சிலுவைப்பாதை - திருத்தந்தை 2ம் ஜான் பால்

முதலாம் நிலை :

இயேசு கெத்சமனித் தோட்டத்தில் செபிக்கிறார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : லூக்கா 22: 39-44
இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் வழக்கப்படி ஒலிவ மலைக்குச் சென்றார். சீடர்களும் அவரைப் பின் தொடர்ந்தார்கள். அந்த இடத்தை அடைந்ததும் அவர் அவர்களிடம்,சோதனைக்கு உட்படாதிருக்க இறைவனிடம் வேண்டுங்கள், என்றார். பிறகு அவர் அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் விலகிச் சென்று, முழந்தாள்படியிட்டு, இறைவனிடம் வேண்டினார். 'தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல: உம் விருப்பப்படியே நிகழட்டும்' என்று கூறினார்.
செபம்:
தந்தையே இறைவா!
உமது அன்பு மகன் இயேசுவின் மூலம் செபிக்கக் கற்று கொடுத்தவரே! நாங்களும் விழிப்பாயிருந்து செபிக்க உறுதியான உள்ளமும், தாராள மனமும் தந்தருளும். செபமே ஜெயம் என்பதை நினைவு கூர்ந்து, அதன் மூலம் பாவ வாழ்க்கையிலிருந்து விலகி மகிழ்ச்சி நிறைந்த தன்னலமற்ற புதுவாழ்விற்கு செல்ல ஆசீர் அருள்வீராக. உம் மகன் இயேசுவின் ஒவ்வொரு துளி இரத்தமும் எங்களைக் கழுவி மீட்பைத் தரட்டும். ஆமென்.
அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும்.
இரண்டாம் நிலை:
யூதாசு முத்தமிட இயேசு கைது செய்யப்படுகிறார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் 
கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : லூக்கா 22: 47-48
இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, இதோ! மக்கள் கூட்டமாய் வந்தனர். பன்னிருவருள் ஒருவனான யூதாசு என்பவன் அவர்களுக்கு முன் வந்து அவரை முத்தமிட நெருங்கினான். இயேசு அவனிடம்,யூதாசே, முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய்? என்றார்.
செபம்:
தந்தையே இறைவா!
நீவீர் எங்கள் பலவீனங்களையும் குற்றங்குறைகளையும் உம் மகன் இயேசுவை ஏற்றுக் கொள்ள செய்தீர். ஆனால் பாவம் என்னும் முத்தத்தால் தினமும் இயேசுவைக் காட்டி கொடுக்கிறோம் என்ற உணர்வு எங்களில் எழ, அதன் மூலம் மனம் வருந்தி உமது மன்னிப்பில் நாங்கள் புனிதமடைய, உம் அன்பை இவ்வுலகிற்கு எடுத்துரைக்க, உம் சாட்சிகளாய் வலம் வர அருள் புரிவீராக. ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும்.

முன்றாம் நிலை
இயேசு தலைமைக் குருக்களால் தீர்ப்புக்குளாகிறார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக்கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : லூக்கா 22: 66-70
பொழுது விடிந்ததும் மக்களின் மூப்பர்களும் தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞர்களும் கூடி வந்தார்கள். இயேசுவை இழுத்துச் சென்று தங்கள் மூப்பர் சங்கத்தின் முன் நிறுத்தினார்கள். அவர்கள், ‘நீ மெசியா தானா? எங்களிடம் சொல்’ என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், ’நான் உங்களிடம் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்: நான் உங்களிடம் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டீர்கள்.இதுமுதல் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பார்’ என்றார். அதற்கு அவர்கள் அனைவரும், 'அப்படியானால் நீ இறை மகனா?' என்று கேட்டனர். அவரோ,'நான் இறைமகன் என நீங்களே சொல்லுகிறீர்கள்' என்று அவர்களுக்குச் சொன்னார்.
செபம்:
தந்தையே இறைவா!
நிபந்தனையற்ற அன்பால் எங்களை என்றும் நேசிப்பவரே, உமது ஆறுதலாலும் அரவணைப்பாலும் நாங்கள் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ளச் செய்வீராக. உமது மகனும் எங்கள் மீட்பருமான இயேசுவின் தியாக உள்ளத்தையும், தைரியத்தையும் எங்களுக்கு தருவீராக! இதன் மூலம் பிறரைத் தீர்ப்பிடாமல் அவர்களுக்கு சேவை செய்யும் மனப்பக்குவத்தைத் தாரும். ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும்.

நான்காம் நிலை
இயேசுவை பேதுரு மறுதலித்தார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : லூக்கா 22: 54-60
வீட்டு உள்முற்றத்தின் நடுவில் நெருப்பு மூட்டி, அதைச் சுற்றி அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். பேதுருவும் அவர்களோடு இருந்தார். அப்போது பணிப்பெண்ஒருவர் நெருப்பின் அருகில் அவர் அமர்ந்திருப்பதைக் கண்டு, அவரை உற்றுப் பார்த்து,'இவனும் அவனோடு இருந்தவன்' என்றார். அவரோ,'அம்மா, அவரை எனக்குத்தெரியாது' என்று மறுதலித்தார். சிறிது நேரத்திற்குப் பின் அவரைக் கண்ட வேறு ஒருவர், 'நீயும் அவர்களைச் சேர்ந்தவன் தான்' என்றார். பேதுரு, 'இல்லையப்பா' என்றார்.ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்குப் பின்பு மற்றொருவர்,'உண்மையாகவே இவனும் அவனோடு இருந்தான் இவனும் கலிலேயன் தான்' என்று வலியுறுத்திக் கூறினார். பேதுருவோ, 'நீர் குறிப்பிடுபவரை எனக்குத் தெரியாது'என்றார். உடனேயே, அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோதே, சேவல் கூவிற்று. ஆண்டவர் திரும்பி, பேதுருவைக் கூர்ந்து நோக்கினார் இன்று சேவல் கூவு முன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய் என்று ஆண்டவர் தமக்குக் கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.
செபம்:
தந்தையே இறைவா!
இயேசுவில் உறுதியாக இருந்த பேதுரு அவரை மறுதலித்தப்போதிலும், மனம் கசிந்து அழுது, வருந்திய அவரை நீர் ஏற்றுக் கொண்டு, உம் மந்தையின் ஆயனாய் சிறப்புறச் செய்தது போல் எங்களையும் உமக்காகவும், திருச்சபைக்காகவும் ஊழியம் புரிய வரம் தாரும். எங்களில் விசுவாசத்தை அதிகப்படுத்தி நாங்கள் எங்கள் சகோதர சகோதரிகளில் உம்மைக் காணவும், பொய்மை, பொறமை, பேராசை, அநீதிகள் எங்களை விட்டு நீங்க அருள்புரியும். ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும்.

ஐந்தாம் நிலை
இயேசுவுக்கு பிலாத்து மரணதண்டனை விதிக்கிறார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : மத்தேயு 27: 11-14
இயேசு ஆளுநன் பிலாத்து முன்னிலையில் நின்று கொண்டிருந்தார். ஆளுநன் அவரை நோக்கி, 'நீ யூதரின் அரசனா?' என்று கேட்டான். அதற்கு இயேசு, 'அவ்வாறு நீர் சொல்கிறீர்' என்று கூறினார். மேலும் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் அவர் மீது குற்றம் சுமத்திய போது அவர் மறுமொழி எதுவும் கூறவில்லை. பின்பு பிலாத்து அவரிடம், 'உனக்கு எதிராக எத்தனையோ சான்றுகள் கூறுகிறார்களே, உனக்குக் கேட்கவில்லையா?' என்றான். அவரோ ஒரு சொல்கூட அவனுக்கு மறுமொழியாகக் கூறவில்லை. ஆகவே ஆளுநன் மிகவும் வியப்புற்றான்.
செபம்:
தந்தையே இறைவா!
உண்மையை உலகுக்கு எடுத்துக் கூறியதால், படைக்கப்பட்டவனால் படைத்தவர் சிலுவைச்சாவுக்குத் தீர்ப்பிடப்படுகிறார். பல நேரங்களில் உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாமல் நாங்கள் தடுமாறும் வேளைகளில் யாரையும் தீர்ப்பிடாமல், எங்கள் உள்ளத்தில் உம் அன்பை ஏற்றி  உமக்குரியவராகவும், பாவத்தால் உமது நட்பை இழக்காமல் இருக்கவும் அருள்புரிவீராக. ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும்.

ஆறாம் நிலை
இயேசு சாட்டையால் அடிக்கப்பட்டு முள்முடி சூட்டப் பட்டார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக்கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : யோவான் 19: 1-3
பின்னர் பிலாத்து இயேசுவைச் சாட்டையால் அடிக்கச் செய்தான். வீரர்கள் ஒரு முள்முடி பின்னி அவர் தலையின்மேல் வைத்து, செந்நிற மேலுடையை அவருக்கு அணிவித்தார்கள். அவரிடம் வந்து, 'யூதரின் அரசே வாழ்க!' என்று சொல்லி அவருடைய கன்னத்தில் அறைந்தார்கள். பிலாத்து மீண்டும் வெளியே வந்து அவர்களிடம்,'அவனை நான் உங்கள் முன் வெளியே கூட்டி வருகிறேன், பாருங்கள். அவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்' என்றான்.
செபம்:
தந்தையே இறைவா!
உம் நேச மகன் அடிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு, அவமானப் படுத்தப்பட்டதின் மூலம் உலகத்தின் பாவங்களையும்,அதன் பரிசான சாவையும் வெல்ல வழிவகுத்தீரே! எங்களுக்கு ஏற்படும் நிந்தை அவமானங்களை நாங்களும் முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளவும், அதன் வழியே இயேசுவின் உயிர்ப்பில் மகிமை பெறவும், உண்மைக்கு சாட்சியாய் இருக்க அருள்புரிவீராக. ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும்..

ஏழாம் நிலை
இயேசு சிலுவையைச் சுமக்கிறார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : யோவான் 19: 16-17
அப்போது பிலாத்து அவரைச் சிலுவையில் அறையுமாறு அவர்களிடம் ஒப்புவித்தான். அவர்கள் இயேசுவைத் தம் பொறுப்பில் ஏற்றுக் கொண்டார்கள். இயேசு சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு 'மண்டை ஓட்டு இடம்' என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர்.
செபம்:
தந்தையே இறைவா!
உம் நேச மகன் இம்மனுக்குலத்தை மீட்க சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு சென்றாரே! அவர் சுமந்த சிலுவையே எங்கள் வாழ்வில் வெற்றியைத் தந்தது. பிறரால் எங்களுக்கு ஏற்படும் சிலுவைகளை நாங்கள் தியாக உள்ளத்துடன் ஏற்று, சுமந்து செல்ல, நாங்கள் வாழும் சமுதாயத்தில் இயேசுவுக்கு சாட்சியாக வாழ அருள்புரிவீராக. ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும்.


