயிலும் பாலத்தில் வந்து கொண்டிருக்கிறது. அந்த விசையினை அழுத்த தாயராகிறார். அப்பொழுதுதான் தெரிய வருகிறது. அதுவரையில் அந்த அறையில் விளையாடிக்கொண்டிருந்த தன் அன்புக் குழந்தை 5 வயது சிறுவன் நடுவில் செங்குத்தாக நின்று கொண்டிருந்து. 

பாலத்தின் மீது ஏறிக்கொண்டிருந்தான். மகனைக் காப்பாற்றினால் இரயிலில் உள்ள நூற்றுக்கணக்காண சுற்றுலா பயணிகள் அந்த ஆற்றிலே மூழ்கி இறந்து போவார்கள்.  ஒரே நேரத்தில் இரண்டையும் காப்பாற்றவும் முடியாது. இரயிலும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு நொடிப் பொழுதுதான் யோசித்தார். அடுத்த விநாடி அந்த இரயில் அழகாக மறுகரையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இரயிலில் இருப்பவர்களுக்கு தெரியாது, தாங்கள் உயிரோடு இருப்பது ஆற்றில் மிதக்கும் அந்த பிஞ்சுக் குழந்தையாலும் அதன் தந்தையின் தியாகத்தாலும் என்று.....

அன்பார்ந்த இறைமக்களே!

மற்றவர்கள் இரயிலும் கப்பலும் பயணம் செய்ய உதவிக் கொண்டிருந்த அந்த நபர் இறுதியில் அந்த சுற்றுலாப் பயணிகளுக்கு துன்பமே வராமல் பாதுகாக்கிறார் அதற்காக அவர் செய்த தியாகம் தன் மகனின் உயிர். மற்றவருக்கு துன்பமே வராமல் பாதுகாக்க முடிவெடுத்தால் கண்டிப்பாக நாம் தியாகம் செய்தாக வேண்டும். துன்பங்களை சந்திக்க வேண்டும். சோதனைகளை எதிர் கொள்ள வேண்டும். இதையேத்தான் நமக்காக துன்பப்பட்டு இறந்த இயேசுவும் தன் வாழ்க்கையில் செய்தார். 

பற்பல உதவிகளை, புதுமைகளை செய்தார் இயேசு. நோய்களை குணமாக்கினார், ஏழைகளுக்கு இரங்கினார். பசித்தோருக்கு உணவளித்தார். இறுதியாக நமது பாவங்களுக்காக, நம்மை மீட்க சிலுவைச்சாவை ஏற்கிறார். இதற்காக அவர் சந்தித்த துன்பங்கள், துயரங்கள், இன்னல்கள், சோதனைகள் ஏராளம். அவரது வாழ்க்கையில் உண்மையிருந்தது, அன்பிருந்தது, அவரது செயல்களில் நீதி இருந்தது, சமாதானம் இருந்தது, அவரிலே தியாகம் இருந்தது. அதனால்தான் இயேசுவில் இறைவனும் இறைவனில் இயேசுவும் வாழ்ந்தார்கள்.

நமது வாழ்க்கையில் எங்கே உண்மையில்லையோ, அன்பில்லையோ, தியாகமில்லையோ, நீதி இல்லையோ, சமாதானம் இல்லையோ, அங்கே கடவுள் இறந்து விட்டார்.

நாம் கடவுளை வாழ வைத்துக் கொண்டிருக்கிறோமா? அல்லது அனுதினம் சாகடித்துக் கொண்டிருக்கிறோமா?


இறையியல் மாணவர்கள்
கோவை நல்லாயன் குருத்துவக் கல்லூரி

No comments:

Post a Comment