திருக்குடும்பத் திருவிழா 30-12-2011

இறையேசுவில் அன்புநிறை இறைமக்களே!

இன்றைய இறைவாக்கு, திருக்குடும்பத்தைப் பற்றி நமக்கு தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது. திருக்குடும்பம் என்பது பூமியின் மேல் கற்களாலும், மண்ணாலும், மனிதனால் கட்டி எழுப்பப்பட்ட ஒரு கட்டிடம் அல்ல.  மாறாக குடும்பம் என்றால் அவ்வீட்டில் வசிக்கும் ஒவ்வொரு அங்கத்தினர்களிடையே உள்ள இறையன்பு-பிறரன்பு, பண்பு, பாசம் மற்றும் ஒருவரை ஒருவர் மன்னிக்கும் தன்மை இவற்றைப் பொறுத்துள்ளது.  குடும்பம் இன்றி எந்த ஒரு சமுதாயமோ அல்லது நாடோ செயல் பட முடியாது.  தந்தை, தாய், பிள்ளைகள் சேர்ந்துதான் குடும்பம் என்று கூறுகின்றோம்.  

தாயாம் திருச்சபை இன்று திருக்குடும்பத் திருநாளைக் கொண்டாடுவதன் காரணம் என்னவென்றால் உலகிலுள்ள அத்தனைக் குடும்பங்களுக்கும் முன்மாதிரியான உன்னதக் குடும்பம் ஒன்று சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நாசரேத்தூரில் வாழ்ந்து காட்டியது என்று எடுத்துக் காட்டாத்தான்.  அந்தக் குடும்பம்தான் இயேசு, மரியாள், சு10சையப்பர் வாழ்ந்த திருக்குடும்பம். 

மனிதனை மனிதனாக்குவது

மனிதன் தோன்றிய நாளே குடும்பம் தோன்றிய நாள்.  வரலாறு அறிந்த காலங்கள் எல்லாம் மனிதனை ஒரு குடும்பமாகத்தான் பார்க்கின்றது.  அக்காலம் முதல் இக்காலம் வரை கோடி மாற்றங்கள் சமூகத்திலே, அறிவியலிலே, அரசியல் அமைப்புகளிலே! ஆனால் குடும்ப அமைப்பு அப்படியே இருக்கின்றது.  

காலங்கள் மாறுகின்றன.  நாகரீகங்கள் மறைகின்றன.  ஆனால் தந்தை, தாய், பிள்ளை உறவு என்றும் நீடிக்கின்றது.  அதை எவராலும் அழிக்க முடியாது.  காரணம் மனிதன் “கடவுளின் சாயல்” (ஆதி 1:227).  கடவுள் ஒரு குடும்பமாக இருக்கிறார்.  அப்படியே மனிதனும்.  அவனை மிருகத்திலிருந்து வேறுபாடாக்கி காட்டுவது இந்த குடும்பத் தன்மைதான்.  எனவே இயேசு இவ்வுலகில் பிறந்த போதும், ஒரு குடும்பத்தில்தான் பிறக்கின்றாh.; அந்த திருக்குடும்பத்தில்தான் அவர் “ஞானத்திலும், அறிவிலும் முதிர்ந்து கடவுளுக்கும், மனிதருக்கும் மேன்மேலும் உகந்தவரானார்.  இவ்வாறு இன்றைய காலகட்டத்திலும் குடும்பம் திருச்சபையின் அடித்தளமாக, ஆணிவேராகவும் விளங்குகிறது.  இதை தான் “குடும்பம் ஒரு குட்டித் திருச்சபை” என்ற வாக்கியம் தெளிவுப்படுத்துகிறது.  