எட்டாம் நிலை
இயேசுவுக்கு சீமோன் உதவுகிறார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : லூக்கா 23: 26
அவர்கள் இயேசுவை இழுத்துச் சென்றுகொண்டிருந்தபோது சிரேன் ஊரைச்சேர்ந்த சீமோன் என்பவர் வயல் வெளியிலிருந்து வந்து கொண்டிருந்தார். அவர்கள் அவரைப் பிடித்து அவர்மேல் இயேசுவின் சிலுவையை வைத்து, அவருக்குப்பின் அதைச் சுமந்து கொண்டுபோகச்
செய்தார்கள்.
செபம்:
தந்தையே இறைவா!
சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் இயேசுவுடன் சிலுவை சுமந்து சென்றதைப் போல் எங்கள் வாழ்வில் வரும் துன்ப துயரங்களை ஏற்றுக்கொள்ள மனத்திடமும், ஆழ்ந்த விசுவாசத்தையும், உமது ஆறுதலையும் எங்களுக்கு தாரும். சீமோனைப் போல் நாங்களும் வாழ்வில் துன்பப்படுவோருக்கு உதவும் நல்லெண்ணத்தைத் தாரும். எப்போதும் எங்களை சுமப்பவர் நீராக இருப்பதை உணர்ந்து வாழ அருள்புரிவீராக.. ஆமென்

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும்

ஒன்பதாம் நிலை
இயேசு வழியில் எருசேலம் பெண்களை சந்திக்கிறார்..
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக்கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : லூக்கா 23: 27-29
பெருந்திரளான மக்களும் அவருக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்த பெண்களும் அவர் பின்னே சென்றார்கள். இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி,எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழ வேண்டாம். மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள். ஏனெனில் இதோ, ஒரு காலம் வரும். அப்போது;மலடிகள் பேறுபெற்றோர் என்றும் பிள்ளை பெறாதோரும் பால் கொடாதோரும் பேறு பெற்றோர் என்றும் சொல்வார்கள்.
செபம்:
தந்தையே இறைவா!
மாசற்ற இயேசுவுக்கு நேர்ந்த கொடுமைகளைக் கண்ட எருசேலம் மகளிர் அவரை எதிர் கொண்டபோது ‘எனக்காக அழவேண்டாம், உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்’ என்று ஆறுதல் தந்தீரே! எங்களாலும் எங்கள் பிள்ளைகளாலும் நேர்ந்த நிந்தை அவமானத்தால் உம்மை காயப்படுத்தியதற்காக வருந்திகிறேம். எங்கள் குடும்பம் உமது கோவிலாக மாற அருள்புரிவீராக.. ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும் .

பத்தாம் நிலை
இயேசு சிலுவையில் அறையப்படுகிறார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : யோவான் 19: 17-19
இயேசு சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு 'மண்டை ஓட்டு இடம்' என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர். அங்கே அவர்கள் இயேசுவையும் அவரோடு வேறு இருவரையும் சிலுவைகளில் அறைந்தார்கள். அவ்விருவரையும் இருபக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாக அறைந்தார்கள். பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் 'நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்' என்று எழுதியிருந்தது.
செபம்:
எங்கள் விடுதலை நாயகனே! அன்பு இயேசுவே!
அவமானச் சின்னமாகிய சிலுவையில் எங்களுக்காக மரிக்க உம்மை கையளித்தீரே! அந்த அவமானச் சின்னம் சாவை வென்று எங்கள் வாழ்வின் வெற்றியின் சின்னமாக மாறியது உம் அன்பால் அன்றோ! எங்களுக்கு ஏற்படும் அவமானங்கள் எல்லாம் வெற்றியின் படிக்கட்டு களாக அமைய அருள்புரிவீராக. ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும் .

பதினொன்றாம் நிலை
இயேசு கள்வனுக்கு விண்ணக வாழ்வை அளிக்கிறார்..
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : லூக்கா 23:39-43
சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன்,நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று;என்று அவரைப் பழித்துரைத்தான். ஆனால் மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு,'கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!' என்று பதிலுரைத்தான். பின்பு அவன், 'இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்' என்றான். அதற்கு இயேசு அவனிடம், 'நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்' என்றார்.
செபம்:
அன்பு இயேசுவே! மனந்திருந்தி நற்செய்தியை ஏற்றுக் கொண்டால் புதுவாழ்வு பெறுவீர் என்பதை எங்களுக்கு இந்த நல்ல கள்வன் மூலம் உணர்த்தினீரே. இந்த தத்துவத்தை உணர்ந்தவர்களாய், மனம் திருந்தி, உமது இல்லமாகவும், உமது சீடனாகவும் வாழ பரிசுத்த ஆவி எங்களை வழிநடத்த உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும் .

பனிரெண்டாம் நிலை
இயேசு தன் தாயிடம் பேசுகிறார்..
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : யோவான் 19: 26,27
இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், 'அம்மா, இவரே உம் மகன்' என்றார். பின்னர் தம் சீடரிடம், 'இவரே உம் தாய்' என்றார். அந்நேர முதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.
செபம்:
அன்பு இயேசுவே!
இதோ உன் மகன் என்று அன்னை மரியாளிடம் எங்களையும், இதோ உன் தாய் என்று அன்னை மரியாளை எங்களுக்கு அன்னையாகவும் கொடுத்தீரே. அந்த அன்னை மரியாளின் நிகரற்ற அன்பும், விவேகமும், தனித்துநின்று போராடிய மனவலிமையையும் எங்களுக்கு தாரும். அன்னையின் அருளும், பரிந்துரையும் எங்களோடு எப்பொழுதும் இருப்பதை உணர்ந்தவர்களாய் நாங்கள் உமக்காய் இவ்வுலகில் வாழ்ந்திட அருள் வரம் தாரும். ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும் .

பதிமூன்றாம் நிலை
இயேசு தன் சிலுவையில் மரிக்கிறார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : யோவான் 19: 28-30
இதன்பின், அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு, 'தாகமாய் இருக்கிறது' என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார். அங்கே ஒரு பாத்திரம் நிறையப் புளித்த திராட்சை இரசம் இருந்தது. அதில் கடற்பஞ்சை நன்கு தோய்த்து ஈசோப்புத் தண்டில் பொருத்தி அதை அவர்கள் அவரது வாயில் வைத்தார்கள். அந்த இரசத்தைக் குடித்ததும் இயேசு,
'எல்லாம் நிறைவேறிற்று' என்று கூறித் தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார்.
செபம்:
அன்பு இறைவா!
மனிதனைப் போல இயேசுவும் மரணத்திற்கு உட்படுத்தப்பட்டு அதனை வெற்றி கொள்ள உதவினீரே. அந்த மரணத்தால் எங்களுக்கு புதுவாழ்வு அளித்தீரே! நாளும் இயேசு காட்டிய வழியில் வாழ்ந்து, அவரில் மரித்து உம் வான்வீட்டை வந்தடைய எங்களுக்கு அருள்வரம் தருவீராக! ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும் .

பதிநான்காம் நிலை
இயேசு கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறார்..
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : மாற்கு 15: 43-46
அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் துணிவுடன் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் மதிப்புக்குரிய தலைமைச் சங்க உறுப்பினர். அவரும் இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர். ஏற்கெனவே இயேசு இறந்து விட்டதைக் குறித்துப் பிலாத்து வியப்படைந்து, நூற்றுவர் தலைவரை அழைத்து,'அவன் இதற்குள் இறந்து விட்டானா?' என்று கேட்டான். நூற்றுவர் தலைவரிடமிருந்து கேட்டு அறிந்ததும் உடலை அவன் யோசேப்பிடம் அளித்தான். யோசேப்பு மெல்லிய துணி ஒன்றை வாங்கி வந்து, இயேசுவின் உடலை இறக்கித் துணியால் சுற்றிப் பாறையில் வெட்டப்பட்டிருந்த கல்லறையில் கொண்டு வைத்தார். அதன் வாயிலில் ஒரு கல்லை உருட்டி வைத்தார்.
செபம்:
அன்பு இறைவா!
தமக்கென ஒன்றும் இல்லாத நிலையில் தம்மையே அளித்த, அன்பு இயேசுவிற்கு கல்லறைக் கூட அடுத்தவர் அளிக்கும் நிலை ஏன்? எல்லாம் எம்மில் நிலைக்கொண்டுள்ள சுயநலத்தால் தானே! தனக்கென எதுவுமில்லாமலிருந்த, எங்கள் நல்ல ஆயனைப் போல் நாங்களும் சுயநலம் இழந்து பிறர்நலம் காண அருள்வீராக! இதன் மூலம் உம் மனிதநேயம் இவ்வுலகில் அனைவருக்கும் சென்று அடைய துணைபுரிவீராக! ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும் .

பதினைந்தாம் நிலை
இயேசு உயிர்த்தெழுந்தார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
நற்செய்தி : மாற்கு 16: 4-6
ஆனால் அவர்கள் நிமிர்ந்து உற்று நோக்கியபொழுது கல் புரட்டப் பட்டிருப்பதைக் கண்டார்கள். அது பெரியதொரு கல். பிறகு அவர்கள் கல்லறைக்குள் சென்றபோது வெண்தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் ஒருவர் வலப்புறம் அமர்ந்திருக்கக் கண்டு திகிலுற்றார்கள். அவர் அவர்களிடம்,திகிலுற வேண்டாம். சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள். அவர் உயிருடன் எழுப்பப் பட்டார். அவர் இங்கே இல்லை. இதோ, அவரை வைத்த இடம்.
செபம்:
வெற்றி திருநாயகனே!
மரணத்தை வென்ற தெய்வமே! இறைவனின் திட்டத்தை முழமையாக்கியவரே! விண்ணக வீட்டில் எங்களுக்கு நீர் செய்துள்ள ஏற்பாடுகளில் நாங்கள் நிலையாய் பங்கு கொள்ள ஆவலுடன் காத்திருக்கும் எங்களை நீரே வழிநடத்தும். இவ்வுலகில் அதற்கு ஏற்ப எங்கள் வாழ்வு அமைந்திட நீர் எங்களின் உள்ளும் ,எங்கள் முன்னும், பின்னும் எங்களை சுற்றி அரணாயிருந்து எங்களை உம் வெற்றி பாதையில் நடத்துவீராக. ஆமென்.

அன்பு இயேசுவே! நாங்கள் உமது பாதையில் நடந்திட உதவியருளும் .  


What Easter is


The True Signs of Easter are…
The blood stained Cross, 
The crown of thorns;
The empty tomb and the burial cloth.


Today…the signs are… 
Colored eggs and chocolate bunnies,
A rainbow of jelly beans.
Chocolate rabbits,
spring flowers pretty and 
Baskets full of candy.


But how many truly know
What Easter Is.
It is a time of renewal and new life
as it happens every spring.
Blooming flowers, singing birds, and 
Gentle rain signal the season of spring,
A season of newness, freshness 
And brightness.
Winter’s over it shows, 
And spring has come.


Easter too…
Is a time of happiness and newness,
Because, Jesus is risen and 
death no more prevail.
The God who suffered for you and me,
The God who was crucified for you and me,
The God who bore the wounds of our sins,
The God who carried the weight of our faults,
The God who died for you and me,
The God buried in the tomb for you and me,
Is risen indeed to give new life 
For you and me, and for the world;
To show the way to the Father,


To love and forgive as God’s children
To be merciful and forgiving as Jesus is
To live new life as a people of hope.


     JESUS IS RISEN INDEED


For we are disciples of the risen Jesus.
Halleluiah the happy song we sing. 


Therefore…
A time of hope it is 
And a day of rebirth and renewal.
The Easter celebration end not here.
It signals a new beginning 
And brand a new life,
True friendship, peace, and 
Life-giving its mission.
Indeed the Easter spirit is all about
Hope, love, and joyful living.


Rev. Santhiyagu Arcokiyam, msfs

இயேசு கிறிஸ்து உயிர்ப்பு ஞாயிறு Easter Tamil Sermon


Click to listen to Fr. Arul Prakasam Sermon on Easter Vigil 2011
(உயிர்ப்பு ஞாயிறு மறையுரை ஒலி வடிவில்)



கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே
பரந்து விரிந்த கடல்
ஓரிடத்தில் ஊற்றெடுத்த நீர்தான்
பரந்து விரிந்த வானத்தின் வண்ணம்
ஓரிடத்தில் ஊற்றெடுத்த நிறம்தான்.
பரந்து விரிந்த இந்த உலகம்
ஓரிடத்தில் ஊற்றெடுத்த கருதான்.

எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமுமாய், ஆதியும் அந்தமுமாய் 
‘அ’ கரம் முதல் ‘ன’ கரம் வரையுமாய் ஊனாய் உயிராய் உண்மையாய் ஒளியாயிருக்கும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு விழா வாழ்த்துகள்.

உண்மைக்கு இல்லை உறக்கம். 

அன்பிற்குரியவர்களே இன்றைய வாசகங்கள் அனைத்தும் உயிரோட்டமுள்ள செயல்வீரர்களாக, வெற்றியின் விழா நாயகர்களாக நாம் திகழ வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றது. இன்றைய நற்செய்தியில் யோவான் குறிப்பிடுகின்ற ஒவ்வொரு அடையாளங்களும் வார்த்தைகளும் அதிக இறையியல் அர்த்தமுள்ளதாகவும் தினந்தோறும் இயேசுவின் உயிர்ப்பு நம்மில் நிகழ வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டுள்ளது போல் தோன்றுகின்றது.

‘வாரத்தின் முதல் நாளான்று’ என்று நற்செய்தியாளர் குறிப்பிடுகின்றார். எனவே இவ்வார்த்தை யூத மக்களின் பழக்கமான தொழுகைக் கூடத்தில் கூடுவதையும் கடவுள் முதல் நாளன்று (தொநூ 1, 3) ‘ஒளி தோன்றுக’ என்றார்.  உடனே கடவுள் ஒளிக்குப் பகல் என்றும் இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார் என்பதையும் சுட்டிக்காட்டுவதாக அமைகின்றது. நம் கத்தோலிக்க திருச்சபையில் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் கடவுளின் நாளாக  அனுசரிக்கப்படுகின்றது. ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் கிறிஸ்துவ மக்கள் யூதர்களைப் போல் ஆலயத்தில் கூடுகின்றோம்.  அப்போது நாம் உயிர்த்த கிறிஸ்துவை சந்திக்கிறோமா அல்லது உணர்கிறோமா என யோசிக்க வேண்டும். 

‘விடியற்காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்’.  இவ்வார்த்தையை ஆழமாக சிந்தித்து பார்த்தோமென்றால் இதன் அர்த்தம் தெளிவாகப் புரியும். அதாவது இயேசுவின் சீடர்களுக்கும் மகதலா மரியாவுக்கும் இயேசு தான் இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன் என்று சொன்னது மறந்து போனதால் அவர்களுக்குள் ஓர் அச்சம் நிலவியிருக்கலாம். காரணம் இயேசுவின் உடலை மறைநூல் அறிஞர்கள், சதுசேயர்கள், பரிசேயர்கள் எங்காவது எடுத்துச் சென்று மறைத்து வைத்துவிடுவார்களோ என்றும் அல்லது திருடர்கள் கல்லறைக்குள் தங்க ஆபரணங்களோ விலைமதிப்பு மிக்க பொருளோ ஏதாவது இருக்கும் என்று எண்ணி நுழைந்து இயேசுவின் உடலை திருடிச் சென்று விடுவார்களோ என்ற அச்சம் அவர்களுக்குள் இருந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த அச்ச உணர்வால் அவர்கள் உள்ளம் இருள் சூழ்ந்திருக்கலாம். மேலும் இயேசுவுக்கு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகள் செய்ய கல்லறைக்குச் சென்றிருக்கலாம். ஆனால் அவர்கள் கண்டதோ கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருந்தது. எனவே இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா என்ற மாபெரும் மகிழ்ச்சியுணர்வு அவளுக்குள் ஏற்பட்டு அவளுள் படர்ந்திருந்த இருளை நீக்கி, ஒளியினால் பேருவகை அடைந்திருக்கலாம்.  மேலும் இயேசு இருள் படர்ந்திருந்த போதே உயிர்த்திருக்கிறார் என்ற செய்தியும் நமக்கு கிடைக்கிறது. அதாவது இருளுக்கும் ஒளிக்குமான போராட்டம், சாவுக்கும் உயிர்ப்புக்குமான போராட்டம், கெட்டதுக்கும் நல்லதுக்குமான போராட்டம், சாத்தானுக்கும் இயேசுவுக்கும் இடையிலானப் போராட்டத்தில் இயேசு என்னும் ஒளியானவர் சாவை பாவத்தை வென்று இருளின் ஆட்சியை பாவத்தின் கொடுக்கை பிடுங்கியுள்ளார் என்பது விளங்குகின்றது. 

மகதலாமரியா இயேசுவின் உயிர்ப்புச் செய்தியை சீடர்களுக்கு அறிவிக்கப்பட்டபோது அது அவர்களுக்குள் ஒரு தேடலையும், விசுவாச உறுதிப்பாட்டையும், இறையனுபவத்தையும் பெற உதவியாக அமைந்திருக்கிறது என்பதை (யோவா 3-8) பார்க்கிறோம். 

பேதுருவும், இயேசுவின் அன்பு சீடருமான யோவானும் ஒருமித்து இலக்கு நோக்கி ஓடியுள்ளனர். ஆனால் அன்பு சீடர் இயேசுவின் கல்லறையை முதலாவதாக அடைந்தார் என வாசிக்கிறோம். இடையில் பேதுருவுக்கு என்னவாயிற்று. ஒருவேளை பேதுரு ஓடும்போது இயேசுவை மும்முறை மறுதலித்தேனே இப்போது எந்த முகத்துடன் பார்ப்பது என்ற கலக்கமான இறுக்கம் அடைந்த மனநிலையுடன் ஓடியிருப்பார்.  ஆனால் பேதுருவுக்கு பாவத்தின் குற்ற உணர்வை விட  இயேசுவின் மீதிருந்த அன்பு அவரை கல்லறைக்கு உந்திக்தள்ளியது.  யோவான் வெறும் கல்லறைக்கு சாட்சியாக வெளியில் நிற்கிறார். ஆனால் பேதுருவோ இயேசுவின் உயிர்ப்புக்குச் சாட்சியாக கல்லறையினுள் செல்கின்றார். 

இயேசுவின் மீதிருந்த  துணி அப்படியே இருக்க இயேசு உயிர்த்தெழுந்திருக்கிறார். எனவே உயிர்த்த இயேசுவுக்கு மனித உடலா? கடவுளின் உடலா? என்கிற விவாதத்தை விட நாமும் ஒரு நாள் உயிர்ப்போம் என்பதை உறுதியாக்கிக் கொள்வோம்.  இயேசு ஏன் தன் தலைமீதிருந்த துண்டை ஓரிடத்தில் தனியாக சுருட்டி வைத்திருந்தார்?

நம் தமிழ்கலாச்சாரத்தில் கிராமப்புறங்களில் பார்த்தோமென்றால் ஏதாவது அவமானமோ நஷ்டமோ ஏற்பட்டால் தலைமீது துண்டுபோட்டுக் கொண்டு செல்வர். ஆனால் இயேசுவின் உயிர்ப்பு அவமானத்திற்குரியதோ நஷ்டத்திற்குரியதோ அல்ல, நாம் தலைநிமிர்ந்து நிற்க, இயேசு அறிவித்த இறைவார்த்தை உயிருள்ளதாய், ஆற்றல்மிக்கதாய் நம்மிடையே உள்ளது என்பதை அர்த்தமாக வாழ அடையாளமாய் உள்ளதாகக் கொள்ளலாம். 
பேதுரு தான் கண்ட உயிர்த்த இயேசுவின் காட்சிக்கு சாட்சியாய், பிற இனத்தவர் மத்தியில் சென்று அறிவிக்கிறார். கொர்னேலியு ஓர் அரசாங்க அதிகாரியாய், வேற்றினத்தவனாய் இருந்தும் இயேசுவின் உயிர்ப்புச் செய்தியை நம்பியதால் இயேசு என்னும் ஒளி அவனுள்ளும், அவன் குடும்பத்தாரோடும் என்றும் இருக்கவும், இயேசுவின் சாட்சியாய் திகழவும், பாவத்தை வென்றவரை அறிக்கையிடவும் திருமுழுக்கு பெறுகின்றனர் என்று இன்றைய முதல் வாசகமும் விவரிக்கிறது. 