நமது குடும்பங்கள் திருக்குடும்பங்களாக வாழ குடும்பத்திலுள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய பத்துக்கட்டளைகள்:
  1. புனித யோசேப்பைப் போல் கணவன் தன் துணைவி மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும்.  (மத். 1:24)
  2. அன்னை மரியாவைப் போல் மனைவி தன் துணைவருக்குப் பணிந்து நடக்க வேண்டும்.  (மத். 2:14, 19-23)
  3. புனித யோசேப்பைப் போன்று கணவன் எந்தச் சு10ழ்நிலையிலும் வீணான பேச்சுக்கு இடம் கொடாமல் குடும்பத்தை மேம்படுத்தவும் நற்சிந்தனைக்கும், நற்செயலுக்கும் முதலிடம் கொடுக்க வேண்டும். (மத். 1-2) 
  4. ஏழு முறை மட்டுமே பேசிய அன்னை மரியாவை போன்று மனைவி குறைவாகப் பேசி அதிகமாக குடும்பத்திற்காக பாடுபட முன் வர வேண்டும்.  (லூக். 1:34,38, 39-44, 46-55, 2:48, யோவா. 2:3,5)
  5. குழந்தைகள், இயேசுவைப் போல் பெற்றோருக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டும்.  (லூக் 2:51-52, கொலோ 3:20)
  6. குழந்தைகள் தங்கள் பெற்றோருக்குப் பணியாளர்களாக விளங்க வேண்டும்.  (சீ. ஞா 3:7)
  7. பெற்றோர்கள் பிள்ளைகளின் குறைகளை மட்டும் சுட்டிக்காட்டாமல், அவர்களது நிறைவையும் சுட்டிக்காட்டி அவர்களுக்கு உற்சாகமூட்டவேண்டும்.  (கொலே. 3:21)
  8. குடும்பத்திலுள்ள எல்லோரும் தங்களை மனத்தாழ்மை, கனிவு, பொறுமை போன்ற நல்லெண்ணங்களால் அலங்கரித்துக் கொள்ளவேண்டும்.  (கொலே 3:12)
  9. குடும்பத்திலுள்ளவர் ஒருவர் மற்றொருவரின் குற்றங்களை மனமுவந்து மன்னித்து மறந்துவிட வேண்டும். (கொலே 3:13)
  10. அன்புடனும், பொறுமையுடனும், அமைதியுடனும் குடும்பத்திலுள்ள எல்லாரையும் நெறிப்படுத்த வேண்டும். (கொலே 3:14-15). 
நமது குடும்பங்களை திருக்குடும்பத்தோடு ஒப்பிட்டு பார்போம். இன்று குடும்பங்கள் மத்தியில் நடப்பது போன்ற கணவன், மனைவி சண்டை சச்சரவுகள்,குடும்பத் தகராறுகள்,குழப்பங்கள் அங்கு தலைவிரித்தாடவில்லை.மாறாக ஒவ்வொருவரிடமும் அவரவர் கடைமைகளை உணர்ந்து செயல்பட்டதன் வழியாக இறைவனின் சித்தத்தை முற்றிலுமாக நிறைவேற்றி வந்தனர்.  இவ்வாறு இறைவனின் சித்தத்தை நிறைவேற்றுவது என்பது எளிதான காரியமல்ல.  இறைவன் சாயலில் மனிதர்களாய்ப் பிறந்த நாம் ஒவ்வொருவரும் குறைபாடுள்ளவர்கள் என்று ஏற்றுக் கொள்வோம்.

புனித யோசேப்பும், மரியாவும், பாலன் இயேசுவும் நமக்கு ஒரு முன் மாதிரிகையாகவும் எடுத்துக்காட்டாகவும் விளங்குகின்றார்கள்.  நாசரேத்தூரில் வாழ்ந்த இத்திருக்குடும்பமானது பல வகையான இன்னல் இக்கட்டுக்களை சந்திக்க வேண்டியிருந்தது.  ஆயினும் ஒருவரை ஒருவர் பொறுமையோடு ஏற்றுக் கொண்டு எளிய வாழ்க்கை நடத்திவந்தனர்.  இதைத்தான் இன்று நம் ஒவ்வொருவரிடமும் இறைவன் எதிர்பார்கின்றார்.  மேலும் திருக்குடும்பத்தில் நிலவிய தன்னலமற்ற அன்பை பிரதிபலித்து வாழ தேவையான அருளை இத்திருப்பலியில் தொடந்து மன்றாடுவோம்! 

திருத்தொண்டர் ராபர்ட்

கிறிஸ்துமஸ் இரவு திருப்பலி 24-12-2011


திருப்பலி முன்னுரை:

விண்ணகத் தந்தையின் பிள்ளைகளே!
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனித உருவிலே இம் மண்ணிலே பிறந்த இறைமகன் இயேசு கிறிஸ்து இன்று இந்த இரவிலே நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பிறக்க வேண்டும் என்ற ஏக்கத்தோடு இயேசுவின் பிறப்பை எதிர்நோக்கி இருக்கும் உங்கள் அனைவரையும் இந்த மாபெரும் அருட்சாதனக் கொண்டாட்டத்திற்கு தாயாம் திருச்சபை அன்புடன் வரவேற்கிறது. தந்தையாம் இறைவன் நம்மீது கொண்ட பேரன்பினால் பாவத்திலிருந்து நம்மை மீட்க திருவுளம் கொண்டார். இயேசு கிறிஸ்து தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற கடவுள் நிலையை விட்டு இறங்கி அடிமையின் வடிவை ஏற்று அன்னை மரியிடமிருந்து நம்மைப் போல் ஒரு சாதாரண மனிதனாகப் பிறந்தார்.

மனிதப் பிறப்பின் மூலம் கிறிஸ்து நமக்கு உணர்த்தும் அன்பு தியாகம் ஏழ்மை தாழ்ச்சி ஆகியவற்றைக் நாம் கடைபிடித்து வாழும் போது நம் வாழ்விலே கிறிஸ்து ஒவ்வொரு நாளும் பிறந்து கொண்டு தான் இருப்பார். இதோ இத்தியாகப் பலியினிலே இறைவார்த்தை வழியாகவும் நற்கருணை வடிவிலும் நம் உள்ளத்திலே பிறக்க இருக்கிறார் இயேசுபாலன். இயேசுவின் மாட்சி வெளிப்படப் போகிறது. நம் மேல் பேரொளி வீச உள்ளது. விண்ணகத் தூதரணி உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி பூவுலகில் நல்மனத்தோர்க்கு அமைதி என்று பாலனுக்கு பாடல் பாட இருக்கிறார்கள். நாமும் அவர்களோடு சேர்ந்து இயேசுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறி இயேசு பாலனே என் உள்ளத்திலே நீ பிறக்க வேண்டும். உம்மைப் போல நான் வாழ வேண்டும். உம் பிறப்பு என் வாழ்வில் மட்டுமல்ல எல்லோர் வாழ்விலும் அன்பையும் மகிழ்ச்சியையும் அமைதியையும் நிறைவையும் தர வேண்டும் என்று மன்றாடி பக்தியோடும் பெருமகிழ்ச்சியோடும் இப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகமுன்னுரை:
காரிருளில் நடந்த மக்கள் மீது சுடர் ஒளி உதித்துள்ளது. எனவே மக்கள் மகிழ்ச்சியில் அக்களிக்கிறார்கள். ஏனெனில் இன்று நமக்கு மீட்பர் பிறந்துள்ளார். அவர் ஆட்சி வலிமை மிகுந்தது. அமைதி நிறைந்தது. நீதி செழித்தது என்றும் நிலைபெயராதது என வரவிருக்கும் அரசரைப் பற்றி எசாயா இறைவாக்கினர் கூறும் வாசகத்திற்கு ஆர்வமுடன் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை
கடவுளின் அருள் நம்மீது பொழியப்பட்டுள்ளது. இவ்வருளை வளப்படுத்த நாம் தீமையைக் களைய வேண்டும். ஏனெனில் இயேசுவின் மாட்சி வெளிப்படப் போகிறது. எனவே நாம் நம்மையே தூய்மையாக்க வேண்டும் என அறிவுறுத்தும் இவ்வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