திருமுழுக்கு பெற்ற நாம் இறைவனோடு இணைக்கப்பட்டவர்கள், கிறிஸ்து என்னும் ஒளியின் பங்காளிகளாக மறைமுகமாக அவருடன் உள்ளுக்குள் ஒன்றாக இணைந்திருக்கிறோம். எனவே இறைவனின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்ற ஒளியாகிய இயேசுவுக்கு ஏற்ற சீடர்களாய் மாட்சி பெற்றவராய் நாம் தொடர்ந்து வாழ அவருக்குரியவற்றை நாம் நாட வேண்டும் என இரண்டாம் வாசகமும் வலியுறுத்துகின்றது. 

இயேசுவுக்கு உரியவற்றை நாடுதல்.  இவனை மன்னிக்கவே முடியாது இவன் முகத்தை நான் பார்க்க கூடாது என்றும், நான் செத்தாலும் அவனுடன் பேசமாட்டேன் என்கிற இருளான கோபங்களையும், வெறுப்பையும் விட்டுவிட்டு மன்னிக்கின்றபோது நாமும் கிறிஸ்துவோடு உயிர்த்தவர்கள் என்பதில் அர்த்தமிருக்கிறது.  அவனை/அவளைப் பற்றி தெரியதா? அவன்/அவள் தப்பனாவள், ஊர் ஏமாற்றி பிழைத்தவள் என தவறான சந்தேகங்களை விட்டுக் கொடுக்கும்போது நாம் இயேசுவில் உயிர்த்தவர்களாகிறோம். 

இயேசுவின் உயிர்ப்பு
மகதலா மரியாவின் சந்தேகத்தை போக்கியது
இறைஅனுபவத்தைத் தந்தது
பேதுருவின் கலக்கத்தை போக்கியது
மனதிடத்தை தந்தது
யோவானுக்கு அன்பை உறுதியாக்கியது

நமக்குள் இயேசுவின் உயிர்ப்பு நிகழ நாம் அனைவரும் இயேசுவுக்காக வாழுவோம், அர்த்தமுள்ள வகையில் நாம் அனைவரையும் மன்னிப்போம், ஏற்றுக்கொள்வோம்.

இருளைத் தவிர்ப்போம்
ஒளியில் வாழ்வோம்
ஏனெனில்
தருமத்தின் வாழ்வுதனை
சூது கவ்வும் - ஆனால் தருமம் மறுபடியும் வெல்லும்
உண்மைக்கு இல்லை உறக்கம்.


- இறையியல் மாணவர்கள்
கோவை நல்லாயன் குருத்துவக் கல்லூரி

குருத்துவ அருள்பொழிவு கொண்டாட்டம்


சபை மன்றாட்டு

பணியாளரை அழைக்கும் இறைவா, பணிவிடை பெறவன்று பணிவிடை புரியவே உம் திருச்சபையின் பணியாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளீர். இன்று உம் மக்களுக்கு பணிபுரிய நீர் அழைத்துள்ள இவர்கள், இறை வேண்டலில் நிலைத்திருந்து, தங்கள் பணியில் ஈடுபாடும், சாந்தமும் கொண்டு வாழச் செய்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

1. இறை வார்த்தை வழிபாடு
  • முதல் வாசகம்: எரேமியா 1: 4-9
  • இரண்டாம் வாசகம்: 1திமோ 4: 12-16
  • நற்செய்தி: யோவான் 3: 25-30 
2. திருநிலைப்படுத்துதல் வழிபாடு
(ஆயர் அவர்கள் தனது ஆயத்த உடையோடு இருக்கையில் அமர்கிறார்)
Commentary: இன்றைய சிறப்பு வழிபாட்டின் இரண்டாவது நிகழ்வாக திருநிலைப்படுத்தப்படும் சடங்கு ஆரம்பமாகிறது. ஆண்டவர், சாமுவேலை அழைத்தபோது சாமுவேல் அதை ஏற்று ஆண்டவரே பேசும் அடியவன் கேட்கிறேன் என்று பதில் அளித்ததுபோல், இன்று சகோதரர்கள் தங்களது அழைப்புக்கு இதோ வருகிறேன் என்று சொல்லி முன் வருவார்கள். பின் ஆயர் அவர்கள் இவர்கள் இப்பணிக்கு தகுதி உள்ளவர்களா என்று இவர்களின் அதிபர் தந்தையிடம் கேட்டறிந்த பின் குருத்துவ பணிக்கு இவர்களை தேர்ந்து கொள்கிறோம் என்று சொல்வார். இதன் முடிவில் இறைமக்கள் அனைவரும் “இறைவனுக்கு நன்றி” என்று பதில் கூறுவோம்.

அழைப்பு விடுத்தல் - சோதித்தறிதல் - தேர்வு செய்தல்
அதிபர்: குருக்களாக திருநிலைப் படுத்தப்பட வேண்டியவர்கள் முன் வருக.
( பெயர் சொல்லி அழைத்தல். பதில் - இதோ வருகின்றேன் )

அதிபர்: பேரருள் தந்தையே, நம் சகோதரர் இவர்களைக் குருக்களாக திருநிலைப்படுத்த அன்னையாம் திருச்சபை தங்களைக் கேட்டுக் கொள்கின்றது.

ஆயர்: இப்பணிக்கு இவர்கள் தகுதியுள்ளவர்கள் என உமக்குத் தெரியுமா?

குரு: கிறிஸ்துவ மக்களை கேட்டறிந்ததிலிருந்தும் இவர்களுக்கு பயிற்சி அளித்தவர்களின் பரிந்துரைகளிலிருந்தும் இவர்கள் தகுதியுள்ளவர்கள் என சான்று பகர்கின்றேன்.

ஆயர்:  நம் ஆண்டவராகிய இறைவனிலும் நம் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் அருள்துணையிலும் நம்பிக்கை வைத்து நம் சகோதரர்கள் இவர்களைக் குருத்துவ நிலைக்கு தேர்ந்து கொள்கின்றோம்.

Commentary: அனைவரும் இறைவனுக்கு நன்றி என்று பதில் கூறுவோம்.
எல்: இறைவனுக்கு நன்றி

அறிவுரை ( மறையுரை )
ஆயரின் மறையுரைக்கு பின்

Commentary: இப்பொழுது குருவாக உயர்த்தப்பட இருக்கிற திருத்தொண்டர்கள் எழுந்து நிற்பார்கள். கிறிஸ்துவின் திருவுடலையும், திருஇரத்தத்தையும் வாழ்வாக்க தயாராய் இருக்கின்ற இவர்கள் குருவாவதற்கு இவர்களின் சம்மதத்தையும், விருப்பத்தையும் நேரடியாக இறைச் சமுகத்தின் முன் ஆயர் கேட்டறிகின்றார்.

(Afterwards the candidates stand before the Bishop who questions all of them together)

ஆய்வு - குருக்களாக திருநிலைப்படுத்தப்படுபவர்களிடம் ...

ஆயர்:  அன்பார்ந்த மக்களே, நீங்கள் குருத்துவ நிலை பெறுமுன் அப்பொறுப்பை ஏற்றுக் கொள்ளத் தீர்மானித்திருக்கின்றீர்கள் என்று இத்திருக்கூட்டத்திற்குமுன் எடுத்துரைப்பது பொருத்தமானதாகும். எனவே, நீங்கள் குருத்துவநிலையில் இருந்துகொண்டு ஆயர் நிலையில் இருப்போருக்கு உண்மையான உதவியாளர்களாக விளங்கி, தூய ஆவியாரின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப ஆண்டவருடைய மந்தையை இடைவிடாமல் மேய்த்து உங்கள் பணியை நிறைவேற்ற விரும்புகின்றீர்களா?

பதில்: விரும்புகின்றேன்.

ஆயர்:  நற்செய்தியை அறிவிப்பது, கத்தோலிக்க விசுவாசத்தை விளக்குவது ஆகிய அருள்வாக்குப் பணியைத் தகுதியுடனும் ஞானத்துடனும் நிறைவேற்ற நீங்கள் விரும்புகின்றீர்களா?

பதில்: விரும்புகின்றேன்.

ஆயர்:  இறைவனின் மகிமைக்காகவும், கிறிஸ்துவ மக்களின் அர்ச்சிப்புக்காகவும், கிறிஸ்துவின் மறைநிகழ்ச்சிகளை, சிறப்பாக நற்கருணைப் பலியையும் ஒப்புரவு அருள்சாதனத்தையும் திருச்சபையின் மரபுக்கேற்ப பக்தியுடனும் பிரமாணிக்கத்துடனும் நிறைவேற்ற நீங்கள் விரும்புகின்றீர்களா?

பதில்: விரும்புகின்றேன்.

ஆயர்:  இடையறாது செபிக்க வேண்டுமென்ற கட்டளைக்குப் பணிந்து, உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களுக்காக எம்மோடு இணைந்து இறைவனின் இரக்கத்தை இறைஞ்சி மன்றாட நீங்கள் விரும்புகின்றீர்களா?

பதில்: விரும்புகின்றேன்.

ஆயர்:  நமக்காகத் தம்மையே தூய பலிப்பொருளாகத் தந்தைக்கு ஒப்புக்கொடுத்த நம் பெரிய குருவாகிய கிறிஸ்துவுடன் நீங்கள் நாளுக்குநாள் நெருங்கி ஒன்றித்து, மனிதரின் மீட்புக்காக அவரோடு உங்களையே கடவுளுக்கு அர்ப்பணிக்க விரும்புகின்றீர்களா?

பதில்: இறைவனின் துணையை நம்பி நான் விரும்புகின்றேன்.

கீழ்ப்படிதல் வாக்குறுதி

Commentary : இப்பொழுது குருவாக திருநிலைப்படுத்தப்படவேண்டிய இவர்கள், ஆயர் முன் முழந்தாள்படியிடுவார்கள். இவர்கள் தங்களது கரங்களை ஆயரின் கரங்களில் ஒப்படைத்து கீழ்படிகின்றேன் என்று வாக்களித்து சம்மதம் தெரிவிப்பார்கள். 

(Then each one of the candidates goes to the Bishop and kneeling before him, places his joined hands between those of the Bishop. If this seems less suitable in some places, the Episcopal conference may choose another rite. If the Bishop is the candidate’s own Ordinary, he asks:)

ஆயர்:  எனக்கும், என் வழி வரும் ஆயருக்கும் நீர் வணக்கமும் கீழ்ப்படிதலும் தர வாக்களிக்கின்றீரா?

பதில்: வாக்களிக்கின்றேன்.

ஆயர்:  இந்த நற்செயலை உம்மிடம் தொடங்கிய கடவுள் அதை நிறைவுறச் செய்வாராக.