விசுவாசிகளின் மன்றாட்டு:
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.
  1. இயேசு பாலகனே எம் இறைவா! எம் திருச்சபையை ஆளும் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் திருத்தொண்டர்கள் ஆகியோரை ஆசிர்வதித்தருளும். அவர்கள் உம் மந்தையை விசுவாசத்திலும் செப வாழ்விலும் நாளும் வழி நடத்திச் செல்ல தேவையான அருள் வரங்களால் நிரப்பி அவர்களை நிரப்ப குழந்தை யேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  2. அனைவருக்கும் மீட்பளிக்கும் எங்கள் அன்புத் தெய்வமே! நாட்டு நலப்பணிக்காக தங்களையே அர்ப்பணித்தவர்கள் உம்மைப் போன்று செல்லும் இடமெல்லாம் மக்கள் குறையைக்கண்டு அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்ய தாராள மனதை தந்தருள குழந்தை இயேசுவே  உம்மை மன்றாடுகிறோம்.
  3. பாதை காட்டும் பரமனே! எம் பங்கு இளைஞர்கள் அனைவரும் பாதைகள் மாறி பாவ வழியில் சென்றிடாமல் உண்மையும் வாழ்வுமான உமது வழியில் நடந்து தூய்மையான வாழ்க்கை நடத்த தூய ஆவி துணைபுரிய குழந்தை இயேசுவே வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
  4. வழிகாட்டும் இறைவா! ஒரே குடும்பமாக கூடியுள்ள எம் பங்கு மக்கள் அனைவருக்காகவும் வேண்டுகிறோம். தங்களின் அன்றாட வாழ்வில் உம்மை பிரதிபலிக்கவும் பிறர் நலனில் அவர்கள் அக்கறைக் கொண்டு வாழவும் குழந்தை இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.
  5. ஏழ்மையில் பிறந்த எம் இறைவா! உலகில் உள்ள ஏழைகளுக்காக மன்றாடுகிறோம். அவர்கள் தங்கள் வாழ்வில் மேன்மையை காண மகிழ்ச்சியில் என்றும் வாழ குழந்தை யேசுவே உம்மை மன்றாடுகிறோம்.

Prepared by:
  • William Edward
  • Arokia Rajesh
  • Maria Vinod Kumar doing Spirituality Course at St. John’s Propaedeutic Seminary, Cuddalore