செபிக்க அழைப்பு

Commentary: குருக்களுக்காக செபிப்பது நம் ஒவ்வொருவருடைய கடமை. இயேசுவின் திருவுடலை ஏந்தும் அவர்களுடைய கரங்களும், திருஇரத்ததை அருந்தும் அவர்களுடைய உதடுகளும் கரைபடாமல் இருக்கவும், உலக பற்றற்றவர்களாக வாழ்ந்துகாட்டவும் நமது செபம் தேவை. அவ்வண்ணமே குருவாக திருநிலைபடுத்தபட இருக்கும் நம் சகோதரர்கள் ஆயர் முன் நிற்க ஆயர் இவர்களுக்காக செபிக்கிறார். நாமும் அமைதியாக செபிப்போம்.

(Then all stand. The Bishop faces the people without the mitre and with his hands joined, says:

 If the Bishop is the candidate’s own Ordinary, he asks:)

ஆயர்:  (எழுந்து நின்று) அன்புமிக்க சகோதரர்களே, சகோதரிகளே, எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவன் தம் ஊழியர் இவர்களைக் குருத்துவ நிலைக்கு தேர்ந்துக் கொள்ள திருவுளமானார். அவரே இவர்கள் மீது தம் ஆசியையும் அருளையும் தயவாய்ப் பொழியுமாறு மன்றாடுவோம். 

Commentaryஇப்பொழுது திருப்பீடத்தில் திருத்தொண்டர்கள் முகம் குப்புறவிழுந்து கிறிஸ்துவின் ஒளியையும் அன்பையும் பிரதிபலிக்க இதோ வந்துவிட்டேன் என்று இறைவனிடம் சரணடைகின்றார்கள். நாம் அனைவரும் முழந்தாள் படியிட புனிதர்களின் மன்றாட்டு மாலை பாடி செபிக்கப்படுகின்றது.

(The Bishop kneels at his seat; the candidates prostrate themselves; all the rest kneel).

புனிதர்களின் பிராத்தனை (Litany of the saints)
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
புனித மரியாயே, இறைவனின் தாயே,
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புனித மிக்கேலே,
இறைவனின் புனித தூதர்களே,
புனித சூசையப்பரே,
புனித ஸ்நானக அருளப்பரே,
புனித இராயப்பரே, சின்னப்பரே,
புனித பெலவேந்திரரே,
புனித அருளப்பரே,
புனித மரிய மதலேனம்மாளே,
புனித முடியப்பரே,
புனித லவுரேஞ்சியாரே,
புனித அந்தியோக்கு இஞ்ஞாசியாரே,
புனித அஞ்ஞேசம்மாளே,
புனித பெர்பேத்துவா, பெலிசித்தம்மாளே,
புனித கிரகோரியாரே,
புனித அகுஸ்தீனாரே,
புனித அத்தனாசியாரே,
புனித பசிலியாரே,
புனித மார்த்தீனாரே,
புனித ஆசீர்வாதப்பரே,
புனித பிராஞ்சீஸ்குவே, சாமிநாதரே,
புனித பிராஞ்சீஸ்கு சவேரியாரே,
புனித வியான்னி மரிய அருளப்பரே,
புனித தெரேசம்மாளே,
புனித சீயன்னா கத்தரீனம்மாளே,
இறைவனின் எல்லாப் புனிதரே, புனிதையரே,
கருணைகூர்ந்து, எங்களை மீட்டருளும் ஆண்டவரே,
தீமை அனைத்திலுமிருந்து, எங்களை மீட்டருளும் ஆண்டவரே,
பாவம் அனைத்திலுமிருந்து, எங்களை மீட்டருளும் ஆண்டவரே,
நித்திய மரணத்திலிருந்து, எங்களை மீட்டருளும் ஆண்டவரே,
உமது மனிதவதாரத்தினாலே, எங்களை மீட்டருளும் ஆண்டவரே,
உமது மரணத்தினாலும் உயிர்ப்பினாலும், எங்களை மீட்டருளும் ஆண்டவரே,
பரிசுத்த ஆவியின் வருகையினாலே, எங்களை மீட்டருளும் ஆண்டவரே,
உமது பரிசுத்த திருச்சபையை, ஆண்டு காத்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்...எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
திருச்சபைத் தலைவரையும், திருநிலைகளில் பணியாற்றும் அனைவரையும், திருமறை வாழ்வில் நிலைத்திருக்கச் செய்யவேண்டுமென்று, உம்மை மன்றாடுகிறோம்...
அனைத்துலக மக்களுக்கும், சமாதானமும் மெய்யான ஒற்றுமையும் தந்தருளவேண்டுமென்று, உம்மை மன்றாடுகிறோம்...
உமது புனித ஊழியத்தில், எங்களை உறுதிபடுத்திக் காத்தருள வேண்டுமென்று, உம்மை மன்றாடுகிறோம்...
தேர்ந்து கொள்ளப் பெற்ற இவர்களை, ஆசீர்வதிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
தேர்ந்து கொள்ளப் பெற்ற இவர்களை ஆசீர்வதித்து, புனிதப்படுத்த வேண்டுமென்று 
உம்மை மன்றாடுகிறோம். . 
தேர்ந்துகொள்ளப்பெற்ற இவர்களை ஆசீர்வதித்து, புனிதப்படுத்தி, அர்ச்சிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். . 
உயிர் வாழும் கடவுளின் திருமகனாகிய யேசுவே, உம்மை மன்றாடுகிறோம்.. . 

கிறிஸ்துவே, எங்களுக்குச் செவி சாய்த்தருளும் (2)
கிறிஸ்துவே, எங்களுக்குச் செவி சாய்த்தருளும் (2)

Commentary : இப்போது குருவாக திருநிலைப்படுத்தப்பட இருக்கும் திருத்தொண்டர்களுக்காக ஆயர் அவர்கள் செபிக்கின்றார். செபத்தின் முடிவில் அனைவரும் ஆமென் என்று சொல்லவும்.

(Then the Bishop stands alone and, with his hands joined, sings or says in a loud voice)

ஆயர்: ஆண்டவரே, எம் இறைவா, எங்கள் மன்றாட்டுக்குச் செவி சாய்த்தருளும். உம் ஊழியர் இவர்கள் மீது தூய ஆவியாரின் ஆசியையும், குருத்துவ அருளின் ஆற்றலையும் பொழிவீராக. நீர் அர்ச்சிக்குமாறு, உம் திருமுன் நாங்கள் கொண்டுவரும் இவ்வூழியர்களைக் கருணையுடன் நோக்கி உமது கொடைகளை எந்நாளும் இவர்கள் மீது நிறைவாய்ப் பொழிந்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

பதில்: ஆமென்.
Commentary : அனைவரும் எழுந்து நிற்போமாக.

திருநிலைப்பாட்டு செபத்திற்கு முன்
Commentary: நம் திருத்தொண்டர்களை குருத்துவ நிலைக்கு உயர்த்துகின்ற மிகவும் உன்னதமான நேரம் இது. இப்பொழுது திருத்தொண்டர்கள் ஆயர் முன் முழந்தாள்படியிடுவார்கள் . அன்று இறைவனால் அழைக்கப்பட்டவர்களின் தலைகள் மீது கைவைத்து அருள்பொழிவு செய்தார்கள். இன்றும் அந்த புனிதமான சடங்கை நிறைவேற்ற நமது ஆயரும் தமது திருக்கரங்களை திருத்தொண்டர்களின் தலை மீது வைத்து அமைதியாக செபிப்பார். இதனைத் தொடர்ந்து அனைத்து குருக்களும் இவர்கள் தலை மீது தங்களது கரங்களை வைத்து செபிப்பார்கள்.

(Next, all the priests present, wearing stoles, lay their hands upon each of the candidates saying nothing. After the imposition of hands, the priests remain at the sides of the Bishop until the prayer of consecration is completed.)

திருநிலைப்பாட்டு செபம்

Commentary : இப்போது ஆயர் திருநிலைப்பாட்டு செபத்தை சொல்லி செபிப்பார் அப்போது இறைமக்களாகிய நாமும் அமைதியுடன் செபிப்போம்

(The candidates kneel before the Bishop. With his hands extended, he sings the prayer of consecration or says it in a loud voice:)

ஆயர்:  ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்குத் துணையாக வந்தருளும். மனித மாண்பின் ஊற்றும், அனைத்து அருள்கொடைகளின் வள்ளலும் நீரே. அனைத்தும் உம்மால் தோன்றுகின்றன. உம்மால் நிலைப்பெறுகின்றன. குருத்துவ மக்களினத்தைக் கிறிஸ்துவின் திருப்பணியாளர்களாய் உருவாக்க, தூய ஆவியாரின் ஆற்றலினால் அம்மக்களிலே வௌவேறு நிலைகளை ஏற்படுத்துபவர் நீரே. பழைய உடன்படிக்கையின்போதே, மறைபொருளாக அமைந்திருந்த அருள்சாதனங்கள் வழியாக ஏற்படுத்தப்பட்ட பணி நிலைகள் வளரலாயின. மக்களை ஆண்டு நடத்திப் புனிதப்படுத்த மோசேயையும் ஆரோனையும் நியமித்தபோது அவர்களுடன் தோழமை கொண்டிருக்கவும் அவர்களது பணியில் துணை நிற்கவும் நீர் பல்வேறு நிலையிலும் மாண்பிலும் மனிதர்களைத் தேர்ந்தெடுத்தீர். எவ்வாறெனில் பாலைவனத்தில் மோசேயின் மனநிலையை விவேகமுள்ள எழுபது பேருக்கு அளித்து, அவர்கள் வழியாக அது பரவச் செய்தீர். அவர்களை உதவியாளர்களாகப் பயன்படுத்தி மோசே உம் மக்களை எளிதாக வழி நடத்தினார். அவ்வண்ணமே வரப்போகும் நலன்களின் நிழல்போல் அமைத்திருந்த கூடாரப்பலிகள், குருக்களின் சட்ட முறைமைப்படி குறைவுபடாமல் நிகழ்ந்திட ஆரோனின் வழிவந்தோர் மீது அவர்தம் தந்தைக்குரிய நிறைவின் வளமையை வழிவழியாய்ப் பொழிந்தீர்.

தூயவரான தந்தையே, இறுதியாக உமது திருமகனையே இவ்வுலகுக்கு அனுப்பி வைத்தீர். அந்த இயேசுவையே தனிப்பெரும் திருத்தூதர் என்றும், தலைமைக்குரு என்றும் நாங்கள் அறிக்கையிடுகின்றோம். 

இவரே தூய ஆவியாரின் வழியாக மாசற்ற காணிக்கையாகத் தம்மையே உமக்கு ஒப்புக்கொடுத்தார். தம் திருத்தூதர்களை உண்மையினால் புனிதப்படுத்தித் தம் பணியில் பங்கேற்கச் செய்தார். அவர்களோடு மீட்புப் பணியை உலகெங்கும் அறிவிக்கவும் செயல்படுத்தவும் நீர் அவர்களுக்கு உதவியாளர்களைத் தந்தீர்.

இப்போதும் ஆண்டவரே வலுக்குறைந்த எமக்கு இத்தகைய உதவியாளரைத் தந்தருள உம்மை மன்றாடுகின்றோம்.திருத்தூதருக்குரிய குருத்துவப் பணியில் எமக்கு இவர்கள் தேவைப்படுகின்றார்கள்.

(Now Priests extend their rihgt hands)

எல்லாம் வல்ல தந்தையே, உம் அடியார்களாகிய இவர்களுக்கு குருத்துவ நிலைக்குரிய மாண்பினை அளித்தருள உம்மை மன்றாடுகின்றோம். இவர்களுடைய உள்ளத்தின் ஆழத்தில் புனிதத்தின் ஆவியாரைப் புதுப்பித்தருளும். இறைவா, உமது கொடையாகக் குருத்துவத்தின் இரண்டாம் நிலைக்குரிய பொறுப்பை இவர்கள் பெற்றுக் கொள்வார்களாக. தங்கள் சிறந்த வாழ்வால் நன்னடத்தைக்கு எடுத்துக்காட்டாய் திகழ்வார்களாக.

இறைவா, இவர்கள் எம் ஆயர் நிலைக்குத் தகுந்த உதவியாளராய் இருப்பார்களாக. இவர்கள் போதனையின் வழியாகத் தூய ஆவியாரின் அருளால், நற்செய்தியின் வார்த்தைகள் உலகின் கடை எல்லைவரை மனிதரின் உள்ளங்களில் நிறைபலன் தருவனவாக.

உம்முடைய மக்கள் மறுபிறப்பளிக்கும் திருமுழுக்கால் புதுப்பிக்கப்படவும், உமது திருப்பீடத்திலிருந்து திருவுணவு உண்டு ஊட்டம் பெறவும், பாவிகள் ஒப்புரவாக்கப்படவும், பிணியாளர்கள் வலுப்பெற்றெழவும் இவர்கள் எம்மோடு சேர்ந்து உம்முடைய மறைப்பொருள்களைப் பிரமாணிக்கமாய் வழங்குவார்களாக.

ஆண்டவரே, இவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களுக்காகவும் உலகம் அனைத்திற்காகவும் உமது இரக்கப் பெருக்கத்தை இறைஞ்சி மன்றாட எம்மோடு இவர்கள் இணைந்திருப்பார்களாக. இவ்வாறு, அனைத்து நாடுகளும் கிறிஸ்துவில் ஒன்று சேர்க்கப்பட்டு உமது அரசில் ஒரே மக்கள் குலமாக மாற்றம் அடைவனவாக. 

உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும், உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

எல். ஆமென்.

திருவுடை அணிவித்தல்

Commentary: இறைவனால், குருத்துவ வாழ்வுக்கென தேர்ந்து கொள்ளப்பட்ட நம் புதிய அருள்பணியாளர்களுக்கு குருக்கள் அணியும் திருவுடை அணிவிக்கப்படுகின்றது.

(After the prayer of consecration the Bishop sits with his mitre on)

கைகளில் திரு எண்ணெய் பூசுதல்

Commentary : இப்பொழுது ஆயர், புதிய அருள்பணியாளர்களின் கரங்களில் கிறிஸ்மா என்னும் திருத்தைலத்தை பூசுகின்றார். நம் புதிய அருள்பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைவாக்கினர்களைப்போல, நீதித்தலைவர்களைப்போல, திருத்தூதர்களைப்போல பணி செய்ய, தேவையான உடல் உள்ள நலமும், ஆவியாரின் வரமும் பெறுகின்றார்கள்.

(Next the Bishop puts on the linen gremial, and anoints with holy chrism the palms of each new priest who kneels before him. He says:

ஆயர்:  தூய ஆவியாரினாலும், அருளாற்றலினாலும, தந்தையாம் இறைவன, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைத் திருநிலைப்படுத்தினார். இறைவனுக்குப் பலி செலுத்தவும, கிறிஸ்துவ மக்களை புனிதப்படுத்தவும் வேண்டிய அருளை அதே இயேசு கிறிஸ்து உமக்கு வழங்கி, உம்மைக் காப்பாராக.

இரசப்பாத்திரமும் அப்பத்தட்டும் வழங்குதல்

Commentary: இப்போது அருள்பணியாளரின் பெற்றோர் திருப்பலி நிறைவேற்ற பயன்படத்தப்படும் அப்பமும், இரசமும் உள்ள திருக்கிண்ணத்தை ஆயர் அவர்களிடம் அர்ப்பணிக்கின்றார்கள். அதனை ஆயர் அவர்கள் புதிய அருள்பணியாளர்களிடம் கொடுத்து அமைதியின் முத்தம் வழங்கி வாழ்த்துகின்றார். 

(Meanwhile the deacon prepares the bread on the paten and the wine and water in the chalice for the celebration of Mass. He brings the paten and chalice to the Bishop, who presents them to each of the new priests as he kneels before the Bishop)

ஆயர்:  இறைவனுக்கு ஒப்புக் கொடுக்க, இறைமக்கள் கொண்டுவந்த இக்காணிக்கையைப் பெற்றுக் கொள்ளும். நீர் நிகழ்த்தும் திருச்சடங்கிற்கு ஏற்றபடி, புனிதராயிரும். திருச்சிலுவையின் மறையுண்மைக்கு ஏற்ப உமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும்.

அமைதியின் முத்தம்

(Lastly the Bishop gives the kiss of peace to each of the new Priests, saying)

ஆயர்:  இறை அமைதி உம்மோடு இருப்பதாக.
பதில்: உம்மோடும் இருப்பதாக.


Commentary : இப்பொழுது காணிக்கை பவனி நடைபெறும்.

காணிக்கை மன்றாட்டு

தூயவரான தந்தாய், எங்களுக்கு எடுத்துக்காட்டாய் இருக்க உம் திருமகன் தம் சீடர்களின் பாதங்களைக் கழுவினார். உம்முடைய ஊழியர்களின் காணிக்கையை ஏற்றருளும். இதனால் ஆன்மீகப்பலியாக எங்களையே உமக்கு நேர்ந்தளித்து, நாங்கள் தாழ்ச்சியும் அன்புமிகு மனப்பான்மையும் நிறைவாகப் பெற்று மகிழ்வோமாக.  எங்கள்…

நன்றி மன்றாட்டு

மன்றாடுவோமாக: ஊழியர்க்கு உறுதியளிக்கும் இறைவா, விண்ணக உணவையும், பானத்தையும் நிறைவாக அருந்தியுள்ளோம். உமது மகிமைக்காகவும் விசுவாசிகளின் மீட்புக்காகவும் நாங்கள் நற்செய்தியை அறிவிப்பதிலும் திருவருள்சாதனங்களை வழங்குவதிலும் பிறரன்பு தொண்டாற்றுவதிலும் உண்மையுள்ள ஊழியராய் இருக்கச் செய்தருளும். எங்கள்…

ஆயரின் சிறப்பு ஆசீர்
  1. இறைவனுக்கும் மக்களுக்கும் தம்மையே முழுதும் அர்ப்பணிக்க முன்வந்த உங்களை இன்று குருக்களாக திருநிலைப்படுத்திய நமது வானகத் தந்தை பணிவாழ்வில் மனநிறைவையும், மகிழ்ச்சியையும் தந்து ஆசிர்வதிப்பாராக…
  2. தமது கல்வாரிப் பலியில் பங்கு கொடுத்து பலி நிறைவேற்ற அழைத்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தம் அருள்சாதனங்களை தகுந்த முறையில் நிறைவேற்ற மனத்தூய்மையும், அருளையும் பொழிவாராக…
  3. துணையாளராகிய தூய ஆவியார் தேவையான ஆற்றலையும், அருளையும், ஞானத்தையும், விவேகத்தையும், திடனையும் அளித்து உடல், உள்ள நலத்தோடு உங்களை காப்பாராக…
எல்லாம் வல்ல இறைவன் தந்தை, மகன், தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக. 


Commentary: (திருப்பலி இறுதியில் ஆயரின் சிறப்பு ஆசீருக்குப் பிறகு) இப்பொழுது புதிய அருள்பணியாளர்கள் அருள்பொழிவு செய்யப்பட்ட தமது திருக்கரங்களால் ஆசீர் அளிக்கின்றார்கள்.

திருப்பலி முடிவில் Commentary: 
  • இப்போது ஆயரும் மேடையில் இருக்கின்ற அருள்தந்தையரும் புதிய குருக்களை வாழ்த்துவார்கள். அதன் பிறகு புதிய குருக்கள் ஆயருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். 
  • புகைப்படம் எடுத்த பிறகு அனைத்து குருக்களும் மேடைக்கு வந்து புதிய குருக்களை வாழ்த்துவார்கள். 
  • நிறைவாக புதிய குருக்கள் மேடையிலிருந்து கீலே வருவார்கள் அப்போது இறைமக்கள் அனைவரும் அமைதியாக வந்து புதிய குருக்களின் அர்ச்சிக்கப்பட்ட புனித கரங்களை திருச்சபையின் பாரம்பரிய விசுவாசத்தின்படி பரிசுத்த முத்தம் செய்து அருளை நிறைவாக பெற்றுச்செல்லுங்கள்.

புனித வெள்ளி Good Friday Tamil Sermon


கடவுள் இறந்துவிட்டார்.

எங்கே நீதி இல்லையோ. எங்கே உண்மை இல்லையோ, எங்கே அன்பு இல்லையோ, எங்கே சமாதானம் இல்லையோ, எங்கே தியாகம் இல்லையோ, அங்கே கடவுள் இறந்து விட்டான்.

அன்புக்குரிய இறைமக்களே,

எனது தந்தை மரணப்படுக்கையில் இருந்து பிறகு இறந்து விடுகிறார். நான் வெளியூரில் இருப்பதால் அடக்க சடங்கிலே கலந்து கொள்ள முடியவில்லை என்று வைத்துக்கொள்வோம். எனது தந்தை மரணப்படுக்கையில் இருக்கும் போது எனக்கான, எனக்குரிய செய்திகளை என் உடன் பிறந்த சகோதரர்களிடம் விட்டுச் சென்றிருப்பார். நான் ஊருக்கு சென்றவுடன் என் சகோதரர்கள், தந்தை எனக்காக விட்டுச் சென்ற செய்திகளை அறிவுரைகளை என்னிடம் கூறுவார்கள். நானும் இந்தச் செய்தியினை, அறிவுரைகளை பின்பற்றி வாழுவேன். நிறைவேற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவேன். 2000 ஆண்டுகளுக்கு முன் நமக்காக, நமது பாவங்களுக்காக இறந்த கடவுள், நமக்கான செய்திகளை, வழிமுறைகளை மூன்று சகோதரர்கள் வழியாக விட்டுச் சென்றிருக்கிறார். 