கிறிஸ்துமஸ் காலைத் திருப்பலி 25-12-2011


திருப்பலி முன்னுரை:
நல்லவர்கள் இறந்தால் கடவுளிடம் செல்கிறார்கள். நல்லவர்கள் வாழ்ந்தால் கடவுள் அவர்களைத் தேடி வருகிறார். அதுபோலவே வரலாற்றின்படி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து 2000 வருடங்களுக்கு முன்பு பிறந்திருந்தாலும் அவற்றின் நினைவு தினமான இன்று தகுந்த தயாரிப்பிற்கு பி;ன் ஒவ்வொருவரும் தனித்தனியாக அவரவர் உள்ளங்களிலே குழந்தை பாலன்  இயேசுவை முழுமையாக பெற காத்திருக்கும் இறைமக்களே! கடவுள் மனிதனை படைத்ததற்கு பல காரணங்கள் இருந்தாலும் அவற்றில் ஒன்று கடவுளைப்போன்று சுதந்தரமாக வாழ்வது ஆனால் அதை புறக்கணித்த ஆதிப்பெற்றோர்கள் மூலம் வந்த பாவத்தை போக்கவே கடவுள் தாம் அன்பு கொண்ட இவ்வுலகத்திற்கு தம் அன்பு மகனை அன்போடு அனுப்பும் நாள் இந்நாள். எனவே இந்நாளிலே ஆண்டவர் இயேசு நம் உள்ளத்திலே பிறப்பது நம் மட்டிலா மகிழ்ச்சிக்காக மட்டுமல்;ல. மாறாக பாவத்தை போக்கி அதன் மூலம் வரும் மட்டில்லா மகிழ்ச்சியைப் பெற என சிந்தித்தவர்களாய் கடவுளுக்கு நன்றி பலி செலுத்துவோம்.
முதல் வாசக முன்னுரை:
எசாயா புத்தகத்தி;ன் கடைசி பகுதி நெறிதவறியோர்க்கு எச்சரிக்கைகளையும் உண்மை வழி நடப்போருக்கு மகிழ்ச்சியான வாக்குறுதிகளையும் கொடுக்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில் மீட்பு வருகின்றது என்ற மகிழ்ச்சியின் வாக்குறுதி தரப்படுகிறது. மனக்கதவை திறந்து வைத்து கவனமுடன் வரவேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
பல வகையான தீமைகளாலும் தீய நாட்டங்களாலும் அடிமையாக இருந்த நமக்கு தந்தை கடவுள் இரக்கம் காட்டினார். நம்மை புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும் தூய ஆவியாரினாலும் மீட்க அவர் திருவுளம் கொண்டார். இந்த மீட்புச் செயலை தம் ஒரே மகன் இயேசு கிறிஸ்து வழியாக அருளி நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வை நமக்கு சொந்தமாக்கினார் என்று கூறும் இவ்வாசகத்திற்கு கவனமுடன் செவிமெடுப்போம்.

விசுவாசிகளின் மன்றாட்டு:
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.
  1. அன்பின் இறைவா! எங்கள் திருதந்தை ஆயர்கள் குருக்கள் திருத்தொண்டர்கள் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். அவர்கள் பிறந்த குழந்தை இயேசுவின் ஆசீரோடு திருச்சபையை நன்கு வழிநடத்த கிருபை தர பாலன் இயேசு வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
  2. அன்பின் இறைவா! எங்கள் நாட்டுத்தலைவர்களுக்காக மன்றாடுகிறோம். அவர்கள் மக்கள் நலனை கருத்தில் கொண்டவர்களாய் மக்கள் தேவைகளை பூர்த்திச் செய்கின்ற நல்ல ஊழியர்களாக இருக்க உமது ஞானத்தை அவர்களுக்கு தர பாலன் இயேசு வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
  3. அன்பின் இறைவா! இன்று கிறிஸ்துமஸ் பெருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற ஒவ்வொருவரும் வெறும் ஆடம்பரத்தை முன் வைக்காமல் கிறிஸ்து வருகையின் நோக்கத்தை நன்கு புரிந்துக் கொண்டவர்களாக இனிவருகின்ற நாட்களில் வாழ்வை அர்த்தமுள்ளதாக்க உமது நிறைவான ஆசிரை பொழிய பாலன் இயேசு வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
  4. அன்பின் இறைவா! இன்று எத்தனையோ பேர் வறுமையின் பிடியில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இந்த கிறிஸ்துமஸ் பெருவிழாவில் உண்மையான மகிழ்ச்சியை கண்டுணர பாலன் இயேசு வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
  5. அன்பின் இறைவா! சமுதாயத்தில் உள்ள அனாதைகள் கைவிடப்பட்டோர் ஒடுக்கப்பட்டவர்கள் மதிப்பற்றவர்கள் அவர்கள் தங்களின் அரசர் பிறந்துள்ளார் என்ற மனநிறைவைப் பெற்றுக் கொள்ள உமது ஆசிரை பொழிய பாலன் இயேசு வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
Prepared by:
  • William Edward
  • Arokia Rajesh
  • Maria Vinod Kumar doing Spirituality Course at St. John’s Propaedeutic Seminary, Cuddalore