1. முதலாவது சகோதரர் எசாயா இறைவாக்கினர் வழியாக மூன்று வித செய்திகளை தருகிறார்.
  1. இயேசுவின் துன்பங்களுக்கு முழுக்காரணமும் நமது பாவங்கள்  அதாவது நீங்களும் நானும் செய்துகொண்டிருக்கும் பாவங்கள் நம் குற்றங்களுக்காக காயமடைந்தார். (எசா 53, 5 )
  2. நமக்காக, இறைவன் நிலையிலிருந்து தாழ்ந்து மனித நிலைக்கு வந்து சிலுவைச் சாவை ஏற்கிறார். (எசாயா 53, 2-3)
  3. அடுத்தவரின் நலனுக்காக நாம் செய்யும் தியாகம் ஒருபோதும் வீண்போகாது. (எசாயா 53, 11).

2. இரண்டாவது சகோதரர் பெயர் தெரியாத அன்புச் சீடர்.  அவர் இன்று நமக்கு கொடுக்கும் செய்தி. 
  1. நம்மில் யாரும் இயேசுவைப் போல் துன்பப் பட்டதில்லை. இனி அவ்வாறு துன்பப் பட போவதுமில்லை.
  2. மனிதனாக பிறந்த இயேசுவுக்கும் நம்மைப் போல் சோதனைகள் வந்தன. நமக்கும் இயேசுவுக்கும் வித்தியாசம் என்னவென்றால் அவர் சோதனைகளை வெற்றிக்கண்டார். நாம் சோதனைகளை வெற்றிக் கொள்ள மறுக்கிறோம்.

3. மூன்றாவதாக இன்றைய நற்செய்தியாளர்.....
தன் வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்து இயேசு அநீதியை தட்டிக் கேட்க தயங்கவில்லை. நான் பேசியது தவறு என்றால் தவற்றை சுட்டிக் காட்டுங்கள் ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டாலும் தந்தையின் விருப்பத்திற்கு தாழ்ச்சியுடன் தன்னை கையளிக்கிறார்.  இந்த மூன்று சகோதரர்களும் இன்று நமக்கு கொடுக்கும் செய்தி எல்லோருடைய வாழ்க்கையிலும் சோதனைகள், துன்பங்கள் கண்டிப்பாக வரும்.  குறிப்பாக சமுதாய நலன்களுக்காக பாடுபடும் உள்ளங்களுக்கு துன்பங்கள் கொஞ்சம் அதிகமாகவே வரும். துன்பங்களை கண்டு விலகிவிடக் கூடாது. மாறாக இயேசுவைப் போல் வெற்றி பெறும் வரை,  இறுதிவரை போராடிக் கொண்டேயிருக்க வேண்டும்.

மக்களின் நலனுக்காக இயேசுவைப் போல் நாமும் தாழந்து போக வேண்டும்.
நம் எதிரிகளை மன்னிக்க வேண்டும். குறிப்பாக நாம் இறக்கும் போது நமக்கென எதிரிகள் யாரும் இருக்க கூடாது. இயேசு இறக்கும் தருவாயில் கூட தந்தையே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் இவர்களை மன்னியும் என்று தன் பகைவர்களை மன்னிக்கிறார்.

இறுதியாக இயேசுவைப் போல், தியாக வாழ்வு வாழ அழைக்கப் படுகிறோம். நமது வாழ்க்கையில் தியாகம் என்பது எடுத்த உடனே வந்து விடாது. தனிமனித உதவியிலிருந்து சமுதாய உதவிக்கும் பிறகு ஒட்டுமொத்த உலகத்தின் உதவிக்கும் நமது வாழ்வை மாற்றும் போதுதான் தியாக வாழ்வானது நமது வாழ்வில் பிறப்பெடுக்கும்.

எடின்பர்க் என்றொரு நகரம். அதன் எதிரே மற்றுமொரு அழகிய நகரம். இரண்டுமே சுற்றுலாத்தலங்கள். இரண்டு நகரங்களுக்கிடையே ட்ரே என்றொரு மிகப்பெரிய ஆறு. சுற்றுலாத்தலமாதலால் இரண்டு நகரங்களையும் இணைக்க இரயில் பாலம் கட்டியிருந்தார்கள். அந்தப் பெரிய ஆற்றலே தினசரி கப்பல் போக்குவரத்தும் உண்டு. கப்பல் போகும் போது பாலம் மேலே திறந்து கொள்ளும். இரயில் போகும் போது பாலம் சமநிலைக்கு வந்துவிடும். சரியான நேரத்தில் பாலத்தை திறக்கவும், மூடவும் ஒரு நபர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர்தன் பணியினை செவ்வனே செய்து கொண்டிருந்தார். 1898-ம் வருடம் ஜூன் மாதம் ஒரு நாள் இரயில் வருவதற்கான நேரம். பாலம் திறந்திருக்கிறது. சமநிலைக்கு கொண்டு வரவேண்டும். அதை இயக்குகின்ற இயந்திரம் திடீரென்று பழுதாகி விட்டது மிகவும் போராடி, சரி செய்தாகிவிட்டது. இரயிலும் பாலத்தில் வந்து கொண்டிருக்கிறது. அந்த விசையினை அழுத்த தாயராகிறார். அப்பொழுதுதான் தெரிய வருகிறது. அதுவரையில் அந்த அறையில் விளையாடிக்கொண்டிருந்த தன் அன்புக் குழந்தை 5 வயது சிறுவன் நடுவில் செங்குத்தாக நின்று கொண்டிருந்து. 

பாலத்தின் மீது ஏறிக்கொண்டிருந்தான். மகனைக் காப்பாற்றினால் இரயிலில் உள்ள நூற்றுக்கணக்காண சுற்றுலா பயணிகள் அந்த ஆற்றிலே மூழ்கி இறந்து போவார்கள்.  ஒரே நேரத்தில் இரண்டையும் காப்பாற்றவும் முடியாது. இரயிலும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு நொடிப் பொழுதுதான் யோசித்தார். அடுத்த விநாடி அந்த இரயில் அழகாக மறுகரையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இரயிலில் இருப்பவர்களுக்கு தெரியாது, தாங்கள் உயிரோடு இருப்பது ஆற்றில் மிதக்கும் அந்த பிஞ்சுக் குழந்தையாலும் அதன் தந்தையின் தியாகத்தாலும் என்று.....

அன்பார்ந்த இறைமக்களே!

மற்றவர்கள் இரயிலும் கப்பலும் பயணம் செய்ய உதவிக் கொண்டிருந்த அந்த நபர் இறுதியில் அந்த சுற்றுலாப் பயணிகளுக்கு துன்பமே வராமல் பாதுகாக்கிறார் அதற்காக அவர் செய்த தியாகம் தன் மகனின் உயிர். மற்றவருக்கு துன்பமே வராமல் பாதுகாக்க முடிவெடுத்தால் கண்டிப்பாக நாம் தியாகம் செய்தாக வேண்டும். துன்பங்களை சந்திக்க வேண்டும். சோதனைகளை எதிர் கொள்ள வேண்டும். இதையேத்தான் நமக்காக துன்பப்பட்டு இறந்த இயேசுவும் தன் வாழ்க்கையில் செய்தார். 

பற்பல உதவிகளை, புதுமைகளை செய்தார் இயேசு. நோய்களை குணமாக்கினார், ஏழைகளுக்கு இரங்கினார். பசித்தோருக்கு உணவளித்தார். இறுதியாக நமது பாவங்களுக்காக, நம்மை மீட்க சிலுவைச்சாவை ஏற்கிறார். இதற்காக அவர் சந்தித்த துன்பங்கள், துயரங்கள், இன்னல்கள், சோதனைகள் ஏராளம். அவரது வாழ்க்கையில் உண்மையிருந்தது, அன்பிருந்தது, அவரது செயல்களில் நீதி இருந்தது, சமாதானம் இருந்தது, அவரிலே தியாகம் இருந்தது. அதனால்தான் இயேசுவில் இறைவனும் இறைவனில் இயேசுவும் வாழ்ந்தார்கள்.

நமது வாழ்க்கையில் எங்கே உண்மையில்லையோ, அன்பில்லையோ, தியாகமில்லையோ, நீதி இல்லையோ, சமாதானம் இல்லையோ, அங்கே கடவுள் இறந்து விட்டார்.

நாம் கடவுளை வாழ வைத்துக் கொண்டிருக்கிறோமா? அல்லது அனுதினம் சாகடித்துக் கொண்டிருக்கிறோமா?


இறையியல் மாணவர்கள்
கோவை நல்லாயன் குருத்துவக் கல்லூரி

சுருக்கமான பாரம்பரிய சிலுவைப்பாதை


பீடத்துக்கு முன்பாக:

என் இறைவா! நன்மை நிறைந்தவர் நீர்! அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவர். என் பாவங்களால் உம்மை மனம் நோகச் செய்துவிட்டேன். ஆகவே நான் குற்றங்கள் பல செய்தேன் எனவும், நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும் மனம் நொந்து வருந்துகிறேன். உமது அருள் துணையால் நான் மனம் திரும்பி, இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கொடுக்கிறேன். எங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் பயனாக, இறைவா, என்மேல் இரக்கமாயிரும்.

திவ்விய இயேசுவே! எங்களுக்காகவும் உத்தரிப்பநிலை ஆன்மாக்களுக்காகவும் சிலுவைப் பாதையைத் தியானிப்பவர்களுக்கு அளிக்கப்படும் பலன்களை அடைய விரும்பி, உம் இரக்கத்தைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.

புனித மரியாயே! வியாகுல அன்னையே! இயேசுவின் பாடுகளின் போது அவரோடு நீர் உடனிருந்து, அவருடைய பாடுகளில் பங்கேற்றது போல, நாங்களும் எங்கள் அயலார் அனுபவிக்கும் துன்பங்களில் அவர்களுடன் இருந்து துணைபரியும் ஆற்றலைப் பெற உம் திருமைந்தனிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
மைந்தனார் சிலுவை மீது மாத்துயருடன் வருந்த
நொந்தழுதாள் தாய் மரி!
முதலாம் தலம்:

முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.

அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!

இயேசு நாதரைச் சாவுக்குத் தீர்வையிடுகிறார்கள்:

திவ்விய இயேசுவே! சிலுவையிலே நீர் அறையுண்டு சாகத் தீர்வையிடப்பட்டதை தியானித்து, நாங்கள் உம்மை வணங்குகிறோம். அகோரத் தீர்வையிலே நின்று எங்களை மீட்டருளும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.

மு. -மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது.

அ. - ஆமென்.
திருமகன் அறையுண்ட சிலுவை அடியில் நின்று
தேவதாய் நொந்தழுதாள்!
இரண்டாம் தலம்:

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.

அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!

இயேசு நாதரின் தோள்மேல் சிலுவையைச் சுமத்துகிறார்கள்.

திவ்விய இயேசுவே! நீர் பாரமான சிலுவையைச் சுமந்து சென்றதைத் தியானித்து உம்மைத் தொழுகிறோம். எங்களுக்கு இவ்வுலகில் வருகிற வேதனைகளையும் தீமைகளையும் பொறுமையோடு அனுபவிக்க அருள் தாரும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.

மு.- மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது.

அ. - ஆமென்!
வேதனைக் கடலமிழ்ந்த மாதா ஆத்துமம் வதைய
வாள் பாய்ந்தூடுருவிற்று.
மூன்றாம் தலம்:

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.

அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் முதல் முறை தரையில் குப்புற விழுகிறார்.

திவ்விய இயேசுவே! நீர் சிலுவையின் கீழே முதல் முறை குப்புற விழுந்ததைத் தியானித்து, உம்மைத் தொழுகிறோம். நாங்கள் செய்கிற பாவங்களிலே மூர்க்கராய் நிலை கொள்ளாமல் உடனே அவைகளை விட்டு எழுந்திட உதவிருளும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.

மு.- மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது.

அ. - ஆமென்
நேச மகனை இழந்த தாய் அனுபவித்த துயர்
தானுரைக்க நாவுண்டோ!
நான்காம் தலம்:

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.

அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!

இயேசு நாதர் தமது புனித தாயாரைச் சந்திக்கிறார்.

திவ்விய இயேசுவே! உம்முடைய புனித அன்னை உமக்கு எதிர்கொண்டு வருகிறதைக் கண்டு நீர் சொல்லிலடங்கா வேதனையை அனுபவித்ததை தியானித்து, உம்மைத் தொழுகிறோம். நாங்கள் சாகும் வேளையில் வியாகுல அன்னையின் அடைக்கலத்தை அடைய உதவிருளும் சுவாமி.

ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.

மு.- மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது.

அ. - ஆமென்!
அருமையாய் ஈன்ற சுதன் அவஸ்தயைக் கண்டிளகி
உருகிப் புலம்பினாள்!
ஐந்தாம் தலம்:

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.

அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!

இயேசு நாதர் சிலுவையைச் சுமப்பதற்கு சீமோன் உதவி செய்கிறார்.

திவ்விய இயேசுவே! நீர் சிலுவை சுமந்து போகிறதற்குச் சீரேன் ஊரானாகிய சீமோன் உதவி செய்ததைத் தியானித்து உம்மைத் தொழுகிறோம். எங்களுக்கு நியமித்திருக்கிற சிலுவையாகிய துன்பங்களை உம்மோடு கூட நாங்கள் சுமக்கக் கருணை புரிந்தருளும் சுவாமி!

ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.

அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.

மு.- மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது.

அ. - ஆமென்
இரட்சகர் திருத்தாயார் இக்கொடிய வதைப்பட
யார் கண்டழாதிருப்பார்!
ஆறாம் தலம்:

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.

அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!

இயேசு நாதருடைய திருமுகத்தை ஒரு பெண் துடைக்கிறார்.

திவ்விய இயேசுவே! வெரோணிக்கம்மாள் உம்முடைய திருமுகத்தைத் துடைத்ததை தியானித்து, உம்மை தொழுகிறோம். நாங்கள் ஆள்பார்த்து செயல்படாமல், புண்ணிய நெறியில் உறுதியாய் நடக்க உதவியருளும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.

அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.

மு.- மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது.

அ. - ஆமென்
திருமகன் துயரத்தால் உருகுந்தாயைக் கண்டுள்ளம்
கரையாதார் யாருண்டு!
ஏழாம் தலம்:

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.

அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!

இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் இரண்டாம் முறை தரையில் குப்புற விழுகிறார்.!

திவ்விய இயேசுவே! நீர் சிலுவையின் கீழே இரண்டாம் முறை குப்புற விழுந்ததைத் தியானித்து, உம்மைத் தொழுகிறோம். நாங்கள் எந்த பாவத்திலும் திரும்ப விழாதபடிக்குக் கருணை கூர்ந்தருளும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.

மு.- மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது.

அ. - ஆமென்.
அன்புள்ள தன் திருமகன் துன்பதுயர் அவஸ்தையுள்
தன் ஜீவன் தரக் கண்டாள்! 
எட்டாம் தலம்:

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.

அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!

இயேசு நாதர் யூதப் பெண்களுக்கு ஆறுதல் சொல்லுகிறார்.

திவ்விய இயேசுவே! உம்மை நோக்கி அழுத எருசலேம் பட்டணத்துப் பெண்களுக்கு நீர் ஆறுதல் சொன்னதைத் தியானித்து, உம்மை தொழுகிறோம். நாங்கள் புரிந்த பாவ துரோகங்களுக்காகத் துயரப்பட்டு, அவைகளுக்காக எப்போதும் அழுதுகொண்டிருக்க அருள் பொழியும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.

மு.- மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது.

அ. - ஆமென்
பட்ச ஊருணி மாதாவே பரிதவித்தே உம்மோடு
பாவி நான் அழச் செய்யும்!
ஒன்பதாம் தலம்:

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.

அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் மூன்றாம் முறை தரையில் குப்புற விழுகிறார்!

திவ்விய இயேசுவே! நீர் சிலுவையின் கீழே மூன்றாம் முறை குப்புற விழுந்ததைத் தியானித்து, உம்மைத் தொழுகிறோம். நாங்கள் சாவான பாவத்தோடே செத்து, முடிவில்லா நரகத்திலே விழாதபடிக்கு எங்களைக் காத்தருளும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.

அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.

மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.

அ. - ஆமென்
ஆதி இயேசுவை நேசித்தே யான் அவருக்கினியனாய்
அன்பால் என்னுள்ளம் சுடும்!
பத்தாம் தலம்:

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.

அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!

இயேசு நாதருடைய ஆடைகளைக் களைகிறார்கள்.

திவ்விய இயேசுவே! உம்முடைய ஆடைகளைக் களைந்ததையும் உமக்குப் புளித்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்ததையும் தியானித்து, உம்மைத் தொழுகிறோம். நாங்கள் அனைத்திலும் உம்முடைய திருவுளத்துக்குக் கீழ்படிந்து, பொறுமையோடு நடக்கக் கருணை கூர்ந்தருளும் சுவாமி.-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.

அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.

மு.- மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது.

அ. - ஆமென்
தேவதாயே தயை கூர்ந்து பாவி என்னிருதயத்தில்
இயேசு காயம் பதியும்!
பதினோராம் தலம்:

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.

அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!

இயேசு நாதரை சிலுவையில் அறைகிறார்கள்.

திவ்விய இயேசுவே! நீர் சிலுவையில் அறையப்பட்டதைத் தியானித்து, உம்மைத் தொழுகிறோம். நாங்கள் இவ்வுலகச் செல்வங்களையும் இன்பங்களையும் மட்டுமே நாடாமல், அவற்றைக் கொண்டு விண்ணுலக அரசினைச் சம்பாதித்துக் கொள்ள அருள் தாரும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.

மு.-மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள், சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது.

அ. - ஆமென்.
சிலுவை அடியில் நின்று தேவதாயே உம்மோடே நான்
புலம்ப ஆசிக்கின்றேன்!
பன்னிரண்டாம் தலம்:

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.

அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!

இயேசு நாதர் சிலுவையில் இறக்கிறார்.

திவ்விய இயேசுவே! நீர் சிலுவை மரத்தில் உயிர் விட்டதை தியானித்து, உம்மைத் தொழுகிறோம். நாங்கள் உம்மை மாத்திரமே அன்ப செய்து, அருள் நிலையில் இறந்து விண்ணுலகில் உம்மோடே வீற்றிருக்க உதவியருளும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.

மு.- மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது.

அ. - ஆமென்
கன்னியர் அரசியே, தாயே என் கண்ணீரை உம்முடைய
கண்ணீரோடேற்றருளும்!
பதின்மூன்றாம் தலம்:

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.

அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!

இறந்த இயேசுவை அவர் தாயார் மடியில் வைக்கிறார்கள்.

திவ்விய இயேசுவே! உம்முடைய திருச்சடலத்தைத் சிலுவையினின்று இறக்கி வியாகுல அன்னையின் மடியிலே வைத்ததை தியானித்து, உம்மைத் தொழுகிறோம். எங்களுடைய இதயத்திலே உம்முடைய திருக்காயங்களும், பரிசுத்த மாதாவின் வியாகுலங்களும் பதிந்திருக்க உதவியருளும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.

மு.-மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது.

அ. - ஆமென்
அன்பால் அக்கினியை மூட்டி அடியேனைத் தீர்வை நாளில்
ஆதரிப்பீர் கன்னியே!
பதினான்காம் தலம்:

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.

அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!

இயேசு நாதரைக் கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள்.

திவ்விய இயேசுவே! உம்முடைய திருச்சடலம் அடக்கம் செய்யப்பட்டதைத் தியானித்து, உம்மைத் தொழுகிறோம். நாங்கள் சாகுமட்டும் உம்மை நேசிக்கவும், உம்முடைய பேரின்ப அரசுக்கு வந்து சேரவும் அருள் தாரும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.

மு -மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.

அ. - ஆமென்!
மண் உடல் உயிர் பிரிந்தால் வான் மோட்சம் விரைவில்
சேர்ந்து வாழவும் செய்தருளும்.
பொறுத்தருளும் கர்த்தாவே! உமது ஜனத்தின் பாவங்களைப் பொறுத்தருளும். என்றென்றைக்கும் எங்கள்மேல் கோபமாயிராதேயும் சுவாமி. தயவாயிரும் சுவாமி தயவாயிரும். -(ஐந்து முறை சொல்லவும்) 

திருத்தந்தையின் கருத்துகளுக்காக ஒரு பர. அருள். திரி. மந்திரம் ஜெபிப்போம்.